எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

தேனாற்றங்கரையில் அவள் கதை திரி

priya pandees

Moderator
அத்தியாயம் 1

"காஞ்சி பட்டு சேல கட்டி
கால் கொலுசில் தாளம் தட்டும்
கன்னி பொண்ணே நின்னு கேளம்மா
என் மனைவி வந்த பின்னால்
என்னவெல்லாம் செய்வேனென்று
சேர்த்து வைத்த ஆசை சொல்லவா"

மணி பன்னிரெண்டை நெருங்கி கொண்டிருந்தது, அந்தப் பாட்டு சத்தமும் அதனோடு ஒருவனின் காலடிச் சத்தமும் மட்டுமே அந்த அறையை நிறைத்துக் கொண்டிருந்தது. இங்கும் அங்கும் நடந்தவாறு கையிலிருந்த கோப்பை பிரட்டிக் கொண்டிருந்தான் கரிகாலவேந்தன். நாளை அவன் ஆஜர் ஆக வேண்டிய கேஸின் இறுதிக் கட்டம். தீர்ப்பு மட்டுமே நாளை தரப்பட இருக்கிறது, ஆனாலும் புதிதாக எதாவது முளைத்து விடக் கூடாது என்பதற்காக மீண்டுமாக ஒருமுறை ஆரம்பித்ததிலிருந்து அவன் திரட்டிய ஆதாரங்களை மொத்தமாகச் சரி பார்த்துக் கொண்டிருந்தான்.

அவன் நடையை தூங்கி விழுந்தவாறே பார்த்துக் கொண்டு அங்கிருந்த பென்ச்சில் அமர்ந்திருந்தார் ஒருவர், "இவன் இம்புட்டு சத்தமா பாட்ட வச்சுகிட்டு என்னத்த தான் முக்கி முக்கி அதுல படிக்கானோ தெரிய மாட்டேங்குது. காலா காலத்துல கல்யாணமும் பண்ண மாட்டேங்குறான் பண்ணவனையும் போய் பொண்டாட்டிக் கூடப் படுக்க விட மாட்டேங்குறான். மனசாட்சின்றது இருக்கான்னு பாரு" எனத் தலையை தாங்கி அமர்ந்திருந்தார். அவர் அவன் தாய்மாமா, அம்மாவின் உடன்பிறந்த தம்பி அய்யாவழி, சுருக்கமாக அனிருத். இருவருக்கும் பத்து வயதே வித்தியாசம்.

அவனுக்கும் அவர் புலம்பல் காதில் விழுந்தது தான், ஆனால் கேட்காதது போலவே நடையைத் தொடர்ந்திருந்தான். எதையும் விடவில்லை, புதிதாக எந்த காரணமும் கொண்டு வந்து நிறுத்த முடியாது என முழுமையாக நம்பினான். ஆனாலும் கொலைக் குற்றம் சாட்டப்பட்டவனுக்குத் தண்டனை பெற்று தரும்வரை இவனுக்கு இந்த தலைவலி இருக்கவே செய்யும்.

அவன் கையிலிருந்தக் கோப்பை மேசையில் வைத்துவிட்டு நிற்கவும், "படிச்சு முடிச்சுட்டியா வேந்தா கிளம்புவோமா?" என வேகமாக எழுந்து நின்றார் அனிருத்.

"உன்ன அப்பவே கிளம்புனுட்டேன், இங்கேயே இருந்து உன்ன கூட்டிட்டு போறேன்னு உட்கார்ந்துருந்துட்டு, அப்ப இருந்து புலம்பிகிட்டே கிடக்க. அத்த தேடும்னா கிளம்பு நீ" என அரட்டினான் வேந்தன்.

"அக்கா வையும் வேந்தா. நா டவுனு வரைக்கும் போறேன்னு சொன்னதுமே, அப்ப பிள்ளை கூட இருந்து கூட்டிட்டு வந்துருன்னு சொல்லி விட்டுச்சு தெரியுமா? அதேன் இவ்வளவு நேரம் இருந்தேன் உன் அத்தை மேல எனக்கு என்ன பயமாம்? அப்டி வேற சொல்லிட்டு திரியுதாளா அவ?"

"நா என்ன சின்ன பிள்ளையா? வேலை முடிஞ்சா வீட்டுக்கு வரத் தெரியாதா எனக்கு?" என்றான் வேந்தன்.

"அதுக்கு நீ கொஞ்ச நஞ்சமா வம்பிழுத்து வச்சுருக்கணும். ஊரு பூராவும் விவகாரம் பண்ணிட்ட அப்ப வீட்டுல உள்ளவுகளுக்கு பயமாத்தேன் இருக்கும்"

"இப்ப உன் கூட வந்தா எவனாவது குறுக்க சாடுனா பறந்து பறந்து ப்ரூஸ்லி மாறி சண்டை போட்ருவ நீ?"

"பின்ன? ஏன் போட மாட்டேன் நினைக்கியாக்கும்? உன் மாமன் வாரேன்னு தெரியபோயி தான் ஒருபயலும் உன்ன நெருங்க மாட்டேங்குறான் தெரிஞ்சுக்கோ. அதேன் மாமே இப்புடி அடிக்கடி உன்கூட தலையக் காட்டிகிட்ருக்கேன்" எனக் காலரைத் தூக்கி விட்டு மீசையை நீவிவிட்டு அனிருத் சொல்ல,

"இந்த கதையெல்லாம் உன் அக்காட்டையும் நம்பி கழுத்த நீட்டுன அத்தைட்டையும் வேணா சொல்லு நம்புவாங்க. தனியா ஊருக்குள்ள போவ பயந்துட்டுதேன் இங்கனயே உட்கார்ந்துருக்கன்னு எனக்கு தெரியாதுன்னு நினைக்காத" என்றவன் பேசிக் கொண்டே அனைத்தையும் ஒழுங்காக எடுத்து வைத்து, பாட்டையும் நிறுத்தி விட்டு கிளம்புவதற்கு ஆயத்தமானான்.

"ஆருக்கு பயம்? எதுனாலும் வந்து பாருன்னு மூஞ்சிக்கு நேரா ஒத்தைக்கு ஒத்த நிப்பேனாக்கும். சும்மா இல்ல? இங்க கேளு, அந்தக் காலத்துல ஏழெட்டு வயசுல தெருவிளக்கு இல்லாம இருக்கக்கயே சாமம்ன்னு இல்லாம வயல்ல தண்ணி பாயவிட்டுக் காவலுக்கு நின்னவன் தெரியுமா? ஆர பாத்து பயமுன்னுற?"

"உனக்குத்தான் மாமா உனக்கே உனக்குத் தான்" எனச் சிரித்தவாறு வேந்தன் வெளியே வந்திருக்க, அவன் பின்னேயே வெளியே வந்தவர், "நா பாட்டுக்கு அப்பவே கிளம்பி போயிருக்கணும். நம்ம மருமகனேன்னு பாசத்துல நின்னேன்ல அதான் இம்புட்டு பேசுத நீ" என வாய்க்குள்ளேயே புகைந்து கொண்டிருந்தார்.

"பத்து மணி ஆகிட்டு, உன் மாமன் ஒத்தைல வந்துகிட மாட்டான் உன் கூட நிக்கவச்சு பத்ரமா கூட்டிட்டு வந்துருய்யான்னு உன் அக்கா தான் எனக்கு ஃபோன போட்டு சொன்னாப்டி, வேணும்னா போனதும் உன் அக்காவ நீயே கேளு" என்றவன் அவனது மாருதி ஜிப்ஸியில் ஏறி அமர்ந்தான்.

"உங்க கூடவே இருக்கேனுல்ல அதான் என் அருமை தெரியாம ஆளாளுக்கு லந்து பண்ணுதீக" என முகத்தை சுருக்கி கொண்டு தானும் மறுபக்கம் கதவைத் திறந்து ஏறி அமர்ந்தார் அனிருத்.

"சரி விடு மாமா. நமக்குள்ள இதென்ன புதுசா. ஆமா என்ன விஷயமா டவுனுக்கு வந்த?"

"அங்கன வந்து ரெண்டு மணிநேரமா குத்த வச்சுருந்தவன்ட்ட ஒரு வார்த்தை கூட கேட்காம இருந்துபுட்டு இப்பத்தான் கேக்குதான் காரணத்த"

"நாந்தான் ஃபைல் பாத்துட்டருந்தேன்ல?"

"விதவிதமா பாட்டு கேட்டேம்னு வேணா சொல்லு"

"அது நீ தூங்காம இருக்கறதுக்கு போட்டது"

"என்ட்டையே நடிக்காத வேந்தா நீ! இப்படி பாட்ட கேட்டே வாழ்க்கைய ஓட்ட போறியா நீயி?"

"நீ என்ன வேலையா வந்தன்னு சொல்லு முதல்ல"

"உடனே பேச்ச மாத்திடு" என்ற அனிருத், "புதுசா ஒரு வெளிநாட்டு ஏஜென்ட் கிடைச்சுருக்கான் போல அவனுக்கு நம்ம தைலம் சேம்பிள் கொஞ்சம் குடுத்துட்டு வரலாம்னு போனேன்"

"ஓ! யாரு என்னன்னு நல்லா விசாரிச்சாச்சா?"

"அதெல்லாம் உன் அண்ணனுக்கு தான் தெரியும். என்னைய குடுத்துட்டு வான்னு சொன்னான் குடுத்துட்டு வந்துட்டேன்"

"நீங்க தான அதுக்கு முதலாளி?"

"அவன் நிறைய ஆர்டர் பிடிக்கிறான், சரி அடுத்தக்கட்டத்துக்கு தொழில் வளர்ந்தா போதும். அவன் பார்த்தா என்ன நா பார்த்தா என்ன இப்ப?"

"சரியான ஏமாளி மாமா நீ!"

"இருந்துட்டு போறேன் போ என் மருமகன் தான ஏமாத்துறான். வெளியாள்ட்ட ஏமாந்தா தான் தப்பு" என்றவர், வெளியே தெரிந்த கும்மிருட்டை பார்த்து விட்டு தலையை முழுவதுமாக குனிந்து அமர்ந்து கொண்டார்.

"ஏமாறுறதே தப்பு தான் மாமா" எனச் சொல்லிக் கொண்டிருக்கையிலேயே வண்டி சட்டென்று நின்றது.

"ஏன்டா நிப்பாட்டிட்ட?" எனப் பதறி நிமிர்ந்து மருமகனைப் பார்க்க, அவனோ சாவியைத் திருகி வண்டியை எடுத்துக் கொண்டிருந்தான்.

"அடேய் வண்டிய எடுறா. இங்க ஏன்டா நிப்பாட்டின?" என வெளியே திரும்பி பார்த்தவருக்கு, சலசலக்கும் ஆற்றின் நீரும், காற்றில் ஆடும் ஆற்றங்கரை மரங்களும் திகிலை கிளப்பி விட மீண்டும் மருமகனிடம் திரும்பியவர், "அடேய் வேந்தா வண்டியை எடுடா. என்னத்தடா அங்க தேடிட்ருக்க" என அவன் கையை போட்டு உலுக்க.

"ம்ச் மாமா வண்டி எதனால நின்னுச்சுன்னு தெரியல. பெட்ரோல்லாம் இருக்கு, இன்ஜின் தான் ஸ்டார்ட் ஆக மாட்டேங்குது. இறங்கி தள்ளுறியா, ஸ்டார்ட் ஆகிடும்" என முகத்தை சுருக்கியே கேட்டான். வண்டி பாதியில் நின்ற கடுப்பு அவனுக்கு. அந்த இடத்தில் நின்றுவிட்ட பதட்டம் அவருக்கு.

"இறங்கி தள்ளுறதா? என்ன விளையாடுறியா? நீ வேணும்னு பண்ணுத வேந்தா. மாமாவ வச்சு விளையாட்டு காட்டாத. நா உன் தாய்மாமாடா"

"நா என்ன சித்தப்பான்னா சொன்னேன்? லூசு மாமா. வண்டி நின்னுருச்சுன்னு சொல்லிட்ருக்கேன். பயத்துல உளறிக் கொட்டுற. நீ வந்து ட்ரைவர் சீட்ல உட்காரு. நானாச்சு இறங்கி தள்ளுதேன்" எனக் கடுப்பாக கூறி அவன் இறங்க போக.

"ஐயையோ விட்டு போகாதடா. மாமாவும் உன்கூட இறங்கி தள்ளுதேன்"

"ரெண்டு பேரும் இறங்கிட்டா. வண்டியை உங்கொப்பத்தா வந்து ஓட்டுமா?" எனப் பல்லைக் கடித்தான் வேந்தன்.

"செத்தவுகலாம் சாமிக்கு சமம் அப்படி பேசப்டாது வேந்தா" என்றவர் சுற்றி வெளியே பார்த்தவாறு அவன் கையைப் பிடித்து அவனை ஒட்டிக்கொண்டே வந்து கியருக்கு மேல் ஏறியிருந்தார்.

அவரைப் பார்த்து விட்டு வெளியே பார்த்தவன், "அங்கதான் இருக்குதா உன் அப்பத்தா?" எனக் கேட்க,

"எனக்கு அப்பத்தான்னா உனக்கு பூட்டி பாத்துக்கோ. சும்மா பேசக்கூடாது. கெட்ட சக்திட்ட இருந்துலாம் நம்ம மூதாதையர்கள் தான் நம்மள காப்பாத்துவாங்க தெரிஞ்சுக்கோ"

"சரி அவங்களே வந்து காரையும் தள்ளட்டும். நீ அப்படி கொஞ்சம் தள்ளி உட்கார்ந்தன்னா நா கொஞ்சம் சரிஞ்சு படுத்துப்பேன். தள்ளுயா மாமா" என அவர் கையை எடுத்துவிட்டு சீட்டில் தள்ளியும்விட,

"எதே தூங்க போறியா? அடேயப்பா உனக்கு கொஞ்சம் கூடவா பயமா இல்ல? கொலையா கொல்லுதானே" என்றவர் மீண்டும் அவனை நெருங்கி வர,

"கியர்ல இருந்து கீழ இறங்குயா முதல்ல. அதையும் உடச்சுவிட்டுட்டன்னா விடிஞ்சாலும் இங்கிருந்து நகர முடியாது"

"தள்ளித் தள்ளி விடாத வேந்தா பயந்துட்டு வருது. சீக்கிரம் வண்டிய எடேன் வீட்டுக்கு போயிடுவோம்" என்கையிலேயே அவன் ஃபோன் வீறிட்டு அலற, அதற்கு மேல், "அம்மாடி முருகா முருகா முருகா!" என அழவே துவங்கியிருந்தார் அனிருத்.

"ஃபோன் மாமா ஃபோனு தான். ஒத்தைக்கு ஒத்தை நிக்கிற முகரைய பாரு" என முறைத்தவாறு அதை எடுத்து காதில் வைத்தான்.

"ஏய்யா மணி ஒன்னாக போவுது எங்கையா இருக்கீங்க?" என அழைத்திருந்தார் அவன் அன்னை படிகாசீயம்மாள்.

"வர்ற வழி தான்மா. நீ போய் படும்மா நாங்க வந்துடுவோம்"

"எக்கா மணி ஒன்னாயிருச்சாக்கா? ஆத்தங்கரை பக்கத்துல வண்டிய பேய் நிறுத்தி வச்சுருச்சுக்கா. எனக்கு என்னமாச்சு ஆச்சுன்னா என் பொண்டாட்டி புள்ளைய மட்டும் பாத்துகிடுக்கா. உன் மகேன் என்ன காவு குடுக்காம நகர மாட்டேன்னு நிக்கியான்" என அனிருத் கத்தி கூப்பாடுப் போட,

"யாத்தே ஏய்யா அய்யாவு என்னையா சொல்லுத?"

"அனிருத்னு சொல்லுக்கா" என அவர் அழுதுகொண்டே அக்காவைத் திருத்த, முறைத்து பார்த்தான் வேந்தன்.

"எனக்கு நெஞ்செல்லாம் அடைக்குதே நா என்ன பண்ணுவேன். வண்டியப் புடிச்சுகிச்சுனா அத அங்கனயே விட்டுட்டு நீங்க இறங்கி ஓடி வந்துருங்கய்யா. திரும்பி பார்க்காம ஓடி வந்துருங்க ராசாக்களா. வண்டி போனாப் போட்டும் உசுருதேன் முக்கியம்" என அவர் இன்னும் ஒப்பாரியைக் கூட்ட, தலையில் அடித்து கொண்டு பக்கத்தில் இருந்த மாமன் தலையிலும் நறுக்கென்று கொட்டு வைத்து வாயை மூட செய்கைக் காட்டினான் வேந்தன்.

"எக்கா இவனே என்ன கொன்னுறுவான்க்கா"

"காக்க காக்க சொல்லுயா ஒரு கெட்டதும் கிட்ட வராது. நம்ம குலசாமி சுப்புரமணியர் இருக்கைல நம்மகிட்ட எதுவும் வராதுய்யா. அழாத தம்பி" என்றார் படிகாசீ.

"நல்ல அக்கா நல்ல தம்பி. எம்மா ஃபோன வைம்மா நாங்க வரோம்" என்றவன் வண்டியை விட்டு பட்டென்று இறங்கவும், அந்த இடத்தில் அவ்வளவு அமைதி. பிச்சிப்பூ நறுமணம் காற்றில் அந்த இடைத்தையே நிரப்பிக் கொண்டு வந்தது போலிருந்தது. நிச்சயமாக உணர்ந்தான் அந்த வாடையை ஆனால் காட்டிக் கொள்ளவில்லை. சுற்றிப் பார்த்தவாறு காரின் பின்னால் சென்று நின்று, "மாமா கார ஸ்டார்ட் பண்ணி, கியர் போடு, ஆக்ஸிலேட்டர மிதி" என்க, கிடுகிடுவென நடுங்கியவர், தட்டுத்தடுமாறி கொண்டிருந்தார்.

"மாமா!" என்றவன் மறுபடியுமான சத்தத்தில், சாவியைக் கீழே போட்டிருந்தார்.

"அடேய் அலறாதடா. ரொம்ப பயமா இருக்கு" எனக் குனிந்து தேடிக்கொண்டிருந்தார் அவர்.

வேந்தனோ காரைத் தள்ளினான் எளிதாக நகர்ந்தது. அவன் அழுத்தம் கொடுப்பதை குறைத்தும் கார் நகர்வது போலிருக்க, மெல்ல அழுத்தம் கொடுப்பதை நிறுத்திக் கொண்டான். ஆனால் காரை யாரோ தள்ளுவது போல் நன்கு நகர்ந்தது. உள்ளே இருந்தவர் ஒருவழியாகத் தேடி எடுத்து காரில் சாவியைப் போட்டு திருகி, கியரை ரிவர்ஸில் போட்டு ஆக்ஸிலேட்டரை குடுக்க, கார் ஸ்டார்ட் ஆகாமலே பின்னால் சட்டென்று நகர, சுதாரித்து பின்னால் நகர்ந்து நின்றான் வேந்தன்.

"கார பேயி பின்னாடி இழுக்குதுடா வேந்தா. ஓடி வந்துடுடா. வேந்தா வேந்தா எனக்கு பயமா இருக்குடா, வே வேவேவே" எனக் கத்தி கதறி அய்யாவழி அழ,

மிகுந்த எரிச்சலுடன் முன்னால் சென்றவன், ஜன்னல் வழி உள்ளே பார்த்தான், அவன் நினைத்தது போலவே ரிவர்ஸ் கியரில் தான் கிடந்தது கார்.
 
அத்தியாயம் 2

"மூளை கெட்ட மாமா. ஒன்னு ஒழுங்கா வண்டிய எடு. இல்ல இறங்கிப் போய் தள்ளு. எனக்கு நாளைக்கு கோர்ட்டுக்கு போகணும். நீ இப்டியே பண்ணிட்ருந்தனா. நா பாட்டுக்கு இங்கனயே தூக்கத்தப் போட்ருவேன். நீதான் பயத்துல ஜன்னி வந்து செத்துருவ"

"நான் ஒன்னுமே பண்ணலடா. நம்புடா வேந்தா பேய் தான்டா பிடிச்சு இழுத்துச்சு"

"ஆமா அங்க எங்கூட தான் நிக்குது இப்பதான் நலம் விசாரிச்சுட்டு வரேன்"

"எப்புடுறா அதுட்ட பேசுன? ஆம்பள பேயா பொம்பள பேயா? கண்டுபுடிச்சனா நாளைக்கு கோடாங்கிட்டச் சொல்ல வசதியா இருக்கும்டா. ஐயோ அது வர பேய் என்னைய ஒன்னும் செய்யாம இருக்கணுமே?" என்க, வந்த கடுப்பில் அவரை தரதரவென இழுத்து கொண்டு வந்து காரின் பின்னால் விட்டு, "வண்டிய நீயே தள்ளு. நா ஸ்டார்ட் பண்ணிக்கிறேன்" என்றவாறு முன்னே சென்று ஏறிக் கொள்ள,

"வேந்தா வேந்தா" என நடுங்கினார் அவர்.

"ஒழுங்கா தள்ளு மாமா. இல்லன்னா விட்டுட்டு போயிடுவேன்" அதட்டினான் வேந்தன்.

"காக்க காக்க கனகவேல் காக்க
நோக்க நோக்க நொடியில் நோக்க
தாக்க தாக்க தடையறக் தாக்க
பார்க்க பார்க்க பாவம் பொடிபட" நடுங்கியவாறே கண்ணை இறுக மூடி இதை சொல்லியவாறு காரைத் தள்ள, மெல்ல நகர்ந்தது கார்.

அவன் தள்ளும் போது இருந்ததற்கும் இப்போது கார் நகருவதற்குமான வித்தியாசம் உணர்ந்த வேந்தன், 'ரிவர்வியூ' கண்ணாடி மூலம் பின்னால் இருந்த ரோட்டையும் அதன் ஓரங்களையும் தீவிரமாக ஒருமுறை பார்வையால் சுற்றி வந்தான். எதுவுமே அவன் கண்களில் புலப்படவில்லை. கண்ணால் பார்க்கும் வரை அவனுக்கு நம்பிக்கையும் வரப்போவதில்லை.

ஒன்றரை வருடங்களாக இந்த இடத்தைப் பற்றிய அமானுஷ்ய கதைகள் அதிகமோ அதிகம். அவனும் கேட்கிறான் கேட்கிறான் கேட்டுக் கொண்டு மட்டுமே இருக்கிறான். ஊருக்குள் ஒரு குடும்பமே அழிந்து விட்டது அதற்கு காரணம் இந்த பேய் என்றும் கூறப்படுகிறது. வக்கீலாக இருக்கும் அவனால் கூட அதிலிருந்து சந்தேகம் கொள்ளும்படி எந்த ஆதாரங்களையும் திரட்ட முடியவில்லை. மற்றவர்கள் அதை பேயின் வேலை என்ற முடிவிற்கே வந்துவிட, இவன் மட்டுமே இன்னும் காரண காரியங்களை தேடிக் கொண்டிருக்கிறான்.

இன்றுவரை பலநாட்கள் இது போன்ற இரவு வேளைகளில் இந்த ஆற்றங்கரை பாதையைக் கடந்து அவன் வீட்டிற்கு சென்றுக் கொண்டு தானிருக்கிறான். இதுவரை இப்படி கார் நின்றதில்லை. இது போன்ற உணர்வுகளும் இல்லை. இன்று மட்டும் நடக்கிறது என்றால் யாரோ திசை திருப்ப முயல்கின்றனர் என்ற நோக்கத்தில் மட்டுமே அதை யோசித்தான். பேய் என்ற கட்டுக்கதையை அவன் நம்ப தயாராக இல்லை.

சரியாக ஒரு கிலோ மீட்டர் கடந்ததும் ஊர் எல்லையில் உள்ள நாகாத்தம்மன் கோவில் வரவும் வண்டி கிளம்பியது. அந்த சத்தத்தில் கண்ணைத் திறந்த அனிருத்திற்கு உலகமே பிரகாசமானது போல் தெரிந்தது. கண் முன்னே தெரிந்த நாகாத்தம்மன் கோபுரத்தைக் கையெடுத்துக் கும்பிட்டு நடுரோட்டிலேயே நெடுஞ்சானாக விழுந்துவிட்டார்.

அந்நேரம் எங்கோ தூரத்தில் நாய் ஊளையிடும் சத்தம் கேட்கவும், அடித்து பிடித்து எழுந்து ஓடிவந்து காரில் ஏறிக்கொள்ள, வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டான் கரிகாலவேந்தன். தூரத்தில் நின்ற அந்தப் பெண் உருவமும் இவர்களைத் தான் பார்த்து சிரித்துக் கொண்டு நின்றது.

இருவரும் வீடு வரும் வரை வாசலிலேயே நின்றிருந்தார் படிகாசீ.

வேந்தன் ஜிப்ஸியை கண்டதும், "முருகா ரொம்ப நன்றிய்யா. கண்டிப்பா முடிஞ்சு வச்ச காணிக்கைய உன் காலடியில கொண்டு சேர்த்திடுறேன்" என வேண்டிக் கொண்டு வண்டி வந்து நிற்கும் இடத்திற்கு ஓடி வந்தார்.

அங்கேயே நின்று அக்காவும் தம்பியும் பாசத்தைப் பொழிந்து கொண்டிருக்க, இருவரையும் பார்த்து தலையை இட வலமாக அசைத்துவிட்டு விறுவிறுவென வீட்டினுள் சென்றுவிட்டான் அவன்.

அதன் பின்னர் நடந்ததைத் திகில் கதையாகக் கூறிப் பயந்து புலம்பி இருவரும் தூங்க செல்லும் போது சேவலே கூவிவிட்டிருந்தது.

அது தேனாறு கிராமம். நீலகிரி மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள கிராமங்களில் ஒன்று. தேனாற்றங்கரையில் அமர்ந்திருக்கும் ஊர் என்பதாலேயே அந்த கிராமத்தின் பெயர் தேனாறு என்பது வரலாறு.

கரிகாலவேந்தன் நீலகிரி மாவட்டத்தில் உள்ள நீதிமன்றத்தில் அரசாங்க வக்கீலாக பணிபுரிபவன்.

அவன் அம்மா படிகாசீயம்மாள் அப்பா உலகநாயகன். அவனுக்கு ஒரு அண்ணன் மனோன்மணி அவன் மனைவி ஜகதாம்பாள்.

படிகாசீயம்மாளின் பெற்றோர்கள் அவரை திருமணம் செய்து கொடுத்த இரண்டு ஆண்டுகளில் இறந்து விட்டதால். அவரைவிட பதினொரு வயது சிறியவனான அய்யாவழி இவரின் பொறுப்பில் வந்திருக்க. சிறுவயதிலிருந்து அவரும் இவர்களுடன் தான். இதோ அய்யாவழி மனைவி உத்தமி, அவரது ஐந்து வயது மகன் திவினேஷ் என அங்கு தான் கூட்டுக் குடும்பமாக இருக்கின்றனர்.

காலையில் எப்போதும் போல் ஒன்பது மணிக்குக் கிளம்பி வந்துவிட்டான் வேந்தன். வீடே அமைதியாக இருந்தது. அவன் மாமன் இருந்தால் மட்டுமே சலசலப்பு இருக்கும். எல்லோரையும் எதாவது பேசிக் கேட்டு என வாயை மூடாமல் பேசிக் கொண்டே இருக்கும் ஜீவன் அவர் ஒருவரே. அவன் அப்பா எதிலும் சேர்த்தி இல்லை. நேரத்திற்கு சாப்பிடுவதும், டிவி பார்ப்பதும், படுத்தே இருப்பதும் தான் வேலையாக பார்ப்பவர். அவன் அண்ணன் நல்லவனாகவும் தெரிவான், சில நேரங்களில் கொஞ்சம் சுயநலமாகவும் தெரியக் கூடியவன். அவனுக்கும் அய்யாவழிக்கும் ஆறு வயதே வித்தியாசம். இருவரும் நண்பர்கள் போல்தான் பழகுவர். அய்யாவழி தொடங்கிய யூகலிப்டஸ் தைல தொழிலில் தானாக இணைந்து கொண்டவன், இன்று அவரை ஓரங்கட்டிவிட்டு முழுவதுமாக தனதாக்கிக் கொள்ள முயன்று கொண்டிருக்கிறான்.

"ம்மா!" என அழைத்தவாறு வந்து சாப்பிட அமர்ந்தான்.

"அம்மா இன்னும் எழும்பல தம்பி. நல்லா தூங்குதாக. இட்லி தான் வச்சேன். சாப்பிடுதீங்களா?" என வந்து நின்றார் உத்தமி, அய்யாவழி மனைவி.

"வைங்க அத்த. மாமா எங்க?"

"அவுக எந்நேரம் வந்து படுத்தாகன்னே தெரியல. எழுப்பி பார்த்தேன். போடி அந்தாலன்னுட்டாக நா வந்துட்டேன்"

"அக்காவும் தம்பியும் விடிய விடிய படம் ஓட்டிருப்பாங்க அத்த அதான் தூங்க லேட்டாகியிருக்கும்" என இவன் சிரிக்க, தானும் சிரித்தவர், "தம்பி, என் சொந்தத்துல ஒரு பொண்ணுக்கு வரன் தேடுதாக. நல்ல படிச்ச புள்ளதேன். இப்பதேன் படிப்ப முடிச்சது உடனே கட்டி குடுத்துடனும்னு பாக்காக. நா மதினிட்ட சொன்னேன். அவுக உங்கட்ட பேசவே பயப்படுதாக" என்றார் பாவமாக.

அவர் கூற ஆரம்பித்ததும் ஒருநொடி அவரை நிமிர்ந்து பார்த்தவன், நிறுத்தாமல் அவர் கூறிக்கொண்டே இருக்கவும் குனிந்து சாப்பிட துவங்கிவிட்டான், அவர் பேசி முடிக்கவும், "உங்களுக்கு பயமில்லையாத்தே அப்போ?" என மெலிதாக சிரிக்கவும் செய்தான்.

"எங்க வீட்டுப் பிள்ளைட்ட பேச எனக்கென்ன பயம்? உங்களுக்கும் கல்யாணம் பண்ணித்தானே ஆவுனும்? நானும் ஒருவாரமா உங்கட்ட பேசச் சொல்லுதேன். இந்தாங்காக அந்தாங்காக என்னையும் சொல்ல விட மாட்டேங்காக அதான் இன்னைக்கு சான்ஸ் கிடைக்கவும் சொல்லிட்டேன். வயசு இருபத்தி ரெண்டு, ஒம்பது வயசுதேன் வித்தியாசம் வரும் அதலாம் பெருசா நினைக்காதீக" என்றார் அவரே.

"பொண்ணு பவளமல்லி மாதிரி இருக்குமாத்தே?" என்றான் இன்னும் சிரிப்புடன் இவன். பவளமல்லி அந்த பெயரைச் சொல்லும்பொழுதே உள்ளுக்குள் மனம் ஆர்ப்பரித்து கொட்டியது.

"அடியாத்தே இன்னுமு அந்த புள்ளையவே நினைச்சுட்ருக்கீங்களாக்கும்?" என நெஞ்சில் கைவைத்து அதிர்ந்தேவிட்டார்.

"அந்தப் பிள்ளை மாதிரி இருந்தாலும் பரவாயில்லைன்னு சொன்னேனே அத்த?" என்றவாறு கையைக் கழுவ எழுந்து கொண்டான்.

"இது தெரிஞ்சுதேன் அத்த உங்கட்ட பேசவே பயப்படுதாகளோ?" என்றதும் இன்னும் விரிந்தது அவன் சிரிப்பு. ஆனால் அந்த பக்கமாகத் திரும்பி நின்றதால் அது உத்தமிக்கு தெரியாமல் தான் போனது. இல்லையென்றால் அந்தச் சிரிப்பிற்காகவே எப்பாடுபட்டாவது அன்றே அவனுக்கான பவளமல்லியை அவன் முன் கொண்டு வந்து நிறுத்தியிருப்பார்.

"உங்க சொந்தகார பொண்ணு அந்த பவளமல்லி மாதிரியே இருக்கும்னா எனக்கு முழு சம்மதம் அத்த. நா கிளம்புறேன். அம்மாட்ட சொல்லிடுங்க" என்றவன் வெளியே செல்ல நடக்கையில், வழியில் தான் அமர்ந்திருந்தார் அவன் தந்தை. அவர் இருந்த திசையைத் திரும்பி கூட பார்க்காமல் கடந்து சென்று விட்டான்.

நீதிமன்றம் வந்து அவனுக்கான அறையை நோக்கி வேகமாக நடக்கையில் அவனது உதவியாளராக இருக்கும் இருவரும் வந்து அவனுடன் இணைந்துக் கொண்டனர்.

"எப்படா வந்தீங்க?"

"இப்பதாண்ணா"

"கூடலூர் மர்டர் கேஸ் விசாரிக்க சொன்னேன்ல போகலையா?" என்றான் வலதுபுறம் வந்தவனிடம்.

"இதோ இப்டியே கிளம்பத்தாண்ணா. பேக் இங்க இருந்தது எடுத்துட்டு போயிடலாம்னு வந்தேன்"

"உனக்கு இங்க வேலை இல்லன்னா அங்க ஆபிஸ் போயிடு" என்றான் இடதுபுறம் வந்தவனிடம்.

"ஜட்ஜ்மென்ட் முடியவும் போறேண்ணா" என்றான் அவன் மெதுவாக. அவனை திரும்பி ஒரு பார்வை பார்த்தாலும் 'சரி' எனத் தலையசைத்து விட்டான்.

வரிசையாக இருக்கும் அலுவலக வராந்தாவில் திரும்பியதும் வக்கீல்களைப் பார்க்கவும் நீதிமன்றத்திற்கு வந்தவர்களும் எனக் காலை வேளை அந்த வராந்தா முழுப் பரபரப்பாக இருந்தது.

"ரவிச்சந்திரன் வந்துட்டாராடா?" என்றான் வேந்தன் மற்றவர்களிடம்.

"அவர் கார் நின்னதுண்ணா"

"அப்ப அவர்கிட்ட அந்த பிருந்தா கேஸ் ஸ்டடி வாங்கிட்டு வா" என்க, மற்றவனும் அதை வாங்க விரைந்துச் சென்று விட்டான்.

முன்னால் சென்றவன் சரசரவென நகர்த்தி சென்றதில் அவ்வளவு வேக நடையிலும் நொடி நேரத்திலும் அந்த பளிங்கு முகத்தை கண்டு கொண்டிருந்தான் கரிகாலவேந்தன். அந்த பளிங்கு முகமும் இவனை அல்லவா வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தது. இவ்வளவு கூட்டத்தில் அவன் கண்டுகொள்ள மாட்டான் என நினைத்து அவள் தைரியமாக பார்த்திருக்க. அவன் தான் நொடி நேர மக்கள் விலகலில் கண்டு கொண்டானே!

அவளையும் அவள் அருகில் இருப்பவரைப் பார்த்தவன், யோசனையுடன் நேராக அவர்களிடம் தான் விரைந்தான். அவன்கிட்ட வரவர முகத்தை வேறு புறம் திருப்பிக் கொண்டவள், அவன் நேராகத் தங்களை நோக்கித் தான் வருகிறான் எனத் தெரிந்ததும் உள்ளுக்குள் நடுங்கவே தொடங்கி விட்டாள். இதுவொரு புரியாத பயம். அவனுக்கும் அவளுக்கும் இடையில் எதுவுமே இல்லை ஆனால் அவன் தன்னிடம் வருகிறான் என்றதும் உள்ளுக்குள் பதறுகிறது காரணம் தெரிந்தாலும் தெளிந்துகொள்ள முயலவில்லை அவள்.

"இங்க என்ன பண்றீங்க?" என்றான் நேராக வந்து நின்று.

அவனை திடீரென எதிர்பார்க்காத பவளமல்லியின் அம்மா, படக்கென்று எழுந்து நின்று, "அது அது வந்து தம்பி, வரச் சொன்னாவ" என்றார் பயந்து கொண்டே.

"யார் வரச் சொன்னது? எதுக்கு?" என்றான் கறாராக.

"என் அக்கா கேஸ் விஷயமா பேசணும்னு வர சொன்னாங்க. லாயர் லலிதான்னு சொன்னாங்க. இன்னும் வரலபோல அதான் வெயிட் பண்றோம்" பவளமல்லி கண்ணை அங்கிங்கு உருட்டியவாறு அவன் முகத்தை மட்டும் தவிர்த்து சொல்லி முடிக்க,

"உன் அக்கா கேஸ தான் க்ளோஸ் பண்ணிட்டாங்களே? இப்ப அந்தப் பக்கம் கேஸ் குடுக்கக் கூட யாரும் இல்லைல?"

"வெளிநாட்டுல இருந்து ஒருத்தர் வந்திருக்காரு. அக்காவோட புருஷனுக்கு தாத்தா முறையாம்"

"ரெண்டு வருஷமா என்ன செஞ்சாராம்?" என்றவன் அந்த லலிதாவிற்கு தன் கைப்பேசியில் இருந்து அழைப்பு கொடுக்க, அவர் எடுக்கவில்லை.

"லலிதா இன்னும் வரலையாடா?" என்றான் அருகில் இருந்தவனிடம்.

"அந்தம்மா பாதிநாள் கோர்ட்டுக்கே வரமாட்டாங்களேண்ணா. இன்னைக்கு இவங்கட்ட வரேன்னு சொல்லிருக்கதால கொஞ்சம் லேட்டா வந்தாலும் வரலாம்"

அவனுக்கு தலையசைத்தவன், ஃபோனை பாக்கெட்டில் போட்டுக் கொண்டு, "கொஞ்ச நேரம் பாருங்க வரலைன்னா வீட்டுக்கு கிளம்பிடுங்க. எதும் பிரச்சினைனா யோசிக்காம கால் பண்ணுங்க. பண்ணணும்" என்றான் முடிவாக. கடைசி வார்த்தையைப் பவளமல்லிக்கும் தனியாகச் சொன்னான். தலையை மட்டும் அசைத்து வைத்தாள். அவளைப் பார்த்து விட்டு தானும் அசைத்தார் அவள் அன்னை.

மீண்டும் அழுத்தமாக ஒரு பார்வையைப் பவளமல்லிக்கு கொடுத்து விட்டே அந்த இடத்தை விட்டு அகன்றான்.

அடுத்த இரண்டு மணிநேரத்தில் அவன் ஆஜராக வேண்டிய கேஸ் அழைப்பு வந்துவிட, அதில் கலந்து கொண்டு தீர்ப்பும் அவன் பக்கம் உள்ளவர்களுக்கு கிடைத்துவிட்ட திருப்தியோடு வெளியே வர, கொலையாளியாக ஜெயிலுக்கு அழைத்து செல்லப்பட்டவன், "அடுத்து உன்னையும் கொன்னுட்டு இதே மாதிரி போவேன்டா பாக்க தான் நீ இருக்க மாட்ட" எனக் கொக்கரித்தபடி அவன் செல்வதை இவன் இலகுவாக தட்டிவிட்டு செல்ல, அங்கிருந்த மக்கள் தான் பயந்து பார்த்திருந்தனர். அதில் அவன் பவளமல்லியும் ஒருவராக கண்ணில் தேங்கிய நீருடன் அவனைப் பார்த்துக் கொண்டு நின்றிருந்தாள்.

 
அத்தியாயம் 3

வேந்தனுக்கு அது சாதாரணம் தான். தண்டனை பெற்றுச் செல்பவன் சந்தோஷமாகவா செல்வான்? தண்டனை வாங்கி தந்தவன் மீது கோபத்தை எவ்வழியிலாவது கொட்டிவிட்டு தான் செல்வான், 'இதற்கெல்லாம் அஞ்சினால் தொழில் பார்க்க முடியுமா?' என்பது தான் அவன் வாதமாக இருக்கும்.

பவளமல்லிக்கு இது புது அனுபவம், கடைசியாக அக்காவின் மரணத்தைப் பற்றிய விசாரணைக்கு நீதிமன்றம் வந்தாள். அதற்கும் அன்றைக்கு அவள் அக்கா கணவன் என்ன சொல்லிக் கொடுத்தானோ அதை அப்படியே ஒப்பித்துவிட்டுச் சென்றிருந்தாள். அதுவும் அவள் அம்மாவின் கட்டளையின்படி. இன்று அக்கா வீட்டினர் எனச் சொல்லிக்கொள்ள அங்கு ஒருவருமே இல்லை. அதைப் பற்றி தங்களிடம் விசாரிக்க என்ன இருக்கிறது என்றும் புரியாமல் தான் வந்து அமர்ந்திருந்தனர்.

வந்த இடத்தில், வேந்தனை எப்படியும் பார்த்துவிடலாம் என்ற நம்பிக்கை இருந்தது. பார்க்கவும் செய்தாள். வெள்ளை சட்டையும் கருப்பு பேண்ட்டும், ஜிப்ஸியிலிருந்து இறங்கி வந்த அவன் வேக நடையும், யோசனையான முகமும், சுழற்றிய ஆராய்ச்சி பார்வையும் என அவளை முழுமையாக ஈர்த்தான். என்றோ பார்த்து மயங்கி விட்டாள் தான். இருப்பினும் இன்று வரை மீண்டு எழவும் முடியாமல் அந்த மயக்கத்திலிருந்து விடுபடவும் விரும்பாமல் தவிக்கிறாள்.

பல மாதங்கள் கழித்து இன்று தான் அவனைக் காண கிடைத்திருக்கிறது அவளுக்கு. அவனே அருகில் வந்து பார்த்து பேசி சென்றதில் உள்ளுக்குள் சாரல் மழை தான். லலிதாவிற்காகத் தான் காத்திருந்தனர். ஆனால் அவர் வந்துவிட்டால் உடனே இங்கிருந்து கிளம்ப வேண்டுமே அதற்காகவே அவர் தாமதமாக வரட்டும் என வேண்டிக் கொண்டு அமர்ந்திருந்தாள்.

அவனோடு ஒரு வாழ்க்கை வாழ கொள்ளை ஆசை கொண்டிருப்பவளுக்கு, இவ்வாறு ஒருவன் தூற்றி செல்வதைக் கேட்டுக் கொண்டு எப்படி அமைதியாக நிற்க முடியும். தன்னை மீறி தான் கலங்கிய கண்களுடன் அவனை பார்த்தாள், அதை அவனும் பார்க்கிறான் எனத் தெரிந்தும் பார்வையைத் திருப்பிக் கொள்ள மனமின்றி பார்த்திருந்தாள்.

அவள் பார்வையை உணர்ந்த வேந்தன், ஜவகரிடம்(அவனிடம் பயிற்சியில் இருக்கும் இருவரில் ஒருவன்), "இன்னும் அந்த லலிதா வரலையாடா?" என்றான்.

"பாத்துட்டு வரேண்ணா" என அவன் சென்று பார்த்து வரும்வரை, அவனும் அவள் பார்வையில் இருந்து விலக முயலவில்லை. அங்கேயே சுவற்றில் சாய்ந்து கையைக் கட்டிக்கொண்டு நின்றுவிட்டான்.

"பாப்பா? எதுக்கு அங்கேயே பாக்குற? நேரா திரும்பி உட்காரு" என்ற அம்மாவின் அதட்டலில், "ம்மா!" என அவரிடம் திரும்பினாள்.

"அறிவில்லையா உனக்கு? வெளியிடத்துல நின்னுகிட்டு இப்படிதான் ஒரு மனுஷன பாப்பாங்களா? கூட நானும் நிக்றேன், என்ன பழக்கம் படிக்க நீ?" என்றார் அதட்டலாக.

"கஷ்டமா இருக்குமா. எதுக்கு அப்படி சொல்லிட்டு போறாங்க?"

"எவுங்க?"

"அந்தா அந்த வண்டீல ஏறி போனாங்களே போலீஸ் கூட"

"அவேன் என்ன தப்பு செஞ்சானோ அவனுக்கு மரியாதை ஒன்னுதான் கேடு"

"சரி அவன் ஏன் இவங்கள அப்படி பேசிட்டு போறான்?"

"அது அவரு தொழிலு. அதுல நேர்மையா இருந்தா இதுமாதிரி மிரட்டத்தான் செய்வாங்க. நமக்கு எதுக்கு அது? நல்ல வேளை அந்தப் பையனுக்கு உன்னைய கட்டி குடுக்கல. தெனந்தெனம் பயந்துட்டே இருக்க முடியுமா? ஏற்கனவே ஒரு பொண்ணு போயிட்டா, இன்னொருத்தி வாழ்க்கையவும் தொலைக்க திரிஞ்சேன் நானு. முருகரு தான் அன்னைக்கே நம்மள காப்பாத்தி விட்ருக்காரு" என்றார் அவர் புலம்பலுடன்.

"அப்ப நல்லவங்களா இருக்க கூடாதாம்மா?" என்றாள் பாவமாக.

"இப்ப உள்ள காலத்துல நல்லவங்களுக்கு தான்டி வாழத்தெரியலன்ற பட்டம் கிடைக்குது. நம்ம எம்புட்டு நல்லவங்களா இருந்து என்னத்துக்கு. பாத்தியா ரெண்டு பொம்பளைங்க எங்க வந்து உட்கார்ந்துருக்கோம்? கூட ஒரு நாதி இருக்கா? இதான் நம்ம நிலைமை. நம்ம நிலைமையே மத்தவங்க பாவப்படுத மாதிரிதேன் இருக்கு. இதுல நீ மத்தவங்களுக்கு பாவப்படாத"

"அவங்க மத்தவங்களாம்மா?" அவளுக்கு அவள் பிரச்சினை தான் பெரிது.

"வாயிலேயே போடுவேன். ஒன்றரை வருஷமா பாட்டா பாடுதேன். நீ நின்ன இடத்துலயே நிக்குறவ? இருக்கற பிரச்சினைல புது பிரச்சினை வேற வந்து நிக்குதுன்னு நா புலம்பிட்டு இருக்கேன், நீ இன்னும் தெளியாம சுத்திட்ருக்கன்ன? உன்ன யார் கையிலயாது புடிச்சு குடுத்துடலாம்னு பார்த்தா, இப்படி பிரச்சினையா இருக்க வீட்ல எவனும் பொண்ணெடுக்க கூட வர மாட்டேங்குறான். இனி ஊர காலி பண்ணிட்டு வேற எங்குட்டாச்சும் தான் போவனும் போல" என்றவர், "நீ இப்டியே பேசிட்ருந்தனா இன்னைக்கே பெட்டிய கட்டிருவேன் பாத்துக்கோ" என்றார் அவள் கையில் இடித்து முறைத்து.

"எங்க போனாலும் பிரச்சினை வரும். அதுக்கு தெரிஞ்ச இடத்துலயே இருக்குறது தான் நமக்கு சேஃப்"

"அதுதான இங்கையே கடந்து மாறடிக்குறேன். வயசு புள்ள உன்ன கூட்டிட்டு எங்க போய் தொலைவேன் நானும்?"

"இப்போ வந்துருக்க தாத்தா நம்ம மேல கம்ப்ளைண்ட் குடுத்துட்டாங்கனா நாம எங்கையும் போக கூட முடியாது"

அதிர்ந்தே விட்டவர், "நம்ம மேல குடுப்பாங்களா? எதுக்குடி நாம என்ன செஞ்சோம்?" என்றார் பதறி.

"தெரியலையே? ஆனா நம்மள எதுக்கு வர சொல்லணும்? மாமா வீட்ல அஞ்சு பேரும் எப்டி செத்தாங்கன்னு கண்டுபிடிக்க முடியலன்னு சொன்னாங்களே, நாம தான் எதும் பண்ணிட்டோம்னு உள்ள தூக்கி வச்சுட்டாங்கனா?" என்றாள் அவளுக்கு வேறு மாப்பிள்ளை பார்க்கப் போகிறேன் என அவர் சொல்லிவிட்ட கடுப்பில்.

"என்னடி என்னலாமோ சொல்லுற? நாம தான் பண்ணோம்னு எப்புடி டி சொல்ல முடியும்? நாம பொம்பளைங்க எப்புடி கொலைலாம் செய்ய முடியும்?"

"ஏன் கத்தி இருந்தா யாரு வேணா குத்தலாமே?"

"என்ன நீயே இப்படி சொல்லுற? ஐயோ நா என்ன பண்ணுவேன். வாடி அந்த வக்கீலம்மா பாக்க முன்ன ஓடிடலாம். இல்லாத பழிய நம்ம மேல தூக்கி போட்டுட்டா, நமக்குன்னு வாதாட கூட ஆளு கிடையாது" என்றார் செல்லம் வேகமாக எழ முயன்று.

"இருக்காங்கம்மா" என்றாள் மெதுவாக பவளமல்லி.

"ஆரு இருக்கா பாப்பா?"

"அவங்க தான்" என வேந்தனை கைக் காட்ட, இருவரையும் பார்த்தவாறு தான் நின்றான் அவன். அவர்கள் பேச்சு கேட்கவில்லை, ஆனால் வாயசைவில் இருவர் பேச்சையும் உள்வாங்கியபடி நின்றான் அவன்.

"கைய இறக்கு புள்ள. உன்னைய கோட்டியாவே வளர்த்து தொலைச்சுட்டேனே நானு" எனத் தலையில் அடித்து கொண்டார் செல்லம்.

"அண்ணா அந்தம்மா சென்னைக்கு போயிடுச்சாம். அவங்க சொந்தக்காரங்க வீட்ல ஏதோ பிரச்சினைன்னு அத பைசல் பண்ண கிளம்பி போயாச்சாம்" என அவனிடம் வந்து நின்றான் ஜவகர்.

"சூப்பர் அப்ப அங்க ஒரு கேஸ் ரெடியா இருக்கு எடுத்திடுவோமா?" என பவளமல்லியையும் அவள் அம்மாவையும் காண்பித்துக் கேட்க,

"யாருண்ணா அவங்க? சொந்தமா?"

"ம்ம் என் மாமியாரும், பொண்டாட்டியும்"

"அண்ணா!" அவன் அதிர்ந்து பார்க்க,

"ஆகிருக்க வேண்டியவங்க. ஜஸ்ட் மிஸ்ஸாகிடுச்சுடா ஜவகரு" என அவன் தோளில் கை போட்டு இவர்களை நோக்கி நடக்க,

"நீங்க இப்ப மிஸ்ஸானத மிஸ்ஸஸ் ஆக்கிடலாம்னு இருக்கீங்களாண்ணா?"

"மறுபடியும் ஒரு வாய்தா கிடைச்சா வேணாம்னா இருக்கு? என்னடா?"

சிரித்த ஜவகர், "தீர்ப்பு உங்க பக்கம் வர்ற வர நீங்க வாய்தா வாய்தாவா விடாம வாங்குவீங்களேண்ணா?"

"ஆமா நிரபராதி முக்கியமாச்சே?"

"இங்க யாருண்ணா நிரபராதி?"

"நாந்தான்!" என்கையில் இருவரும் பெண்களை நெருங்கி இருந்தனர்.

"என்ன இன்னும் கிளம்பாம உட்கார்ந்துருக்கீங்க?" என்றான் பெண்கள் இருவரையும் பார்த்து விறைப்பான குரலுடன். வாயைப் பிளந்து தான் பார்த்தான் ஜவகர். வேந்தனை வெவ்வேறு இடத்தில், நக்கலாக நையாண்டியாக பேசிப் பார்த்திருக்கிறான் தான், ஆனால் அது ஒரு பெண்ணிடம் என்பது அவனுக்கு முதல் முறையாக இருந்தது வேடிக்கை பார்த்திருந்தான்.

மகளைப் பேசவிடாமல் பிடித்த செல்லம், "அந்தம்மா இன்னும் கூப்பிட்டு விடல தம்பி?" என்றார்.

"அப்ப போய் நீங்களே பாக்கணும், இல்ல யார்ட்டையாவது விசாரிக்கணும். இப்டியே உட்கார்ந்திருந்தா ஆச்சா?"

"இங்க எங்களுக்கு யார தம்பி தெரியும்? அந்த வக்கீலு அம்மாவையும் கூடத் தெரியாது. இதுக்கு முன்ன பின்ன பாத்ததில்ல"

"அப்றம் ஏன் கிளம்பி வந்தீங்க?"

"வக்கீலுன்னு சொல்லும் போது பயப்படத் தானே வேண்டி இருக்கு" என்றார் அவர், குரலைச் செருமிக் கொண்டு பவளமல்லியை ஒரு பார்வை பார்த்தான் வேந்தன்.

"உங்க மேல கம்ப்ளைண்ட் குடுத்துருக்காங்களா?"

"தெரியல தம்பி"

"அந்த பெரியவர் எங்க இருக்காரு?"

"தெரியலையே தம்பி"

"அவர் உங்கள வந்து பார்த்தாரா?"

"இல்லையே தம்பி"

தலையைக் கோதி கொடுத்து நிதானமானவன், "வீட்டுக்குக் கிளம்புங்க. மறுபடியும் ஃபோன் வந்தா எனக்கு சொல்லுங்க. நீங்களா இப்படி கிளம்பி வராதீங்க" என்க,

"நாங்க இப்ப போயிட்டா அந்த வக்கீல் அம்மா கோவிக்க மாட்டாங்களா?" என்கவும் இவன் முறைத்து பார்க்க, "இல்ல அத காரணமாக்கி எங்க மேல கொலை பழி எதுவும் போட்ற கூடாதுன்னு அம்மா பயப்படுறாங்க" என்றாள் பவளமல்லி.

"அவங்க இங்க வரேன்னு சொல்லிட்டு சென்னை கிளம்பி போயாச்சு. நீங்க இங்க காத்து கிடந்தாலும் வேஸ்ட் தான். வீட்டுக்கு போங்க. மறுபடியும் வர சொன்னா, என்கிட்ட சொல்லுங்க. அந்த பெரியவர் வந்தாலும் எனக்கு சொல்லணும்" என்றான்.

"இல்ல தம்பி" செல்லம்மா பயந்து ஏதோ சொல்ல வர,

"அதுக்கு ஃபீஸ்ஸா உங்க பொண்ணக் கட்டி குடுங்கன்னு கேட்டுட மாட்டேன் பயப்படாம போங்க" என அவன் கூறியதும் கப்பென்று வாயை மூடிக்கொண்டு மகள் கையையும் விடாமல் பிடித்துக் கொண்டு கிளம்பி விட்டார்.

பவளமல்லி அம்மாவின் இழுப்பிற்கு திரும்புகையில் அவள் நீள முடியின் நுனியில் மாட்டியிருந்த ஹேர்பேண்டை உருவி எடுத்திருந்தான்‌. ஒருநொடியில் கண்கட்டு வித்தை தான் காண்பித்திருந்தான் வேந்தன். அவளே பின்முடி இழுபடுவதை உணரும் முன் செய்திருந்தான்.

திரும்பி பார்க்கும் ஆசை இருந்தும், அம்மாவிற்கும் பயம் தங்களைப் பார்த்தே நிற்கும் வேந்தனை நேருக்கு நேர் பார்க்கவும் பயம் என சின்ன சிணுங்களுடனே கிளம்பி விட்டாள். அவளிடமிருந்து உருவிய அந்த கருப்பு நிற ஹேர்பேண்டை கையில் மாட்டிக்கொண்டான் வேந்தன்.

"அண்ணா!" என்ற ஜவகரைத் திரும்பி பார்த்தவன், "லலிதாவ லைன்ல புடி, இவங்களுக்கு கால் பண்ண பெரியவர நேர்ல புடி" என வேலையை கொடுக்கவும், தலையாட்டிக் கிளம்பி விட்டான் ஜவகர்.

நான்கு மணி வரை நீதிமன்றம் அதன்பிறகு அவன் தனியாக வைத்திருக்கும் அலுவலகம் என இரவு பத்து மணி வரை அங்குதானிருப்பான். வேலை இருக்கும் நாட்களில் மட்டுமே கொஞ்சம் தாமதம் ஆகும். மற்ற நாட்களில் பத்து மணிக்கு அலுவலகத்தைப் பூட்டிவிட்டு கிளம்பிவிடுவான்.

அன்றும் அதேபோல் கிளம்பி விட, அந்த ஆற்றங்கரைச் சாலை வரும் முன்னரே முந்தைய தினம் நடந்தது ஞாபகத்தில் வந்தது. அவன் கிராமத்திற்குத் திரும்பும் சாலையின் ஆரம்பத்திலேயே ஆற்றின் வளைவும் இருக்கும், அதிலிருந்து ஊரின் உள்ளே வரை ஆறும் அதை ஒட்டிய சாலையும் தான் அவர்கள் கிராமத்திற்கானப் பாதை. அந்த சாலைக்குள் திரும்பியதுமே இரண்டு பக்கமும் ஆராய்ச்சி பார்வை பார்க்க துவங்கியிருந்தான்.

பார்த்துக் கொண்டே வந்ததில் சரியாக முந்தைய தினம் வந்த இடம் வந்ததும் அவனது ஜிப்ஸி நின்று கொண்டது. பதட்டமே இல்லாமல் சீட்டில் சாய்ந்தமர்ந்து, ஒரு கையில் ஸ்டியரிங்கும் மறுகையை ஜன்னலை திறந்து விட்டு அதில் ஊன்றியபடியும், இடதுபுறம், வலதுபுறம், இருபக்க கண்ணாடிகள் வழி பின்பக்கமும் என நிதானமாக சுற்றி வந்தது அவன் பார்வை.

மணி பத்தரை தான் ஆகியிருந்தது ஆனால் முன்னால் பின்னால் எனக் கண்ணுக்கு எட்டிய தொலைவிற்கும் தெருவிளக்கு வெளிச்சம் மட்டுமே.

"எப்டி கார் நிக்குது?" என்ற கேள்வி மட்டுமே அவன் மண்டையை வெகுவாக குடைந்து கொண்டிருந்தது. நேற்று அனிருத் இருந்ததால் அவரை உள்ளே உட்கார வைத்து ஒரு கிலோமீட்டருக்கு காரைத் தள்ளி கொண்டு சென்றுவிட்டனர். இன்று அதுபோல தள்ளவும் முடியாது என்ற எரிச்சல் நேரம் செல்ல செல்ல அதிகரிக்க துவங்கியிருந்தது.

காரை விட்டு இறங்கி வெளியே வந்தான், அதே பிச்சிப்பூ வாசனை, தலைக்கு ஏறி கிறுகிறுக்கும் அளவிற்கு குப்பென்று மூக்கைத் துளைத்தது. ஜிப்ஸியை சுற்றி வந்து பார்த்தான், டயரும் எதிலும் ஏறியதால் வண்டி நின்றுக்கவில்லை. இன்ஜினைத் திறந்து பார்த்தான், சிலபல வயர்களை பிடிங்கி மறுபடியும் மாட்டிவிட்டு மூடினான். ஏறி சாவியைப் போட்டான் வண்டி எடுக்கவில்லை.

 
அத்தியாயம் 4

"ச்சை!" என முனங்க, அவன் கைபேசியில் அழைப்பு வந்தது, சட்டை பையிலிருந்து எடுத்து பார்த்தான், 'தாய்மாமன்' என அதில் மின்னி மின்னி மறைந்தது.

"சொல்லு மாமா!"

"வேந்தா எங்கடா இருக்க? இன்னும் வீடு வரல?" என்றார் அனிருத்.

"ஆபிஸ்ல தான் மாமா நிக்றேன். வண்டி ஸ்டார்ட் ஆக மாட்டேங்குது. ஜவகருக்கு ஃபோன் பண்ணா எடுக்க கூட மாட்டேங்குறான். மணி ஈரோடு வர போயிட்டான். இப்ப எப்டி வீட்டுக்கு வரதுனு தெரியல" தாராளமாக கூறினான்.

"சீக்கிரம் கிளம்பியிருந்தா பஸ்லயாவது வந்துருக்கலாம்ல" எனச் சலித்தார் அனிருத்.

"சரி விடு மாமா. நா இங்க தங்கிடுறேன். நாளைக்கு வரேன்"

"அங்க எங்க தூங்குவ நீ? இத்தினிகானு பெஞ்ச் தான் கடக்கு. அதுல படுத்து நீ தூங்கத்தான?"

"அதுக்கு என்ன செய்ய. நீ பைக்க எடுத்துட்டு வரவா போற?"

"ஆத்த கடந்து என்னன்னுடா வருவேன் நானு?"

"நீ வரமாட்டன்னு தான் எனக்கே தெரியுமே. விடு நா என்னனாவது இங்கன படுத்துகிடுதேன்" என வைத்துவிட்டான். தாய்மாமன் எப்படியும் வருவார் எனத் தெரிந்தே!

"என்னங்க புள்ள என்ன சொல்லுது?" என்றார் உத்தமி.

"என்னத்த சொல்லுவியான்? தெனமு என்னைய போட்டு படுத்துனாத்தேன் அவனுக்கு ஒழுங்கா உறக்கமே வரும்" என்றார் உத்தமியிடம் கோபமாக.

"என்னத்துக்கு கோவிக்கீக?"

"வண்டி ரிப்பேரா இருக்காம். வீட்டுக்கு வரலன்னுதான்"

"ஐயோ புள்ள அங்கன எப்புடி தூங்கும்? மதினிக்கு தெரிஞ்சா சக்கையாக்கி போடுவாக பாத்துக்கோங்க"

"அதுக்குன்னு இந்நேரம் அந்த ஆத்து பாதைல நா போகவா?"

"ஏன் பயமா இருக்காக்கும் உங்களுக்கு? ஒத்த கைல சங்க புடிச்சு தூக்கிபுடுவேன்னுவீக?" என்றார் உத்தமியும் நேரம் பார்த்து.

"இவ ஒருத்தி. போடி அந்தால"

"ஏலே அய்யாவு!" எனச் சரியாக அழைத்துவிட்டார் படிகாசீ.

"எக்கா அனிருத்னு உன் வாயில வரவே வராதா?" எனக் கத்திக் கொண்டே எழுந்து அவர் வெளியறை செல்ல,

"ம்ச் உன் மருமகன இன்னும் காணும். போனு போட்டியா?"

"அது மதினி" என உத்தமி ஆரம்பிக்க, "சும்மா இருட்டி நீ. நா போய் கூட்டியாறேன்" என இருசக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு கிளம்பிவிட்டார் அனிருத்.

"எங்க போறான் இவேன்?" என்றார் படிகாசீ.

"தம்பி ஆபிஸுக்கு"

"ஐயையோ இவேன் என்னன்னு ஆத்த கடந்து போவான்?"

"அதெல்லாம் போயிருவாக. உங்க தம்பிய நீங்க இன்னும் பச்ச புள்ளையாவே நினைக்காதீக மதினி. இவர நீங்க அப்படியே வச்சீகனா பின்ன அவுக புள்ள எங்கிருந்து தைரியசாலியா வளர்றது?" என நொடித்த உத்தமியைப் பாவமாக பார்த்தார் படிகாசீ. முந்தைய தினம் அவர் தம்பி அழுத அழுகை அவருக்குத் தானே தெரியும். பேய் பயத்தில் கண்ணை மூடிக்கொண்டு வண்டியை ஓட்டி ஆற்றில் எதுவும் இறக்கிவிட கூடாதே என இன்றும் முருகனைத் துணைக்கு அழைத்துக் கொண்டு அமர்ந்து கொண்டார். அருகில் அமர்ந்து அவருக்கு இலவச ஆலோசனை வழங்கி கொண்டிருந்த உத்தமியையும் சமாளிக்க தான் வேண்டியிருந்தது.

நேற்று போல் அல்லாமல் இன்று கைப்பேசியில் கந்தசஷ்டி கவசத்தை உரக்க வைத்துவிட்டு கிளம்பி விட்டார் அனிருத். ஊர் எல்லையைத் தாண்டவும் கைகள் நடுங்கத்தான் செய்தது, "இன்னைக்கு ஒருநாளைக்கு அவன் அந்த பென்ச்சுல தூங்குனா இப்ப என்ன? திரும்பிருடா அனிருத்து" என்ற மூளையின் குரலுக்கு மதிப்பு கொடுத்து அவர் வண்டியை திருப்ப, அது திரும்ப மாட்டேன் என்றது. அவர் நினைத்தாலும் முடியவில்லை வண்டி நேராகத் தான் சென்றது.

"என்ன நம்ம வண்டி நம்ம ஓட்டாமலே ஓடுது? ஐயையோ பேயே வண்டி ஓட்டுதோ? ஆத்தே நா செத்தேன். செவனேன்னு இருக்காம என் பொண்டாட்டி முன்ன மானம் போவ கூடாதுன்னு வந்துபுட்டேனே இப்ப உசுரு போயிரும் போல இருக்கே? முருகா, சரவணா, சுப்பிரமணியா என்னைய காப்பாத்திவிட்ருயா. இந்த பேய் எனக்கு முன்னாடி உட்காந்துருக்கா பின்னாடி உட்கார்ந்துருக்கான்னு வேற தெரியலையே! முருகா அய்யா எம்பெருமானே!" எனப் புலம்பி கொண்டே வந்ததில் தூரத்திலேயே மருமகனும் வண்டியும் தெரிய, முருகனே கண்ணுக்கு தெரிவதுபோல, ஆனந்த கண்ணீரைப் பொலபொலவென கொட்டிவிட்டார் அய்யாவழி.

அவரைப் பார்த்ததும், வண்டியின் குறுக்காக வந்து மறித்து நின்றான். அவர் வண்டியைப் பயத்தில் வேகமாக ஓட்டிவருவது புரிய, "ஸ்லோ பண்ணு மாமா!" எனக் கத்தி கையை அசைக்க, அவருக்கு அதெல்லாம் எங்கு காதில் விழ, வண்டியை அவனை தாண்டி செலுத்திவிட்டார், "அடேய் வேந்தா பேய் என்னைய வண்டில கடத்திட்டு போகுதுடா. காப்பாத்துடா. மாமா உனக்காக தான்டா வந்ததே. என்னைய காப்பாத்திவிடுடா. பேய்ட்ட சொல்லுடா மருமகனே" எனக் கத்தி கொண்டே அவர் போக,

தலையில் அடித்து கொண்டு பின்னர் ஓடியவன், "ஸ்லோ பண்ணித் தொலை மட மாமா" என்றான் சத்தமாக.

"குதிச்சுடவா? பேய் என்ன பறக்க விட போகுதுடா. மாமாவ பாய்ஞ்சு பிடிச்சுடு" என அவரும் கத்தி வண்டியிலிருந்து காலை ஒருபக்கமாக தூக்கி போட்டு குதித்து விட, வண்டி ஆற்றினுள்ளும், அனிருத் ரோட்டிலும் உருண்டனர்.

"ச்சை இந்த ஆள வர சொல்லாமலே இருந்துருக்கலாம். கீழ விழுந்து மண்டைய உடைச்சது தான் மிச்சம்" என திட்டிக்கொண்டே நடந்தவன் அருகில் ஒரு நிழலும் வந்ததை அப்போது தான் கவனித்தான்.

அவன் நிழல் அருகிலேயே தெரிந்தது அந்த நிழல். சேலையும், நீள முடியும் அதில் அசையும் பூவுமாக தெரிந்த நிழலைப் பார்த்தும் பார்க்காதது போல் மாமனிடம் ஓடினான். நிச்சயம் இப்போது அவன் இதயம் அதிரவே செய்தது.

'கண்ணால் கண்டுவிட்டானே!' அருகில் இல்லாத ஒரு ஆளின் நிழல் அவனைத் தொடர்ந்து வருகிறது, பயத்தை மீறிய மனம் தைரியம் கொண்டவன் தான் போலும், அருகில் ஒன்று வருகிறது என்பதைக் கண்டுகொள்ளாதவன் போல மாமனைச் சென்று பார்க்க, மயங்கியிருந்தார் அனிருத்.

கை கால் எல்லாம் நன்றாக உரசி இருந்தது. முகத்திலும் சிராய்ப்பு இருந்தது. ஆனால் பெரிதான அடி இல்லை.

"மாமா!" எனத் தட்டிப்பார்த்தவன், மீண்டும் காருக்குச் சென்று தண்ணீர் எடுத்துவர முடியாது என்பதால் ஆற்றில் இறங்க போக, இலேசாக சறுக்கியது, ஆனால் அதற்கே ஒரு காற்றழுத்தத்தை அவன் பின்னால் உணர முடிந்தது.

கையில் தண்ணீரை மோந்து மேலேறி வந்தவன், மாமன் முகத்தில் தெளிக்க, மெல்ல அசைந்தார் அனிருத், "என்னா வலி வலிக்குது. என்னாதிது. நா எங்க இருக்கேன். வேந்தா? என்னடாச்சு? நா எங்க இருக்கேன்?" என குளறியபடி எழ,

"சுடுகாட்டுல" என முறைத்தான் வேந்தன்.

அவருக்கு அதில் தான் சென்ற பேய் ஞாபகமே திரும்பி வந்தது, "ஐயையோ வேந்தா, ஆறு, பேய், பைக்ல கடத்திட்டுடா என்னைய" என அழ,

"ஆமா உன்னலாம் கடத்திட்டு போய் அவிச்சு திங்கட்டும்னு விட்ருக்கணும்யா"

"வேந்தா மாமாடா!" என்றார் பாவமாக.

"எனக்கு வாய்ல நல்லா வரும். எந்திரி மொத. லூசாய்யா நீ? எதுக்கு அவ்வளவு வேகமா வண்டிய ஓட்டிட்டு போற, நாந்தான் குறுக்க நின்னு கைய காட்டுனேன்ல? அப்படியே பறக்குற?"

"அடேய் நா வண்டியே ஓட்டலடா, நாகாத்தம்மன் கோவில்கிட்டயே வண்டியைத் திருப்பி வீட்டுக்குப் போக இருந்தவன பேய் தான்டா வண்டில உக்காத்தி வச்சு ஓட்டிட்டு வந்துட்டு"

அவனுக்கும் இப்போது பார்த்த நிழலால் பேய் என்ற ஒன்றில் லேசாக நம்பிக்கை வந்திருக்க, அதற்கு மேல் அவரை வறுத்தெடுக்காமல், மெல்லத் தூக்கி அழைத்து வந்து காரில் உட்கார வைத்தான்.

"மாமாக்கு அடி பட்டுருக்குடா வண்டிலா ஓட்ட முடியாது"

"இல்லைனாலும்!" எனப் பேச வந்தவன், "சும்மா உட்கார்ந்துரு. வண்டிய நா தள்ளுறேன்" என்றுவிட்டு வண்டியைத் தள்ள பின்னால் சென்றான். அவனுக்கு அந்த உருவமும் சத்தமில்லாமல் உதவியது.

நேற்று போல் இன்றும் ஊர் எல்லையில் கார் தானாகவே எடுத்துவிட, தேமே என அமர்ந்திருந்த அனிருத் பதறி மறுபடியும் மயக்கத்திற்குச் சென்றிருந்தார்.

காருக்குள் ஏற வந்தவன், அவரை கண்டுவிட்டு, "கார அங்கேயே விட்டுட்டு நடந்து ஊர் போய் சேர்ந்துருக்கலாம்" எனப் புலம்பியபடி, அவரை மறுசீட்டிற்கு மாற்றிவிட்டு வண்டியை எடுத்தான். இன்றும் பின்னால் பார்க்கும் கண்ணாடியில் பார்த்தான், நிற்கும் பெண் நிழல் நன்கு தெரிந்தது.

அடுத்து நேராக ஊருக்குள் இருக்கும் சிறிய ஆரம்ப சுகாதார நிலையம் வந்து, அனிருத்தின் காயத்திற்கெல்லாம் மருந்திட்டு கட்டிவிட்டு, வீடு வந்தனர்.

"என்னடா ஆச்சு? ஏன்டா இப்படி ஆச்சு? அடேய் அய்யாவு!" என படிகாசீ அழ, "என்னங்க யாருங்க உங்கள இப்புடி அடிச்சது?" என உத்தமி ஒருபக்கம் அழ, வேந்தனின் அப்பா, அண்ணன், அண்ணி, என எல்லோரும் வந்து விசாரிக்க துவங்கிவிட்டனர்.

அனிருத் எல்லோரையும் பார்த்து விட்டு, வேந்தனைத் திரும்பி ஒரு பார்வை பார்த்தவர், "அது வேந்தன அடிக்கணும்னு ரெண்டு பேரு திடீர்னு நம்ம கார மறிச்சுட்டானுங்க. விடுவேனா நானு, வெளுத்துவிட்டுட்டேன்ல?" என்றார்.

அவர் சொல்லியதை கேட்ட யாருமே அவரை நம்பாமல், வேந்தனைத் திரும்பி பார்த்தனர்.

"நிசமாவங்க? ஆனாலும் விளங்காத பைய உங்களையும் இந்த அடி அடிச்சுபுட்டானேங்க. விளங்காம போவ உங்கள எப்புடிங்க அடிக்க மனசு வந்துச்சு?" என உத்தமி மட்டுமே அவரை நம்பியிருந்தார்.

"கதை கேட்காம புடிடி. மனுஷனுக்கு நிக்க ஆவல" என்றவர், உத்தமி உதவியுடன், அவர் அறைச் சென்று விட்டார்.

அவர்கள் சென்றதும், "வேந்தா என்னடா ஆச்சு?" என்றார் படிகாசீ.

"ஆத்துக்கிட்ட வரும்போது பேய் பயத்துல, வண்டிய ஆத்துக்குள்ள இறக்கிட்டாரு"

"ஆத்தே?"

"உன்ன கூப்பிட தானே வந்தாரு?" என்றான் அவன் அண்ணன்.

"நா பாதி தூரம் வந்துட்டேன், எதிர்ல தான் வந்தாரு, கையக் காட்டுனேன். ஆனாலும் கொண்டு விட்டுட்டாரு"

"நினைச்சேன் நானு. பயத்துல கண்ண மூடிட்டு ஓட்டிருப்பான்" என்றார் படிகாசீ.

"சாப்பிட எடுத்து வைம்மா" என்றவன் அவன் அறை சென்றுவிட, அவசரமாக அவனுக்கு சாப்பிட அனைத்தையும் எடுத்து வைத்து விட்டு தம்பியைத் தேடி ஓடியிருந்தார் படிகாசீ.

அறைக்குள் சென்றவனுக்கு, "எதுக்கு வண்டியை கரெக்ட்டா அந்த இடத்துல நிறுத்தனும்? அந்த ஷேடோ எதுக்கு நம்மள ஃபாலோ பண்ணணும்? உண்மையிலயே பேய் தானா? இல்ல வேறெதுவும் ரெஃப்ளெக்டர் மாதிரி எதும் செட்டப் ப்ளானா? இத செக் பண்ணி கன்பார்ம் பண்ணணுமே? ஒரு செக்கென்ட் நம்மளயே நம்ப வச்சுட்டாங்களே?" என யோசித்தவாறே, கைகால் அலம்பி, உடை மாற்றி வந்தவன் அவனே எடுத்து வைத்து கொண்டு சாப்பிட்டு வந்து படுத்தான்.

அவன் கையிலிருந்த பவளமல்லியின் ஹேர்பேண்ட் அங்கு ஆற்றங்கரையில் கிடந்தது. அதை உணர்வு துடைத்த பார்வையில் பார்த்திருந்தது அந்த நிழல் உருவம்.

மறுநாள், தேனாறு கிராமம் முழுவதும் வேந்தனை அடிக்க ஆள் வந்ததாகவும், அவர்களை அனிருத் பந்தாடிவிட்டதாகவும் தான் பேச்சாக இருந்தது. அவர் இருவர் என்றிருந்தது, இருபது பேராகியிருந்தது.

"சினிமால நடக்குற மாதிரி நம்மூர்ல ஒன்னு ஒன்னா நடக்கு பாரேன்? என்னத்த சொல்ல?" காற்றுவாக்கில் வந்த செய்தியில் செல்லம் கூட வீட்டில் புலம்பினார்.

"அவருக்கும் அடிபட்ருக்குமோ ம்மா?" என்ற மகளை வெட்டவா குத்தவா எனப் பார்த்து வைத்தார் செல்லம்.

"உனக்கு பலதடவை சொல்லிட்டேன், வயசுக்கு வந்த புள்ள கணக்கா பினாத்தாம, புரிஞ்சு நடந்துக்க பாரு. ஒழுங்கா வேலைக்கு கிளம்பி போய்ட்டு வா" என்கவும் சத்தமில்லாமல் கிளம்ப துவங்கினாள் பவளமல்லி.

சூப்பர்மார்க்கெட்டில் பில் போடும் வேலையில் தான் இருந்தாள். அங்கு செல்லக் கிளம்பி வந்தவளுக்கு அவனை பார்த்து விட்டால் நிம்மதியாக இருக்கும் எனத் தோன்ற நீதிமன்றம் வருவானா இல்லையா எனத் தெரியாமலேயே நேராக நீதிமன்றம் வந்தமர்ந்திருந்தாள்.

அவனும் வந்தான், அவளையும் கண்டான், ஆச்சரிய பாவனையுடன் நேராக அவளிடமே வந்தான்.

"இன்னைக்கு என்ன?" என்றான்,

"அவங்க தான், அந்த வக்கீல் மேடம் வந்துருக்காங்களான்னு பாக்க வந்தேன்" என்றாள் மெல்லிய குரலில்.

"எனக்கு கால் பண்ண தான சொன்னேன்?"

"ந ந நம்பர் இல்ல"

"ஓ!" என்றவன், பேன்ட் பாக்கெட்டிலிருந்து அவனது அடையாள அட்டைகளிலிருந்து ஒன்றை எடுத்து நீட்டினான், வாங்கி கொண்டு விறுவிறுவென வெளியே நடந்து விட்டாள். இன்றும் அவள் நீள முடியின் பின்னலில் முடிந்திருந்த ஹேர்பேண்ட் அவன் கைக்கு வந்திருந்தது. அவனைத் திரும்பியே பார்க்காமல் ஓடி இருந்தாள் அந்த வேந்தனின் பவளம்.

 
அத்தியாயம் 5

நீள முடி ஆட வேகமாக நடந்தவளையே பார்த்து நின்றான். ஏனோ மனதில் மட்டும் அறிந்துக் கொண்டிருந்தவளை தொடர்ந்து இரண்டு நாட்களாக பார்த்தது, தவிப்பை இன்னுமே கூட்டியது போலிருந்தது. இன்றும் அவளிடம் இருந்து உருவிக்கொண்ட ஹேர்பேண்டைக் குனிந்துப் பார்த்தான், இறுகப் பொத்திப் பிடித்துக்கொண்டான்.

முந்தைய இரவெல்லாம் யோசனையில் தூங்கியதால் கையிலிருந்த பவளமல்லியின் ஹேர்பேண்ட் தவறிபோனது அவன் கவனத்தில் பதியவில்லை. ஆனால் இன்று காலை தூங்கி எழுந்த போது அடுத்து என்ன செய்யலாம் என மிகத் தெளிவாக இருந்தான்.

எப்போதும் காலையில் எழுந்த நிமிடம் தொட்டு நீதிமன்றத்திற்குச் செல்ல கிளம்பி வெளியே வரும்வரை அவனறையில் பாட்டு ஓடுவது வழக்கம். கடந்த ஒரு வருடமாக அவன் போடும் பாடல்கள் முழுவதும் அவள் ஒருத்தியைத் தான் மனதில் நிரப்பிக் கொண்டிருக்கிறது. ஏதோ ஒரு வகை நம்பிக்கை தான் அவனுக்கு, எப்படியும் கை வந்து சேர்ந்து விடுவாள் என்று.

அன்றும் பாட்டை ஓடவிட்டு விட்டு, பல்துலக்கியைக் கையில் எடுத்தவன்,

"வெண்ணிலவே வெண்ணிலவே நல்ல நாள் பார்த்து வா, உன்னுடைய கூந்தலிலே புது பூச்சூடவா" என பாட்டு ஆரம்பிக்கவும்,

முந்தைய தினம் அவள் அம்மாவுடன் பவ்யமாக அமர்ந்திருந்தது நினைவில் வர சிரித்துக் கொண்டான்.

அப்போது தான் அவன் கையில் அவளிடமிருந்து அவளே அறியாமல் உருவி வந்திருந்த ஹேர்பேண்ட் அதை கையில் காணுமே என தேடினான்.

"எப்ப எப்டி மிஸ்ஸாச்சு? எலாஸ்டிக் டைட்டா தானே இருந்தது. கையில இருந்து நழுவி விழுந்துருக்க வாய்ப்பில்லையே? மாமாவ தூக்கினப்ப எதுவும் அறுந்திருக்குமோ?" என்றெல்லாம் யோசித்தவன், அவளிடமிருந்து அவள் பொருள் என ஒன்றை முதல் முதலில் திருடி அதுவும் தொலைந்து போனது கடுப்பைக் கிளப்பிவிட, அத்தோடே தான் கிளம்பி வந்திருந்தான்.

ஆனால் அந்த கோவத்தை எல்லாம் போக்கும் விதத்தில் அவள் நேரில் இன்றும் நீதிமன்றம் வந்து அமர்ந்திருந்ததும், அவன் கைப்பேசி எண்ணை வாங்கிச் சென்றதும், அவள் ஹேர்பேன்டை மீண்டும் ஒருமுறை அவன் எடுத்துக்கொண்டதும், முப்பத்தியொரு வயதிற்கு இது சிறுபிள்ளைத் தனம் எனத் தெரிந்தும் அதை அனுபவித்தான். அதுவே ஒருவித மகிழ்ச்சியைத் தர அதே மகிழ்ச்சியோடு அன்றைய பொழுதைக் கழித்து விட்டான்.

அங்கிருந்து கிளம்பி சூப்பர் மார்க்கெட் சென்று அமர்ந்தவளும், ஒவ்வொரு பில் போடும் போதும் அவனிடமிருந்து வாங்கி வந்த அட்டையைப் பார்த்துப் பார்த்து பூரித்துக் கொண்டாள்.

நேரம் மாலையை நெருங்கியிருந்தது,

"அண்ணா லலிதா மேடம் ஃபோனே எடுக்கல. அந்த பெரியவர் இங்க தான் ஹோட்டல்ல தங்கிருக்காரு. போய் பாத்தேன். அவருக்கு இறந்த குடும்பம் ரொம்ப சொந்தமாம். இறந்தவங்க அவரோட கூடப்பிறந்த தம்பியோட குடும்பமாம். தம்பி, தம்பி பையன், அவர் மனைவி, ரெண்டு பேரனுங்களாம். மூத்த பேரனோட மனைவியோட அம்மாவும் தங்கச்சியும் தான் நேத்து வந்துட்டு போனவங்களாம். அதாவது சுருக்கமா உங்க சகலை ஃபேமிலி" என்றான் ஜவகர்.

அவன் கடைசி வாக்கியத்தில் திரும்பி அவன் முகத்தை நக்கலாகப் பார்த்தவன், "அந்த ஃபேமிலியே தேனாறு தான்" என்றான்.

"அண்ணே! அப்ப ஒரு குடும்பமே இறந்துபோச்சு, பேய் கொன்னுட்டுன்னு சொல்லிட்டு திரியிதானுங்கன்னு, ஒரு ஃபைல் சேர்க்றோமே? அதா?" என்றான் அதிர்ந்து.

"அதே தான். நாம தனியா தேடிட்டு இருந்தோமா? இப்ப தானாவே கேஸ் நம்ம கைக்கு வருது? முடிச்சுட்டு அடுத்த வேலைய பாக்கணும்டா"

"அண்ணே பேய் ண்ணே!"

"அத நாம கன்பார்ம் பண்ணுவோம்டா"

"இதை பேய்க்காக செய்றீங்களா? இல்ல மிஸ்ஸஸ் வேந்தன் ஆக வேண்டியவங்க ஜஸ்ட் மிஸ்ஸானதால செய்றீங்களா?"

"கூட்டி கழிச்சு பார்த்தா கணக்கு ஒன்னு தான்டா ஜவகரு"ன

"அண்ணே!"

"அந்த பெரியவர் போலீஸ்ல கம்ப்ளைண்ட் குடுத்துட்டாரா?"

"ஆமா குடுக்கணும்னு சொன்னாரு அதுக்கு தான் என்ன பண்ணணும்னு ஃபர்ஸ்ட் வக்கீல பாக்க வந்துருக்காரு. ஃபாரீன் க்ளைன்ட்டுன்னு அமுக்கி புடிச்சுருச்சு லலிதா மேடம்"

"லலிதா மேடம் பிஸியா இருக்காங்க. அதனால நாந்தான் அவங்களுக்கு பதில் வருவேன்னு சொல்லி. அவர ஃபர்ஸ்ட் கம்ப்ளைண்ட் ஃபைல் பண்ணச் சொல்லு"

"அல்ரெடி அந்தம்மா பேரச் சொல்லி தான் பாத்துட்டே வந்தேன். ஆமா இப்ப அவர் பக்கம் நாம போனா உங்க மிஸ்ஸஸ்க்கு யாரு வாதாடுவா?"

"நாந்தான்!"

"புரிஞ்சு போச்சுண்ணா! லலிதா மேடம் வேலைல விளையாட போறீங்க?"

"அது அவங்க கேர்லெஸ்னஸ்டா நாம எப்டி பொறுப்பு எடுத்துக்க முடியும்?"

"நீங்க சொன்னா சரிதாண்ணா" என அவன் சென்றுவிட, வேந்தன் மணியைப் பார்த்தான், ஏழு மணி தான் ஆகியிருந்தது, ஆனாலும் எழுந்து கொண்டான்.

"ஜவகர் நா கிளம்புறேன். நீ ஆபிஸ் பூட்டிட்டுப் போயிடு. காலைல சாவிய கோர்ட்டுக்கு கொண்டு வந்திடு. மறந்துறாத"

"எதுக்குண்ணா சீக்கிரம் கிளம்பிட்டீங்க"

"ஒரு விஷயம் குழப்பமா இருக்கு அத தெரிஞ்சுக்கத்தான்" என்றான் கையிலிருந்த ஹேர்பேண்டை இப்படியும் அப்படியும் சுற்றிவிட்டுக் கொண்டு.

"ஓ! மேடம பாக்கப் போறீங்களா?" எனச் சிரித்தான் அவன்.

"இந்நேரமா? என் மாமியார் வாங்க மாப்ளன்னு என்னைய வாய் நிறைய கூப்பிட்டுறும் போடா நீ வேற" என்றவன் ஜிப்ஸியை எடுத்துக் கொண்டு கிளம்பிவிட்டான்.

அவர்கள் கிராமத்திற்கு கடைசி பேருந்து எட்டு மணிவரை வரும். அதுவரை அந்த ஆற்று வழி சாலையில் ஆட்கள் நடமாட்டம் இருக்கும். அது தெரிந்தே இன்றும் வண்டி நிற்குமா என அறிந்து கொள்ள விரைந்து கிளம்பினான்.

சரியாக இவன் அவர்கள் சாலையில் நுழைந்த நேரத்தில் பின்னால் ஒரு மினி வேனும் திரும்பியது. இவன் ஜிப்ஸி முன்னால் செல்ல அது பின்னரே தான் வர வேண்டியிருந்தது. ஆற்றுப்பாதை என்பதால் பின்னால் வந்த வேன் காரரும், முந்தி செல்ல முயலாமல் மெதுவாக வந்து கொண்டிருந்தார்.

இரண்டு தினங்களாக அவன் ஜிப்ஸி தானாக நின்ற இடத்தை நெருங்க நெருங்க வண்டியின் வேகத்தை மிதமாக்கினான் வேந்தன். வண்டியும் முந்தைய தினம் போல் அல்லாமல் என்ஜின் இயங்கிக் கொண்டே இருந்தும் நின்றது, இவனும் முறுக்கினான், முன்னேற முயன்றான், முன்னிருந்து வண்டியை யாரோ பின்னால் தள்ளுவது போல் உறுமியது.

பின்னால் வந்து கொண்டிருந்த வேன்காரரும் ஒலிப்பானை அடிக்கத் துவங்கிவிட்டார். இவனால் நகர முடியவில்லை என்பதால், தலையை வெளியே நீட்டி, "கார் நகர மாட்டேங்குது" எனச் சத்தம் கொடுத்தான்.

"இங்கன ரொம்ப நேரம் நிக்கக் கூடாது தம்பி சீக்கிரம் போங்க" என்றார் வேன் ஓட்டுநர்.

"போக மாட்டேங்குதே" என்றான் இவன்.

அதற்குள் வேனுக்கு பின்னால் இன்னும் இரண்டு மூன்று வாகனங்கள் வந்துவிட, அனைத்தும் ஒலிபானை ஒலிக்கவிட, அந்த இடமே பரபரப்பானது.

"என்னப்பா வண்டிய எதுக்கு நிறுத்தி வச்சுருக்க?" எனப் பின்னால் இருந்தவர்கள் இறங்கியே வந்து விட்டிருக்க,

"வண்டி நகரலைங்க" என்றான் இவன், அவர்கள் சுற்றி வந்து கல் எதுவும் மாட்டி இருக்கிறதா, டயரில் எதுவும் பிரச்சினையா என்றெல்லாம் ஆராய்ந்து விட்டு, காரைத் தள்ள, நகர்த்த முடியவில்லை. பின் சில நொடிகள் ஆராய்ந்து பேசி முடித்து,

ஜிப்ஸியை சாய்த்து பிடித்துக்கொண்டு வேனை முன்னால் அனுப்பினர், அது இலகுவாக சென்றது, பின் வேனுடன் ஜிப்ஸியைக் கயிற்றால் கட்டி இழுக்க, இப்போது நின்ற இடத்தில் இருந்து முரண்டு பிடித்து பின் மெல்ல முன் நகர்ந்தது.

அனைத்தையும் சுற்றி நின்றவர்களே பேசி முடிவெடுத்து தான் செய்தனர், இவன் அமைதியாக வேடிக்கை மட்டுமே பார்த்திருந்தான். அந்த நிழல் உருவத்தை அந்த கூட்டத்தினுள் தன்னால் கண்டுகொள்ள முடிகிறதா என்ற ஆராய்ச்சியில் இருந்தான்.

ஜிப்ஸி நகர்ந்த நேரத்தில், அவன் கையிலிருந்த பவளமல்லியின் ஹேர்பேண்ட் ஏதோ விசையால் இழுபட்டது, அதை அவன் நன்கு உணர்ந்தான். அந்த நிழல் உருவம் அதிக கோவம் கொண்டு முழு பலத்தையும் உபயோகித்து அதனை அறுந்து விழ செய்தது.

"ச்ச!" என்றான் கீழே அறுந்து விழும் அந்த ஹேர்பேண்ட்டைப் பார்த்துக் கடுப்புடன்.

அவன் காரை முன்னால் வேனுடன் நகர்த்தி விட்டு, மற்ற வாகனங்களும் அவனைப் பின் தொடர்ந்து விட்டனர். ஊர் எல்லைக்கு வரவும், அவனே, "வண்டி இப்போ மூவ் ஆகுது. தேங்க்ஸ்ண்ணா" என வேனில் இருந்த ஓட்டுனருக்குக் கைகாட்ட, அவரும் கையை ஆட்டிவிட்டு சென்றுவிட்டார்.

அடுத்த மூன்று நாட்களும் இதையே தொடர்ந்து, சீக்கிரமாக கிளம்பி வந்து பார்த்தான். இவன் வண்டி மட்டுமே அந்த இடத்தில் நிறுத்தப்படுகிறது. மற்ற வாகனங்களுக்கு அப்படி பிரச்சினை எதுவும் வரவில்லை. அந்த நிழல் உருவம் தன்னிடம் எதையும் தெரியப்படுத்த விளைகிறதோ? என்ற கோணத்தில் யோசித்தான்.

அடுத்த ஒரு வாரத்தில் அனிருத்தின் உடல்நிலையும் தேறியிருக்க, அவரை அழைத்துக் கொண்டு காலையிலேயே கிளம்பினான்.

"ரெண்டு பேருமா எங்கடா போறீங்க?" என்ற படிகாசீக்கு,

"மாமா அன்னைக்கு பேய் பயத்துல ஆத்துக்குள்ள விட்டாரே வண்டி?"

"அதைத்தான் மனோ(வேந்தனின் அண்ணன்) போய் மறுநாளே எடுத்துட்டு வந்து சர்வீஸுக்கு விட்டாச்சே வேந்தா?"

"ஆனாலும் பேய பார்த்து பயந்தாருல்ல உன் தம்பி? அதுக்கு வேப்பிலை அடிக்கத்தான் கூட்டிட்டுப் போய்ட்டு வந்துடுறேன்" என்றான் ஜிப்ஸியில் ஏறியவாறு.

"ஆமா அதுஞ்சரித்தேன். இத லேசா விட்டு பின்ன உடம்பு உள்ளுக்க வச்சு சுணக்க கூடாது. போய்ட்டு வந்துருங்க" என்றவர், "நம்ம சாமி மாமாட்டயே கூட்டிட்டு போடா அவரு துன்னூரு போட்டா எந்த பீடையும் நிக்காது" என்றுவேறு சொல்ல, தலையசைத்து விட்டான்.

"ஏங்க தம்பி கூட எங்க கிளம்பிட்டீக?" என பரபரப்பாக வந்தார் உத்தமி.

"ஆம்பளயாளுக்கு வெளிய ஆயிரம் சோலி கிடக்கும் எல்லாத்தையும் உன்ட்ட சொல்லணுமாக்கும்?"

"ஏன் சொன்னா என்னவாம்? எங்கிட்ட சொல்லாம வேற ஆருகிட்ட சொல்லிட்டு போவீகளாம்?" என்றார் உத்தமியும்.

 
அத்தியாயம் 6

"என் மருமகன் என்ன இன்னைக்கு துணைக்கு வா மாமான்னு கூப்பிடுதான் போறேன். ஏன் இப்ப உன்ட்ட பெர்மிசனு வாங்கிட்டேன்ல விடுவியா இனி?"

"அதுக்கு ஏன் இம்புட்டு சடைக்கீக? சண்டை சச்சரவு வந்தாலும் படக்குன்னு பாயாதீக, இப்பதான் கொஞ்சம் தேறி வந்துருக்கீக"

"சரி‌சரி அத நா பாத்துகிடுதேன். என் மருமகன் கூடவே இருக்கான்ல பின்ன என்ன?" என்கவும் உத்தமி தலையசைத்து சிரிப்புடன் வண்டியிலிருந்து விலகி நின்று கொள்ள, இருவரும் தலையசைப்புடன் கிளம்பினர்.

"உன் புருஷன் சண்டைக்குப் பாஞ்சத எப்பட்டி பாத்த நீ?" என்றார் படிகாசீ.

"ஏன் பாயாமலா அன்னைக்கு கட்டோட வந்தாக மதினி? தம்பிக்கு ஒன்னுன்னா கண்ணு முண்ணு தெரியாம பாஞ்சுபோடுவாக நீங்க வேற. வாங்க உலைய வைப்போம்" என சேலையை உதறி உள்ளே சென்றுவிட,

"இதுதேன் அவேன் இவள இஷ்டத்துக்கு ஏமாத்துதியான்" என நொந்து கொண்டு அவர் பின்னால் போனார் படிகாசீ.

"கொஞ்சம் தண்ணி குடு காசீ" என முன் வராந்தாவில் அமர்ந்திருந்த உலகநாயகன் கேட்க,

"சும்மா தான உட்கார்ந்திருக்க எந்துச்சு போய் குடி" என்றுவிட்டு விருட்டென்று உள்ளே சென்று விட்டார் படிகாசீ.

அங்கு ஜிப்ஸியில் சென்று கொண்டிருந்த அனிருத்திற்கு, மருமகனை நினைத்து இதயம் விம்மி வெடித்தது. அவன் தீவிர யோசனையில் வண்டியை ஓட்டிக் கொண்டு வர, இவர் அவனைப் பார்த்துப் பார்த்துக் கண்ணை ஒற்றி எடுத்துக் கொண்டு வந்தார்.

'செகன்நாதசாமி' அதுதான் அவர் பெயர், படிகாசீயம்மாள், அய்யாவழி இருவருக்கும் மாமா முறையில் இருக்க கூடியவர். சாமியாடி, கடவுள் நம்பிக்கை அதிகமாக உள்ளவர். ஜோதிடம், சோழிபோட்டு பார்த்துக் குறி சொல்வது போன்றவைகளைச் சரியாக கணிக்கக் கூடியவர்.

இத்தனை நாட்கள் இவனே அவரை நம்பியது கிடையாது. இப்போதும் நம்பி வரவில்லை சிலபல சந்தேகங்களைக் கேட்டுப் பார்க்கலாமே என்று மட்டுமே தோன்றக் கிளம்பி வந்திருந்தான். இன்று இதுபோல் தெருவிற்கு நான்கு ஏமாற்றுகாரர்கள் இருக்கிறார்கள் என்பதால் யாரின்மீதும் அவனுக்கு நம்பிக்கை கிடையாது.

அவன் அந்த யோசனையில் வண்டியை நிறுத்தி விட்டு இறங்க, அவனை பெருமையாக பார்த்திருந்த மாமாவை அப்போது தான் பார்த்தான்.

"எதுக்கு இப்ப இப்படி பாச லுக் விடுற நீ?"

"உன் பாசத்துல என் கண்ணு தன்னால நிறைஞ்சு வழியுது வேந்தா"

"ரொம்ப வழியவிடாம துடைச்சுட்டு இறங்கு. இதான அந்த சாமியாடி வீடு?"

"தாத்தா சொல்லணும் வேந்தா"

"சரி போய் இருக்காரான்னு பாரு"

பழையகாலத்து வீடு என்பதால், முன்னால் தூண் திரணை எல்லாம் இருந்தது, வீடும் திறந்தே இருக்க, "மாமா!" என அழைத்துக் கொண்டே உள்ளே சென்றிருந்தார் அனிருத். இவன் வெளியிலேயே வண்டியில் சாய்ந்து நின்று கொள்ள, தெருவில் உள்ளவர்கள் எல்லாம் எட்டி எட்டிப் பார்த்து விட்டு செல்வது தெரிந்தது.

"இந்தா வெளில நிக்கான். கூட்டியாறேன் நீ அங்கேயே இரு மாமா" என சொல்லியபடி அனிருத் வெளியே வருவது தெரிய, இவனும் படியேறிவிட்டான்.

"என் பின்னயே வந்தா என்ன? நம்ம தாத்தா வீடு தான? பாரு நீ வெளில நிக்கன்னு சொன்னதும் மாமா சடைச்சுகிட்டாக"

"எய்யா வேந்தா. வா. நல்லாருக்கியா?" என மெல்ல எழுந்தமர்ந்து இவன் வரவும் கையைப் பிடித்துக்கொண்டவரை, சின்ன சிரிப்புடன் பார்த்தான்.

"நல்லாருக்கேன் தாத்தா. நீங்க?"

"அவருக்கு முன்ன மாதிரி முடியல போல. நானும் அக்காவும் கூட இடைல ரொம்ப நாளா வராம போய்ட்டோம். நீ இன்னைக்கு கூட்டியாந்தது கூட நல்லதுக்குத்தேன்" என்றார் அனிருத்.

"என்னய்யா என்ன விஷயம்?" என்றார் தாத்தா இவனிடம். காரணமின்றி அவரை அவன் தேடிவந்திருக்க மாட்டான் என புரிந்தே கேட்டார்.

"ஆமா தாத்தா ஒரு விஷயம் கேட்க தான் வந்தேன்" என அவனும் ஒத்துக் கொண்டான்.

"என்னது? இங்கன உக்கார்ந்து சொல்லு" என அவர் அருகில் வயர் கட்டிலில் அமர்த்திக் கொண்டார்.

"தேனாறு போற பாதைல இருக்க ஆத்துல பேய் இருக்குன்னு ரொம்ப நாளா ஒரு பேச்சிருக்கு தெரியுமா?"

"ஆமா கேள்விபட்டேன். அதை விரட்டணும்னு கூட என்னைய பாக்க வந்தாங்க. எனக்கு பேய் விரட்டலாம் தெரியாதுன்னு சொல்லி அனுப்பிட்டேன். இப்ப அதால உனக்கு என்ன பிரச்சினை?" என்றார் நேராக.

"அங்க ஒரு நிழல பாத்தேன். ஒரு பொண்ணோட நிழல். என்னோட கார மட்டும் நிறுத்துது. வெளில இறங்கி நின்னு பார்த்தேன் ஆனா என்னைய தாக்குற மாதிரி எதுவும் செய்யல" என இவன் சொல்லிக் கொண்டிருக்க, அங்கு அனிருத் நெஞ்சே வெடித்து விட்டது போல் நெஞ்சைத் தாங்கிப் பிடித்துக் கொண்டு கண்ணைப் பேயையே கண்டுவிட்டது போல் விரித்து நின்றிருந்தார்.

"அப்ப உன்னால அதுக்கு எதுவும் காரியம் ஆகணுமா இருக்கலாம்"

"அத எப்டி தெரிஞ்சுக்குறது?"

"அந்த ஆத்மாவோட ரத்த சொந்தம் யாரையாவது கூட்டிட்டுப் போய் அந்த இடத்துல நிறுத்தி பேசவச்சு பாரு. அவங்க கண்ணுக்கு புலப்படலாம்"

"இத செய்யாம நா அப்படியே விட்டா என்னாகும்?"

"அப்படியே விடுறவன் தான் இங்க வர வந்தியாக்கும்?"

"இல்ல தாத்தா ஜஸ்ட் தெரிஞ்சுக்க கேட்கிறேன். அந்த பேய் அல்ரெடி ஒரு குடும்பத்தையே கொன்னுட்டதா ஊர்ல பேச்சிருக்கு. அப்படி கொல்ல முடிஞ்சதுக்கு நா என்ன ஹெல்ப் செய்ய வேண்டி இருக்கும். எனக்கும் அதுக்கும் என்ன சம்பந்தம்?"

"ஒன்னுமில்லாம உன்ன அது தொந்தரவு பண்ண வேண்டிய அவசியம் இல்ல. ஆத்மாவா இருந்து செய்ய வேண்டியத செஞ்சுட்டு இப்ப விடுதலை பெறணும்னு கூட உன்ன எதிர்பார்த்து நின்றுக்கலாம்"

"ஏன் நானு?"

"மத்தவங்களாம் அத பேய்னு நம்பினப்போ நீ நம்பாம தைரியமா இருந்தது காரணமா இருக்கலாம்"

"தாத்தா?"

"உனக்கு மன தைரியம் இருக்குன்னா, போய் அது உன்ன நிப்பாட்டுற இடத்துலயே நின்னு கேளு. அதால உனக்கு ஆபத்து இல்லன்னும் போது நீ தைரியமா போய் பேசலாம்" என்றார்.

"என்ன ஏதோ சொந்தகாரர பாக்கப் போற மாதிரி சர்வ சாதாரணமா பேசிட்ருக்காங்க" என அதிர்ந்து பார்த்திருந்தார் அனிருத்.

"சரி ட்ரை பண்ணிட்டு எதுவும் தேவைபட்டா உங்கட்ட தான் வருவேன்"

"இப்ப எம்மேல நம்பிக்கை வந்துடுச்சா?"

"அனுபவம் இருக்கும்ல எப்படியும் அத மட்டும் நம்பி வருவேன்" என்றவன், "மாமா வா போலாம்" என அவரைப் பிடித்து இழுத்துக்கொண்டு நடக்க, அங்கிருந்த மாமாவை கூட மறந்தவர் அவன் பின் பதறி ஓடி வந்தார்.

"டேய் வேந்தா நிசமா பேய பாத்தியா?"

"ஆமா"

"எப்போ? எப்டி பாத்த? இப்பல்லாம் நீ சீக்கிரம் வந்துடுறியே?"

"அன்னைக்கு வண்டில நீ சர்க்கஸ் காமிச்சியே அப்ப அது உன் பக்கத்துல தான் நின்னுச்சு"

"ஆத்தே அப்ப என் வண்டிய ஓட்டுனது அது தான?"

"ஆமா"

"ஐயோ ஐயோ பேய் என்னைய தொட்டுப்போட்டுச்சே நா என்ன பண்ணுவேன். எனக்குள்ள என்னத்தையும் கலந்துருக்குமாடா எனக்கு பேய் எதுவும் பிடிச்சுருமோ?"

"உளறாம வா மாமா. அந்தப் பேய் தான் அன்னைக்கு உன் மண்டை உடையாம காப்பாத்துச்சு. மூஞ்சுல தண்ணிய அடிச்சு முழிக்க வச்சது"

"அந்த பேய் எதுக்குடே என்னைய காப்பாத்தணும். அத காப்பாத்த விட்டுட்டு நீ வேடிக்கைப் பாத்துட்டு ஏன் நின்ன?"

"பேயே காப்பாத்துற அளவுக்கு பெரிய ஆளா இருக்க நீயி, நா உள்ள வந்து என்ன செய்யப் போறேன். அதான் பார்த்துட்டு நின்னுட்டேன்"

"அந்த பேய்க்கு என்மேல என்னவாம் அப்படி அக்கறை?"

"தெரியல, அப்பா பாசமா கூட இருக்கலாம். அதையும் கேட்டே தெரிஞ்சுக்குவோம் வா"

"போடா டேய் போடா. கேட்டுத் தெரிஞ்சுக்கப் போறானாம். கொலை குத்தவாளிய விசாரிக்க போறதா நினைப்பா உனக்கு?"

"ஆமா அஞ்சு கொலை பண்ணிருக்கு சும்மா விட முடியுமா?"

"அதுக்கு அத புடிச்சு உள்ள போட போறியா நீ?"

"பேயா இருந்தாலும் தண்டனைல இருந்து தப்பிக்க விட்டா பின்ன நா என்ன வக்கீலு?"

"அடேய் உன்னைய பார்த்தா தான்டா இப்ப எனக்கு அல்லுவிடுது. என்னைய இறக்கிவிடு முதல்ல" என்றதும் வண்டியை நிறுத்தி இறக்கிவிட்டுவிட்டுக் கிளம்பி விட்டான்.

"பேச்சுக்கு சொன்னா நிசமாவே இறக்கிவிட்டுட்டுப் போயிட்டான் இவன மாருலயும் தோளுலயும் போட்டு வளத்தேனே பேய்க்கு அப்பா ஆக்க பாக்கானே" எனப் புலம்பி நின்று அடுத்து வந்த பேருந்தில் ஏறி வீடு போய்ச் சேர்ந்தார்.

வேந்தன் அப்படியே நீதிமன்றம் சென்று விட்டு அன்றும் ஏழு மணிக்கு வீடு வந்துவிட்டான். இன்றும் அவன் ஜிப்ஸி அதே இடத்தில் நின்றது பின்னாலும் முன்னாலும் சென்ற வாகனங்கள் தானாகவே உதவினர். வீட்டுக்கு வந்து விட்டான்.

தினமும் வெவ்வேறு ஆட்கள் உதவியதால் இது ஒரு பேச்சுப் பொருளாக இன்னும் மாறாமல் இருக்கிறது. இனி அது மற்றவர்கள் பார்வைக்குப் போகும் முன்னர் பிரச்சினையை முடித்துக் கொள்ள நினைத்தான் வேந்தன்.

வேந்தன் வீட்டில் அனைவரும் ஒன்பது மணிக்குள் உணவை முடித்துப் படுக்கச் சென்றுவிட்டனர். மலையை ஒட்டிய ஊர் என்பதால் இரவில் குளிர் அதிகமே இருக்கும். அதனால் எட்டு ஒன்பது மணிக்கெல்லாம் ஊரே அடங்கிவிடும்.

எல்லாரும் அவரவர் அறை சென்றுவிட்டதைக் கண்ட வேந்தன், அனிருத் அறைச் சென்று, "மாமா!" எனக் கதவைத் தட்டினான்.

"நா தூங்கிட்டேன் எங்கையும் வரமாட்டேன்" என மிக புத்திசாலியாக மருமகனை அறிந்தவராக கதவைத் திறக்காமலே பதில் கூறினார் அவர்.

"மாமா! தலை வலிக்குது மெடிக்கல் வர போய்ட்டு வருவோம் வா"

"மெடிக்கலுக்கு தான பக்கம் தான் நீயே போய்ட்டு வா"

"யோவ் மாமா இப்ப வரப் போறியா இல்ல அன்னைக்கு ஆத்துக்குள்ள வண்டி இறங்குனது எப்படி நடந்ததுன்னு இங்க இருந்தே சொல்லட்டுமா?" என்றதும் வேகமாக எழுந்து வந்து கதவைத் திறந்தார்.

"வாய பொத்திட்டு பேசவுடாம பிடிச்சுகிட்டாரு தம்பி‌. தலை வலிக்குதுன்னா நீங்க வீட்ல இருங்க அவுக போய் வாங்கிட்டு வரட்டும். நா கசாயம் வச்சு தரேன். ரெண்டையும் குடிச்சாலே கேட்டுகிடும்" என உடன் வந்தார் உத்தமி.

"இல்லத்த பரவால்ல நாங்க போய்ட்டு பத்து நிமிஷத்துல வந்துருவோம்"

"நாலாம் வரல போடா"

"வா மாமா" என அவனும், "போங்க" என உத்தமியும் தள்ளியதில், அறையிலிருந்து வெளியே வந்திருந்தார். அப்படியே இழுத்துக் கொண்டு நடந்து விட்டான்.

"பொண்டாட்டிய புடிச்சு இழுத்துட்டு திரியிற வயசுல என்னையவே இழுத்துட்டு திரியிதான்" எனத் திட்டிக்கொண்டே தான் வந்தார்.

தெருவே வெறிச்சோடி இருந்தது, வேந்தன் ஊருக்கு வெளியே செல்லப் போகிறான் என முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டு அமர்ந்திருந்தவருக்கு, அவன் ஊருக்குள் செல்ல வண்டியைத் திருப்பவும், "நெசமாவே தலைவலியாடா வேந்தா?" என்றார்.

"ஆமா மாமா"

"நீ அந்த பேய் பத்தி ரொம்ப ஆராய்ச்சி பண்ணாத அதேன் தலைவலிலாம் வருது உனக்கு" எனப் பேசிக்கொண்டிருக்கையில் தான் அவன் நுழைந்த தெருவைக் கண்டார். அது பவளமல்லியின் வீடு இருக்கும் தெருவென அறியாதவரா அவர். அவன் என்று அவர்களின் திருமணப் பேச்சுவார்த்தை நின்றதோ அதன்பின் இந்த திசைப் பக்கம் கூட வந்ததில்லை என்பது அந்த ஊரே அறிந்த விஷயமாகிற்றே!

"அந்த புள்ள வீட்டுக்கா போற?"

"ஆமா மாமா!"

"என்ன எதக்கேட்டாலும் நோமா மாமா? போற நேரமா இது?"

"பகல்ல போனா ஊரே பாக்கும்ல?"

"அது பரவால்ல இந்நேரம் பார்த்தா தான் இன்னும் தப்பா பேசுவாய்ங்க"

"அதுக்கு தான் பெரிய மனுஷன் உன்னையும் கூட்டிட்டு வந்துருக்கேன்"

"டேய் விளையாடாதடா இஷ்டத்துக்கு பேசுவாய்ங்க. அந்த புள்ளையோட அக்காவ என்னன்னு பேசி சாகடிச்சாய்ங்கன்னு மறந்து போச்சா உனக்கு?"

"என்னைக்கா இருந்தாலும் அதான என் மாமியார் வீடு? பின்ன எப்டி தப்பா பேசுவாங்க?"

பவளமல்லி வீடு வந்திருந்தது, அவர்கள் கஷ்டத்தை எடுத்துக் காட்டும் வகையிலான வீடு. முன்னால் கூரையால் சுற்றுச்சுவர் வேயப்பட்டிருக்க, அதனுள் பழமை மாறாத ஓட்டுவீடு. வெளியே ஒரு குண்டுபல்பு எரந்து கொண்டிருந்தது.

"சத்தம் குடு மாமா"

"ஏன்டா?"

"கூப்டு மாமா"

"மதினி!" என்றார் அனிருத். சத்தமே இல்லை. "ரெண்டு பேரும் பொம்பளைங்கடா, இந்நேரத்துல வந்து கதவ தட்டிட்டு நின்னா பயந்து போவாங்க. நம்மளையும் தப்பா தான் நினைப்பாங்க"

"எனக்கு அதெல்லாம் தெரியாமலா வந்து நிக்றேன்? பேய் கிட்ட பகல்ல போய் விசாரணை பண்ண முடியுமா? கூப்டு மாமா" அவன் பேச்சில் அவர் முறைத்துக் கொண்டு நிற்க,

வெளிபட்டியைத் திறந்து கொண்டு உள்ளே சென்று கதவைத் தட்டி, "மல்லி!" என அழைத்திருந்தான்.

"காரியத்தையே கெடுத்துட்டான். அடேய்" என பதறி தானும் உள்ளே வந்தார் அனிருத்.

"மல்லி! அத்த!" என மறுபடியும் தட்ட, படக்கென்று திறந்து கொண்டு வெளியே வந்தார் செல்லம்மாள். பதறி எழுந்து ஓடி வந்திருக்கிறார் என அவர் வந்த வேகத்திலேயே புரிந்தது.

"நாங்கதான் எதுக்கு இவ்வளவு பயம்?" என்றவன் திரும்பிப் பார்க்க வாசலில் முகமெல்லாம் வேர்க்க நின்றிருந்தாள் பவளமல்லி.

"என்னாச்சு எதுக்கு இவ்வளவு பயம்?" என்றான் இருவரையும் பார்த்து.

"என்ன விஷயம் தம்பி? ஏன் இந்நேரம்?" என்றார் செல்லம்.

அவர் முகத்தை வைத்தே அவன் இப்படியே நின்று பேசி விடுவது என்ற முடிவிற்கு வந்திருந்தான்.

"இங்க வா" என பவளமல்லியை அழைக்க, அம்மாவைப் பார்த்துக் கொண்டே வெளியே அவனிடம் வந்தாள்.

"என்னன்னு சொல்லுங்க தம்பி"

"பதறாதீங்க மதினி" என்றார் அனிருத்.

"உன் அக்கா இறந்தப்றம் என்னைக்காவது அவங்க இங்க இருக்குற மாதிரி உணர்ந்துருக்கியா?" என்றான்.

"அக்காவா? இல்லையே இல்லையே ஏன் என்னாச்சு?" என்றவளுக்கு இன்னும் வேர்த்துக் கொண்டு வந்தது.

"உன் அக்காவோட ஆவி தான் உன் அக்காவோட ஃபேமிலியவே கொன்னுட்டதா பேசிக்குறாங்களே?"

"இத விசாரிக்கவா வந்தீங்க தம்பி? அவளே அல்ப ஆயுசுல போய்ட்டா இன்னுமு அவளையே பேசிட்டு எங்களையும் வாழவிடாம பண்ணா நாங்க எங்க போவ?"

"ம்ச் நா சொல்றத கேளுங்க. ஊருக்கு வெளில நா ஒரு ஆத்மாவ பார்த்தேன். அது உண்மையிலேயே ஆத்மா தானான்னு தெரியணும் அதும் உங்க பொண்ணான்னு தெரியணும். அதுக்கு உங்க ரெண்டு பேர்ல யாராவது ஒருத்தர் என்னோட வரணும்" சுற்றி வளைக்காமல் நேராக விஷயத்தைக் கூறினான்.

"விளையாடாதீங்க தம்பி. நாங்களாம் எங்கையும் வரல"

"உங்க பொண்ணு செத்து இன்னும் ஆவியா சுத்துனா பரவால்லையா உங்களுக்கு?"

"அது அவளா இருக்காது" என அழுதார் செல்லம்மாள்.

"அத கன்பார்ம் பண்ணிடுவோம். அது என்கிட்ட ஏதோ சொல்ல ட்ரை பண்ற மாதிரி இருக்கு. உங்க பொண்ணா இல்லனா அது யாருன்னு வேற நா கண்டு பிடிக்கணும். ப்ளீஸ் ஹெல்ப் பண்ணுங்க" என்றதும், நெஞ்சைப் பிடித்துக் கொண்டு அழ ஆரம்பித்துவிட்டார் செல்லம். பவளமல்லி அவரைத் தாங்கிப் பிடித்தவாறு இவனைப் பாவமாக பார்க்க,

"நீ வா. அம்மா இருக்கட்டும் அரைமணி நேரத்துல வந்திடலாம்" என்றான் அவளிடம் மெதுவாக.

"அம்மா விடமாட்டாங்க" என அழுதாள் அவள். ஆனால் அவளது உடனடி ஒப்புதலில் அவளையே பார்த்தான் அவன். அதில் எச்சிலை மிடறாக விழுங்கித் தொண்டையினுள் இறக்கினாள் பவளமல்லி.

 
அத்தியாயம் 7

செல்லம்மாள் வாசலில் உட்கார்ந்து அழுது கொண்டிருக்க, அவரின் அருகில் சென்று நின்ற அய்யாவழி, "அழாதீக மதினி‌. பிள்ள போனது சோகந்தான். ஆனா என் மருமகன் சொல்லுத மாதிரி அது ஆத்மாவும் நல்லா இருக்கணும்ல? நீங்க இப்படி அழுதா என்ன செய்ய முடியும் சொல்லுங்க?" என்றவருக்கு வேறு எவ்வாறு சமாதானம் சொல்வது என்றும் தெரியவில்லை.

'என்ன நம்மளையே பேய்க்கு சப்போர்ட்டா பேச வச்சுபுட்டான்' என திரும்பி மருமகனை முறைக்கவும் மறக்கவில்லை. அவனோ அங்கு பவளமல்லியை பார்த்து கொண்டிருந்ததில் கொந்தளித்து, "அடேய் வேந்தா! ராத்திரி நேரத்தில் வரவேணாம்னு சொன்னனே கேட்டியா? இப்ப பாரு ரெண்டு பேரும் அழுதுட்டு நிக்காவ. எவன் பார்த்தாலும் கண்ணு காது மூக்குலாம் வச்சு புது கதை எழுதி போடுவானுங்க வா வீட்டுக்கு போவோம். ரெண்டு நாள் போட்டும் சாமி மாமாவயே கூட்டிட்டு வந்து என்னன்னு பாக்க சொல்லுவோம்" என அவனை பிடித்து இழுத்தார்.

"நீ அத்தைய சமாளிச்சுக்கோ நா மல்லிய கூட்டிட்டு போய்ட்டு வந்துடுறேன்" என்றான் அவரிடம் மெதுவாக.

அதில் அதிர்ந்து அவன் முகம் பார்த்தவர், "உன் ப்ளானு என்னன்னு தெரிஞ்சு போச்சு எனக்கு. ம்கூம் இது சரிபட்டே வராது முதல்ல இடத்த காலி பண்ணுவோம் வா" என இன்னும் திடமாக பிடித்து இழுத்தார்.

"லூசு மாமா. அங்க பேய் என் கார தெனமும் நிப்பாட்டுது நா ஊருக்குள்ள வந்து போக வேணாமா?"

"உன் கார வேணும்னா அந்த ஆத்தங்கரை கிட்டயே நிப்பாட்டிரேன். காரு முக்கியமா உசுரு முக்கியமா? பேயே கார தான் வேணும்னு கேட்குதுன்னா குடுத்துட்டு பஸ்ல போய்ட்டு வாயேன்டா"

"ம்ச் உன்ன கூட்டிட்டு வந்தேன் பாரு. பினாத்தாம விலகு" என்றவன், "அத்த அழுறத நிப்பாட்டுங்க முதல்ல" என அதட்டவும் பாவமாக பார்த்தார் செல்லம்மாள்.

"அம்மாவ அதட்டாதீங்க" என பவளமல்லி அந்நேரம் அவனை அதட்டிச் சொல்ல, இருவரையும் பார்த்துவிட்டு, நெற்றியைத் தேய்த்து கொண்டான்.

"என் கூட ஒரு அரைமணி நேரம் மட்டும் வாங்க, அங்க இருக்குறது உங்க பொண்ணு தானா இல்ல வேற யாருமான்னு மட்டும் தெரிஞ்சுட்டு வந்துடலாம்" என பொறுமையாக அழைத்தான்.

"திரும்பி எங்க வர்றது? அப்படியே ஆத்தோரம் தோப்புக்குள்ள அழகான அத்திமரம் அயலயலான்னு பாடிகிட்டு ஆத்தோடயே நாலு பேரும் போவ வேண்டியது தான்" என்றார் அனிருத்.

"மாமா!"

"நீ என்ன பெரியம்மாவ பார்க்க வான்னா கூப்பிடுத பேய பாக்கடாப்பா பயமா தானே இருக்கும்?" என்றார் அப்போதும்.

"யோவ் மாமா!"

"எல்லாரையும் என்னைய மாதிரி ஈசியா தூக்கி வண்டில உக்கார வச்சுரலாம்னு நினைச்சு வந்தது உன் தப்புடா வேந்தா"

அவரை விட்டு பவளமல்லியிடம் திரும்பியவன், "மல்லி நீ பாத்துருக்க தான? உனக்கு உன் அக்காவ இதுல இருந்து விடுவிக்கணும்னு எண்ணம் இருக்கா இல்லையா? சொல்லு உன் அம்மாகிட்ட" என்றான்.

"பாத்துருக்கியா? என் பொண்ணாடி அது? பாப்பா சொல்லு தேனுவா அது?" என்றார் செல்லம் அவளை அடித்து,

"இல்லம்மா இல்லம்மா எனக்கு தெரியாதும்மா" என்றாள் உடனேயே.

"மல்லி!" என அவளை முறைத்தான் வேந்தன். நிச்சயம் அவளுக்கு ஏதோ தெரிந்திருக்கிறது என அவள் முழியே சொல்கிறதே!

"நிஜமா நா பார்த்ததில்லைங்க ஆனா" எனத் தயங்கி அம்மாவை ஒரு பார்வை பார்த்து விட்டு, "அத்தான்(அக்காள் தேனுவின் கணவன்) இறந்த வீட்டுக்குள்ள நானும் அம்மாவும் இருந்த அன்னைக்கு, 'இங்க இருக்காத போயிடு, அம்மாவ கூட்டிட்டு போயிடு' ன்னு என்கிட்டத்துல நின்னு சொன்ன மாதிரி இருந்துச்சு. எனக்கு நல்லா கேட்டுச்சு அது என் அக்கா குரல் தான். திரும்ப திரும்ப விடாம சொன்னா, நா வேற யாரோன்னு கூட பார்த்தேன். ஆனா வீட்ட விட்டு வெளில வர்ற வர என் காதுல அவ குரல் கேட்டுட்டே இருந்தது. இறந்த வீட்டுக்குள்ள முப்பது நாளைக்கு ஆத்மாக்கள் உலாவும்னு சொல்லுவாங்க தானேன்னு மனச தேத்திட்டு வந்துட்டேன். ஆனாலும் வீட்டுக்கு வந்த அப்றமு அக்கா அங்க இங்க நிக்ற மாதிரி தோணும் பயமா இருக்கும் அழுகையா வரும்" என்றாள் அழுதபடி.

அவள் கூறியதில் செல்லம்மாள் பேசவே மறந்தது போல் பார்த்திருக்க, "ம்மா ம்மா" என அவரைக் கட்டிக்கொண்டு அழுதாள் பவளமல்லி.

"அதுக்கு அப்புறம் உன் அக்கா உன்ட்ட பேசவே இல்லையா?" என்றான் வேந்தன்.

"அழ கொஞ்சம் கேப் விடுறானான்னு பாரு கடங்காரன் கணக்கா கழுத்த நெரிக்கிறானே" என்றார் அனிருத். அவருக்கு பயம் இங்கெதுவும் வந்து நின்று கேட்டுக் கொண்டிருந்தால் என அவரும் சுற்றி பார்த்து விட்டு மருமகனை ஒட்டிச் சென்று நின்று கொண்டார்.

கண்ணைத் துடைத்து கொண்ட பவளமல்லி, "இல்ல அடுத்து அக்கா பேசுனதே இல்ல. எனக்கு அக்கா குரல் கேட்டதும் ரொம்ப பயமா ஆகிடுச்சு. கூடவே இருக்காளோன்னு தோண ஆரம்பிச்சதுல, தூங்காம கிடந்து பயத்துல காய்ச்சலே வந்துட்டு"

அவள் சொன்னதும், காலையில் சாமி தாத்தா சொன்னது அவனுக்கு ஞாபகம் வந்தது, 'நீ பயப்படலன்னு உன்ன தேர்ந்தெடுத்துருக்கலாம்' என்பது தான் உண்மையாக இருக்கும் எனத் தோன்றியது.

"ஐயோ என் பொண்ணு செத்தும் நிம்மதி இல்லாம அலையுறாளே. நா என்ன பாவம் பண்ணேன்னு அந்த முருகன் என்னைய இப்படி தண்டிக்கிறான்னு தெரியலையே. முருகா முருகா" என செல்லம்மாள் அழ,

"சத்தம் போடாதீக மதினி அக்கம் பக்கம் எல்லாம் எந்துச்சு வந்துட போறானுங்க" அனிருத் சொல்ல,

"இப்ப கிளம்புங்க போலாம். உங்க பொண்ணுக்கு மோட்சம் கிடைக்கும்னு என்ன நம்பி வாங்க" என்றான் வேந்தன்.

"எப்படி அவள நா அப்படி பார்க்க போறேன்?" என அழுதார்.

"ம்மா அக்காட்ட பேசி பார்ப்போம் ம்மா வாம்மா. நா அக்கா போயிடு போயிடுன்னு சொல்லி அழுதேன்னு தான் அடுத்து என்கிட்ட பேசவே வரல போலம்மா" என பவளமல்லியும் சொல்ல,

"ம்க்கும் ஜாடிக்கு ஏத்த மூடி தான் போல" என நொடித்தார் அனிருத்.

"அக்கா இருப்பாளாடி அங்க? என் புள்ளைய நா மறுபடியும் பாப்பேனா? என்ட்ட பேசுவாளா?" என அவர் படபடக்க,

"கண்டிப்பா பேசுவாம்மா. அக்காக்கு நம்மள விட்டா யாரும்மா இருக்கா?"

"என்ன வரமாட்டாய்ங்கன்னு பார்த்தா ஒன்னு கூடிட்டாய்ங்க. உலகத்துலயே எவனும் பேய பார்க்க இப்டி ப்ளான் பண்ணி வண்டி புடிச்சு கிளம்பி போயிருக்க மாட்டான். நம்ம கிரகம் புடிச்ச ராசி அப்புடி போல இதெல்லாம் அனுபவிக்கணும்னு இருக்கு" அவர் புலம்பல் நிற்கவே இல்லை. உண்மைதானே பேய் என்ற சொல்லே நடுக்கத்தைத் தரும் என்கையில் அதை தானே சென்று பார்க்க கிளம்பினால், தொண்டை குழி அடைப்பது இயல்பு தானே!

"போலாமா தம்பி. என் பொண்ண என்ட்ட பேச வச்சுருவீக தானே?" என செல்லம்மாள் எழுந்து கொண்டு கேட்கவும், மையமாக தலையை அசைத்து வைத்தான் வேந்தன்.

"மாமா, அத்தைக்கு காருல ஏறி உட்கார ஹெல்ப் பண்ணு" என்றதும் செல்லம்மாள் பதறி, "வேணாம் வேணாம் நானே ஏறிக்குவேன்" எனக் கையையும் காலையும் உடலோடு சுருக்கி கொள்பவர் போல் இழுத்து கொள்பவரை வித்தியாசமாக தான் பார்த்தனர் மற்ற மூவரும்.

"சரி ஏறுங்க" என்றவன், நீண்ட கூந்தல் அழகியின் முடியைப் பிடித்திழுத்து தன்னோடு நிறுத்தி, "என்கூட முன்னாடி உட்காரு" என்க,

"ஐய்யையோ அம்மா திட்டுவாங்க"

"அப்ப உன் அம்மா திட்டலனா என்கிட்ட உட்காருவ?" என்றான் புருவம் உயர்த்தி.

"நீங்க அன்னைக்கே என்ன கையோட கூட்டிட்டு போயிருந்தா இன்னைக்கு வர அதானே நடந்துருக்கும். நீங்க ஏன் செய்யல?" என்றவளை பார்த்தவனுக்கு பதில் சொல்ல வரவில்லை. அவளும் சொல்ல வேண்டும் எனச் சொல்லவில்லை அவ்வளவு நேரமும் அவனுடன் நின்ற தைரியம் சொல்லி விட்டாள்.

அம்மா ஏறி விட்டாரா எனப் பார்த்தவள், மெல்ல அவன் கையிலிருந்த முடியை உருவிக்கொண்டு சென்று காரில் ஏறிக் கொண்டாள்.

இவனும் ஏறச் சென்றவன் மாமனை எங்கே என தேட, அவர்களுக்கு பின்னால் நின்றிருந்திருக்கிறார் என அப்போது தான் பார்த்தவன், "கார்ல போய் ஏறாம என்ன செய்ற நீ?" என்றான் அவரிடம்.

"திருவிளையாடல் படம் பார்த்துட்டு நிக்றேன். ரொம்ப நல்லார்க்கு, பேய பாக்க போற கிலி நேரத்துலயும் உனக்கு ரொமான்ஸ்?"

"போய் ஏறு போ"

"நாலு பேரா எங்கேயும் போக கூடாது. நா இப்டியே வீட்டுக்கு போறேன். நீங்க போய் நலம் விசாரிச்சுட்டு வந்து சொல்லுங்க"

"அது நல்ல காரியத்துக்கு தான? இதுக்கு கணக்கில்ல வா போவோம்" விடவே இல்லை அவன்.

"வா போவோம் வா போவோம்னு சாவடிக்கவே கூட்டிட்டு போறானே முருகா" எனப் பேசிக்கொண்டே இருந்தவரைத் தள்ளிக்கொண்டு வந்து காரில் ஏற்றிவிட்டு தானும் அந்த பக்கம் சென்று ஏறினான்.

கார் கண்ணாடியைப் பின்னால் இருக்கும் பவளமல்லி முகம் தெரியுமாறு சரி செய்துவிட்டு திரும்ப, முறைத்து பார்த்திருந்தார் அனிருத்.

அம்மாவும் மகளும் ஒருவரை ஒருவர் ஆறுதலாக கையைப் பிடித்துக் கொண்டு அமைதியாக வர, அனிருத் கந்தசஷ்டியுடன் வர, வேந்தன், அவள் கூறிய விஷயத்திலேயே நினைவில் நின்றுவிட்டிருந்தான். அவன் மூளையெங்கும் அன்று அவளை பெண் பார்க்க சென்ற தினத்திலேயே நின்று கொண்டது.

பவளமல்லிக்கும் அவனுக்கும் ஒரே ஊர் தான் என்பதால், இவனுக்கு பெண் பார்ப்பது அவள் வீட்டினருக்கும் அவளுக்கு மாப்பிள்ளை பார்ப்பது அவன் வீட்டினருக்கும் ஊர் மக்கள் வாய்வழியே தெரியவந்தது.

பவளமல்லி அப்பா சில வருடங்களுக்கு முன்பு இறந்திருக்க, இரு பெண்களையும் அங்கிருக்கும் எஸ்டேட்டுகளில் வேலை பார்த்து தான் படிக்க வைத்தார் செல்லம்மாள். மூத்த மகள் தேன்பாவனி, அவளை மூன்று வருடங்களுக்கு முன் தான் அதே ஊரைச் சேர்ந்த நாகராஜன் என்பவருக்கு திருமணம் செய்து வைத்திருந்தார்.

பெண் பிள்ளைகள் என்பதால் அதிக கண்டிப்பும், பயந்த சுபாவமும் இருக்கும்படி தான் வளர்த்திருந்தார். பக்கத்து ஊரில் கூட கொடுக்க மனமின்றி வைத்திருந்தவருக்கு நாகராஜன் குடும்பமே வந்து பெண் கேட்டதில் சந்தோஷம் தாளவில்லை. பெண் கண் முன் இருப்பாள் என்ற நம்பிக்கையில் தான் திருமணம் செய்து வைத்தார்.

அடுத்த ஒன்றரை வருடங்கள் கழித்து இரண்டாம் மகளுக்கு பார்த்தபோது, தேன்பாவனி தான் இவனையும் இவன் குடும்பத்தையும் தாய் மகளுக்கு கை காட்டியதும்.

"அவங்க பெரிய படிப்பு படிச்சுருக்காக எப்புடிடி இவள கட்டுவாங்க?" என்ற செல்லம்மாளுக்கு, "ம்மா அவங்களா வந்தா பேசுவோம்னு தான் சொல்றேன். பாப்பா ஃபோட்டோவ என் வீட்டுகாரரோட அத்தை மூலமா குடுத்துவிட்ருக்கேன். பிடிச்சா வரட்டும். அவங்கள பத்தி தான் உனக்கும் நல்லா தெரியுமே?"

"நாமளா குடுத்து விட்டா என்னடி நினைப்பாக?"

"அவங்க அம்மா தான் என் பையன நேருல இழுத்துட்டு வரணும்னா பொண்ணு ஃபோட்டாவாது வேணும்னு சொன்னாங்களாம். அதான் குடுத்துவிட்டேன்" என்றிருந்தாள்.

அங்கு வேந்தனிடம், அவள் ஃபோட்டோ அனிருத் மூலமாக தான் வந்து சேர்ந்தது.

"இந்தா வேந்தா, மாமா உனக்காக சூப்பர் பொண்ணு பார்த்துருக்கேன். நீ பாத்தனா அப்படியே அசந்து போயிடுவ. அம்புட்டு அழகா அம்சமா இருக்கு புள்ள" என நீட்ட,

நீதிமன்றம் செல்ல, சட்டையை டக்கின் செய்து கொண்டிருந்தவன், அன்று தான் அவளை முதல் முறையாக பார்க்கிறான். ஆர்வம் இன்றி தான் வாங்கி பார்த்தான், தேன் நிறத்தில் பட்டு சேலை கட்டி நீள முடி நிறைய பூ வைத்து, மிகமிக அடக்கமாக நின்றிருந்த பெண்ணைப் பார்த்ததும் பிடித்தது உண்மை, ஆனாலும் அந்த அடக்கம் மட்டும் நம்புவதற்கு உகந்ததாக இல்லை. தினமும் பலவகை பெண்களைப் பார்ப்பவனால் இந்த காலத்தில், இப்படி ஒரு 'அட்டேன்ஷன்' நிலையை நம்பத்தான் முடியவில்லை.

"இந்த ஃபோட்டோ மட்டுந்தான் குடுத்தாங்களா?"

"ஆமா உன் ஃபோட்டோவ குடுக்காம பொண்ணு ஃபோட்டோ ஒன்னு வாங்குனதே பெரிய விஷயம் நீ என்ன நினைச்ச நம்ம ஊரப்பத்தி?"

"எஃபி ஐடி வாங்குங்க நானே நாலைஞ்சு பிக்ஸ் பாத்து பிடிச்சுருக்கா இல்லையான்னு சொல்றேன்"

"எபி ஐடியா? அதெல்லாம் தரமாட்டாங்க வேந்தா"

"அப்ப ஃபோட்டோலாம் பார்த்து முடிவு சொல்ல முடியாது. நேர்ல பாத்துக்கலாம்"

"அங்க உன் அம்மா ஃபோட்டோ பார்த்தா தான் என் மகன் சரி சொல்லுவான்னு சொல்லிட்ருக்கு, நீ நேர்ல பார்த்தா தான் சொல்லுவேங்குற, ரெண்டு பேருக்கும் எங்களலாம் பார்த்தா எப்புடுறா தெரியுது?"

"நேர்ல பார்க்க ஏற்பாடு பண்ணு மாமா" என்றவாறு கிளம்பி விட்டான்.

"ஏற்பாடு பண்ணவா இவன் சொல்லிட்டு போற விதமே சரியில்லையே" என முறைத்தவர், படிகாசீயிடம் பேசி, பெண் பார்க்கும் படலத்திற்கு ஏற்பாடு செய்தார்.

இவர்கள் குடும்பம் மட்டுமே ஏழு பேர் இருக்க அக்கம்பக்கத்தினரும் நாலைந்து பேரை படிகாசீ சேர்த்து கொண்டதில் பவளமல்லியின் சிறிய வீடு நிறைந்து விட்டது. மாமனிடம் தகவலைப் பெற்றுக் கொண்டவனும் கடைசியாக கிளம்பிச் சென்று நின்றான்.

 
அத்தியாயம் 8

வீட்டினுள் சென்றதுமே கூட்டத்தில் அவளை தான் முதலில் தேடினான். எல்லோருக்கும் நடுவில் அமர வைக்கப்பட்டிருந்தவளை ஒருசில நொடிகள் பார்த்து கொண்டே நின்றதில் மெல்ல அவளும் அவனை நிமிர்ந்து பார்த்தாள்.

"நீங்க எழுந்து வெளில வாங்க. எனக்கு சில விஷயம் கேட்கணும். இங்க கூட்டமா இருக்கு. நாம பேசிக்கிட்ட அப்றம் அவங்க மத்தத பேசிக்கட்டும்" என பவளமல்லியிடம் நேராகவே பேச, அவள் பயந்து அக்காவையும் அம்மாவையும் பார்க்க, அதிலேயே வேந்தன் புருவம் உயர்ந்துவிட்டது.

"போ வாசல்ல நின்னு பேச என்ன பயம். போய் பேசிட்டு வா" என தேன்பாவனி அழுத்திச் சொல்லி அனுப்பியபிறகே, மெல்ல வெளியே வந்தாள். இன்று நின்று பேசிய அதே இடத்தில் தான் அன்றும் இருட்ட தொடங்கிய மாலை வேளையில் நிலா வெளிச்சத்தில் நின்றிருந்தனர்.

நாகராஜனுக்கும் அவன் அம்மாவிற்கும் முதலிலிருந்தே இது பிடிக்கவில்லை, அவர்களைவிட உயர்ந்த இடம் வேந்தன் குடும்பம் என நினைத்தே அதில் ஈடுபாடு காட்டாமல் இருந்தனர். தேன்பாவனியிடம் சொல்லி சண்டை கூட இட்டுவிட்டான் நாகராஜன். அவர்களுக்கு பிடிக்கவில்லை என்றால் நிச்சயமாக அங்கு தான் தன் தங்கை வாழவேண்டும் என்ற முடிவிற்கே வந்திருந்தாள் தேன்பாவனி. அவர்களை மீறிதான் அனைத்தையும் ஏற்பாடு செய்திருந்தாள்.

அன்றும் சந்தர்ப்பம் பார்த்திருந்தனர் நாகராஜனும் அவன் அம்மாவும். வேந்தன் தாமதமாகவே வந்திருந்ததும் நேராக பெண்ணிடமே பேசியதும் அவர்களுக்கு வாகாக அமைந்து விட்டது.

வேந்தனும் அப்படி செய்யவேண்டும் எனச் செய்யவில்லை, அவ்வளவு கூட்டத்திடமும் அனுமதி பெற்று பின்னும் அவர்கள் மறுக்க தான் செய்வர் என தெரிந்ததாலேயே நேராக அழைத்துவிட்டான். ஆனால் நாகராஜன் வீட்டினர் அதை தான் பிடித்து கொண்டனர். அவன் அவர்களை வரவேற்கவில்லை தங்களை மதித்து பேசவில்லை என பிரச்சினையை ஆரம்பித்து வைத்தனர்.

"வந்ததும் யாரையும் பார்க்கல, உபசரிக்கல, பொண்ணு மட்டும் போதும்னு ஓடினாப்புலல இருக்கு. என் வீட்ல இருந்து வந்துருக்கவுங்களாம் என்ன நினைப்பாங்க. நாளைக்கு என் பையன் தான சபைல முன்ன நிக்கணும். அந்த மரியாதையும் இல்லையே?" என்றார்,

"நீங்க தானே இந்த வீட்டுக்காரங்க. என் புள்ள இனிதான் இந்த வீட்டு புள்ளையவே கட்டிக்க போறான். அப்ப நீங்க அவன வாங்கன்னு கேட்கணுமா அவேன் உங்கள கேட்கணுமா?" என படிகாசீ பேச,

"உங்க புள்ளைய விட என் புள்ள வயசுல மூத்தவனுங்க. நீங்க வக்கீல் பையன வச்சுருக்கதால எங்கள மிரட்டி பார்க்காதீங்க. இங்க நாங்க எடுக்குறது தான் முடிவு. ஆம்பள இல்லாத வீடுன்னு நீங்க உங்க ஆதிக்கத்தலாம் காட்ட முடியாது" என நாகராஜன் அம்மா பேச, உத்தமி பேச, ஜெகதாம்பாள் பேச எனப் பிரச்சினை வளர்ந்து விட்டது.

உண்மையில் ஆண்கள் இல்லாத வீடு என்பதால் ஆளாளுக்கு பந்தாடியது செல்லம்மாள், தேன்பாவனி, பவளமல்லி மூவரையும் தான். அவர்களை ஒரு பொருட்டாகவும் மதிக்காமல், எதையும் கலந்து கொள்ளாமல் நடுவீட்டில் வந்து நின்று சண்டை இட்டனர். எப்போதும் நடப்பது தான், சொந்தங்கள் என இருப்பவர்கள் கஷ்டத்தில் பங்கெடுக்க வரமாட்டார்கள். ஆனால் அங்கு ஒரு நல்லது கெட்டது என்றால் மட்டும் 'எங்களை கேட்காமல் நீயாக செய்வாயா?' என வந்து முன் நின்று சண்டை பிடிப்பர். அதில் மட்டுந்தான் முன்னுரிமையை நிலை நாட்ட முயல்வர். கணவரை இழந்த நாட்கள் தொட்டு இன்று வரை அதை அனுபவிக்கிறது செல்லம்மாள் குடும்பம்.

அங்கு வெளியே நின்றவனுக்கு உள்ளே நடக்கும் விஷயங்கள் சலசலப்பாகவே கேட்டது, அதில் எரிச்சல் மூண்டாலும், "ரொம்ப அமைதியா நீங்க?" என்றான் முதல் கேள்வியாக அவளிடம், திருதிருவென விழித்தாலும், தலையை ஆமென்று அசைத்தாள்.

"என்ன படிச்சுருக்கீங்க?"

"பிஎஸ்சி மேத்ஸ்"

"வொர்க்?"

"டவுன்ல நந்தனம் சூப்பர் மார்க்கெட்ல பில்லிங் செக்ஷன்ல இருக்கேன்"

"ஏன் ஸ்கூல்ல எங்கையும் வேலைக்கு ட்ரை பண்ணிருக்கலாமே?"

"ஸ்கூல்ல சேலரி ஐயாயிரம் தான் தராங்க, சூப்பர் மார்க்கெட்ல 9500 தராங்க" உடனே பதில் கொடுத்தாள்.

"ம்ம் ஓகே ஓகே, நா லாயரா இருக்கேன். மாச சம்பளம்னு கிடையாது ஆனா வர்ற கேஸ் பொறுத்து நேர்மையான சம்பளம் கிடைக்கும். நிச்சயமா குடும்பத்த ரன் பண்ணிடலாம் அதுல"

மெல்ல சிரித்து தலையசைத்தாள், "உண்மையாவே நீ அடக்க ஒடுக்கமா இல்ல ரொம்ப கேஸ்வலா நடிக்கிறியா?" என்றான் சந்தேகமாக,

அதில் வேகமாக நிமிர்ந்து பார்த்தவள், "நடிக்குற மாதிரி தெரியுதா உங்களுக்கு?" என்றாள்.

"ம்ம் லைட்டா டவுட்டாவே தான் இருக்கு" தாராளமாகவே உண்மையைக் கூறினான்.

"வேந்தா வா கிளம்பலாம்" என வந்துவிட்டார் அனிருத். உள்ளே பிரச்சினை பெருசாக ஆக, அவனுக்கு தெரிந்தால் மொத்த குடியும் கெட்டுவிடும் என அவனை அழைத்து கொண்டு கிளம்ப முயன்றார்.

"நா இன்னும் பேசி முடிக்கல மாமா"

"உள்ள பேசி முடிச்சுட்டாங்க. அவங்களுக்கு பொண்ண நம்ம வீட்டுக்கு கொடுக்க இஷ்டம் இல்லையாம்"

பட்டென்று இவளை திரும்பி தான் பார்த்தான், அவளும் பயத்தில் முகம் வெளிர நின்றிருந்தாள்.

"என்னாச்சு மாமா?"

"பிடிக்கலன்னுட்டா விட்ரணும் வேந்தா" என்கவும், திரும்பி வீட்டினுள் ஒரு முறை பார்க்க, அவன் வீட்டினர் முகத்தில் கோவம் பொங்க கிளம்பி வருவது தெரிந்தது, அனிருத் அப்படியே அவனை நகர்த்தி கொண்டு சென்று விட்டார்.

காரில் ஏறிவிட்டு ஒருமுறை அவளை திரும்பி பார்த்தான் அவ்வளவே, அதன் பிறகு அன்று தான் நீதிமன்றத்தில் வைத்து பார்த்திருந்தான். அவர்கள் பெண் பார்த்து சென்ற தினத்தில் இருந்து ஒன்றரை மாதத்தில் தேன்பாவனி இறந்துவிட்ட செய்தி வந்து சேர்ந்தது. இவர்கள் வீட்டிலிருந்து அனைவரும் அதற்கு சென்று வந்தனர்.

அடுத்தடுத்து தேன்பாவனியின் மாமனார், அடுத்து அவள் கொழுந்தனார், அடுத்ததாக நாகராஜனின் தாத்தா, அம்மா இறுதியாக நாகராஜன் எனத் தொடர் இழப்புகளால் செல்லம்மாளும் பவளமல்லியும் துவண்டு தான் விட்டனர். அதனாலேயே இவனும் மேற்கொண்டு அந்த பேச்சை ஆரம்பிக்காமல் தள்ளி நின்று வேடிக்கை பார்த்திருந்தான்.

ஊரே பேசியது, அந்த வீட்டின் தொடர் இறப்பிற்கு தேன்பாவனி தான் காரணம் என்று. அவளை இவர்கள் ஏதோ செய்திருக்க, அவள் பழி வாங்கி விட்டாள் என்பது தான் பேச்சாக இன்று வரை இருக்கிறது.

வேந்தன் அனைத்தையும் யோசித்தவாரே வர, ஊரைத் தாண்டி ஆற்றங்கரைப் பாதையில் பயணிக்க துவங்கி இருந்தனர். மற்ற மூவரும் பயத்தில் உறைந்திருக்க, அவன் மட்டும் ஏதேதோ யோசனையில் வந்து கொண்டிருந்தான்.

"பேய் எங்கன்னு போய் தேடுவ நீ?"

"அக்காவ பேய் பேய்னு சொல்லாதீங்க ப்ளீஸ் சித்" என்றாள் பவளமல்லி. சித்தப்பா என அழைக்க வந்து நிறுத்தி கொண்டாள்.

"இதுவேறையா? சரிம்மா" என்றவர், "ஏம்பா உனக்கு பார்த்த பொண்ணோட அக்காவ எங்கனு தேடுறது?" என மீண்டும் அவனிடம் கேட்க,

"காரு அதுவே நிக்கும் அங்க இறங்கிக்கலாம்" என்றான் சிரிப்பை அடக்கிக் கொண்டு.

"முருகா. தெரியாம வந்து மாட்டுன நேரம்லாம் போய் இப்ப தானா போய் பாக்குறளவுக்கு வந்துருக்கேம்னா நீ இருக்க தைரியத்துலதேன். பாத்துக்கோயா சுப்பிரமணியா" என அவர் வேண்டி முடிக்கையில் வண்டி சட்டென்று நின்றது.

"ஆத்தே!" என நெஞ்சில் கைவைத்து அமர்ந்து விட்டார்.

"இறங்குங்க" என்றான் பின்னால் இருந்தவர்களிடம்.

"என்னங்க நாங்க மட்டுமா? நீங்க வரலையா?" என்றாள் பாவமாக பவளமல்லி.

"நீங்க ரெண்டு பேரும் போய் கூப்பிட்டு பாருங்க. உன் அக்காவா இருந்தா வருவாங்க தானே?"

"என் பொண்ணு இங்கையா இருக்கா?" என்ற செல்லம்மாள் வண்டியைத் திறந்து கொண்டு இறங்கிவிட,

"இரும்மா" எனப் பவளமல்லியும் வேகமாக இறங்கிச் சென்றாள்.

"போ மாமா உனக்கு தனியா சொல்லணுமா? வேடிக்கை பார்த்துட்டு உட்கார்ந்துருக்க?"

"எங்களலாம் இறக்கி பேய்ட்ட விட்டுட்டு நீ என்ன பண்ண போற?"

"நானும் இறங்குவேன். முதல்ல நீ இறங்கி போ"

"என்னையலாம் பேய் அவ்வளவு அவசரமா தேடல. வேணும்னா நீ போ" என்றார் அவர்.

"பின்னாடியே இறங்கி வந்த கொன்றுவேன்" என்றவன் இறங்கிவிட, "யாத்தே ஒத்தைல விட்டுட்டு போறியான் பாரு" என வேகமாக இறங்கி சுற்றி அவனிடம் வந்து நின்று கொண்டார்.

"அம்மாடி தேனு. இங்கையா இருக்க? தேனு தேனு அம்மாட்ட வாடி தங்கம். உன்ன கடைசில பார்க்கவே இல்லையே இந்த பாவி. அதுக்காகவே திரும்ப வந்துருக்கியா நீ?" என அந்த இருட்டில் சுற்றி சுற்றி வந்தார் செல்லம்மாள்.

"ம்மா இரும்மா" என பவளமல்லியும் அவருடன் அலைந்து திணறினாள்.

"கூப்பிடுடி உன் அக்காவ வர சொல்லு பாப்பா. ஒருக்கானாலும் பார்த்துகிடுதேன். உனக்கு அவ குரலு கேட்டுச்சுன்னு சொன்னியே இப்ப கேட்குதான்னு பாரேன். பேச சொல்லேன்" எனப் போராடினார்.

"அக்கா இருந்தா வருவாம்மா. அழாதம்மா நீ. எனக்கு பயமா இருக்கு. ப்ளீஸ்மா"

காற்று பலமாக வீசியது, குளிர் என்றால் அதீதமான குளிர் பரவ துவங்கியது. பிச்சிப்பூ மணம் மூக்கைத் துளைத்து தலையைக் கிறுகிறுக்க வைத்தது. அதிக காற்று புழுதியை வாரியிறைத்தது.

நிழல் உருவம் எங்காவது தெரிகிறதா என அந்த புழுதியிலும் கண்ணை கசக்கி கொண்டு தேடினான் வேந்தன். செல்லம்மாள், பவளமல்லி இருவரும் நின்ற இடத்திலேயே தெரிந்தது அந்த மூன்றாவது நிழல். அவர்களின் மிக அருகில் நிற்கிறது எனச் சுற்றிப் பார்த்தவனுக்கு உருவம் எங்கும் தெரியவில்லை. ஆனால் நிழல் அவர்களைத் தொட முயன்றும் முடியாமல் பரபரவென்று சுற்றி வந்து கொண்டிருப்பதை நிழலாக பார்த்து உணர்ந்தான்.

அதிவேக காற்றினாலும் குளிரினாலும் பயந்து செல்லம்மாள் கூட வாயை மூடிக்கொண்டு அதிர்ந்து விழித்தார், பவளமல்லி ஒருபக்கம் நடுங்க, அனிருத் கண்ணை இறுக மூடிக் கொண்டு மரத்தையே கெட்டியாக கட்டிக்கொண்டு நின்றார்.

"உங்க பொண்ணு உங்க கிட்ட தான் நிக்றாங்க" என வேந்தன் சொல்ல,

"இங்கையா இங்கையா தம்பி?" என அவர் சுற்றி சுற்றித்தேடி, "எங்கண்ணுக்கு தெரியலையே நா என்ன பண்ணுவேன். என் மவள இப்படி கூட நா பாக்காம போயிருவேனோ. ஆத்தே நெஞ்செல்லாம் வலிக்குதே" என அவர் அரற்றி அழ,

ஆத்மாவாக இருந்த தேன்பாவனி அவர்களை அணுக முடியாமல் பெருங்குரலெடுத்து அழுதாள். கதறினாள். அங்குமிங்குமாக காற்றில் அலைந்து ஆர்ப்பரித்தாள். அம்மாவும் தங்கையும் கண்ணெதிரே நின்றும் நெருங்க முடியாது போனதில் திண்டாடினாள். ஆக்ரோஷம் கொண்டாள்.

காற்றையும் மீறிக் கொண்டு சத்தமாக, "உங்க முன்ன தான் நிழலா தெரியிறாங்க பாருங்க" என்றான் வேந்தன்.

"எங்க எங்க?" எனப் பதறியவருக்கும் அருகில் நின்ற பவளமல்லிக்கும் புழுதியை மீறி கண்ணைத் திறந்து பார்ப்பதே கடினமாக இருந்தது.

அதையும் மீறி அம்மாவும் பொண்ணும் அதைப் பார்க்க முயன்றனர், நிழலாக தெரிந்த பரந்து விரிந்து கிடந்த கூந்தலைக் கண்டு இருவரும் நடுங்கி ஒருவரை ஒருவர் கட்டி கொள்ளவும், இன்னும் அலறினாள் தேன்பாவனி.

இந்த முறை அவள் குரல் அவர்களை எட்டியது. அந்த இடமே அவள் குரலால் அதிர்ந்தது. நால்வரின் உடலிலும் வெளிப்படையாகவே நடுக்கம் ஓடி மறைந்தது.

"போயிடலாம் தம்பி பயமா இருக்கு. எனக்கு அவள பாக்க முடியும்னு தோணல. என்னால இங்க இருக்க முடியல. எங்கள கூட்டிட்டு போயிடுங்களேன். இன்னொரு வயசு பிள்ளைய வச்சுருக்கேன். அவளாவது எனக்கு மிஞ்சட்டும்" என அவர் சொல்லி முடிக்கும் முன், தெருவிளக்குகள் பட் பட்டென்று வெடித்தது, அதற்கு அடுத்து அடித்த பேய் காற்றில் நால்வரும் மரத்தின் ஓரத்தில் ஒதுங்கினர்.

அந்த இடமே கும்மிருட்டானது. காற்றின் காரணமாக கிளம்பிய புழுதிகள் ஒன்றிணைந்த ஆவியாக ஒரு உருவம் அவர்களைச் சுற்றி சுற்றி வருவதை இப்போது அவர்களால் நன்கு பார்க்க முடிந்தது.

"நா வேணாமா? என்ன பார்க்காமலே போயிடுவியா நீ? என்ன பார்த்தா பயமா இருக்கா? அப்போ செத்துட்டா நா உன் மக இல்லையா?" என ஆங்காரமாக கத்திக் கொண்டு சுற்றி வந்த உருவத்தைக் கண்டு இன்னுமே பயந்தனர்.

வேந்தன் இரு பெண்களையும் பார்த்தான். இவர்கள் இன்னும் பயப்பட ஆத்மா இன்னும் ஆத்திரம் கொள்ளும் எனப் புரிந்தது. அதற்கு என்ன செய்யலாம் என்ற அடுத்த யோசனையில் இறங்கினான்.

அரூபமாக இருந்த தேன்பாவனி பெருங்குரல் எடுத்து அழுதாள்.

 
அத்தியாயம் 9

மையிருட்டும், கண்ணெதிரே ஆத்மாவும் என்கையில் சொந்த மகளாகவே இருந்தாலும் மிரட்சி இருக்கத்தானே செய்யும்? அதுதான் செல்லம்மாளுக்கும். தேனுவின் கேள்வியில் மிரண்டு தான் விழித்தார். அவரைத் தாங்கிப் பிடித்தவாறு, பவளமல்லி பாவமாகத் திரும்பி வேந்தனைப் பார்க்க, அவள் தோளில் லேசாக தட்டிக் கொடுத்தான் வேந்தன்.

"அத தொடாமலே சொல்லலாம்" ஒருகையால் மரத்தைப் பிடித்திருந்தவாறு மறுகையால் அவன் கையைத் தட்டிவிட்டார் அனிருத். இன்னும் பேய் இருந்த திசைப் பக்கம் கூட திரும்பவில்லை அவர்.

தேன்பாவனி குரலை உயர்த்த உயர்த்த மயக்க நிலைக்கு சென்று கொண்டிருந்தனர் அம்மா, மகள் இருவரும். மரத்தோடு ஒன்றி நின்ற அனிருத் அதுவரை திறந்திருந்த கண்ணையும் இறுக மூடிக் கொண்டார்.

"உன் தேனு இல்லையாம்மா நானு?" என அலறியவளைக் கண்டு இன்னும் ஒடுங்கினர்.

"பயப்படாதீங்க அத்த, நீங்க சாதாரணமா பேசுங்க உங்க பொண்ணும் சாதாரணமா பேசுவாங்க. நீங்க பயப்பட பயப்பட அவங்க ஆத்மாவோட வீரியத்த தான் காட்டுவாங்க" என்றான் வேந்தன்.

"என்னங்க பயமா இருக்கு?" என தேம்பினாள் பவளமல்லி.

"ம்ச் அழாத மல்லி. அக்கான்னு கூப்டு அப்பதான் சாந்தமாகுவாங்க. ஏற்கனவே நீ பயந்ததால தான் அடுத்து உங்கிட்டயே வரல. மறுபடியும் பயந்து விரட்டி விட்ராத சரியா"

"சரி" என தலையசைத்துக் கேட்டுக் கொண்டாள்.

"வக்கீலுக்கு தான படிச்சான் இவேன்? பேய்கிட்ட எப்புடி பேசன்னு வகுப்பெடுக்குறியான் பாரு. பேய விரட்டிர வேற கூடாதாம். எல்லாம் என் கிரகசண்டாலம் என்ன செய்ய!" என அனிருத் கண்ணைத் திறக்காவிட்டாலும் அவர் மூளை விழிப்புடன் தான் இருந்தது.

"அக்கா!" என்றாள் பவளமல்லி பயத்தில் நடுங்கிய மெதுவான குரலில்.

"தேனு!" என்றார் செல்லமும் இப்போது கொஞ்சம் தைரியத்தை வரவழைத்து.

"தேனு தான்மா. நா உனக்கு நினைப்புலயே இல்லைலம்மா? செத்துட்டான்னு என்ன முழுசா மறந்துட்டல்ல?" என்றாள் தேன்பாவனியும் மெதுவான குரலில் அழுகையோடு.

"தேனு தேனு! இல்லடி உன்ன நினைக்காம ஒரு நாளும் எனக்கு விடிஞ்சதில்லடி என் தங்கம். ஐயோ என் மவள என்னால தொட கூட முடியலையே" என தலையில் அடித்துக் கொண்டு அவரும் அழ,

"செத்தவ எப்புடி செத்தனாதுன்னு யோசிச்சியா நீ? செத்துட்டான்னு எவனோ சொன்னான்னு கருமாதி பண்ணிட்டு காரியம் முடிஞ்சதுன்னு அடுத்த வேலையப் பாக்க போயிட்டல்ல?"

"என்னடி இப்படி பேசுற? நீ செத்த துக்கம் எனக்கில்லங்கியா? பாப்பா பாருடி எப்டிலாம் பேசுறான்னு" என அவர் இன்னும் இன்னும் அழ, அந்த அழுகை அவளை இறக்கியது. ஆக்ரோஷம் இறங்கி நிதானம் வந்தாள். அம்மாவை நெருங்கி தேற்ற முயன்றாள் முடியவில்லை. அருகிலேயே அவரை உணர முயன்றபடி அரூபமாக நின்று கொண்டாள்.

"ஊர்ல சொல்றது தான் நிஜமாக்கா? அத்தான் வீட்ல உள்ளவங்க தான் உன்ன எதுவும் பண்ணாங்களா க்கா?" என்றாள் பவளமல்லி.

"காய்ச்சல்ல மயங்கி விழுந்தவ எந்திக்கவே இல்லையேடி? நா ஆரன்னு கேட்டு நிப்பேன்? எம்பேச்ச மதிச்சு ஆராது பதில் சொல்லுவாங்களா? நல்லா இருந்த புள்ள காய்ச்சல் கண்டு இப்படி பொசுக்குன்னு போயிட்டாளேன்னு அழுத எனக்கு ஆறுதல் சொல்ல கூட அன்னைக்கு நாதி இல்லையேடி நா என்ன பண்ணுவேன்?" என அன்றைய நினைவில் அப்படி அழுதார் செல்லம்மாள்.

இரு பெண்களையும் இரு கண்களாக பொத்திப் பொத்திப் பாதுகாத்து வளர்த்து அதில் ஒருத்தியைப் பாதியில் பறி கொடுத்தவரின் வலியை இவ்வுலகில் யாராலும் உணர்ந்து கொள்ள முடியுமா? அவர் சாகும் வரை அந்த வலி அவரைத் துரத்தும் என்பதை தான் எவரேனும் அறிவாரா?

"என்ன நடந்தது உங்களுக்கு?" என்றான் வேந்தன்.

எல்லோரும் மாற்றி மாற்றி பேசிக் கொண்டிருந்த சத்தத்தில், "பேய்கிட்ட இப்புடியும் பேசலாம்னு இன்னைக்கு தான காங்கேன் நானு. பொம்பளைங்களே பயப்படாம நின்னு பேசைல நீ இப்புடி மரத்த கட்டிட்டு நின்னேனா அசிங்கம்டா அனிருத்து" என இவர்கள் பக்கமே திரும்பாமல் கண்ணை மூடி அந்தப்பக்கமாக முகத்தை மரத்தினோடு ஒட்டி வைத்து நின்றவர் , மெல்லக் கண்ணைத் திறந்து திரும்பிப் பார்த்தார்.

தேன்பாவனி, செல்லம்மாளின் அழுகையில் ஆக்ரோஷத்தைக் குறைத்திருந்தவள், வேந்தனின் கேள்வியில் அவளின் இறப்பின் காரணங்கள் வரிசையாக ஞாபகம் வர, மறுபடியும் சாதாரணமாக இருந்த அவள் முகம் கோர முகமாக மாறத் துவங்கியது. அனிருத் திரும்பிய போது கண்டது அந்த முகத்தைத் தான், "ஆ ஆ ஆ!" என அலறி மரத்தைக் கட்டியிருந்த கையை விட்ட நேரம் அவர் கைபேசியில் அழைப்பும் வர, அதில் இன்னும் பதறி சத்தம் எழுப்பி கீழே விழுந்தார்.

அவர் போட்ட திடீர் சத்தத்தில், செல்லம்மாளும் பவளமல்லியும் கூட சேர்ந்து அலறத் துவங்க, வேந்தன் மாமனை முறைத்துப் பார்த்தான்.

"எதுக்கு பயப்படுற? என்ன பார்த்து ஏன் எல்லாரும் பயப்படுறீங்க? நா அவ்வளவு அகோரமா இருக்கேனா? மனுஷியா இருக்கவிடலையே என்னைய நா என்ன பண்ணுவேன்?" என தேன்பாவனியும் கோவத்தில் இறையத் துவங்கிவிட, மறுபடியும் அந்த இடத்தில் சூழல் மாறியது.

"லூசு மாமா. இவ்வளவு நேரமு கம்முன்னு நின்ன மாதிரி இன்னும் கொஞ்ச நேரம் நின்னுருக்க வேண்டியது தான? எதுக்கு கத்தித் தொலைச்ச?" என கேட்டவாறே தான் அனிருத்தைத் தூக்கிவிட்டான் வேந்தன்.

"வாய்ல நல்லா வரும் வீட்டுல சிவனேன்னு இருந்தவன கூட்டிட்டு வந்து பேய கண்ணுல காட்டிட்டு ஏன் கத்துறன்னு வேற கேப்பியா நீ? பேயப் பாத்துட்டு எவன்டா கத்தாம இருப்பான்?" என அழுதார் அனிருத்.

"அழாத மாமா. எவ்வளவு பெரிய மனுஷன் நீ இதுக்கு அழுதா நல்லாவா இருக்கு? என் மாமியார் முன்ன அழுது மானத்த வாங்காத" எனப் பல்லை வேறுக் கடித்தான்.

"உனக்குலாம் நல்ல ஏத்தம்டா. என்னைய வீட்ல கொண்டு விடு. பேய் கூட நீயே உன் மாமியார் குடும்பமா நின்னு பேசிட்டு வா" என அவர் முடிக்கும் முன், அவர் முன் வந்து நின்றாள் தேன்பாவனி.

"வேந்தா வேந்தா காப்பாத்துடா. டேய் பேய்டா மாமாவ காப்பாத்துடா வேந்தா என் தங்கம்ல போ சொல்லுடா இத" என அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு காலையும் அவன்மீதே தூக்கிப் போட்டு ஏறிக்கொண்டு இறுக்கிப் பிடித்துத் தொங்கியவாறு கெஞ்சினார்.

"நா பேயா நா பேயா? என்னைப் பார்த்தா பேய் மாதிரி தெரியுதா உனக்கு? பேய் சொல்லாத என் அம்மாவும் என் தங்கச்சியும் கூட என்ன பாத்துப் பயப்படுறாங்க" என அவரிடம் கத்தினாள் தேன்பாவனி.

அவர் அதில் இன்னும் அவன் கழுத்தோடு கட்டிக்கொண்டு இறுக பிடித்தார், "கழுத்த நெறிச்சு கொன்னுறாத இறங்கி தொலை மாமா" என வேந்தன் இறக்கி விட முயல, இன்னும் இறுக பிடித்தார் அனிருத்.

"காப்பாத்துடா வேந்தா பேய் என்ன வையுதுடா. போ சொல்லுடா அத" என விடாமல் அரற்றினாரே அன்றி இறங்கும் முடிவில் இல்லை அவர்.

"பேய்னு சொல்லாம கம்முன்னு நில்லு அந்த பொண்ணு உன் பக்கமே வராது" என்றான் வேந்தன்.

"பேய்ய பேய்னு சொல்லாம பேரிச்சம்பழம்னா சொல்ல முடியும்?" என்றார் பயத்தில் வந்த கோவத்தில்.

"மக முறை உனக்கு. பொண்ணுன்னு நினைச்சு பாரு பயமா இருக்காது" என்றான் வேந்தன்.

"எனக்கு இத்தத்தன்டி பொண்ணு அதும் பேய் ரூபத்துல தேவ தானாடா?" என்றார் மிகமிக பாவமாக.

"இறங்கி நில்லு. சீக்கிரம் பேசி முடிச்சு கிளம்பணும். நேரம் போயிட்ருக்கு விடிஞ்சுருச்சுன்னா பேச முடியாது" என்றவன் பட்டென்று அவர் கையைத் தட்டிவிட்டு இறக்கியும் விட்டான்.

"டேய் வேந்தா?"

"ஷ்! அமைதியா நில்லு மாமா" என்றான் வாயில் கை வைத்துக் காண்பித்து.

"அவரை விடுங்க. நீங்க சொல்லுங்க எப்டி இறந்தீங்க?" என்றான் தேன்பாவனியிடம். அவள் திரும்பி தாயையும் தங்கையையும் பார்த்தாள். இருவரும் பயந்து பம்மி நின்றனர். அவனைப் போல் சாதாரண மனிதர்களிடம் பேசுவதைப் போல அவர்களால் பேச முடியாமல் நின்றனர்.

"மல்லி இங்க வா. உன் அக்கா தான்னு தெரிஞ்சுட்டுல்ல? அவங்க உன்னையும் உன் அம்மாவையும் என்ன செஞ்சுடுவாங்கன்னு நினைச்சு இப்படி பயப்படுறீங்க?" என லேசாக அதட்டவும் செய்ய,

"அவ முகம்" என்றாள் பவளமல்லி,

"சாந்தமாகுங்க தேனு. மல்லியோட அக்காவா அவங்க பொண்ணா நீங்க அவங்க முன்ன நின்னா தான அவங்களுக்கும் அந்த பாசம் வரும்" என்றான் தேன்பாவனியிடமும்.

"உங்களுக்கு பயமா இல்லையா தம்பி? என் மகள பார்த்து எனக்கே பயமா தான் இருக்கு" என்றார் செல்லம்மாள்.

"மனுஷங்களோட கோர முகத்தைவிட இதெல்லாம் ரொம்ப சாதாரணம் தான் அத்த. நா அப்படிபட்ட முகங்கள தினமும் நிறையப் பார்க்குறேன்" அவன் சொன்னதும் அவருக்கும் சில எண்ணங்கள் தோன்ற ஆமோதித்து தலையசைத்துக் கொண்டார்.

மறுபடியும் அங்கு பேரமைதி, தேன்பாவனி மெல்ல மெல்ல அழகான பெண்ணாக மாறி நின்றாள். இறந்தவளே திரும்பி வந்துவிட்டாள் எனப் பார்த்துப் பார்த்து வெதும்பினார் செல்லம்மாள்.

"நீ காய்ச்சல்னால இறக்கலையாக்கா?" என்றாள் பவளமல்லி.

"இல்ல என்ன கொன்னுட்டாங்க. கொடூரமா கொன்னுட்டாங்க" எனப் பெருங்குரல் எடுத்து கத்தினாள் தேனு.

"எப்படி? ஏன் யாருக்குமே அது தெரியல?" என்றான் வேந்தன், அவளையும் செல்லம்மாளையும் மாறி மாறி பார்த்து.

"அக்கா சாகுறதுக்கு ஒரு வாரத்துக்கு முன்ன வீட்டுக்கு வந்தா. என்ன உங்களுக்கு எப்படியும் கல்யாணம் பண்ணி வைக்றேன்னு சொன்னா. சாயந்தரம் வரைக்கும் இருந்துட்டு தான் போனா. அடுத்து வந்த வெள்ளிக்கிழமை விஷக் காய்ச்சல்னு அக்காவ டவுன் ஆஸ்பத்திரில சேர்த்துருக்குறதா அத்தான் தான் ஃபோன் போட்டு சொன்னாங்க. நானும் அம்மாவும் அடிச்சு பிடிச்சு ஓடுனோம். அதிக நேரம் தண்ணீல இருந்ததால இல்ல அதிக குளிர்ல இருந்ததால இப்படி ஆகிருக்குன்னு டாக்டர் சொன்னாங்க. நானே டாக்டர்ட்ட பேசுனேன். எதுக்குன்னு அத்தான் வீட்ல கேட்டா, 'அவ எங்க பேச்ச கேட்டா எல்லாம் செய்றா? காணாதத கண்டவ கணக்கா ஏசிய விடிய விடிய போட்டா நம்ம ஊர் குளிருக்கு காய்ச்ச என்ன ஜன்னியே வரும். அவ இஷ்டத்துக்கு என்னத்தையாது செஞ்சு கடைசில எங்க உசுரத்தான் எடுக்குறா'ன்னு சொல்லிட்டாங்க. அக்கா சனிக்கிழமை ஃபுல்லா கண் முழிக்கவே இல்ல. ஞாயிறு காலைல டிரிப்ஸ் ஏத்துனா ஏறல்ல. அப்பதான் செக் பண்ணி அவ இறந்துட்டான்னு சொன்னாங்க. என்ன செய்ய முடியும் எங்களால? ஏசி வேணும்னு அடம்பிடிச்சு வாங்குனதே அத்தையும் அத்தானும் தான். ஆனா அக்கா தான் அனுபவிக்குறான்னு சொல்லிட்டாங்க. கடைசில அதால தான் செத்தும் போயிட்டதா சொல்லிட்டாங்க. அக்காவும் நாங்க கஷ்டப்படுவோம்னு எங்கட்ட எதையும் சொல்றதே இல்ல. சொல்லிருக்கலாம்ல க்கா?" என்றாள் பவளமல்லி அனைத்தையும் கூறி முடித்த கையோடு.

"உங்களுக்கு காய்ச்சல் எப்டி வந்தது?" என்றான் வேந்தன் தேன்பாவனியிடம்.

"அதான அவன் காரியம் அவனுக்கு" என்றார் தள்ளி நின்ற அனிருத். அவரும் இப்போது நடந்ததை அறிந்து கொள்ளும் பாவனைக்கு வந்திருந்ததால் பொறுமையாக கதை கேட்டார். பேயும் பெண்ணாக அல்லவா நின்றது.‌

"என்ன ப்ரிட்ஜ்குள்ள அடைச்சு வச்சுட்டாங்க" என்ற அவளின் பதிலில் நால்வருமே அதிர்ந்தனர்.

"என்ன தேனு சொல்ற? ஃப்ரிட்ஜ்லயா எதுக்கு?" என படபடத்தார் செல்லம்மாள்.

"இந்தாம்மா ஏய் அவேன் ப்ரிட்ஜ்ல தூக்கி வச்சா குளுகுளுன்னு இருக்கேன்னு உள்ளயே உட்கார்ந்துக்குவியா? எட்டி மிதிச்சுட்டு வெளில வந்துருக்க வேண்டியது தான?" என்றார் ஆவேசமாக அனிருத்.

"மூடிட்டு நில்லு மாமா!" பல்லைக் கடித்தான் வேந்தன்.

"ம்ச் ஒரு மாவுச்சட்டி உள்ள போகலைன்னு முந்தாநேத்து உன் அம்மாக்கும் என் பொண்டாட்டிக்கும் அம்புட்டு சண்டை. எப்பவும் அரைக்க சட்டிய மாத்திட்டான்னு அக்கா மல்லுக்கு நின்னத பாத்தருந்தா தெரிஞ்சுருக்கும் உனக்கு. இங்க மாவு சட்டியே வைக்க முடியலயாம் இத்தாதன்டி பிள்ளைய எப்டி வச்சுருப்பானுவ? அப்படியே வச்சாலும் எத்தி ஒரு மிதிச்சுட்டு ஓடி வந்துருந்தா இன்னைக்கு பேயா அலைய வேணாம்ல?"

"சரிதானாத்தா? தள்ளிவிட்டு ஓடி வந்துருக்கலாம்ல?" என்றார் செல்லமாளும்.

"நாலு ஆம்பளைங்கள உதறி தள்ளி வர்ற அளவுக்கு தெம்பா நீ என்ன வளர்க்கலையேம்மா" என முறைத்தாள் தேன்பாவனி.

"நாலு பேரா? ஒரு பொம்பள பிள்ளைட்ட வீரத்த காட்டுனவிங்களாம் என்ன ஆம்பளைங்க? ச்சி இப்புடி சென்மங்க எல்லாம் எதுக்குத்தேன் பொறப்பெடுக்குங்களோ?" அனிருத் இஷ்டம் போல திட்ட, செல்லம்மாள் அதற்கு மேல் கேட்கவே பயந்து வாயை கையால் மூடிக்கொண்டு அழுதார்.

பவளமல்லி, "அங்க யாருமே நல்லவங்க இல்லையாக்கா? ஒருத்தர் கூட உன்ன பாவம்னு நினைக்கலயா? அப்படி என்ன கோவம் உன்மேல?" என பாவமாக கேட்டாள்.

 
அத்தியாயம் 10

"ஆரம்பத்துல இருந்தே அந்த குடும்பம் சரி கிடையாது. என்ன கட்டுனவனுக்கும் அவன் அம்மாக்கும் எதுக்கு எடுத்தாலும் சந்தேகம். நா என்ன செஞ்சாலும் சந்தேகம் தான். நா என் மாமனார சாப்பிட வாங்கன்னு சொன்னா கூட ரெண்டும் சந்தேகமா பார்க்கும். பிஎஸ்சி மேத்ஸ் படிச்சதுக்கு வேலைக்கு போறேன்னா அதுலயும் சந்தேகம்னு தான் வீட்லயே ட்யூஷன் எடுத்தேன். ஆனா அதுல கூட சின்ன பசங்களோட சேர்த்து வச்சு பேசுவான் அந்த பொறுக்கி. எனக்கு அங்க நிம்மதியே கிடைச்சதில்லம்மா, வாசல்ல வந்து நின்னா கூட அசிங்கமா கேட்கும் என் மாமியார். எதையாவது எதுத்து சொல்லிட்டா அடிப்பா அந்த கிழவி. அவ்வளவு வலியவும் இவ கல்யாணம் பண்ணி போகட்டும்னு மட்டும் தான்மா பொறுத்துக்கிட்டேன். அப்றம் உன்கிட்டயே வந்துடலாம்னு இருந்தேன்மா. ஆனா எல்லாம் போச்சு. இதோ இந்த நல்ல மனுஷன பாப்பாக்கு எப்படியாவது கட்டி வச்சுடணும்னு நினைச்ச நேரத்துல தான் நாலாபக்கமும் நமக்கு பிரச்சினையா வந்து விடிஞ்சது. கல்யாணத்த நிறுத்தியே ஆகணும்னு என்ன கட்டுனவன் என்னைய போட்டு அடிச்ச அடிலயே நா செத்துருக்கணும்மா ஆனா உசுரு போகவே இல்லம்மா, அவ்வளவு வலி செத்து போ செத்து போன்னு எனக்கு நானே அவ்வளவு போராடுனேன்ம்மா ஆனா நா சாகவே இல்ல. ஏன்மா சாகல? செத்துருந்தா எனக்குள்ள சாகுறப்ப இருந்த வெறி இல்லாம போயிருக்கும்ல? அதான் கொடூரமான சாவுக்காக காத்திருந்து செத்துருக்கேன். எவ்வளவு அடிச்சாலும் தாங்குறான்னு என்னைய அன்னைக்கு தூக்கி ப்ரிட்ஜ்குள்ள வச்சு பூட்டிட்டானுங்க கைய கால கூட அசைக்க முடியாத அளவுக்கு வலி, மூணு நாளா சாப்பிடாத பசி, உசுரோட சவப்பெட்டிக்குள்ள இருந்த மாதிரி இருந்தேன். அப்படி போன உசுரு எப்படி நிம்மதியா போவும்? செஞ்சதுக்கு பழித் தீக்காம போனா அப்றம் கடவுள் குடுத்த என் உசுருக்கு என்ன மரியாதை? அதான் நின்னேன் நா எப்டி வலிச்சு செத்தேனோ அதே மாதிரி வலிக்க வலிக்க அந்த அஞ்சு பேரையும் கொன்னேன்" என்றாள் முடிக்கும் போது அந்த இடமே அதிரும் சிரிப்புடன்.

கேட்ட நால்வரும் பேச்சு, அழுகை, அதிர்ச்சி என்று அனைத்தையும் கடந்த நிலையில் நின்றனர். வேந்தன் கூட ஒரு பெண்ணின் இறுதி நிமிட மரண வலியை உணர்ந்தவனாக அமைதியாக நின்றுவிட்டான்.

தேன்பாவனி மேலும் மேலும் அதிர்ந்து சிரித்து அந்த இடத்தை பலமடங்கு வேகத்தில் காற்றோடு காற்றாக சுழன்று வர, நாய்கள் எல்லாம் ஊளையிடத் துவங்கி விட்டது. அதும் பத்திற்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் கூடிவிட, ஒருவித நடுக்கம் அனைவரினுள்ளும் பரவியது. நாய்களின் ஊளையிடும் சத்தத்தால் ஊருக்குள் இருக்கும் நாய்களும் வெறிபிடித்ததுபோல் ஓடிவரத் துவங்கின.

அதன் எண்ணிக்கையும் சத்தமும் கூடிக்கொண்டே சென்றதால், "இனி இந்த சத்தத்துக்கு ஊரே எந்திருச்சுரும். எல்லாரும் என்னவோ ஏதோன்னு ஒன்னு கூடிருவாங்க. கிளம்பலாம். வாங்க" என வேந்தன் வேகமாக சொல்லவும்,

"என் பொண்ணு?" என்றார் செல்லம்மாள்.

"அவங்க இங்க தானே இருக்க முடியும்? நம்மள தான் நாம இப்ப மறைக்கணும். நீங்க முதல்ல கிளம்பணும் வாங்க" என்றான் அவனுக்கும் விஷயம் பாதியாக நிற்பதில் கடுப்புதான், ஆனாலும் வேறு வழி இல்லையே அவர்களை மறைத்தாக வேண்டுமே!

"அக்காவும் வரட்டும். அக்கா வாக்கா" என்றாள் பவளமல்லி.

"எங்க வரட்டும்? விளையாடாதம்மா பேய்க்கு நீ பாதுகாப்பு குடுக்கப் போறியா? ஊருக்குள்ள இருக்கப் பேச்சு போதாதா? கிளம்புங்க. அவனே இப்பதான் வீட்டுக்கு போவோம்னு நல்ல முடிவா எடுத்துருக்கான் நீ வேற குட்டைய குழப்பாம கிளம்பு" என்றார் அனிருத் அவசரமாக.

"என் அக்கா பாவம். அவ எதுவுமே செய்யல. அவள அநியாயமா கொன்னுருக்காங்க"

"பதிலுக்கு அஞ்சா உன் அக்கா கொன்னு குவிச்சுட்டாம்மா"

"ஏதாவது செய்ங்க தம்பி. தேனுவயும் கூட்டிட்டு போயிருவோம்" என செல்லம்மாளும் சொல்ல,

"எங்கக் கூட்டிட்டு போறது? ஏன் மதினி பேய் புள்ளைய வீட்ல கூட்டிட்டுப் போய் என்ன பண்ண போறதா உத்தேசம்? அந்த புள்ள அதுபாட்டுக்கு ஊருக்கு வெளில காத்து வாங்கிட்டு இருக்குது பொறுக்கலையா உங்களுக்கு?"

"மாமா!" என வேந்தன் அதட்ட,

"அடேய் இவங்க பேச்சக் கேட்டு வண்டில ஏத்திடாத. ஏற்கனவே அந்த பேய்க்கு உன் வண்டி மேல ஒரு கண்ணு. அப்றம் உள்ளயே செட்டில் ஆகிடும். நீ ஊர்வலம் தான் கூட்டிட்டு திரியணும். மாமா உன் நல்லதுக்குத்தேன் சொல்லுவேன்" என்றார் கடுப்புடன்.

"அக்காவ பேய் பேய்ன்னு சொல்லாதீங்க. என்னங்க நீங்க அக்காவ கூட்டிட்டு வந்து எங்க வீட்ல விட்ருங்க நாங்க பாத்துக்குறோம்"

"ஆமா பேய்க்கு பாய் போட்டு தாலாட்டு பாடுங்க தாயும் மவளும். என்னைய டென்ஷன் ஆக்காத புள்ள"

"என் அக்கா வந்தா உங்களுக்கு என்ன?"

"அப்ப மூணு பேரும் இங்கனயே ஒரு குடிசைய போட்டு உக்கார்ந்து ஆக்கி தின்னுங்க. நானும் என் மருமவனும் போறோம்" என்றவர், "கிளம்புடா" என அவனுக்கும் சொல்ல,

"நாம தானே கூட்டிட்டு வந்தோம். விட்டுட்டு எப்டி போறது லூசா நீ?" என்றவன், "இங்க பாருங்க அத்த. என் வண்டிய நிறுத்தும் போதே உங்க பொண்ணால ஊருக்கு வெளில இருக்க நாகாத்தம்மன் கோவில தாண்டி வர முடிஞ்சதில்ல. அவங்களால ஊருக்குள்ளலாம் வர முடியாது. நாம இனி அவங்க ஆத்மா சாந்தி ஆக என்ன செய்யணுமோ அத தான் செய்யணும்" என வேந்தன் முடிக்கும் முன், சுழன்று வந்து அவன் முன் நின்றாள்.

"போ மாட்டேன் இன்னும் ஒன்னு மிச்சமிருக்கு அதையும் முடிக்காம போ மாட்டேன். அதுக்குள்ள என்ன அனுப்ப எதாவது செஞ்சீங்க? இந்த ஊரே இருக்காது மொத்தமா அழிச்சுடுவேன்" என தேனு கத்தியதில், இன்னுமா என மற்ற மூவரும் அதிர, வேந்தன் யோசனையாக பார்த்தான்.

நாய்கள் வெறிப்பிடித்து ஓடி வருவது தெரிய, "எல்லாரும் போய் கார்ல ஏறுங்க. சீக்கிரம். நாய்ங்கட்ட சிக்குனோம் அப்றம் நாமளும் தேனு மாதிரி காத்துல தான் ஆடணும்"

"அம்மாடி தேனு" என செல்லம்மாள் அவளைப் பிடிக்க செல்ல,

"அவங்கள நாளைக்கு வந்துப் பார்ப்போம் அத்த வாங்க" என இழுத்தான் வேந்தன்.

"என்னது நாளைக்குமா?" என நெஞ்சில் கைவைத்தார் அனிருத்.

"அக்கா வாக்கா. எனக்கு இப்ப உன்ன பாத்து பயமா இல்லக்கா வாக்கா" என அழைத்தாள் பவளமல்லி.

தேன்பாவனிக்கும் அவர்களை விட்டு பிரிய முடியவில்லை, ஆனால் அவளால் ஊருக்குள் போக முடியாதே? அதனால் செல்பவர்களைத் தடுக்காமலும் நின்றாள்.

"அக்கா ஊருக்குள்ள போற வரைக்குமாது வாக்கா. நாய்ங்க உன்ன எதுவும் செஞ்சுட போகுது" என பவளமல்லி சொல்லவும், அனிருத் வண்டி கதவிலேயே முட்டிக்கொண்டார்.

"ஆமா வெளி ஊருக்கு போறோம் வழியனுப்ப வர வேண்டிய ஆளுதான் உன் அக்கா" என முறைக்கவும் செய்ய, வேந்தன் வண்டியில் ஏறிவிட்டான். அதனாலேயே மற்ற மூவரும் மெல்ல ஏறிக்கொண்டனர்.

வண்டி கிளம்பியது, ஆனால் நாய்கள் வண்டியைத் தான் குறைத்துக் கொண்டு சுற்றி சுற்றி வந்தது. ஜிப்ஸி வேகம் எடுத்த பின்னரும் வண்டியையே தான் தொடர்ந்து ஓடி வந்தது, வேந்தன் புரியாமல் வேகமாக ஓட்டி வந்தான், ஊருக்குள் நுழைய நாகாத்தம்மன் கோவிலை எட்டியது.

அதற்கு பிறகு நாய்கள் பின் தொடராது என அவன் எண்ணியிருக்க, நாய்கள் தொடர்ந்து வந்த வண்ணம் தான் இருந்தது.

சட்டென்று வண்டியை நிறுத்தியவன், "தேன்பாவனி?" என்றான் ஜிப்ஸியினுள் திரும்பி மெதுவாக.

"என்னடா இங்க வந்து கூப்பிடுத?" என்றார் அனிருத்.

"நாய் எல்லாம் நம்ம பின்னாடி தான் வந்துட்ருக்கு மாமா. அப்ப தேனு இங்க தான் இருக்கணும்"

"இரும்புக்கும் பேய்க்கும் ஆகாதுடா மருமகனே. அதனால் வண்டிக்குள்ள வர முடியாது"

"போயா லூசு மாமா" எனத் திட்டியவன், "உன் அக்கா இருக்காங்களா கேளு மல்லி" என்றான் அவளிடம்.

"தேனு! அக்கா!" என பின்னிருந்த இருவரும் அழைக்க, கலகலவென சிரித்துக் காண்பித்தாள் தேன்பாவனி.

"எப்புடுறா?" என அனிருத் அதிர,

"என்னால ஊருக்குள்ள வரமுடியாதுன்னு நினைச்சு தான் இத்தன நாளா நான் வரல. ஆனா என்னாலயும் வர முடியும்னு இன்னைக்கு தான் தெரிஞ்சுட்டேன்" என்றாள் தேன்பாவனி சிரிப்புடன்.

"அப்றம் எப்டிக்கா அத்தான் வீட்ல அஞ்சுபேர கொன்ன?"

"சொல்றேன். இனி ஒன்னு ஒன்னா சொல்லத்தான போறேன்? கூடவே இருக்கப் போறேனே?"

"அடேய் முதல்ல இவங்கள கூட்டிட்டு போய் அவங்க வீட்ல விடுடா. சீக்கிரம் போடா" என அனிருத் வேந்தனைப் போட்டு அடிக்க, அவனும் சிலபல முடிவுகளுடன் வண்டியை எடுத்தான்.

ஊர் எல்லை கோவிலைத் தாண்டி வர முடிந்தவர்களால், பவளமல்லியின் வீடு இருக்கும் தெருவிற்குள் நுழைய முடியவில்லை. கார் தெரு முனையிலேயே நின்றது.

"என்னாச்சு?" என்றார் அனிருத்.

"ஜிப்ஸி உள்ள போகல"

"நா எதுவும் பண்ணலையே?" என்றாள் தேன்பாவனி‌.

"ஆனா இந்த தெருவுக்குள்ள கார் போக மாட்டேங்குது. நீங்க இறங்கி நடந்து போயிடுங்க" என வேந்தன் சொல்லவும், பெண்கள் இருவரும் இறங்கிக் கொண்டனர்.

"நிக்கவே செய்யாதீங்க விறுவிறுன்னு வீட்டுக்குப் போயிடுங்க. உங்க கூடவே தேனு வந்தா நாய்களும் துரத்தும்" என்றதும் இருவரும் வேகமாக சென்று விட்டனர். எப்படியும் தேனு வருவாள் என்ற நம்பிக்கையில் நடந்துவிட்டனர்.

"இன்னும் பேய எங்க போய் இறக்கிவிட போற?" என்றார் மெல்ல அனிருத்.

தேன்பாவனி காரைவிட்டு இறங்கி வேந்தனை கடந்து செல்ல முயன்றாள் முடியவில்லை. மீண்டும் மீண்டும் முயன்றுவிட்டு, "என்னால ஏன் போ முடியல?" என கத்தினாள்.

"நடுசாமம், ஊருக்குள்ள நிக்றோம் உன் இஷ்டத்துக்கு கத்தாதம்மா" என அனிருத் அதட்ட, அவள் பார்வை மாற கப்பென்று வாயை மூடிக்கொண்டார்.

மீண்டும் வந்து ஜிப்ஸியில் அமர்ந்து கொண்டாள், "ஆத்தங்கரைலயே விட்டுடவா?" என்றான் வேந்தன்.

"அடேய் அது பேய்டா பெட்ரோல் டீசல் செலவு இல்லாம அதுவே போயிடும்டா" என அழுவது போல் கெஞ்சவே செய்தார் அனிருத்.

"உங்க வீட்டுக்குப் போங்க" என்றாள் தேன்பாவனி.

"எங்க வீட்டுக்கா எதுக்கு?" என அனிருத் அதிர,

"மறுபடியும் ஆத்தங்கரைக்கு போய்ட்டு என்னால திரும்பி ஊருக்குள்ள வரமுடியாம போயிடுச்சுன்னா?"

"அதுக்கு எங்க வீட்டுக்கு வந்து என்ன செய்யப் போற நீ? அங்க உனக்கு பொழுது கூட போகாது"

"அத நா பாத்துக்குறேன்" என முறைத்தாள் தேன்பாவனி.

"வேந்தா!"

"அஞ்சு பேர எப்டி கொன்னாங்கன்னு தெரியணும்ல கூட்டிட்டு போய் அத விசாரிப்போம் மாமா" என்றவன் வண்டியை எடுத்துவிட்டான்.

"ஐயோ ஐயோ ஐயோ இத என்னன்னு சொல்லுவேன் நானு. இப்புடி எங்கையாது நடக்குமா? பேய வண்டில ஏத்தி வீட்டுக்கு கூட்டிட்டு வாரானே இவன என் அக்கா என்னன்னு பெத்தா? நா என்னன்னு சொல்லுவேன் எங்க போய் சொல்லுவேன். எவனாவுது நா இத சொன்னா நம்புவானா என்னைய கிறுக்கனுல்ல பேசுவானுங்க. ஆண்டவா முருகா குடியிருக்க வீட்டுக்கு பேய கூட்டியாரான் முருகா இதெல்லாம் தடுத்து நிறுத்த மாட்டியா நீயி? உன் தீவிர பக்தன இப்புடி சோதிக்கிறியே உனக்கே இது நியாயமா படுதா?" என அவர் வழியெங்கும் புலம்பிக் கொண்டே வர, வீடு வந்திருந்தது.

வீட்டிற்குள் அவளால் வர முடியுமா முடியாதா என இருவேறு குழப்பத்தில் தான் வண்டியை நிறுத்தி இறங்கினான் வேந்தன். அடித்துப் பிடித்து ஓடியேவிட்டார் அனிருத்.

தேன்பாவனி வேந்தனின் வீட்டினுள் புக முயன்றாள். எந்த தடையும் இன்றி அவளால் வேந்தன் வீட்டினுள் நுழைய முடிந்தது.

வேந்தன் திரும்பி பூஜை அறையைப் பார்த்தான், மணிகளால் ஆன கதவு வழியாக சிறு வெளிச்சம் மட்டுமே அந்த வரவேற்பறையை நிறைத்துக் கொண்டிருந்தது.

நிமிர்ந்து பார்த்த தேன்பாவனி மொட்டை மாடி கதவு வழி வெளியேறி இருந்தாள். வேந்தன் அப்படியே அங்கிருந்த வரவேற்பறை நீள்விருக்கையில் சரிந்து விட்டான். அவள் எதற்காக வந்திருக்கிறாள் இன்னும் அவள் கொல்ல மிச்சம் வச்சிருக்கும் ஆள் யார்? நம் வீட்டிற்குள் கூட்டி வந்தது சரியா? இதனால் இங்குள்ள யாருக்கும் ஏதேனும் பிரச்சினைகள் வருமா? என்றெல்லாம் அவன் சிந்தனைகள் ஒரு பக்கம் ஓடிக்கொண்டிருக்க, இதை காரணமாக வைத்தாவது பவளமல்லியைக் கரம்பிடித்துவிடும் எண்ணத்தோடு கண்ணயர்ந்திருந்தான் வேந்தன்.

மொட்டை மாடியில் ஒரு மூலையில் பதுங்கி இந்த ஊருக்கும் அவளுக்குமான நினைவுகளோடு ஒதுங்கி விட்டாள் தேன்பாவனி.

 
அத்தியாயம் 11

முதல்நாள் காலையில் போட்ட உடையோடு வரவேற்பறையில் தூங்கும் மகனை யோசனையாகப் பார்த்தவாறு வந்த உலகநாயகன், "படிகாசீ இங்க வந்து பாரு சின்னவன் இங்கயே தூங்குதான். ஏன் என்னன்னு எழுப்பிக் கேளு" என சத்தமாக அழைக்க,

அடுப்படியில் இருந்து ஓடிவந்த உத்தமி, "அதுக்கு ஏம்ணே கத்துதீக. வீட்டுக்குள்ள தான தூங்குது தம்பி? அதுக்கே பாவம் ராவு பூராம் தலைவலில தூங்காம உளாத்திட்டு மூணு மணிக்கு மேலதாம் வந்து படுத்துருக்கு. கத்தி எழுப்பி விட்டீகன்னா உங்களதான புடிச்சு கத்தும்?" என அமைதியாக சொல்லிக் கொண்டிருக்க,

அறையில் இருந்து வந்த படிகாசீ, "உனக்கு என்னயா அதுல? அவேன் எங்கன தூங்குனா உனக்கு என்னங்கேன்?" என வந்து நின்றார்.

அவர்கள் இருவரும் அமைதியாக பேசினாலும், உலகநாயகன், "எனக்கு டிவி பாக்கணும் அவன எழுப்பி விடு வேணும்னா உள்ள போயி படுக்கட்டும்" என்றார் வேண்டுமென்றே சத்தமாக.

"அத மெதுவா பேசுங்கங்கேன்?" என உத்தமி எகிற,

"நீ வா. அந்தாளுக்கு வேணும்னா போய் எழுப்பிக்கட்டும். டிவி பாக்குததுக்கு அசந்து தூங்குற பிள்ளைய எழுப்பணுமாம்ல ஏத்தத்த பாரு. தைரியம் இருந்தா எழுப்பிப் பாக்கட்டும்" என பேசியவாறு உத்தமியையும் இழுத்துக் கொண்டு சமையலறைப் புகுந்து விட்டார்.

ஜெகதாம்பாள், அவள் அப்பா துணிக் கடையைத் தனது பொறுப்பில் எடுத்து பார்த்துக் கொள்வதால் வீடு தங்குவதும் கிடையாது, யாருடனும் கலந்து கொள்வதும் கிடையாது. அவளாக நினைத்தாள் வருவாள், எப்போது வேண்டுமானாலும் சென்றுவிடுவாள், அவள் அப்பா வீட்டிலேயே நான்கு நாட்களுக்கு தங்கியும் கொள்வாள். படிகாசீ, மகன் மனோன்மணியிடம் கேட்டார் என்றால்,

"நீதான நல்ல இடம்னு பாத்து கட்டிவச்ச? நீயே ஏன் இப்படி பண்றான்னு கேளு" என்றுவிடுவான்.

"புருஷனும் பொண்டாட்டியுமாவது சந்தோஷமா இருக்குதுங்களான்னு தெரியல, இப்டியே இருந்தா அவ எப்படி புள்ள உண்டாகுவா? படிச்சு பெரிய வேலைலாம் பார்த்தும் பொறுப்பே இல்லையே?" என உத்தமியிடம் தான் புலம்பிக் கொள்வார் படிகாசீ.

ஜெகதாம்பாளுக்கு தொழில் ஈடுபாடு அதிகமே, திருமணத்தை வேண்டாம் என்றுவிட்டு தொழில் தொழில் என்றிருந்தவளை அவள் பெற்றோர் தான் கட்டாயபடுத்தி மனோன்மணிக்குக் கட்டி வைத்தனர்.

"நா பிஸ்னஸ் பார்ப்பேன். எனக்கு அதுல தான் ரொம்ப இஷ்டம். அதுக்கு தான் ஃபர்ஸ்ட் இம்பார்டன்ஸ் குடுப்பேன். நீங்க அத தடுக்க மாட்டீங்கனா கல்யாணம் பண்ணிக்கலாம்" என வெளிப்படையாக எல்லார் முன்னும் அவனிடம் பேசித்தான் திருமணப் பந்தத்தில் இணைந்தாள். இதோ இன்று வரை அதன் பின்னர் தான் ஓடிக்கொண்டிருக்கிறாள்.

படிகாசீ எப்போதாவது மனது கேளாமல், "என்னம்மா நீ இப்படி பண்ற? வேலை முக்கியம் தான் அதைவிட குடும்பமும் முக்கியமில்லையா?" என கேட்டுவிட்டார் என்றால்,

"வயசு இருக்கும் போது தானே வேலை பார்க்க முடியும் அத்த? பிஸ்னஸ்ல கொஞ்சம் ஸ்டெடி ஆகிட்டு அப்றம் குடும்பத்தத் தானே பார்க்கப் போறேன்?" எனச் சிரித்தே அவரிடம் கூறிவிட்டு, பத்து நாட்கள் அம்மா வீட்டில் தங்கி விடுவாள். வந்த பின்னரும் மனோன்மணியிடம், "உங்கட்ட சொல்லித்தானே கல்யாணம் பண்ணேன்? இப்ப நீங்க என்ன கண்ட்ரோல் பண்ற மாதிரி இருக்கு. எனக்கு அது பிடிக்கல" என பேசிவிடுவாள், அவன் படிகாசீயிடம் வந்து நிற்பான்.

"அவ என்னமு பண்ணிட்டு போறான்னு விடுமா. வீட்டுக்கு வர ரெண்டு மூணு நாளும் சண்டைன்னு நிக்றா" என பேசிவிடுவான், அவர் அமைதியாகிவிடுவார். ரெண்டு மூன்று மாதங்கள் அமைதியாக பொறுமையாக கழியும், பின் மறுபடியும் அதே சுழற்சியில் வரும் இப்போதும் அப்படித்தான் கிளம்பிச் சென்றிருக்கிறாள் என்று வரவிருப்பம் இருக்கிறதோ அன்று தான் வருவாள்.

வேந்தனுக்கு எல்லாம் தெரிந்தாலும், வழக்கு அவனிடம் வராமல் அவன் என்ன செய்ய முடியும், "டைவர்ஸ்னு எங்கிட்ட வந்து நின்னா, நா கவுன்சிலிங் குடுத்தனுப்புறேன் மா. உன் மகனுக்கு நா செய்ற ஆகச்சிறந்த நல்லது அதாதான் இருக்கும்" என நக்கலாக சொல்லிச் சென்றுவிடுவான்.

அவரவர் வாழ்க்கையை அவரவர் தான் செம்மை படுத்திக் கொள்ள வேண்டும். அவன் பேசினால் அவன் அண்ணனே கேட்க மாட்டான் என்கையில், 'பிஸ்னஸ் மேக்னட்' அண்ணி நிச்சயம் கேட்க மாட்டாள் என அறிவானே! அவன் பிரச்சினைக்கே இன்னும் முடிவு தெரியாத நிலையில் அண்ணன் பிரச்சினையை அவன் பெரிதாக யோசிக்கவில்லை. விவரம் இல்லாத அண்ணன் என்றால் கூட எதாவது முயற்சி செய்திருப்பானோ என்னவோ, மனோன்மணி அதிக விவரம் கொண்டவன் என்பதாலேயே இவன் தலையிட்டுக் கொள்ளவில்லை. இது எதைப்பற்றியும் கவலை இல்லாமல், மூன்று வேளையும் உண்பதும் உறங்குவதுமாக ஒரு அப்பா.

எப்போதும் போல் இதையெல்லாம் சொல்லி புலம்பிக் கொண்டே காலை சமையலில் இறங்கியிருந்தார் படிகாசீ, "தம்பிதான் இன்னுமு அந்த பவளமல்லி நினப்புலயே இருக்குன்னு தெரியுதுல்ல மதினி. போய் பேசி முடிச்சா என்ன?" என உத்தமி கேட்க,

"அதெல்லாம் சரிவராதுன்னு தான கம்முன்னு இருக்கேன். அந்த குடும்பமே வேணாம் சொல்லிட்டேன்" என்றார். அடுப்போரத்தில் இருந்த கரண்டி பொத்தென்று கீழே விழுந்தது. இருவரும் திரும்பிப் பார்த்தனர், உத்தமி எடுத்து அடுப்பருகிலேயே மேலே வைத்தார். இருவரும் அடுப்பிருக்கும் திண்டிற்கு எதிர் திண்டின் அருகில் நின்றிருந்தனர். உத்தமி சாம்பாருக்கு காய் நறுக்க, படிகாசீ வடைக்கு ஆட்டிக்கொண்டிருந்தார்.

"ஏமுங்கேன்? அன்னைக்கு வம்புக்கு நின்னவிங்க குடும்பமே இன்னைக்கு இல்லாம போச்சுல்ல இன்னுமு அங்க பொண்ணு மட்டுந்தேன் இருக்க அத எடுக்க என்ன யோசனை?"

"அதான் பெரிய யோசனையே. அந்த குடும்பம் எப்புடி செத்ததுன்னே தெரியல, அந்த வீட்டுப் புள்ள பேயா சுத்துன்னு வேற பேச்சிருக்கு. நமக்கு அதுலாம் வேணாம்" என படிகாசீ பேச, இப்போது அதே கரண்டி அங்கிருந்து எட்டிவந்து அவர் காலிலேயே விழுந்தது.

"ஆத்தே" என தடவிவிட்டுக் கொண்டு அதை கையில் எடுத்தவர், "வைக்கறத ஒழுங்கா வைக்கமாட்டியாட்டி நீ?" என உத்தமியை திட்டிவிட்டு அவர் அருகிலேயே வைத்துவிட்டார்.

'அங்கயிருந்து இங்கன வந்து எப்டி விழும்?' உத்தமி யோசனையாக அவர் வைத்த இடத்தையே பார்க்க,

"ஏ உன்னத்தான கேட்கேன்? பராக்கப் பாத்துட்டு நிக்கிற?" என உத்தமியைத் தட்டி தன்புறம் திருப்பிக்கொண்டார்.

"இல்ல மதினி கரண்டி நேராத்தான் எடுத்து வச்சேன் எப்டி அங்க இருந்து இங்க வந்து விழுந்துச்சு?"

"அவ அவ என்ன கவலைல இருக்கா நீ கரண்டி எப்புடி என் காலுல விழுந்ததுன்னு ஆராய்ச்சில இருக்க? அதுவா முக்கியம்? இப்ப எதுக்கு அந்தப் புள்ளப் பேச்ச இழுத்த நீ?"

"தம்பி அந்தப் புள்ள நெனப்புலயே இருக்கே மதினி?"

"அவளவிட அழகியா கொண்டு நிப்பாட்டுனா மறந்துட்டுப் போயிறப் போறான். இதென்ன பெரிய விஷயமா?" என அவர் முடிக்கும் போது, வெகுவான காற்றழுத்தத்தோடு வெளியேறிவிட்டாள் தேன்பாவனி. யாரோ தங்களை கடந்து செல்வது போல இருவருமே உணர்ந்தனர்.

"அப்பக் கொண்டு நிறுத்ததான?" என்றார் உத்தமி சமையலறை வாசலை எட்டிப்பார்த்துவிட்டுத் திரும்பி அவரிடம்.

"ஏம்ட்டி கூடவே இருந்து பாக்க தான? தேடாமலா இருக்கேன்?"

"எனக்கென்னவோ நீங்க தம்பி மனசு மாற காத்துகிடந்த மாதிரி தெரியல தம்பிதேன் உங்க மனசு மாற உங்கள கிடப்புல போட்ட மாதிரி தெரியுது"

"சும்மா நீயே அவன உசுப்பிகிசுப்பி விடாத"

"ஆமா நா சொல்லித்தேன் தம்பி எல்லாம் செய்யுதாக. நா என் சொந்தகாரப் பொண்ண சொன்னதுக்கே எப்புடி நச்சுன்னு அந்த புள்ளதேன் வேணும்னு சொல்லிட்டுப் போயிருச்சுன்னு சொன்னேனுல்ல?"

"அவள மாதிரி இருந்தா கட்டிகிடுதேன்னு சொல்லிருக்கானுல்ல? அழகான பொண்ணா வேலைக்குப் போகாத பொண்ணா பாப்போம். மூத்தவள மாதிரி ரெண்டாவதா வாரவளும் பேக்கத் தூக்கி மாட்டிட்டுப் போயிட்டா அப்றம் நமக்கு வயசான காலத்துல நம்மளயும் பிள்ளைகளையும் பாக்கத் துட்டுக் குடுத்து யாரையாவது கூட்டிட்டு வந்தாலும் வருவாளுக" என சலித்துக் கொண்டார்.

அனைத்தும் நீள்விருக்கையில் படுத்திருந்தவன் காதில் விழத்தான் செய்தது. அவன் அப்பா பேச்சைக் கேட்டதுமே அவர் முகத்தில் விழிக்க பிடிக்காமல் எழுந்து சென்றுவிடத்தான் நினைத்தான், ஆனால் அவர் வேண்டுமென்றே பேசுவதும் அதிகாரமாக எழுப்ப சொல்வதையும் கண்டுவிட்டு அப்படியே படுத்திருந்துவிட்டான், அதில் அம்மா அத்தைப் பேச்சு மொத்தமும் காதில் விழுந்திருந்தது.

இப்போது சிரித்துக் கொண்டே மெல்ல எழுந்தவன், கையை விரித்து உள்ளங்கையில் முழித்துவிட்டு, அப்படியே எழுந்து, இவனை எழுப்பாமலே அங்கு வெகுநேரமாக தேமே என நின்றுக் கொண்டிருந்தவரைக் கண்டு கொள்ளாமல் கடந்துச் சென்று விட்டான்.

அவன் நகர்ந்ததும் அவர் வேகமாக போய் தொலைக்காட்சி ஸ்விட்சை போட, தொலைக்காட்சி திரை படீரென்று பெரிய சத்தத்துடன் வெடித்தது.

அறைக்கு சென்று கொண்டிருந்தவன், "என்ன செஞ்சீங்க?" என அதட்டியவாறு வேகமாகத் திரும்பி வந்து டிவியை என்ன ஏதென்று பார்க்க.

"டிவி டிவின்னு காலைலயே பறந்துட்டு வந்தது இதுக்குத்தானா? ஒரு வேலைக்கும் உருப்படி இல்லாத ஜென்மம். ச்சை ரெண்டு லட்ச ரூபா டிவி. சும்மா உட்கார்ந்து பாக்க முடியாதாயா உன்னால?" என படிகாசீ திட்டிக்கொண்டே வர.

அங்கு உள்ளே நல்ல தூக்கத்தில் இருந்த அனிருத்திற்கு கேட்ட சத்தம் வீட்டில் தான் குண்டு விழுந்துவிட்டது போல் தான் செத்தே விட்டோம் என்பதுபோல அடித்து தூக்கிவாரிப் போட எழுந்தமர்ந்தார். மூச்சுத் தாறுமாறாக வாங்கியது.

பின்பே சுய உணர்வு பெற்று அறைக்குள் தான் பத்திரமாக இருப்பது புரிந்து திரும்பிப் பார்க்க, அவர் மகன் கால் அவர் தலையணையிலும் தலை அவர் அமர்ந்திருந்த இடத்தின் அருகில் இருப்பதும் தெரிந்தது‌. அங்கு டிவி உடைந்த நேரத்தில் அவனும் அவன் காலைத் தூக்கி அனிருத் முகத்திலேயே பொத்தென்று போட்டிருக்க அதில் தான் ஏகமாக கலங்கிவிட்டார் போலும்.

"தூங்க வர்ற வர அவனோட போராட வேண்டியிருக்கு. தூங்க வந்தப்றம் விடியவிடிய இந்த பய போட்டு மிதிக்குறதுல படாதபாடு பட வேண்டி இருக்கு. விடியும் போதாவது நிம்மதியா விடியுதா பாரு இந்த வீட்ல. அணுகுண்ட நடுவீட்ல போட்டு எழுப்புறாய்ங்க. காலைலயே எவேன் பார்த்த வேலைன்னு தெரியல. "ச்சை" என அதீத எரிச்சலில் புலம்பிக் கொண்டு மகனைத் தூக்கி நேராக படுக்க வைத்துவிட்டு, துண்டைத் தூக்கி தோளில் போட்டுக் கொண்டு வெளியே வந்தார்.

அங்கு படிகாசீ சத்தம் அதிகமாக கேட்கவும், "எக்கா மெதுவா பேசுனா என்ன? எல்லாருமா சேந்து என்னத்த போட்டு உடைச்சீக?" என முகத்தைத் துடைத்தவாறு திரும்பியவர், வேந்தன் டிவி பக்கம் நிற்பதைக் கண்டு அவனிடம் நடந்தார்.

தொலைக்காட்சி அவ்வளவு சத்தத்துடன் வெடித்தும், கீழே விழவில்லை. சுவரில் மாட்டியிருந்தவாறு திரையில் மட்டுமே வெடிப்பு விழுந்திருந்தது. அது அவர் கவனத்திலேயே படாததால், "ஏன்டா வேந்தா. நடுவீட்ல என்னத்த போட்டு வெடிச்ச நீயி? நைட்டுதேன் தூங்க விடலன்னா இப்பவும் வெடிலாம் போட்டு எழுப்புத உனக்கே நல்லாருக்கா இது?" என அருகில் வந்த பின்னரே டிவி விரிசல் தெரிந்தது.

"அம்மாடி டிவிய போட்டு உடைச்சுட்டியா? ஏன்டா?" என நெஞ்சில் கைவைத்து அதிர்ந்து விட்டார்.

"பொழுதுபோகாம டிவிய உடைச்சு விளையாடுறேன். லூசு மாமா! உன் மாமா என்னத்த செஞ்சுத் தொலைச்சாருன்னு கேளு. அவர் கை வச்சதும் தான் வெடிச்சுட்டு" என்றவன் ஸ்விட்ச் அருகில் கூட சென்று பார்த்தான் அதிகப்படியான மின்சாரம் பாய்ந்து எதுவும் ஆகிவிட்டதா என்றும் பார்த்தான். அவனுக்கு எதுவும் புலப்படவில்லை.

அனிருத் திரும்பி உலகநாயகத்தை பார்க்க அவர் அதைவிட அதிர்ச்சியில் அமர்ந்திருந்தார். "அங்க ஆளு சிலையாகி போச்சு போல. தூக்கிட்டு போய் ஊர் எல்லைல வச்சுடலாமோ?" என்றவர், "மாமா டிவிய என்ன செஞ்சீக? எப்டி வெடிச்சது?" என அவரிடம் சென்று நிற்க, பேக்கபேக்கவென விழித்தார் அவர்.

"ஒரு எழவும் தெரியாத மனுஷன கட்டிட்டு அழணும்னு என் தலையெழுத்து" என படிகாசீ மறுபடியும் ஆரம்பித்து விட்டார்.

இதற்குள் தொலைக்காட்சிக் கடைக்கு அழைப்புவிடுத்து ஆளை வரசொன்ன வேந்தன், "மாமா கூட இருந்து பாரு. டிவி ஷோரூம்ல சொல்லிருக்கேன் ஆள் வருவாங்க. என்னன்னு பாத்துட்டு சொல்லுவாங்க. இனி டிவி இல்லாம எப்படி சாப்பாடு இறங்குதுன்னு பாப்போம்" என உலகநாயகத்தை முறைத்தவாறு மறுபடியும் அறைக்குள் சென்று விட்டான்.

சட்டையைக் கழற்றப் பட்டனில் கைவைத்த போது தான் சட்டை பையில் ஏதோ இருப்பது தெரிந்தது. எடுத்துப் பார்த்தான், சின்ன தகடு போலிருந்தது. முந்தைய நாள் காலையில் சாமி தாத்தா வீட்டிற்கு சென்றபோது அவர் வைத்திருக்க வேண்டும் என உடனே புரிந்தது. இதுபோன்ற தகடு எல்லாம் வேறு யாரும் வைத்துக்கொண்டு சுற்றுவதில்லை. கையில் கொடுத்தால் வாங்கிருக்க மாட்டான் என்பதால் அவனுக்கே தெரியாமல் வைத்திருக்கிறார் என நினைத்து அதை எடுத்து அங்கிருந்த மேசை மீது வைத்து விட்டு குளிக்கச் சென்றுவிட்டான்.

 
அத்தியாயம் 12

மனதினுள் தேன்பாவனி ஓடிக் கொண்டே தான் இருந்தாள். அவளிடம் பகலில் பேச முடியாது எனத் தெரியும், மாடியில் தான் இருப்பாள் என அவனாகவே முடிவெடுத்து இரவில் பேசிக் கொள்ளலாம் என அவன் உத்தியோகத்தைப் பார்க்கக் கிளம்பிவிட்டான். இங்கு அவளால் யாருக்கும் எந்த தொந்தரவும் இருக்காது என்பது அவன் நம்பிக்கை.

வெள்ளைச் சட்டையும் கருப்பு கால்சராயுமாக கிளம்பி வந்தவனை, வழியிலேயே மறித்தார் அனிருத்.

"என்ன நீ, பேய் கிட்ட என்னைய மட்டும் தனியா விட்டுட்டு நீ பாட்டுக்குக் கிளம்பிட்ட?" என்றார் அவசரமாக.

"அந்தப் பொண்ணு மாடில இருக்கு மாமா. வீட்ல எல்லாரும் இருக்காங்க இப்ப நம்மளாலயும் எதுவும் செய்ய முடியாது. அந்தப் பொண்ணாலயும் நமக்கு ஃப்ரீயா பதில் சொல்ல முடியாது"

"ஏன்டா நா என்ன கேட்கேன் நீ என்ன சொல்லுத? பேயா இருந்தாலும் அதுட்ட ஒப்புதல் வாங்குறது தான் முக்கியம்னு உன் காரியத்துலயே கண்ணா இருப்பியா?"

"ஆமா பின்ன? என் வாழ்க்கைய நா பாக்க வேணாமா? வயசு போகுதா வருதா?"

"நீ அந்த பேயோட தங்கச்சிக்காகத்தான் பேய்க்கே உதவி பண்ணுதன்னு பேய்க்கு தெரிஞ்சா என்ன ஆகும்?"

"அதெல்லாம் அந்தப் பொண்ணுக்கு நல்லா தெரியும்"

"எப்புடுறா?"

"நா பவளமல்லியோட ஹேர்பேண்ட்ட கஷ்டப்பட்டு உருவிட்டு வந்தேன் அத இந்தப் பொண்ணு உருவிக்கிச்சு"

"எதுக்குடா ஹேர்பேண்ட் உருவி விளையாண்டீங்க?" என அதிர்ச்சியாக அனிருத் கேட்க,

"சும்மா ஜாலிக்கு தான்" எனத் தோளைக் குலுக்கிக் கொண்டு, "வா சாப்பிடுவோம். பசிக்குது. நா இன்னைக்கு சீக்கிரம் போகணும்"

"டேய் வேந்தா அப்ப அந்த பேயவும் கூட கூட்டிட்டுப் போயிடுடா உனக்கு புண்ணியமா போவும்" என அவன் பின்னே செல்லப் போக,

அவர் சொன்ன நொடி, "என்ன திரும்பத் திரும்ப ‌பேயி பேயின்னு சொல்லாதன்னு சொல்றேன்ல?" என அவரின் காதில் வந்து இரைந்தாள் தேன்பாவனி.

"இல்ல இல்ல நா சொல்லல" தெறித்து ஓடி படிகாசிக்கும் உத்தமிக்கும் நடுவில் சென்று நின்று கொண்டார் பாதுகாப்பிற்காக. இருவரும் வேந்தனுக்கும், மனோன்மணிக்கும் உணவை எடுத்து வைத்துக் கொண்டிருந்தனர்.

"சாப்பிடேன்டா நீயும்" என்றார் படிகாசீ அனிருத்திடம்.

"இன்னும் பல்லு விளக்கலக்கா"

"அப்ப போய் விளக்கேன்டா"

"வாடி உத்தமி போலாம்" என அவள் கையையும் பிடித்திழுத்துக்கொண்டு நடக்க,

"பல்லு விளக்க அவள ஏன்டா இழுத்துட்டுப் போற?"

"மவனுக்கு விளக்கிவிட்டு அவன் பல்ல மட்டும் பளிச்சுன்னு வச்சுருக்கால்ல அதான் என் பல்லையும் அவள விலக்க வச்சு பளிச்சுன்னு ஆக்கப் போறேன்" என்றவர் உத்தமியை இழுத்துக் கொண்டு அறைக்குள் ஓடியே விட்டார்.

"சரியான கிறுக்கன் இப்ப பல்ல வெளேர்னு ஆக்கிட்டு எங்க போ போறானாம். வயசு பிள்ளைக முன்னதேன் மானத்த வாங்குவியான்" எனத் தலையிலேயே அடித்துக்கொண்டார். அலுப்பில்லாமல் சிரித்துக் கொண்டான் வேந்தன். மனோன்மணி அவன் மனைவியை நினைத்து பெருமூச்சு விட்டுக்கொண்டான்.

வேந்தன் சாப்பிட்டு முடித்து எழுந்தவாறு வீடு முழுவதும் ஒருமுறை பார்வையால் சுற்றி வந்தான். அவன் கண்களுக்கு தேன்பாவனி தெரியவில்லை, ஆனால் அங்கு தான் நின்று அவன் பார்வையை கவனித்திருந்தாள். மொட்டைமாடி செல்லும் பாதையை ஒருமுறை நிமிர்ந்துப் பார்த்துவிட்டு, "கிளம்புறேன்மா" என வெளியேறி விட்டான்.

ஜிப்ஸியில் கிளம்பியவனுடன் கிளம்ப வாசல் வரை வந்தவளால் அதை தாண்ட முடியவில்லை. அவளுக்கு புரியவில்லை. நேற்று அவனுடன் தான் வந்தாள், இன்று அவனுடன் சென்று அவள் தங்கையையும் அம்மாவையும் பார்க்க முயலலாம் என நினைக்க வீட்டைத் தாண்ட முடியவில்லை. வேந்தன் கிளம்பிச் சென்றுவிட்டான். ஒருவேளை அனிருத்துடன் செல்ல முடியுமோ என்றெண்ணி அவர் வெளியே வருவதற்காக காத்திருக்கத் துவங்கினாள்.

வேந்தன் யோசனையெங்கும் மறுபடியும் பவளமல்லியை எவ்வாறு பெண் கேட்க வைப்பது என்பதிலேயே இருந்தது. அந்த யோசனையிலேயே வந்ததாலோ என்னவோ ஊரின் வெளியே இருந்த நாகாத்தம்மன் கோவில் வாசலில் அவளே திவ்யதரிசனம் கொடுக்கும் பொருட்டு நின்றிருந்தாள்.

வெள்ளையில் கருப்பு பூ போட்ட காட்டன் புடவை, தலையில் கொஞ்சமாக பூ, நெற்றியில் கருப்பு நிற வட்ட பொட்டு, அதன் மேல் சிறிதாக திருநீறும், நாகத்தம்மன் கோவில் மஞ்சளும் வீற்றிருக்க, வலது தோளில் ஒரு கைப்பைத் தொங்கிக் கொண்டிருந்தது. இவன் ஜிப்ஸியை பார்த்ததும் நிறுத்தவா வேணாமா என கையை நீட்ட முயல்வதும் சுருக்கிக் கொள்வதுமாக நிற்பவளை சுவாரசியமாகப் பார்த்துக்கொண்டு வந்தான்.

அந்தப்பக்கம் இந்தப்பக்கம் பார்ப்பதும் இவன் ஜிப்ஸியை பார்ப்பதுமாக நின்றவள், அவன் வண்டி கிட்டவரவும் கையை இறுக மூடி நின்றுகொண்டாள், அதில் அவளைக் கடந்துப் போக போவது போல வேகமாக வந்தவன், சட்டென்று நிறுத்தத்தில் காலை வைத்து அவள் முன்பே நிறுத்தினான்.

திடுக்கிட்டு விழித்தவள், அவனைப் பாவமாகப் பார்க்க, ஜன்னலைத் திறந்து விட்டு, "கோவிலுக்கு வந்தியா?" என்றான் அவனே.

"ம்ம்" என வேகமாக தலையை அசைத்தாள்.

"சரி வா நந்தனத்துல இறக்கி விட்டுறேன்" சாதாரணமாக அழைத்தான், அவள் தான் கண்ணை அகல விரித்துப் பார்த்தாள்.

அவனைத் தேடி அடிக்கடி நீதிமன்றம் செல்வது ஒருமாதிரியாக இருக்கவே, இங்கேயே நின்றாள். அதும் அக்காவைப் பற்றிக் கேட்கவே நின்றாள். அதற்கே பதறிக் கொண்டு வந்தது. அம்மாவிற்கு தெரிந்தால் விளக்கமாத்தடி தான் என அவள் பயந்து கொண்டு நின்றிருக்க, அவன் சாதாரணமாக வண்டியில் வா இறக்கி விடுகிறேன் என்றால் கண்ணை விரிக்கத்தானே செய்வாள்!

"என்ன முழிக்குற? வா! நா அப்படி தான் போவேன் இறக்கி விட்டுட்டுப் போறேன்"

"அம்மாக்கு தெரிஞ்சா அவ்வளவுதான் நான்!"

"அன்னைக்கு கூட்டிட்டுப் போயிருந்தா ஒன்னும் சொல்லிருக்க மாட்டாங்களா?" என புருவம் உயர்த்திக் கேட்டான்.

"அது அப்படியே போயிட்டீங்களேன்னு ஒரு கோவத்துல கேட்டேன்"

"ஓஹோ!"

"அக்கா எங்க?"

"வண்டில ஏறு சொல்றேன்"

"யாராவது பாத்துட்டா?"

"அதெல்லாம் போறவங்க வாரவங்க எல்லாம் பாத்துட்டு தான் இருக்காங்க. எப்படியும் நியூஸ் போயிடும். உன் அம்மாட்ட திட்டு கன்பார்ம். வண்டில வந்துட்டு அதுக்கும் சேர்த்தே வாங்கிடு"

சுற்றிச் சுற்றிப் பார்த்தாள், கோவிலுக்குள் போவோர் வருவோர் எல்லோரும் இவளைப் பார்த்துக் கொண்டு தான் போவதும் வருவதுமாக இருந்தனர்.

"ஆமா பாக்றாங்க. அம்மா அடிப்பாங்க" என்றாள் முகத்தைச் சுருக்கி அதீத பயத்துடன்.

"நா பேசிக்கிறேன் ஏறு. பேசிட்டே போலாம். எனக்கு ஒருத்தர பாக்கணும். பத்து மணிக்கு அப்பாயின்மெண்ட் குடுத்துருக்கேன், போகணும்"

"நீங்க போங்க. நா பஸ்ல வந்துப்பேன்"

"உன் அக்காவ பத்தி பேச வேணாமா? எங்க போனாங்கன்னு தெரிய வேணாமா?"

"அக்கா எங்க போனா? உங்க கூட வரலையா?"

"வண்டில ஏறு சொல்றேன். இல்லனா உன் இஷ்டம்" என ஜிப்ஸியில் ஆக்ஸிலேட்டரை உறும விட, தயங்கித் தயங்கி மெல்ல கதவைத் திறந்து ஏறி அமர்ந்தாள்.

"போச்சு எல்லாரும் பாத்துட்டாங்க உங்க வீட்லயும் எதாவது சொல்லுவாங்களா?"

"அப்படியாவது சொல்லட்டும் பவளமல்லி"

"சொன்னா பராவல்லையா?"

"ஆமா பரவால்ல"

"சரி அக்கா எங்க?"

"நம்ம வீட்ல தான்"

"உங்க வீட்லயா? அங்க ஏன் தனியா விட்டுட்டு வந்தீங்க?"

"தனியாவா? அம்மா, அத்த, மாமான்னு அத்தன பேர் இருக்காங்க, அவங்கள மீறி உன் அக்காவ ஒன்னும் காக்கா தூக்கிட்டுப் போயிடாது"

"அக்காக்கு புது ஆளுங்கன்னு பயமா இருக்கும்ல?" என்றதும் திரும்பி முறைத்தே பார்த்தான்.

"இல்ல அக்கா எங்க கூட இருந்தப்பவே அப்படித்தான் இருப்பா அதான்" என சமாளிப்பாக சொல்ல,

"அந்த லாயர்ட்ட இருந்தோ இல்ல அந்த வெளிநாட்டுகாரர்ட்ட இருந்தோ மறுபடியும் ஃபோன் வந்ததா?"

"இல்ல வரல"

"சரி பாத்துக்கலாம். அப்றம்?"

"அப்றமா?"

"உன்ன உங்கம்மா வளரவே விடலையா?"

"ஏன் நல்ல வளர்த்தி தானே நான்?"

"கட்டிக்கப் போற பையன்ட்ட பேசுற மாதிரியா பேசுற நீ?"

"அதெப்படி பேசுறது? எங்கம்மா அதெல்லாம் சொல்லித் தரல, அம்மாவா அதெல்லாம் சொல்லித் தருவாங்க?கட்டிக்கப் போறவங்க தானே சொல்லித் தரணும்?"

"உங்கம்மாவ தவிர ஸ்கூல்ல காலேஜ்லன்னு யார்டையும் பேசவே மாட்டியா நீ? சைட்டடிக்குற பையன்ட்ட எப்டி பேசணும்னு உங்களுக்குள்ள பேசுனதே இல்ல நீ?" என செல்லமாக முறைத்துக் கொண்டுக் கேட்டான்.

"ம்ம்கூம் பேசுனதில்லையே" என உதட்டைப் பிதுக்கித் தலையை ஆட்டினாள்.

"வக்கீல்ட்டயே பொய் சொல்லுவியா நீ?"

லேசாக சிரித்தவள், "சான்ஸ் அமைஞ்சா சொல்லிக்கலாம்லங்க?" என்க,

"அப்றம் ஏன்டி சான்ஸ் அமைச்சுக்கல?" என அவன் திடீரென கேட்கவும், அதிர்ந்து அமைதியாகிவிட்டாள்.

"உங்க வீட்ல அடுத்தடுத்த இழப்புன்னு தான் நா எதுவுமே பேச வரல. ஆனா நீ அதையே சான்ஸா யூஸ் பண்ணி என்ட்ட வந்துப் பேசிருக்கலாம். ஏன் செய்யல?"

"இல்லங்க"

"நொல்லங்க. போடி"

"எனக்கே என்ன செய்யன்னு தெரியலையே"

"கைக்கு எட்டுறத் தூரத்துலப் பொண்ணு இருந்தும் அந்தப் பக்கமே திரும்பிப் பாக்காம போற கஷ்டம் தெரியுமா உனக்கு?" சட்டென்று இருவருக்குள்ளும் அமைதி.

சிறிது நிமிடங்கள் அப்படியே கழிய, "நானும் தேடுனேனேங்க" என்றாள் மெதுவாக.

"எங்கிட்ட வந்து பேச சான்ஸ் இருந்தும் ஏன் வந்து பேசல?" என்றான் உடனேயே. அவன் தொழிலைக் காரணமாக வைத்து அவளால் எளிதாக அவனை நெருங்கி இருக்க முடியும் ஆனால் அவள் செய்யவில்லை என்ற விதத்தில் கேட்டான். சாதாரணமாகத் தான் கேட்டுக் கொண்டிருந்தான் அவன். அவளுக்குத் தான் அது கோவம் போலவே தெரிந்து தொலைத்தது.

'சான்ஸ்ன்ற வேர்ட்ட யூஸ் பண்ணாமலே இருந்துருக்கணுமோ?' வாய்க்குள்ளேயே முனங்கி குனிந்து கொண்டாள்.

"இங்கப் பாரு!"

நிமிர்ந்து பார்த்தாள், "இனி பேச வேண்டிய இடத்துல பேசணும். அம்மா ஆட்டுகுட்டின்னு கம்பி கட்ட கூடாது. புரியுதா?" எனக் கேட்டு முடிக்கும் முன், வேகமாக சரியென்று தலையை ஆட்டிவிட்டாள்.

"என்ன புரியுது? வயசு பையன்டி நான், சும்மா கையைக் கட்டிட்டு உட்கார்ந்துருக்க முடியலடி, அதுக்கு தான் சொல்றேன்" என்றதும் தலையைப் பின்னால் சாய்த்து கண்ணை உருட்டி முழித்தாள்.

"சூப்பர் மார்க்கெட் வந்துட்டு" எனத் தலையை மட்டும் திருப்பி வெளியே கண் காண்பித்தான்.

தானும் திரும்பிப் பார்த்தவள், "போயிட்டு வரேன்" எனக் குனிந்தே சொல்லி இறங்கிக் கொண்டாள்.

அவள் நடக்கத் துவங்கவும், "பவளமல்லி!" என அழைத்தான்.

திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தாள், "உன் அக்காட்ட நைட் பத்து மணிக்கு மேல தான் பேச முடியும். உனக்கு ஆசை இருந்தா நீயும் வந்து பேசலாம். உனக்காக கதவு திறந்தே இருக்கும்" எனக் குறும்பாக சிரித்தான்.

'பத்து மணிக்கு மேல வர சொல்ற டோன பாரு' என வாய்க்குள்ளயே தான் அவனை முறைத்துக் கொண்டு கூறினாள். அவனுக்கு எப்படியும் கேட்காது என்ற தைரியத்தில். ஆனால் அவன் உதட்டசைவை வைத்தே புரிந்து கொண்டு, சிரிப்பை அடக்கிக் கொண்டு கையை அசைத்துக் கிளம்பி விட்டான்.

 
அத்தியாயம் 13

உத்தமி அனிருத் அழைத்துச்சென்ற வேகத்தில் உண்மையிலேயே பல் துலக்கி விடத்தான் அழைத்து வந்திருக்கிறார் என்றெண்ணி, "என்னங்க நீங்க? கொஞ்சம் அழுத்தி தேய்ச்சு விரலு வச்சு முன் பல்ல விளக்குனா முடிஞ்சு போச்சு, அதுக்கு போயி இப்புடிக்கா இழுத்துட்டு வாரீக?" என்க,

"கம்முன்னு இருடி. இங்க பாரு நா சொல்லுறத கவனமா கேளு, வீட்டுக்குள்ள தானேன்னு அங்க இங்க தனியா எங்குட்டும் போவ கூடாது. முக்கியமா என்னைய விட்டும் நகர‌க் கூடாது. நா உன் கண்ணுக்குப் படுற மாதிரியே இருக்கப் பார்த்துக்கணும் புரியுதா?"

"எதுக்குங்க?" என்றார் உத்தமி புரியாமல்.

"எல்லாம் உன்னோட பாதுகாப்புக்குத்தேன் சொல்லுதேன். கவனமா இருக்கணும். ரெண்டு மூணு நாளுதேன் அப்றம் எப்புடியும் விரட்டிப்புடுவான் நீ பீரியா இருந்துக்குலாம்"

"யாரு யார விரட்டிப்புடுவா?"

"பே!" என்றவர் கையால் வாயை மூடிக்கொண்டு, "பேய்னு வேற சொல்லித் தொலைக்கக் கூடாது. அந்த தேனு புள்ளைய ஆத்தங்கரைல இருந்து நம்ம வீட்டுக்குக் கூட்டிட்டு வந்துட்டான்டி என் மருமவன்" என்றார் ரகசியமாக.

"ச்ச உளறாதீங்க. பல்லு விளக்கேம்னு கூட்டியாந்து புள்ளைக்கு அடுச்சு விடுத மாதிரி எங்கிட்டையும் கதை அடிச்சு விட பாக்கீகளோ? நா இதெல்லாம் நம்ப மாட்டேன். போய் குளிச்சுட்டு வாங்க சாப்பிடுவோம்" என அனிருத் கையில் அடித்து முகத்தைச் சுளித்து கூறிவிட்டு, "ஏலேய் மணி என்னாவுது இன்னுமு என்னத்த தூக்கங்கேக்குது உனக்கு. பள்ளிக்கூடம் போவேணாமா? எந்திரியா" என மகனைத் தட்டி எழுப்ப நகர்ந்து விட்டார்.

"என்ன நம்ம என்னத்த சொன்னாலும் நம்புற இவளே இத நம்ப மாட்டேங்குறா? அப்போ அக்கா சுத்தமா நம்பாதே!" என அனிருத் புலம்ப,

"ஏங்க நீங்க குளிக்கப் போவலியா? அப்ப நா இவன எழுப்பிக் குளிக்க வச்சுக் கிளப்பி விடுதேன் வழிய விடுங்க" என அவர் அனிருத்தை இடித்துக் கொண்டு, அவள் எழுப்பிவிட்ட மகன் அவள் தோளில் படுத்துத் தூக்கத்தைத் தொடர, அத்தோடே அவனைத் தண்ணீரில் இறக்க வேகமாக சென்றார்.

"ஏட்டி இரு. தூங்குறவன தண்ணில விடுதேமுங்க. நானும் அவனுமா குளிச்சுட்டு வாரோம் நீ போ" என்றுவிட, அடுத்த நொடி பிள்ளையைக் கை மாற்றிவிட்டு கழண்டு கொண்டார் உத்தமி.

"ரெடியாத்தான் இருந்துருந்துக்காடா உன் அம்மா" என மகனிடம் பேசியபடி, அவனை கிளப்புவதில் ஈடுபட்டார். அடுத்த அரைமணி நேரம் அதில் செல்ல, அப்பாவும் மகனும் வெளியே வர, வாசலிலேயே நின்ற தேன்பாவனியைக் கண்டுத் திடுக்கிட்டு நின்றுவிட்டார் அனிருத்.

"ப்பா வாப்பா" என மகன் அவரை இழுத்துக் கொண்டு நடக்க, பின்னயே சென்றாள் தேனு.

உத்தமி மகனுக்கு சாப்பாடை ஊட்ட, தானும் சாப்பிட அமர்ந்த அனிருத் பின்னரே தான் அமைதியாக நின்றாள் தேன்பாவனி. அவர் கண்ணுக்கு மட்டும் அது தெரிய, பயத்தில் வேக வேகமாக அள்ளி சாப்பிட, விக்கிக் கொண்டது. கண் முன் தண்ணி இருந்தும் பயத்தில் அதை எடுக்க சமையலறை ஓட, அவர் பின்னவே தேன்பாவனியும் செல்ல, கையில் எடுப்பதெல்லாம் தவறி விழுந்தது.

"என்னத்துக்குங்க எல்லாத்தையும் உருட்டிட்ருக்கீக?" என்றார் உத்தமி அதட்டி எட்டிப் பார்த்து.

"பேய்டி என் பின்னையே வருது பாரு"

"யாத்தே உங்களக் கூட்டிட்டுப் போய் மந்திரிச்சுத்தேன் விடணும் போலயே, மதினி! இங்க பாத்தீகளா?" என வெளியே யாரிடமோ பேசிக் கொண்டிருந்த படிகாசீயிடம் சொல்லச் செல்ல,

"அடியே விட்டுட்டுப் போகாத நில்லு" என உத்தமி பின்னயே செல்லப்போன அனிருத் பின்னரே தேன்பாவனியும் சென்றாள்.

வரவேற்பறையில் உலகநாயகன் படுத்துத் தூங்கிக் கொண்டிருக்க, வாசலில் படிகாசீ, உத்தமி மற்றும் அவர் மகன் மூவரும், இரண்டு பெண்கள் தீவிரமாக பேசிக் கொண்டிருப்பதை வேடிக்கைப் பார்த்து நின்றனர்.

அதில் கடுப்பான அனிருத், "எதுக்கு என் பின்னயே வார நீ?" என்றார் நின்றுத் திரும்பி தைரியத்தை வரவழைத்துக் கொண்டு.

"நீங்க வெளில எப்பப் போவீங்க?"

"நா எதுக்கு போவணும்?"

"நா வெளில போணும்ல?"

"போணும்னா போ. பறந்தே போக முடியும்ல உங்களுக்குலாம்? பைக்ல கொண்டு விடணுமோ உன்ன?"

"ஏய்! வீட்டத் தாண்ட முடியல எனக்கு"

"ஏன் முடியல?"

"அதான் தெரியல‌‌. நீங்கப் போகும் போது வர முடியுதான்னு பாக்கணும்.‌ வெளிலப் போங்க"

"உன்னக் கூட்டிட்டு வெளில, நா தனியா போகவா? என்னம்மா நினைச்சுட்ருக்க நீ? மக முறையாவே இருந்தாலும் பேய் மகளலாம் என் வண்டில ஏத்திட்டுப் போமாட்டேனாக்கும்"

"வெளில போ" அரட்டவே செய்தாள் தேன்பாவனி.

"என்ன நீ மிரட்டுர?"

"இப்ப போவியா மாட்டியா?"

"என் வீட்ல நின்னுட்டு என்னவே மிரட்டுவியா நீ? என் அக்காட்ட சொன்னா என்னாகும் தெரியுமா? மாமாவ எழுப்பி விட்ருவேன் பாத்துக்கோ"

அதில் தேன்பாவனிக்கு கோவம் வர, சாப்பாட்டு மேசையில் இருந்த அத்தனையையும் கீழே விழச் செய்தாள். காலை உணவு மற்றவர்கள் உண்டது போக மிச்சமிருந்த அனைத்தும் சிந்திச் சிதறியது. அந்த சத்தத்தில் அனிருத் அதிர்ந்து வாயைப் பிளந்து நின்று விட, வெளியே பெண்கள் மும்மரமான பேச்சில் இந்த சத்தத்தையும் கண்டு கொள்ளவில்லை. அனிருத் மகன் மட்டுமே வந்துப் பார்த்து விட்டு அதை கூற மறுபடியும் வெளியே ஓடினான். அவனையும் கண்டு கொள்ளவில்லை அவர்கள். உலகநாயகன் இதற்கும் அசையாமல் தூக்கத்தில் இருக்க, "வெளிய போ!" என இப்போது ஆக்ரோஷம் கொண்டுக் கத்தினாள் தேன்பாவனி.

அடித்துப் பிடித்து வெளியே ஓடினார் அனிருத். வாசலில் நின்ற பெண்களையும் கடந்து திரும்பியே பார்க்காத ஓட்டம், அனைவரும் அவரை விசித்திரமாகப் பார்ப்பதையும் கண்டு கொள்ளாமல் ஓடி, தேன்பாவனி வீட்டை அடைந்து தான் நின்றார். ஆனால் அங்கு வாசலையே தாண்ட முடியாமல் தேங்கி நின்றிருந்தாள் தேன்பாவனி.

"கவனமா இருக்கா. நா என் கண்ணால பார்த்தேன். இல்லனா பேசி கல்யாணத்த முடிச்சுவிடு‌. நீங்க முதல்லயே பார்த்த புள்ள தான அது? பிக்கல் பிடுங்கல்னு எதுவும் கிடையாது. நீ நில்லுனா நிக்கும் உக்காருன்னா உக்காரும். இந்த காலத்துல அப்புடி மருமகலாம் அமையாது. மூத்த மருமகள பாத்தீல உன் வீடு தங்குதாளா? ஒருநா ஒரு வாய் சோறு அவ கையால பரிமாறி உண்டுருப்பியா நீயி? ஆனா அந்த பவளமல்லி புள்ள ரொம்ப சாது. உன் கைக்குள்ள இருக்கும். பாத்துகிடு" வாசலில் நின்றப் பெண்களில் ஒருவர் பேசிக் கொண்டிருப்பதை தேன்பாவனியும் கேட்டாள்.

"நானும் அதத்தேன் சொல்லுதேன். வேந்தன் தம்பி பிடிச்சப் பிள்ளன்னு அதத்தேன் கைக் காண்பிக்குது. அது மனசலாம் மாத்தவே முடியாது. கட்டி வச்சுட்டு பேரன் பேத்திய வளக்குறத விட்டுட்டு என்னத்துக்கு வீம்புங்கேன்" என உத்தமியும் பேச்சில் இணைந்திருந்தார்.

உள்ளே அனிருத் உளறுவதைச் சொல்ல வந்தவருக்கு, காலையில் வேந்தன் ஜிப்ஸியில் பவளமல்லி ஏறிச் சென்ற விஷயத்தைக் கதையாக சொல்லிக் கொண்டிருந்த அடுத்த வீட்டுப் பெண்களைக் கண்டதும் புருஷனையும் அவரைத் துரத்தும் பேயையும் கிடப்பில் போட்டுவிட்டு, "என்ன அத்த சொல்லுதீக?" என கதையை முதலிலிருந்து திரும்பவும் கேட்டு, இப்போது கருத்து பரிமாற்றம் நடந்து கொண்டிருக்கிறது.

அப்போது அவர்களைக் கடந்து வேகமாக ஓடிய அனிருத்தைக் கண்டுவிட்டு, "இவனுக்கு என்னடி? என்னத்துக்கு இந்த ஓட்டம் ஓடுதியான்?" என்றார் படிகாசீ.

"உங்க தம்பி அன்னைக்கு ஆத்துக்குள்ள வண்டிய இறக்குனதுல இருந்தே சரியில்லங்கேன். எந்நேரமு அந்த இறந்தப் போன தேனு புள்ளையவே நினைப்புல வச்சு பேயி பேயின்னு புலம்பிட்டுக் கிடக்காக" என்றார் மெதுவாக, பக்கத்தில் நிற்கும் பெண்கள் காதில் விழுந்துவிடாதவாறு.

"என்னத்த உங்களுக்குள்ள பேசிகிடுதீக? நாங்க நல்லதுக்குதேன் சொல்லுதோம். உங்க மகன் வக்கீலு வேற, அவுகளா கல்யாண கட்டிட்டு வந்து நின்னுட்டா யாருக்கு நட்டம்?" என்றார் மற்ற பெண்.

"ம்ச் சும்மா என்னத்தையாவது பேசி பயத்த உண்டாக்காதீக. செய்றவன் எதுக்கு இம்புட்டு நாளு காத்துகிடக்கணும்? அதெல்லாம் என் புள்ள என்னைய கேக்காம செய்ய‌ மாட்டான்"

"ம்க்கும் நம்பிட்டே இருங்க. இன்னைக்கு உங்கட்ட கேட்டுதேன் வண்டில ஏத்திட்டு போனாகளாக்கும்?"

"தெரிஞ்சப் புள்ளன்னு ஏத்திருப்பானோ?"

"கல்யாணம் பேசி நின்னுருக்கு. அதுக்கு அப்புறம் யாரையும் பொண்ணு பாக்கவே வரலன்னு சொல்லிருச்சு தம்பி. மறுபடியும் அந்த புள்ளைட்ட பழக சான்ஸ் கிடைச்சுருக்குன்னு காருல ஏத்திருந்தா?" என்றார் உத்தமியும்.

"ஏட்டி ஆளாளுக்குக் குழப்பாதீக. அந்த வீட்டுப் பொண்ணு இன்னுமு ஆத்தங்கரைல நிக்குதுன்னு பேச்சிருக்குல்ல? ஒரு குடும்பத்தையே அழிக்குற அளவுக்கு வெறியோட இருந்துருக்கு அந்தப் பொண்ணு. அந்தக் குடும்பத்துல என்னால சம்பந்தம் வச்சுக்க முடியும்னே தோணல"

"என்னக்கா நீயி. சாமி மாமாவ வச்சு பூசையப் போட்டு அந்தப் புள்ளைக்கு ஒரு சாந்தி கிடைக்க செஞ்சுட்டு, கல்யாண வேலைய பாப்பியா சும்மா நசநசனுட்டு இருக்க. நம்ம ஊருக்கும் இதனால நல்லது நடக்கும்ல?"

"ஏன் இதுக்கு முன்ன என்னாலமோ செஞ்சு பாத்தும் தான் விரட்ட முடியலையே. சாமி மாமாமவே வரமாட்டேன்னு சொல்லிருச்சே?"

"வக்கீலு தம்பிக்காகன்னு சொல்லு கண்டிப்பா வருவாக. அதும்போக அதுவே பழிவாங்கணும்னு தான் பேயா சுத்துச்சு. இப்ப தான் எல்லாரையும் முடிச்சு விட்ருச்சே. அவனுங்க வீட்டுக்குள்ள இந்தப் புள்ளைக்கு என்ன கொடுமை பண்ணாய்ங்களோ அதான் ஆத்மா நிம்மதியா போய் சேராம இங்கேயே வெறியா நின்னு எல்லா கணக்கையும் முடிச்சு விட்ருச்சு. இப்ப கடவுள்ட்ட போய் சேர முடியாம தான் தவிச்சுட்டு இருக்கும். நீ சாமி மாமாட்ட பேசிப் பாரு" என்றனர்.

படிகாசீக்கு சொல்ல முடியாத வேறொரு பிரச்சினையும் அந்த வீட்டுடன் இருந்தது. அதனால் அவருக்கு இந்த யோசனையே சுத்தமாகப் பிடிக்கவில்லை. ஆனால் மகன் அந்தப் பெண்ணைச் சுற்றி வளைக்கவே தான் அனைத்தும் செய்கிறான் என்கையில் பயமாகவும் இருந்தது.

"ரொம்ப யோசிக்காதக்கா பையனுக்கும் வயசு போகுது ஞாபகத்துல வச்சுக்கோ"

"அந்த பிள்ளையும் காத்துகிடக்கு? செல்லம்மா மதினியும் பாவந்தானே? ஒத்த பொம்பளையா எம்புட்டு பாடு பாக்குது? அது முகத்துக்காக யோசிச்சு பாரு, ரெண்டாவது புள்ளையாவது நல்லா பொழைப்பு பொழைக்காளேன்னு நிம்மதி அதுக்கு கிடைக்கும்ல?"

"எல்லாரையும் யோசிச்சா என்னைய யாரு யோசிக்க இருக்கா?" என்றார் படிகாசீ.

"ஏலே நீ ஸ்கூலுக்கு போகாம இங்கனயேவா நிக்க?" என அப்போது தான் மகனைக் கண்டுவிட்டு அலறினார் உத்தமி.

"இவனக் கொண்டு விடாம அய்யாவு எங்க ஓடினான்டி?"

"தெரியல மதினி. நானே ஓரெட்டு போய் விட்டுட்டு ஓடியாறேன். மிஸ்ஸு வேற வையும் லேட்டாகி போச்சுன்னு" என மதிய சாப்பாடை எடுக்க உள்ளே வந்தவர்,

"ஆத்தே! மதினி இங்குட்டு வந்து பாருங்க. உங்க தம்பி ஏன் அந்த ஓட்டம் ஓடுனாகன்னு இப்பதேன் புரியுது" என்ற உத்தமியின் குரலில்,

"என்னட்டி" என படிகாசீ உள்ளே திரும்ப,

"சரிக்கா நீ என்ன பண்ணலாம்னு யோசி, தம்பிட்டையும் வந்ததும் பேச்சுக் குடுத்துப் பாரு" என சொல்லிவிட்டு அவர்கள் கிளம்பி விட, இவர் உள்ளே வந்து கொட்டிக் கிடந்த உணவைக் கண்டு நெஞ்சில் கைவைத்து அதிர்ந்து நின்றார்.

"என்னடி செஞ்சுருக்கான்?"

"அதான தெரியல. சரி இருக்கட்டும் நீங்க மதியானதுக்கு ஆகுறத பாருங்க, நா இவன விட்டுட்டு வந்து இத கை பாக்கேன்" என்ற உத்தமி மகனையும் அவன் பள்ளிக்கூடப் பையையும் தூக்கிக் கொண்டு கிளம்பி விட்டார்.

"தலையில் இடி விழுந்த மனுஷன். ச்சை இங்க இம்புட்டு நடக்கு தூக்கம் எப்புடித்தான் வருதோ தெரியல" என உலகநாயகனை திட்டியவாறு, கீழே விழுந்து கிடந்த பாத்திரங்களை ஒதுக்கி எடுத்தார் படிகாசீ.

அங்கு அனிருத், "தண்ணி குடு மதினி" என இளைக்க இளைக்க ஓடி வந்து நின்றதைக் கண்டுப் பதறி, "என்னாச்சு? ஏன் இப்புடி ஓடியாந்துருக்கீக? தேனு யாரையும் எதுவும் செஞ்சுப் போட்டாளா?" என செல்லம்மாள் கேட்கையிலேயே, வாசலில் மூன்று பெண்கள் வந்து நின்றனர்.

"என்ன செல்லம்மா? மகள யாரு கூட வேணா எப்டி வேணா போன்னு அனுப்பி விட ஆரம்பிச்சுட்டியா? முறையா எல்லாம் நடக்கணும்னு தெரியாதா?" என கேட்டுக் கொண்டே தான் உள்ளே வந்தனர்.

"அத கேட்கத்தான் அந்த வீட்டு அய்யாவும் வந்துருக்க போல?" என்றார் வயதில் மூத்தவர்.

"நா வந்தது இருக்கட்டும் நீங்க என்னத்த குதர்கமா பேசிட்டு வாரீக?" என்றார் அனிருத்.

"உன் மருமகன் கூட காருல ஏறி போறா இந்த வீட்டு மல்லி. இவ சொல்ல வேணாமா? வயசு புள்ள இப்புடி யார் கூட வேணாலும் கிளம்பிப் போலாமா? ஊருக்குள்ள ஏற்கனவே செல்லம்மாக்கு மரியாதை கிடையாது. இதுல பொண்ணையும் இப்படின்னு பேச்சு வந்தா நல்லாவா இருக்கும்?" என்றாள் வந்தவர்களில் சுதா என்ற பெண்.

"ஏம்மா உன் வயசென்ன அந்த மதினி வயசென்ன? நீ வச்ச பேரு கணக்கா கூப்பிடுத?" என அனிருத் அதட்ட,

"எனக்கு அப்படிதான் பேச வரும்"

"நீ பேசுன வர போதும். நா பொண்ணு பாக்க வர போற செய்தியத்தேன் சொல்லிட்டு போலாம்னு வந்தேன். அதுக்குள்ள முந்திட்டு வந்துட்டாக பக்குவம் பேச. போமா போய் உன் வீட்டுப் பொழைப்ப பாரு பே. இது எங்க வீட்டு விவகாரம் நாங்க பாத்துப் பேசிகிடுதோம்"

"என்னாச்சு சுதா? நீ என்ன பேசுற? நீங்க என்ன சொல்லுதீக தம்பி?" என இருவரையும் மலங்க மலங்க பார்த்தபடி தான் கேட்டார் செல்லம்மாள். அவருக்கு இன்னுமே நினைப்பெல்லாம் மூத்த மகளை ஊருக்குள் அழைத்து வந்ததில் தான் இருந்தது.

"உன் மக ஊருக்கு வெளில நாகாத்தம்மன் கோவில்ல நின்னு இதோ இவர் மருமகன் அந்த வக்கீல் தம்பி வரவும் அவர்கூட கார்ல ஏறி போயிட்டா. நாங்களாம் பாக்றோம்னு தெரிஞ்சும் திமிரா ஏறி போயிட்டா. அப்ப உனக்கு தெரிஞ்சுதான் செய்யுதா போலன்னு கேட்க வந்தா, நீ என்ன இப்புடி முழிக்குற?" என்றார் அந்த சுதாவின் அம்மாவாக உடன் நின்றவர்.

'கார்ல தேனு இருந்துருப்பாளோ? அதனால இவ ஏறி போயிருப்பாளோ? எங்க போனாங்க? தேனுவ சாந்தி செய்ய எங்கையும் போய்ட்டாங்களோ? ஐயோ அம்மாடி தேனு!' அவர் அவ்வாறு யோசித்து நிற்க,

"கல்யாணம் பண்ணிக்கப் போற பொண்ணும் மாப்ளையும் தனியா போனா என்ன தப்பு. கட்டிக்கப் போற பொண்ணு வேலைக்குப் போக நிக்குதேன்னு காருல ஏத்திட்டு போயிருப்பான், இத ஒரு பேச்சுன்னு அங்க நாலு பேரு இங்க நாலு பேரு கிளம்பி வந்துட்டீங்களே! காலங்காத்தால பாக்குறதுக்கு வேற வேலை வெட்டி இல்லையா உங்களுக்குலாம்?" என்றார் சாவகாசமாக அனிருத்.

"ஊருக்கு சொல்லிட்டு என்னவும் செய்யிங்க. இல்லனா நாங்க பேசத்தான் செய்வோம்" என்றாள் சுதா.

 
அத்தியாயம் 14

"சேரி சேரி இனி எல்லாத்தையும் உங்க வீட்டுக் கதவைத் தட்டி சொல்லிட்டே செய்றோம், இப்ப கிளம்புங்க" என்றதும் அவர்களுக்குள் ஏதோ முனங்கி கிளம்பிவிட்டனர்.

"நீங்க என்ன தம்பி பேசுதீக. சும்மானாலும் எதையாவது சொல்லி வைக்காதீக பிரச்சினை ஆகிபோவும்"

"என்னத்த சும்மா சொல்லுதேன் நானு. உங்க மகள என் மருமகனுக்கு கட்டித் தர மாட்டீங்களா மதினி?" என்றார் உடனேயே.

"அதெல்லாம் நடக்கவே நடக்காது. இப்ப நீங்க எதுக்கு வந்தீங்க? என் பொண்ண அந்த வக்கீல் தம்பி எங்கக் கூட்டிட்டுப் போயிருக்காக?"

"அவங்க எங்க போனாங்கன்னுலாம் எனக்கு தெரியாது. உங்க பெரிய பொண்ணு என்னைய வீட்டுக்குள்ள இருக்க விட மாட்டேங்குது. அம்மா வீட்டுக்குப் போகணும் நீ வெளில போனாலே ஆச்சுன்னு விரட்டி விட்டுட்டு, அங்க எடுத்த ஓட்டம் இங்கன வந்துதேன் நிக்கேன்"

"எங்க அவள? ஏன் நீங்க வந்தா தான் வர‌முடியுமா?"

"அந்த கருமம் தான புரிஞ்சு தொலைய மாட்டேங்குது. என்னைய விரட்டி விட்டுட்டு பாருங்க உங்க மக பேய காணும், தெரு தெரியாம எங்கையும் மாறி போயிருச்சோ என்னவோ தெரியல"

"என்ன தம்பி. மூத்தவளையும் எங்கன்னு தெரியலங்கீக, சின்னவளையும் உங்க மருமகன் எங்க கூட்டிப் போனாருன்னு தெரியலங்கீக. எதுக்கு என்னைய போட்டு இப்புடி படுத்துதீக" என்றவர் புலம்பிக் கொண்டே வீட்டினுள் சென்று, கைப்பேசியை எடுத்துக் கொண்டு வெளியே வந்தார்.

அனிருத் முன் திண்ணையில் காலை நீட்டி ஆட்டிக்கொண்டு, பின் சுவற்றில் சாய்ந்து வெகு சொகுசாக அமர்ந்திருந்தார். பேயை எங்கோ சுற்ற விட்டுவிட்டோம் என்ற நிம்மதி அவருக்கு. முந்தைய தினம் போல் தெரு முனையிலேயே நின்றாலும் நிற்கும் என்ற தெனாவெட்டில் அமர்ந்திருந்தார்.

இதற்குள் மகளுக்கு அழைத்திருந்த செல்லம்மாள், அவள் எடுத்ததுமே, "யார் கூட கார்ல போன?" என்றதில் அந்தப்பக்கம் இருந்தவளுக்கு உதறல் எடுத்தது.

"ம்மா!"

"எல்லாரும் பாக்றாங்கன்னு தெரிஞ்சும் காருல ஏறி போனியா?"

"ம்மா அது அக்கா"

"ம்ம் உன் அக்கா ஏறிப் போன்னு சொன்னாளா? இந்த அம்மாவால காரியம் ஆகாதுன்னு உனக்கு நீயே கல்யாணம் பண்ணிக்கலாம்னு முடிவு பண்ணிட்ட?"

"இல்லம்மா. அக்காவ பத்திக் கேட்க தான் நின்னேன். கடைல இறக்கி விடுறேன்னு சொன்னாங்கம்மா அதனால தான் ஏறி வந்தேன்"

"ஓ! என்ட்ட கேட்காம நீயே எல்லா முடிவையும் எடுக்க ஆரம்பிச்சுட்ட? அப்ப இனி நா ஒருத்தி உனக்கு தேவையில்லாத ஒன்னு?"

"ம்மா நா அப்படி சொல்லுவேணாம்மா? அக்கா அவங்க வீட்ல இருக்கா அதப்பத்தி கேட்கவும் நம்ம வீட்டுக்கு வர முடியாத காரணத்த கேட்கவும் தான்மா ஏறுனேன்"

"அத காரணமாக்கி உன் கைகூடா காதல கல்யாணத்துல முடிச்சுக்க திட்டம் போட்ருக்க நீ"

"என்னம்மா?"

"வீட்டுக்கு வருவியா இல்ல அப்படியே போயிடுற திட்டமும் இருக்கா?"

"ம்மா!"

"உன்ன நம்புனேன்ல எனக்கு நல்லா வேணும்டி" என போனைத் திண்ணையில் போட்டுவிட்டு அமர,

"இருந்த கோவத்தலாம் இறக்கிட்டீக போல? இனி நிதானமா யோசிச்சு பரிசம் போட என்ன தேதி குறிக்கலாம்னு சொல்லுங்க. என் நம்பர பதிஞ்சு தந்துட்டுப் போறேன், எனக்கே கூப்பிட்டு சொல்லுங்க, எல்லாத்தையும் நா பாத்துகிடுதேன். இந்த தடவ ஒரு தடையும் வராது" என்றவர் அவர் பொத்தென்று போட்ட கைப்பேசியை எடுத்து அவர் எண்ணையும் பதிந்து கொடுத்து, எழுந்து கொண்டார், செல்லம்மாள் எதுவுமே பேசவில்லை, அவருக்குள் பல யோசனைகள் முட்டி மோதிக் கொண்டிருந்தன.

அங்கு நந்தனம் சூப்பர் மார்க்கெட்டில் அமர்ந்திருந்தவளுக்கு, அம்மாவின் கோவத்தில் உண்மையில் வெடவெடத்தது. அவள் அவரிடம் சொல்லாமல் இல்லை, இதற்கு முன் பலமுறை பலவாறு வேந்தனை தான் பிடித்திருக்கிறது என காண்பித்திருக்கிறாள், அப்போதெல்லாம் உடனடி பதிலாக, 'அதுக்குலாம் வாய்ப்பில்ல மனசுல நினைப்பிருந்தாலும் அழிச்சுரு' என்றுவிடுவார்.

இனி பொறுமையாக இருக்கவே மாட்டார் என்பது சர்வ நிச்சயம். ஏதாவது செய்து திடீர் மாப்பிள்ளை என யாரையும் பிடித்துவிடுவாரோ என்றெல்லாம் பயந்து கொண்டு அமர்ந்திருந்தவள், உணவு இடைவேளைக்காக காத்திருந்தாள்.

ஒரு மணி ஆகவும், சாப்பிட செல்வதாக கூறிவிட்டு கைப்பேசியை எடுத்துக் கொண்டு சூப்பர் மார்க்கெட்டின் பின்னால் இருக்கும் பொது கழிப்பறை பக்கம் ஓடிவந்தவள், முதலில் அழைத்தது வேந்தனுக்குத்தான்.

அவனும் ஆளுங்கட்சி எம்.எல்.ஏவின் மச்சானுக்கு ஒரு இடம் முடிப்பதில் பிரச்சினையாக இருக்க அதைப்பற்றிய பேச்சுவார்த்தைக்காக காலையில் பத்து மணிக்கு உள்ளேச் சென்றவன் அவர்களுடனே உணவை முடித்துக் கொண்டு அப்போது தான் வெளியே வந்தான்.

புதிய எண்ணிலிருந்து அழைப்பு வரவும் அதை ஏற்றவாறே ஜிப்ஸியில் ஏறி அமர்ந்து, வண்டியை உயிர்பித்தான்.

"ஹலோ கரிகாலவேந்தன் ஹியர்!"

"என்னங்க!"

"வாவ் பவளமல்லி!"

"அம்மா கால் பண்ணி ஒரே திட்டு. வீட்டுக்கு வருவியா அப்படியே போயிடுவியான்னு கேட்டுட்டாங்க. நா வரமாட்டேன்னு தான சொன்னேன். இப்ப பாருங்க இதையே காரணமாக்கி அவசரமா மாப்ள பாப்பாங்க"

"எதுக்கு அவசரமா பாக்கணும். நா பேசிக்றேன் பயப்டாத"

"கேட்க மாட்டாங்கங்க. நா இதுக்கு முன்ன பல தடவ சொல்லிருக்கேன். முடியாதுன்னா முடியாதுன்னு பேச்ச முடிச்சுப்பாங்க"

"ஏன் நாங்க என்ன பண்ணோம்? அன்னைக்கு பிரச்சினை பண்ணது கூட உன் அக்கா ஃபேமிலி தான?"

"ஆமா ஆனா அதுக்கு அப்புறம் என்னமோ நடந்துருக்குங்க. அது என்னன்னு தெரியல, ஆனா அதனால் மட்டுந்தான் உங்க குடும்பம் வேணாம்னு முடிவா இருக்காங்க"

"அப்படி என்ன நடந்துருக்கும் எனக்கே தெரியாம?"

"ம்ச் தெரியலங்க இப்ப அம்மாவ எப்டி சமாளிக்க?"

"ஏன் சமாளிக்கணும்? இந்த பிரச்சனையவே பெருசாக்கி கல்யாணம் பண்ணிப்போம்"

"கல்யாணமா?"

"என்ன ஷாக் ஆகுற நீ?"

"அக்கா இப்படி இருக்கா, அப்றம் எப்படி கல்யாணம்?"

"ஏன் உன் அக்கா ஆசைப்பட்ட கல்யாணம் தான? நின்னு நடத்திவச்சுட்டு போகட்டுமே"

"அம்மாவ எப்படிங்க ஒத்துக்க வைக்குறது?"

"என் அம்மாவ விட்டு பேச வைக்கலாம்"

"ஓ!" என்றவளிடம் இன்னும் தெளிவில்லை என உணர்ந்தவன், "எங்க இருக்க?" என்றான்.

"கடைல தான்"

"உன் கடைக்குள்ள தான் நானும் நிக்றேன். உன்ன காணுமே?" என்றவன் நந்தனம் சூப்பர் மார்க்கெட்டில் பில் செக்ஷன் பக்கத்தில் இருக்கும் ஸ்டாண்டில், வரிசையாக இருந்த மெல்லும் கோந்துகளில்(சுவிங்கம்) கவனமாக இருந்தான்.

அதில் ஒன்று இரண்டு பாக்கெட்டுகளை எடுத்து பில் போட அமர்ந்திருந்த பெண்ணிடம் நீட்ட, "என்ன வாங்க வந்தீங்க?" என பின்னால் வந்து நின்றவளின் மூச்சு அவன் பிடரியில் பட்டு அனல் காற்றாக சிதறி தெறித்தது.

"லஞ்ச் டைமா உனக்கு?" என்றான் தலையை மட்டும் திருப்பி.

"சாப்டீங்களாக்கா அதுக்குள்ள?" என்றாள் பில்லில் இருந்த பெண்ணும் எழுந்து.

"இல்ல மகி, நீ இன்னும் கொஞ்ச நேரம் பாரு, நா சாப்ட்டு ஓடி வந்துடுறேன்" என அவசரமாக சொன்னவள், இவனிடம் புருவம் உயர்த்த.

"சரிக்கா" என மீண்டும் அமர்ந்து அந்த பெண் வேலையைப் பார்க்க,

"வேற எதுவும் வாங்கணுமா உங்களுக்கு?" என்றாள் அவனிடம்.

"இல்ல, உன் பாக்ஸ் எடுத்துட்டு வா சாப்ட போலாம்"

"எங்க போய் சாப்ட? அங்கலாம் வெளி ஆட்கள விடமாட்டாங்க. நா பத்து நிமிஷத்துல இங்க வந்து உட்காரணும்"

"சாப்ட்டு வந்துடலாம்டி வேணும்னா மேனேஜர்ட்ட பெர்மிஷன் கேட்டு வா"

"எங்கப் போறோம்னு சொல்ல?"

"அவசரமா ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணிட்டு வந்துடுறேன்னு வேணா சொல்லிட்டு வாயேன்" நக்கலாக சொல்ல,

"ஹான் அதெப்படி நம்புவாங்க?" என்றாள் புருவம் சுருக்கி.

"வக்கீல் கூப்பிடுறாரு ஒன்னவர் அவர்கூட போய்ட்டு வந்துடுறேன்னு சொல்லிட்டு வரியா நம்பிடுவாங்க"

"ச்சி அசிங்கமா இருக்கும் அப்படி கேட்டா" என கண்ணை உருட்டி முறைத்தாள்.

"வக்கீல் சார் என்ன இவ்வளவு தூரம்?" என கேட்டுக் கொண்டே வந்தார் நந்தனத்தின் மேனேஜர் ஜோசப்.

"எப்டி இருக்கீங்க ஜோசப் சார்?"

"வீடு பிரச்சினை முடிஞ்சதுல நிம்மதியா இருக்கேன். ரொம்ப நன்றிப்பா வருஷ கணக்குல இழுக்குறத சுலுவா முடிச்சு குடுத்து என் பொண்ணையும் வாழ வச்சுட்டீங்க"

"நீங்க ஃபீஸ் குடுத்தீங்க நா வேலை பார்த்தேன் அவ்வளவு தான் ஜோசப் சார். பார்க்கும் போதுலாம் இதையே சொல்லாம புதுசா ரெண்டு கேஸ் புடிச்சு குடுங்க போதும்" என்க,

"வக்கீல்ட்ட பேசிட முடியுமா? மல்லிய தெரியும்னு நின்னு பேசிட்ருக்கீங்களா?" என்றார். ஓரே ஊர்க்காரர்கள் என்பது அறிந்ததால் அவ்வாறு கேட்டார்.

"ஆமா சார். அவங்க அக்கா இஷ்யூ கேஸ்ல இருக்கு. அது சம்பந்தமா பேசணும் நா கூட்டிட்டுப் போய்ட்டு வரட்டுமா"

"வயசு பொண்ணுப்பா அவங்க அம்மாட்ட ஒரு வார்த்தை சொல்லிட்டீங்களா?"

"எனக்கு அவங்கப் பொண்ணையே குடுக்க நினைச்சவங்க சார், எப்டி நம்பாம போவாங்க"

"ஹா ஹா அப்படி நேரடியாவே சொல்லிருக்லாம் நீங்க. நல்ல அமைதியான பொண்ணு பத்ரமா வச்சுக்கோங்க வக்கீல் சார்" என்றார் அவர், கையைப் பிசைந்து கொண்டு இருவரையும் பேக்கப் பேக்க என பார்த்து நின்றாள் பவளமல்லி.

"லஞ்ச் டைம் முடியிறதுக்குள்ள கூட்டிட்டு வந்து விட்டுறேன் ஜோசப் சார். புது கேஸ் எதுவும் வந்தா மறக்காம ரெஃபர் பண்ணிடுங்க" என விடைபெற்று கிளம்பி விட,

"வந்துடுறேன் சார்" என அவரிடம் மரியாதையாக கூறி விறுவிறுவென அவன் பின்னால் நடந்தவள், "நில்லுங்க சாப்பாடு பாக்ஸ் பின்னாடி இருக்கு எடுத்துட்டு வரேன்" என சொல்லிவிட்டு ஓடினாள்.

அவள் வரும் முன் ஜிப்ஸியை எடுத்து வந்து வாசலுக்கு நேராக நின்றான், கடை வாசலில் நின்று மேனேஜரும், உள்ளிருந்து மற்ற வேலை ஆட்களும் மொத்தமாக பார்த்திருக்க, "இந்த வக்கீலு வேணும்னே செய்றாரா?" என மனதிற்குள் புலம்பியவாறு வந்து ஏறி கொண்டாள்.

"வெஜ்ஜா நான் வெஜ்ஜா? என்ன விரும்பி சாப்பிடுவ?" என்றான் ஜிப்ஸியை நகர்த்தியவாறு.

"அம்மா குடுத்துவிட்ருக்காங்க அதே போதும்"

"சரிடி கூட வச்சு சாப்பிட ஃப்ரை ஐடம், சிக்கன், ஃபிஷ், இல்லனா காலிஃப்ளவர் ஃப்ரை இப்படி வாங்கிக்கலாம். சொல்லு என்ன வேணும்?"

"ஒன்னும் வேணாம். சம்பந்தம் பேசாம கை நனைக்கக் கூடாது"

திரும்பி முறைத்தவன், "கை தான நனைக்கக் கூடாது? நேரா வாய நனைச்சுக்குலாமா?" எனக் கேட்க,
ஓரக் கண்ணால் மட்டும் அவனை நிமிர்ந்து பார்த்தவள், படக்கென்று அந்தப்பக்கம் திரும்பி உட்கார்ந்து கொண்டாள், "நீ புரிஞ்சுட்ட அர்த்தமே தான். இங்க திரும்புடி" என அதட்டவும்,

"வஞ்சரம் மீன் வறுத்தது வாங்கி தாங்க. புளிக்குழம்புக்கு அதான் நல்லாருக்கும்" என்றுவிட்டாள்.

குறும்பு சிரிப்புடன், அவன் வழக்கமாக சாப்பிடும் கடையில் காரை நிறுத்தி அவள் கேட்டதை வாங்கி வந்து காரில் ஏற, அந்த மீன் வறுவல் வாடையை ஆழ்ந்து சுவாசித்தாள் பவளமல்லி. கண்கள் கூட கலங்கும் போலிருந்தது. எப்போதோ சிறுவயதில் அவள் அப்பா வாங்கி வந்து ஊட்டிவிட்டது ஞாபகத்தில் வந்துசென்றது.
மலையடிவாரத்தில் இருக்கும் பார்க் போன்ற இடத்திற்கு அழைத்து வந்திருந்தான். மர நிழலில் நிறைய குடும்பங்கள் அமர்ந்து உணவு பரிமாறி உண்டு கொண்டிருந்தனர். பிள்ளைகள் அங்கிருந்த விளையாட்டு பொருட்களில் விளையாடும் மும்மரத்தில் இருந்தனர். பசுமையாக கண்ணுக்கு குளிர்ச்சியாக இருந்தது அந்த இடம். இவர்களும் ஒரு மரத்தடியில் கல்லாலான பெஞ்ச்சில் வந்தமர்ந்தனர்.

"சாப்டு" என்றவன் ஃபோனில் எதையோ பார்த்தவாறு அமர, சம்மணமிட்டு அவனை பார்த்தவாறு அமர்ந்தவள், அம்மா கட்டி கொடுத்த சாப்பாடு டப்பாவைத் திறந்து கொண்டு, அவன் வாங்கி தந்த பொறித்த மீன் பார்சலையும் பிரித்து இருவருக்கும் நடுவில் வைத்தாள். கையில் கொஞ்சம் சாதமும் கொஞ்சம் மீனும் எடுத்து டிபன் பாக்ஸ் மூடியில் வைத்து கொஞ்சம் தயங்கியே அவனிடம் நீட்ட, நிமிர்ந்து பார்த்தான்.

"பாக்க வச்சு சாப்பிட ஒருமாதிரி இருக்கும். ஒரு வாய் மட்டும் வாங்கிக்றீங்களா ப்ளீஸ்" என கேட்பவளை ஏகத்துக்கும் பிடித்து தொலைத்தது.

"எனக்கு இவ்வளவுலாம் வேணாம். வயிறு ஃபுல் அல்ரெடி. ஒரு வாய் மட்டும் உன் கையால குடு வேணா வாங்கிக்றேன். கையை நனைக்க மாட்டேன் நானும். வாய தான் நீ நனைக்கணும் உனக்கு ஓகேனா எனக்கும் ஓகே" என்றான் சிரிப்புடன்.

மூக்கைச் சுருக்கி முறைத்தவள், சுற்றி ஒருமுறை பார்த்துவிட்டு, "ஒருக்கா மட்டும் தான்" என பேரம் பேச,

"ம்ம்" என்றான் தலையைச் சம்மதமாக அசைத்து குறும்புடன். கொஞ்சம் தயக்கமாக இருந்தாலும் படக்கென்று ஒரு வாயை ஒன்றரை கண்ணை மூடிக் கொண்டு குடுத்து விட்டு, திரும்பி கொண்டாள்.

அதன்பிறகு கண்ணுக்கு முன்னிருந்த பிள்ளைகள் விளையாட்டை வேடிக்கை பார்த்தவாறு பிடித்த சாப்பாட்டை அவள் ரசித்து சாப்பிட, சேலையில் சம்மணமிட்டு, நீளக்கூந்தலை ஒருபக்கம் வழிய விட்டு காதோரம் ஓரிரு முடிகள் அவள் கன்னத்தை உரசிக் கொண்டிருக்க, பிங்க் நிற உதடுகள் அசைந்து சாப்பிடும் அழகை, தலையைத் தாங்கியவாறு கையால் முட்டுகொடுத்து சாய்ந்தமர்ந்து அவளில் ஒரு பார்வையும் போனில் ஒரு பார்வையுமாக ரகசியமாக ரசித்திருந்தான் அந்த வக்கீல்.

 
அத்தியாயம் 15

பவளமல்லி உண்டு முடிக்கும் வரை அவனும் எதுவும் பேசவில்லை, அவளும் அவ்வப்போது அவனைத் திரும்பிப் பார்த்தாலும் அவன் பார்த்ததும் சாப்பாட்டிற்குள் குனிந்து கொள்ள என இருந்தாள். அவள் உணவை முடித்து அங்கிருந்த தண்ணீர் பைப்பிலேயே கையைக் கழுவி வர, ஜிப்ஸியிலிருந்து தண்ணீர் போத்தலை எடுத்து வந்து நீட்டினான் வேந்தன்.

சிரித்தபடி, "தேங்க்ஸ்ங்க" என வாங்கிக் குடிக்க, ஏறி இறங்கும் தொண்டைக் குழிக்கு ஏற்ப தாளம் தட்டியது அவனிதயமும்.

தண்ணீர் குடித்து அவனிடம் போத்தலை திரும்பக் கொடுத்து விட்டு, அவள் சாப்பிட்டதையும் அவள் ஒதுக்கி எடுக்க, "போலாமா?" என்றான்.

"ஒன்னுமே பேசல நீங்க?" என்றாள் அதிர்ந்து.

"என்ன பேசணும்? எல்லாம் தான் ஃபோன்லயே சொன்னேனே?"

"அப்றம் எதுக்கு நேர்ல வந்தீங்க? இங்க வர கூட்டிட்டு வந்தீங்க?"

"சும்மா கொஞ்ச நேரம் சைட் அடிக்கலாம்னு தான்"

அவள் முறைக்க, "வா போலாம்" என முன்னே நடந்தான்.

"ஏதோ முக்கியமா பேச போறீங்கன்னு நினைச்சேன். கல்யாணத்துக்கு அம்மாட்ட பேசுறேன்னுலாம் சொன்னீங்க அதப்பத்தி பேசுவீங்கன்னு நினைச்சேன்" என முனங்கிக் கொண்டே பின்னால் நடந்து வந்தாள்.

"பேசணுமா?" என ஓட்டுநர் இருக்கைக்கு ஏறி, கதவை இழுத்தடைத்துவிட்டு இவளிடம் திரும்பிப் புருவம் உயர்த்திக் கேட்க, மறுபக்கம் ஏறாமல் வெளியே நின்றவள் வேகமாக, 'ஆமாம்!' என தலையசைத்தாள்.

அவள் தலையாட்டியதில் சிரித்தவன், "ஏறுடி! பேசதான போறேன். இப்ப நீ ஏறு" என்றான்.

"ம்ச் உங்களுக்கு விளையாட்டா இருக்கா? எங்கம்மா நா சாயந்தரம் வீட்டுக்குப் போனதும் குச்சி, விளக்கமாறு கொண்டு சாத்துவாங்க" என முகத்தைப் பாவமாக வைத்துக் கொண்டு ஏறி அமர்ந்து, அவளும் பட்டென்று கதவை இழுத்து சாத்தினாள்.

"அப்ப நேரா நம்ம வீட்டுக்கு வந்துரு. நைட்டு உங்க அக்காவையும் வச்சு பேசி சம்மந்தத்த முடிச்சுருவோம்"

"இங்க பாருங்க நீங்க நக்கல் பண்ணிட்ருக்கீங்க. அக்கா ஆத்மாவா இருக்கா, இன்னும் யாரையோ கொல்லணும்னு சொல்லிட்ருக்கா. அம்மா உங்க வீட்டுப் பேச்சே பேசக் கூடாதுன்னு சொல்லிருக்காங்க. அந்த வெளிநாட்டு தாத்தா வேற என்னப் பிரச்சினைக் குடுப்பாரோ தெரியல. இதுக்கெல்லாம் தீர்வா இன்னைக்கு நா வண்டீல வந்தத காரணமாக்கி எங்கம்மா என்னை யாரு ஃப்ரீயா கேட்டாலும் கட்டி குடுத்துருவாங்க. நானே அந்தப் பயத்துல இருக்கேன், நீங்க எதோ பெருசா திட்டம் சொல்ல கூட்டிட்டு வந்துருக்கீங்கன்னு பார்த்தா ஒன்னுமே பேசாம கிளம்பிட்டீங்க" என்றாள் ஒரே மூச்சாக.

"பெரிய திட்டமா? நெஜமாவே திருட்டு கல்யாணம் பண்ணத்தான் கூட்டிட்டு வந்துருக்கேன்னு எதிர்பார்த்து வந்துட்டியா?" என அவன் சிரிக்க, முறைத்துப் பார்த்தாள் அவள்.

"சரி என்ன பண்ணலாம் நீயே சொல்லு" என வண்டியை எடுத்தான்.

"எனக்கு தெரியல. ஆனா உங்க அம்மா வந்து பேசுனாலும் எங்கம்மா அவ்வளவு சீக்கிரம் ஒத்துக்க மாட்டாங்க, அதுக்கு என்ன பண்ணலாம்னு நீங்க யோசிச்சுக்கோங்க" என்றவள் வேடிக்கைப் பார்த்து அமர்ந்து விட, அவனும் அதன் பின்னணி என்னவாக இருக்கும் என தீவிரமாக யோசித்தான்.

அன்றைக்கு பின் அவள் அம்மாவும் இவன் அம்மாவும் சந்தித்துக் கொண்டதே தேன்பாவனி இறப்பில் தான். அதன் பிறகு நாகராஜன் குடும்பத்தில் முதலில் இறந்த அவர் தாத்தாவின் இறப்பிற்கு அவன் தந்தை தான் சென்று வந்தார். அடுத்தடுத்த இறப்பு வரவும், போலீஸ் விசாரணை என்றாகவும் ஊரே ஒதுங்கிக் கொண்டது. இறுதியாக நாகராஜன் இறப்பில் அவர்கள் துக்கத்தில் கலந்து கொள்ள யாருமே செல்லவில்லை. வேறு வழியின்றி பவளமல்லியும், செல்லம்மாளும் மட்டுமே சென்றனர், தூக்கிச் செல்லக் கூட ஆளின்றி போய்விட, வண்டிக்கு காசு கொடுத்து எலெக்ட்ரிக் மைதானத்திற்கு ஏற்றிவிட்டு பெண்கள் இருவரும் அந்த வீட்டிலிருந்த போது தான் தேன்பாவனி வந்து மிரட்டியதில், இருவரும் அவர்களது வீடு வந்தது. அதன்பின் இன்றுவரை அந்த வீடு காவலர்கள் வசம் தான் உள்ளது. அடிக்கடி இதில் சம்பந்தப்பட்ட இருவரான செல்லம்மாள், பவளமல்லியை மட்டுமே வந்து விசாரித்து செல்வர், ஆனால் தடயம் என்ற ஒன்று இதுவரை கிடைக்காததால் காவலர்களும் கூட கிடப்பில் போட்டுவிட்டனர்.

இதில் எங்குமே அவன் அம்மா கிடையாது. 'பிறகு ஏன், எப்படி, எங்கிருந்து இருவருக்குள்ளும் உரசல் வந்தது?' வேந்தன் இந்த யோசனையில் வர, நந்தனத்தில் மீண்டும் அவளை இறக்கி விட்டு, "அம்மா என்ன திட்டுனாலும் வாங்கிக்கோ. அவங்க அம்மா வந்து பேசுவாங்களாம்னு சொல்லிடு. நா பேசுறதுக்கு அம்மாவ கண்டிப்பா கூட்டிட்டு வரேன்" எனச் சொல்லி வண்டியைத் திருப்பிச் சென்றுவிட்டான் அவன் அலுவலகத்திற்கு. அவன் குரலில் இருந்த மாற்றத்தை உணர்ந்தவாறே கடைக்குள் சென்று அவள் வேலையைத் தொடர்ந்தாள் பவளமல்லி.

அங்கு ஊரில், செல்லம்மாள் வீட்டிலிருந்து கிளம்பிய அனிருத், வந்த பாதையை விட்டு, தெருவின் மறுமுனை வழி வீட்டிற்கு வந்துவிட்டார். தேன்பாவனியை அங்கு அவர்கள் வீட்டு தெருவில் விட்டுவிட்டு வந்த குஷி அவருக்கு. வீட்டிற்குள் நுழைந்தவரை, படிகாசீ, மேசை அருகில் நின்று தண்ணீர் குடித்துக் கொண்டிருந்தவர், அனிருத்தைக் கண்டதும் கையிலிருந்த டம்ப்ளரை அவர் தலைக்கே விட்டெறிந்தார்.

அது சரியாக வந்து அவரின் இடது நெற்றியில் பட்டு கீழே விழுந்தது, "சின்ன பிள்ளையாலே நீயி? சாப்பாட கொட்டி விளையாண்டுட்டு ஓடிவேற போயிட்ட. இங்க இருக்க குடைச்சல் பத்தாதுன்னு நீ வேற தொடங்கிருக்கியோ?" என ஏகவசனத்தில் கத்த,

"எக்கா மேசை மேல இருந்ததெல்லாம் கீழ இழுத்துப் போட எனக்கென்ன பேயா புடிச்சுருக்கு. அது அந்த தேனு புள்ள பண்ண வேலை" என நெற்றியைத் தேய்த்துக் கொண்டே அவரருகில் வந்தார்.

"உத்தமி சொன்னா, சரியாத்தான் இருக்கும்போல இருக்கு?" என்றார் படிகாசீ இவரை மேலிருந்து கீழ் சந்தேகமாக பார்த்துக் கொண்டு.

"அவ என்னத்தையாது சொல்லட்டும். எங்க அவள? சாப்பாட ஆக்கிட்டீகளா? பசிக்குது எனக்கு, காலைலயும் அந்த புள்ள சாப்பிட விடல"

"எது அதுவும் அந்த தேனு புள்ளையா?" என்றார் இடுப்பில் கைவைத்து நின்று நக்கலாக,

"ஆமாக்கா. இப்பதேன் அவுக வீட்டுத் தெரு முக்குல விட்டுட்டு வந்துருக்கேன். உன் புள்ள வந்து புதுசா என்னத்தையாது கிண்டி கிளறாம பாத்துக்கச் சொல்லிபோட்டேன்"

"ஓஹோ! நீயே கொண்டு விட்டுட்டு வந்தியா?"

"ஆமாங்கேன். என்கூடத்தான் போவேம்னு அடம் பண்ணிருச்சு, நா ஏன் அந்த ஓட்டம் ஓடுனேங்க? இங்க இருந்த எல்லாத்தையும் கையே வைக்காம இழுத்து கீழ தட்டிவிட்ருச்சு, நா டிவியே இல்லாம ஜகன்மோகினி படம் பார்த்த மாதிரி அரண்டுட்டேன், அதான் எடுத்தேன் ஓட்டம். பேய் அது காத்துல ஈசியா வந்துரும் நாம அத முந்திரணும்னு ஓட்டம்பிடிச்சுட்டேன்ல!அது வீட்ல விடத்தான் பாத்தேன், ஆனா என்னவோ தெரியல அந்த பேயால அவுக தெருவ தாண்ட முடியல, அதேன் அங்கனயே நா திரும்ப வருவேனுட்டு நிக்கட்டும்னு நா மேக்க பாத்த வழியா நம்ம வீட்டுக்கு வந்துட்டேன்" என்றவர் அவரே சாப்பாட்டை எடுத்துக் கொண்டு சாப்பிட அமர்ந்துவிட்டார்.

"முத்திதாம்லே போச்சு. கட்டாயம் திருநீறு போட்டே ஆகணும் போல"

"யாருக்கு? எக்கா நா நெசத்ததேன் சொல்லுதேன்" என்றார் கோபமாக.

"சரிதாம் அய்யாவு, இப்ப என்ன அந்த புள்ள உன்னைய எதிர்பாத்துட்டு அங்க தெருமுனைல நிக்குது அதான?"

"ஆமாக்கா!"

"நீ எதுவும் அந்த தெருபக்குட்டு போயிறாத, அதுபாட்டுக்கு அங்கனயே நிக்கட்டும்"

"ஆனா பாருக்கா! நாம எவ்வளவு நேரத்துக்கு அத ஏமாத்த முடியும்? கொஞ்ச நேரம் நின்னு பாத்துட்டுத் திரும்ப இங்கேயே வந்தாலும் வந்துரும். பூசைய எதுவும் போட்டு வீட்டுக்குள்ள வராத மாதிரி, வாசல்ல நாலு கயிறு வாங்கி கட்டுக்கா" என்றவர் சாப்பிட்ட தட்டோட, எழுந்து சென்று அதைக் கழுவ போட்டுவிட்டு கையையும் கழுவிக்கொண்டு பெரிய ஏப்போத்தோடு திரும்பிவர,

"கட்டிதாம் வைக்கணும் இனி" என்றார் படிகாசீ.

"ஆமாக்கா! சரி என்னைய கட்டுனவள எங்க?" என்றவாறு அறைக்குள் செல்ல நடந்தார் அனிருத்.

"நீ இங்க கொட்டிக் கவுத்திட்டுப் பேய விட போனியே உன் புள்ளைய ஸ்கூல்ல கொண்டு விட, அந்த பேயோட அப்பனா வருவான்?" என படிகாசீ பேசி முடிக்கும் முன், அவர் அப்போது விட்டெறிந்த டம்ளர் வாசல் அருகே கிடந்தது இப்போது பறந்து வந்து அவர் நெற்றியில் விழுந்தது.

"கொழுப்பெடுத்தவனே, எதுக்குடா அடிச்ச, எனக்குன்னு வந்து சேந்துருக்குதுங்க எல்லாம், இரு எண்ணெய்ய தேய்ச்சுட்டு வந்து உன்ன பேசிக்கிறேன்" எனத் திட்டிக்கொண்டே கீரல் விழுந்த நெற்றிக்கு தேங்காய் எண்ணெய் தடவ அடுப்படிக்குள் சென்றுவிட்டார்.

'டம்ப்ளர நா எறியலயே', புரியாமல் தேமே என நின்றிருந்தவரை, "சார்!" என்ற அழைப்பு வாசல் பக்கம் திரும்ப வைத்தது. டிவி சரி பார்க்க வந்திருந்தான் ஒருவன். அவனை உள்ளே அழைத்து அவன் சரிபார்ப்பதை அருகில் நின்றே அவர் பார்த்திருக்க, "எப்ப வேலை முடியும்?" என வந்து நின்றார் உலகநாயகன்.

"இம்புட்டு நேரமு எங்க இருந்தீக?"

"இங்கனதான் ரூமுக்குள்ள, பெருக்கி துடைக்கணும்னு உள்ள பத்திட்டா உன் அக்கா"

"இப்ப டிவின்னதும் ஓடி வந்துட்டீகளோ? ஆமா என்ன செஞ்சீக இத?"

"நா என்ன செய்ய போறேன். ஸ்விட்ச்ச தான் போட்டேன் டமீலுன்னுட்டு, பழைய விலைக்கு வாங்கிருப்பானோ உன் சின்ன மருமவன்?"

"அவன் வரவும் கேளுங்க விலைய அவனே விவரமா சொல்லுவான்" என அனிருத் சொல்ல, வாயை மூடிக் கொண்டார் உலகநாயகன்.

"ம்கூம்! எப்டி வெடிச்சதுன்னே தெரியல, மொத்தமா போச்சு, உள்ள பார்ட்ஸ் எல்லாம் கருகிப் போச்சு. புது டிவி தானே? வாங்கி எத்தனை வருஷமாச்சு?" என்றான் சரிபார்க்க வந்தவன்.

"மூணு வருஷம் இருக்கும்?"

"அப்ப க்ளைம் கூட பண்ண முடியாதே? புதுசு தான் வாங்கணும் நீங்க"

"ஏங்க லட்ச ரூபா குடுத்து வாங்கின டிவிங்க இப்படி ஈசியா சொல்றீங்க?" எனப் பதறினார் அனிருத்.

"வோல்டேஜ் கன்வெர்டர் இருக்கு. டிவியும் ஹை குவாலிட்டி டிவி, ஓவர் ஹீட் ஆனா கூட அதுவே ரெட்யூஸ் பண்ணிக்கிடும், எப்படிங்க வெடிச்சது?" என்றார் அவரும் புரியாமல்.

"அத நீங்க தான் சொல்லணும். எங்கள கேட்டா?" என அனிருத் சடைவாக பேச,

"அதான தெரியல. நீங்க ஸ்க்ரீன் தான் ப்ரேக் ஆகிட்டுன்னு சொல்லவும் நா உள்ள பிரச்சினை இருக்காது சின்னப் பிள்ளைங்க தான் பால் பேட்னு எதையாவது விட்டடிச்சுருப்பாங்கன்னு நினைச்சு வந்தேன்" என வந்தவன் சொல்ல,

"இங்க இந்த டிவிய இருபத்தி நாலு மணி நேரமும் பாக்குற ஓரே ஆளு இதோ இவர் தான், இவரத்தான் கேட்கணும் நீங்க" என்றவர் உலகநாயகனை கைக் காட்டினார் எரிச்சலுடன். லட்ச ரூபாய் டிவி போன எரிச்சல் அவருக்கு.

"ஏய் எனக்கு எதுவும் தெரியாது. ஸ்விட்ச்ச தான் போட்டேன் வெடிச்சுட்டு. சரி பண்ணி குடு" என்றார் உலகநாயகன் அந்த பையனிடம்.

"ம்கூம் முடியாது சார். ஷோரூம்ல பேசி எதாவது ரேட்டுக்கு எடுக்க பேசிட்டு புது டிவி வாங்குங்க" என்றவன் வேலையை முடித்துக் கிளம்பி விட்டான்.

"டேய் அய்யாவு அப்ப வரும்போது அவன புதுடிவி வாங்கியார சொல்லுடா. இப்பவே ஃபோனப் போட்டு சொல்லிடு அப்பத்தான வாங்கிட்டு வர சரியா இருக்கும்" என உலகநாயகன் சொல்ல,

"ஆமா வாளியும் கப்பும் தான உடைச்சுருக்கீக? சொன்ன உடனே வாங்கிட்டு வந்துருவான்" என அவர் வேந்தனுக்கு அழைத்துச் சொல்ல நகரப் போக,

"புது டிவியா? எதுக்கு? டிவிய பாத்துட்டு என்ன சொல்லிட்டு போறான் அவேன்?" என வந்துவிட்டார் படிகாசி, அனிருத் சொல்ல, "எழவெடுத்த கைய வச்சுட்டு சும்மா இருந்தியா நீயி? உன்னால ஒரு பைசா பிரோயசனம் இருக்கா இந்த வீட்ல? நட்டத்துக்குனே வாழுதியே ச்சை" என அவரை வசைபாட துவங்கிவிட, யாரோ யாரையோ திட்டுவதுபோல சென்று அமர்ந்து கொண்டார் உலகநாயகன்.

இருவரின் சண்டையையும் பார்த்துப் பார்த்து வளர்ந்ததால் அனிருத்திற்கு அது பெரிய விஷயமாக தெரியவில்லை, போனைப் பேசியவாறு பள்ளிக்குச் சென்ற மனைவியைத் தேடி வெளியே வந்தவர், எதிரில் உத்தமியே வரவும் சொல்லிவிட்டு, அவரது தைல கம்பெனிக்குச் சென்று விட்டார். அங்கு சண்டையிட்டுக் கொண்டிருந்த இருவரையும் விடாது நக்கல் பார்வைப் பார்த்து நின்றாள் தேன்பாவனி.

அலுவலக வேலை எல்லாம் முடித்து, பத்து மணிக்கு தான் வீடு வந்தான் வேந்தன். படிகாசியும், உத்தமியும் வாசலிலேயே தான் அமர்ந்திருந்தனர்.

"என்ன தம்பி, பொண்டாட்டி வந்தப்றம் தான் வீட்டுக்கு சீக்கிரம் வரணும்னு இருக்கீகளோ?" என்றார் உத்தமி.

"ஆமா! வீட்டுப்பையன் சீக்கிரம் வரணும்னு அக்கறை இருந்தா சீக்கிரம் எனக்கு பொண்டாட்டிய கூட்டிட்டு வரலாம்ல அத்த நீங்களும்?"

"காலைல வண்டில கிட்டத்துல உக்காத்தி வச்சுக் கூட்டிட்டுப் போகத் தெரிஞ்சவனுக்கு கல்யாணத்துக்கு மட்டும் நாங்க பாக்கணுமாம்ல?" என படிகாசீ நொடிக்க,

"நாளைக்குப் போய் பவளமல்லி அம்மாட்ட பேசிட்டு வந்துரும்மா. முடிஞ்சா நாள குறிச்சுட்டு வந்துரு" என்றவனை வெட்டவா குத்தவா எனப் பார்த்தார் படிகாசீ. உத்தமி, 'க்ளுக்' எனச் சிரித்தார்.

"என்னடி இளிப்பு?" என அவரை இடித்தவர், "ஏன் அதுக்கு மட்டும் நானு? நீயே போய் அதையும் பேசி கல்யாணத்தையும் முடிச்சுக்கோ போ"

"நானே பண்றதுன்னா உன்ட்ட ஏன் வந்து நிக்றேன்?"

சட்டென்று நிதானித்தவர், "உன் மாமனுக்கு பேய் புடிச்சுருக்கு, டிவிய ஒன்னுமே செய்ய முடியாதுனுட்டு போய்ட்டான் ரிப்பேர் பாக்க வந்தவன். முதல்ல அதெல்லாம் சரி பண்ண பாரு. உனக்குப் பொண்ணு எப்டி பாக்கணும் எப்பப் பாக்கணும்னு எனக்குத் தெரியும். நா பாத்துகிடுதேன் அத" என்றார் உடனேயே பேச்சை மாற்றி.

"பவளமல்லி அம்மா கூட உனக்கு என்ன பிரச்சினை?" என்றான் நேரடியாக வேந்தன்.

திக்கென்று அதிர்ந்தவர், "பிரச்சினையா?" எனத் திருதிருத்து முழிக்க,

"ம்ம் உனக்கும் அவங்களுக்கும் எங்க யாருக்கும் தெரியாம ஒரு பிரச்சினை இருக்குல்ல? அது என்னன்னு சொல்லு, பேசி சரி பண்ணிடலாம், எனக்கு பவளமல்லி வேணும்" என்றான் அவரையே கூர்ந்துப் பார்த்துக்கொண்டு. உத்தமியும், இதென்ன புதுக்கதை என்பதாக திரும்பி அவரை தான் பார்த்திருந்தார்.

'நோண்ட ஆரம்பிச்சாம்னா மொத்தமா நாறிடுமே, முருகா நா என்ன செய்ய போறேன்' எனத் தன்னை விடாது பார்த்திருக்கும் மகனைக் கண்டு நடுங்கி எழுந்து விட்டார் படிகாசீ.

"வா சாப்ட்டு படுக்கலாம். இதைப்பத்தி இன்னொரு நாள் பேசலாம்" என வீட்டினுள் திரும்பப் போக,

"ம்மா!" என அவன் அதட்டி அவரை நிறுத்துகையில், "நான் காற்று வாங்க போனேன், ஒரு கவிதை வாங்கி வந்தேன், அதைக் கேட்டு வாங்கிப் போனாள், அந்தக் கன்னி என்னவானாள், நான்!" என பாடிக்கொண்டே வந்து வண்டியை நிறுத்தினார் அனிருத். வரும் வழியில் அந்தப் பாட்டைக் கேட்டுக் கொண்டு வந்திருக்க வேண்டும் வாயெல்லாம் பல்லாக இருந்தது.

 
அத்தியாயம் 16

"எம்.எஸ்.வி எம்.எஸ்.வி தான்யா" என மூவரிடமும் சொல்லிக் கொண்டே இறங்கி அவர் வாசலுக்கு வர.

"வாங்க சாப்ட்டுப் படுப்போம். எனக்கு இருக்க முடியல கண்ணை இருட்டிகிட்டு வருது" என உள்ளே ஓடியே விட்டார் படிகாசீ.

"உங்களுக்கு எதுவும் தெரியுமாத்த?" என்றான் வேந்தன் உத்தமியிடம்.

"இல்லையே தம்பி. ஆனா மதினி தப்புச்சு ஓடுதத பார்த்தா நிச்சயம் பெருசா என்னவோ இருக்குமாட்டு தான் தோணுது"

"கேட்டு வாங்க முடியுதான்னு பாருங்க" என இவன் சொல்ல,

"ஏலே என்ன பேசிக்கிறீக ரெண்டு பேரும்? எனக்கு ஒன்னும் புரியலயே?" என்றார் அனிருத் நடுவில் நின்று.

"பவளமல்லி அம்மாவுக்கும் மதினிக்கும் எதாவது சண்டை நடந்தது பாத்தீங்க?" எனக் கேட்டார் உத்தமி.

"அவுக ரெண்டு பேருமா? இல்லையே? பொண்ணுப் பாக்குற அன்னைக்கு சண்டைல கூட பவளமல்லி அம்மா பேசவே இல்லையே?" என அவரும் யோசிக்க.

"என்னவோ இருக்கு. நாளைக்கு பவளமல்லி அம்மாட்டையும் பேசி பாப்போம். அம்மா இப்பகுள்ள போய் பொண்ணு கேட்கும் போல தோணல, நாமளே எதாவது செஞ்சாத்தான் உண்டு" என்றான் வேந்தன்.

"அந்த பேய ஏறகட்டிட்டு நீ என்ன வேணா பேசு. இப்ப அதுவேற எங்க போச்சுன்னு தெரியல, காலைல கூட்டிப் போய் அவுக வீட்டுத்தெரு முக்குல விட்டுட்டு வந்தேன், அடுத்து வீட்டுக்கு வந்துச்சா, இல்ல ஆத்தங்கரைக்கே போயிருச்சா ஒன்னுந்தெரியல, அன்னைக்கு மாதிரி என்னைய நடுசாமத்துல அதத்தேடி இழுத்துட்டுப் போகணும்னு நினைக்காத நா வரமாட்டேன்" என முந்திக்கொண்டு சொன்னார் அனிருத்.

"இப்டிதான் தம்பி உளறிட்டே திரியுதாரு. இதுக்கு எதாவது வழிபாருங்களேன். என் மாமாவ பேய் புடிச்சு ஆட்டுதே நா என்ன செய்ய போறேன், முருகா!" என உத்தமி கண்ணீரைத் துடைத்துக் கொண்டு உள்ளே செல்ல,

அழுதுகொண்டே செல்லும் உத்தமியை விசித்திரமாக பார்த்து, "கிறுக்கி. உண்மைய சொல்லுதேன் நம்பியே தொலைய மாட்டேங்காடா" என்றார் இவனிடம் அனிருத்.

"மல்லியோட அக்கா உங்கூட வெளிய வந்தாங்களா?" என்றவன் வீட்டினுள் செல்ல,

"ஆமாடா!"

"அப்ப அங்க நிக்றது யாரு?" என அவன் மாடிப் பக்கம் கண் காட்டிவிட்டு அவனறைக்குள் சென்றுவிட, மொட்டை மாடி வாசலைத் திரும்பிப் பார்த்தார் அனிருத்.

வாசலை மறைத்தவாறு வெள்ளைப் புகை உருவமாக காற்றில் ஆடிக் கொண்டிருந்தாள் தேன்பாவனி. இருட்டையும் அந்த புகையையும் கண்டதுமே நடுங்கிவிட்டது இவருக்கு.

"ஆத்தி! பாதை மாறாம கரெக்குட்டா வீட்ட கண்டு புடிச்சு வந்துருச்சே இந்த பேய் புள்ள" என்றவர் மெல்ல நடந்து, உத்தமி இருக்கும் திசைக்கு ஓடியிருந்தார்.

வேந்தன் குளித்து சாப்பிட வந்தமர, உத்தமி தான் இருவருக்கும் பரிமாறினார்.

"அம்மா எங்க?"

"உங்கப்பா கீழவிழுந்து காலு சுளுக்கிடுச்சு தம்பி, உங்கட்ட இருந்து தப்பிக்க அண்ணனுக்கு எண்ணெய் போட்டு விட போறேம்னு போயிட்டாக"

"எப்ப விழுந்தாக?" என்றார் அனிருத்.

"சாயங்காலம் தான். டிவி இல்லாம அதையும் இதையும் உருட்டிட்டே வந்தாக. மதினி புடிச்சு திட்டிவிடவும். மாடிக்கு ஏறுதேம்னு ஏறி ரெண்டாவது படில காலு வைக்கும் போது, பிசகிவிட்ருச்சு, நல்ல வேளை மேலப்படி வர ஏறல, அங்கனயே உக்காந்துட்டதால சுலுவா போச்சு"

"பேய பாத்து பயந்துருப்பாரோ?" என்றார் அனிருத் வேந்தன் காதில்.

"உன் மாமாவுக்கு தரையிலயே தண்ணி பாத்து நடக்கத் தெரியாது இதுல மாடிக்கு ஏறினா உருண்டு தான் விழணும்" என்றான் வேந்தன்.

"பாவம் தம்பி. குறைஞ்ச விலைக்குனாலும் ஒரு டிவிய கொண்டு வைங்க. பொழுது போவும் அவுகளுக்கு"

"இருக்கட்டும் உடனே செய்யணும்னு ஒன்னும் அவசரமில்லத்த. இந்த டிவிய முதல்ல என்ன செய்யிறதுன்னு பாக்கணும். எனக்கு அதைவிட முக்கிய வேலையும் இருக்கு" என்றவன் உண்டு முடித்து எழுந்து கொண்டான்.

பனிரெண்டு மணிக்கு வீடே உறக்கத்தின் பிடியில் அமைதியாகிவிட்டிருந்தது, வேந்தன் வெளியே வந்து மாடிக்கு ஏறப்போகையில், "அடேய் இரு நானும் வரேன்" என ஓடிவந்தார் அனிருத்.

"வரமாட்டேன் பேயி அது இதுன்னுவ? இப்ப எதுக்கு வந்த நீ?" என முறைத்தான் இவன்.

"ம்ச் கதை பாதில நிக்கில? அது தெரிய வேணாமா எனக்கு? அப்பறமா கேட்டா சொல்லுவியா நீயி?"

"மாட்டேன்"

"ம்ம் அதான் நானே கண்ண மூடிட்டு பேய் படம் பாக்க மாதிரி கதையை கேட்டுட்டு வந்துருவோம்னு நீ கதவ திறக்க சத்தம் கேட்டதும் ஓடி வந்துட்டேன்" என்றார்.

இருவரும் மேலேறி வர, மொட்டை மாடி முழுவதும் அவளின் பிச்சிப்பூ வாசனை மட்டுமே நிரம்பி இருந்தது. எங்கோ, சிறு முணு முணுப்பு கேட்டுக் கொண்டிருக்க, அந்தப்பக்கம் நடந்தனர்.

"தேன்பாவனி!" என மெதுவாக அழைத்தான் வேந்தன்.

சட்டென்று அவன் முன் நின்றாள் தேன்பாவனி. அழகான பெண்ணாக நின்றாள். அந்த இடமே அவள் வெளிச்சம் நிறைந்ததாக இருந்தது.

"ம்ம் இப்பிடியே இருந்தா என்ன பாப்பா உனக்கு? இதெப்படி பாக்க நல்ல லட்சணமா இருக்கு? சும்மா சும்மா பேயா மாறாதம்மா" என பாராட்டு பத்திரம் வாசித்தார் அனிருத்.

"என்னால இங்க இருந்து வெளில போக முடியல. உங்களோடையும் வர முடியல இவரோடையும் வர முடியல. இந்த வீட்டுக்குள்ளயே தான் சுத்தி வர முடியுது. ஏன் ஒரு இடத்துக்கு வந்தா இன்னொரு இடத்துக்கு என்னால போ முடியல? அம்மா, தங்கச்சிய பாக்க போ முடியல. ஏன்?" என்றாள் அதிகாரமாக.

"எங்கிட்ட ஒரு தகடு இருக்குது. ஒருவேளை அது இருக்க இடத்துல மட்டுந்தான் உங்களால இருக்க முடியும்னு நினைக்கிறேன். நாளைக்கு அந்த தகடு எடுத்துட்டு மாமா உங்கள உங்க வீட்டுக்குக் கூட்டிட்டுப் போவாரு. அதான் காரணமான்னு நாளைக்கு நாமளும் தெரிஞ்சுக்கலாம்" என வேந்தன் சாதாரணமாக சொல்ல.

"எதே? நா கூட்டிட்டுப் போவேனா? ஏன்டா இந்த புள்ளைய வீட்டுக்கு வந்த விருந்தாளின்னே முடிவு பண்ணிட்டியா? அத மேலோகம் கிளப்பி விடுற ஐடியாலாம் இல்லையா உனக்கு?" என கடுகடுத்தார் அனிருத்.

"சும்மா இரு மாமா!" என்ற வேந்தன், கேமராவை பொருத்தி ஒரிடத்தில் வைத்து விட்டு, "அன்னைக்கு உங்களுக்கு நடந்தத சுருக்கமா சொல்லிட்டு, நீங்க எப்டி கொலை பண்ணீங்கன்னு வரிசையா சொல்லுங்க" என்றதும் கலகலத்து சிரித்தாள் தேன்பாவனி.

"டேய் என்னடா உண்மையிலேயே விசாரணை நடத்தி அத படம் வேற பிடிக்க" என அனிருத் அதிர்ச்சியில் நெஞ்சில் கைவைத்துவிட,

"ஆமா ரெக்கார்ட் வேணாமா?" என்றான் அவன்.

"கேமிரால பதிவாகுமா?" என வேகமாக சென்று அதைப் பார்த்தார், அங்கு அதில் அவன் கூட தெரியாமல் இருட்டாக தான் இருந்தது, "இங்க ஒன்னுமே தெரியலடா. என்னத்த எடுக்க இத நிப்பாட்டி வச்சுருக்க நீயி?" என்றார்.

"பரவால்ல. எனக்குப் பழகிப் போச்சு. சும்மானாலும் இருக்கட்டும்" என இவன் சொல்ல,

"உங்களுக்கு ஏன் நா சொல்லணும்? என் அம்மா, பாப்பா கிட்ட தான் நா சொல்லுவேன். அவங்களுக்கு தெரிஞ்சா போதும்" என்றாள் தேன்பாவனி.

"அடேய் வேந்தா சும்மா வச்சது கேமிரா மட்டுமில்ல, நீயும் நானும் சேர்த்துதான்னு சொல்லிருச்சு" என கெக்க பெக்கவென அவர் சிரிக்க,

"போ போய் அவங்க ரெண்டு பேரையும் கூட்டிட்டு வா" என்றான் வேந்தன்.

"இப்பவா?"

"ஆமா"

"அவங்க ரெண்டு பேரும் இங்க வரவா? நாமளாது அங்க போவோம் டா"

"அது தான் சந்தேகம் வரும். அவங்க இங்க வந்தா சந்தேகமே வராது"

"எங்கம்மா இங்க வரமாட்டாங்க" என்றாள் தேம்பாவனி.

"ஏன்?" என்றான் வேந்தன்.

"வரமாட்டாங்கனா வரமாட்டாங்க" என உக்கிரமானாள்.

"அம்மாடி அம்மாடி நீ பேயா மாறிடாதம்மா. அவங்க வரவே வேணாம். நாம அங்க போலாம். டேய் தகடு எடுத்துட்டு வாடா"

"காலைல தான் அவள கூட்டிட்டு வண்டில போயிருக்கேன். இப்ப இந்த நேரத்துல அங்கப் போய் நிக்றது சரியா வராது மாமா. நாளைக்கு பகல்ல பாத்துக்கலாம். கேமிரா எடுத்துட்டு வா போவோம்" என்றவன் கீழே இறங்கத் திரும்ப,

"கஷ்டப்பட்டு கண் முழிச்சு வந்ததுக்கு, அஞ்சு கொலைல ஒரு கொலையாவது எப்படி பண்ணன்னு சொல்லேன் பாப்பா?" என அனிருத் கெஞ்சி கேட்கவும், தேன்பாவனி திரும்பி வேந்தனையும் பார்த்து விட்டு,

"முதல்ல கொன்னது என் மாமனாரோட அப்பாவ, அதிகமா மெனக்கெடல, ஏற்கனவே மாரடைப்பு வந்த மனுஷன் முன்ன போய் நா நின்னா என்ன ஆகிருக்கும்?"

"ரொம்ப சுலுவாச்சே! மறுபடியும் மாரடைப்பு வந்துருக்கும் டிக்கெட் வாங்கிருப்பாரு. ஆமா அவரெதுக்கு கொன்ன நீ?" என கேட்டார் அனிருத்.

"என்ன ப்ரிட்ஜ்குள்ள அடைச்ச நாலு ஆம்பிளைல அந்த ஆளும் ஒன்னு தான?"

"வயசான காலத்துல எதுக்கு அந்த ஆளுக்கு அந்த வேண்டாத வேலை? மத்தவங்களுக்கு இவர் எடுத்து சொல்ல வேணாமா? குச்சி வச்சி தான் நடப்பாரு ஆனா உன்ன உள்ள வைக்க கை குடுத்துருக்காரு பாரேன்"

"எண்பது வயசு ஆளு. அடுத்த வேலை கஞ்சி ஊத்த அந்த குடும்பம் வேணும். சொல்றத கேட்கலனா விரட்டி விட்ரும் என் மாமியார், செய்ற வேலைல பங்கில்லனா நாளைக்கு பிரச்சினைல நல்லவராகிட கூடாதுன்னு கூட்டு சேர்த்துக்கும் என் மாமியார்"

"ஓஹோ! நல்ல ஒத்துமையான குடும்பம். உன்ன கொலை பண்ணா மாட்டிக்குவோம்னு பயமே இல்லையா அவங்கட்ட?" கதை தான் கேட்டார் அனிருத்.

"அவ்வளவு கொலைவெறி இருந்துருக்கலாம் என்மேல" என்றவளைப் பார்க்க இப்போதும் பாவமாக தான் இருந்தது.

"அப்ப மட்டும் எப்டி உங்களால ஊருக்குள்ள வர முடிஞ்சது?" என்றான் வேந்தன்.

"ஊருக்குள்ள யாராவது இறந்த அன்னைக்கு தான் நா வர முடியும். வருவேன், கொல்லுவேன். என் புருஷனோட தாத்தாவ கொன்ன அன்னைக்கு காலைல மேலத்தெருவுல பெரியாயி இறந்து போச்சு"

"அப்ப அதுவும் பேயாத்தான் சுத்துதா?" என அனிருத் அதிர,

"ஆண்டவனா அழைச்சுகிட்டவங்க பேயா அலைய மாட்டாங்க. விதி முடியும் முன்ன இப்படி கஷ்டபடுத்தி சாகப்படுறவங்க அவங்க விதி முடியுர வர உலாத்திட்டு தான் திரியணும்" என்றாள் விரக்தியுடன்.

"ஐயையோ ஏம்மா அப்ப உனக்கு எண்பது வயசு வர ஆயுசு இருக்குன்னா அதுவரை இங்கதான் இருப்பியா?"

"ம்கூம்! எனக்கு பலிவெறி தீராதனால நா சாந்தி ஆகாம சுத்திட்ருக்கேன். எனக்கு சாந்தி கிடைச்சுட்டா, என்னால இங்க இருக்க முடியாது. தேவர்கள் அழைச்சுப்பாங்க, ஆவிகள் உலகம் அது, விதி முடியும்வர அங்கதான் இதோ இப்டி காத்தா சுத்தணும்"

"அடுத்து நீ கொல்லணும்னு இருக்கது யாரு?" என்றான் மிக கவனமாக வேந்தன்.

"சொன்னா காப்பாத்தி விடுறதுக்கா? விடமாட்டேன், விடவே மாட்டேன், உன்னால காப்பாத்தவே முடியாது" என அவள் முகம் விகாரமாக மாற,

"இவன் ஒருத்தன் பொண்ணா நிக்ற பிள்ளைய பேயா மாத்தி மாத்தி விட்ருதான். போடா, அப்படியே நைசா பேசி எல்லா கொலையவும் எப்படி பண்ணுச்சுன்னு கேட்டு தெரியாம, போ இனி சொல்லாது போ" என அனிருத் சொல்ல, வேந்தன் யோசனையாகவே தேன்பாவனியைப் பார்த்தான். அவள் சுழன்று ஒரு மூலைக்குச் சென்று மறைந்துவிட்டாள்.

அனிருத் தான் தீவிர யோசனையில் நின்றிருந்தவனை, "பேய் கோச்சுட்டு போய் அரைமணி நேரமாச்சு, என்னத்த வெட்ட வெறிச்சுட்டு நிக்காம்னு தெரியல. வந்து தொலைடா" என தள்ளிக்கொண்டு கீழே வந்தார்.

மறுநாள் காலையில், உத்தமியும், படிகாசீயும் எங்கோ கிளம்பிவிட, வேந்தனும், அனிருத்தும் தேன்பாவனியுடன் செல்லம்மாள் வீடு வர, அங்கு பவளமல்லியைப் பெண்பார்க்க என நான்கு பேர் வந்தமர்ந்திருந்தனர்.

இவர்கள் சத்தம் கேட்டதும், "நீங்க போங்க தம்பி. கஷ்டப்பட்டு பேசி என் பொண்ண பொண்ணுப் பாக்க வரவச்சுருக்கேன். கலைச்சு விட்றாதீங்க. தேனுவ பத்தினாலும் அப்புறமா பேசலாம் போங்க" என வெளியே வந்து ரகசியமாக செல்லம்மாள் கெஞ்சவே செய்தார்.

"டி மல்லி!" என வேந்தன் சத்தமாக உள்ளே நோக்கி அழைத்துவிட, வேகமாக வாசலுக்கு வந்தாள் அவள். இவன் அவளை முறைக்க, அவள் அதைவிட அதிகமாக அவனை முறைத்துப் பார்த்து நின்றாள்.

அம்மாவும் பொண்ணும் வெளியே சென்றுவிட்டதால், மற்றவர்களும் வெளியே வந்து, "இது யாரு செல்லம்மா?" என விசாரணையில் இறங்க,

"நேத்து தானே மதினி சொல்லிட்டு போனேன். உன் மக என் மருமகனுக்குத்தான்னு? நீ பாட்டுக்கு இப்ப என்னென்னவோ செஞ்சு வச்சுருக்க?" என்றிருந்தார் அனிருத்.

"சும்மா இருங்க தம்பி" என செல்லம்மாள் பாவமாக சொல்ல.

"பொண்ணுப் பாத்துட்டுப் போனீகளா? உள்ளூரா நீங்க?" என்றனர் அவர்கள்.

"ஆமாங்கேன் பொண்ண புடிச்சுருக்குன்னு சொல்லிட்டு தான போனோம். அப்றம் ஏன் உங்கள வரவச்சாக" என்றார் அனிருத்.

"பொண்ணுன்னா நாலு பேரு வந்து பாக்கதுதேன். எங்களுக்கும் பொண்ணு புடிச்சுருக்கு. ஆனா செல்லம்மாளே முடிவு பண்ணட்டும்" என அனிருத்தையும் வேந்தனையும் பார்த்து சொல்லிவிட்டு, "பொண்ண உள்ளூர்ல குடுக்கியா டவுன்ல குடுக்க போறியான்னு முடிவு பண்ணிட்டு ஃபோன் போடு. நாங்க வாரோம்" என செல்லம்மாளுக்கும் சொல்லி கிளம்பிவிட்டனர்.

"என்ன இப்படி பண்ணிட்டீங்க. எங்க விஷயம் தெரிஞ்சு ஒருத்தரும் பொண்ணுப் பாக்கக் கூட வரமாட்டேங்காக. நானே கெஞ்சி அங்க இங்க கைய கால புடிச்சு என் பிள்ளைக்கு கல்யாணத்த முடிக்க நினைக்கேன். போங்க இங்க இருந்து" என செல்லம்மாள் திட்ட,

"ஏன் எனக்கு உங்கப் பொண்ணக் குடுத்தா என்ன? என்ன ஏன் புடிக்கல?" என்றான் வேந்தன் நேராக.

"உங்கள புடிக்கும் தம்பி. உங்ககிட்ட எனக்கு ஒரு பிரச்சினையும் இல்ல. ஆனா நீங்கன்னா நீங்க மட்டுமில்ல உங்க குடும்பமும் அதுல சேர்த்தி தான? அதனால தனியா உங்களப் புடிச்சதுன்னு என் பொண்ண தர முடியாது"

"எங்க வீட்டோட என்ன பிரச்சினை உங்களுக்கு?"

"அதெல்லாம் சொல்லுறதுக்கில்ல தம்பி" உடனடியாக மறுத்தார்.

"எனக்கு உங்கப் பொண்ணு வேணும். அவதான் என் பொண்டாட்டின்னு முடிவு பண்ணி வாழுறேன் நான். அப்டிலாம் சட்டுன்னு விட்டுகுடுத்துட முடியாது"

"சரிதம்பி. நா என் பொண்ண தரேன். ஆனா எனக்கு ஒரு கன்டிசனுக்கு நீங்க சரி சொல்லணும்"

"என்ன செய்யணும்?" என்றான், எதையாவது கண்டுபிடிக்க முடியுமா என்றுதான் அவரின் ஒவ்வொரு வார்த்தையிலும் ஆராய்ந்து கொண்டிருந்தான்.

"நீங்க தனியா வரணும். அந்த குடும்பத்த விட்டு நீங்க தனியா வந்து என் பொண்ணோட குடும்பம் நடத்தணும். செய்ய முடியும்னா மேல பேசுங்க. இல்லனா கிளம்புங்க"

"ம்மா! என்னம்மா?" என்ற பவளமல்லியை,

"நா என் விருப்பத்தை சொல்லிட்டேன். இல்ல அவரோட நா போறேன்னு நின்னன்னா கிளம்பிரு இப்பிடியே, நா புடிச்சுலாம் நிறுத்த மாட்டேன்" என்றவர் விறுவிறுவென உள்ளே சென்று விட்டார்.

அவள் பாவமாக அவனைப் பார்க்க, "இந்தா தகடு. இது இருக்க இடத்துல தான் உன் அக்கா இருக்க முடியும். வச்சுக்கோ" என அவள் அக்கா நின்ற திசையைக் காட்டி, கையில் திணித்து விட்டு அவனும் கிளம்பிவிட்டான்.

 
அத்தியாயம் 17

வேந்தனுக்கு அன்று ஆஜர் ஆகவேண்டிய கேஸ் வரிசையாக மூன்று இருந்தது. அதனால் அவன் நேராக நீதிமன்றம் கிளம்பிவிட்டான். அங்கு ஜவகர் அனைத்தும் தயாராக வைத்திருந்தான், முந்தைய நாள் இரவு வரை இருந்து பார்த்த வேலை தான் என்பதால், வந்ததும் என்ன கருத்துக்களை எல்லாம் எதிரில் உள்ளவர் பேசுவார், நாம் என்னென்ன எடுத்து முன் வைக்க வேண்டும் என்பதை தான் இப்போது சரிப் பார்த்துக் கொண்டிருந்தான். ஆனால் கவனம் அதிலேயே செல்லாமல், பவளமல்லியையே சுற்றி வந்தது.

அவளோடு இருக்க மனது வெகுவாக ஆசைப்பட்டது, ஆனால் அதை நடத்திக் கொள்வதற்குள் எல்லோருமாக அவனிடம் கண்ணாமூச்சி ஆடுவது கடுப்பைக் கிளப்பியது. ஒன்றரை வருடமாக மனதை இறுக்கி வைத்திருந்தவனால் இப்போது சுத்தமாக முடியவில்லை என்பதே நிஜம்.

"அண்ணா!" என்றான் ஜவகர்.

நெற்றியைத் தேய்த்து விட்டுக் கொண்டு அமர்ந்திருந்தவனை மெல்ல அழைத்து நினைவு படுத்தினான்.

"பாத்துக்கலாம்டா கேஸ் முதல் நாள் தான?" என கோப்பை மூடி முன் மேசையில் வைத்துவிட்டு அவன் நாற்காலியில் சாய்ந்து விட்டான்.

அந்நேரத்தில் அவனறைக்குள் விறுவிறுவென வந்தார் லலிதா என்ற வழக்கறிஞர், அவரிடம் தான் பவளமல்லி, செல்லம்மாள் பற்றி வெளிநாட்டிலிருந்து வந்த முதியவர் வழக்குப் பதிவிற்கு பேசியிருந்தார்.

"என்ன கரிகாலவேந்தன் இப்படி பண்ணிட்டீங்க? என்ட்ட கேட்காம எனக்கு வந்த கேஸ நீங்க எப்படி எடுக்கலாம்?" என்றார் நுழையும் போதே.

அவர் சத்தத்தில் கண்ணைத் திறந்துப் பார்த்துவிட்டு, நிதானமாக நிமிர்ந்து அமர்ந்து, "உங்கட்ட கேட்கத்தான் அத்தன ஃபோன் அடிச்சேன், நீங்க எடுக்கல அதான் நானே எடுத்துட்டேன்" என்றான் வேந்தன்.

"நான் கவுன்சில்ல கம்ப்ளைண்ட் பண்ணுவேன். நீங்க என் நேம் சொல்லித்தான் அவர்ட்ட இருந்து அத்தனை ஃபைலயும் வாங்கிருக்கீங்க. எல்லாத்தையும் ஒழுங்கா என்ட்ட குடுத்துடுங்க"

"டேய் எடுத்துக் குடுறா அந்த ஒன்னுத்துக்கும் ஆவாத ஃபைல" என வேந்தன் உடனே சொல்லிவிட, ஜவகர் எடுத்து வந்து நீட்டினான்.

'என்ன உடனே குடுத்துட்டான்!' என அந்த லலிதா அப்போதும் சந்தேகமாக பார்க்க,

"நின்னுப் பாத்துட்டே இருந்தாலும் ஒன்னும் தேறாது. அவரு கேஸ் போட துடிக்குறது, அவரோட தம்பி குடும்பம் தங்கியிருந்த வீட்ட சொந்தமாக்கிகிடறதுக்கு தான். ஆனா அது அல்ரெடி லோன்ல இருக்குன்னு தெரியல பாவம். சொன்னாலும் புரிஞ்சுக்கல. நீங்க வேணும்னா உங்களுக்கு தெரிஞ்ச ஆங்கில வார்த்தைகளப் போட்டு, அந்த வீடே ஒரு ப்ரைவேட் ஃபினான்ஸ் கண்ட்ரோல்ல தான் இருக்குன்னு புரிய வச்சுக்கோங்க"

"சரி அது இருக்கட்டும். எதுக்கு நடுவுல நீங்க இதுக்குள்ள வந்தீங்க? அது என்னவா இருந்தாலும் நா வந்து பாத்துருப்பேன்ல?" என கேட்டார்.

"என்னோட ஃபேமிலி மெம்பர்ஸ் சம்பந்தப்பட்டது, வக்கீல் நா இன்வால்வ் ஆகாம?" என்றான் சாதாரணமாகவே.

"அந்த லேடீஸா?"

"ம்ம். நா கல்யாணம் பண்ணிக்கப் போறப் பொண்ணு"

"ஓ!" என இழுத்து அவர் இன்னும் சந்தேகமாகப் பார்க்க,

"உங்கள நம்பி வந்தவர, அப்படியே விட்டுவிட்டு பத்துநாள் ஊரபாத்து போனதே தப்பு லலிதா. இதுல நீங்க என்ன எப்படி கவுன்சில்ல கம்ப்ளைண்ட் பண்ணுவீங்க? ஜார்ஜ் உங்க பக்கம் தான் திரும்பும்" என அவன் சாவதானமாக கூறியதில், விழித்தார் லலிதா.

"அவர் கேஸ் ரீஓபன் பண்ணணும்னாலும் பண்ணட்டும், உங்களுக்கு ஆப்போஸிட்டா நாந்தான் ஆஜர் ஆகுவேன். ஆனா நீங்க அவர்கிட்ட எதிர்பாக்குற போதுமான அமௌண்ட்! அத தேத்த முடியுமான்னு பாத்துட்டு இறங்குங்க" என நக்கலாக சொல்ல,

"நா ஃப்ரீயா கூட இந்த கேஸ எடுத்து நடத்திக் குடுப்பேன், நீங்க என் ஃபீஸ் பத்தி கவலைப்பட வேணாம் கரிகாலவேந்தன்" என்றுவிட்டு வந்த வேகத்திலேயே வெளியேறி விட்டார்.

"ஏன் அண்ணா? இந்த அம்மா அவர் கேஸ் எடுக்குமா?" என்றான் ஜவகர்,

"கண்டிப்பா எடுக்கும்டா, போன கேஸ்ல ஜட்ஜுட்ட அதையும் சேர்த்து கோர்த்துவிட்டு மெமோ வாங்கி குடுத்தோம்ல? அதுக்கு பலிவாங்கவே இந்த கேஸ் எடுக்கும்"

"எடுக்கட்டும்னு தான் கல்யாணம் பண்ணிக்கப் போறப் பொண்ணுன்னு சேர்த்து சொல்லி அனுப்புனீங்களா?"

"அப்படி சொல்லிக்க நல்லார்க்குடா.‌ சும்மானாலும் யார்ட்டையாவது சொல்லிட்டே இருக்கலாம் போல" என சுகமாக கூறியவாறு எழுந்து அவன் முதுகில் அடிக்க,

"இப்ப மைண்ட் ரிலாக்ஸா ஆகிட்டீங்க போல?"

"ஆமா அப்படிதான் கொஞ்சம் ஃப்ரஷ் ஆன ஃபீல் தான். இருந்த நெகட்டிவ் எனர்ஜி எல்லாத்தையும் லலிதா மேடம் பக்கம் திருப்பி விட்டுட்டேனோ?" என இருவரும் பேசியவாறு, கேஸ் கட்டுகளோடு நீதிபதி வருமுன் சமத்தாக சென்று அமர்ந்து கொண்டனர்.

அங்கு பாவமாக நின்ற பவளமல்லியை அப்படியே விட்டுவிட்டு செல்ல மனமின்றி நின்ற அனிருத், "நீ வருத்தப்படாத பாப்பா. நாங்களாம் இருக்கோம்ல பேசாம விட்ருவோமா? கவலைபடாத. நீ இன்னைக்கு வேலைக்கு போகலையா?" என்றார் பேச்சை மாற்றி.

"போகணும். பெர்மிஷன் கேட்ருந்தேன்"

"சித்தப்பான்னு கூப்பிடு, உன் பேய் அக்காவையே மகளா ஏத்துக்கிட்டேன் உன்ன ஏத்துக்க மாட்டேனா?" என அவர் பேசியதில், "ம்ம்ம்!" என உறுமினாள் தேன்பாவனி.

"சரிரி பேயி இல்ல. மீதி நாலு பேரையும் எப்படி கொன்னன்னு உன் அம்மாட்டையும் தங்கச்சிட்டயும் மட்டும் தனியா சொல்லிறாத, ஒரு ஃபோன போட்டனா ஓடி வந்துடுவேன் சரியா?" என தேன்பாவனியிடம் கேட்க, அக்கா தங்கை இருவரும் முறைத்தனர்.

"போற போக்குல பேயவும் கூட்டு சேத்துட்டு வாழ பழகிடுவ போல அனிருத்து! விடுறா விடுறா உன்ன பத்தியும் வரலாறு பேசட்டும்" என சொல்லிக் கொண்டே கிளம்பி விட்டார்.

"அக்கா!" என அவளைத் தொடப்போனாள் பவளமல்லி.

"என்னால உள்ள வரமுடியுமான்னு தெரியல, நீ முதல்ல உள்ள போ" என்றதும், பவளமல்லி உள்ளே செல்ல, பின்னரே வீட்டினுள் நுழைந்து விட்டாள் தேன்பாவனி.

"வேலைக்குப் போறியா இல்லையா நீ?" என்றார் செல்லம்மாள் அவளை கண்டதும், அவளுக்கு மதிய சாப்பாட்டை எடுத்து வைக்கும் டப்பாவை எடுத்துக் கொண்டு தான் கேள்வியே கேட்டார்.

"போறேன்மா" என சலிப்புடன் கூறியவள், "எதுக்கும்மா அப்படி சொன்ன?" என்றாள் அழுகையை அடக்கிக் கொண்டு. நிச்சயம் அவன் மீண்டும் வந்து அவள் வேண்டும் என கேட்டு நிற்கமாட்டானே, அப்படியல்லவா ஒரு கோரிக்கையை வைத்து அனுப்பிவிட்டார் என்ற ஆதங்கம் அவளுக்கு.

"எனக்கு அந்த வீட்டாளுங்கள பிடிக்கல. உன் அக்காவ அப்படி தான் கட்டி கொடுத்தோம் இன்னைக்கு இழந்து நிக்றோம். அத்தோட போச்சா செத்தும் நிம்மதி இழந்து திரியிறாடி அவ. அப்படி ஒரு சாவு அவளுக்கு ஏன் வரணும் சொல்லு? வெளில அம்புட்டு நல்ல வேஷம் போட்டு, உள்ளுக்க வெஷமா இருந்துருக்காங்க. ஆனா இந்த வக்கீல் தம்பி வீட்ல வெளியவே தெரியுது, அத ஆண்டவன் காட்டுன எச்சரிக்கையா தான் நா நினைக்கிறேன்" என நெஞ்சைத் தட்டி வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டு கூறினார்.

"அவங்க அப்படி என்னதான்மா செஞ்சாங்க? அவங்க நல்லவங்கன்னு தான் அக்காவே கூட்டிட்டு வந்தா?"

முறைத்த செல்லம்மாள், "நீ இப்ப கிளம்பப் போறியா இல்லையா? எனக்கு வேலை கடக்கு" என்றதும்,

"எவ்வளவு கெஞ்சுனாலும் நீ பிடிவாதமா தான் இருப்பல்ல? நீ கை காமிச்சு ஆரம்பிச்சு வச்சது தான், நெஞ்ச விட்டு போக மாட்டேங்குறாரு. ரொம்ப வலிக்குதும்மா, பயமா இருக்கும்மா. நீ அவருக்கு கட்டி வைக்கலனாலும் பரவால்ல, வேற யாரையும் மாப்ளன்னு காட்டாதம்மா. அது அதைவிட பாரமா மூச்சடைக்குற மாதிரி வலிக்குது" எனக் கூறி அவளே சாப்பாடை எடுத்து வைத்துக் கொண்டு, கையிலிருந்த தகட்டைக் குனிந்து பார்த்தாள்.

அதை அவள் கையில் வைக்கும் போது அதில் அவன் கொடுத்த அழுத்தம், மூக்கை உறிஞ்சி அழுகையை உள்ளிழுத்து, "இது இருந்தா தான் அக்கா இருக்க முடியுமாம். இங்க வைக்றேன்" என அங்கிருந்த சாமி மேடையில் வைத்துவிட்டு வெளியேறிவிட்டாள்.

அவள் சென்றதும் அப்படியொரு அழுகை அழுதார் செல்லம்மாள், "ம்மா! அழாதம்மா" என தானும் கலங்கி நின்றாள் தேன்பாவனி.

"நா ஏன்டி உங்கள பொம்பள பிள்ளைங்களா பெத்து தொலைச்சேன்? நிம்மதியே தரலையே அந்த ஆண்டவன் எனக்கு!"

"ம்மா!"

"எப்படி பேசிட்டுப் போறான்னு பாரு. அவ நல்லா வாழ கூடாதுன்னு நினைப்பேனா நானு?"

"அவ விருப்பப்படி செஞ்சுடேன்மா"

"உனக்கு தெரியுமேடி? தெரிஞ்சுமா இப்படி பேசுற?" என்றார் அவர்.

"சரி அப்ப அவகிட்ட அதுக்கான காரணத்த சொல்லு"

"முடியலையே. வாய்விட்டு சொல்ல முடியலையே! நெஞ்சுக்குள்ள வச்சுகிட்டு மறுகுற பிள்ளைட்ட என்னன்னு சொல்லுவேன்?" என அழுதார்.

"ஏன்னு நா சொல்லட்டா?" என கேட்டாள் தேன்பாவனி, செல்லம்மாள் நிமிர்ந்து அவளைப் பார்க்க, "இன்னைக்கு நீ மறைச்சு வச்சுருக்க விஷயத்த ஒரு வேகத்துல சொல்லிட்டா, நாளைக்கே அவ அந்த வீட்டுக்கு கல்யாணமாகி போனா, அவளால அங்க நிம்மதியா வாழ முடியாதுன்னு நினைக்குற. அதான் அது தெரியாமலே போட்டும் உன் மனசு கிடந்து அடிச்சுக்குது. ஆனாலும் முடிஞ்சளவுக்கு போராடுவோம்னு அவள அந்த வக்கீலோட சேரவிடாம பண்ண நினைக்குற" என்றதில், பாவமாக தான் விழித்தார் செல்லம்மாள்.

"எனக்கு என்ன செய்யன்னே தெரியலடி தேனு. ஒருமாதிரி மனசு கிடந்து அடிச்சுக்குது. ஒரு நேரம், அவ அங்க போய் வாழட்டும், உனக்கு அந்த குடும்பத்தத்தான பிடிக்கல, நீ ஒதுங்கிரு அவளுக்கு பிடிச்ச வாழ்க்கைய அவ வாழட்டும்னு நினைக்கிறேன். ஆனா இந்த உலகத்துலயே அவள விட்டா எனக்கு வேற யாரும் இல்லயே தேனு, அப்றம் எப்டி அவளையும் விட்டு குடுப்பேன் நானு?" என்றவாறு அமர்ந்திருந்தவரைக் கண்டு கண்ணீர் தான் வடித்தாள் தேன்பாவனி.

'நா இருக்கேன் மா!' என சொல்ல முடியாத இடத்திற்கு சென்றிருந்தாளே அவளும். 'இறப்பதற்கு முன் அவள் கொண்டிருந்த ஆசைகளும் அவைதானே? வாழவிடாமல் பண்ணிவிட்டார்களே!' நினைக்க நினைக்க கொன்றவர்களை மறுபடியும் கொள்ளும் வேகம் தான் வந்தது.

"இவள என்னடி பண்ணப் போறேன் நானு? யாருக்குக் கட்டிக் குடுப்பேன்?" என செல்லம்மாளின் புலம்பல் மீண்டும் துவங்கியது.

"அந்த வக்கீலுக்கே கட்டி வச்சிடும்மா. எதையும் அவரா நம்புற வர அதுல தீர்க்கமா நிக்கிற மனுஷன். உண்மைக்கு மதிப்பு குடுக்குறவரு. எல்லாரையும் மதிக்க தெரிஞ்சவரு. அதுக்காகவே நீ பாப்பாவ கட்டி குடுக்கலாம். அவ அவரோட நல்லா இருப்பா"

"அப்ப அந்த குடும்பம்?"

"அங்கேயும் சுயநலம், கெட்ட எண்ணம் உள்ள ஆட்கள் இருக்கத்தான் செய்றாங்க, ஆனா இது இல்லாத குடும்பம்னு எங்க இருக்கு? காலைல வந்தவங்க மட்டும் அவ்வளவு நல்லவங்கன்னு சொல்லிட முடியுமா உன்னால?"

"அங்க மாமியாரும், அந்த பையனும் மட்டும் தான். அந்த பையனும் வேற எங்கையோ திருச்சி பக்கத்துல வேலை பாக்றானாம். அப்ப நம்ம பாப்பா, அந்த பையன்னு மட்டுமா எந்த பிரச்சனையும் இல்லாம வாழுவா தான?"

"ஒருவேளை அந்த பையனே நல்லவனா இல்லைனா? அவனுக்கு அங்க வேறெதுவும் கெட்ட பழக்கம் இருந்தா?"

"அப்படிலாம் இல்லையாம். இவங்க ஒருவகைல நமக்கு சொந்தம் தான் தேனு. விசாரிச்சுட்டேன்"

"சரி, இப்ப நீ பாத்து வச்சுருக்க பையனுக்கு கழுத்த நீட்ட உன் பொண்ணு ஒத்துக்க மாட்டா, ஒரு வருஷத்துக்கு மேல காத்துருக்குற அந்த வக்கீலும் விடமாட்டாரு. என்ன செய்யப் போற?"

"தெரியலையே? ஆனா எதாவது செஞ்சே ஆகணும் தேனு!"

"உண்மையான காரணத்த சொல்லிட்டனா ரெண்டு பேரும் விலகிடுவாங்க"

"பெருமையா சொல்லிக்குற விஷயமா அது? திரும்பத் திரும்ப அத நினைக்க கூட பிடிக்கலடி ச்சி" என முகத்தைச் சுளித்தார் செல்லம்மாள்.

"ஆனா நீ இப்ப கல்யாணத்த எதிர்க்குறது மூலமா அததான் செய்யப் போற. எல்லாருக்கும் தெரிய வரும். அப்றம் வெளில இருக்கனுவங்களுக்கும் பேச தொக்கா போவும்"

பயந்தார், படபடத்தார், அவரைப் பார்க்கவே பாவமாக தான் இருந்தது, ஆனாலும் அவரை அப்படியே யோசிக்க விட்டுப் பார்த்து நின்றாள் தேன்பாவனி.

"நம்மளால ஒன்னுமே செய்ய முடியாதாடி தேனு" என்றார் பரிதாபமாக.

"நா செய்றேன்மா. செய்யாம போ மாட்டேன். நீ பாப்பாக்கு கல்யாணத்த எப்படி பண்ணலாம்னு மட்டும் யோசி"

அவள் செய்யாமல் போக மாட்டேன் என்றதை அவர் சரியாக கவனிக்கவில்லை, அவரின் மனமெங்கும் குழப்பமே சூழ்ந்திருந்தது, இந்தப்பக்கம் (வேந்தனுக்கே மகளை கட்டி வைத்து விடுவது) செல்லவா, அந்தப்பக்கம் (நான்கு அடிப்போட்டு மிரட்டியாவது வேறு நல்ல வாழ்க்கையை அவளுக்கு அமைத்து தருவது) செல்லவா, என்ற பெரும் யோசனையில் தான் இருந்தார். அன்று முழுவதும் அதைப் பற்றியே பேசிக் கொண்டு வீட்டிலேயே இருந்து விட்டார் செல்லம்மாள்.

அங்கு வேந்தன் வீட்டில், படிகாசீயும் உத்தமியும் அவர்களின் சாமி மாமாவை தான் பார்க்கச் சென்றிருந்தனர்.

"என்ன மாமா உடம்பு சரியில்லையாம்ல?" என அவர் வீட்டினுள் நுழைய,

"ஆமாத்தா வயசும் போகுதுல" என்றவருக்கு அவர்கள் வந்ததில் அவ்வளவு சந்தோஷம் என வேகமாக எழுந்து அமர முயன்றார்.

"இரு மாமா? எதுக்கு இம்புட்டு வேகம்?" என அவர் எதிரில் சென்று இருவரும் அமர்ந்தனர்.

"அன்னைக்கு அவனுங்க வந்துட்டு போனப்பவே நீ வருவன்னு நினைச்சேன். என்னத்தா உத்தமி நல்லாருக்கியா?" என்றார் பூரிப்புடன்.

"நா நல்லாருக்கேனுய்யா, அந்த மனுஷந்தேன் சரியே இல்ல. நீங்க ஓரெட்டு வாங்களேன் எங்க ஊருக்கு. அங்க இருக்க பேயவும் விரட்டுட்டு என் புருஷனுக்கும் கயிறு என்னத்தையும் கட்டிவிட்டுட்டு வருவீக? திரும்ப வர இஷ்டமில்லனா அங்கனயே கூட இருங்க வேலா வேலைக்கு ஆக்கிப் போட்டு நாங்கப் பாத்துகிடுவோம்ல?" என்றார் உத்தமி, தாங்கள் வந்த காரணத்தை நேராக.

"நா சோவி போட்டுப் பாக்றவன்மா, பேய் விரட்டுற மந்திரவாதி கிடையாது" என சிரித்தார்.

"அப்படி சொல்லாதீக மாமா. உங்களுக்கு தெரியும். எனக்காக வந்து செய்யுங்களேன். பேய் பயத்தோடயே எத்தனை நாளைக்கு வாழ?" என்றார் படிகாசீ.

"அந்தப் பெண் செல்ல இன்னும் நேரம் வரலன்னு நினைக்கிறேன்த்தா. இப்போ நா வந்தாலும் எதுவும் செய்ய முடியாது, நெசம் அதுதான்" என்றுவிட்டார் அவர்.

"என் புருஷன அந்த பேயி பிடிச்சுகிட்டா என்னன்னு தெரியல, ஓரே அந்த செத்து போன பிள்ளை பேரையே சொல்லிட்டு கிடக்காருய்யா" என்றார் உத்தமி.

"அந்தப் பெண் சுற்றி வருவது உன் வீட்டைத் தான், கூட்டிட்டு வந்தது உன் வீட்டுப் பிள்ளைக ரெண்டும் தான். ஆனா அதனால உன் புருஷனுக்கோ" என உத்தமியைக் கை காட்டியவர், "உன் பிள்ளைக்கோ" என படிகாசீயையும் பார்த்து கை நீட்டிக் காண்பித்து விட்டு, "ஒரு ஆபத்தும் வராது‌. அவங்க ரெண்டு பேரும் கூட அந்தப் பொண்ணுக்கு உதவி தான் பண்ணப் போறாங்க. ஒருவேளை அவங்களுக்கு என்னோட தேவை தேவைப்பட்டுச்சுன்னா அப்போ நான் வரேன்"

"இவனுங்களுக்கு எதுக்கு அந்த வேண்டாத வேலை? நா கண்டிக்கிறேன் மாமா. அர்த்த ராத்திரில வீடு வர்றது வண்டி கண்ட இடத்துல நின்னுருச்சுன்னு சொன்னவன் கூட்டிட்டு வந்தத சொல்லவே இல்லையே" என்றார் எரிச்சலுடன் படிகாசீ.

 
அத்தியாயம் 18

"நீ என்ன செஞ்சாலும் உன்னோட ரெண்டாவது மருமக அந்த ஆத்மாவோட தங்கச்சி தான். அதுக்கு தான் அந்த பொண்ணும் உன் பையனத் தேடி அதுவா வந்துருக்கு"

"ம்ச். என்ன மாமா நீங்களும் இப்படி பேசுறீங்க? அந்த பேயா அழையிற புள்ள அது வாழப்போன குடும்பத்தையே கொன்னுட்டு தெரியுமா. வரிசையா மர்ம சாவு தான் அந்த வீட்ல"

"அவங்க விதி முடிஞ்சுருக்கும் போயிருப்பாங்க" என சிரித்தார் சாமி.

"அதுக்குன்னு ஒன்றரை வருஷத்துக்குள்ள வரிசையா அஞ்சு பேரும் திடீர் திடீர்னு சாவாங்களா? இத யாராவது நம்புவாங்களா? எல்லாம் அந்த பேய் பண்ணுன வேலை தான். எட்டு மணிக்கு மேல ஊரத் தாண்ட விடாது தெரியுமா? நாயிங்க ஊளையிடுற சத்தத்துல நடுங்கி போவோம் நாங்களாம்"

"சரி அவங்க பண்ண பாவத்துனால அவங்க இறந்து போயிருக்கலாம்த்தா. அதுக்கு நீ ஏன் பயப்படுற? நல்ல சக்தியோ கெட்ட சக்தியோ, அது எதுவா இருந்தாலும் பிடிப்பான காரணம் இல்லாம உன்ன தண்டிக்காது" என்ற சாமி அவரையே கூர்ந்துப் பார்க்க,

"ஊரே ஒதுக்கி வச்சுருக்கு அந்த குடும்பத்த அதுல எப்படி நா பொண்ணெடுப்பேன்?" எனப் பேச்சை மாற்றினார் படிகாசீ.

"நா சொல்றத சொல்லிட்டேன் உன்னால நாட்கள தான் கடத்த முடியும். முடிச்சு போட்ட வாழ்க்கைய மாத்த முடியாது"

"பேயவும் விரட்ட மாட்டீங்க. நடுவீட்டுக்குள்ள வந்து இருக்குன்னு உறுதியா வேற சொல்றீங்க. ஒரு கெட்டத கூடவே வச்சுட்டு நல்ல காரியம் எப்படி பண்ண முடியும்? வந்து வீட்ட விட்டாவது வெளிய பத்துங்க மாமா"

"அது கெட்டதுன்னா? மனுஷனா வாழுறவன் மனசுக்குள்ள இவ்வளவு அழுக்க வச்சுக்கிட்டு நடமாடுறானே அது மட்டும் நல்லதா?" என்றதும், பதில் சொல்ல முடியாமல் தான் பார்த்தார் படிகாசீ.

"என்னயிருந்தாலும் அது பேயி, அத வீட்டுக்குள்ள வச்சுகிட்டு" என்றார் உத்தமி தயங்கி பயந்து எச்சிலை விழுங்கிக் கொண்டு.

"தூய ஆத்மா!" திருத்தினார் சாமிமாமா.

"ம்ம்" என தலையை ஆட்டிக் கொண்டனர் இருவரும்‌.

"கல்யாணத்த முடிச்சு வை. அந்த சந்தோசத்திலயே அந்த ஆத்மா கிளம்பிடும். உன் வீட்லனா உன் வீட்லன்னு இல்ல உங்கள சுத்தி தான் இருக்குன்னு சொல்றேன்" என்றார் அவர்களைத் தேற்ற வேண்டி.

"அப்ப அவ தங்கச்சிக்கு என் புள்ளைய கட்டி வைக்கத்தான் பேயா சுத்துறாளா?" என அதிர்ந்தார் படிகாசீ.

"அந்தப் பொண்ணு நடத்தி வைக்கணும்னு ஆசைப்பட்டு நடக்காம போன கடைசி ஆசை அது தான? ஒருவேளை அது நடந்தாலே உங்கள விட்டுப் போனாலும் போயிடும்" என்றார் அவர் முடிவாக.

உத்தமி, "இன்னும் என்ன மதினி யோசிச்சுகிட்டு. வாங்க முதல்ல போய் பொண்ணு கேட்போம். எப்படியாது பேசி கல்யாணத்த முடிச்சு வச்சுருவோம். இதுல வேந்தன் தம்பி வாழ்க்கை மட்டுமில்ல உங்க தம்பி வாழ்க்கை அத நம்பி இருக்குற என்னோட என் பிள்ளையோட வாழ்க்கையும் இருக்கு மதினி" என்கவும், திரும்பித் திரும்பி இருவரையும் பார்த்து விட்டு தலையை வேண்டா வெறுப்புக்கு ஆட்டி வைத்தார் படிகாசீ.

"பொண்ணோட அம்மா கிட்ட வேறென்ன சண்டை நடந்ததுன்னு கேளுங்கய்யா‌‌. தம்பிக்கு கூட சொல்ல மாட்டேனுட்டாக" என ஞாபகமாக அதையும் கேட்க சொல்ல,

"சண்டைலாம் இதுக்கு முன்ன இருந்துருந்தாலும் மறந்துட்டு நல்லது நடக்க ஆக வேண்டியத பாருங்க. பழச பேசுனாதான ஞாபகத்துக்கு வரும்?" என்றார் அவர்.

"ஆமா அதான் கல்யாணம் பண்றதுன்னு முடிவு பண்ணிட்டீகள்ல? இனி பழச கிண்டாதீங்க சொல்லிட்டேன்" என எழுந்து கொண்டார் படிகாசீ.

"அப்படி என்னதான் ரகசியமோ" என உத்தமியும் கிளம்ப வேண்டி எழுந்து கொள்ள, தலையசைத்து விடை கொடுத்தார் சாமி தாத்தா.

"அந்தப் பேய் வீட்டுக்குள்ள வராம இருக்க எதாவது சாமி படம் இருந்தா தாங்க மாமா. வாசல்ல வச்சுடுறேன்" என கிளம்பிவிட்டு நின்று கேட்டவரைக் கண்டு சிரித்து, எழுந்து சென்று பூஜை அறையிலிருந்த ஒரு தகடை எடுத்து வந்து கொடுத்தார்.

அந்த தகடு, நல்ல ஆத்மாக்களை ஈர்ந்திழுக்க கூடிய சக்தி கொண்டது. நல்ல ஆத்மாக்கள் என்றில்லாமல் மூதாதையரின் ஆசியையும் பரிபூரணமாக பெற்று தரும் வல்லமை கொண்டது. அவர்கள் ஆத்மாவாக திரிகிறார்கள் என்றால் ஈர்க்கப்பட்டு அவரவர் இருப்பிடம் இழுத்து வரக்கூடிய ஆற்றலை உள்ளடக்கியிருந்தது. அவரின் தந்தை இதை குறிப்பாக எழுதி வைத்துவிட்டு சென்றிருக்க, இவர் அதை செயல்படுத்தி தகடாக உறுமாற்றியிருந்தார். இரண்டே இரண்டு தான் செய்து வைத்திருந்தார். இதுவரை அதை அவரே உபயோகப் படுத்திப் பார்த்ததில்லை. இரண்டில் ஒன்றை அன்று வேந்தனுக்கு அவரே தந்துவிட, மற்றொன்று இதோ இன்று படிகாசீ மூலம் அவர் வீடு செல்கிறது.


வரும்வழி எங்கும், படிகாசீ, 'இது சரி வருமா? பொண்ணெடுத்துட்டு வருங்காலத்துல இதனால எதாவது தலைவலி எனக்கு வந்து சேராம இருக்கணுமே!' என யோசித்து வந்தார் என்றால், உத்தமி, 'நெசமாவே வீட்டுக்குள்ளப் பேயி இருக்குமோ? அதான் அன்னைக்கு மதினிய கரண்டி விட்டு அடிச்சதோ? மாமா கூட சாப்பெடெல்லாம் அதான் தட்டிவிட்டுச்சுன்னு சொன்னாரே நம்பாம போனோமே நாம?' என்ற யோசனையில் வந்தார்.

வீட்டிற்கு வந்ததும் முதல் வேளையாக, மஞ்சள் துணியில் அந்த தகடைக் கட்டி வாசலில் எலுமிச்சைப் பழம் சேர்த்துக் கட்டித் தொங்கவிட்டனர்.

"வாசல்ல கட்டிட்டோம் வீட்டுக்குள்ள ஏற்கனவே இருந்தா என்ன மதினி செய்ய?" என உத்தமி வீட்டைச் சுற்றிப் பய பார்வையை ஒட்டியவாறு கேட்க,

"சும்மா இருடி நீ வேற. வாசல்ல கட்டிட்டா உள்ளயிருந்தாலும் பிடிச்சு இழுத்து வெளிய தள்ளிரும்"

"நெசமாவா?"

"ஆமாங்கேன். நாம் பூசை அறையே வச்சுருக்கோம் சாமிய மீறியா வந்துருவா அவ?" என்றார் படிகாசீ.

"முன் வராந்தாவ விட்டுடீக? வெளி கேட்டுல கட்டிருக்கலாம்ல?"

"ம்ச் எவடி இவ. இங்கன கோலம் போட்டு அதுல விளக்கேத்தி வைப்போம் நம்ம கேட்டுக்குள்ள என்ன நம்ம தெருவுக்குள்ளயே வர முடியாது அவளால"

"அப்ப‌ சரி. ஆமா பொண்ணுக் கேட்கப் போகணும்ல? எப்பப் போவோம்?"

"போவோம் மெதுவா?"

"அந்தப் பேச்சே இல்ல. சாயந்தரம் போய்ட்டு வந்துருவோம். நீங்க லேட்டாக்குவீக அப்றம் அந்த பேயி பரிசதட்ட தூக்கிட்டு வந்தாலும் வந்துரும். கல்யாணத்த முடிச்சா தான் பேயி போவும்னு சாமி தாத்தா சொன்னாரில்ல?"

"சரிடி போவோம். வேற யாரும் வேணாம். முதல்ல நான் போய் பேசிட்டு வரேன். அப்றம் எல்லாருமா இன்னொரு நாள் போய்க்கலாம்"

"அதெல்லாம் உங்கள தனியா எப்டி விடுவேன் நானு. அப்றம் உங்க தம்பி என்ன புடிச்சுக் கத்தவா? நானும் வாரேன், இருங்க நல்ல புடவையா எடுத்து வச்சுட்டு வந்துடுதேன்" என அவர் உள்ளே ஓடிவிட, தலையில் அடித்துக் கொண்டார் படிகாசீ.

நான்கு மணியை நெருங்கும் போதே உத்தமி, அனிருத்திற்கு அழைத்து வீட்டிற்கு வரவழைத்திருந்தார்.

"எங்கட்டி கிளம்பி நிக்க நீயி? காலைலயும் அக்காவும் நீயும் சொல்லாம கொல்லாம கிளம்பி போயிட்டீக? இப்பவும் என்ன?"

"பொண்ணுப் பாக்க போவணும் முதல்ல குளிச்சுட்டுக் கிளம்புங்க. நா பிள்ளைய மாலதி அக்காகிட்ட சொல்லி விட்டுபோட்டு வாரேன்" என அவர் சென்றுவிட,

"எக்கா?" என கத்திக்கொண்டே படிகாசீயை தேடிச் செல்ல, பின் மாடி படிக்கட்டில் தலையை சீவிக்கொண்டு அமர்ந்திருந்தார். பட்டுசீலை எல்லாம் கட்டி ஏதோ வெளியே செல்லப் போவது போல தான் கிளம்பி இருப்பதாகத் தெரிந்தது.

"பொண்ணுப் பாக்கவா போறீக? இரு உன் மகனுக்கு போனப் போடுதேன் அவன்ட்டயும் ஒருவார்த்தை சொல்லிட்டு போ" என போனை எடுக்க,

"ம்ச் உனக்கும் சொல்லிட்டாளா அவ? சரியான ரேடியோ பெட்டிடா உன் பொண்டாட்டி" என அவர் எரிந்துவிழ,

"நேத்து தான அவன் சொன்னான்? இன்னைக்கு எந்தப் பொண்ணப் பாக்க கிளம்பிட்ட நீயி?"

"அவன் காட்டுன பொண்ணத்தான் பாக்கப் போறோம், போதுமா? உன் பொண்டாட்டி தான் அத இன்னைக்கே பாத்தாகணும்னு கிளம்பி நட்டுக்கு நிக்கா" என்றவர், "யாருக்கும் தெரியாது முதல்ல நாங்கப் போய் பாத்துப் பேசிட்டு வந்தப்றம் வெளில சொல்லிக்கலாம். வெளிலனா உன் ரெண்டு மருமவனுங்க, உன் மாமன், அந்த வீட்ல தங்காத ராங்கி எல்லாருக்கும் சேர்த்து தான் புரியுதா?" என்க, வேகமாக சரியென்று விட்டார்.

மனதுவந்துக் கிளம்பி நிற்பவரைத் தடுக்க மனமில்லை அவருக்கு, ஆனால் காலையில் செல்லம்மாள் பேசியதும் நினைவில் நின்று அவரைப் பிரித்து மேய்ந்தது.

"இந்தப் பொம்பளைங்கள எதுல சேக்குறதுனே தெரியலையே முருகா! எப்ப என்ன முடிவெடுப்பாங்கனே தெரியாது போல, நம்மளத்தேன் திக் திக்குன்னே வச்சுருக்காய்ங்க. இப்ப அக்கா அங்கப் போய் நின்ன நேரம்னு அங்க மல்லி அம்மா தனிக்குடித்தனம் அதிதுன்னு பேசுனா? காரியமே கெட்ருமே!" என தலையில் கையை வைத்து உச் கொட்டியவர், மனைவியை தேடிக்கொண்டு வெளியே வந்தார்.

மகனை உலகநாயகன் பொறுப்பில் விட்டு செல்ல முடியாது, தேமே என அமர்ந்திருந்துவிட்டு அவன் விழுந்து வாரினால் கூட பார்க்கவில்லை என்று தான் கூறுவார். அதனாலேயே பக்கத்தில் இருப்பவரின் வீட்டில் இருக்கும் சிறுவனோடு விளையாட விட்டுவிட்டுப் பார்த்துக் கொள்ள சொல்லிவிட்டு வந்தார்.

"என்ன மாமா குளிக்கப் போகலையா இன்னும்? அப்ப வரலையா நீங்க?" என உத்தமி வர,

"ஓங்கிக் குத்திபுடுவேன். ஒரேநாள்ல எங்க அக்கா மனச எங்கெனுட்டி மாத்துன? அங்க அந்தம்மாவும் பொண்ணு தரமாட்டேன்னு தான் சொல்லிட்ருக்கு. திடீர்னு போய் நின்னு முடியாதுன்னு சொல்லிட்டா அக்கா அதையே காரணமா புடிச்சுகிடும் தெரியும்ல? நாந்தான் பேசிட்ருக்கேன்னுல்ல என்ன அவசரங்கேன் அதுக்குள்ள உனக்கு?"

"ம்ச் எங்கிட்ட எகிறி என்ன செய்ய? காரணமே நீங்கதேன். பேயி பேயின்னு சொன்னீகளே அத நீங்கத்தான் தேடிப்போய் வண்டியேத்தி கூட்டியாந்தேம்னு சொன்னீகளா?"

"ஆமா வேண்டுதல் எனக்கு? அதெல்லாம் என் மருமவன் பாத்த வேலை. கொலையாளிய கோட்டுல விசாரிக்கறவனாட்டம் பேய் பண்ண கொலைய விசாரிக்க கூட்டியாந்துருக்கான்"

"ஆத்தே! அது என்னன்னு செயில்ல புடிச்சுப் போடப்போறாக?"

"அத எதாவது குடுவைக்குள்ள தான் அடைக்க முடியும். செயிலுக்குள்ளலாம் அடைக்க முடியாது"

"பின்ன என்னத்துக்கு வீட்டுக்கு கூட்டியாந்தீக? அவுகதேன் சின்ன புள்ளன்னா கூடயிருக்க பெரிய மனுஷன் கூறு சொல்ல வேணாம்? எவனாவது பேய்ய வீட்டுக்கு வான்னு கூட்டியாருவானா?"

"ஏட்டி நா சொல்லி அவன் கேட்டுற மாறித்தான். அதும்போக அவேன் அந்த பேய்ய விடாம சுத்த காரணம், அந்த மல்லி புள்ள‌. அத கட்டிகிடணும்னு இந்த புள்ளைக்கு சாந்தி வாங்கி தரேம்னு சொல்லிட்டு திரியிதான்‌. இப்ப அது முக்கியமில்ல, அந்த தேனு புள்ள பேயா முன்ன நின்னுதேன் கல்யாணத்த நடத்தி வைக்கப்போவுது. அதுக்கு முன்ன அக்கா பேச அந்த மதினி பேசன்னு எதாவது ஆச்சு, அந்தப்பக்கம் பேயா அந்தப்புள்ள ஆடும் இங்க என் மருமவன் ஆடுவான். ரெண்டையும் யார் சமாளிக்க?"

"உங்க அக்கா எதுவும் பேச மாட்டாக. இந்த கல்யாணம் நடந்தாதேன் அந்த தேனுபுள்ள ஆத்மா சாந்தி ஆகுமாம். அதனால முதல்ல கல்யாணத்த முடிச்சு ஆவியா சுத்துறப் பிள்ளைய கிளப்புற வழியப்பாருங்கன்னு சாமி தாத்தா சொல்லிவிட்டுட்டாரு"

"அங்கையா போனீங்க?"

"ஆமா உங்களுக்கு பேய் புடிச்சுட்டுன்னு கயிறு வாங்கப் போனோம். அவருதான் எல்லாம் விளக்கிச் சொன்னாரு. அதோட கடைசி ஆசை நிறைவேறாம அந்த புள்ளையால போ முடியாதாம்" என்றவரை நறுக்கென்று கொட்டி வைத்தார் அனிருத்.

"ஏங்க?" என அவர் சண்டைக்குக் கிளம்ப,

"போ போயி அக்கா கிளம்பிருச்சான்னு பாரு. நா சட்டைய மாத்திட்டு ஓடியாறேன்" என்றவர் மருமகனுக்கு அழைத்துக் கொண்டே தான் அறைக்குள் சென்றார். சற்று தாமதமானாலும் தன்னை விட்டுக் கிளம்பி விடுவார்களோ என ஒருகையால் போட்டிருந்த சட்டையை அவிழ்த்துக் கொண்டே தான் ஓடினார்.

"என்ன மாமா?" என அந்தப் பக்கம் அழைப்பை ஏற்றவனுக்கு சுருக்கமாக நடந்ததையும் நடக்கப்போவதையும் சொல்லிப் போனை வைத்துவிட்டு பெண் பார்க்கத் துரிதமாக ஆயத்தமானார்.

மூன்று வழக்குகளும் முடியவே மணி நான்கை தொட்டிருக்க, வேந்தன் அப்போது தான் ஆயாசமாக வந்தமர்ந்திருந்தான். அடுத்து தனது அலுவலகம் செல்லக் கிளம்ப வேண்டும் என யோசித்துக் கொண்டிருக்கையில் தான் அனிருத் விஷயத்தைப் பகிர்ந்து விட்டு வைத்தார்.

"என்னடா இது? மல்லி அம்மாட்ட பேசி முதல்ல ஒத்துக்க வைக்காம இவங்க அங்க போறது சரியா வருமான்னே தெரியல. இதுல சொல்லாம வேற கிளம்பியாச்சு" எனப் புலம்பி, தலையைத் தேய்த்துக் கொண்டு வெளியே வந்து, நீதிமன்றத்திற்கு வெளியே இருந்த டீக்கடையில் டீயை வாங்கிக் குடிப்பதற்காக வாயில் வைத்தவாறு திரும்ப, அவன் முன் வந்து நின்ற பேருந்திலிருந்து இறங்கினாள் பவளமல்லி.

கை கடிகாரத்தில் மணியைத் திருப்பிப் பார்த்தான், ஐந்து மணி, ஆறுமணிக்கு தான் அவளது வேலை நேரம் முடியும். இவனைப் பார்க்க வேண்டி சொல்லிவிட்டு கிளம்பி வந்திருக்கிறாள், காலையிலேயும் தாமதமாக தான் சென்றிருப்பாள், இப்போதும் சொல்லிவிட்டு வந்திருக்கிறாள் என்றால் அவ்வளவு அவன் நினைப்பில் வாடி இருக்கிறாள் என புரிய மென்மையாக சிரித்துக் கொண்டான். எதிரே நின்ற இவனைக் கவனிக்கவே இல்லை, கடந்து விறுவிறுவென நடந்து நீதிமன்றத்திற்குள் சென்றுவிட்டாள்.

இவனும் வேகமாக மிச்சமிருந்த டீயை வாயில் கவிழ்த்திவிட்டு, அவள் பின்னால் சென்றான். வேகமாக சென்றவள், அவன் அலுவலக அறைவரை சென்று விட்டு, அதற்குள் செல்லாமல் வெளியவே நடந்து வந்த வேகத்தை தனிப்பவளாக பொத்தென்று அமர்ந்து கொண்டாள்.

அவனும் வந்து அவளுக்கு அடுத்திருந்த தூணில் சாய்ந்து நின்று அவளைத் தான் பார்த்துக் கொண்டு நின்றான். காலையில் கட்டியிருந்த அதே புடவைதான் அலுத்து சலித்து வந்திருக்கிறாள் என அவள் நெற்றியில் முத்து முத்தாய் நின்ற வேர்வைத் துளிகள் காட்டிக் கொடுத்தது.

எட்டி அவன் அறையைப் பார்த்தாள், உள்ளே யாருமே இல்லை என்றதும் முகத்தில் குழப்பம் சூழ, எழுந்து சென்று வாசலில் நின்றே உள்ளறையை மொத்தமாக பார்வையால் சுற்றி வந்துவிட்டு, முகத்தில் அதீத சோர்வு பொங்க, மறுபடியும் வந்து அதே பெஞ்சில் அமர்ந்து தோள் பையிலிருந்து போனை எடுத்து சில நொடிகள் அதை அப்படியே கையில் வைத்துக் கசக்கி கொண்டு அமர்ந்திருந்தாள்.

'அவனை பார்க்க முடியாதோ?' என்ற அவளின் தவிப்பை ரசித்து அமைதியாக நின்றான் அந்த சட்ட ஆலோசகரானவன்.

ஒருவழியாக முடிவெடுத்து அவனுக்கு அவள் அழைக்கையில் அழைப்பு வெகு அருகில் கேட்கவும் தான் திரும்பிப் பார்த்து இவனைக் கண்டு விட்டு பட்டென்று எழுந்து நின்றாள்.

"ப்பா பார்க்காமலே வந்த ஸ்பீட்ல கிளம்பிப் போயிடுவியோன்னு நினைச்சுட்டேன் போ" என்றவாறு அவ்வளவு நேரம் அவள் அமர்ந்திருந்த பெஞ்சில் அமர்ந்து, "சிட்!" என அவளுக்கும் தட்டிக் காண்பிக்க,

"இங்கயே நின்னு நா தேடுறத வேடிக்கைப் பாத்தீங்களா நீங்க?" என்றாள் பட்டென்று அமர்ந்தவாறு, இரு கண்களையும் மூடித்திறந்து, தலையையும் ஆமென்று அசைத்துக் காண்பித்தான்.

"நா நீங்க இங்க இல்லன்னு பயந்துட்டேன் ஒரு நிமிஷம்"

"ஃபோன் பண்ணி கேட்காம கிளம்பி வர கூடாது பவளமல்லி. நா எப்பவும் இங்கேயே உங்காந்துட்ருக்க மாட்டேன்"

"ம்ம், இனி வரவே மாட்டேன்"

"ஏனாம்?" என்றவன், அவள் பதில் சொல்லாமல் இருக்கவும், "என்னாச்சுமா?" என்றான் தன்மையாக.

"சாரி சொல்லலாம்னு வந்தேன்" என்றாள் குனிந்து கொண்டு, அவள் உடல்மொழியில் உதட்டை மடக்கி சிரித்தான் வேந்தன்.

"அம்மா உங்கள உங்க ஃபேமிலில இருந்து பிரிக்க நினைச்சு அப்படி சொல்லல" என்றாள் சேர்த்து.

"ம்ம் எனக்கு ஆளுங்கள புரியும். உங்கம்மா ஏன் சொன்னாங்கன்னும் புரிஞ்சது" என்றான் அவனும்.

"என்ன பிரியணுமோன்னு நினைச்சு அப்படி பேசிட்டாங்க. இதெப்படி சரி பண்றது?"

"அதுவே சரியாகிடும்"

"எப்டி?"

"எப்படியாவது"

"என்னங்க?" என அவள் பாவமாக பார்த்ததில், ஒரு கண்ணை மட்டும் அடித்து சிரித்தான் இப்போது. காலையில் கோபமாக சென்ற முகத்தில் இப்போது கோபமில்லை என்றதில் அவ்வளவு ஆசுவாசம் அவளுக்கு.

 
அத்தியாயம் 19

பவளமல்லி அவனையே பார்க்க, அதை உணர்ந்தவன் மெல்ல சிரித்து, "நொடிக்கொரு தரம் உன்னை நினைக்க வைத்தாய், அடிக்கடி என்னுடல் சிலிர்க்க வைத்தாய்" என முகத்தை மட்டும் சற்று சாய்த்து அவளருகில் கொண்டு சென்று பாட, பாடிக்கொண்டே அருகில் வந்தவனை அவள் கண்ணை அகல விரித்து அதிசயம் போலதான் பார்த்தாள்.

நெஞ்சை நீவி விட்டு கொண்டவன், "உன்ன இங்க சாச்சுக்கணும்டி சீக்கிரம். ரொம்ப நாளா வெயிட் பண்ணிட்ருக்கேன்" என ரகசியமாக சொல்ல, சின்ன சிரிப்புடன் குனிந்து கொண்டாள் பவளமல்லி.

சற்று நேரம் அவன் அப்படியே அந்த பெஞ்ச்சில் சாய்ந்தமர்ந்து அவளை நிதானமாக ரசித்திருக்க, அவன் குறுகுறு பார்வையை மாற்ற எண்ணி, "மறுபடியும் அம்மாட்ட வந்து பேசுவீங்களா? நா காலைல சண்ட போட்டு தான் வந்தேன். வேற மாப்ள பாக்காதன்னு முடிவா சொல்லிட்டேன். அதுக்காகவே நீங்க மறுபடியும் வந்து பேசினா சரி சொல்லுவாங்கன்னு நினைக்கிறேன்" என்றாள் தன்மையாக.

"சரி வா பேசலாம்" என அவன் உடனேயே கைச்சட்டையை ஏற்றிவிட்டு எழுந்து கொள்ள,

"என்ன இப்பவேவா?" என்றாள் அவளும் அதிர்ந்து எழுந்து.

"சீக்கிரமா உன்ன அணைச்சுக்கணும்னு இப்பத்தான சொன்னேன். சோ டிலே பண்ணவே கூடாது. நீ வேற காலைல கோபமா பேசிட்டு வந்திருக்கேன்ற அதே சிம்பத்திய இப்ப யூஸ் பண்ணிடுவோம் வா" என அவள் கையையும் பிடித்திழுத்துக்கொண்டு நடக்க, அவன் பிடித்த இடத்தில் ஜிவ்வென்று பரவும் உணர்வை அனுபவிக்க முடியாத எரிச்சல் மண்ட அவனோடு நடந்தாள்.

"இன்னைக்கு தானே காலைல சண்ட போட்ருக்காங்க. ஒரு ரெண்டு நாள் கழிச்சு வாங்களேன்ங்க?"

"இதெல்லாம் ஆற போடவே கூடாது. நீங்க சொன்னதுக்கு உங்க பொண்ணு என்ன சமாதானம் பண்ண வந்துருக்கான்னு காமிக்க வேணாம்?" என அவன் சொன்னதும்,

"எதே! அப்ப என்ன போட்டு குடுக்கத்தான் இவ்வளவு அவசரமா கிளம்பிருக்கீங்களா நீங்க?"

"நம்ம லவ் பவர காட்ட போறோம்னு சொல்றேன்டி பவளம்"

"ஒன்னும் வேணாம்" என அவள் கையை உருவ முயல,

"பிச்சுருவேன் கையை உருவ வேற பார்ப்பியா நீ?" என அவன் நின்று திரும்பி முறைக்கவும்,

"இப்ப வீட்டுக்கு வேண்டாங்க" என்றாள் கெஞ்சலாக.

"போறோம் பேசுறோம். உங்கம்மா இப்பவும் வீம்பா பேசுனா என் கூடவே கிளம்பி வந்திடணும் நீ"

"நா மாட்டேன். அம்மா ஒத்துக்காம அப்டிலாம் வரமாட்டேன் நானு" என்றாள் அழுத்தமாகவே.

"அடிப்பாவி அப்ப என் நிலைமை?"

"ஏன் உங்க நிலைமைக்கு என்ன? அம்மாவ உங்கம்மாவ விட்டு பேசி ஒத்துக்க வைங்க. அவங்க ரெண்டு பேருக்கும் தானே பிரச்சினை? நிச்சயமா எங்கம்மா வெடுக்குன்னு எதுவும் பேசிருக்க மாட்டாங்க"

"அப்ப எங்கம்மா தான் சண்டை பிடிச்சாங்கன்னு முடிவே பண்ணிட்ட?" என்றான் வேண்டுமென்றே. இருவரும் அவன் ஜிப்ஸியை நெருங்கிய பின்னரும் உள்ளே ஏறாமல் நின்று பேசிக் கொண்டிருந்தனர்.

"உங்கம்மா பேசலாம். ஏன்னா அவங்கள சுத்தி புருஷன், தம்பி, ரெண்டு ஆம்பள பிள்ளைங்க, செல்வாக்கான வாழ்க்கைன்னு இருக்குறவங்க. அவங்க தைரியமா என்ன வேணா பேசலாம். ஆனா எங்கம்மா? அவங்கள மூஞ்சுக்கு நேரா இடக்கா பேசுறவங்கட்டையே கம்முன்னு தான் வரமுடியும். அப்படித்தான் வருவாங்க ஏன்னா கைக்குள்ளன்னு வச்சுருக்குறது ஒரே ஒரு பொண்ணு அதும் கல்யாணம் ஆகாம இருக்கு. எல்லார்ட்டையும் அடங்கி அடிபணிஞ்சு தான் போகணும்னுன்ற நிலை அவங்களிது. பொண்ணுங்க வாழ்க்கைக்காக எதையும் சமாளிக்க கூடியவங்க என் அம்மா. அவங்களே உங்கள வேணான்னு சொல்லுற அளவுக்கு இருக்குன்னா உங்கம்மா அப்படி ஏதோ செஞ்சுருக்காங்க. அது என்னன்னு தெரிஞ்சா என்னால கூட உங்கம்மாட்ட சகஜமா பழக முடியாம போயிடும்னு தான் நா என்னன்னு தெரிஞ்சுக்க முயற்சியே பண்ணாம இருக்கேன். இப்ப சொல்லுங்க நீங்க வேணும்னு நா எந்தளவுக்கு நினைக்கிறேன்னு?"

"ஆதரவிருக்கிற எல்லாராலையும் பேச முடிஞ்சுடறதுமில்ல, ஆதரவே இல்லன்னு எல்லாரும் அமைதியா போயிடறதுமில்லடி. நமக்கு நம்ம தான் ஆதரவுன்னு போராடுற நிறைய பேர் இன்னைக்கு சொசைட்டில இருக்கத்தான் செய்றாங்க"

"எங்கம்மா முதுகெலும்பில்லாம தான் அவங்களும் வளந்துருக்காங்க எங்களையும் வளத்துருக்காங்கங்க"

"தனிக்குடித்தனம்லாம் வாய்ப்பே இல்லடி. அன்னைக்கு கூட்டிட்டு போயிருக்கலாமேன்னு கேட்டியேன்னு தான்டி அப்டி சொன்னேன். உன் மாமியாரும் ஆளிருக்குன்னு தைரியத்துல என்ன வேணா பேசக் கூடிய ஆள் கிடையாது. எதையும் மனசுல வச்சுக்காம பேசிடுவாங்க. அப்படி யாராவது எதாவது சொல்லி கூட தெரியாம உன் அம்மாட்ட எதையாவது வாய் விட்ருக்கலாம். எப்படியும் விஷயம் வெளில வரும். அதுக்குள்ள நீ மாமியார் மருமக சண்டைக்கு ரெடியாகாத"

அனைத்தையும் கேட்டவள், அவன் முடித்த விதத்தில் செல்லமாக முறைத்து, "நானும் உங்கள தனியா வர சொல்லலங்க? அம்மாட்ட பேசி ஒத்துக்க வைங்க. எங்கம்மாக்கு நம்பிக்கை குடுங்கன்னு தான் சொல்றேன்" என பொறுமையாகவே சொல்ல,

"அதுக்கு தான் பேசுவோம் ஏறு போவோம்" என கதவை திறந்து விட,

"இப்பவே போனா சண்டை வரும்னு தானே இவ்வளவு பேசுனேன்?" என்றாள் அழுவது போல்.

"ம்ச் ஏறுடி, நேரா போய் பேசிக்கலாம்" என அவளை முறைக்கவும், தானும் முறைத்தவாறு ஏறி அமர்ந்தாள்.

அவன் மாமனுக்கு ஒரு தகவலை தட்டிவிட்டு விட்டு சமத்தாக வண்டியை எடுத்துவிட்டான்.

அங்கு வேந்தன் வீட்டிலிருந்து பெண் வீடு கிளம்பியவர்களைக் கண்டு உலகநாயகன், "எங்க கிளம்பிட்டீங்க?" என்றதில்,

"உனக்கு எதுக்கு அது? தெரிஞ்சாலும் மல்லாக்க தான படுத்திருக்க போற? போய் அதையே செய் போ" என படிகாசீ சுள்ளென்று பேசிவிட,

"ஏன்க்கா? மாமா தெரியாமத்தான கேக்காக?" என்றார் அனிருத்.

உத்தமி, "கோவில் வரைக்கும் போயிட்டு வாரோம்ணே, இவுக பேக்டரிக்கு போறாக. தம்பி இங்கனதேன் விளையாண்டுட்டு இருக்கான் பாத்துகிடுங்க" என்றுவிட, பெரிதாக தலையை ஆட்டி வைத்தார் உலகநாயகன்.

வெளியே வந்து ஒரு ஆட்டோவை பிடித்து, மூவரும் ஏறியதும், "எப்படியும் மாமாட்ட யாராவது வந்து சொல்லத்தான் போறாங்க. நீ பெரிய ரகசியத்தை மறைக்கற நினைப்பு தான்" என்றார் அனிருத்.

"அப்படி யாரு வந்து பேசிட்டு இருக்காங்க? அந்த நாகராஜன் அப்பா கூடத்தான் என்னவோ புதுசா ப்ரண்டு புடிச்சு சுத்திட்டு திரிஞ்சாரு அது அவரு நேரமோ என்னமோ பொட்டுன்னு போயிட்டாரு. அந்த மனுஷன் போனதுல இருந்து வெளிலயே போகாம வீட்டுக்குள்ளயே தான இருப்பு? யாரு இவுகள தேடிப்போயி புரணி பேச போறா? பெரிய சம்மந்தி காதுக்கு வேணா போகும். அங்க என்ன பதில் சொல்லன்னுத்தான் நா யோசனையில இருக்கேன். கொஞ்சம் பேசாம வாங்க ரெண்டு பேரும்" என அதையும் எரிச்சலாக தான் மொழிந்தார்.

"இப்படி மூஞ்ச வச்சுட்டு யாராவது பொண்ணு பாக்க போவாகளா மதினி? சும்மா கலகலன்னு வாங்களேன், ஏங்க நீங்க சொன்னா என்ன?" என்றார் உத்தமி.

"கலகலன்னு வரணுமா? அங்க போனா சண்டை வராம இருக்கணும்னு நா கந்தா கடம்பான்னு வாரேன். உனக்கு கலகலப்பு கேட்குதோ?" என அனிருத் பேச, மாறி மாறி பதில் சொல்லிக் கொண்டு வந்ததில் பவளமல்லி வீடு வந்திருந்தது.

அவர்கள் மூவரும் ஆட்டோவிலிருந்து இறங்கியதை அந்த தெருவிலிருந்த சிலர் வேடிக்கை பார்க்கவே செய்தனர். செல்லம்மாளும் கூட, "யாரு தேனு நம்ம வீட்டு வாசல்ல வந்து இறங்குறது?" என கேட்டுக் கொண்டே வெளியே வந்து எட்டி பார்த்தார். படிகாசீயை கண்டதும் கொஞ்சம் கோவம், கொஞ்சம் படபடப்பு கலந்த பயம் என அனைத்தும் ஒன்றாக எழுந்து முன் வந்து நின்றது.

"வக்கீல் சொல்லித்தான் பேச வந்துருப்பாங்க. நாந்தான் சொன்னேன்ல வக்கீல் பாப்பா மேல கண்ணா இருக்காருன்னு" என அருகில் தேன்பாவனி குரல் மட்டும் கேட்டது.

"எடக்குமடக்கா எதையும் பேசிடாதீக. உள்ள அந்தம்மா மட்டுமில்ல, அந்த தேனு பிள்ளையும் இருக்கு. எது பேசுறதுனாலும் அந்த புள்ள பொடனிக்கு பின்னதேன் நிக்கும்னு நெனப்புல வச்சுகிட்டு பேசுங்க சொல்லிட்டேன்" என்றார் அனிருத் கிசுகிசுப்பான குரலில். அவருக்கு அங்கிருந்த படப்படப்பில் தோன்றவில்லை ஆனால் இந்த தெருவிற்குள் நுழைந்ததுமே தேன்பாவனி ஞாபகத்திற்கு வந்திருந்தாள்.

'அக்கா எதாவது பேசுனா உசுரோட இருக்க தங்கச்சியே சண்டைக்கு வருது, பேயா இருக்க அக்கா செவுலோட சேர்த்து வச்சாலும் வைக்குமே. இதை சொன்னாலே அக்கா வாய தொறக்காதே. அட அனிருத்து இதுக்கா பயந்த?' என ஆசுவாசமாகிவிட்டார். ஆட்டோவை விட்டிறங்கியதும் மறக்காமல் அவர் காதில் ஓதியும் விட்டார்.

"ஏங்க பேய் இங்கயா இருக்கு?" என உத்தமி நெஞ்சில் கைவைத்து விட,

"பேயின்னு சொல்லாதட்டி வாயிலயே போடும். நாந்தான இங்கன கொண்டாந்து விட்டேன் எனக்கு தெரியாதா? பொண்ண மட்டும் பவ்யமா கேட்டுட்டு போயிட்டே இருக்கணும். நமக்கு வேற வழி இல்ல. மனுஷனா இருந்தா எதுத்தாக்குல பத்து பேரு நின்னாலும் பந்தாடுவான் உன் மாமன், பேய எதுக்க என்னால முடியாதுபா" என்க, படிகாசீ முறைத்து பார்த்தார் என்றால், உத்தமி பயந்து பார்த்தார்.

"மதினி கேட்டுகிட்டீகளா? உங்க தம்பியாலயே முடியாதுன்னா நம்மலாம் எம்மாத்துரம்? பொண்ண பேசி முடிச்சு அந்த தேனு பேயிட்ட நல்லவுகளா இருந்துட்டு கிளம்பிருவோம். சரியா?" என கேட்க,

"எனக்கு தெரியும் பேசாம வாட்டி" என்றார் படிகாசீ பல்லைக் கடித்து கொண்டு.

"அஞ்சு பேர போட்டு தள்ளுன பேயி பாத்துக்கோக்கா சொல்றத சொல்லிட்டேன்" என பின்பாட்டு பாடிக்கொண்டே தான் சென்றார் அனிருத்.

வெளியேவே பேசி நின்ற மூவரையும் இதற்குள் மொத்த தெருவும் கண்டுவிட்டிருந்தது. எல்லோருக்கும் விஷயம் தெரியும் என்பதால் மறுபடியும் பெண் கேட்டு தான் வந்திருக்கின்றனர் என்றும் அவர்களால் யூகித்து கொள்ள முடிந்தது.

"இப்ப ரெண்டு மூணு தடவையா உங்க வீட்டு வக்கீல இந்தபக்குட்டு பாக்கும் போதே நினைச்சேன் நீங்க சீக்கிரமே வருவீகன்னு" என்றார் பவளமல்லி வீட்டின் வலதுபுற வீட்டில் இருந்தவர்.

"பின்ன என்னக்கா வண்டில ஒன்னா போறளவுக்கு வந்துருச்சு இனியும் ஆறப்போட முடியாதில்ல?" என்றார் சத்தமாக சிரித்துக் கொண்டே இடதுபக்க வீட்டிலிருந்தவர்.

இரண்டு பக்கமும் திரும்பி பார்த்த படிகாசீ, "ஏம்ட்டி உங்க வீடுகள்ல நடக்காதததான் என் வீட்ல கண்டுகிட்டீகளாக்கும்? எதுக்குனாலும் பேப்பர தூக்கிட்டு என் புள்ளைட்டதேன் வந்து நிக்கணும் நெனப்புல இருக்கட்டும்" என்கவும்,

"பொண்ணு கேட்டு நீங்களே தேடி வந்துருக்கீகளேன்னு சந்தோஷத்துல பேசுனா உடனே சடைக்கீகளேக்கா" என அவரவர் வீட்டிலிருந்து இறங்கி வந்துவிட, அங்கிங்கு இருப்பவர்களும் வந்து இணைந்து கொண்டதில், செல்லம்மாள் விழித்தார் என்றால், 'அங்க வீட்டுல உள்ளவுகளுக்கு தெரிய கூடாதுன்னு வந்துட்டு இங்க ஊர கூட்டியாச்சு' என முனங்கினார் அனிருத். அந்நேரத்தில் தான் தானும் வந்துகொண்டிருப்பதாக தகவல் வேந்தனிடமிருந்து வந்து விழுந்தது.

"சரிதான். கல்யாணத்த பண்ணணும்னு முடிவு பண்ணிட்டவன இனி புடிச்சு நிறுத்தவா முடியும்? நாம எல்லா ஏற்பாட்டையும் பாக்க வேண்டியது தான்" என்றார் வெளிப்படையாகவே, பெண்கள் எல்லோரும் வெளிப்பட்டியை திறந்து கொண்டு உள்ளே சென்றிருந்தனர்.

"நம்மள எங்கன போனாலும் மதிக்க மாட்றாய்ங்களே!" என சடைத்துக் கொண்டு தான் தானும் உள்ளே சென்றார்.

"என்ன செல்லம்மாக்கா இப்படியே நிக்கிற. வான்னு கேளு, சமுக்காளத்த எடுத்து விரி" என்றவாறு அவர்களே உள்ளே சென்று அனைத்தும் செய்ய துவங்க,

செல்லம்மாள், படிகாசீயை பார்க்க, படிகாசீ செல்லம்மாளை பார்த்தார். இருவருக்குமே பேச்சு வரவில்லை.

"கூப்பிடுக்கா" என இன்னொருவர் செல்லம்மாள் அருகில் வந்து அவர் தோளில் தட்டவும், திடுக்கிட்டு விழித்து, "வாங்க!" என்றார் பொதுவாக.

"பேயா இருக்க பிள்ளையும் வந்து வாரியா இல்லையான்னு கேட்டாத்தான் வருவீகளா? வாங்க போவோம்" என்ற உத்தமி படிகாசீ கையைப் பிடித்து கொண்டே வீட்டினுள் நுழைந்து சுற்றிலும் தேனுவை தான் தேடினார்.

'முன்னபின்ன பேய நேர்ல பாத்ததும் இல்ல. எங்க எப்படி நிக்கும்னு வேற தெரியல. கண்ணுக்கு தெரியுமா தெரியாதா? மாமா சொன்ன மாதிரி பொடனிக்கு பின்ன எதும் நிக்குதோ?' என முதுகின் பின்னேயும் பார்த்து கொண்டு வந்தார்.

"உங்க வீட்டுக்காரரயா தேடுதீக? வெளில தான் நிக்காக வருவாக. உட்காருங்க" என்றார் பின்னால் வந்தவர்.

"ஹி! ஹி! வரட்டும் வரட்டும்" என்ற உத்தமி, பயத்தை உள்விழுங்கி படிகாசீயை இடித்து கொண்டு அமர்ந்தார். அனிருத் அனைத்தும் கேட்கும் வகையில் வந்து வாசல் அருகே நின்று கொண்டார்.

அங்கு தான் தேன்பாவனியும் நின்று அனைவரையும் பார்த்திருந்தாள்.
செல்லம்மாள் அமைதியாக நிற்க, வேறொருவர் தான் உள்ளேச் சென்று தண்ணீர் எடுத்து வந்து கொடுத்தார்.

"பாப்பா எங்க ? வேலைக்கு போயிருக்காளா?" என்றார் உத்தமியே.

"ம்ம் காலைல ஒரு மாப்ள வீடு வந்து பாத்துட்டு போனாங்க அதனால் காலைல வேலைக்கே லேட்டா தான் போனா. இப்பவும் வர ஆறு மணிக்கு மேல் ஆகிடும்" என்றார் செல்லம்மாள்.

"அதுக்கென்ன நாங்கதான் முன்னவே பிள்ளைய பார்த்துட்டோமே? இப்ப நாம பேசுறத மட்டும் பேசி முடிச்சுடலாம். அடுத்தடுத்து உங்கள்ட்ட வந்து பேச முடியாத சூழ்நிலை ஆகிப்போச்சு. அதான் நாங்களும் நாள கடத்திட்டே வந்துட்டோம். இனி பேசி கல்யாணத்த முடிச்சுட்டா நல்லதுன்னுதேன் கிளம்பி வந்தோம்" என அவர் கூறியதில், செல்லம்மாள் திரும்பி படிகாசீயை பார்க்க,

"மதினி பேசுங்க அதுக்கு தான வந்துருக்கோம்?" என உத்தமி அவரையும் இடித்து கண்ணைக் காட்டி சொல்ல,

ஒரு பெருமூச்சுடன் நிமிர்ந்தவர், "அன்னைக்கு ஏதேதோ பிரச்சினையாகி நம்ம பேச வந்த நல்ல காரியம் தட்டி போய்ட்டு. உங்க மூத்த பொண்ணு தான் இதுல ரொம்ப ஆர்வமா இருந்ததும். இன்னைக்கு அந்த பொண்ணு பேயா இருக்குன்னுலாம் பேச்சா இருக்கு. நா போய் எங்க பெரியவர் ஒருத்தர்ட்ட கேட்டேன், ஊருக்கு வெளில நிக்கிற அந்த ஆத்மா இந்த வீட்டுப்புள்ளன்னுதான் ஊரே நம்புது. அது ஆத்மா சாந்தி அடையாம இருக்க தங்கச்சி கல்யாணமும் ஒரு காரணமா இருக்கும்னு என் மாமா சொல்றாரு. என் பையனும் கட்டுனா உங்க பொண்ணத்தான் கட்டுவேன்னு நிக்கிறான். இதனால எல்லாருக்கும் நல்லதுன்னா அத எதுக்கு நா தட்டிவிடணும்? சேர்த்து வச்சுருவோமேன்னு தான் பேச வந்தேன்" என்றார். இறங்கியும் வராதது போலவும், 'நான் இவ்வளவு இறங்கி வந்ததே உங்களுக்காக தான்' என்பது போலவும் இருந்தது அவர் பேச்சு.

"உடைச்சு பேசிட்டாகளே? அவுக பையனுக்கு வேணும் தான். ஆனா உன் வீட்டுல இதால ரெண்டு நல்ல விஷயம் நடக்கபோவுது செல்லம்மா. ஊருக்கும் சேர்த்து நல்லதுன்னா நீ யோசிச்சு நிக்கிறதுல அர்த்தமே இல்லை. ஊருக்கு வெளில நின்னு மனுஷங்கள பயமுறுத்துறது உன் பொண்ணுதேன் தெரியும்ல? அதுக்கே நீ இம்புட்டு யோசிக்காம சட்டுபுட்டுன்னு முடிவெடுக்கணும்" என அன்று வந்த சுஜா பெரிய மனுஷி தோரணையில் பேச, சரியாக அந்நேரம் தலைக்கு மேலிருந்த ஓடு உடைந்து அவள் நடு மண்டையில் நச்சென்று விழுந்து, வலி உயிர் போனது.

"அதான் சரி!" என்றார் அனிருத்.

"உடைஞ்ச ஓட்டுக்கு நேரா போய் உக்காந்தியாக்கும்?" என அவள் மாமியார் அவளையே திருப்பி திட்ட,

"சட்டுன்னு பதில சொல்லு செல்லம். இதுக்குள்ள எம்புட்டு நேரம் உட்கார்ந்திருக்க நாங்களும்? உன்ன மதிச்சு அவுக திரும்ப வந்து பேசுறதே பெரிய விஷயம். சரின்னு சொல்லி கல்யாணத்த முடிச்சு பிள்ளைய அனுப்பிவிட்டுட்டு உன் பொழப்ப பாரு" என சுஜாவின் அம்மா பேசி முடிக்கையில், சுவற்றில் தொங்கி கொண்டிருந்த காலண்டர் அட்டையுடன் பிடுங்கி கொண்டு வந்து அவர் முகத்தில் விழ அதிலிருந்த ஆணி அவர் மூக்கை கிழித்திருந்தது.

 
அத்தியாயம் 20

"சூப்பர். இந்த பேயி பிள்ளைக்கு உசுரோட இருக்கும் போதே எல்லாத்தையும் தூக்கி எறியிர பழக்கம் இருந்துருக்கும் போல" என்றார் அனிருத்.

அங்கு, "ஆத்தி!" என அதிர்ந்த உத்தமி, மெல்ல படிகாசீ காதை நெருங்கி, "மதினி அன்னைக்கு கரண்டியும் சொம்பும் எப்படி உங்க மேல வந்து விழுந்ததுன்னு தெரியுதா? அப்ப அது நம்ம வீட்டுக்குள்ளதேன் இருந்துருக்கு என்‌ மாமேன் சொன்னது எம்புட்டு நெசம்?" என பதறி மூச்சை அடக்கி அடக்கி பேச, உண்மையில் படிகாசீயும் அதே யோசனையில் தான் இருந்தார் என்பதால் உத்தமி கூறியது அவருக்கு மட்டும் புரிந்தது.

"என்னாச்சு என்ன சொல்லுதீக?" என உத்தமியிடம் இருவர் கேட்க, அங்கு சுஜாவின் அம்மா மூக்கிற்கு மருந்து போடும் வேலையில் இருவர் இருந்தனர்.

படிகாசீக்கு அதற்கு மேல் அங்கிருக்க முடியாது என தோன்றவும், "நா சொல்றத சொல்லிட்டேன் இனி நீங்க தான் யோசிச்சு நல்ல பதிலா சொல்லணும். என் வீட்டுக்கு வர்ற மருமகள என்னால நல்லா பாத்துக்க முடியும். நா விட்டாலும் என் மகன் விடமாட்டான். சரியா இருப்பான். அந்த நம்பிக்கைல நீங்க உங்க பொண்ண குடுத்தா போதும்" என்பதை செல்லம்மாளை மட்டும் பார்த்து கூறிவிட்டு அவர் எழுந்து கொள்ள, உத்தமியும் உடனே எழுந்து விட்டார்.

சரியாக அந்நேரம் ஜிப்ஸியை வாசலில் கொண்டு வந்து நிறுத்தினான் வேந்தன். இப்போதும் இருவரும் சேர்ந்தே வந்திறங்குவதை மொத்தபேருமாக வேடிக்கை பார்த்தனர்.

பவளமல்லி அவனை முறைத்தவாறு நடுக்கத்தை மறைக்க கைகளை புடவை முந்தியோடு சேர்த்து இறுகபற்றி நிற்க, அவன் வெளியே நின்ற மாமனிடம், 'ஏன் இவ்வளவு கூட்டம்?' என கண்ணால் மிரட்டினான்.

"ஆமா எல்லாம் என்னைய கேட்டுதான செய்றீங்க? நீ பேய கூட்டிவந்து வீட்ல குடிவைக்க போறேன்னு சொல்லல? அதே தான் அங்கையும் எப்ப என்னத்த பண்ணுவோம்னு ஒன்னுத்தையும் என்ட்ட சொல்லுறதில்ல. பொண்ணு பாக்க போறோம்னு பட்டெல்லாம் எடுத்து கட்டிட்டுதேன் என்னைய இழுத்துட்டு வந்துருக்காங்க. கொஞ்ச நேரத்துல அம்புட்டு டென்ஷன் எனக்கு, கடைசில என் அறிவாளித்தனத்தால உன் கல்யாண பேச்ச சுமூகமா முடிச்சு வச்சுருக்கேன் தெரிஞ்சுக்கோ" அவர் பேசிய பேச்சில் அவன் இன்னும் முறைக்க,

"நாங்கதான் பேசிட்டு வருவோம்ல அதுக்குள்ள என்ன அவசரம் உனக்கு?" என வெளியே வந்த படிகாசீ, "ஏலே அய்யாவு உன் வேலையா இது? முதல்ல உன்னதான் சாத்தணும்" என அனிருத்தையும் திட்ட,

"அனிருத்னு கரெக்டா கூப்பிட்டுட்டு எத்தன சாத்து வேணாலும் சாத்த வா நீ" என்றார் அவர்.

என்ன பவளமல்லி மாப்ளய உள்ள கையோட கூட்டிட்டு வந்துட்ட போல?" என அங்கிருந்த பெண்கள் சொல்லி சிரிக்க, அவள் பாவமாக தாயை பார்க்க,

"நாந்தான் கூட்டிட்டு வந்தேன்த்த. அம்மா இங்க பேச வர்றதா மாமா ஃபோன் பண்ணி சொன்னாங்க அதான் கையோட கூட்டிட்டு வந்துட்டேன். காலைல என்ட்ட சொன்னதெல்லாம் அம்மாட்டையும் தெளிவா சொல்லிட்டீங்களா? எதையும் ஃப்ர்ஸ்டே தெளிவா பேசிடறது தான் நல்லது" என்றான் வேண்டுமென்றே மொட்டையாக.

"என்ன சொன்னாங்க? உங்கிட்ட யாரப்பத்தி சொன்னாங்க?" என படிகாசீ, வேந்தன் செல்லம்மாள் இருவரையும் திரும்பித் திரும்பி பார்க்க,

"ஒரே கோர்வைல, அத்தன பேரையும் போட்டு குடுத்துட்டான் பாரேன். இப்படித்தான் வக்கீல் வேலை பாக்குறவங்களாம் இருப்பாய்ங்களோ?" என்று முனங்கி நின்றார் அனிருத்.

"எனக்கு உங்க சம்மந்தத்துக்கு சம்மதம். நீங்களே நாள் குறிச்சுட்டு சொல்லிவிடுங்க. எங்கிட்ட இருக்குறது, நா இவளுக்குன்னு சேர்த்து வச்சது, தேனுவுக்கு போட்ட நகை மொத்தமும்னு எல்லாம் அவளுக்கு தான். அது மட்டுந்தான் என்னால செய்யவும் முடியும். அவளுக்கு மாசம் பொறந்து பத்தாம் தேதிக்கு மேல எல்லா தேதியும் உகந்ததுதேன். வேறெதுவும் எங்கிட்ட எதிர்பாக்க மாட்டீங்கனா என் பொண்ண குடுக்க எனக்கு சம்மதம்" என்றுவிட்டார் செல்லம்மாள்.

தான் ஒருத்தி குறுக்கே நின்று தடுப்பதால் எதுவுமே மாறிட போவதில்லை என்பது புரிந்ததாலும், சின்ன மகள் ஆசை, பெரிய மகளின் கடைசி ஆசை, இப்போது ஊர்மக்களின் பிரச்சினைக்கான தீர்வாகவும் இந்த திருமணம் அடிகோடிட்டு காட்டப்பட்ட பிறகு எதையும் யோசிக்கவில்லை அவர். இன்னும் யோசித்து மனதை குழப்பிக் கொள்வதைவிட, தெளிந்த இந்த நொடியில் இத்தனைபேர் இருக்க சம்மதத்தை சொல்லிவிடுவது நல்லது என்ற முடிவிற்கு நொடியில் வந்து, அதை சபைபரப்பியுமிருந்தார்.

"ம்ம் அப்படி பட்டுன்னு சொல்லுறது விட்டுட்டு என்னத்துக்கு யோசனைங்கேன்?" என ஒருவர் சொல்ல, சம்பந்தப்பட்டவர்களை தவிர்த்து மற்ற எல்லோருமே கலகலக்க துவங்கிவிட்டனர்.

"அம்புட்டுதேன். இனி சாமி தாத்தாட்டயே நாள குறிச்சு வாங்கி, கல்யாண வேலைய பாப்போம் மாமா" என உத்தமி சந்தோஷமாக சொல்ல,

"இருங்கத்த" என்ற வேந்தனின் குரலில், அனைவரும் அவனிடம் கவனம் வைக்க, அவன் நேராக சென்று நின்றது செல்லம்மாளிடம் தான்.

அவன் அருகே வரவும் அவர் பயந்து இரண்டடி பின் வைத்ததில், இவனும் நின்று விட்டான்.

"உங்களுக்குள்ள என்ன பயம், என்ன ரகசியம் இருக்குன்னு எனக்கு தெரியல. எனக்கு தெரிஞ்சுருமோன்னு தான் உங்களுக்குன்னு இருக்குற ஒரே மகளுக்கும் அந்த விஷயத்தை சொல்லாமலே வச்சுருக்கீங்கன்னு எனக்கு புரியுது. அத என்னன்னு கேட்டு உங்கள சங்கடபடுத்த மாட்டேன். ஆனா அது எதுவா இருந்தாலும், இனி நீங்க அத நினைச்சு தயங்கவோ பயப்படவோ வேண்டாம். அந்த வீட்ல நீங்க என்ன நம்புறீங்க தானே? அப்படியே எப்பவும் என்ன மட்டும் நம்புங்க போதும்" என்றான் நிதானமாக.

வரும் அழுகையை அடக்கிக் கொண்டு தலையை மட்டும் அசைத்தார் செல்லம்மாள். அவன் திரும்பி பவளமல்லியை பார்க்க, அவளோ அம்மாவை கண் காட்டி முறைத்தாள். நெருக்கடியில் நிற்க வைத்து சம்மதம் வாங்கிவிட்டதுபோல் அவளால் சந்தோஷம் கூட படமுடியவில்லை.

ஆள்காட்டி விரலால் மீசையை தடவிக்கொண்டே, அவளிடம் வந்தவன், "பதினோராம் தேதியே பிக்ஸ் பண்ண சொல்லிடுவேன். ரெடி ஆகிடு" என மற்றவர்களுக்கு கேட்காமல் சொல்லி, அவள் கண்ணை மூடி குனிய போன நேரத்தில், ஒருபக்கம் லேசாக முன்வந்து விழுந்த நீள் முடியின் நுனி பேண்ட்டை நொடியில் உருவிக் கையில் மாட்டிக்கொண்டு கிளம்பி இருந்தான்.

மொத்த கூட்டமும், 'அடியாத்தே!' என வாயை பிளக்க, பவளமல்லி உள்ளே சென்றிருந்தாள். இரண்டு முறை தவறவிட்டிருந்ததால் அதை எடுத்தே ஆகவேண்டும் என்ற எண்ணம் இருந்துகொண்டே இருந்தது, இதோ செயல்படுத்தி கொண்டான்.

"இந்த ஹேர்பேண்டுக்குத்தானாடா இத்தன அக்கபோரு?" என்ற அனிருத்தையும் இழுத்து கொண்டு ஜிப்ஸியில் அவன் ஏற செல்ல, உத்தமியும், படிகாசீயும் பின்னால் சென்று ஏறிக்கொண்டனர்.

"வக்கீலு மொத்தமா மயங்கித்தான் கடக்காரு" என்றவாறு மற்றவர்களும் கலைந்து சென்றனர்.

செல்லம்மாள் உள்ளே வரவும் பவளமல்லி அவரை நெருங்கி, "ம்மா அவங்க வராங்கன்னுலாம் எனக்கு தெரியாதும்மா. நா காலைல நீ பேசிட்டன்னு சாரி கேட்கத்தான் போனேன். அவங்க இப்படி வரபோறாங்கன்னு எனக்கு தெரியாதும்மா" என்றாள் உள்ளே சென்றுவிட்ட குரலில்.

"உனக்கு பிடிச்சுருக்கு, நீ அந்த வாழ்க்கைய நல்லா வாழ்ந்தாலே எனக்கு அந்த சந்தோஷம் போதும். உனக்கு ஒரே விஷயம் தான் இந்தம்மா சொல்றேன், உன் அக்காவ மாதிரி எல்லாத்தையும் உனக்குள்ளையே வச்சுகிட்டு மொத்தமா என்ன ஏமாத்திடாத, அம்மான்னு நா ஒருத்தி இருக்கேன். எப்பவும் உனக்காக இருப்பேன், அவகிட்ட நாம எதையும் சொல்லலாம்னு நினைப்புல வச்சுக்கோ. பிரச்சினைனா இந்தம்மாவ தேடி வரலாம், ஏன் இப்படி பண்ணீங்கன்னு உனக்காக கேட்க உன் அம்மா இருக்கேன். புரியுதா?" என அவர் அவள் கன்னம் தடவி கேட்டதில், அவரை அப்படியே கட்டிக்கொண்டாள் பவளமல்லி. இருவரையும் அணைக்க துடித்த கைகளுடன் அருகில் தேன்பாவனியும் நின்றாள்.

அங்கு வேந்தன் வீட்டில், உத்தமி, அனிருத் இருவரும் வீட்டிற்கு சென்றதுமே எல்லோருக்கும் விஷயத்தைச் சொல்லிவிட்டனர். ஜெகதாம்பாளின் அம்மாவும் அப்பாவும் காட்டிய விசாரணையை கூட அவள் வைக்கவில்லை, "சந்தோஷம் சித்தி. எதுவும் நீலகிரில இருந்து வாங்கிட்டு வரணும்னா சொல்லுங்க வரும் போது வாங்கிட்டு வந்துடுறேன்" என முடித்துக் கொண்டாள்.

"அந்த புள்ள வாங்கிட்டு வாரத நம்பியிருந்தா, வேந்தனுக்கு பிள்ளையே பிறந்துரும்னு சொல்லிருக்கலாம்லட்டி நீ" என்றார் அனிருத். அவர் அப்போது தான் சாமி தாத்தாவிடம் கல்யாண தேதிக்காக பேசிவிட்டு வந்திருந்தார்.

"சாமி தாத்தா என்ன சொன்னாரு?" என்றான் வேந்தன்.

"ஆறு தேதி குறிச்சு குடுத்துருக்காரு. அடுத்த மாசம் மூணு, அதுக்கு அடுத்த மாசத்துல மூணு" என அதை நீட்ட, வாங்கி பார்த்தவன், சின்ன சிரிப்புடன் மறு மாதத்தில் குறித்து கொடுத்திருந்த பதினொன்றாம் தேதியை வட்டமிட்டு அவரிடம் திருப்பி நீட்ட, அதை வாங்கி வந்து படிகாசீயிடம் நீட்டியவர், "சட்டுபுட்டுன்னு கல்யாணத்த முடின்னு உன் மகேன் சொல்லாம சொல்லுதான் பார்த்துக்கோ" என்றுவிட்டு போக.

"நீயே அங்க ஃபோன் பண்ணி சொல்லிடு. வேந்தன், மனோன்மணி ரெண்டு பேரையும் கூட வச்சுக்கோ, என்னென்ன பண்ணணும்னு பாத்து பண்ணுங்க. நா கொஞ்சம் படுக்குறேன்" என அறைக்குள் சென்று விட்டார் படிகாசீ.

அவருக்கு விருப்பம் இருப்பது போலவும் தெரிகிறது இல்லாதது போலவும் தெரிகிறது என்ற யோசனையில் பார்த்திருந்தான் வேந்தன்.

திருமணத்திற்கான பேச்சுவார்த்தை இரவு உணவு முடிந்த பின்னரும் தொடர்ந்தது. நெருங்கிய சொந்தங்களுக்கெல்லாம் கூட அழைப்பெடுத்து பேசிவிட்டிருந்தனர், அதில் படிகாசீயையும் உள்ளே இழுத்து பேசியிருக்க, அவரும் கொஞ்சம் கொஞ்சமாக மகன் திருமணத்தில் பங்கெடுக்க துவங்கியிருந்தார்.

எல்லாம் தூங்க சென்ற பிறகு, பனிரெண்டு மணிக்கு மேல் பவளமல்லிக்கு அழைத்து, தேனுவை அழைத்து கொண்டு தெரு முனைக்கு வரச்சொல்லி சொல்லி விட்டு தானும் கிளம்பிவிட்டான். அனிருத்தையும் மறக்காமல் எழுப்பி கிளப்பி கொண்டுச் சென்றுவிட்டான்.

"ஏன்டா அதான் அந்த புள்ளைய கல்யாணம் பண்ணிக்க போறியே? அந்த புள்ளையவே கதைய கேட்டு சொல்ல சொல்லாம்ல? இனி தான் செல்லம்மா மதினி எதுவும் சொல்ல போறதில்லையே?" என்றார் தூக்க கலக்கத்தில் அனிருத்.

"நேரா கேட்ட மாதிரி வராது மாமா"

அங்கு சென்று செல்லம்மாள், பவளமல்லியுடன் தேன்பாவனியும் ஏறிக்கொள்ள, ஊருக்கு வெளியே வந்து சலசலக்கும் ஆற்றங்கரையில் நின்றனர்.

"இனி சொல்லலாம் தானே? இரண்டாவது கொலை எப்படி பண்ணீங்க?" என நேரடியாக கேட்டான்.

தேன்பாவனியும் அலட்டவில்லை. அவனுக்கு தெரியட்டும் என்றே நினைத்தாள். "ரெண்டாவது என் மாமனாருக்கு தான் குறிவச்சேன் ஆனா தானா வந்து மாட்டி உயிர விட்டுட்டான் அந்த நாகராஜனோட தம்பி" என்றாள் முகம் முழுவதும் ரத்த சிவப்பு நிறம் கொண்ட மாற்றத்தில்.

"அன்னைக்கு நம்மூர்ல யார் மண்டைய போட்டது?" என்றார் அனிருத்.

"பூக்கார முனியாண்டி தாத்தா. நாகராஜன் தம்பி மாடியிலிருந்து விழுந்து தற்கொலைன்னு தான் கேஸ் இருக்கு" என்றான் வேந்தன்.

"அவன வேலை வெட்டி இல்லாதவன்னு மட்டுந்தான் நெனச்சுருந்தேன். ஆனா கெட்டெண்ணம் கெட்ட சவகாசம்லாம் உள்ளவன்னு அன்னைக்கு தான் தெரிஞ்சது. மொட்ட மாடில நின்னு ஏதோ பொண்ண தனியா கூட்டிட்டு போய் கூட்டு பலாத்காரம் பண்ண திட்டம் போட்டுகிட்டிருந்தான்"

எப்போதும் நாகராஜனின் தந்தை சிகரெட் பிடிப்பதற்காக இரவு மொட்டை மாடிக்கு வருவது வழக்கம் அவள் அதை அறிந்து வைத்திருந்ததாலேயே, அவரை கொல்ல மாடியில் அலைபாய்ந்து கொண்டிருந்தாள். அப்படி இருக்கையில் தான் நாகராஜனின் தம்பி வந்ததும் பேசியதும் கேட்க நேர்ந்தது. இன்னொரு பெண்ணிற்கு அநியாயம் செய்யவிருப்பவனை அல்லவா முதலில் முடிக்க வேண்டும் என்று நினைத்தவள், பலத்த காற்றுடன் அவனை சுற்றி சுற்றி வந்தாள்.

திடீரென அடிக்கும் பலத்த காற்றினால் எரிச்சலுற்றவன், கீழே இறங்க திரும்ப, அதீத காற்றழுத்ததுடன் அவள் அவனை கீழே தள்ளிவிட்டதில் அவனுக்கு வெடவெடத்துவிட்டது. நிச்சயமாக தன்னை யாரோ உரசி தள்ளியதை உணர்ந்தான். ஃபோனை கூட அப்படியே போட்டுவிட்டு ஓடவிருந்தவனை, மேல் மாடி கதவை அடித்து சாத்தி தூக்கி வீசினாள். பயந்து சுற்றி பார்த்தவன் முன் கருப்பு புகையாக வந்து நின்றவளை கண்டு அவனுக்கு ரத்த ஓட்டமும் நின்றுவிட்டிருந்தது.

"யா யா யா ரு!" என ஒரு வார்த்தையைத் திக்கி திணறி அவன் கேட்டு முடிக்கும் முன் நாக்கு உலர்ந்திருந்தது.

"செத்து போடா!" என்றவள் அவனை பலமாக நெருங்க முயல, வேகமாக எழுந்து பின்னால் சென்றான். அவள் அதிவேகமாக அவனை நெருங்க முயன்றதில் பயந்து பின்னால் சாய்ந்தவன், மேலிருந்து கீழ் விழுந்து மொத்தமாக சென்றிருந்தான். தேன்பாவனி அதை சொல்லி முடித்து இன்னும் கோபம் குறையாமல் நின்றிருந்தாள்.

"ஒரே நாள்ல அத்தனை பேரையும் கொன்னுருக்கலாம்லக்கா நீ? அவன் பார்வையே சரியிருக்காது நானும் பாத்துருக்கேன். என்ன விட நாலு வயசு இளையவன் ஆனா அவனும் அவன் மூஞ்சியும் அப்படியே ஒரு குத்துவிடலாம் போலதான் இருக்கும். நீ ஏன் தனித்தனியா கொன்னு டைம் வேஸ்ட் பண்ணுன? மொத்தமா அஞ்சு பேரையும் முடிச்சு விட்ருக்கணும் நீ!" என பவளமல்லி கோபமாக சொல்ல,

"உன் வக்கீல் புருஷன பத்தி தெரியாம இப்படி வார்த்தைய விடாத பாப்பா" என்றார் அனிருத்.

"ஆமா உங்களால ஒரு நாளைல ஒரு கொலை தான் பண்ண முடியுமா?" என்றான் வேந்தன்.

"நா அதுக்கு மேல முயற்சி பண்ணதில்ல. எனக்கு அப்படித்தான் தோணும். அதனால காத்திருந்து தான் மறுபடியும் ஊருக்குள்ள வருவேன்"

"உன்ன கொன்னவங்கள நீ பழிவாங்க கிளம்பின மாதிரி அவங்களும் கிளம்பினா? அந்த பையனுக்கும் துர்மரணம் தானே? அப்ப அவனும் ஆவியா வர வாய்ப்பிருக்குள்ள?" என்றார் செல்லம்மாள்.

"பழிவெறியோட துடிதுடிச்சு சாகுறவங்களால தான் ஆவியா வந்து கூட பழிவாங்க முடியும். அதுக்கும் கடவுள் அனுமதி கொடுக்கணும். மனுஷனா வாழ்ற வர தான் மனுஷன், அவன் நினைச்சதெல்லாம் நடத்திக்குலாம். அப்றம் ஒருபுடி மண்ணுக்கு கூட ஆகாம தான் போகணும். இப்படி தப்பு பண்ணி செத்து போறவனுங்கலலாம் கடவுள் ஆவியா அலையவிட மாட்டாரு, திரும்பவும் மனுஷப்பிறவியாவே பொறக்க வச்சு மொத்தமா பழித்தீர்த்துப்பாரு" என்றாள் அதீத வெறுப்புடன்.

"அப்ப எப்படியும் தண்டனை உண்டு?" என்றார் அனிருத்.

"சரி அடுத்தடுத்த கொலைகள்?"

"மூணாவதா என் மாமனார், அவர கொல்ல எனக்கு தனி காரணமு இருந்தது" என எங்கோ பார்த்து கூறியவள், "பயமுறுத்தி விரட்டி வாசல்ல வந்த டேங்கர் லாரில விழ வச்சேன், அடுத்து என் மாமியார். அந்த கிழவி வரிசையா வீட்ல நடந்த இழப்புலயே பாதி செத்திருந்தது, நா எப்படி செத்தேன்னு சொல்லுச்சோ அப்படி ஏசிய அதிகப்படுத்தி குளிர்ல ஜன்னி வந்து தான் சாகவச்சேன். கடைசியா என் புருஷன். என்னைய நா உயிரோட இருக்கும்போது கூட அவ்வளவு நெனைச்சுருக்க மாட்டான். ஆனா வீட்ல வரிசையா எல்லாரும் செத்து போகவும் அடுத்து நாந்தானோ நாந்தானோன்ற பயத்துல என்னைய தவிர அவனுக்கு வேற நெனப்பே வரல. குடும்பத்துல நாலு பேரு இறந்த கொலை கேஸுக்கு வேற பேயி பேயின்னு அவன் சொன்ன காரணத்த நம்பாம அவனையே தூக்கி உள்ள வைக்க நினைச்சாங்க, அதுவேற அவனுக்கு பிரச்சினையா சேர முழுநேர குடிகாரனா மாறினான். அவனே இதோ இந்த ஆத்தங்கரைல வந்து எங்கிட்ட மன்னிச்சிடுன்னு கெஞ்சி அழுதான். தேடி வந்தவன எப்படி விடுவேன்?" என மூச்சு வாங்க அகோரமானவள், "இந்த ஆத்துல தான் அமுக்கி, மூச்சு திணறவச்சு கொன்னேன்‌" என சிரித்தவளை, பவளமல்லியும் செல்லம்மாளும் அழுகையோடு பார்க்க, வேந்தன் சாதாரணமாக பார்க்க, 'அப்பாடி ஒருவழியா கதை முடிஞ்சது! இனி நைட்டு நிம்மதியா தூங்கலாம்' என திருப்தியாக பார்த்தார் அனிருத்.

"அந்த இன்னொரு ஆள் யாரு? எதுக்காக அவங்கள கொல்லணும்னு இருக்கீங்க? எப்ப கொல்லுவீங்க?" என்றான் வேந்தன்.

'ஹா ஹா ஹா!' என ஆக்ரோஷமாக சிரித்தவள், "எல்லாத்தையும் கொன்னுட்டு தானே சொன்னேன். அந்த ஆளையும் கொன்னுட்டே எப்படி கொன்னேன்னு சொல்றேன்" என எகத்தாளமாக சிரிக்க. வேந்தனுக்கு அதுவே உள்ளுக்குள் அதிகமாக உறுத்தியது.

 
அத்தியாயம் 21

செல்லம்மாள், பவளமல்லி இருவரையும் தேன்பாவனியுடன் சேர்த்தே அவர்கள் வீட்டில் இறக்கி விட்டுவிட்டு வேந்தனும், அனிருத்தும் அவர்கள் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.

"மாமா!" என ஜிப்ஸியை ஓட்டியவாறே அழைத்தான் வேந்தன். அவனுக்கு இன்னும் தேன்பாவனி சொல்லிய விஷயங்களே மூளையில் ஓடிக்கொண்டிருந்தது. அந்த யோசனையோடே அனிருத்தை அழைக்க, அவரிடம் சத்தமே இல்லை. லேசாக திரும்பி பார்த்தான், முன் இருக்கையில் சாய்ந்து நல்ல உறக்கத்தில் இருந்தார் அவர்.

"யோவ் மாமா!" என படீரென்று அவர் தொடையில் தட்டி எழுப்பிவிட, "இவன் ஒருத்தன்‌. போய் உங்கம்மாவ மிதியேன்டா" என தூக்கத்தில் மகன் தன்மேல் காலை பொத்தென்று போட்டதாக நினைத்து வேந்தன் கையை எடுத்துவிட்டு, திரும்பிப் படுக்க முயன்று கண்ணாடியில் மோதி, விழித்து, தூக்கம் நன்கு தெளிய திருதிருவென விழித்தார்.

காரில் இருப்பது உறைக்க, "எங்கடா போற?" என்று வேந்தனை வேறு திரும்பிக் கேட்க,

"சுடுகாட்டுக்கு!" என முறைத்தான் அவன்.

"ஏன் பேய் பிடிக்குறத தொழிலாவே மாத்திட்டியா? என்னைக்கு அந்த பேயி பிள்ளைய வண்டீல ஏத்துனியோ அன்னைல இருந்து உனக்கு என்ன சுடுக்காட்டுக்கு அனுப்புற நெனப்புதேன்னு எனக்கு நல்லா தெரியும்டா. எப்ப பாரு எத கேட்டாலும் சுடுகாடுன்னுதேன் பதில் வருது. ஏற்கனவே பிடிச்சுட்டு வந்த பேய ஊர்வலம் கூட்டிட்டு போறது பத்தலையா உனக்கு? சுடுகாட்டுல வேற போய் புதுசா தோண்டி எடுக்கப் போறியா? ஆனா இனி உங்கூட நா வரமாட்டேன்டா. என்னைய இப்பவே வீட்ல விடு"

"உன்னதான் இப்ப கொன்னுப் பொதைக்கப் போறேன். லூசு மாமா உனக்கு எப்படி தூக்கம்லா வருது?"

"ஏன்டா யாமத்துல ரெண்டு மணிக்கு ஒருத்தன தூங்கவிடாம பேய் மாதிரி" என்றவர் தலையை இடவலம் அசைத்து மறுத்து, "மாதிரின்னு கூட சொல்ல இல்லாம பேய் கூடவே உலாத்தவிட்டதே பாவம். உனக்கு எவன்டா தூங்கா வரம் குடுத்தது? நீயும் தூங்காம என்னையும் இனாமா தூக்கிட்டு திரியிதியே என்னைய பார்த்தா பாவமா தெரியுமா தெரியாதா உனக்கு?" என்றார் கோபமும் ஆற்றாமையுமாக.

"ம்ச் அந்த தேனு இன்னும் ஒருத்தர கொல்லணும்னு இருக்குல்ல? அது யாரா இருக்கும்னு நினைக்கிற நீ?" எனக் கேட்டான் வேந்தன்.

அவனையே முறைத்துப் பார்த்தவர், அப்போதுதான் வெளியே பார்க்க, ஊரைத்தாண்டி ஊர்ந்து சென்றுக் கொண்டிருந்தது அவர்கள் செல்லும் வண்டி, பத்து கிலோமீட்டர் வேகத்தில் காரை செலுத்த முயன்று கொண்டிருந்தான் அனிருத்தின் மருமகன்.

அனிருத் அவனை முறைக்க, அவன் தீவிர சிந்தனையில் தான் அப்போதுமிருந்தான். அவன் தோளில் மெல்ல தட்டி, "எதுக்கு பெட்ரோலுக்கு புடிச்ச கேடு. இப்படி ஓரமா நிப்பாட்டு, அப்படியே பேசிக்கிட்டே நடந்து போவோம்" என்றார் அனிருத்.

"சொல்லு மாமா. உனக்கு என்ன தோணுது?" என அவன் அவனது கேள்வி தான் முக்கியம் என அதில் தான் நின்றான்.

"ஏன்டா இப்படி உசுர வாங்குற? ஏன்?" என அவர் கத்த,

"பக்கத்துல தான இருக்கேன் ஏன் கத்துற? ஒரு விஷயத்த ரெண்டு பேர் டிஸ்கஸ் பண்ணாதான் ரெண்டு ரெண்டு ஐடியாஸ் கிடைக்கும், நாம அதுல சரியான ரூட் கண்டுபிடிக்கலாம்"

"சொந்த வீட்டுக்கு போற பாதையவே மறந்துட்டு எங்கையோ போற இதுல புதுசா எந்த ரூட்ட கண்டுபிடிக்க போற நீயி?"

"யோவ் நா எவ்வளவு சீரியஸா பேசிட்ருக்கேன். கொஞ்சம் மூளைய பயன்படுத்தி யோசி. அந்த பொண்ணு சொன்ன கதையெல்லாம் கேட்டல்ல? அந்த இன்னொரு ஆள் யாரா இருக்கும்னு இப்ப எனக்கு யோசிச்சு சொல்லு?"

"நானா தான்டா இருப்பேன். என்னைய மட்டுந்தான் அது முறைச்சுக்கிட்டே இருக்குது. உனக்கு மாமனா பொறந்ததுக்கு அந்த தியாகத்த வேணும்னா செஞ்சு தொலைக்கிறேன். போதுமா?" என அவர் கோபமாக சொல்லித் திரும்பிக் கொள்ள,

"எனக்கும் என்னவோ அது நம்ம வீட்ல ஒரு ஆளா தான் இருக்குமோன்னு தோணுது"

நெஞ்சில் கைவைத்து அதிர்ந்தேவிட்டார், அவர் மருமகன் யோசிக்காமல் சொல்லக் கூடியவன் இல்லை. அவன் கேஸாக எடுத்த எந்த விஷயத்தையும் முதலில் வெளியே சொல்லவே மாட்டான், இதை வீட்டாள் என நினைப்பதால் சொல்கிறான் என்றாலும், அவனுக்கு உறுதியாகாத ஒன்றை வெளியே சொல்லும் பழக்கமற்றவனாகிற்றே!

"வேந்தா?" என அவர் அதிர,

"தோணுது. காரணம் இல்லாம அந்த பொண்ணு ஏன் நம்மட்ட எல்லாத்தையும் சொல்லணும்? நேரா அவங்கம்மா தங்கச்சிட்டயே சொல்லிருக்கலாமே?" எனக் கேட்டான்.

"சாமி மாமா சொன்னாரேடா, அவங்க பயந்ததால. பயப்படாத உன்ன தேர்ந்தெடுத்துருக்கலாம்னு?"

"அந்த அஞ்சு பேர கொல்ல யாரோட துணையும் அதுக்கு தேவைபடல, இப்பவும் அப்படியே அந்த இன்னொரு கொலைய பண்ணிட்டு போயிருக்கலாமே? எதுக்காக நம்மள இதுக்குள்ள கொண்டு வரணும்?"

"அது உன்ன மட்டும் தான் கொண்டு வந்தது. நீதான் என்னையும் சேர்த்து இதுல இழுத்துவிட்டுட்ட. இப்ப நடுசாமத்துல காருல உக்காத்தி வச்சு புது கதை வேற சொல்லி பயமுறுத்துற" என முறைத்தார்.

"நம்மளால, நம்மளவச்சு, அப்படி இல்லனா நம்மளுக்கு தெரிஞ்சு தான் அந்த ஆறாவது கொலைய பண்ணணும்னு நினைக்குது அந்த பொண்ணு" என்றான் தெளிவாக.

"அக்காவ தான் சொம்பால அடிச்சுருக்கு. ஒருவேளை அக்காவ கொல்ல போவுதா? அந்த பிள்ளையோட அம்மாக்கும் அக்காக்கும் தான சண்டை? ஐயோ அக்கா?" என அவர் பதற,

"அம்மாவா இருக்காதுன்னு தான் நினைக்கிறேன். சும்மா வாய் சண்டைக்குலாம் கொலை பண்ணுவாங்களா?"

"அப்ப என் பொண்டாட்டியா? அவ வெகுளியாச்சே?"

"ம்ச் இல்ல மாமா. அத்தை, நீ, நான் இதுல இல்ல. அம்மாவும் இருக்க வாய்ப்பில்லை. மத்த மூணு பேர்ல தான் ஒருத்தர்"

"எப்டி சொல்ற?"

"நம்ம நாலு பேரையும் ஈசியா கடந்தது அந்த பொண்ணு. ஆக்ரோஷ பார்வை இல்ல அதுல. நம்ம ரெண்டு பேருக்கும் கொலை பண்ண விஷயத்தையும் கூட வெளிப்படையா சொல்லிருக்கு. அம்மாவ பார்க்கும் போதும் அந்த பொண்ணுட்ட மாற்றம் இல்ல‌. அவங்க அம்மாவ இங்க வரமாட்டாங்கன்னு எம்புட்டு ஆத்திரமா சொல்லுச்சு, ஆனா அம்மாவும் அத்தையும் அங்க அவங்க வீட்ல போய் நின்னப்ப சாந்தமா தான நின்னுச்சு? ஒருத்தங்க மேல கொலைவெறில இருக்க பேயி அப்படி சும்மா நிக்குமா என்ன?"

"தங்கச்சிய கட்டிக்குடுக்கணும்னு நடிச்சுருந்தா?" என்றார் அனிருத்.

"எனக்கென்னவோ, மனோ, அவன் ஃவைப், லாஸ்ட் பட் நாட் லீஸ்ட் உன் அக்கா புருஷன்" என்றான் ஸ்டியரிங்கில் தாளம் தட்டியவாறு.

"மனோவா இருந்தா?" என்றார் அனிருத்.

"எதும் செஞ்சுருக்கானா? கிட்டத்தட்ட மூணு நாலு வருஷமா அவன்கூட சேர்ந்து சுத்துறல்ல? நீதான் சொல்லணும்"

"எதாவது அந்த தேனு பொண்ண லவ்வு கிவ்வு பண்ணி ஏமாத்திருப்பானோ?" என்றார் யோசனையாக.

"அந்த தேனு பொண்ணுவ லவ் பண்ணிட்டு அண்ணிய கல்யாணம் கட்டிருப்பான்றியா?"

"ஒருவேளை பண்ணியிருந்தா?" என சந்தேகமாக தான் கேட்டார் அனிருத்.

"சரி அப்படியும் விசாரிப்போம்!" என முடித்து விட்டான் வேந்தன். அத்தோடு திரும்பி வீட்டிற்கும் வர, வந்ததும் அவன் தூங்கச் சென்றுவிட்டான், அனிருத்திற்கு தான் தூக்கம் தூர சென்றிருந்தது. அவரை ஏமாற்றுகிறான் என தெரிந்தும் மனோன்மணியை மருமகன் தானே என பாசத்தால் தொழிலைக் கூட விட்டுகுடுத்துவிட்டு நிற்பவர், அவனை சாகட்டும் என எப்படி விடுவார். அவனாக இருக்கவே கூடாது என்று மட்டும் அவரின் இஷ்ட கடவுள் முருகனிடம் வேண்டிக்கொண்டார்.

திருமணத்திற்கு எனக் குறித்தெடுத்த தேதி இன்னும் ஒரு மாதத்திற்குள் தான் இருந்தது. அதனால் மறுநாளே வேலையைத் துவங்கியிருந்தார் உத்தமி. அவர்தான் அனைத்து வேலைகளிலும் முன்னிலையில் நின்றதும். கணவரின் மருமகன்(வேந்தன்) பாசம் புரிந்தவர், தானாகவே அந்த பாசத்தைச் செயலில் காட்டத் துவங்கியிருந்தார்.

வேந்தன் எப்போதும் போல் அவன் வேலையைப் பார்க்கக் கிளம்பி விட்டான். நீதிமன்றம் வந்ததும் அன்றைய அலுவல் இழுத்துக்கொண்டது. பதினொரு மணிக்கு டீ கொண்டு வைத்துவிட்டு சென்றான் வழக்கமாக வருபவன். அதில் தான் நிமிர்ந்து அதை எடுக்க சென்றவன் பார்வை, அவன் கையிலிருந்த ரப்பர் பேண்ட்டில் பதிய, உள்ளிருந்து கிளம்பிய ஒருவித ஜுவாலையை அடக்கமுடியாமல் முகம் பளிச்சிட்டு காட்டிக் கொடுத்தது.

ஜவகரும், மற்றவனும் அமர்ந்து அன்றைய கேஸிற்கான குறிப்பெடுத்துக் கொண்டிருக்க, இவன் டீயுடன் எழுந்து வெளியே வந்தான். ஆட்கள் அங்குமிங்குமாக சென்று கொண்டிருக்க, ஒரே சத்தமும் காலை நேர பரபரப்புமாக இருந்தது நீதிமன்றம். அன்றைக்கு ஏதோ கட்சிக்காரரின் கேஸ் போலும் கரை வேட்டிகளின் தலைகளால் நீதிமன்றம் நிரம்பி வழிந்தது. ஆனால் அத்தனை சத்தத்தையும் கூட அவன் மனம் இதமாக உள்வாங்கியது.

அவனால் சுற்றி இருக்கும் அந்த சூழ்நிலையையும் ரசிக்க முடிந்தது. குடிக்கும் தேநீர் இனிப்பாக உள்ளே இறங்க, சின்ன சிரிப்புடன் மெல்ல நடந்து வந்து ஆள் அரவமின்றி இருந்த மரத்தடியில் வரிசையாக நின்ற இருசக்கர வாகனங்களில் ஒன்றில், ஒற்றை காலை ஊன்றி சாய்ந்து நின்று கொண்டு மீதமிருந்த டீயை ஒருகைக்கு மாற்றியவாறு, மறுகையால் பவளமல்லிக்கு அழைப்புவிடுத்தான்.

"ஹலோ!" என உடனே எடுத்தவள், அடுத்து பேசாமல் அமைதி காக்க,

"என்ன பண்ற?" என்றான் இவன்.

"கவுன்ட்டர்ல தான் இருக்கேன்"

"டீ ப்ரேக்லாம் கிடையாதா உனக்கு?"

"உங்களுக்கு இப்ப டீ ப்ரேக்கா?"

"எஸ் டீ குடிச்சுட்டே தான் பேசிட்ருக்கேன்" என்றவனின் டீ இப்போது இன்னும் இனித்தது.

"நா வேலை பாத்துட்டே குடிச்சுப்பேன். தனியா ப்ரேக் லஞ்ச் மட்டுந்தான்"

"ஓகே. அப்ப வேலைய பாரு நாம நைட்டு பேசலாம். பை" என அவன் வைக்கப் போக,

"நைட்டா? அம்மா பேச விடமாட்டாங்க. எதுனாலும் இப்பவே சொல்லுங்க. இல்லனா ஈவ்னிங் கூப்பிடுங்க. ஆறு மணிக்கு வேலை முடிஞ்சுடும்"

"எனக்கு நைட்டு தான் பேசணும். நா அப்பதான் ஃப்ரீ சோ நைட்டு தான் பேசுவேன்"

"எங்கம்மா இந்நேரம் என்ன பேச்சு, காலைல பேசுன்னு பக்கத்துலயே இருந்து சொல்லுவாங்கங்க"

"அம்மா பக்கத்துலயா படுப்ப? ஐயைய பேட் கேர்ள்!"

"அம்மா பக்கத்தில படுத்தா பேட் கேர்ளா? இருக்குறதே ரெண்டு பேரு, ஆளுக்கொரு பக்கமா படுக்க முடியும்?"

"நா ஏன் சொல்றேன்னா, இப்பவே நீ உன் அம்மாவ கட்டிகிட்டு தூங்கி பழகிருப்ப, சோ கல்யாணத்துக்கு அப்றமு எனக்கு யாரையாவது கட்டிகிட்டாதான் தூக்கம் வரும்னு சொல்லுவ? எனக்கு வேற அப்படி பழக்கம் இல்ல. நா கட்டிக்க பழகணும், நீ கட்டிக்காம தூங்க பழகணும். எவ்வளவு இருக்கு? அதுக்கு தான் இப்பவே இருந்து நைட்டு நாம பேசி பழகுனா அப்றம் எல்லாம் சரியா வரும்னு சொல்றேன்"

"வக்கீலுன்னு வாய்க்கு வர்றதெல்லாம் பேசுவீங்களா?" என்றாள் கறாராக.

"நிஜம்டி! இனி உனக்கு எல்லாமே மாறும் இல்லையா? சோ ஃப்ரஸ்ட் நீ என்ன பழகணும்ல?" என்றான் நமட்டு சிரிப்புடன்.

"என்ன பழகணும்ங்க?" காதுமடல் சூடாவதை உணர்ந்தாலும், பேச்சைத் தொடர்ந்தாள் பவளமல்லி.

"அது தான் கத்து தர்றேன்னு சொல்றேன். நைட்டு டீட்டெயிலா பேசலாம்"

"அக்கா தூண்லயும் இருப்பா துரும்புலயும் இருப்பாளே? நீங்க கத்துக் குடுக்குறதுலாம் அவளுக்கும் கேட்டுட்டா என்னங்க பண்றது?"

"உன் அக்காவ மறுபடியும் ஆத்தங்கரைலயே கொண்டு விட்டுட்டு வந்திடவா?"

"அச்சச்சோ அக்கா பாவம்"

"அப்ப கால் பண்ணு. இல்ல உன் அக்காவ பேக் பண்ணிடுவேன்"

"என்ன மிரட்றீங்க?"

"நந்தனம் காத்தாட கடக்குதா உனக்கு?"

"ஆமா கூட்டமில்ல. நா இப்ப ஃப்ரீயா தான் இருக்கேன்"

"ஓஹோ! சரி அப்ப சொல்லு, பதினோராம் தேதி ஃபர்ஸ்ட் நைட்டு கம்ஃபர்டபிளா இல்ல ஃப்ர்ஸ்ட் டேவே உனக்கு கம்ஃபர்டபிளா?" என்றான் வெகு சுவாரஸ்யமாக.

"எதுக்குங்க?" என கேட்டாள். முக்கியமாகவே எதையோ கேட்கிறான் என நம்பி!

"வேற எதுக்கு மம்மி டாடி விளையாட்டு விளையாடத்தான்" என்றவன் பதிலில், காதிலிருந்து கைப்பேசியை எடுத்துவிட்டு புடவை முந்தானையோடு சேர்த்து சுற்றி எடுத்து முகத்தை மூடிக் கொண்டாள். கூச்சம், சிரிப்பு, கலக்கம் என எல்லாம் கலந்து வர, முகத்தை இன்னும் அழுத்தமாக மூடிக்கொண்டாள்.

அங்கு நிறுத்தப்படாத அழைப்பில், "பவளமல்லி! பதில் சொல்லுடி" என்றவன் அவளின் அமைதியில் சிரிப்புடன் அழைப்பை அவனே நிறுத்தி ஃபோனை பையில் போட்டு விட்டு அவனறைக்கு வந்துவிட்டான்.

மாலையில், ஆறு மணி அவள் நந்தனத்திலிருந்து வெளியே வர, சரியாக அவள் முன் வந்து நின்றது அவன் ஜிப்ஸி. அவளுக்காக தானே அந்த வருகை, மனதினுள் பனிச்சாரல் வெகுவாக பரவி உடம்பே குளிரெடுத்தது போலானது அவளுக்கு.

"போலாமா?" என இவளிடம் கேட்டு, அவளுக்கு பின்னால் வந்த கடை மேனேஜருக்கும் அவன் கைக்காட்ட, அவரும் கைகாட்டி சிரித்து கடந்து சென்று விட்டார்.

அவன் கைகாட்டிய திசையைத் திரும்பிப் பார்த்து விட்டு வேகமாக வந்து மறுபக்கத்தில் ஏறிக்கொண்டவள், "வீட்டுக்குக் கிளம்பிட்டீங்களா?" என கேட்க,

"ம்ம் ஆனா அதுக்கு முன்ன உன்ன ஒரு இடத்துக்கு கூட்டிட்டுப் போறேன். என் ஆபிஸ் பார்த்ததில்லல நீ?"

"எதுக்கு இப்போ? அப்பறமா இன்னொரு நாள் வரேன்" வேகமாக பதறி கூறினாள்.

அவளின் பதற்றத்தில் அவனுக்கு சிரிப்பு வந்தாலும் காட்டவில்லை, புருவம் உயர்த்தி, "ஏன் இப்ப பார்த்தா என்ன? நா இன்னைக்கு ஃப்ரீயா இருக்கேன் சோ உன்ன கூட்டிட்டுப் போறேன்" என்றான்.

"இல்ல அம்மா இன்னைக்கு சீக்கிரம் வர சொன்னாங்க. லேட்டா போனா திட்டுவாங்கங்க"

"அப்படியாங்க? நா வேணா அத்தைட்ட பேசிடுறேனுங்க"

"சும்மா விளையாடாதீங்க. இன்னைக்கே பாக்கணும்னு என்ன கட்டாயம்? என்ன வீட்ல விடுங்க. வீட்ல தான் விடணும் ஓகேவா?" என அதட்டுவது போல் கேட்க,

"முடியாதுடி. நா ப்ளான் பண்ணிட்டேன் இனி மாத்த முடியாது"

"என்ன என்ன ப்ளான்? என்னங்க ப்ளீஸ்ங்க!"

"இந்தா வந்துருச்சு மல்லி" என்றவன் ஒரு தெருவிற்குள் வண்டியை விட, வலதுபுறத்தில் ஒரு சின்ன கட்டிடத்தின் வாயிலில், "கரிகாலவேந்தன், அட்வகேட், (பி.எ.,எல்.எல்.பி)" கூடவே சட்ட குறியீட்டுடன் செவ்வக வடிவத்தில் ஒரு கரும்பலகை வைக்கப்பட்டிருந்தது.

வந்தபின் இறங்கமாட்டேன் என சொல்வது அவளுக்கே சரியாக படாததால், அவன் இறங்கியதும் இவளும் இறங்கி சுற்றி அவன் பக்கம் வந்தாள்.

"ஆபிஸ்ல ஆள் இருக்காங்களா? திறந்திருக்கு?" என்றாள் மெதுவாக.

"நீ ஒன்னும் கவலைபடாத, அவனுங்கள அடிச்சு விரட்டிவிட்டுட்டாவது உன் ஆசையை நா நிறைவேத்திடுறேன்" என அவன் கண்ணடித்து சொல்ல,

"என் ஆசையா?" என அவன் கையில் லேசாக தட்டவே செய்தாள். மதியம் பேசியதை வைத்து அவள் ஏதேதோ நினைத்து பயந்தாள் தான் அதை கண்டுகொண்டதோடு, அவள் பக்கமே திருப்பியும் விட்டுவிட்டானே என்பதற்காகவே அந்த செல்ல அடி.

"வா" என சிரித்தவாறு அவள் கையைப் பிடித்துக் கொண்டு அவன் முன்னால் செல்ல, இவளும் மெல்ல அவனை பின்தொடர்ந்தாள்.

உள்ளே ஜவகரும் இன்னொருவனும் அமர்ந்து ஏதோ கலகலத்துக் கொண்டிருந்தனர், "அண்ணா வந்தாச்சு!" என்றான் இவனைக் காண்பித்து ஜவகர்.

 
அத்தியாயம் 22

"வாழ்த்துக்கள்டா வக்கீலு" என மற்றவன் வேந்தனுக்கு கை கொடுக்க,

"இப்படி எதாவதுனாத்தான் உன்ன பாக்கவே முடியுது" என வேந்தனும் பேச,

"வாங்க மேடம்" என்றான் ஜவகர் பவளமல்லியிடம். அவள் தலையசைத்து சிரிக்க, "இவன தெரியும் உனக்கு. இது என் ப்ரண்ட் பத்திரிகை ஆபிசர் ப்ளஸ் ஃபோட்டோஃக்ராஃபர் நிரஞ்சன். அவன்ட்ட ரெண்டையும் ஃபிக்ஸ் பண்ணி அட்வான்ஸ் குடுத்துடவோமா?" என பவளமல்லியிடம் கேட்க, சம்மதமாக தலையசைத்து விட்டாள்.

அவன் கைப்பேசியில் காட்டிய பத்திரிகை மாதிரிகளில் இருவரும் மாற்றி மாற்றி பார்த்து விலைகளைக் கேட்டு அதில் ஒன்றை முடிவிற்குக் கொடுத்தனர். யார் பெயரெல்லாம் போட வேண்டும் என இருவீட்டிற்கும் பேசி அதையும் கையோடு எழுதிக் கொடுத்து விட்டு, திருமண நிகழ்வுகளை படம்பிடிக்கவும், வீடியோ பதியவும் அவனிடமே பேசி முன் தொகையையும் கொடுத்து விட்டு கிளம்பினர்.

"இப்ப நேரா வீட்டுக்கு போகணுமா இல்ல வேற எங்கேயும் போயிட்டு வேணா போவோமா? ஆசைபட்டுட்ட அதை கொஞ்சமானாலும் நிறைவேத்தாம போனா எனக்கு மனசு கேட்காதுடி பவளமல்லி" என்றான் மீண்டுமாக அவளை வம்பிழுக்கும் பொருட்டு.

"அடடா வக்கீல் சாரே. உங்கள தெரியாம தப்பா நினைச்சுட்டேன். என்ன வீட்லயே விட்டுடுங்க ப்ளீஸ்" என்க,

"அது தப்புன்னு எவேன் சொன்னான்? கல்யாணம் பண்ணிக்கப் போற பொண்ணோட தனியா இருக்க சான்ஸ் கிடைச்சா எந்த ஆனியனாது சும்மா வருவானா? அப்ப நீ நினைச்சது ரொம்ப சரிதானே?"

"ஏங்க அதுலேயே ஏன் சுத்துறீங்க?" என்றாள் சிணுங்கலாக.

"அதான் தனியா எங்கப் போலாம்னு யோசிக்கிறேன்?"

"உங்கட்ட இனி பேசினா பாருங்க" என அவள் அமைதியாக அமர்ந்துவிட. அவள் வீடுவரை சென்று இறக்கிவிட்டவன், "நைட்டு கால் பண்ணுடி" என வெளியே வந்து நின்ற செல்லம்மாளுக்கும் கேட்கவே சொல்லிவிட்டுக் கிளம்ப, செல்லும் வண்டியை முறைக்க மட்டுமே முடிந்தது அவளால்.

செல்லம்மாள், அதன்பின் வயது பெண் எப்படி எல்லாம் இருக்க வேண்டும் என விடிய விடிய எடுத்தப் பாடத்தை தனியாக அவள் மட்டும் அல்லவா படித்தாள், பேசியவன் சொன்னதற்காக என்றுகூட ஒரு தவறிய அழைப்பு கூட கொடுக்கவில்லை.

இங்கு வேந்தன் வீட்டில்,

"பூ வைக்கணும், நிச்சயம் வைக்கணும் அதுக்கெல்லாம் தேதி?" என உத்தமி கேட்டதற்கு, "நிச்சயம் மட்டும் முதல் நாள் வச்சு மறுநாள் கல்யாணத்த முடிச்சுக்கலாம்" என்றுவிட்டார் படிகாசீ.

அனிருத் ஒருபக்கம் மனோன்மணியை அடைகாத்துக் கொண்டே திரிந்தார். அவனிடம் எந்த வித்தியாசமும் இல்லை, திருமணத்திற்கான வேலைகளைச் சொன்னபோதும், "சரி அது மட்டுந்தான நா பாத்துகிடுதேன்" என எப்போதும் போல சொல்லி சென்று விட்டான். அதிசயமாக ஜெகதாம்பாளும் மறுநாளே வந்து, "ஏதாவது செய்ய வேண்டுமா?" என நின்றதில் வீட்டில் கல்யாண கலை தான்.

அடுத்த ஒருவாரத்தில் பத்திரிகை கைக்கு வந்துவிட்டது, அதை மற்றவர்களுக்கு அழைப்பு வைக்க துவங்கும் முன்னர் புடவை எடுத்துவிடலாம் என முடிவானது. ஜெகதாம்பாளின் கடைக்கு தான் உடைகள் எடுக்க என கிளம்பினர். வேந்தன் வீட்டிலிருந்து படிகாசீ, உத்தமி, அனிருத், வேந்தன் என நால்வரும், பவளமல்லி வீட்டிலிருந்து செல்லம்மாள், பவளமல்லி இருவரையும் ஏற்றிக்கொண்டு கிளம்புவதாக ஏற்பாடு. அனிருத் மகனை பள்ளியில் விட்டுவிட்டு வரவும் கிளம்ப ஆயத்தமாக, ஜெகதாம்பாளும், மனோன்மணியும் அவர்கள் வண்டியில் வந்துவிடுவதாக கூறி முன்னர் கிளம்பி விட்டனர்.

அவர்கள் நால்வரும் கிளம்பி பவளமல்லி வீட்டிற்கு வந்ததும், அனிருத் திரும்பி, நடு சீட்டில் அமர்ந்திருந்த படிகாசீ, உத்தமி, இருவரிடமும், "அந்த பேயி புள்ளையும் வரும் கொஞ்சம் இடம்விட்டு உக்காருங்க" என சொல்ல,

அடுத்த நொடி ஒருபக்கம் உத்தமி குதித்திறங்கி, பின்னால் கடைசி சீட்டிற்கு சென்றுவிட, "நீ இறங்கி உன் பொண்டாட்டிகிட்ட போ, என்னால பின்னால உக்கார முடியாது" என்ற படிகாசீ இறங்கி வந்து வேந்தன் பக்கத்திலிருந்த அனிருத்தை இறக்கிவிட்டுவிட்டு முன் சீட்டிற்கு ஏறிவிட்டிருந்தார்.

கதவை திறந்து முதலில் செல்லம்மாள் ஏறவும், "அக்கா ஏறுக்கா!" என்றுவிட்டு அடுத்து பவளமல்லி அவளும் ஏறி, "ஹாய்!" என வாய்க்குள் கூறி வேந்தனுக்கு கையசைக்க, "ஹாய்!" என அவன் அவளுக்கு சத்தமாக கையசைத்து, "வாங்கத்த!" என்றான் செல்லம்மாளுக்கும்.

பின்னிருந்த உத்தமி, "ஏங்க மாமா உங்க கண்ணுக்கு தெரியுதா அந்த புள்ள?" என ரகசியமாக அனிருத்தை இடிக்க,

"ம்ம் மஞ்ச கலர் சேலை கட்டி நடுவுல உட்கார்ந்துருக்கே உனக்கு தெரியல?" என்றார் அனிருத்.

"தெரியல மாமா. ஆத்தி பயமால்ல இருக்கு" என அவர் இன்னும் அனிருத்தை இடித்துக் கொண்டு அமர,

"நா இருக்கும் போது என்ன பயம் உனக்கு? உன்கிட்ட வரவிட்ருவேணா நானு? தைரியமா இருக்கணும் புரியுதா? மாமாவ விட்டுட்டு தனியா எங்கையும் போவ கூடாது" என்கவும் வேகமாக தலையை ஆட்டினார் உத்தமி, அவர் பார்வை முழுவதும் முன்னால் அமர்ந்திருந்த செல்லம்மாள், பவளமல்லி இருவருக்கும் இடையே இருந்த காலி இடத்திலேயே தான் இருந்தது.

"ஒன்ன எனக்கு ரொம்பப் புடிக்கும்,
சொல்லுறத கேளு, கண்ணு முழிச்சா ஒன்ன நெனச்சு, சுத்துது என் காலு" ஜிப்ஸியில் பாட்டு ஓடிக்கொண்டிருக்க, வேந்தன் சாலையில் ஒரு கவனம், பாட்டில் ஒரு கவனம், பவளமல்லியில் ஒரு கவனம் என தொய்ந்திருந்தான்.

"இப்படி யாராவது பேய கூட்டிட்டு கல்யாணத்துக்கு துணி எடுக்க போவாங்களா மாமா? இதெல்லாம் அச்சாணியம் இல்ல?"

"உனக்கும் எனக்கும் புரிஞ்சு என்ன செய்ய? என் அக்கா பெத்த மவன் எங்க கேட்குறான்? பேய மாமியார் குடும்பத்துல உறுப்பினரா சேர்த்தது பத்தாதுன்னு நமக்கு தத்து பிள்ளையாக்க ப்ளான் பண்ணிட்ருக்கியான். மாட்டிக்காம தெளிவா இருந்துகிடணும் புரியுதா?"

"சரிங்க மாமா. முன்னால இருக்க பேயி நம்மள திரும்பிப் பாக்குதா மாமா?"

"அதுக்கு எங்கிட்ட பயம் ஜாஸ்தி நா இருக்க திசைக்கே திரும்பாது அப்படி மிரட்டி வச்சுருக்கேன்டி‌. நீயும் பயப்படாத" என சொல்லி நிமிர, உடம்பு அந்த பக்கமும் தலை மட்டும் இந்தப் பக்கம் பார்த்திருக்க, முறைத்துக் கொண்டிருந்தாள் தேன்பாவனி.

"ஆத்தே! பேயி" என நெஞ்சில் கைவைத்து அதிர்ந்து, அவருக்கு மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க.

"மாமா என்னாச்சு மாமா? என்ன செய்யுது மாமா?" என உத்தமி அவரின் நெஞ்செல்லாம் தடவிக் கொடுக்க,

"நா பேயா நா பேயா? என்னப் பார்த்தா பயப்பட மாட்டீங்களோ?" என தேன்பாவனி இன்னும் மிரட்ட,

"அடேய் வேந்தா காப்பாத்துடா" என அவர் அலற, முன்னால் இருந்தவர்கள் கவனமும் அவரிடம் வர, வேந்தனும் வண்டியை ஓரங்கட்டியிருந்தான்.

படிகாசீ, உத்தமி இருவரைத் தவிர மற்ற மூவருக்கும் தேன்பாவனி தெரிந்தாள். அவள் பயமுறுத்தியதும் புரிய, "பேசாம இரு பாப்பா" என செல்லம்மாள் கடிய, "அக்கா ப்ளீஸ்க்கா. சித்தப்பா பாவம்" என பவளமல்லியும் சொல்ல,

"இன்னைக்கு தான்யா இந்தப் புள்ள நல்ல வார்த்தை பேசிருக்கு" என்றார் அனிருத்.

"அமைதியா வாயேன் மாமா" என்றான் வேந்தன்.

"உன்னதான்டா தேடிட்ருக்கேன். ஒரு நிமிஷம் நெஞ்சே நின்னுருச்சு அமைதியா வரணுமாம்ல? இனி எங்கனாலும் நீ உன் மாமியார் வீட்டோட தனியா போய்க்கோ ராசா. இனி இவன்கூட வண்டில ஏறக்கூடாதுடி" என அவர் புலம்ப, அவன் மீண்டும் வண்டியைக் கிளப்பி விட்டான்.

"கொஞ்சமாவது மதிக்கிறானான்னு பாருடி இவன?" என அவர் வந்த படபடப்பு அடங்க வேண்டி பின்னால் சாய்ந்துவிட, உத்தமி தான் தாங்கிக் கொண்டார்.

படிகாசீக்கு நடப்பதை நம்பவே கஷ்டமாகத்தான் இருந்தது. பேய் இருக்கிறது என ஊரார் சொன்னபோது ஏற்றுக் கொள்ள முடிந்தது, ஆனால் அது தங்களைச் சுற்றி தான் வருகிறது என சொன்னதை ஏற்கவே முடியவில்லை. கண்ணுக்கு தெரியாத ஒன்றை இருக்கிறது என ஏற்கவும் முடியாமல், பயத்தை வெளிக்காட்டவும் முடியாமல் ஒரு அமைதியைக் கடைபிடிக்கத் துவங்கியிருந்தார். கையிலிருக்கும் எலுமிச்சம் பழமே தற்போதைய அவரின் பிடித்தரம்.

கடையில் இவர்கள் சென்று இறங்கிய போது, ஜெகதாம்பாளின் பெற்றோர்களும் வந்து வாசலில் நின்று காத்திருந்து வரவேற்றனர்.

"நீங்க பாத்து எடுங்க. நா சம்பந்தியோட பேசிட்டு வரேன்" என படிகாசீ கழண்டு கொண்டார்.

"மதினி தப்புச்சுட்டாங்கங்க!" என்றார் உத்தமி.

"எப்பையும் பொறுக்குற மாதிரி சும்மா ஆடி அசஞ்சு எடுக்காம ஆளுக்கொன்ன தூக்கிட்டு சீக்கிரம் கிளம்பப் பாக்கணும். வேகமா எடுக்க வச்சுக் கிளப்பிக் கூட்டிட்டு வரப்பாரு" என உத்தமியிடம் உத்தரவே போட்டார் அனிருத்.

செல்லம்மாளும், பவளமல்லியும் உத்தமி கூறுவதற்காக காத்து நின்றனர். "நீங்க பாத்துட்ருங்க நாங்க இப்ப வரோம்" என்ற ஜெகதாம்பாள் மனோன்மணியுடன் மேல் தளம் சென்று விட்டாள்.

"நிச்சயப்புடவை நாங்க எடுக்கணும். கல்யாணப்புடவை நீங்க எடுக்கணும். அப்படியே எடுத்துரலாமா?" என செல்லம்மாள் கேட்கவும்,

"ஆமாக்கா, கூட நாலு சேலை சேர்த்து எடுங்க. மதினி சொல்லிதான் விட்டாக. கல்யாணத்தன்னைக்கு மாத்தி கட்ட வேணும்ல?"

"சரி" என்றவாறு பெண்கள் மூவரும் பார்த்துக் கொண்டிருக்க, பவளமல்லி வேந்தனைத் தேடித் திரும்ப, அவன் இன்னொரு இடத்தில் நின்றுப் பார்த்துக் கொண்டிருந்தான். மெல்ல அவளே அவனிடம் சென்று, "நீங்க என்ன சேலை தனியா பாக்றீங்க?" எனக் கேட்க,

"சும்மா உனக்கு ஸ்பெஷல் கிஃப்ட் பண்ணலாம்னு தான்" என அவள் மீதும் ஒரு சேலையை வைத்து பார்த்து எடுக்க,

"கல்யாணச்சேலை எடுக்க அங்க வாங்க நீங்களும்" என்றழைத்தாள்.

"அது நாலே கலர், கட்டம் போட்ட டிசைன்னு முடிவு பண்ணி தான் வந்துருக்காங்க. அதத்தான் எடுப்பாங்க. நாம நம்ம மட்டும் பாக்குறதுக்கு கட்டுறதுக்கு எடுக்கலாம்டி" என்றான் அவன்.

"அதுக்குன்னு தனியா சேரிலாம் இருக்கா?"

"ம்ம் வெரைட்டி வெரைட்டியா இருக்கு"

"உங்களுக்கு எப்படி தெரியும்?"

"இதெல்லாம் ஜிகேடி"

"வெரி பேட் ஜிகேங்க"

"பேட் டச் பண்ண தேவையான ஜிகே தான்டி பவளமல்லி"

"ச்சீ போங்க நா அவங்கட்டயே போறேன். நீங்க என்னலாமோ சொல்றீங்க எனக்கு இதெல்லாம் எடுக்கத் தெரியாது" என கிளம்பிவிட்டாள்.

"ஹே நில்லுடி!" என்றவன் அழைக்க அழைக்க அவள் விறுவிறுவென சென்றுவிட, குறும்பு சிரிப்புடன் மீண்டும் சேலையிலேயே கவனமாகிவிட்டான்.

அங்கு செல்லம்மாள் ஒவ்வொரு சேலையாக தேன்பாவனியிடம் கருத்து கேட்க, விற்பனைக்கு நின்ற பெண்ணோ அவர் உத்தமியிடம் தான் கேட்பதாக நினைத்துக் கொள்ள, உத்தமி அருகில் இல்லாத ஆனால் இருக்கும் தேன்பாவனியைத் தேடிக் கொண்டிருந்தார். செல்லம்மாளும், தேன்பாவனியும் புடவை தேர்வில் இருக்க, பவளமல்லியும் வந்து இணைந்து கொண்டாள்.

"பேயிகிட்ட அபிப்ராயம் கேட்டு புடவை எடுக்கலாம்னு நா முத தடவையா பார்க்கறேன் மாமா" என்றார் உத்தமி அனிருத்திடம் ரகசியமாக.

"இந்த கல்யாணம் முடியறதுக்குள்ள இன்னும் என்னலாம் பாக்கணுமோன்னு நா நிக்கேன் இவ ஒருத்தி" என்றார் அனிருத்.

அவர்கள் மூவரும் தேர்வு செய்ததை, உத்தமியிடமும் காட்ட, "பொண்ணுக்குத்தேன் பிடிக்கணும் அவளுக்கு பிடிச்சாலே போதும்" என்றுவிட்டார்.

"அத்தைகிட்ட?" என்றாள் பவளமல்லி மெதுவாக,

"அவுகளுக்கே நாந்தான் எடுக்கப் போறேன். நா பார்த்தாலே போதும் சரின்னுடுவாக" என்றார் அதற்கும். அடுத்து பெண்கள் எல்லோருக்கும் எடுத்தாகியது.

"அக்காவுக்கு எடுக்கலையே இன்னும்? அக்கா உனக்கு பிடிச்சத பாத்து சொல்லு" என்ற பவளமல்லியை அனிருத் அநியாயத்திற்கு முறைத்து விட்டு, வேந்தனையும் சுற்றித் தேடினார், அவனால் அல்லவா இதையெல்லாம் அவரும் பார்க்க வேண்டியது இருக்கிறது.

"அந்தப் புள்ளைய உண்மைனே நம்பிட்டாகளாட்டம் இருக்குங்க" என உத்தமி இடிக்க,

"சும்மா இருட்டி நீ வேற இடிச்சுட்டே இருக்க" என மனைவியிடம் தான் எரிந்து விழ முடிந்தது, மறுபடியும் தேன்பாவனி கழுத்தைத் திருப்பி முறைத்தாள் என்றால் அவர் அவளுக்கு முன் சொர்க்கம் சென்றுவிடுவார் என்ற பயமே அவரை அடக்கி வாசிக்க வைத்தது.

"எடுத்துட்டீங்களா? இன்னும் கலெக்ஷன்ஸ் இருக்கு. பாக்றீங்களா?" என வந்தாள் ஜெகதாம்பாள். அவள் வந்து கண் காட்டவும் அனைவருக்கும் குடிப்பதற்கு பழச்சாறும் வந்து சேர்ந்தது.

"இம்புட்டு நேரம் எங்கம்மா போன நீ? அப்பவே வந்துருக்கலாம்ல?" என்றார் உத்தமி.

"ஒரு கஸ்டமர் சித்தி. அவங்களுக்கு எப்பவும் நாந்தான் கலெக்ஷன்ஸ் எடுத்து குடுப்பேன். கொஞ்சம் லேட் பண்ணிட்டாங்க இன்னைக்கு. அவங்க கிளம்பவும் நேரா இங்கதான் வரேன். உடனே வந்திடலாம்னு நினைச்சு குடிக்க குடுக்க சொல்லாம போய்ட்டேன். சாரி" என்றாள் செல்லம்மாளிடமும் திரும்பி.

"அது பரவால்லம்மா" என்றார் அவர்.

"ஹாய். உங்கட்டையும் பேசணும்னு நினைச்சேன், சரி இனி அடிக்கடி பாப்போமே பேசலாம் நிறைய" என பவளமல்லியிடம் சொல்ல,

"ஒரே வீட்டாளுக, ஆனா நாமளே இந்த புள்ளைய அடிக்கடி பாத்ததில்லையே மாமா" என உத்தமி சொல்ல, அனிருத் அவளை எங்கு கவனித்தார், ஜெகதாம்பாளுடன் வந்து நின்ற மனோன்மணியையும் அரூபமாக நின்ற தேன்பாவனியையும் தான் ஆராய்ச்சி பார்வைப் பார்த்துக் கொண்டிருந்தார்.

"எடுத்தாச்சா? பில் போட்ரலாமா?" என வந்துவிட்டான் வேந்தன்.

"உனக்கு எடுத்துட்டியா?" என்றான் மனோன்மணி.

"ம்ம் எனக்கும் மாமாக்கும் நா எடுத்துட்டேன், அத்த? அம்மாக்கு உங்களுக்குலாம் எடுத்துட்டீங்களா?"

"எடுத்தாச்சு தம்பி. உங்கப்பாக்கும், இவுக ரெண்டு பேருக்கும் மட்டும் எடுக்கணும்" என்ற உத்தமி, ஜெகதாம்பாள், மனோன்மணி இருவரையும் காட்ட,

"நீங்க இன்னும் எடுக்கலையா? மேல நின்னுப் பாத்துட்ருந்தீங்க உங்களுக்கு தான் எடுக்குறீங்கன்னு நினைச்சேன் நான்?" என்றான் வேந்தன் மனோவிடம்.

"நா எங்களுக்கு தனியா எடுத்து வச்சுருக்கேன். அத நா வீட்டுக்கு வரும் போது கொண்டு வந்துடுறேன்" என்றாள் ஜகதாம்பாள்.

"சரி ஓகே அப்ப மத்தத பில் போட குடுங்க" என வேந்தன் சொல்ல,

"மாமாக்கு நா எடுத்துடுறேன்டா. வேட்டி சட்டை தானே சேர்த்தே எடுத்துடலாம்" என அனிருத் சொன்னபோது, தேன்பாவனியைத் தான் சட்டென்று திரும்பிப் பார்த்தான் வேந்தன். அன்றைய பொழுதை சிறப்பாக கழித்துவிட்டு வீடு திரும்பினர்.

அடுத்தடுத்து நடந்த அனைத்து சடங்குகளிலும் தேன்பாவனியும் ஒரு ஆளாகக் கலந்து கொண்டாள். பத்திரிக்கை வைத்தனர், குல தெய்வமான முருகனிடம் ஆசிர்வாதம் பெற்றனர், பெண் வீடு சென்று பூ வைத்து, நலங்கு வைத்தனர், ஊர் அழைத்தனர், பந்தக்கால் நட்டனர், நிச்சய தாம்பூலம் வாசித்தனர். இதோ விடிந்தால் வேந்தனுக்கும் பவளமல்லிக்கும் திருமண வைபவம்.

தேனாறு ஊரே ட்யூப்ளைட்டும், சீரயல் பல்ப்பும், தெரு முக்குகளில் காதை கிழிக்கும் பாட்டுகளைக் கக்கிக் கொண்டிருக்கும் ஸ்பீக்கர் பெட்டிகளும் என திருவிழா கோலமாக இருந்தது.

வேந்தன் வீடும் பரபரப்பிற்கு பஞ்சம் மின்றி சொந்தங்கள் கூடி நிறைந்திருந்தது, படிகாசீ, உத்தமி, ஜகதாம்பாள் மூவரும் வீட்டில் வேலையாகவும் விருந்தினர்களைக் கவனிப்பதிலும் ஓடிக்கொண்டிருந்தனர்.

வேந்தன், நண்பர்கள் புடைசூழ மண்டபத்தில் இருந்தான். அனிருத், மனோன்மணி, வேந்தனிடம் வேலையில் இருக்கும் இரு இளைஞர்கள் என நால்வரும் மண்டபத்திற்கும் வெளி வேலைக்கும் என ஓடிக்கொண்டிருந்தனர். வேந்தன் பவளமல்லி திருமண பேனர்கள் வைக்கும் வேலையும் ஒருபக்கம் நடந்து கொண்டிருந்தது.

இரவு மணி ரெண்டைத் தாண்டிய நேரம், அதிகாலையில் விழிக்க வேண்டும் என்பதால் எல்லோரும் லேசாக கண் அசந்திருந்த நேரம், சிறுநீர் கழிக்க வேண்டி கழிப்பறை சென்ற உலகநாயகன் வழுக்கி விழுந்து, மயக்கத்திற்குச் சென்றிருந்தார்.

 
அத்தியாயம் 23

காலை நான்கு மணி, பவளமல்லி வீட்டில், செல்லம்மாள் வழி சொந்தங்கள் என வந்த கொஞ்ச பேர் மட்டுமே தங்கியிருந்தனர். அவர்களை ஒவ்வொருவராக எழுப்பி கொண்டு வந்த செல்லம்மாள் அந்த இருளிலும் தேன்பாவனி எங்காவது தெரிகிறாளா எனத் தேடினார்.

"நா இங்க தான் இருக்கேன்மா நீ பாப்பாவ எழுப்பி கிளப்புற வேலைய பாரு" என அவள் குரல் கேட்கவும் ஆயாசத்துடன் நகர்ந்துவிட்டார். அவருக்கான வேலைகள் வரிசை கட்டி நின்றது.

வீட்டிற்கு ஆட்கள் வந்ததிலிருந்து தேன்பாவனி யார் கருத்திலும் பதியாமல் ஒதுங்கி தான் இருக்கிறாள். யாராவது அவர்களாக வாய்விட்டுவிட்டாள் மட்டுமே பொங்கி எழுந்து எதையாவது எடுத்தெரிந்துவிடுவாள். அதுவும் அவர்கள் அறியாமல் மட்டுமே.

சொந்தங்கள் என வந்திறங்கியதுமே, "தேனுவ என்னமோ பேயா சுத்துதான்னு சொல்லுதாகளே நெசந்தானா?" என தான் கேட்டனர்.

"தெரியல மதினி" என செல்லம்மாள் சமாளித்தாலும்,

"பாத்துக்கோ செல்லம். அல்ப ஆயுசுல வாழ்க்கைய வாழாம போன உசுரு, அப்படித்தான் அலையும் எனக்கு தெரிஞ்ச ஒரு சாமியார் இருக்கார். இதுமாதிரி பேயெல்லாம் சொம்புல அடக்கி கடல்ல கரைச்சிருவாரு. புள்ள கல்யாணம் முடியவும் முதல்ல அத செஞ்சுடு. இல்லனா கூடபிறந்தவள தான் வாழவிடாம படுத்தும் பாத்துக்கோ. இளையவளுக்கு கல்யாணத்த முடிச்சு வச்சுட்டனா அடுத்த காரியமா செத்தவளுக்கு சாந்தி செய்ய பாரு. அதெல்லாம் குறையா போடவே கூடாது. என்ன தங்கம் நா சொல்றது?" என அவர் அருகிலிருந்த மற்றொரு சொந்தம் தங்கராணியையும் துணைக்கிழுத்துக் கொண்டு அறிவுரை வழங்க தொடங்கிவிட,

"பாத்துக்குறேன் மதினி" என அமைதியாகவே பதில் கொடுத்தார் செல்லம்மாள்.

"உங்கள விட நா என் தங்கச்சிக்கு நல்லது தான்டா நெனப்பேன். ஒரு வருஷமா கோமால இருந்ததுகளாட்டம் இன்னைக்கு தான் எனக்கு விமோச்சனம் வாங்கி குடுக்க வண்டி ஏறி வந்துருக்குதுங்க" என கடுப்பான தேன்பாவனி, அவர் வாசலுக்கு சென்றபோது நாயை விட்டு ஓட ஓட விரட்ட வைத்திருந்தாள், "நாளைக்கு ஊருக்கு இங்கிருந்து பெட்டிய கட்டுற வர இந்த பதட்டத்துலயே இரு" என்றுவிட்டே அமைதியானாள்.

அதேபோல் மற்றொருவர், "உன் பொண்ணு இறந்து ஒரு வருஷம் கழிச்சு சின்னவளுக்கு நல்லது பண்ணுத அதெல்லாம் சரிதேன். ஆனா மூத்தவ வாக்கப்பட்டு போன வீட்ல பூராவும் கெட்ட செய்தியாவே இருக்கே, அதுக்கு எதுவும் பரிகாரம் செஞ்சுட்டியா? என்னதான் இருந்தாலும் உன் சம்பந்தி வீடுல்ல? அது அப்படியே விடுறது மல்லி வாழ்க்கைய பாதிக்க கூடாதுல்ல? அதுக்கு காரணமே உன் மூத்த பொண்ணுதேம்னு வேற பேச்சிருக்காம்" என நல்லது சொல்வதுபோல் செல்லம்மாள் வாயை கிளற,

"ஆளாளுக்கு அவங்கவங்க தோதுக்கு பேசுவாங்க சித்தி அதுக்குலாம் நாம கவலை பட்டுட்டு இருந்தா என் இன்னொரு பொண்ணு வாழ்க்கைய பாக்க முடியாதே? அதான் நா அதெல்லாம் கண்டுகிறதில்ல" என்றார் செல்லம்மாள்.

"ம்ச் வாய் சொல்லுன்னு வந்தப்றம் அதெப்படி சும்மா விட முடியும்? நாளைக்கே சின்னவ வாக்கப்பட்டு போற வீட்ல இத ஒரு பேச்சா பேசி காமிக்க கூடாதுல்ல? இன்னைக்கு எல்லாம் நல்லவிங்க மாதிரி பேசுவாங்க அப்றம் சொல்லி காட்டுவாங்கத்தா. நாம பரிகாரம்லாம் செஞ்சு கடன கழிச்சுவிட்டுட்டு நல்ல காரியம் பண்ணுததுதேன் நமக்கும் நல்லது" சாப்பிட்ட பின்னரும் தூக்கம் வராததால் அந்த சித்தியாகப்பட்டவர் உளறுவதாக தான் இருந்தது செல்லம்மாளுக்கு.

"விடிஞ்சா கல்யாணம் நா இப்ப அதெல்லாம் யோசிச்சா ஆகுமா சித்தி?"

"அதேன் எங்கட்டலாம் கலந்துட்டல்ல நீ தேதி குறிச்சுருக்கணும். உன் இஷ்டத்துக்கு செஞ்சா? நாங்களாம் சும்மா வந்து நின்னுட்டு போக வேத்தாளுங்களா? உன் சித்தப்பாக்கு கூட அதுல ரொம்ப வருத்தம். எங்களலாம் வச்சுல்ல நீ மாப்ள பேசி முடிச்சுருக்கணும்? எடுத்து செய்யவும் பேசவும் ஆம்பள ஆளு இல்லன்னு அவங்களுக்கு எல்லாம் தொக்கால போவும்" காலை நீட்டி அமர்ந்து அவர் வியாக்கியானம் பேசிக் கொண்டிருக்க, இரு கால்களிலும் நடுவிரலை பிடித்து ஒரே இழுவையாக இழுத்துவிட்டாள் தேன்பாவனி, அவரின் இடுப்புவரை அந்த விரல் நரம்பு பிடித்துக்கொண்டதில் வலியால் முனங்குவதை தவிர வேறெதற்கும் அதன்பின் அவரால் வாயை திறக்க முடியவில்லை.

"நம்ம வீட்டுக்கு விஷேசத்துக்கு வந்துருக்காங்க தேனு. எதையும் இப்படி செய்யாத" என செல்லம்மாள் கெஞ்சவே செய்தார்.

"உயிரோட இருக்கும் போது தான் எதையும் செய்ய முடியாது. இப்ப எனக்கு பயம்லாம் இல்லம்மா. விதண்டாவாதமா எதாவது பேசுனா வலிக்க திருப்பி கொடுப்பேன். நீ பாப்பா கல்யாண வேலைய மட்டும் நிம்மதியா பாரு, இவங்களலாம் நா பாத்துக்குறேன். ஆம்பள இல்லாத வீடு ஆம்பள இல்லாத வீடுன்னு சொல்லி சொல்லியே நிமிரவிடாம பண்ற ஆளுங்கள பேசவே விடாம பண்ணணும்மா" என காட்டமாக பேசித்தான் அனுப்பி வைத்தாள். அதற்காகவே அவ்வப்போது அவளை தேடிக் கொண்டிருந்தார் செல்லம்மாள். இதோ காலையிலும் வந்து கெஞ்சல் பார்வை ஒன்றை அவளுக்கு காண்பித்து விட்டு தான் நகர்ந்திருக்கிறார்.

"மல்லி! எந்திச்சு குளிக்க போ. மணி அஞ்சாக போகுது. பொண்ணழைக்க வந்துருவாங்க. நல்ல நேரத்துல கிளம்பணும்" என உள்ளறையில் இரும்பு கட்டிலில் தூங்கி கொண்டிருந்தவளைத் தட்டி எழுப்பிவிட்டு, குளிப்பதற்கு துண்டு, பொண்ணழைப்பு சேலையில் பாவடை மற்றும் சட்டையை குளியலறையினுள் போட்டுவிட்டு வந்தார்.

தாமதமாக தூங்கியதால் கண்ணெல்லாம் எரிந்தாலும் அம்மாவின் குரலில் மெல்ல எழுந்தமர்ந்திருந்தாள் பவளமல்லி. கையில் இரவில் வைத்திருந்த மருதாணி நன்கு காய்ந்து சிலது உதிர்ந்துமிருந்தது. உதிர்ந்த இடத்தில் அடர் காப்பி நிறத்தில் பிடித்திருந்த மருதாணி நிறமே அவளுக்கு பரவசத்தைக் கொடுத்தது.

"ம்மா நல்லா புடிச்சுருக்கு பாரேன்" என இடது உள்ளங்கையில் வைத்திருந்ததை மற்றகையில் உள்ள மருதாணியோடே எடுத்துவிட்டு பார்த்தாள்.

"நல்லாதான் சிவந்திருக்கு. அம்புட்டு பிடிக்க போய் தான அடமா நின்னு அந்த வக்கீல கட்டுத? பின்ன எப்படி இப்படி செவக்காம போவும். போய் தண்ணீல கழுவு இங்க கீழ போடாத தரையெல்லாம் ஒட்டிட்டு அப்றம் செவப்பு சிவப்பா தெரியும். மடமடன்னு கிளம்ப பாரு" என பேசிக்கொண்டே அவளுக்கு அணியும் நகைகளையும் சரிபார்க்க அங்கிருந்த பெட்டிகளை எடுத்துக் கொண்டிருந்தார். நிச்சயமாக சடவாக சொல்லவில்லை என அவர் குரலில் தெரிந்தது. பரபரப்புடன் கூடிய ஒருவித சந்தோஷத்துடனே பேசியிருந்தார் செல்லம்மாள்.

அவரை திரும்பி பார்த்துவிட்டு, கையின் மருதாணியை முழுமையாக பார்க்கும் ஆர்வத்தில் குளியலறை சென்றாள். விரல்களில் முக்கால் பாகத்திற்கும், உள்ளங்கையின் நடுவில் ஒரு குட்டி நடுவட்டமும் அதைச் சுற்றி இதயம் போன்ற அமைப்பில் அந்த நடுவட்டத்தைச் சுற்றி ஒரு வட்டம் வரவும் வைத்திருந்தாள். இடது கையில் அவளே வைத்து கொள்ள மற்ற கையில் அந்த சுதா தான் வைத்துவிட்டிருந்தாள். இப்போது சிவந்தபிறகு பார்க்க இரண்டு கைகளிலுமே நன்றாக இருந்தது.

அது தந்த புத்துணர்ச்சியோடே குளித்து அன்றைய நாளுக்கான எதிர்பார்ப்போடு தயாராக துவங்கினாள். பொண்ணழைப்பிற்கான புடவையாக பிங்க் நிறத்தில் சந்தன நிற ஜரிகை வைத்த பட்டு, அதை கட்டலாமென ஒரு முனையை எடுத்து இடுப்பில் அவள் சொருகுகையில் கதவு தட்டப்பட்டது.

"வந்துட்டாங்களா?" என அதிர்ந்தவள், "இல்லையே கொட்டு சத்தமே கேட்கலையே? வீட்டுக்கு வந்தவங்கள்ல யாரோவா இருக்குமோ?" என அவளாகவே சொல்லி கொண்டு, "சேலை கட்டிட்டு இருக்கேன். வரேன்" என சத்தம் மட்டும் கொடுத்தாள்.

"கதவ தொறடி. உனக்கு அலங்காரம் பண்ணத்தான் ஆள் வந்துருக்காங்க" என செல்லம்மாளின் குரல் கேட்கவும், சேலையை ஏற்றி பிடித்துக்கொண்டு சென்று கதவை திறந்து மெல்ல தலையை மட்டும் நீட்டி, "யாரும்மா?" என கேட்டாள். 'ப்யூட்டிசியன்' என்ற ஒருவரை அவர்கள் கேட்கவேயில்லை. அது மாப்பிள்ளை வீட்டில் செய்யும் ஏற்பாடு தான் என்றாலும், இவளும் கூட அவனிடம் அதைப்பற்றி கேட்டுக் கொள்ளவில்லை.

"நாந்தான் கூட்டிட்டு வந்தேன். உள்ள வரலாமா?" என ஜெகதாம்பாள் செல்லம்மாள் பின்னிருந்து சிரித்தவாறு கேட்டாள்.

அவளை கண்டதும் தானும் சிரித்து, "வாங்க!" என கதவை கொஞ்சம் திறந்துவிட்டு அம்மாவை பார்க்க, "போய் அவங்க சொல்ற மாதிரி கிளம்பு, மூணு பேருக்கும் டீ போட்டு எடுத்துட்டு வரேன்" என கண்ணை காட்டிவிட்டு சென்றுவிட்டார் அவர்.

"நீங்க சேரி கட்ட ஸ்டார்ட் பண்ணுங்க ஆஷா. அல்ரெடி நாம வந்ததே லேட்" என ஜெகதாம்பாள் சொல்லவும் உடன் வந்த பெண் அவள் கொண்டு வந்த பையிலிருந்து அனைத்தையும் எடுத்து கட்டிலில் பரப்பி வைத்தாள். சின்ன அறை தான் ஒரு இரும்பு கட்டிலும், ஒரு இரும்பு பீரோவும் மட்டுமே இருக்க அதிலேயே கண்ணாடி இணைந்திருந்தது.

இவர்கள் முன் புடவையை கட்ட வேண்டுமா என பவளமல்லி விழித்துக் கொண்டு நிற்க, "இதுக்குலாம் நெளிஞ்சுட்டு நிக்க கூடாது. போய் கட்டிக்கோ போ" என்ற தேன்பாவனி குரல் அருகில் கேட்கவும்,

"க்கா!" என பவளமல்லி சுற்றி தேட, தன்னை தான் அழைக்கிறாள் என நினைத்த ஜெகதாம்பாள், "ஜகான்னே கூப்பிடுங்க. ஷையா இருக்கா? நா வேணா வெளில இருக்கவா?" என கேட்டாள்.

"இல்ல இல்ல. நீங்க வரீங்கனே யாரும் சொல்லலயே?" என இவள் கேட்க, "வாங்க மேடம் சேரி ஃப்லீட் எடுத்துடுறேன்" என அலங்கரிக்க வந்த பெண்ணும் அழைக்க, வேறு வழியின்றி சேலையை அவளிடம் நீட்டிவிட்டு அங்கிருந்த கொடியில் இருந்த சுடிதாரின் துப்பட்டாவை எடுத்து மேல் போர்த்திக்கொண்டு நின்றாள்.

"ஹே கைல மருதாணியா வச்சுருக்கீங்க? அச்சோ சாரிங்க. இது என் மிஸ்டேக் தான். மெஹந்தி முதல் நாளே வந்து போட சொல்லணும்னு மறந்தே போயிட்டேன்" என்ற ஜெகதாம்பாள் அவளுக்கு அவளே தலையில் தட்டிக் கொள்ள,

"இல்ல பரவால்ல. நாங்க எப்பவும் இதான் வச்சுப்போம்" என்றாள் பவளமல்லி.

"எப்பவும் வச்சுக்குறதும் கல்யாணத்துக்கு வச்சுக்குறதும் ஒன்னில்லைங்களே" என மீண்டும் நொந்து கொண்ட ஜெகதாம்பாள், "ஆக்சுவலி இவங்க என்னோட மேரேஜ்கு பண்ணவங்க. நீலகிரில உள்ளவங்க நானே ப்யூட்டிசியன் சைட் பாத்துக்குறேன்னு சொல்லிருந்தேன். பட் நேத்து கடைல கொஞ்சம் வேலையாகிட்டு முடிச்சு வரவே நைட்டு ட்வல்வ். நைட்டே இவங்கள என்னோட கூட்டிட்டு வந்துட்டேன். ஆனா மெஹந்தி வைக்க வரணும்னு மைண்ட்ல ஸ்ட்ரைக்கே ஆகல. இல்லனா நைட்டே கூட கூட்டிட்டு வந்துருப்பேன். ஏற்கனவே கல்யாணத்துக்கு முதல் நாள் வீட்டுக்கு லேட்டா வந்து நிக்றேன்னு மாமியும் உத்தமி சித்தியும் மூஞ்ச தூக்கிட்ருந்தாங்க. எனக்கு என் வேலை டென்ஷன் இத மறந்தே போயிட்டேன்" என்றவள், "கைல உள்ளது இருக்கட்டும், முழங்கை வர எதாவது உடனே போட முடியுமா ஆஷா?" என்றாள் அந்த பெண்ணிடம்.

"இனி வச்சா கஷ்டம் மேடம். சேரிலலாம் கலராகிடும்"

"இருக்கட்டும் எனக்கு இதே போதும்"

"இது எங்க வீட்டு செலவுங்க. இத கூட பண்ணலையான்னு யாராவது பேசிட்டாங்கனா மாமிக்கு பதில் சொல்ல முடியாது. அதும்போக மனோவோட தம்பி அவர் பாத்துக்குறேன்னு சொல்லியும் நாந்தான் ஸ்டராங்கா சொல்லிருந்தேன். இப்ப அவர் வேற இதுக்கு டென்ஷன் ஆகுவாரோன்னு தெரியலையே?" என அவள் பேச, இதற்கு என்ன பதில் சொல்ல முடியும் என பேசாமல் நின்றாள் பவளமல்லி.

"இனி என்ன பண்ண முடியும்? எதாவது கேட்டா சாரி சொல்லி சமாளிக்கணும்" என அவளே சமாதானமும் சொல்லிக் கொண்டாள்.

சேலையை அவ்வளவு நேர்த்தியாக ஆஷா கட்டி முடித்து, சிகை அலங்காரம் ஆரம்பிக்க, சுற்றி சேரை தேடினாள். அந்நேரத்தில் செல்லம்மாள் கதவை தட்டிவிட்டு வெளியே டீயுடன் நிற்க, அவரிடம் டீதட்டை வாங்கிய ஜெகதாம்பாள், "தலை கட்டணும் சேர் வேணும் எடுத்து தர்றீங்களா?" என கேட்க, அவரும் வெளியே சென்று எடுத்து வந்து தந்தார். அப்போது தான் அந்த அறையைச் சுற்றி பார்த்தாள் ஜெகதாம்பாள்.

"ரொம்ப குட்டி ரூம்ல? வேறெதுவுமே வாங்கிக்கலையா நீங்க?"

"வேறெதுவும்னா?" என கேட்டது தேன்பாவனி. புது குரல் கேட்கவும் மற்ற இரு பெண்களும், சுற்றி பார்க்க, "வேறென்ன வேணும்னு கேட்டேன்?" என பவளமல்லி சமாளித்தாள்.

"ஒரு டேபிள் சேர் கூட இல்ல. கட்டில்ல மெத்தை போடல? இதெல்லாம் பேஸிக் பீட்ஸ் தானே? உங்களுக்கு வேணும்னு தோணலையா?"

"ம்கூம் இதுவரை தோணினதில்ல" என மட்டும் பதில் தந்தாள் பவளமல்லி. ஜெகதாம்பாளும் 'நமக்கு எதற்கு அது?' என நினைத்து சிறுதோள் குலுக்களுடன் அத்தோடு நிறுத்தி கொண்டு டீ குடிப்பதில் கவனமானாள்.

"நீட்டா இருக்கான்னு பாருங்க மேடம்" என ஆஷா இருவருக்கும் பொதுவாக சொல்ல,

"அழகா இருக்கு. உங்களுக்கு பிடிச்சுருக்கா பாருங்க? பூ வைக்கணும்ல? இருங்க அதையும் வாங்கிட்டு வந்துடுறேன்" என அவள் வெளியே செல்ல,

"ஃபேஸுக்கு நிறைய மேக்கப் போடாதீங்க. சும்மா லைட்டா மட்டும் பண்ணுங்க" என வேகமாக பவளமல்லி சொல்ல,

"கொஞ்சம் பளீச்னு போட்டா தான் மேடம் கேமராக்கு நல்லாருக்கும். ரொம்ப தேவைபடாது உங்களுக்கு நீங்க சும்மாவே அழகா தான் இருக்கீங்க. கொஞ்சம் ஆட் பண்றேன் நீங்களே பாத்துட்டு சொல்லுங்க" என ஆஷா சொல்லிக் கொண்டிருக்கையில் ஜெகதாம்பாள் உள்ளே வர, கதவை திறந்து மூடுகையில் வெளியே கொட்டு சத்தம் கேட்டது.

"வந்தாச்சு எல்லாரும். ஃபேஸ் மேக்கப் சீக்கிரம் ஸ்டார்ட் பண்ணுங்க ஆஷா" என்றதும் வேலை துரிதம் எடுத்தது.

 
அத்தியாயம் 24

"கிளம்பியாச்சா? ஏழு மணி தாண்ட கூடாது. நாம பிள்ளையார் கோவில்ல கும்பிட்டுட்டு வேற போகணும். இன்னும் என்ன பண்ணுதீக?" என உடன் இரு பெண்களும் வர கேட்டுக் கொண்டே தான் உள்ளே வந்தார் உத்தமி.


"முடிஞ்சுது சித்தி‌‌. ஒரு டென் மினிட்ஸ் தான் கிளம்பிடலாம்" என ஜகதாம்பாள் சொல்ல,

"நகை எதையும் போட காணும்?" என்றார் மற்ற பெண்.

"அது சேரிக்கு மேட்சா செட் நா எடுத்துட்டு வர சொல்லிருக்கேன். அது போட்டுக்கலாம்" என ஜகதாம்பாள் பதில் சொல்ல, விழித்துக் கொண்டு அமர்ந்திருந்தாள் பவளமல்லி‌.

"பயப்டாத பாப்பா" என ஆறுதலாக தேன்பாவனியின் குரல் அருகிலேயே கேட்டது.

"முடிஞ்சது சித்தி. மாலைய போட சொல்லுங்க" என்றதும் உத்தமி வெளியே எட்டி, வேந்தனுக்கு அக்கா முறையில் வந்திருந்த ஒருவரை அழைக்க, அவரும் வந்து மாலையை போட்டுவிட்டார்.

"சரி சரி நடங்க. சீக்கிரம் கிளம்பலாம்" என உத்தமி விரட்ட, பெண்ணழைப்பு சிறப்பாக ஆரம்பித்தது.

பவளமல்லியை அவள் வீட்டிலிருந்து அழைத்துக் கொண்டு வெளியே வர, வாசலில் நின்றது வேந்தனின் ஜிப்ஸி. அவன் இன்றைய மாப்பிள்ளை அதனால் அவன் வந்திருக்க மாட்டான் எனத்தெரிந்தும் ஒரு நொடி மனது படபடத்துவிட்டது அவனது வண்டியை கண்டதற்கே!

அவள் முதலில் வண்டியில் ஏறி அமர்ந்ததும் மற்றவர்களும் ஏறிக்கொண்டனர். ஆளாளுக்கு ஏதேதோ கலகலத்துக் கொண்டு வந்தாலும், இவளுக்குத்தான் எதுவும் கருத்தில் பதியவில்லை. வழியெங்கும் இருந்த அவர்கள் திருமண வரவேற்பு பேனர்களைத் தான் பார்த்துக் கொண்டு வந்தாள்.

"திருநிறைச் செல்வி மங்கையர்க்கரசி, திருமணம் கொண்டாள் இனிதாக, என் இரு விழி போலே இருவரும் இன்று இல்லறம் காணட்டும் நலமாக!" என்ற பாட்டு ஒருபக்கம் வழிநெடுக இருந்த ஸ்பீக்கரின் மூலம் செவியை நிறைத்துக் கொண்டிருந்தது.

திருமண மண்டபத்திற்கு வெளியே இருந்த பிள்ளையார் முன் வண்டியை நிறுத்தி விட்டு அனைவரும் இறங்கிகொள்ள, பெண் வந்திறங்கியதற்காக பட்டாசு வெடிக்கபட்டது.

பிள்ளையாருக்கு முன் பூஜைக்கு பழங்கள், வெற்றிலை பாக்கு, மஞ்சள் குங்குமம் என மூன்று தட்டுகள் வைத்து சாமி கும்பிட அனைவரும் நிற்க, கண்ணை மூடி வணங்கி பவளமல்லியும் நின்றாள்.

"மாப்ளையவும் அழைச்சுட்டு வாங்க கற்பூரம் எடுத்துக்கட்டும்" என்ற பூசாரியின் குரலில், இவளுக்குள் ரத்தம் சீறிபாய துவங்கியிருந்தது.

இங்கிருந்தே, "வேந்தன வர சொல்லுங்க. தம்பிய கூப்பிடுங்க" என ஒவ்வொருவரும் மண்டபத்திற்குள் இருப்பவர்களுக்கு குரல் கொடுப்பதை கண்ணை இறுக மூடி உணர்ந்து நின்றாள்.

"அந்தா வந்தாச்சு மாப்ள!" என்ற ஒருவரின் குரலில், இன்னும் அழுத்தமாக மூடிக்கொண்டாள். கண்ணுக்கு முன்னிருந்த பிள்ளையாரிடம் கேட்க வேண்டியவற்றை கேட்க மறந்து, படபடப்புடன் கூடிய அவஸ்தையுடன் நின்றிருந்தாள்.

"அடேய் பட்டாசு வாசல் வர சிதறி கிடக்கு ஓரந்தள்ளிவிடுங்க" என சத்தமிட்டவாறு பட்டுச்சட்டையும் ஒருகையில் ஏற்றிபிடித்த வேட்டியுமாக நிதானமாக சுற்றி பார்வையை ஓடவிட்டு, திருமணத்திற்கென வந்திருந்தவர்களின் முகம் பார்த்து சிரித்து, ஒருகையால், "வாங்க!" என நெஞ்சில் கைவைத்து அவர்களையும் வரவேற்று வணக்கம் வைத்தவாறு நடந்து வந்தான்.

அருகில் வரவர தான், சர்வ அலங்காரத்தில் கழுத்தில் மாலையுடன் கையை வணங்கியவாறு நின்ற பவளமல்லி கண்ணுக்கு குளிர்ச்சியாக திவ்யமாக தெரிந்தாள். வேக நடையில் வந்தவனின் நடை கூட வேகம் சற்று மட்டுபட்டு மொத்த கவனமும் அவளின் தலை முதல் பாதம் வரை வருடச் சென்றிருந்தது.

"அண்ணா எல்லாரும் உங்களையே பாக்குறாங்க. நீங்க மேடத்தையே பாக்குறதையும் சேர்த்து பாக்குறாங்க" என ஜவகர் அவன் காதை கடிக்க,

"பாட்ட மாத்துடா" என்றான் இவன் பதிலுக்கு, பார்வை அவன் பவளத்திடம் தானிருந்தது.

"நா என்ன பாட்டா பாடுறேன்? போங்க அப்றம் உங்களதான் கிண்டல் பண்ணுவாங்க எனக்கென்ன" என இவனும் நக்கலாக சொல்ல,

"போய் ஆடியோ செட் காரன்ட்ட சொல்லி பாட்டு மாத்த சொல்லுடா"

"ஆஹான்!" என அவன் இன்னும் நக்கலாக சிரித்து, "என்ன பாட்டுங்கண்ணா?" என கேட்க,

சட்டென்று நின்றவன் சட்டை பையிலிருந்து அவன் கைப்பேசியை எடுத்து எதோ வேகமாக செய்துவிட்டு மீண்டும் பையிலேயே போட்டுக் கொண்டு, "லிங்க் அனுப்பிருக்கேன் நின்னு டைம் வேஸ்ட் பண்ணாம போய் சீக்கிரம் போடு போ" என அவன் முதுகில் தட்டி அனுப்பிவிட்டு, பவளமல்லியின் எதிரில் வந்து நின்றான்.

"இங்க பொண்ணு கிட்ட வந்து நில்லுங்க தம்பி" என உத்தமி அழைக்க,

"இல்ல அத்த இதுதான் எனக்கு வசதி" என்றவன் குரல் வெகு அருகே கேட்டதில் வெளிப்படையாகவே உடலில் நடுக்கம் பெற்றாள் பவளமல்லி. இன்னும் அவனை கண்ணை திறந்து பார்க்கவில்லை அவள். அவ்வளவு கூச்சம் ஒரேநாளில் எங்கிருந்து வந்து ஒட்டிக் கொண்டது என அவளுக்கே தெரியவில்லை போலும்.

"இருபது கோடி நிலவுகள் கூடி பெண்மையானதோ, என் எதிரே வந்து புன்னகை செய்ய கண் கூசுதோ" திடீரென்று மாறிய பாட்டு வரிகளில் பெண்கள் கூட்டமே குபீரென குரலெடுத்து சிரிக்க,

அனிருத், "என் மருமவனா கொக்கா!" என ஆர்ப்பரித்ததில் வேந்தன் நண்பர்களும் இணைந்து கொள்ள ஆண்கள் விசிலடித்து ஏதேதோ சத்தம் எழுப்பியதில், பயந்து கண்ணை விரித்து எதிரில் நின்றவனில் பார்வையை பதித்தாள்.

"வெல்கம்!" என தானும் வணக்கம் வைத்து தலையை அசைத்து சிரித்தான் வேந்தன்.

'க்ளீன் சேவ்' முகத்தோடு, பட்டு வேட்டி சட்டையில் முன் முடி காற்றில் பறக்க கழுத்து வளைவில் தங்க சங்கிலி எட்டி பார்க்க முதல் இரு பட்டன்கள் போடாமல் அசத்தலான சிரிப்புடன் நின்றவனை கண்டதும் மூச்சு முட்டியது பவளமல்லிக்கு. செய்வதறியாது தவித்து நின்றவளை கண்டு அவன் புருவம் உயர்த்த, "நல்லா வேண்டிக்கோங்கோ! சிறப்பான வாழ்க்கையா அமையட்டும்" என பூசாரி சத்தம் கொடுத்துவிட்டு மணியை அடிக்க, எல்லோரின் கவனமும் அவரிடம் சென்றது.

கண்ணை படபடவென சிமிட்டி நிதானித்து பிள்ளையாரின் பக்கம் திரும்பிக் கொண்டாள். சிரித்துக் கொண்டான் வேந்தன்.

அவர் கற்பூரம் காண்பித்து, திருநீறு குங்குமத்துடன் வெளியே வந்து, முதலில் மாப்பிள்ளைக்கும் பொண்ணுக்கும் திருநீறு வைத்துவிட்டு, அடுத்ததாக குங்குமத்தை நீட்ட, வேந்தன் முதலில் எடுத்தவன், "நீங்க மத்தவங்களுக்கு குடுங்க சாமி. நா என் பொண்டாட்டிக்கு வச்சுவிட்டுறேன்" என்றவன் எட்டி அவள் பொட்டின் மேல் சிறு கீற்றாக குங்குமத்தை வைத்துவிட்டு, அதே விரலில் மீதமிருந்ததை அவன் நெற்றியிலும் வைத்துக்கொள்ள, மொத்த கூட்டமும், 'என்னடா இது!' என தான் பார்த்தனர்.

"வக்கீல் தம்பி அது அவா உங்க பொண்டாட்டி ஆனப்றம்ல வைக்கோணும்?" என்றார் பூசாரி,

"அதான் இன்னும் அரைமணி நேரத்தில ஆக போறாங்களே சாமி. தாலி கட்டிட்டு குங்குமம் வச்சாலும் குங்குமம் வச்சுட்டு தாலி கட்டினாலும் இந்த செகென்ட்ல இருந்தே என் பொண்டாட்டி தானே சாமி?"

"அதுசரி வக்கீலான்ட பேசிட முடியுமா?" என்றவர் மற்றவர்களுக்கு கொடுக்க நகர்ந்து விட,

"உன் அண்ணே ஃபுல் ஃப்ளாட் போல?" என ஜவகரிடம் கேட்டவாறு வேந்தன் நண்பர்கள் அவனிடம் வந்துவிட,

"அதெல்லாம் எப்பவோ ஃப்ளாட். மேடத்தோட ரப்பர்பேண்ட கைல போட்டுட்டு திரியிறதுல தெரியலையா உங்களுக்கு?" என்றான் அவனும்.

"அடப்பாவி ஹேர்பேண்டா அது? நா ஏதோ சாமி கயிறுன்னு நெனச்சேனேடா?" என அவன் கையையும் தூக்கி பார்க்க,

"என் பொண்டாட்டி பிடில இப்படி இருந்துட்டு போறேன் இப்ப என்னங்கடா அதுக்கு?" என அவன் அவர்களிடம் எகிறியதில் வாயை பிளந்துவிட்டாள் பவளமல்லி.

"இப்படிதான் வாயாலேயே நிறைய அல்வா தருவான் நம்பிடாதீங்க" என அவளிடமும் அவன் நண்பர்கள் சொல்ல,

"நம்ம மாட்டியாடி பவளம்?" என அவனும் அவளை வம்பிழுக்க, திருதிருவென விழித்தாள் பவளமல்லி.

"ஜூலை மாதம் பூக்கும், கொன்றைப் பூக்கள் போல, சேலை கொண்ட பெண்ணின் அங்கம் தோற்றம் காட்டுதே" என அங்கு பாடல் வரிகளை இவனும் உடன் சேர்ந்து பாட,

"உள்ள வாங்க நேரம் போயிட்ருக்கு. ஐயர் வேற அங்க கூப்பிட்டு இருக்காரு" என உத்தமி வந்துவிட்டார்.

"நா கூட்டிட்டு வரேன் அத்த" என்றவன் அவள் கையை கோர்த்து கொள்ள,

"இரும்பு பிடி தான் இனி" என வெடித்து சிரித்தனர் அவன் நண்பர்கள்.

அவர்கள் முன் செல்லவும், "அக்காவ எங்க?" என அனிருத் உத்தமியிடம் கேட்க,

"மதினி வந்துட்டாக உள்ளதேன் எல்லார்ட்டையும் பேசிட்ருக்காக, இப்பதேன் பாத்துட்டு ஓடியாரேன்"

"அப்ப மாமா கூட யாரு இருக்கா?"

"சாமி தாத்தா தான் நா பாத்துகிடுதேன்னு சொல்லி அனுப்பி விட்டுட்டாக போல"

"சரி போ. மதியம் வரை சமாளிச்சுக்கிட்டா அப்றம் நாமளும் போயிடலாம்" என அனிருத் வேறொரு வேலை வரவும் நகர்ந்து விட்டார்.

காலையில் படிகாசீ தான் அந்த அறைக்கு குளிக்க சென்றபோது, பூட்டியிருந்த குளியலறையைப் பார்த்துவிட்டு, "மத்த நாளு மாதிரி உள்ள ஒரு மணிநேரம் உட்கார்ந்திருக்காம சீக்கிரம் வெளிய வரப்பாரு" என கதவைத் தட்டி சொல்லிவிட்டு மற்ற அறையில் குளிக்க சென்றுவிட்டார். ஆளாளுக்கு குளித்து கிளம்பி மண்டபத்திற்கு பாதிபேர், பெண்ணழைக்க மீதி பேர் என சென்றுவிட்டனர்.

படிகாசீயும் கிளம்பி முதலில் மண்டபம் வந்துவிட்டிருந்தார். ஒருசிலர், "எங்க உன் புருஷன காணும்?" என்று கேட்டதில் தான், அனிருத்தை வீட்டிற்கு அனுப்பி பார்த்து அழைத்து வர சொல்லி அனுப்ப, அவசரமாக வந்தவர் வீடு முழுவதும் தேடி விட்டு, இறுதியாக அவர் அறையிலிருந்த குளியலறையைத் தட்டி தட்டி அழைத்து சோர்ந்து, மனோன்மணிக்கு அழைத்து படிகாசியிடம் விஷயத்தைச் சொல்லி அழைத்து வர சொல்ல, அவர்களும் என்னவோ என பயந்து உடனே கிளம்பி வந்தனர்.

"அடேய் நா காலைலயே வந்து பாத்தேன்டா அப்பவே உள்ள பூட்டியிருந்தது. எதாவது ஆகியிருக்குமோ?" என படிகாசீ அழத்துவங்க,

"ம்ச் பேசாம இருக்கா. ஒன்னுமிருக்காது" என்ற அனிருத், "டேய் மனோ கதவை உடைச்சுடலாம்" என்றதும், இருவருமாக கதவின் லாக்கை உடைத்து திறந்து மயங்கி தான் இருக்கிறார் என உறுதி செய்து உலகநாயகனை தூக்கி கொண்டு வெளியே வந்திருந்தனர்.

மருத்துவருக்கு அழைத்து அவரும் வந்து பார்ப்பதற்குள் மண்டபத்திலிருந்து அழைப்பு வந்து விட்டிருந்தது. வேறு வழியின்றி ‌முதலில் அனிருத் கிளம்பிவிட, மருத்துவர் வரும்போது சாமி தாத்தாவும் வந்திறங்க, மருத்துவர் உலகநாயகனுக்கு மருத்துவம் பார்த்துவிட்டு, "வழுக்கி விழுந்து தான் மயங்கிருக்காரு. குறுக்கு எலும்பு பிசகியிருக்கு. பிசியோ தான் பண்ணணும். எழுந்து நடக்க கூடாது. நா நம்பர் தரேன் அவர்ட்ட பேசுங்க வீட்டுக்கே வந்து பாப்பாரு" அவர் அவ்வாறு சொல்லி சென்றுவிட, உலகநாயகன் விழித்துவிட்டாலும் எதையும் சொல்ல தெரியாமல் தான் விழித்தார்.

"நா பாத்துக்குறேன். இன்னைக்கு கல்யாண வேலைய பாருங்க. இப்ப நல்லாத்தானே இருக்காரு, இன்னைக்கு ஒரு நாளு எப்படியாவது சமாளிப்போம்" என சாமி தாத்தா சொல்லியே இருவரும் கிளம்பி வந்திருந்தனர். அனிருத் மண்டபம் வந்ததும் வேந்தனிடம் விஷயத்தை சொல்லியிருந்தார். ஆனால் அவனால் தான் அங்கிருந்து செல்ல முடியாமல் இருந்தது. அவன் நகர்ந்தால் தான் மொத்தமாக பேச்சு பொருளாகிவிடும் வாய்ப்பு அதிகம் என்பதால் அவன் அங்கேயே இருந்தான்.

பிள்ளையாரை வணங்க அழைக்கும் முன்னர் தான் மனோவிற்கு அழைத்து விசாரித்திருந்தான். அவன் ஒன்றும் பிரச்சினை இல்லை என்ற பின்னரே சற்று ஆசுவாசம் கொண்டிருந்தான்.

இதோ இருவரும் ஐயர் முன் வந்தமர்ந்ததும், சடங்குகளை ஆரம்பித்து இருவருக்கும் முகூர்த்த உடை கொடுத்தார் அவர்.

"சீக்கிரம் கட்டிட்டு வந்திடு" என அவள் காதில் சொல்லிவிட்டே கடந்துச் சென்றான்.

ஆஷா மறுபடியும் பொறுப்பேற்று கொள்ள, அரைமணி நேரத்தில் மறுபடியும் தயாராகி அழைத்து வரப்பட்டாள்.

இந்த முறை வேந்தன் முதலிலேயே மனையில் அமர்ந்திருந்தான். அதனால் பெண்கள் புடைசூழ தான் பவளமல்லி நடந்து வந்தாள். செல்லம்மாள் மேடையின் கீழேயே நிற்க, அவரை பார்த்து ஆசிர்வாதம் பெற்றுவிட்டு தான் மேடை ஏறினாள்.

அவளை வேந்தன் அருகில் அமர்த்திவிட்டு நிமிர்ந்து, "மாமா அந்த தேனு புள்ள எங்க? இங்க வரலையோ?" என மேடையில் மருமகன் அருகில் நின்ற அனிருத்தை உத்தமி சுரண்டி கேட்க,

"உன் கூடவே தான நடந்து வந்தது பாக்கலன்ற நீ?" என அனிருத் சாதரணமாக கூற,

"என்கூடயா?" என அவர் பயந்து விழித்தார்,

"ஏன்டி ஒரு மாசமா கூடவே தான் சுத்துற இன்னுமு என்ன பயம்?"

"இருக்கா இல்லையான்னு தடவிட்டு திரிங்க அப்பத்தான் பயமா இருக்குறதுனா என்னன்னு தெரியும்" என அவர் முறைக்க,

"இந்தா உனக்கு அடுத்துதேன் நிக்குது" என்றார் இப்போதும் இடக்காக, தேன்பாவனி உண்மையில் அங்கு தான் நின்றாள்.

"அப்ப நீங்க இந்தாக்குல வாங்க" என அவரை இழுத்து அந்தப்பக்கம் விட்டுவிட்டு உத்தமி இந்தப்பக்கம் நின்று கொண்டார்.

இங்கு மணமக்கள் இருவரும் அவர்களது உலகில் மிதக்க துவங்கியிருந்தனர்.

"பவளமா மின்னுரியே!" அருகில் அமர்ந்தவளை வேந்தன் புகழ,

"நீங்க ரொம்ப பண்றீங்கங்க இன்னைக்கு" என்றாள் அவளும் குனிந்து மெதுவாக.

"ஆமா ரொம்ப எக்ஸைட்டடா இருக்கேன் சோ ஓவர் ஃப்லோ ஆகுது" என எந்த பந்தாவும் காட்டாமல் ஒத்துக் கொண்டான்.

நிமிர்ந்து அவன் முகத்தை பார்த்தாள், அதில் தெரிந்த சந்தோஷமே அவன் கூறுவது நிஜம் என எடுத்துரைக்க, அவளை மணப்பதில் அவனுக்கான நிறைவு அவளுக்கும் நிறைவை தர, சந்தோஷமாக அவன் தந்த மாங்கல்யத்தை ஏற்று அவனின் உணர்வாக இணைந்து கொண்டாள்.

 
அத்தியாயம் 25

பவளமல்லி கழுத்தில் மூன்று முடிச்சிட்டு நகர்ந்த வேந்தன், தாலியைப் பார்த்தவாறு இருந்தவள் முகத்தைச் சற்றுக் குனிந்துப் பார்க்க, குனிந்திருந்தவளும் அவன் பார்வையின் உந்துதலில் பார்வையை மட்டும் மேல்தூக்கிப் பார்த்தாள்.

லேசாக கண்கள் கலங்கியிருக்க, தூவப்பட்ட அட்சதை தலையிலும் முகத்திலும் ஆங்காங்கே ஒட்டியிருக்க, அலங்காரத்தையும் மீறி வேர்த்திருந்தாலும் மலர்ந்திருந்த முகத்தைப் பார்த்து மெலிதாக அவன் சிரிக்க, அவன் சிரிப்பில் இணைந்து அவளும் சிரித்தாள். உயிர் பந்தத்தில் இணைந்துவிட்ட நிறைவிருந்தது அவர்கள் இருவரின் சிரிப்பில்.

"மாலைய மாத்திடலாமா?" என்ற ஐயரின் குரலில் இருவரும் அவரிடம் திரும்ப, "துணை மாலைய மட்டும் கழட்டி மூணுதரம் மாத்திக்கோங்கோ" என்றார் அவர். இருவரும் மாற்றிக்கொள்ளவும், "மனைய சுத்தி வாங்கோ. வந்துட்டு பெரியவாள்ட்ட ஆசிர்வாதம் வாங்கிக்கோங்கோ. ஷேமமா வாழணும்" என அவர் வணங்கி எழுந்து கொண்டார்.

சுற்றி நின்ற சொந்தங்களும் விலகிக் கொள்ள, படிகாசீயும் இறங்கி மற்றவர்களை வரவேற்பதற்கு மேடை முன் வந்து நின்று கொண்டார்.

"மாமா இப்ப நா போணுமா இல்ல அந்த பேயி பொண்ணு போவுமா?" என்றார் உத்தமி ரகசியமாக அனிருத்திடம்.

"அந்த புள்ள கூட நீ எங்க போணுங்குற?" என்றவருக்கு யோசனை வேறாக இருந்தது.

"ம்ச் ஐயரு இப்ப சொன்னாருல்ல? மனைய சுத்தி வரப் பொண்ணு கைய பிடிக்கணும்ல?"

"அந்த புள்ள ஒரு கைய புடிச்சா நீ ஒரு கைய புடி போ இதெல்லாம் ஒரு சந்தேகம்னு கேட்டுட்டு நிப்பியோ?"

"அப்றம் உங்க மருமகேன் ஆரு கைய புடிங்குங்கேன்? வெசராட்டம் பேசுறது நீங்க! சந்தேகம் கேட்டா என்மேல பாய்வீகளோ?"

"கிறுக்கி! இப்ப ஆசிர்வாதம் வாங்கணும்னு எல்லாம் ஒட்டுக்கா மாமாவ கேப்பாய்ங்க. அவனுங்கள எப்படி சமாளிக்கன்னு நா இருக்கேன். நீ பேயவே ஆராய்ச்சிப் பண்ணிட்டுக் கிடக்க?"

"ஆமால்ல? இப்ப என்ன மாமா செய்யப் போறீக?"

"ஏன் நீ எங்க போ போற? உன்னையும் தான் கேப்பாங்க? மாமாவ எங்கன்னு நிசத்த, சொன்னாலும் பேசுவாய்ங்க சொல்லாட்டியும் பேசுவாய்ங்க. என்ன செய்ய?" என்றவர் மனையை விட்டிறங்கி படிகாசீயிடம் வந்தார். படிகாசீ மேடைக்கு கீழே தான் மேடையை ஒட்டி முன் நின்றிருந்தார்.

கரிகாலவேந்தன், முதலில் எழுந்து கொண்டு, "வா!" என அவளுக்கும் குனிந்து கை கொடுக்க, புடவையை ஒரு கையால் பிடித்தவள் மறு கையை அவனுக்கு கொடுத்து அவன் பிடியிலேயே எழுந்து நின்றாள்.

"நீங்க முன்ன வாங்கோ பொண்ணு உங்க கைப் பிடிச்சு பின்ன வரட்டும்" ஐயர் சொல்ல, பிடித்தக் கையை இன்னும் இறுக்கிப் பிடித்து அவன் முன் செல்ல, பதுமையாக பின்தொடர்ந்தாள் பவளமல்லி. அவர்கள் இருவரின் உலகம் அப்போதைய நிகழ்வில் மட்டுமே கவனம் கொண்டிருந்தது.

"மாமாட்ட ஆசிர்வாதம் வாங்கணுமே இப்ப என்னக்கா செய்ய?" என அனிருத் படிகாசீயிடம் வந்து நிற்க,

"வீட்ல போய் வாங்கிக்கட்டும்டா அய்யாவு. முதல்ல அந்த மனுஷன தேடுனாலும் அப்றம் தாலி கட்டுற நேரம்னு பெருசா யாரும் கேட்டுக்கல. இனி கேட்டா இவ்வளவு நேரம் இங்கன தான் இருந்துட்டு இப்பதேன் வெளில வீட்டுப் பக்கம் போயிருப்பாருன்னு சொல்லி சமாளிச்சுக்கலாம். வீட்டுக்கு வந்தப்றம் மத்தவுக தெரிஞ்சுக்கட்டும்" என படிகாசீ சொல்லிவிட,

"சரித்தேன்!" என்ற அனிருத் அதை மருமகனுக்கு சொல்லத் திரும்ப, அங்கு வேந்தனும் பவளமல்லியும் பொதுவாக அனைவருக்கும் குனிந்து வணக்கம் வைத்து நிமிர்ந்தனர்.

"வீட்ல பெரியவங்க அதிகம் ஐயரே. அதனால நாங்க பொதுவா கும்பிடட்டுமா?" என அவனே கேட்டுவிட்டதால், தலையை ஆட்டி, வந்த வேலையும் முடிந்ததால் கிளம்பி விட்டார் அவர்.

அடுத்த நிமிடம் இருவரையும் காலை உணவிற்கு அழைத்து செல்லும் பொறுப்பை உத்தமி ஏற்றுக் கொள்ள, அவர்கள் உணவை முடித்து வருவதற்குள் மனையில் அலங்கரிக்கப் பட்ட இருக்கையைப் போட்டு வாழ்த்து மேடையாக மாற்றியிருக்க, இருவரும் அதில் அமர்ந்து கொண்டனர். சொந்தங்களும், நண்பர்களும், ஊர்க்காரர்களும் வாழ்த்து சொல்ல படையெடுப்பைத் துவங்கிவிட, மணமக்கள் அதில் லயித்தனர்.

ஒரு பத்து நிமிடங்கள் பொறுத்த ஃபோட்டோகிராப்பரான அவன் நண்பன் மேடையேறி அவனிடம் வந்தான்.

"வேந்தா! மேடைல உங்ககிட்ட ஏதோ தப்பா இருக்குடா" என அவன் காதில் சொல்ல,

"ஏன் பேக் க்ரௌண்ட் கலர் எதுவும் மாத்தணுமா?" என வேந்தன் கேட்க,

"அதில்லடா இங்க பாரு" என அதுவரை எடுத்த ஃபோட்டோக்களை கேமிராவில் ஒவ்வொன்றாக காட்டினான்.

"மேடைல எடுத்த ஃபோட்டோல மட்டும் கருப்பு ஷேடோ விழுதுடா. ஃபர்ஸ்ட் கேமிரா லென்ஸ் தான் ப்ராப்ளம்னு ந்யூ லென்ஸ் மாத்திட்டேன். ஆனாலும் இங்க பாரு தாலி கட்டுற ஃபோட்டோ கூட சரியா வரல. வீடியோலயும் அப்படிதான் ஆகுது. இது இப்படி எடுக்குறதே வேஸ்டா போகும்டா இடத்த மாத்திக்கலாம்டா, இங்க ஏதோ சரியில்ல, நல்ல நாள் உனக்கு சோ நா எதையும் சொல்ல விரும்பல, வேற இடம் பாக்கலாம், சின்ன மேடை செட்டப் பண்ண சொல்லிடுவோமா? கேமிரா ஃபோகஸ்காக நாந்தான் சொன்னேன்னு கூட சொல்லிடலாம். மண்டபத்துல வேற சைட் எடுத்த எந்த ஃபோட்டோலயும் ஷேடோ இல்ல, இதுல பாரு. இது கண்டிப்பா கேமிரா ஃபால்ட் கிடையாதுடா" என அடுத்த ஆட்கள் வரும் முன் பேச வேண்டும் என்பதற்காக படபடவென்று பேசினான். அதையும் மீறிய மரண பயம் அவன் கண்களில்.

வேந்தன் மெல்ல திரும்பிப் பார்த்தான், அங்கு தான் பவளமல்லியின் அருகில் தேன்பாவனி நின்றிருந்தாள். அவள் பார்வை தூரத்தில் நின்ற செல்லம்மாளிடமே இருந்தது. அம்மாவையும், தங்கையையும் ஒரே நேரத்தில் பாதுகாத்துக் கெண்டிருந்தாள் ஆத்மாவாக நின்று.

வேந்தன், அவன் நண்பன் அறியாமல், "மல்லி!" என அவளிடம் குனிந்தவன், "உன் அக்காவ ஒருத்தன் இவ்வளவு நேரமு ஃபோட்டோ புடிச்சுட்டு அரண்டு போய் நிக்கான். கீழ இறங்கிக்க சொல்லு இல்லனா இங்க இருக்க மொத்தக் கூட்டத்துக்கும் நாமதான் பதில் சொல்ல வேண்டியது இருக்கும்" என மெல்ல அவள் காதில் மட்டும் சொல்ல,

"அக்கா ஃபோட்டோல தெரிறாளா? அக்காவாவே தெரியிறாளா நிஜமாவாங்க? நானும் பாக்கட்டுமா?" என இவள் ஆவலாக கேட்க,

"அவன் ஆல்பம் போட்டு தந்த அப்றம் நாம மட்டுந்தான் அத பாக்கவே போறோம். இப்ப நீயே அது உன் அக்கான்னு காமிச்சு குடுத்துடாதடி. உனக்கு தான் அக்கா அவங்களுக்கு அது பேய். ஆக்ரோஷமாக்கிடாம மெல்ல சொல்லி இறங்கச் சொல்லு" என்கவும், முறைத்துப் பார்த்தாலும் தேன்பாவனியைத் திரும்பிக் கெஞ்சலாக பார்த்தே இறங்க வைத்துவிட்டாள்.

"இங்க ஒன்னும் இல்லடா. நீ எங்க ரெண்டு பேர மட்டும் ஃபோகஸ் பண்ணி இங்க கிட்ட நின்னே ஒரு ஃபோட்டோ எடுத்து பாரு" என வேந்தன் நண்பனுக்கு சொல்ல,

மெல்ல அந்த இடத்தை ஆராய்ந்தவாறே, கேமிராவில் மணமக்களைப் பார்த்தான், இப்போது பளிச்சென்று இவர்கள் இருவர் மட்டுமே தெரிய, மீண்டும் மீண்டும் நன்றாக பார்த்தவன் மெல்ல பின் நடந்து சென்று மொத்த மேடையையும் கேமரா வழிப் பார்த்தான்.

"இப்ப தெரியலடா எப்படி?"

"ஹோம புகை நின்றுக்கும்டா அதான் உனக்கு கருப்பா தெரிஞ்சுருக்கு. பேயெல்லாம் கேமரால பதியும்னு எவன் சொன்னான்? சும்மா ஊர ஏமாத்துற மாதிரி என்னையும் ஏமாத்தப் பாக்குற?"

"அடேய் உன் வக்கீல் வேலைய என்ட்ட காட்டாத. நா பேய்னு சொல்லவே இல்ல. நீயாதான் இப்ப சொன்ன"

"கருப்பா புகையா இருந்ததுன்னு சொன்ன நீதான் பேய கண்டவன் கணக்கா மூஞ்ச வச்சுருக்க? போய் கண்ணாடில பாரு உன் முகரைய"

"இது காட்டுக்குள்ள மிருகங்கள்ல டிடெக்ட் பண்றதுக்காக அடிஷ்னல் சென்சார் ஆட் பண்ணதுடா. சென்சார் பொய் சொல்லாது"

"பின்னாடி வரிசையா வர்றாங்க. முதல்ல மனுஷங்கள ஷேடோ விழாம ஃபோட்டோ எடுக்க கத்துக்கோ போ" என வேந்தன் விரட்டிவிட, வேறுவழியின்றி கீழே இறங்கி நின்றான் அவன்.

"இப்ப வீடியோலயும் தெரியலண்ணே. ஆனா நீங்க பேசிட்ருந்தப்ப இதுல புகை மாதிரி நகர்ந்தத இப்பவும் பாத்தேன்" என்றான் வீடியோ எடுக்கும் பையன்.

"சீக்கிரம் எடுத்துட்டு இடத்த காலி பண்ணிருவோம்டா நாம. வக்கீல் விவகாரம் புடிச்சவன். ஏற்கனவே இந்த ஊர்ல பேய் உலாத்துதுன்னு பேச்சிருக்குல்ல? நமக்கு தேவையில்லாத வம்பே வேணாம். அவன் சமாளிப்பான் நம்மளால முடியாது" என்றவன் அதன் பின்னும் நண்பனை முறைத்தவாறே தான் புகைப்படங்களை எடுத்துக் கொண்டிருந்தான்.

அங்கு உலகநாயகனைப் பற்றி விசாரித்த அனைவருக்கும், "இங்க தான் இருந்தாரு. மேல இருப்பாருன்னு நினைக்கிறேன். இல்ல வெளில யார்ட்டையும் பேசிட்டு நிக்கிறாரான்னு பாக்கணும்" என ஒவ்வொரு விதமாக சொல்லி சமாளித்தனர் மற்றவர்கள்.

நெருங்கிய சொந்தங்களுக்கு மட்டுமே விஷயம் மெல்லப் பகிரப்பட்டது. அதுவும் சமாளிக்க முடியாத கட்டாயத்தினால் மட்டுமே உண்மையைக் கூறிவிட்டிருந்தனர்.

"என்னடி இது அபசகுணமாவுல இருக்கு? இத்தன நாள் இல்லாம கல்யாணத்தன்னைக்கு இப்படி நடக்கணும்னா காரணமில்லாம இருக்காதே?" என உலகநாயகனின் சொந்தத்தில் ஒருவர் படிகாசீயை பிடித்து நேரடியாகவே சொல்ல,

"அப்படிலாம் இருக்காது அத்த. இவருக்கு எப்பயும் பாத்து கவனமா நடக்க தெரியாது. ஏனோ தானோன்னு நடந்து விழுந்து வாருறது புதுசும் இல்ல. நா வந்தவங்கள பாக்குறேன். நீங்க வேணா வீட்டுக்குப் போய் உங்க தங்கச்சி மகனுக்குத் துணைக்கு இருங்க" என்றுவிட்டு நகர்ந்து விட்டார் படிகாசீயம்மாள்.

"இவளுக்கு அவன் மேல பாசமே கிடையாது. சூதுவாது தெரியாதவன் அவன். அதான் எங்கையும் போய் வேலைல பொழைக்க தெரியல அதுக்குன்னு புருஷனா கூட மதிக்க மாட்டேங்குறா. பாரு அவன் அங்க விழுந்து எந்திக்க மாட்டாம கிடக்கான், பொண்டாட்டி இவ இங்க மினுக்கிட்டு திரியுதா. அவன் பெத்தப் பிள்ளையும் கல்யாணந்தான் முக்கியமின்னு மேடைல நிக்கியான். அவனால் பிரயோசனம் இல்லன்னு இவங்களே அவனுக்கு விஷம் வச்சாலும் ஆச்சரியப் படுறதுக்கில்ல. வா நாமளாவது போய் அவனுக்கு என்னன்னு பாப்போம்" என பேசிக்கொண்டே உலகநாயகனின் மற்றொரு சொந்தத்தையும் அழைத்துக் கொண்டு வீட்டிற்குக் கிளம்பி விட்டார். போற போக்கில் வழியில் இருந்த அவர் சொந்தங்களிடமும் விஷயத்தை பகிர்ந்து கொள்ள மறக்கவில்லை.

"ஐயோ பாவமே! அப்படியா! என்ன குடும்பம் இது, பெரிய படிப்புலாம் படிச்சு நல்ல வேலைல இருந்தா இப்படி தான் நடந்துப்பாங்கன்னுறது சரியாத்தான் இருக்கு. என்ன மனுஷங்க இவங்களாம்?" என அவர்களும் திட்டி, அடுத்து கூடிப்பேச விஷயம் கிடைத்துவிட்ட மகிழ்ச்சியில் அதைப் பேசிப் பேசிப் பெருசாக்கிக் கொண்டிருந்தனர்.

அது உத்தமியின் சொந்தங்கள் மூலமாக அவருக்கும் வந்து சேர்ந்தது, "ஏன்டி உன் நாத்தியோட புருஷன் பாத்ரூம்ல வழுக்கி விழுந்து கால உடச்சுகிட்டாராம்? அவரு சொந்தகாரங்க எல்லாம் என்னென்னவோ சொல்லித் திட்டிட்டுப் போறாங்க. புருஷனுக்கு இப்படியான வருத்தமும் உன் நாத்திட்டயும் தெரியல. என்ன தான்டி நடக்குது?" என கூட்டமாக அமர்ந்து விசாரிக்க,

"பையன் கல்யாணம்னு ஊரெல்லாம் போஸ்டர் அடிச்சாச்சு நீங்களும் வந்து இறங்கிட்டீங்க. உங்களுக்கு கல்யாண சாப்பாடு போடணும்ல அதான் புருஷன போட்டுட்டும் வந்துட்டாக போல. அவரு தானா வழுக்கி விழுந்ததுக்காக ஊரக் கூட்டி ஏற்பாடு பண்ணக் கல்யாணத்த நிறுத்த முடியுமா? என்னப் பேசுறீங்க நீங்க?" என உத்தமி பதில் கூறியதில்,

"என்னன்னு கேட்க தான்டி செய்றோம். கல்யாணமாகி வந்தப் புள்ளைய தான் அவங்களாம் காரணமா பேசிட்டுப் போறாங்க"

"வக்கீலு தம்பி ஒரே புடில நின்னு அந்த புள்ளையக் கட்டிருக்குது. யாராவது எதாவது பேசுனா வாங்கிக் கட்டிட்டு தான் போவாங்க. நீங்க எதுவும் தலைய குடுக்காதீங்க. என் புருஷனே பின்ன ஆடு ஆடுன்னு ஆடிருவாரு"

"என்னவோ போ நாங்க இப்பவே வீட்டுக்குப் போய் அவர பாக்கவா இல்ல பொண்ணக் கூட்டிட்டுப் போகும் போது உங்கூடவே வந்துப் பாக்கவா?"

"போய் பாத்துட்டு வர்றதுனாலும் வாங்க. மதிய சாப்பாடு இங்கதான். வீட்டுக்கு எடுத்துட்டு வர மூணு மணி ஆகிடும்‌. உங்க சௌகரியம் தான் பாத்துக்கோங்க" என்றவர் அனிருத்தின் அழைப்பில் அவரிடம் சென்றுவிட்டார்.

இங்கு ஆளாளுக்குக் கூடிக் கூடிப் பேசுவதை எல்லாம் மேடையில் இருந்தாலும் கவனித்துக் கொண்டு தான் இருந்தான் வேந்தன். அவனுக்கு தான் மற்றவர்களின் உதட்டசைவைப் படிக்கத் தெரியுமே! விஷயத்தைக் கிரகித்துக் கொண்டு தான் இருந்தான்.

திரும்பிப் பவளமல்லியை பார்க்க, அவள் அக்காவும் அம்மாவும் இருந்த திசையைப் பார்த்திருந்தாள் அவள். அவர்களிடமும் சிலர் வந்து பேசிக்கொண்டிருந்தனர். தேன்பாவனி கோபமாக நிற்பதும் தெரிந்தது. தேன்பாவனி பேயாக ஒருபக்கம், அவன் தகப்பன் விழுந்துவிட்டது ஒருபக்கம், ஊர் பேச்சு ஒருபக்கம், எல்லாவற்றையும் கடந்து அவன் அன்று கைபிடித்துவிட்ட அவன் மனைவி ஒருபக்கம் என எல்லாம் சேர்ந்து அவனுக்கு கொஞ்சம் அழுத்தமாகவே இருந்தது.

"என்னடி மல்லி?" என அவன் கை முட்டியால் அவள் வலது தோளின் கீழ் இடித்தான்.

 
அத்தியாயம் 26

"அக்கா முறைச்சுட்டு நிக்றா. அவங்க ஏதோ தேவையில்லாம பேசுறாங்கன்னு நினைக்கிறேன்" எனக் காட்ட,

"கல்யாண வீட்ல இப்படி பேசறதுக்குன்னு நாலு பேர் வரத்தான் செய்வாங்க. அத்த சமாளிச்சுப்பாங்க விடு"

"அம்மா அமைதியா இருந்து சமாளிச்சுருவாங்க. அக்கா தான் என்ன செய்வான்னு தெரியாது" என்றாள் பாவமாக.

"நீ அந்தப் பக்கமே திரும்பி நின்னனா உன் தலைல இருக்க மல்லிப்பூ மணம் என்ன உங்கிட்ட வா வாங்குதே மல்லி. ப்ளீஸ்டி பாவம் பார்த்து இந்தப் பக்கம் திரும்பியே நில்லேன்"

அவன் பேச்சில் பட்டென்று திரும்பி அவனை அவன் போலவே லேசாக இடித்து, "ச்ச! போங்க!" என்றாள்.

"எனக்கு ஓகே தான் சொல்லு எங்க போலாம்?"

"சும்மா இருங்கன்னு சொன்னேன். மேடைல நின்னுட்டுப் பேசுறப் பேச்சா இது?"

"நா என்ன பேசிட்டேன் இப்போ? மல்லிப்பூவை திரும்பி நின்னுக் காட்டி வா வான்னு கூப்பிட்டது நீதான்" என்றவாறு கழுத்திலிருந்த மாலையைக் குனிந்து சரிசெய்து கொண்டான்.

"சரியான ஆளுங்க நீங்க! அந்தப் பக்கம் திரும்பி நின்னுட்டேன்னு தான சொல்லிக் காட்றீங்க?"

"நா இங்க தான நிக்றேன்"

"உங்களையே பார்க்கணுமா அப்போ?" என்றவளுக்கு சிரிப்பும் வந்தது,

"ஆமா பின்ன? சரியாத்தான் பேசுவேன் நா எப்பவும்"

"இது சரியா பேசுறதா?"

"ம்ம்ம்" என அவன் தலையசைக்க,

"நானே பயந்துட்ருக்கேன்ங்க"

"ஃப்ர்ஸ்ட் டைம்ல சோ கொஞ்சம் பயமா தான் இருக்கும். விடு நா எதுக்கு இருக்கேன் பதமா பாத்துக்குறேன்" என்றான் விடாமல்.

"சேட்டையா உங்களுக்கு?"

"சமத்து பையன்டி"

"ஆமா நம்பிட்டேன் நானும்" இருவரின் பேச்சும் தொடர்ந்து கொண்டே தான் இருந்தது. மதிய உணவை அங்கேயே முடித்து, தனிமையில் இருவருமாக எடுத்துக் கொள்ளும் ஃபோட்டோவையும் எடுத்து முடித்து, மணமக்கள் அவன் வீடு கிளம்ப மணி மூன்றையும் தாண்டி இருந்தது. பொண்ணு மாப்பிள்ளையோடு ஒருசிலர் மட்டுமே இருக்க மற்ற எல்லோரும் கிளம்பி இருந்தனர்.

பொண்ணும் மாப்பிள்ளையும் மண்டபத்திலிருந்து கிளம்பும் நேரம், "நல்லபடியா போய்ட்டு வா பாப்பா. எப்பவும் பக்குவமான பிள்ளையா நடந்துக்கணும் சரியா?" என செல்லம்மாள், பவளமல்லி கன்னம் தடவி முத்தமிட,

"ம்மா! ம்மா!" என்பதைத் தவிர வேறு எதுவும் அவளுக்கு பேச வரவில்லை. அவரைத் தனியே விட்டுச் செல்வதை நினைக்க நினைக்க மனம் ரணமாக வலித்தது. 'உன்னைக் கட்டாயப் படுத்தியே இந்த திருமணத்தை செய்து கொண்டேன் அதற்கு என்னை மன்னித்துவிடு' என கேட்க வேண்டும் போல் தோன்றினாலும், அருகில் நிற்பவனை மனதில் கொண்டு அதை அவள் வெளியே சொல்லவில்லை. அவனும் வேண்டும் அம்மாவும் தனியே இருக்கக் கூடாது என மனம் இரண்டிற்கும் இந்த நிமிடத்தில் வந்து நின்று முரண்டு பிடித்தது.

"அழாதீக அக்கா. இனி மல்லி எங்க வீட்டுப் பிள்ளை நல்லா பாத்துகிடுவோம். எத நினைச்சும் கவலைபடாம பிள்ளைய வாழ்த்தி அனுப்பி வைங்க" என உத்தமி வந்து செல்லம்மாளின் கையைப் பிடித்துக் கொள்ள,

"பாத்துக்கோத்தா" என்றார் அவரிடமும். செல்லம்மாள் பவளமல்லி இருவரும் நெருங்கி நிற்க, அருகில் உத்தமி ஒருபக்கம், கொஞ்சம் இடைவெளி விட்டு இருவரையும் பார்த்தவாறு வேந்தனும் அனிருத்தும் நின்றனர். மற்றவர்கள் எல்லோரும் வாசலுக்கே சென்றிருந்தனர்.

"நா கூடவே தான்மா போறேன் நா நல்லா பாத்துக்குறேன் பாப்பாவ" என்றாள் அமைதியாக தேன்பாவனி.

வேந்தன் இதை எதிர்பார்த்தே இருந்தான். அதனால் அமைதியாகவே இருக்க, "அங்கேயா? எதுக்கு?" என வெளிப்படையாக அதிர்ந்தார் அனிருத்.

"என்ன மாமா?" என உத்தமி புரியாமல் கேட்க.

"அம்மாடி நீ அம்மாவுக்கு ஒத்தாசையா இருக்கலாமே? பவளமல்லிக்கு துணைக்குத்தேன் நாங்க இத்தன பேரு இருக்கோம் அதைவிட இப்ப அவ புருஷன், கூடவே இருக்கப் போறான். பின்ன என்ன பயம். அம்மாதான் பாவம் அங்க தனியா இருப்பாக" என அனிருத் தேன்பாவனிடயிடம் பேச,

"ஏனுங்க ஆருகிட்ட பேசுதீக? அந்த தேனு புள்ள இங்கனதேன் நிக்குதா?" என இடித்தார் உத்தமி.

"பேசாம இருட்டி" என அவரை அடக்கியவர், "கிளம்பலாமா வேந்தா?" என அவனுக்குக் கண்ணைக் காட்ட, தலையை அசைத்தான் அவன்.

"நீ இரு தேனு" என செல்லம்மாள் சொல்ல,

"அக்கா எங்கூட வந்துட்டு வரட்டுமேம்மா?" என்றாள் பவளமல்லி.

"அடேய் முதல்ல இந்த புள்ளைக்கு சொல்லுடா விட்டா அக்கா முறைக்கும் அங்கன ராத்தங்க சொல்லும் போல. அந்தப் பிள்ளை செத்து ஆவியா சுத்துதுன்னே சுத்தமா மறந்துட்டாக்குல இருக்காங்க" என அனிருத் வேந்தன் காதில் புலம்பிக் கொண்டிருந்தார்.

"காரணம் இல்லாம அந்தப் பொண்ணு நம்ம வீட்டுக்கு வரணும்னு சொல்லல மாமா" என்றான் வேந்தன்.

"நீ வேற பயமுறுத்தாதடா"

"அப்பாவ இங்க வரவிடாம பண்ணது அந்தப் பொண்ணு வேலையா இருக்கலாம்னு தோணுது மாமா"

"அப்ப அது கொல்லப் போறது நம்ம மனோன்மணிய இல்லையா?"

"அவன் தான்னு முடிவே பண்ணிட்டியா நீ?" என முறைத்த வேந்தன், "அவன் எதாவது உன்ட்ட சொன்னானா?" எனக் கேட்க,

"அவேன் நல்லா சாப்டான் போவியா? நானா மேலோட்டமா விசாரிச்ச வர ஒன்னும் தெரியல. ஆனா அந்த தேனு புள்ளையும் மனோவும் ஒரே ஸ்கூல்லதேன் படிச்சுருக்காங்க"

"லூசு மாமா. நானும் அதே ஸ்கூல் தான். பவளமல்லியும் அதே ஸ்கூல் தான். இங்க இருக்குற ஒரே ஹயர் செகென்ட்ரி அதுதான் ஊர்ல இருக்க அத்தனபேரும் அங்கனதேன் படிச்சுருப்பானுங்க"

"அப்படியும் ஒன்னு இருக்குல்ல? சரி எதுக்கு அநாவசிய யோசனை? அந்தப் புள்ளைய அங்க வரவிடாம பண்ணிடு. நீ சொன்னா கேட்டுக்கும்ல?"

"நாம சொன்னதும் கேட்டுக்கத்தான் பேயா சுத்தி நம்ம வண்டில ஏறி உக்காந்துச்சாக்கும்? நம்ம அந்தப் பொண்ணத் தடுத்தா தான் இன்னும் ஆக்ரோஷமாகும்"

"அப்ப என்ன தான்டா பண்ணுறது?"

"மாமா? என்னத்த தம்பி காதுல ஓதிட்ருக்கீக? நேரம் போவுது கூட்டிட்டு வாங்கப் போவோம்" என அனிருத் சட்டையைப் பின்னிருந்து இழுத்தார் உத்தமி.

குரலை செருமிக் கொண்டு நிமிர்ந்த வேந்தன், "கிளம்புறோம் அத்த" என்க,

"பொண்ண நல்லா பாத்துக்கோங்க" என்றார் செல்லம்மாள் அவனிடமும்.

"கண்டிப்பா அத்த. நீங்களும் உங்க பொண்ணுங்க அங்க இருக்க நிம்மதியிலேயே எந்த பயமும் இல்லாம வந்து போலாம்" என தேன்பாவனியை பார்த்துவிட்டே அவருக்கு கூறினான். அதற்கு செல்லம்மாள் எந்த பதிலும் சொல்ல முயலவில்லை.

"ஜிப்ஸிய நானே எடுக்குறேன். மல்லி அக்காவோட நீயும் உத்தமி அத்தையும் ஏறிக்கோங்க. மல்லி அம்மாவ அவங்க வீட்ல விட சொல்லி ஜவகர்ட்ட சொல்லிட்டு வந்திடு" என்றவன், மல்லியைத் திரும்பி, 'வா' என்றுவிட்டு வெளியே நடந்தான்.

வெளியே நின்றவர்களை மற்ற வேனில் ஏற்றி வீட்டிற்கு அனுப்பிவிட்டு தான் ஜிப்ஸியை எடுத்தான்.

"ஆத்தி மாமா இந்த தேனு பிள்ளையும் நம்ம கூடவேவா வருது?" என நடுசீட்டை அவள் ஒருத்திக்கு விட்டுவிட்டு பின்னால் ஏறி அமர்ந்த அனிருத்தின் அருகில் அமர்ந்து உத்தமி கேட்கவும்,

"ஆமா" என்றார் முகத்தை உம்மென்று வைத்தவாறு அனிருத்.

"அங்கதான் தகடு கட்டிருக்கே வீட்டுக்குள்ளலாம் அதால வர முடியாது"

"என்ன தகடு?" என ஆர்வமாக கேட்க.

"சாமி தாத்தா குடுத்தாரு. இந்த பேய் பொண்ணு வந்தாலும் வாசல்லதேன் நிக்கணும்"

உண்மையிலேயே அது வேறு தகடு என நம்பிதான் விட்டார் அனிருத். அந்த தைரியத்தில் முன்னால் அமர்ந்திருந்த தேன்பாவனியிடம், "ஏம்மா தேனு! தங்கச்சிய கட்டிக்குடுத்த வீட்டுக்கு நானும் வருவேன்னு அடம்பிடிக்குறதுலாம் நல்லாவா இருக்கு?" என பேச்சுக் கொடுத்தார்.

"நீங்க கூடத்தான் அக்காவ கட்டிக் கொடுத்த வீட்டுல வந்து ரொம்ப வருஷமா இருக்கீங்க? நா கேட்டேனா?"

"நா வந்ததும் நீ வாறதும் ஒன்னா புள்ள? நா மனுஷனா வந்தேனாக்கும்"

"அப்ப நா பேயா?"

"இல்லன்னு வேற சொல்லுவியா நீயி? அதுல என்ன உனக்கு அப்பப்ப சந்தேகம் வேற வருது?"

"அப்ப நா பேய் வேலைய காட்டட்டா?" என்றவள் அவ்வளவு நேரமும் பட்டுப் புடவையில் பெண்ணாக அமர்ந்திருந்த தோற்றம் மாறி, கரிய உருவமாக உருமாறி விட, விரித்த கூந்தலும் கோரப்பற்களும் சிவந்த விழிகளுமாக அமர்ந்திருந்தவளை முன்னால் தெரிந்த கண்ணாடியில் பார்த்துவிட்டு உத்தமி அலறியேவிட்டார் என்றால் அனிருத் மயங்கிவிட்டார்.

முன்னால் இருந்த இருவருக்கும் பின்னால் நடந்த எதுவும் தெரியவில்லை. தெரியவிடவில்லை தேன்பாவனி.

வீடு வந்திருக்க, மணமக்கள் ஆலம் சுற்றி வரவேற்கப்பட்டனர். அவர்கள் இருவரும் உள்ளே சென்றுவிட, எந்த சலனமும் இல்லாமல் காற்றில் கரைந்து வீட்டினுள் சென்றுவிட்டாள் தேன்பாவனி. அதை, 'ஆ!' என்று பார்த்திருந்த உத்தமி, "மாமா பேய் வீட்டுக்குள்ள போயிடுச்சு மாமா. யோவ் மாமா எந்திரியா. பொம்பள நானே மயங்கி விழல நீ மசக்கைல இருக்கவ கணக்கா பொசுக்கு பொசுக்குன்னு மயங்கி விழுந்துட்ருக்க. எந்திரி!" என அவரை கன்னத்தில் முதுகில் என வலிக்கவே அடித்து எழுப்ப முயன்றார்.

"உள்ள என்னடி செய்ற இறங்கு. நீதான பாலும் பழமும் குடுக்கணும்" என அவரைத் தேடி படிகாசீ வந்துவிட,

"உங்க தம்பி மயங்கி விழுந்துட்டாரு. நீங்களே யாரையாவது விட்டு எழுப்பி கூட்டியாங்க. நா உள்ளாற போன பேயி எங்கனப் போச்சு போய் பாக்கேன்" என்ற உத்தமி மறுபடியும் அனிருத்தை ஒரு அடி போட்டுவிட்டே இறங்கி வீட்டினுள் விறுவிறுவெனச் சென்றார்.

வாசலில் தொங்கிக்கொண்டிருந்த எலுமிச்சை சேர்த்து கட்டிய மஞ்சத் துணியையும் தொட்டும் பார்த்துக் கொண்டார். வீட்டினுள் சென்று விட்டதே என உள்ளுக்குள் அவ்வளவு நடுக்கம் தான். இன்னுமே சற்று முன் பார்த்த கரிய உருவம் கண்ணை விட்டு மறைய மறுத்தது. காய்ச்சல் கூட வந்துவிடும் போலிருந்தது. வீட்டிற்குள் அத்தனை பேர் இருக்க என்ன பயம் என்றே தைரியமாக உள்ளே வந்திருந்தார்.

ஜகதாம்பாளும், அவள் அம்மாவும் பவளமல்லி பொறுப்பை எடுத்துக் கொண்டனர். விளக்கேற்ற வைத்து, பாலும் பழமும் சாப்பிட வைத்து, மாலை மாற்ற, உடை மாற்ற சற்று நேரம் ஓய்வெடுக்க என அவர்கள் அவளுடனே இருந்து கொள்ள, வேந்தன் அவன் அப்பாவைச் சென்று பார்த்தான்.

அவனுக்கும் அவன் அப்பாவுக்கும் விரிசல் அதிகம் தான். பேச்சுவார்த்தையை நிறுத்தியே வருடங்கள் பல ஓடியிருந்தது. பாசமும் விட்டுப் போயிருந்தது. மனிதாபிமான அடிப்படையில் மட்டுமே வந்து பார்த்து நின்றான்.

"மூலிகைத் தைலம் போட்டு நீவி விட்ருக்கேன் வேந்தா. ஒரு வாரமாது ஆகும்‌. இடுப்புல பிடிச்சுருக்கு. சுளுக்கு எடுக்குறவங்கள வச்சுப் பார்த்தா சீக்கிரம் சரியாகும். நீ எதுக்கும் ஒருக்கா விசாரிச்சுக்கோ" என சாமி தாத்தா சொல்ல,

"தேங்க்ஸ் தாத்தா. நீங்க வரலைனாலும் இன்னைக்கு ரொம்பத் திண்டாடிதான் போயிருப்போம்" என்றவன் அவர் காலில் விழுந்து எழ,

"நல்லா இருய்யா! எங்க உன் சம்சாரம்?" என்றார்.

"வீட்டுக்குள்ள வந்ததுமே நாடு கடத்திட்டாங்க தாத்தா. இங்க தானே இருப்பீங்க. என் கண்ணுல காட்டினதும் கூட்டிட்டு வந்துடுறேன்"

"அதுசரி. உன்னப் பத்தித் தெரிஞ்சுதான் படிகாசீ விவரமா நடந்துருக்கா" என சிரித்தார் அவர்.

மாலையே, 'பிஸியோ' செய்யும் மருத்துவரை அழைத்து வந்தனர், அவர், "மெஷின் வைப்ரேஷன் குடுக்கணும். நரம்பு பிரண்டுருக்கு. அத சரி பண்ணிட்டு தான் பிஸியோ குடுக்க முடியும். நீங்க ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணிடுங்க" என சொல்ல, மருத்துவமனையில் சேர்ப்பதில் அங்கிருந்த யாருக்குமே உடன்பாடில்லை. அதனால் சாமி தாத்தா சொன்னபடி சுளுக்கு எடுக்கும் வைத்தியரைத் தேடுவதில் இறங்கினர். மனோன்மணி, அனிருத் அந்த வேலையைப் பார்க்க, வேந்தன் புது மாப்பிள்ளைக்கான வேலைக்குத் தயாராக அனுப்பி வைக்கப்பட்டான்.

இரவு நெருங்கிய பின்னரே, பவளமல்லியை வேந்தன் முன் கொண்டு நிறுத்தினர்.

 
அத்தியாயம் 27

"பனி விழும் இரவு நனைந்தது நிலவு, இளங்குயில் இரண்டு இசைக்கின்ற பொழுது, பூப்பூக்கும் ராப்பொழுது பூங்காற்றும் தூங்காது, வா வா வா"

என்ற பாட்டு வேந்தன் அறையில் ஒலிபெருக்கியில் பாடிக்கொண்டிருக்க, அதனோடு சேர்ந்து பாடியவாறே, மேசை முன் நின்று, ஒரு கொலைகேஸ் சம்பந்தப்பட்ட கட்டுத்தாள்களைப் பின் செய்து வரிசையாக அடுக்கி கொண்டிருந்தான் அவன்.

அறை வாசல் திறந்தே இருந்தது, கையில் பால் சொம்பும் அதன்மீது மூடி வைக்கப்பட்ட டம்ப்ளருமாக நின்றவளுக்கு, அவன் பாட்டு சிரிப்பை தந்தாலும் கை கால்கள் ஆட்டம் கண்டது.

வரவேற்பரையிலிருந்து பார்த்தால் இவள் நிற்பது அனைவருக்கும் தெரியும் என்பதால், அங்கு நின்று கொண்டிருப்பதும் கொஞ்சம் அசௌகரியமாக இருந்தது. திரும்பி அவர்களையும் ஒருமுறை பார்த்தாள், உத்தமி மட்டுமே இவளை நேராக பார்த்திருந்தார், மற்ற எல்லோரும் பாராதது போல் பார்த்திருந்தனர்.

"போ!" என உத்தமி சைகை செய்ய, தலையை அசைத்து திரும்பி மீண்டும் அறையைப் பார்த்தாள். அவன் அறையின் உள் வலது பக்கத்தில் மேசை அருகில் சுவற்றை பார்த்து நின்றவன் தான், பாட்டோடு பாட்டாக கலந்து விட்டவன் போல் வாசலில் நிற்பவளை திரும்பியே பார்க்கவில்லை.

ஒரு கையில் சொம்பை பிடித்துக் கொண்டு லேசாக எட்டி அறை கதவை இரண்டு முறை தட்டினாள், "எஸ்!" என திரும்பியவன், புருவத்தை மேட்டுக்கு உயர்த்தி அவளை மேலிருந்து கீழ் பார்த்து மெச்சிக்கொண்டு, கையில் அவள் வைத்திருந்த பால் சொம்பை கண்டு உதட்டை மடக்கி சிரிப்பை அடக்கியவன், "வா!" என தலையை அசைத்து அழைக்க, மெல்ல உள்ளே நுழைந்தாள்.

"கூட போய் அந்த பிள்ளைய விட்டுட்டு வராம என்னத்தட்டி இங்கனயே நின்னு போற புள்ளைய வேடிக்கை பாக்குற?" என உத்தமி தோளில் அடித்தவாறு வந்து நின்றார் அனிருத்.

"மத்தியானம் காணாம போன மனுஷன் இப்பத்தேன் வந்து நிக்கீக உங்களுக்கு என்ன தெரியும்? அந்த தேனு புள்ள நம்ம வீட்டுக்குள்ள பூந்திடுச்சு, உள்ள வந்த அப்றம் எங்க போச்சுனே தெரியல. இப்ப தங்கச்சியை வாழ அனுப்ப கூட அதுவே போகும் நா வேற என்னத்துக்குன்னுதேன் இங்கனயே நிக்கேன். நீங்க எங்கன போயிட்டு இம்புட்டு நேரம் கழிச்சு வாரீக?" என உத்தமி கேட்க,

அங்கு வேந்தன் பவளமல்லி உள்ளே வந்ததும் கதவை சாற்றுமுன் வெளியே எட்டி பார்த்து, "மாமா!" என அனிருத்தை அழைத்தான்.

"இவன் என்னடி ஃபர்ஸ்ட் நைட்டுக்கும் என்னைய துணைக்கு கூப்பிடுதான்!" என அனிருத் உத்தமி கையை பிடிக்க.

"ம்ச் போங்கங்க வேறெதுவும் மாமாவ பத்தி கேட்கவா இருக்கபோவுது"

"ஏன் அத பொண்ணு கைல சொம்போட உள்ள போனப்றந்தேன் கேப்பானாமா இவன்"

"மாமா!" என இப்போது வேந்தன் குரல் அதிகரித்திருக்க,

"ஏய் நீயும் வாடி சேர்ந்து போய் என்னன்னு கேட்டு வருவோம்" என்றார் மருமகனை பார்த்தவாறே உத்தமியிடம்.

"ச்சி! அவரு விவரம் எதுவும் கேட்க கூப்பிடுதாரோ என்னமோ கூறுகெட்டாக்குல என்னையும் கூட்டிட்டு போறேங்கீக. போங்க மாமா பேசாம" என உத்தமி வெட்கப்பட்டுவிட்டு செல்ல,

"ஆரு இவேன் என்ட்ட விவரம் கேக்கியானாக்கும்? இவ ஏன் நம்ம என்ன சொன்னாலும் நம்புதான்னு இப்பத்தான தெரியுது. இதுல வெக்கம் வேற!" என்றவர் தலையிலடித்துக் கொண்டு திரும்பி மருமகனை பார்க்க, முறைத்துக் கொண்டு நின்றான் அவன்.

"இருடா வரேன்" என்றவர் வேட்டியை மடித்து கட்டிக்கொண்டு அவனிடம் சென்று, "உள்ளார பிள்ள வந்தப்றம் தான் வெளிய நின்னு படம் காட்டுவியா நீயி?" என திட்டிக்கொண்டிருக்க, சின்ன சிரிப்புடன் அவர் காலில் விழுந்து எழுந்தான் அவன்.

"அடேய் என்னடா பண்ற?" என்றவர் பதறி வேட்டியை எல்லாம் இறக்கிவிட்டு இரண்டடி தள்ளி நிற்க, அவர் சத்தத்தில் ஆங்காங்கே நின்றவர்களும் திரும்பி பார்த்தனர்.

"தாய்மாமன்ட்ட ஆசிர்வாதம் வாங்கிட்டு வாழ்க்கைய ஆரம்பிக்க போறான். சரியாதானய்யா வேந்தன் செய்தான். எதுக்கு விறைச்சுட்டு நிக்கிற, பையன ஆசிர்வாதம் பண்ணி அனுப்பு அய்யாவு" என்றார் சாமி தாத்தா.

அடுப்படி வாசலில் நின்று படிகாசீ, உத்தமியும் ஆறுதலாக பார்த்திருக்க, அறைக்குள் வேந்தனுக்கு பின்னால் நின்றிருந்த பவளமல்லியும் சின்ன சிரிப்புடன் பார்த்திருந்தாள், தன்னையும் அழைத்திருந்தால் சேர்ந்து விழுந்துருக்கலாம் என்றே நினைத்துக்கொண்டு நின்றாள்.

"என்ன வேந்தா?" என்ற அனிருத்திற்கு கண்ணெல்லாம் கலங்கிவிட்டது.

"நல்லாருன்னு கூட சொல்ல மாட்டேங்குற மாமா நீ?" என்றவன் அவரை வம்பிக்கிழுக்க, எட்டி அவராகவே வேகமாக முன்னேறி அவனைக் கட்டிக்கொண்டார்.

தாய்மாமன் என்பவர் தாய்க்கு நிகரானவர் என்றே கூறுவர், ஆனால் வேந்தனின் தாய்மாமாவாக வந்தவர் அவனுக்கு தகப்பனாக தான் நின்றார், நிற்கிறார் இனியும் நிற்பார்.

பதினைந்து வயதில் அவருக்கு யாரும் ஆதரவாக இல்லாததால் தான் அவர் இங்கு வந்ததாக அவருக்கு எண்ணம், ஆனால் இவர்களுக்கு ஆதரவாக வந்து இன்று நல்ல நிலையில் நிற்க வைத்திருப்பவர் அவர் ஒருவரே.

உலகநாயகன் என்பவர் பிள்ளைகள் இருவரையும் பெற்றுக் கொண்டதோடு சரி, உண்பதும் உறங்குவதும் ஊரைச் சுற்றுவதும் என இருந்துவிட, படிகாசீயின் அப்பா இருந்தவரை அவர் கொஞ்சம் கொஞ்சம் செய்த உதவியிலும் படிகாசீ வேலைக்கு சென்றதாலுமே இருவேளை உணவு, அரசாங்க பள்ளி என மனோன்மணி, கரிகாலவேந்தன் வாழ்க்கை சென்று கொண்டிருந்தது.

அனிருத் வந்தபிறகு, அவர் பொறுப்பு தான் மொத்த குடும்பமும். வரும்
போதே கையில் தைல கம்பெனியோடு அல்லவா வந்தார். அதில் உழைப்பை போட்டு இருவரையும் படிக்க வைத்து, அக்காவையும் அக்கா கணவரையும் உட்கார வைத்து சாப்பாடு போட்டு என இவர்களுக்காகவே வாழ்ந்துவிட்டார்‌. அவர் உழைப்பில் தான் அந்த தைல அலுவலகமும் வளர்ந்தது இவர்களும் வளர்ந்திருந்தனர். மனோன்மணி படிப்பை முடித்ததும் தனியாருக்கு வேலைக்கு சென்றவன், திருமணம் முடித்த பிறகு மனைவி தொழில் தொழில் என்று செல்வதால் தனக்கும் தொழில் தெரியும் என்று காட்டுவதற்கு அனிருத்தை அண்டி இப்போது அவரையே ஓரங்கட்டும் முயற்சியில் இருக்கிறான்.

இவ்வளவையும் செய்துவிட்டு எந்தவித விகல்பமும் காட்டாமல் பதினைந்து வயதில் இருந்தது போலவே, மாற்றமின்றி இன்றுவரை இருப்பவரை வேந்தன் மனதில் உயர்த்தி தான் வைத்திருந்தான். ஆனால் வெளியே, அவனுக்கு அவர் எப்போதும், 'யோவ் மாமா!' தான்.

"எப்பவும் நீ நல்லா தான்டா இருப்ப. உன் நல்ல மனசுக்கு ஆறு பிள்ளைக பெத்து நீண்ட ஆயுசுக்கு ஆரோக்கியமா இருப்படா"

"ஆறு போதுமாக்கும்? விலைவாசி இருக்க இருப்புக்கு ஆறு பெத்தா நா என்ன ஆவேன்னு யோசிச்சியா?"

"நா வளர்த்துட்டு போறேன்டா நீ உன்ன மாதிரி பாசக்காரனா பெத்து மட்டும் குடு போதும்"

"என்ன வளர்த்த மாதிரி வளர்த்துவிட்டுறேங்கிறியா?" என்றான் இன்னும் அழகான சிரிப்புடன்.

"அக்கா இவேன் என்ன ரொம்ப அழ வைக்கிறான்கா. நல்ல நேரம் போவுதுன்னு சொல்லு, இவன உள்ள போவ சொல்லு" என்றவர் கண்ணை துடைத்துக் கொண்டு படிகாசீயிடம் செல்ல,

"என் தம்பிட்ட வம்பு பண்ணாம போடா உள்ள" என்ற படிகாசீயும் கண்ணை துடைத்து கொண்டு, "நீ வா அய்யாவு நேரம் போயிடுச்சு சாப்பிட்டுட்டு சீக்கிரம் உறங்குவோம்" என அவரை இழுத்துக் கொண்டு சென்றுவிட்டார்.

"அனிருத்னு ஒருநாளும் உன் வாய்ல வர போறதில்லக்கா" என சடைத்துக் கொண்டே அவருடன் சென்றவரை பார்த்து சிரித்தவாறு கதவை அடைத்து உள்ளே திரும்பினான். அவன் முன் சற்றுமுன் இருந்த படபடப்பு நீங்கி சாதாரணமாக நின்றிருந்தாள் பவளமல்லி.

"சொம்பை கீழ வைக்குற ஐடியாவே இல்லையா உனக்கு? பால குடுத்தே ஆகணுமா?" என்றவன் அவனே வாங்கி அங்கிருந்த மேசை மேல் வைத்துவிட்டு, பாடிக்கொண்டிருந்த ஒலிபெருக்கியையும் நிறுத்தி விட்டு வந்தான்.

எந்த பதிலும் சொல்லாமல் அவன் செய்கைகளை கவனித்தவாறு கட்டில் கம்பியில் சாய்ந்து நின்றாள் பவளமல்லி. காப்பி கொட்டையும் சந்தன நிற பார்டரும் கலந்த 'சாப்ட் பட்டு' எனும் வகையை சார்ந்த புடைவையைக் கட்டியிருந்தாள். அவ்வளவு பொருத்தமாக இருந்தது அவளுக்கு.

"ஆரம்பிக்கலாமா?" என்றவன் இரு கைகளையும் பரபரவென்று தேய்த்து கொண்டே அவளிடம் திரும்ப, அதிர்ந்து கண்ணை அகல விரித்தாள்.

"என்ன தினுசா முழிக்குற?" என்றவன் அவளை நோக்கி வர,

"மாமா! மாமாட்ட ஆசிர்வாதம் வாங்குனீங்களே?" என்றவள் கட்டில் கம்பியிலிருந்து விலகி நகர்வது தெரியாதது போல் மெல்ல பின்னால் நகர்ந்தாள்.

"ஆமா அதான் பாக்க போற வேலைக்கு ஆசிர்வாதம் வாங்கியாச்சே இனி வேலைய ஆரம்பிக்க வேண்டியது தான?" என்றவனும் அவளுடனே நகர்ந்து வந்து கொண்டிருந்தான்.

"அதில்லங்க ஆசிர்வாதம் வாங்கும்போது என்னையும் கூப்பிட்ருந்தா நானும் வந்துருப்பேன்ல?" கட்டிலின் ஒரு ஓரமாக அவள் சென்று கொண்டே இருக்க,

"நின்னு பேசுடி" என இடுப்பில் கைவைத்து நின்றுவிட்டான் இவன்.

"இல்லங்க"

"என்ன இல்ல?"

"ஒன்னுமில்ல" என அவளும் குனிந்து நின்றுவிட்டாள்.

"பவளமல்லி!" என அழைத்தவன் நமுட்டு சிரிப்புடன் நிற்க, அவளே மெல்ல முன் நகர்ந்து அவனிடம் வந்தாள்.

இன்னும் சிரிப்பு விரிய, "கட்டிப்போமா?" என்றதும், தலையை மெல்ல சம்மதமாக அசைக்க, ஆடும் அவள் தலையின் வலது ஓரத்தில் தன் கைக்கொண்டு லேசாக தட்டியவன், "லூசு" என்க, குனிந்தே இருந்தாலும் வாயை மட்டும் கோணித்து காண்பித்தாள்.

அவள் தோள்களை பற்றியவன், முதல் முத்தத்தை அவள் தலையை குனிந்து காண்பித்ததால் தெரிந்த தலையின் உச்சிமேட்டிற்கே கொடுத்தான். அந்த முத்தம் தந்த இதத்தில் அவன் நெஞ்சிலேயே தன் உச்சியை பதித்து கொண்டாள். அவனும் அப்படியே அணைத்து கைகளில் அள்ளி தன் பாதத்தில் நிறுத்தி, கட்டிலுக்கு நடத்திச் சென்றான்.

உச்சியில் ஆரம்பித்த முத்தம், நெற்றி, காது, கன்னம், கழுத்து எனச் சென்று இதழுக்கு மீண்டது. மெதுவாக ஆரம்பித்த இதழ் ஒற்றல் அவசரம் பெற்று ஆவேசம் கொண்டு, சுவாசம் தடைபெற்று, பிடறி முடி பற்றி ஆசுவாசம் கொண்டது.

"வாவ் மல்லி!" என்றான் ரகசியமாக, ரகசிய இடைவெளி விட்டு,

மயக்கத்தில் அவன் கழுத்தோடு ஒன்றி முகம் மறைத்தாள் பவளமல்லி, "ஏன் மல்லி வயசு பையன் பாவம்னு யோசிச்சு கழுத்துல மாட்டிட்டு வந்துருக்க இத்தனைல ரெண்ட குறைச்சுருக்கலாம்ல?" என கேட்டவன், அவள் முகம் நிமிர்த்தி இதழ் ஒற்றி ஒற்றி எடுக்க,

"உத்தமி சித்தி தான் அம்மா குடுத்த நகைய இப்பவாது மாட்டிக்கோன்னு போட்டு விட்டாங்க" என்றாள் அவளும் அவன் அவளிடமிருந்து நிமிரும் இடைவெளிகளில்.

"எனக்கு இதெல்லாம் கழட்டி பழக்கமில்லடி நீயே ஓடிப்போய் கழட்டிட்டு ஓடி வந்திடுறியா?" என அவள் முகத்தையும் முத்தத்தையும் விடவே மனமில்லாதவனாக தான் பிடித்து வைத்துக் கொண்டு கேட்டான்.

"சரி" என சிரிப்புடன் தலையை அசைத்து அவனிலிருந்து இறங்கியவள், அவன் அப்போது நின்றிருந்த மேசை முன் சென்று நிற்க, அவளை பார்த்தவாறு சட்டையை கழற்றி சட்டை ஹேங்கரில் மாட்டிவிட்டு கட்டிலில் ஏறி கால்நீட்டி அமர்ந்து கொண்டான்.

அங்கு நகைகளைக் கழற்றிக் கொண்டிருந்தவள் மிகமிக நிதானமாக ஒவ்வொன்றையும் கழற்றி கொண்டிருந்தாள். அப்படியே அவன் தொடர்ந்திருக்கலாம் போலும் விட்ட இடைவெளியில் மறுபடியும் பதட்டம் வந்து தொற்றிக் கொண்டது அவளுக்கு.

ஆனால் அவன் பதட்டமே இல்லாமல் அவள் செய்கைகளை ரசித்திருந்தான். அவள் ஒவ்வொன்றும் செய்கையில் அவள் நீள முடியும் அதில் சூடியிருந்த மல்லியும் சேர்ந்து ஆடும் அழகை பார்த்தது பார்த்தபடி அமர்ந்திருந்தான்.

"நகைய மட்டும் நீ கழட்டிட்டு வா மல்லி மத்தத நா பாத்துக்குறேன்" என்றவனின் நக்கலான குரலில், கண்ணை இறுக மூடிக் கொண்டாள்.

கழுத்தில் அவன் கட்டிய மஞ்சள் கயிறு மட்டுமே இருக்க, மற்ற எல்லாவற்றையும் கழற்றியாகிவிட்டது இனி திரும்பியே ஆகவேண்டும் என்ற நிலை வந்திருக்க, வேறுவழியின்றி அதற்கு மேல் தாமதிக்காமல் ஆழ்ந்த மூச்சை எடுத்துவிட்டு திரும்பி அவனிடம் சென்று கட்டில் அருகில் நின்றாள்.

"நானே இறங்கி வரணுமோன்னு நினைச்சேன்" என்றவன் அவளை தூக்கி மடியில் அமர்த்தி கொண்டு, அவளை பார்த்ததிலிருந்து அவளிடம் ரசித்த விஷயங்களை பேச்சாகவும் செயலாகவும் விளக்க துவங்க, அமைதியாக அதை கிரகிக்க துவங்கினாள் பவளமல்லி.

தாமதமாக தூங்கினாலும் அதிகாலை ஐந்து மணிக்கே விழிப்பு வந்திருந்தது பவளமல்லிக்கு. மெல்ல புரண்டு படுத்தவளை இழுத்தணைத்துக் கொண்டான் வேந்தன். சற்று நேரம் அப்படியே படுத்திருந்தவள் அவன் மறுபடியும் அசந்து தூங்கவும் எழுந்து கொண்டாள். அவன் முகம் பார்க்க ஆசை இருந்தும் இருக்கும் நிலை தடுக்க மெல்ல இறங்கி விட்டாள்.

அதிக சத்தமின்றி குளியலை முடித்து வெளியே வந்து அறையின் இருட்டிலேயே வேறொரு காட்டன் புடவையைக் கட்டிக்கொண்டு, அவனை திரும்பி பார்த்தாள், ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான் வேந்தன்.

'அக்காவ நைட்டும் பாக்கல. வீட்டுக்கு போயிட்டாளா என்னன்னு பாக்கணும்' என்ற யோசனையோடு இவள் வெளியே வர, வீடே அமைதியாக இருந்தது. வரவேற்பரையும் வெறிச்சோடி இருக்க, மெல்லிய விளக்கொளி மட்டும் எரிந்து கொண்டிருந்தது. அதை வைத்து நடந்து வந்தவள் வாசல் வரை சென்றுவிட்டு, 'கதவை இப்ப திறக்கலாமா தெரியலையே?' என மீண்டும் வந்து நீள்விருக்கையில் அமர்ந்து கொண்டாள்.

 
அத்தியாயம் 28

'அக்கா இருந்தா அவளே தேடி வருவா, நாமளா கூப்பிட்டு எதுவும் பிரச்சினை ஆகிட வேணாம்' என சுற்றிப்பார்த்து அமர்ந்திருந்தாள்.

முந்தைய தினம் அறையை விட்டு இவளை வெளியே வரவிடல்லை யாரும், ஆனாலும் ஜகதாம்பாளின் அம்மா மூலம் வேந்தனின் அப்பா கீழே விழுந்த விஷயத்தை அறிந்திருந்தாள். கல்யாணத்தன்று இப்படி ஆகிவிட்டதே என வருத்தமாக தான் இருந்தது அவளுக்கும். அவளாக சென்று பார்ப்பதற்கும் உத்தமி வேண்டாம் என்று மறுத்து விட்டார். இன்று போய் பார்த்துவிட வேண்டும் என மட்டும் நினைத்து கொண்டாள்.

"பாப்பா!" என்ற தேன்பாவனியின் குரலில், "அக்கா!" என எழுந்து நின்று தேடினாள்.

"நா இங்கதான் இருக்கேன்"

"அம்மாட்ட போகலையாக்கா?"

"போகணும்"

"சரிக்கா!" என்கையில், "யார்ட்டம்மா பேசிட்ருக்க?" என வந்தார் சாமி தாத்தா.

முதலில் திடுக்கிட்டு, "யாருமே காணுமேன்னு தான் பாத்துட்டு நின்னேன்" என்றாள் தயங்கி.

"நா படிகாசீயோட மாமா. உன் புருஷனுக்கு தாத்தா நீயும் தாத்தான்னே கூப்பிடலாம்" என சிரிக்க, தலையை மட்டும் ஆட்டிக்கொண்டாள்.

"உன் அக்கா உன் கூடவே தான் இருப்பா. நீ கவலைபட வேணாம்" என அந்த இருட்டிலும் கரிய நிழலை பார்த்தவாறே கூறினார் தாத்தா.

"தாத்தா!" என இவள் திருதிருவென விழிக்க,

"கல்யாணம் ஆகிடுச்சு அம்மா தனியா இருக்காங்க, இங்க ஆளாளுக்கு உன் அக்காவ பேசுறாங்கன்னு நீ எதையும் குழப்பிக்காத உன் அக்கா ஆத்மாவா நின்னு ஆசிர்வாதம் பண்ணுவான்னு சொன்னேன்மா" என்றார்.

"சரி தாத்தா"

"இன்னும் எந்திரிக்கலையா உன் புருஷன்?" என்றார், அவர் புருஷன், புருஷன் என்றதில் அவளுக்குள்‌ அப்படியொரு உற்சாக ஊற்று, சிரித்தவாறு இல்லை என தலையசைத்தாள்.

"நல்லா பேசுவான் மா அவன சமாளிக்க நீ அவன விட நிறைய பேசணும் இப்படி தலையை தலையை ஆட்டுனா, எல்லாத்துக்கும் உன்ன தலையாட்ட வச்சுருவான்மா. பொம்பள பிள்ளை நல்லா பேசணும் புரியுதா?" என சொல்ல, அதற்கும் சிரிப்புடன் தலையை தான் அசைத்தாள்.

"என்ன மாமா அதுக்குள்ள எழுந்துட்டீக?" என வந்தார் படிகாசீ. கீழே மூன்று அறைகள், வரவேற்பரை மற்றும் சமயலறை இருக்க, மேலே இரண்டு அறைகள் இருந்தது. கீழே இருந்த மூன்று அறையில், ஒன்றில் அனிருத் குடும்பம் இருக்க, ஒன்று வேந்தன் அறை, மற்றதில் உலகநாயகன் இருந்தார் அந்த அறையில் இருந்து தான் சாமி தாத்தா வந்தார், மேலே மனோன்மணி அறையும் மற்றொரு விருந்தினர் அறையும் இருக்க, அதற்கு மேல் மொட்டைமாடி, வீட்டினுள்ளேயே மொட்டை மாடிக்கு செல்லும் வரை படி இருந்தது. படிகாசீ மேலிருந்து தான் இறங்கி வந்தார் என்பதால் மொத்த வீட்டையும் இப்போது தான் நின்ற இடத்தில் இருந்தே சுற்றி பார்த்தாள் பவளமல்லி.

"தனியா நின்னுட்டு இருந்தா உன் மருமக, அதான் புது இடம்னு யோசிக்குமேன்னு பேச்சு குடுத்துட்டு இருக்கேன்"

"ஓ!" என்றவருக்கு அவளிடம் பேசவே பயம் தான், "ஏன் சீக்கிரம் எழுந்துட்ட?" என்றார்,

"முழிப்பு வந்துட்டுத்த. அதான் எழுந்து வந்தேன்"

"சாதாரணமா உன் வீட்ல இருக்க மாதிரி இரு. என்னவும் பேசிடுவாங்களோன்னு நினைச்சுக்காத. டீ குடிப்பியா?" என்றார்.

"ம்ம்!" என்றவள், தயங்கியே, "நா நா நானும் வரவா?" எனக் கேட்டாள்.

"சரி வா" என அழைத்தவர், வாசலை திறந்து வைத்துவிட்டே சமையலறைக்கு நடந்தார். தேன்பாவனியைச் சுற்றிலும் தேடிவிட்டே மாமியாரை பின் தொடர்ந்தாள் பவளமல்லி.

இங்கு, "அப்றம் தங்கச்சி கல்யாணத்த தான் சந்தோஷமா பார்த்தாச்சே, கடைசி ஆசையும் நிறைவேறியாச்சு இனி கிளம்ப வேண்டியது தானே?" என்றார் சாமி தாத்தா இருளாக நின்றவளிடம்.

"கடைசி ஆசை நிறைவேறல! இன்னும் ஒன்னு மிச்சமிருக்கு அதையும் எங்கூட அழைச்சுட்டு போயிடுவேன்" என்றாள் இவள் எகத்தாளமாக.

"நா குறுக்க நிப்பேனே? அதுக்குத்தான வந்திருக்கேன். உனக்கு நிம்மதி தந்துட்டு தான் போவேன்"

"உன்னால முடிஞ்சத நீ பாரு. என்னால முடிஞ்சத நா செஞ்சுக்குறேன். கடவுள் ஆசிர்வாதத்துல வந்தவ நான்! வந்த வேலைய முடிக்க அவர் துணை போதும் எனக்கு"

"உன் தங்கச்சி இங்க நல்லா வாழ‌ வேணாமா?"

"ஹா ஹா ஹா!" என பலமாக சிரித்தவள், "அவ நிம்மதியா வாழத்தானே நா அதையே செய்ய போறேன். கண்டிப்பா செய்வேன். காவல் காக்க போறியா? ஒரு கேடு கெட்டவனுக்கு காவல் காக்க போறியா? செய் உன் வீட்டுக்காக நீ செய்ற என் ரத்தத்துக்காக நா செய்வேன். கண்டிப்பா உன் கண் முன்னால செய்வேன்" என்றவள் சுழன்று மேலேறி இருந்தாள்.

முதல் நாள் உலகநாயகனுக்கு ஆதரவாக பேசி, பவளமல்லியை திட்டியவர்களை எல்லாம் இரவோடு இரவாக கிளப்பி இருந்தார் படிகாசீ. உத்தமியின் ஓரிரு சொந்தங்களும் ஜகதாம்பாளின் அம்மாவும் மட்டுமே இரவு தங்கியிருந்தனர். மற்ற எல்லோரையும் தேன்பாவனி உள்ளே வந்துவிட்டாள் என உத்தமி கூறியதாலேயே பயந்து அனுப்பி வைத்துவிட்டார்.

ஆனால் தேன்பாவனியை எதுவும் செய்யவிடாமல் அந்த வீட்டிலேயே இருந்தார் சாமி தாத்தா.

உலகநாயகனுக்கு சுளுக்கு எடுப்பவரை வரவழைத்து நீவி விட முயன்றனர், வலியில் அலறியவர் வைத்தியரை தொடவே விடவில்லை. இரண்டு நாட்கள் முயன்று விட்டு, "அவர் ஒத்துழைப்பு இல்லாம எதையும் செய்ய முடியாது" என சென்றுவிட்டார்.

அனைவரும் திட்டியும், தேமே என இருந்து கொண்டார் உலகநாயகன். படுக்கையில் இருந்த இடத்தில் இருந்து கொண்டு உண்பதும் அப்படியே மல்லாக்க சாய்ந்து விடுவதும் முதலில் சுகமாக தான் இருக்கும் போக போகத்தான் வேலையைக் காட்டும் என புரியாமல் நடந்தார் உலகநாயகன்.

வீட்டில் உள்ள மற்றவர்களை பொறுத்தமட்டில் உலகநாயகனுக்கு எதுவுமே தெரியாது, எதையும் ஒழுங்காக செய்ய வராது. சர்க்கரை வியாதி, ரத்த அழுத்தம் இரண்டையும் சிறு வயதிலேயே இழுத்துக் கொண்டதால் உடம்பு பலவீனமான மனிதர். அவரால் யாருக்கும் நல்லதும் இல்லை கெட்டதும் இல்லை என்பது தான் எண்ணம்.

வெளி ஆட்களை பொறுத்தமட்டில் சூதுவாது தெரியாத பிழைக்க தெரியாத மனிதர். அடிக்கடி உடம்பு சரியில்லாமல் படுத்துவிடுவதால் வீட்டினரின் வயித்தெரிச்சலில் வாழும் மனிதர். அதனாலேயே வெளியே இருந்து வருபவர்கள், "பாவம் அவருக்கு முடியல என்ன செய்வாரு. எதிர்த்து பேச கூட தெரியாத மனுஷன். அவர பாக்காம விட்றாதீக. இருக்குற வர நிம்மதியா இருந்துட்டு போகட்டுமே. நல்லா பாத்துக்கோங்க, சம்பாத்தியம் பண்ணலன்னு ஒதுக்கி வைக்காதீங்க" என இலவச அறிவுரை தான் வழங்கி விட்டுச் செல்வர்.

இதனாலேயே தேன்பாவனி இந்த வீட்டில் கொல்ல நினைக்கும் ஆள் பட்டியலில் உலகநாயகனை சேர்க்க யோசித்தனர் வேந்தனும், அனிருத்தும். என்னவோ வேந்தன் இன்னும் உறுதியாக அவர் தான் என முடிவுக்கு வரமுடியாமல் இருந்தான். அவரை சந்தேகிப்பதற்கும் ஒரே காரணம் இறந்து போன தேன்பாவனியின் மாமனாரும் உலகநாயகனும் நெருங்கிய நண்பர்கள் என்பது மட்டுமே.

இரண்டு நாட்கள் விட்டு, மறுபடியும் வேறு வைத்தியரைத் தேடும் முயற்சியில் இறங்கினர். வேந்தன் ஒரு முகவரியை கொடுத்து மனோன்மணியை தான் பார்த்து வரச் சொன்னான். மருத்துவமனையில் கொண்டு சேர்த்தாலும் அவருடன் இருந்து பார்ப்பதில், படிகாசீக்கு அந்த வாடை ஒத்துக் கொள்ளாமல் போயிவிடுகிறது. ஆண்கள் யாரென்றாலும் உலகநாயகனை சமாளிப்பது கொஞ்சம் கடினமான விஷயமே, அதனாலேயே வீட்டில் வைத்து சரிசெய்ய முயன்றனர்.

அன்று காலை உணவை முடித்துக் கொண்டு மனோன்மணி வைத்தியரை பார்க்கக் கிளம்ப கூடவே கிளம்பிய அனிருத், பலவாறு யோசித்து விட்டு இறுதியில் மனோன்மணியிடம் நேராகவே விஷயத்தைக் கேட்டுவிட்டார், "அந்த தேனு பிள்ளைய உனக்கு முன்னமே பழக்கமா?" என சுளுக்கு எடுக்கும் வைத்தியரைப் பார்க்க வந்தமர்ந்த இடத்தில் வைத்து கேட்க,

"ஏதே! அந்த பேயவா?" என்றான் மனோன்மணி அதிர்ந்து பயந்து,

"ஆமா பவளமல்லி அக்கா"

"அதெல்லாம் தெரியாது ஏன் கேக்குற?"

"உண்மைய சொல்லுடா. அந்த தேனு புள்ள பேயா நம்ம வீட்டத்தான் சுத்திசுத்தி வருதாம் சாமி‌ தாத்தா சொன்னாரு. இன்னும் யாரையோ ஒருத்தர கொலை பண்ண காத்துட்டு இருக்காம்"

"என்ன உளறுத? அந்த பிள்ளைக்கும் நம்ம குடும்பத்துக்கும் வேந்தன் பொண்டாட்டிய தவிர ஒரு சம்பந்தமும் இல்லை. எதுக்கு நம்மள கொல்ல பாக்கணும்? முதல்ல முடிவான கல்யாணத்த நிறுத்துனதும் அந்த பொண்ணோட குடும்பம் தான? நாம இதுல எதுமே பண்ணலையே?"

"அதான தெரியல. வேந்தனுக்கு அது தங்கச்சிய கட்டி வைக்க நினைச்சு இந்தா நடத்திபுடுச்சு பாத்தியா. நா ஒருக்கா வண்டியோட போய் ஆத்துல விழுந்தேனே அப்ப அந்த பிள்ளைய கண்டு பயந்து தான் ஆத்துல இறக்கிட்டேன். ஆனா என்ன என்னைய ஒன்னும் செய்யல, அதனால நானோ வேந்தனோ அதோட பலி ஆடு கிடையாது. என் பொண்டாட்டியும் உன் பொண்டாட்டியும் இந்த ஊருக்கே புதுசு, அப்ப அவங்களும் கிடையாது. அப்ப மிச்சமிருக்கது அக்கா, மாமா, நீயி மூணு பேர்ல ஒருத்தர்தேம்னு சாமி தாத்தா சொல்லுதாரு" என்றார். சாமி தாத்தா என்றால் மட்டுமே உண்மை என நம்புவான் என்பதால் அனைத்திலும் அவர் பெயரை சேர்த்துக் கொண்டார்.

"நா என்ன பண்ணேன்?" என அதிர்ந்து அவன் அவரையே திரும்பி கேட்டதில், இவருக்கு ரொம்ப சந்தோஷம்.

"நீ எதுவுமே பண்ணலனா சந்தோஷம் தான்டா"

"அந்த பொண்ண இதுக்கு முன்ன ஊருக்குள்ளயே கூட நா பார்த்ததில்ல. அது அஞ்சு கொலை பண்ணது நெசந்தானா அப்போ?"

"ஆமா அந்த புள்ளையோட குடும்பமே அந்த பொண்ண கொடுமை படுத்தி சேர்ந்து கொன்னுருக்காய்ங்க போல. அதான் பழிவாங்கிடுச்சாம்"

"ஐயையோ. அப்ப நம்ம குடும்பத்துலனா அப்பா தான் அந்த குடும்பத்தோட சகவாசம் வச்சுட்ருந்த ஒரே ஆளு. அப்ப அவர இப்ப பாத்ரூம்ல விழ வச்சது கூட அந்த பேயோட வேலை தானா?"

"தேனு மாமனாருக்கு ஊருக்குள்ள நிறைய ஃப்ரெண்ட்ஸ் உண்டு. உன் அப்பா வடை வாங்கி திங்கவும் அந்த ஆளு தார சிகரெட்டுக்கும் தான் கூடவே திருஞ்சாக. வேறெதுக்கும் என் அக்கா புருஷன் சரிபட்டு வர மாட்டாகடா" என்றார் அனிருத்.

சற்று யோசித்த மனோன்மணி, "அது தெரியல, ஆனா முதல்ல அவங்க வீட்டுக்கு வேந்தனுக்கு பொண்ணு பாக்க போனோம்ல? அப்ப அப்பாவும் அந்த தேனுவோட மாமனாரும் அவுங்க வீட்டு வாசல்ல நின்னு பேசிட்ருந்தத கேட்டேன் நான்"

"என்ன பேசிகிட்டாங்க?"

"அப்பா அந்த தேனுவோட மாமானார்ட்ட, 'எப்படியாவது இத கலைச்சு விட்றணும். இந்த பொண்ணெல்லாம் என் மகனுக்கு வேணாம்'னு சொன்னார்.

"இவருக்கு என்னவாம் அதுல?" என்றார் அனிருத்.

"அதுக்கு அவரும், 'என் பொண்டாட்டியும் மவனும் கூட உன் வீட்டுல சம்மந்தம் வைக்க இஷ்ட படல, என் மருமவ தான் ஒரே பிடியா நின்னு சண்டை பிடிக்கா, ஆனா கல்யாணத்த எப்படியும் நடத்த விட மாட்டாய்ங்க. எங்கள விட நீங்க ஒசத்தி அதுவே போதும் என் பொண்டாட்டி மொத்தமா குட்டைய குழப்பிவிட்ருவா. அம்புட்டு சம்பாத்தியம் பண்ணியும் உன்னைய பிச்சை எடுக்க விட்டுட்டாய்ங்க பாரு. அதுதேன் நா உன்ன என் கூடவே வச்சுகிட்ருக்கேன்'னு சொன்னாரு. அப்பா இப்படிவேற ஊருக்குள்ள சொல்லிட்ருக்காரான்னு நாந்தான் எரிச்சல்ல அதுக்கு மேல கேட்காம நகர்ந்து வந்துட்டேன்"

"அப்பவே அக்காட்ட சொல்லிருக்கலாம்ல?"

"ம்ச் நானே என் பொண்டாட்டி அன்னைக்கும் வரேன் வரேன்னுட்டு வரலையேன்னு கடுப்புல இருந்தேன். அதனால் அவங்க ரெண்டு பேரும் உளறிட்ருந்தத அப்படியே விட்டுட்டேன். ஆனா சொன்ன மாதிரி முத பேச்சுவார்த்தைலயே நிறுத்திட்டாங்களேன்னு அதிசயமா தான் இருந்தது. ஆனா இந்த பொண்ணு இல்லன்னா இன்னொன்னு, இப்ப என்னன்னு அத நானும் கண்டுக்கல" என்றான் சாதரணமாக.

"உனக்கு உன்ன தவிர வேற யாரும் எப்படியோ போகட்டும்னு கண்டுக்கவே மாட்டல்ல? அதான் உன்ன உன் பொண்டாட்டி கண்டுக்க மாட்டேங்குறாடா"

"இதுல நா என்ன பண்ணிருக்க முடியும்? வேந்தனுக்கு அந்த புள்ளதாம்னு எழுதிருக்கு அதான் இவ்வளவுக்கு அப்றமு அவனோட வாழ வந்துட்டு"

"சரி நீ எதுவும் செய்யலைல?"

"எனக்கு என் பிரச்சினையே சரியா இருக்கு‌‌. இதுல பேய்ட்டலாம் அடிவாங்க முடியாது. நா இப்படியே என் மாமனார் வீடு கிளம்புறேன். பேய விரட்டிவிட்டுட்டு சொல்லி அனுப்பு வரேன்" என்றவன், வைத்தியரையும் பார்க்காமல் கிளம்பிச் சென்றுவிட்டான்.

"சரியான கிறுக்கன். என் அக்கா இவனையும் பிள்ளைன்னு பெத்து வளர்த்துடுச்சே" என தலையில் அடித்து கொண்டு, காத்திருந்து வைத்தியரை பார்த்து, கையோடு அழைத்துக் கொண்டு வீடு வந்து சேர்ந்தார். உலகநாயகன், இவரிடமும் மல்லுகட்டவே செய்தார்.

ஆனால் இந்த முறை அவரை விடாமல், சாமி தாத்தா, வேந்தன், அனிருத் என மூவரும் இறுக்கி பிடித்து கொள்ள, வைத்தியர் இடுப்பில் பிடதியில் என மூன்று இடங்களில் பிடித்திருந்த சுளுக்கையும் நீவி நேராக்கிவிட்டார்.

"இந்த எண்ணெய்ய ரெண்டு நாள் நீவி விடுங்க. எழுந்திடுவாரு" என சொல்லிச் சென்றுவிட்டார் அவர்.

ஒருவாரம் கடந்திருந்தது. பவளமல்லி முகம் வேந்தனும் செல்லம்மாள் வீடு சென்று தங்கிவிட்டு வந்தனர். அவள் அறையில் எதுவும் இல்லை என ஜகதாம்பாள் பேசியதை கேட்டிருந்ததால், குறைந்த விலையில் ஒரு மெத்தையும், பாதி விலைக்கு வந்த மேசை சேரையும் வாங்கி அறையை நிறைத்திருந்தார் செல்லம்மாள். அவன் அதை எல்லாம் கண்டு கொள்ளவுமில்லை கேட்டுக் கொள்ளவுமில்லை. செல்லம்மாள் ஒதுங்கி ஒதுங்கி இருந்தாலும் ஓரிரு வார்த்தைகள் பேச வைத்தான். மற்றபடி அவன் மனைவியிடம் அறிய அறிய பொக்கிஷங்கள் தீரவில்லை போலும். அவளை கொண்டாடி தீர்த்தான் அவன். அமைதியாக அனுபவித்தாள் அவள்.

நாட்கள், வாரங்களாக கடந்திருந்தது.

அன்றைய இரவு, நடுநிசியில் நாய் வேந்தன் வீட்டு வாசலில் நின்று ஏகமாக ஊளையிட்டது. அன்று நிறைந்த அமாவாசை என்பதால் அதிக ஆக்ரோஷம் கொண்டு வேந்தன் வீட்டை கரிய நிற புகையாக சுற்றி சுற்றி வந்தாள் தேன்பாவனி. மற்றைய நாட்களை போல் அவளாலேயே அவளை கட்டுபடுத்த முடியாது. பழி வெறி தாண்டவமாட கொதித்து கொண்டு வந்தாள். காற்று சுழன்று அடித்தது, நாய்களின் ஊளையிடுதல் சத்தம் அதிகரித்தது. வேந்தன் வீடும் விழித்தது.

"என்னங்க , அக்கா?" என வேந்தனிடம் பவளமல்லி பயந்து வினவ,

"பயப்படாதமா என்னன்னு பார்க்கலாம். நா வெளில போய் பாக்றேன் இரு‌" என்றவன் எழுந்து வெளியே செல்ல, வீட்டில் அனைவரும் விழித்திருந்தனர், அனைவரின் முகத்திலும் மரண பயம் தான்.

ஊரே கொஞ்சம் கொஞ்சமாக விழிக்க துவங்கி இருந்தது. ஊளையிடும் சத்தம் நேரம் செல்ல செல்ல அதிகரிக்க, நாய்கள் எல்லாம் வெறிபிடித்தது போல் நாலாபக்கமும் ஓட துவங்கியது.

சாமி தாத்தா உலகநாயகனை விட்டு வெளியே வந்திருக்க, உள்ளே இருந்து எழுந்து வர முடியாமல் படுத்திருந்தார் உலகநாயகன். நடமாட முடிந்த பின்னரும் முடியாதது போல் நடித்துக் கொண்டிருந்ததால் இப்போதும் சோம்பேறியாக படுத்திருந்தார். இன்னுமே அது என்ன சத்தம் என உணரவில்லை அவர். இல்லை அவள் உணரவிடவில்லையா என்பது தேன்பாவனி மட்டுமே அறிந்த ரகசியம்.

அயர்ந்து நிமிர்ந்தவருக்கு ஒரு நொடி இதயமே நின்றுதான் விட்டது. தலைக்கு மேல் சுழலும் காற்றாடி வழி தொங்கி கொண்டிருந்தாள் தேன்பாவனி. காற்றாக கருப்பு புகையாக கோர பற்களுடன் அவர் தலைக்கு மேல் சுற்றி சுற்றி வந்தவள், அவரை கத்தவிடாமல் தொண்டையை இறுக்கி பிடித்திருந்தாள்.

"செத்துப்போ செத்துப்போ. நீலாம் இந்த உலகத்துல வாழவே கூடாது. நீயே செத்துரு இல்ல கொடூரமா நானே உன்ன கொல்லுவேன். ஹா‌ஹா‌ஹா என் கையால கொல்ல போறேன். செத்து போடா செத்து போடா" என ஊரே அதிர கத்தினாள், அவர் கழுத்தை நெறித்தாள்.

அவள் சத்தத்தில் ஊரே அதிர்ந்தது, ஒரு பெண்ணின் பேய் ஆட்டத்தை என்னவென்று புரிய முடியாமல் தவித்தனர் ஊர் மக்கள். கதவை திறந்து வெளியே வரவே பயந்து பதுங்கி இருந்தனர்.

வேந்தன் வீடே ஆட்டம் கண்டதில் அனைவரும் அடித்து பிடித்து உலகநாயகன் இருந்த அறைக்குள் நுழைந்தனர், கரிய புகையால் சுற்றி வளைக்கப்பட்டு கட்டிலின் மேல் காற்றாடி சுழலுக்கு சமமாக சுழன்று கொண்டிருந்தார் உலகநாயகன்.

சாமி தாத்தா அவர் கொண்டு வந்த பையிலிருந்து சாம்பல் அடங்கிய சிறிய பையை எடுத்து அதிலிருந்து சாம்பலை கையில் அள்ளி சுழன்று கொண்டிருந்தவர் மீது விசிறி அடித்தார். இன்னொன்றில் காசி தீர்த்தம் இருந்தது அந்த குடுவையையும் எடுத்து நீரை வாரி தெளித்தார். மற்றவர்கள் அரண்டு தான் நின்றனர்.

"அக்கா! அக்கா! என்ன பண்ற? விடுக்கா! ஏன்க்கா இப்படி பண்ற?" என பவளமல்லி அழுது கத்தி அழைத்தாள், அதற்கும் அந்த நீருக்கும் தான் கொஞ்சம் அடங்கி வந்தாள் தேன்பாவனி, "ஆ! ஆ! ஆ!" என அலறினாள், பிடித்திருந்த உலகநாயகனை பட்டென்று விட்டுவிட்டு, இன்னும் கதறினாள், பின், "இவன கொல்லுவேன் கொல்லாம இங்கிருந்து போ மாட்டேன். நீ எதாவது செஞ்சா மொத்தமா ஊரையே அழிச்சுருவேன். யோசிச்சுக்கோ மொத்த ஊரா உன் மருமகளோட புருஷன் மட்டுமான்னு யோசிச்சுட்டு என் மேல கை வை" என சாமி தாத்தாவைப் பார்த்து அதேபோல் நின்று கத்திவிட்டு கண்ணிமைக்கும் நொடியில் காற்றில் கரைந்துச் சென்றாள்.

எல்லோரும் அப்படியப்படியே சமைந்து நின்றுவிட்டனர். வேந்தன், கட்டிலில் விழுந்து இன்னும் இழுத்து கொண்டிருந்த உலகநாயகனையே விடாமல் பார்த்தான். அவன் கண் முன் அவர் வாய் கோணித்து கொண்டது, ஒரு கையும் காலும் இழுத்து கொண்டது. முறைத்துப் பார்த்தபடி நின்றிருந்தான். மற்ற எல்லோரும் திகைப்பிலிருந்தே இன்னும் வந்திருக்காததால் உலகநாயகன் நிலை இன்னும் அவர்கள் கண்ணில் படவில்லை.

 
அத்தியாயம் 29

வேந்தன், உலகநாயகனை பார்த்தபடி இருக்க, உதவி வேண்டி, "ம்ம் ம்ம்!" என அனத்தலுடன் அனைவரையும் அழைக்க முயன்றவரும் ஒவ்வொருவராக பார்வையால் தாண்டி வேந்தனிடம் வந்து நிற்க, அவன் பார்வையில் வெடவெடத்துவிட்டார். அவ்வளவு கூர்மையாக பார்த்திருந்தான் அவன்.

அவரை காப்பாற்ற முயன்றதில் வயதிற்கு மீறிய ஆவேசத்தைக் கொண்டதால் சாமி தாத்தா, அந்த அறையில் அவருக்கென போடப்பட்டிருந்த மடக்கு கட்டிலில் அயர்ந்து அமர்ந்திருக்க, படிகாசீ, உத்தமி, பவளமல்லி மூவரும் இன்னும் தேன்பாவனி சென்ற திசையைத் தான் திகைத்து பார்த்திருந்தனர். சற்றுமுன் கண்ணால் கண்டதையும், நடந்து முடிந்ததையும் கடந்து வர முடியாமல் நின்றனர். அவர்கள் காதில் இன்னுமே அவள் குரல் இரைச்சலாக கேட்டுக் கொண்டே இருந்தது.

பவளமல்லி நினைப்பெல்லாம், 'அக்கா கொல்ல நினைச்சு காத்திருக்கிறது இவங்களையா? அப்படி என்ன செஞ்சாங்க? ஏன் இவ்வளவு கோவம்? அக்காவ கொன்னவங்கள்ல இவருக்கும் சம்பந்தம் இருக்குமா? அதான் அம்மா என்ன இங்க கட்டித்தர மாட்டேன்னு அவ்வளவு சொன்னாங்களா? அக்காவ கொன்னவரோட வீட்டுக்கே வாழ வந்துருக்கேனா நான்?' என நினைக்க நினைக்க மனமெல்லாம் வெதும்பி விட, திரும்பி கணவனைப் பார்த்தாள். அவன் தீப்பார்வை வேறெங்கோ இருக்க, அது இருக்கும் திசையை அவளும் திரும்பி பார்த்துவிட்டு இன்னும், "ஐயோ!" என திகைக்க,

அவள் சத்தத்தில், திக் பிரம்மையிலிருந்து வெளி வந்த அனிருத், வேர்த்திருந்த முகத்தைக் குனிந்து வேட்டியைக் கொண்டு அழுந்த துடைத்தார். முதன் முதலில் தேன்பாவனியை, அன்று ஆற்றங்கரையில் நேரில் பார்த்தபோது கூட அவளிடம் இவ்வளவு ஆவேசத்தை பார்க்கவில்லை அவர். இப்போதும் பார்த்ததை அவரால் நம்ப முடியவில்லை. திகில் படம் பார்த்த உணர்வில் உள்ளே எல்லாம் நடுங்கியது.

"ஆக தேனு இன்னும் ஒருத்தர கொன்னுட்டு தான் போவேன்னு சொன்னது மாமாவத்தானா?" என வாய்விட்டே சொல்லி, உலகநாயகனை பார்க்க, "ஆத்தி! இதென்ன இப்படி? என்ன செய்யிது மாமா?" என பதறி கொண்டு அவரிடம் ஓடினார். அவர் அலறலில் தான் திடுக்கிட்டு மற்ற மூவரும் கூட உலகநாயகனை கண்டனர்.

"வேந்தா தூக்கு ஹாஸ்பிடல் கூட்டிட்டு போவோம்" என சாமி தாத்தா சொல்லி மெல்ல எழுந்து உலகநாயகனிடம் சென்று, அவரின் வளைய துவங்கியிருந்த கையை நேராக பிடித்துவிட்டுக் கொண்டு, "டேய் அய்யாவு கால நீவுடா" என சொல்ல, அனிருத்தும் விறைத்து இழுத்துக் கொண்டிருந்த இடது காலை முடிந்த மட்டும் நீவி விட்டார்.

"டேய் வேந்தா என்னடா இப்படி நிக்ற? ஒன்னு மாமாவ தூக்கு இல்ல ஆஸ்பத்திரிக்கு ஃபோன் பண்ணு‌. என்னடா இப்படி பாத்துட்டே நிக்ற? எக்கா சொல்லுக்கா!" என்றார் அனிருத்தும்.

"அந்த பொண்ணு பேயா வந்து கொலை பண்ணுவேன்னு சொல்லுற அளவுக்கு உன் அக்கா புருஷர் என்ன பண்ணாருன்னு கேளு" என்றான் சிறிதும் பார்வையை உலகநாயகனிடமிருந்து விலக்காமல்.

"எனக்கு தெரிஞ்ச வர, இவரு தேனு பிள்ளையோட மாமானார்ட்ட உன் கல்யாணத்த நடக்கவிடாம பண்ண சொல்லி மட்டுந்தான் பேசிருக்காரு. அந்த கோவத்த தான் காட்டிட்டு போகுது அந்த புள்ள"

"இதுக்காகலாம் ஒருத்தர கொலை பண்ற அளவுக்கு போவாங்களா? யோசனை இல்லாம பேசுறியா நீ?" என்றான் உறுமலாக,

"அடேய் உன் அப்பாவ பத்தி உனக்கு தெரியாதா? இட்லி சட்டில இருந்து ஒழுங்கா இட்லியைத் தட்டுல எடுத்து வச்சு திங்க தெரியாத மனுஷன்டா. இவரு அதுக்கு மேல என்ன செஞ்சுருப்பாருன்னு நினைக்குற?" என்றார் அனிருத்தும் விடாமல். அவருக்கு மனோன்மணியின் மேல் வந்த சந்தேகம், அதையும் விட, அவர் அக்கா படிகாசீ ஏதேனும் தவறாக பேசியிருக்க கூடுமோ என அவர்கள் இருவர் மீது வந்த சந்தேகம் கூட உலகநாயகன் மேல் வரவில்லை என்பது தான் உண்மை.

"என்ன வேணா விசாரி, அதுக்கு முதல்ல ஆஸ்பத்திரியில சேரு வேந்தா. இப்படி வச்சுட்ருந்தா கொஞ்சம் முன்ன பேய்ட்ட போராடி காப்பாத்துனது கூட வீணா போயிடும்" என்றார் சாமி தாத்தா.

"ஆமாங்க. எதாவது செய்ங்கங்க. அக்கா ஏன் இப்படி பண்ணான்னு தெரியல, ஒருவேளை தப்பா புரிஞ்சுட்ருக்காளோ என்னமோ. கண்ணு முன்ன இப்படி யாரையும் போராட விட்டு வேடிக்கை பார்க்க கூடாதுங்க" என பவளமல்லியும் சொல்ல, அவளுக்கு உள்ளுக்குள் உண்மையில் அப்படி இருக்க தான் வேண்டும் என்ற வேண்டுதலும் இருந்தது.

வேந்தன் பார்வை அடுத்துச் சென்றது படிகாசீயிடம் தான், அவரின் நிலைகுத்திய பார்வையும் உலகநாயகனிடம் தான் இருந்தது.

"என்னங்க!" என பவளமல்லி மறுபடியும் அவன் கைப்பிடித்து உலுக்கவும், அவனறை சென்று அலைபேசியை எடுத்துக் கொண்டு வெளியேச் சென்று வாசல் கதவை திறந்தான், அவசர ஊர்திக்கு அழைப்பெடுத்து வரச்சொல்லிவிட்டு நின்றான். அவ்வளவு நேரமும் இருந்த சத்தம் நின்று அப்படியொரு நிசப்தம். நாய்களும், ஒன்றைக் கூட காண முடியாதது போல் எல்லாம் மாயமாகி இருந்தது.

அவன் அப்படி நிற்கையிலேயே அவன் வீட்டிலிருந்து நான்காவது வீட்டில், திடீரென எல்லா விளக்கும் எரிய, "அம்மா என் புள்ள!" என்ற அழுகுரல் கதறலாக வந்தது. வெளியே நின்ற இவனுக்கும் கேட்க, விறுவிறுவென அங்கு நடந்துவிட்டான், இடையில் இருந்த வீடுகளும் கொஞ்சம் பயத்தைத் துறந்து கதவை திறந்து பார்த்தனர், அதில் வேந்தன் நடந்து செல்வது தெரியவும் கொஞ்சம் பதட்டம் தனிந்து கதவை திறந்து வெளியே வந்தனர்.

"என்னாச்சு வக்கீல் தம்பி, வெளில அவ்வளவு சத்தம் பயம் நெஞ்சை கவ்விருச்சு. நாய் ஊளையிடறதும் உறுமலான சத்தமும், நடுங்கிட்டோம்" என ஒருவர் சொல்ல,

"இப்ப சத்தம் நின்னதும் தான் வெளிய எட்டி பார்ப்போமா வேணாமான்னு நானும் பாத்துட்டு நின்னேன். மறுபடியும் அழுற சத்தம்"

"வாணி அக்கா வீட்ல இருந்து தான் வருது. என்னவோன்னு பதக்குன்னு தான் இருக்கு" என இடையே இருந்த மூன்று வீட்டாட்களும் வேந்தன் பின் செல்ல, அவன் அவர்கள் பேச்சு காதில் விழுந்தாலும் பதில் சொல்லவில்லை, அந்த வாணியக்கா எனப்படுபவரின் வீட்டில் சென்று கதவை தட்டிவிட்டு நிற்க, வந்து கதவை திறந்தவர் வெளியே நின்றவர்களைக் கண்டுவிட்டு அழுதவாறே உள்ளே சென்றுவிட்டார்.

"யாருக்கு என்னாச்சு?" என்றான் வேந்தன் உள்ளே நுழைந்ததும்.

ஒரு வாலிபனைத் தரையில் கிடத்தியிருந்தனர். அவன் பாட்டி, அப்பா, தங்கை மூவரும் அவனை சுற்றி அமர்ந்திருக்க, அந்த வாணியாக அழைக்கப்பட்டவர் சுவற்றில் சாய்ந்து அமர்ந்திருக்க, வந்த பெண்கள் எல்லாம் அந்த வாலிபனைக் கண்டவாறு அவரை கட்டிக்கொண்டு அழ தொடங்கி விட்டனர்.

"என்ன நடந்துச்சு?" என்றான் வேந்தன் மறுபடியும்.

"தெரியல தம்பி. ரொம்ப நேரமா நாய் ஊளையிடுற சத்தமும் யாரோ கூப்பாடு போடுத சத்தமுமா இருக்கேன்னு இங்கன யாருமே தூங்கல. நாய் அதிகமா ஊளையிடுது அம்மாவாசை வேற யாரு வீட்ல சாவு விழ போவுதோன்னு நினைச்சுட்ருந்தேனே, என் வீட்லயே விழும்னு நினைக்கலயே. அப்பதேன் சத்தம் ஓயவும் ஒன்னுக்கு போயிட்டு வரலாம்னு எந்திச்சேன், பிறகட்டுல தலைமாட்டுல தொங்குதியான். என்ன அவசரமுன்னு போனானோ தெரியலயே" என புலம்பி அழுதார் இறந்திருந்தவனின் பாட்டி. நடு முற்றத்தில் அவர் படுக்கையும் அங்கு தான் ஓரத்தில் கிடந்தது. அதற்கு அடுத்த அறையில் தான் தற்கொலை செய்திருக்கிறான் போலும். கயிறுகூட இன்னும் இருந்தது. ஆண்கள் சென்று பார்த்துவிட்டு வந்தனர்.

"நீங்க இங்கனதான பெரியம்மா படுப்பீக? அவேன் தொங்கும் போது சத்தமே கேட்கலையா? அவனுக்கும் உங்களலாம் பாத்துட்டும் என்னன்னு தொங்க தோணுச்சு?" என்றார் அடுத்த வீட்டிலிருப்பவர்.

"காது கேட்டு தொலையலயே கேட்டுருந்தா புடிச்சு இழுத்துருப்பேனே? மத்த மூணு பேரும் சத்தம் நின்னதும் தூங்க போனாகளே அவங்க கூடயே கூட்டிட்டு போகாம விட்டுட்டாய்ங்களே! நைட்டு தண்ணிய போட்டு வந்து சலம்புதியான்னு விட்டாய்ங்க இப்ப ஒரேயடியா போயிட்டியானே" என மொத்தத்தையும் ஊராருக்கு சொல்லி அழுதார். அழுகை சத்தம் கூட கூட மொத்த ஊரும் விழித்தது.

வேந்தன் மெல்ல வெளியே வந்தவன், நிமிர்ந்து அவன் வீட்டு மாடியை பார்த்தவாறே அவனறிந்த காவல் துறை அதிகாரியின் எண்ணிற்கு அழைத்து விஷயத்தை கூறினான். அவர்கள் வருவதாக கூறி வைத்துவிடவும் மீண்டும் நடந்து அவன் வீட்டிற்கே வர, அவன் வீட்டு மாடியில் அந்த கரிய உருவம் இவனை பார்த்தவாறு அலை அலையாக அலைந்தது.

வீட்டை நெருங்குகையில், அவசர ஊர்தியும் வந்துவிட, உலகநாயகன் அவசரமாக அதில் ஏற்றப்பட்டார். அவருடன் அனிருத் ஏறிக்கொள்ள, "உன் அக்காவையும் கூட்டிட்டு போ மாமா" என்றான் வேந்தன்.

"நீ அக்காவ கூட்டிட்டு வாடா நா முன்ன போறேன்" என்றார் அவர்.

"நீ உன் அக்காவ கூட்டிட்டு போ. நா காலைல வரேன்" என்றான்.

"நா போய் என்னடா பண்ண போறேன் எனக்கு அங்க என்னத்த தெரியும்?" என்றார் படிகாசீ.

"அக்கா என்ன பேசுற. நீ தான கூட இருந்து பாக்கணும். வா" என்றார் அனிருத் அதட்டலாக.

"சார் லேட்டாவுது வாரதுனா வாங்க. நின்னு பேசிட்ருக்க நேராமா இது?" என்றார் உள்ளே இருந்த செவிலியர்.

"போய் ஏறும்மா. மத்ததுலலாம் துணையா இருக்கல்ல இதுலயும் இரு போ" என முறைத்தான் வேந்தன். கண்ணீரைத் துடைத்துக் கொண்டு வண்டியில் ஏறி அமர்ந்தார் படிகாசீ. அவசர ஊர்தி கிளம்பிவிட்டது.

"வேந்தா நீயும் கூட போடா. விஷயம் என்னன்னு தெரியாம ஏன் இவ்வளவு ஆத்தரபடுற" என்றார் சாமி தாத்தா.

"நீங்க ஏன் என்னன்னு தெரியாம அவருக்கு சப்போர்ட் பண்றீங்க?" என்றான் இவனும்.

"இது என்னடாப்பா பேச்சு? எனக்கு முதல்லயே தெரியும் இந்த வீட்ட அவ ஆத்மாவா சுத்தி வர்றதுக்கு காரணம் உன் அப்பனா தான் இருக்கும்னு. அது துர் ஆத்மாவா இருந்தா அது உன்னோட உலாவ விட தகடு நானே குடுப்பேனா? எதாவது தப்பு அந்த பொண்ணுக்கு உலகு செஞ்சுருந்தாலும் கூட குறைய தண்டனைய குடுத்து அதோட ஆக்ரோஷம் கொஞ்சம் குறையும்னு தான் குடுத்துவிட்டேன். இல்லாம அத நெருங்க விடாம பண்ண பண்ண உன்ன எதுவும் பண்ணிடுமோன்னு தான் நா குடுத்துவிட்டதே. ஆனா அதுக்காக இப்ப கண்ணு முன்ன கொல்லட்டும்னு பார்த்துட்டு நிக்க முடியாதுல்ல? இவன் விவரமில்லாம என்னமாது செஞ்சுருப்பான்னு எனக்கும் தெரியும், அதுக்கு உயிரையே பலி குடுக்க முடியாதுல்ல? அந்த ஆத்மாவ சாந்தப்படுத்தி அனுப்பி வைக்க என்ன பண்ணணுமோ இனி அத பண்ணலாம்" என அவர் முடிக்கும் முன்பே,

"ஏய்!" என பேரிரைச்சலோடு எங்கிருந்தோ சூறாவளி காற்று போல் சுழன்று வந்த தேன்பாவனி பளார் என்று சாமி தாத்தாவை ஒரு அடி வைத்திருந்தாள்.

கீழே கிறங்கி விழ இருந்தவரை வேந்தன் தாங்கி பிடிக்க, உத்தமியும் ஓடிவந்து பிடித்தார், "என்ன பண்றீங்க தேன்பாவனி?" என வேந்தன் காற்றாக திரிந்தவளைப் பார்த்து திட்ட,

"அக்கா இவ்வளவு நாள் இருந்த மாதிரி இரேன்கா. ஏன்க்கா இப்படி பண்ற? என்ன கோவம்னு சொல்லுக்கா. மத்தவங்க பேசுறாங்கன்னு சின்ன சின்னதா ஏதாவது செய்யும் போதுலாம் நாங்க வேடிக்கை பார்த்தோம்னு இப்ப இப்படி பண்ணுறியாக்கா?" என பவளமல்லியும் அழுது ஆர்ப்பரித்தாள்.

உத்தமி தண்ணீரை எடுத்துவந்து சாமி தாத்தாவிற்கு குடிக்க கொடுத்தார், பேய் அடியை வாங்கும் வயதா அவருக்கு! இருமல் தொடர்ந்து வர திணறி கொண்டிருந்தார்.

"என்னைய அனுப்புவியா? அனுப்ப முடியுமா உன்னால? எனக்கு சம்பந்தமில்லாதவங்கள தண்டிக்க வேணாம்னு பொறுமையா போனா என்னையே அனுப்ப சொல்லுவியா நீ? எனக்கும் இங்கேயே இருக்க ஆசையில்லை ஆனா வந்த வேலைய முடிக்காம போகவும் மாட்டேன். புரியுதா? அப்பவே சொன்னது தான், உன் மருமகளோட புருஷன நீ இப்ப காப்பாத்தினதுக்கு தான் அங்க இன்னொருத்தன் போய்ட்டான். இனி தடுக்க தடுக்க மொத்த ஊரையும் பொதைச்சுருவேன் ஜாக்கிரதை. கேட்குதா?" என அவரின் அருகில் வந்து மிரட்ட, மிரண்டு தலையை ஆட்டினார் தாத்தா.

"அக்கா!" என பவளமல்லி அழைக்க, நிற்கவில்லை அவள்.

அவரை அப்படியே தூக்கிச் சென்று அறையில் படுக்க வைத்து வந்த வேந்தன், "பார்த்துக்கோங்க அத்த" என உத்தமியிடம் சொல்லிவிட்டு மாடி ஏற போனான், "என்னங்க எங்க போறீங்க? எனக்கு பயமா இருக்கு! என்ன நடக்கும்? அக்கா என்ன பண்ண போறா?" என பவளமல்லி அவனை பிடித்து நிறுத்த,

"அத நீயே வந்து உன் அக்காவ கேளு. நா கேட்டா எதுக்கு சொல்லணும்னு என்னையே திருப்பி தான் கேட்பாங்க. நீ கேளு மல்லி. அந்த வாணி அக்கா பையன எதுக்கு கொல்லணும்? நாம போய் முதல்ல காரணத்த கேட்கலாம் வா" என பிடித்திழுக்க,

அவனோடு இரண்டு படி ஏறியவள், "அம்மாக்கு தெரியுமா?" என கேட்டாள்.

"கண்டிப்பா தெரிஞ்சுருக்கும்"

"அக்காவ உங்கப்பாவும் சேர்ந்து தான் கொலை பண்ணிருப்பாங்களா?" என மறுபடியும் அவனை நிறுத்தி பிடித்தாள். மேலே சென்று தேன்பாவனியை பார்ப்பது என்பதே நடுக்கமாக இருந்தது பவளமல்லிக்கு.

"சேர்ந்து பண்ணிருக்கணும் இல்ல காரணமா இருந்துருக்கணும்னு தான் எனக்கும் தோணுது" என்றான் வேந்தன்.

"நாம அம்மாட்டயே கேட்டு பார்ப்போமா?"

"இவ்வளவு நாள் சொல்லாதவங்க இப்ப மட்டும் சொல்லுவாங்கன்னு தோணல. நீ உன் அக்காவையே கேளு மல்லி"

"ஏன் தம்பி? விஷயம் தெரியும் முன்ன அப்பான்னு கூட இரக்க படாம பாத்துட்டு நின்னீக? அம்மாவையும் தனியா அனுப்பிட்டீக?" என வந்து நின்றார் உத்தமி. அவருக்கு சற்று முன் நடந்ததே மனதில் ஓடிக்கொண்டிருந்தது. உண்மையில் பயமாக இருந்தது.

"விஷயம் இப்ப பிரச்சினை ஆகிடுச்சு அத்த. தேனு இங்க பண்ண பிரச்சினை இங்க மட்டும் கேட்கல, வெளில அக்கம்பக்கத்துல எல்லாரும் கேட்ருக்காங்க. இங்க விழ வேண்டிய சாவு நாலு வீடு தாண்டி விழுந்துருக்கு. ஊர்க்காரங்க சும்மா இருப்பாங்கன்னா நினைக்கிறீங்க?அங்க அடக்கம் பண்ணிட்டு வந்த அடுத்த நிமிஷம் நம்மட்ட தான் வந்து நிப்பாங்க, ஏன்னா சத்தம் கேட்டது நம்ம வீட்டுல இருந்து தான். தேனு பேயா உலாவுறதா முன்னரே பேச்சு இருக்கு. இனி சும்மா இருப்பாங்களா? நாளைக்கு கூட்டமா கிளம்பி வந்து நிப்பாங்க பாருங்க. அதான் நா அவரோட ஹாஸ்பிடல் போகல, அவங்க வர்ற நேரம் அம்மா இருந்தா பேச்சு வளரும், அதான் அவங்கள போக சொன்னேன். நாளைக்கு யார் வந்தாலும் நாம தான் சமாளிக்கணும். சாமி தாத்தாவும் இருக்கனால கண்டிப்பா பேச்சுவார்த்தைக்கு வருவாங்க" என வேந்தன் தெளிவாக சொல்லவும் தான், இரு பெண்களுக்கு மட்டுமின்றி உள்ளே இருந்த சாமி தாத்தாவிற்கும் நடந்த விஷயத்தின் வீரியம் புரிந்தது.

"வாணி அக்கா வீட்லயா?"

"ம்ம் அவங்க பையன்"

"தடிமாட்டு பைய சொன்னத கேட்காம இந்த வயசுலயே குடிச்சு சீரழிஞ்சு குடும்பத்தையும் நாசமாக்கிட்டு போயிட்டான் போல"

"இப்ப நமக்கு நம்ம பிரச்சினையும் முக்கியம் அத்த"

"அண்ணே அப்படி எதுவும் பண்ணிருக்கும்னு இப்பவும் நம்ப கூட முடியல தம்பி" என்றார் பாவமாக உத்தமி,

"அக்காவும் காரணம் இல்லாம இப்படி பண்ண மாட்டா சித்தி. அவ வீட்டாளுங்களயே அதுக்கு தான் கொன்னா" என்றாள் பவளமல்லி,

"செத்தும் நிம்மதி இல்லாம ஆவியா சுத்துத பிள்ளைய எப்படி சந்தேகபட முடியும் மல்லி? அதோட ஆவி அடங்கணும்னா பழிவெறி தீரத்தான வேணும்?"

"அப்ப மாமா எதாவது பண்ணிருப்பாங்க சித்தி. அது என்னன்னு தெரியணும்ல? எனக்கு அக்காவ இப்படி பாக்கவே முதல்ல பயமா இருக்கு. இத்தனை நாள் இருந்தமாதிரி இருந்தா கூட கேட்ருவேன். இப்ப அவ முன்ன போய் நிக்க கூட பயமா இருக்கு"

"ஈரக்கொலையே நடுங்குது. இத்தன நாளு கண்ணுக்கு தெரியாம இருந்ததே பரவால்லன்னு தோணிருச்சு எனக்கு" என்றார் உத்தமியும்.

"எதுக்கு இவ்வளவு ஆத்திரம் அவர் மேல?" என்றாள் பவளமல்லியும் குழம்பி போய்.

"நானும் அதேன் யோசிக்கிறேன். நா இங்க வாக்கப்பட்டு வந்து ஆறேழு வருஷமாச்சு, இதே வீட்டுக்குள்ளதேன் அண்ணன பாத்துகிட்டு இருக்கேன். விவரமில்லாம எதையாவது பேசி மதினிகிட்ட திட்டு வாங்குவாக. உதாரணமா சொல்லுதேன் கேளேன் என் புள்ள சின்ன பிள்ளைல கொஞ்சம் வெயிட் கூடுதலா இருப்பான், அவன தூக்க முடியாம தூக்கிட்டு, என் வீட்டாளுங்க முன்ன வச்சே, 'என்ன இம்புட்டு வெயிட்டா இருக்கான் ரொம்ப நேரம் தூக்கிட்டு திரியாத மேல் வலிக்க போவுது, பாலையும் பசி எடுத்தா மட்டும் குடு'ன்னு பேசுவாக. மதினி புடிச்சு வஞ்சு போடுவாக. சின்ன புள்ளைய வெயிட்டா இருக்காம்னு எந்த மாக்கானாது வெளில சொல்லுவானா? என்னத்த தெரியுது உனக்குன்னு திட்டி போடுவாக' நானும், 'விடுங்கக்கா சாதாரணமா தான் சொல்லுதாக'ன்னு சொல்லி சமாதானம் சொல்லிடுவேன். இதுமாதிரி நிறைய உண்டு, இனிப்பு பண்டம் எதும் வீட்டுக்கு வந்தவுக வாங்கிட்டு வந்தா, திருட்டு தனமா எடுத்து தின்னுபோட்டு, மறுநாள் தலைசுத்துன்னு படுத்து நாலு நாளைக்கு எந்திக்க முடியாது, என் புருஷன் தான் ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு அலைஞ்சு பாப்பாக, உடம்புல அம்புட்டு சுகரு. ஆனா அந்நேரம் பார்க்க பாவமாதேன் இருக்கும். வீட்டுக்கு யாரு வந்தாலும் போனாலும் நடுவீட்ல படுத்துட்டு டிவியே கதின்னு இருக்குறது. எதையாவது செய்யாதீகன்னு சொன்னாலும் கேட்காம அத செய்யிறதுன்னு இருப்பாக"

"உங்களுக்கு தெரியாதது நிறையா இருக்கு அத்த. ஊமையா இருந்து நினைச்சத சாதிக்குறது" என்றான் எரிச்சலாக வேந்தன்.

 
அத்தியாயம் 30

"ஆமா பாத்துருக்கேன். கொஞ்சம் ஊமகுசும்பு வேலையும் பாத்து விட்ருவாக. மதினி யார் கூடயாவது சண்டைனா அவங்கள இங்க யார்ட்டையாவது சொல்லி திட்டிட்ருந்தா அத அப்படியே அந்த ஆளுக்கு போன போட்டு போட்டு குடுத்துடுறது. அதனால சண்டையே சிலநேரம் பெருசாகிடும். இதோ வேந்தன் தம்பியைப் பத்தி கூட சிலநேரம் வீட்ல எல்லார்ட்டையும் எதையாவது சொல்லி குடுத்துடுவாக. மனோ தம்பிக்கும் உங்களுக்கும் அப்படி சிலநேரம் சண்டையும் வரும். அப்ப உங்க மாமா தான் ஊட புகுந்து சரி கட்டி விடுவாக. ஆனா உங்கப்பா தான் காரணம்னு மதினிட்ட மட்டும் சொல்லி திட்டிட்டு விட்ருவாக. ஒருதடவை நாங்கூட கேட்டேன், ஏன் அண்ணனயே நேரா கேட்டா என்னன்னு, அவுக வீட்ல இருந்துட்டு அவுகளயே பேசுனா நா உள்ள வந்து நாட்டாமை தனம் பண்ணுதேன்னு நினைப்பு வந்திடும். இவங்களோட வளந்துட்டேன் பிள்ளைக இப்ப வளர்ந்துட்டாலும் இவுகளோடயே இருந்துட்டு போயிடணும்னு நினைக்கேன் புள்ள, அத புரிஞ்சு நீயும் நடந்துக்கணும்னு சொல்லிட்டாரு. அதனாலேயே உங்கப்பா மதினிட்ட எதையாவது எடுத்து தர கேட்டா, மதினி செய்ய மாட்டாகன்னு, நானே செய்வேன். எனக்கு தெரிஞ்ச வர, வாய்க்கு விளங்காம எதையாவது பேசி வச்சுருப்பாகளோ அதுவே அந்த தேனு பிள்ளைக்கு வினையா முடிஞ்சுட்டோன்னு மட்டுந்தேன் தோணுது" உத்தமி பேசி முடிக்கும் வரை அமைதியாகவே இருவரும் கேட்டிருந்தனர்.

"அத அக்காட்ட என்னன்னு கேட்க?"

"வேந்தா!" என உள்ளிருந்து அழைத்தார் சாமி தாத்தா. மூவரும் உள்ளே செல்ல, "இன்னைக்கு எதுவும் அந்த பொண்ணுகிட்ட பேச வேண்டாம். அமாவாசை நேரம் கழியட்டும்" என்கவும், ஒரு பெருமூச்சுடன் தலையை அசைத்து விட்டான்.

அதன் பின்னரும் அங்கு யாருக்கும் தூக்கம் அண்டவில்லை. மறுநாள் காலை, வேந்தன் உலகநாயகனை சேர்த்திருந்த மருத்துவமனை செல்ல, பவளமல்லி அவள் அம்மாவை தேடிச் சென்றாள்.

மொத்த ஊரும் விடிந்ததும் விடியாததுமாக, கூடி கூடி இரவு கேட்ட சத்தத்தையும், அதை அவர்கள் உணர்ந்த விதத்தையும் தான் பகிர்ந்து பரப்பிக் கொண்டிருந்தனர். வேந்தன் வீட்டைச் சுற்றி உள்ளவர்கள் மட்டுமின்றி மொத்தமாக ஊருமே முந்தைய இரவு எதிர்மறை உணர்வை உணர்ந்திருந்தனர். அதற்கு தேன்பாவனி தான் காரணம் என நிச்சயமாக நம்பினர்.

"அஞ்சு கொலை பண்ணியும் அவ வெறி தீரலையோ? இந்த சின்ன பையனையும் காவு வாங்கிட்டாளே" என பேச்சை அவர்களே முடுக்கிவிட, அது தீயாக பற்றிக்கொண்டது.

"அவ வாக்கப்பட்ட வீட்ட ஏதோ காரணமா பழி தீர்த்துகிட்டா சரி. இதென்ன ஊராளுங்க மேல கை வைக்கிறது. இதெப்படி சும்மா விட முடியும்?" என பேச்சு வளர்ந்தது.

"அதான் அத விரட்டவே முடியலையே நாமளும் என்னலாமோ செஞ்சு பார்த்துட்டோம். ஊருக்குள்ள வராம இருந்தது. நேத்தைக்கு அமாவாசையா இருக்கவும் ஊருக்குள்ள வந்துருக்குமோ?"

"அதுக்காக அமாவாசைக்கு மட்டும்னு நாம வேற ஊருக்கு போ முடியுமா? பேய் உலாத்துதுன்னு தெரிஞ்சும் நாம் இத்தன மாசமா விட்டுவச்சதே தப்புதேன். இனி உண்மையா பேய் விரட்டுற யாரையாவது கூட்டிட்டு வந்து இதுக்கு ஒரு முடிவு கட்டுறதுதேன் சரி" என இறந்த வீட்டிற்கு வந்திருந்த இடத்தில் கூடிப்பேசி அவர்களாக ஒரு முடிவிற்கும் வந்தனர்.

பவளமல்லி செல்லம்மாளிடம் முந்தைய இரவு நடந்ததை கூறிய பின்னரும், செல்லம்மாளுக்கு உள்ளுக்குள் உதறல் தான் என்றாலும், "எனக்கு எதுவும் தெரியாது. நீயும் உன்ன குழப்பிக்காம அமைஞ்ச வாழ்க்கைய வாழப்பாரு. எனக்கு வேலைக்கு போகணும், நா என் பொழப்ப பாக்கணும்" என சொல்லி கிளம்பி விட, வேறுவழியின்றி வீட்டிற்கே திரும்பி வந்துவிட்டாள்.

செல்லம்மாளிடமும் வேலைக்கு வந்திருந்த இடத்தில் வந்து பேசவே செய்தனர், எப்போதும் போல் அமைதியாக தான் கடந்தார் அவர். தேன்பாவனியிடம் பேச வேண்டும் என நினைத்தாலும் அவளாக வந்தால் தானே முடியும் என வெளி காட்டாமல் உள்ளுக்குள் இதனால் என்னென்ன புதுப்பிரச்சினைகள் வருமோ என மருகி கொண்டிருந்தார்.

அங்கு மருத்துவமனையில் உலகநாயகனுக்கு பக்கவாதம் என தங்க வைத்து சிகிச்சையை ஆரம்பித்திருந்தனர். வேந்தனும் சென்று பார்த்துவிட்டு, மருத்துவரிடம் பேசிவிட்டு அனிருத்திடம் மாலை வருவதாக கூறி அடுத்து நேராக நீதிமன்றம் சென்றான்.

வெளிநாட்டில் இருந்து அந்த பெரியவர் வந்திருப்பதாகவும், வேந்தனை பார்த்தே ஆகவேண்டும் என காத்திருப்பதாகவும் ஜவகர் அழைத்து சொல்லியிருக்கவும், கடுப்புடன் தான் வந்து சேர்ந்தான்.

"நா ஜகதீஷன்!" அவர் இவன் வந்ததும் அறிமுகம் செய்து கொள்ள,

"எல்லாம் தெரியும். என்ன வேணும் உங்களுக்கு?"என்றான் நேரடியாக.

"நீங்க ஏன் அந்த வீட்ட விக்கவிடாம பண்ணணும்னு நினைக்கறீங்க?"

"எந்த வீட்ட?"

"நடிக்க வேணாம். என் தம்பி வீடு எனக்கு வேணும். நீங்க அத எடுத்துக்கத்தான் எல்லாம் பண்றீங்கன்னு என் லாயர் சொல்லிட்டாங்க"

"அந்த வீடே லோன்ல எடுத்து கட்டமுடியாம போட்டு பேங்க் காரன்ட்ட இருக்குன்றேன் இன்னமு வீடு வீடுன்னு பினாத்திட்டு திரியிறீங்க. நீங்க எதுக்கு அந்த வீட்டுக்கு அவ்வளவு அலையிறீங்கன்னு முதல்ல சொல்லுங்க" என்றான் இவனும் கடுப்புடன்.

"அவன் எனக்கு அஞ்சு லட்சம் தரணும். எங்க பரம்பரை சொத்த பிரிச்சப்ப லாஸ்ட் செட்டில்மென்ட் அவன் எனக்கு அஞ்சு லட்சம் தரணும்னு தான் பேசி முடிச்சோம். ஏழு வருஷமா தராம ஏமாத்திட்டு இப்ப போயும் சேர்ந்துட்டான். எனக்கு என் அஞ்சு லட்சத்துக்கு அந்த வீடு தான் ஒரே வழி. நீங்க குறுக்க நிக்கீங்க. போலீஸ்ல போய் கேஸ் ரீஓபன் பண்ணுங்கன்னு சொன்னா கண்டுக்கவே மாட்டேங்குறாங்க. அல்ரெடி நா இங்க வந்து டூ மந்த்ஸ் ஆக போவுது எவ்வளவு நாள் இங்கேயே இருக்குறது நானும்?"

"லுக். இந்த கேஸ்ல லீடே கிடையாது. எல்லாம் சூசைட். ஆதாரமே கிடைக்கல சோ அளவுக்கு மீறி நீங்க காசு செலவழிச்சா வேணும்னா கேஸ் நகரும். அதுக்கு அந்த அஞ்சு லட்சத்தோட போனது போட்டும்னு ஊருக்கு போற வழியப்பாருங்க. அந்த வீடு வாங்கி மூணு வருஷமா வட்டி கட்டல, அதனால அந்த ஃபினான்ஸ் காரங்களும் அத கழிச்சுட்டு தான் விடுவாங்க உங்களுக்கு ஒரு பைசா தேறாது"

"நிஜமாவா? நீங்க பொய் சொல்றதா லலிதா சொல்றாங்க. நீங்க இப்படி சொல்றீங்க நா யாரதான் நம்புறது?" என தலையைப் பிடித்தார் அவர்.

"குட். யாரையும் நம்ப கூடாது. நாங்களாம் உங்க மாமனா மச்சானா? நீங்களே இறங்கி தெரிஞ்சுக்கோங்க. இதோ ஜவகர கூட கூட்டிட்டு போங்க. நீங்களே நேர்ல போய் பேசிப் பாருங்க. உங்க தம்பி ஃபேமிலி அங்க வச்சுருக்க கடன்ன விட மார்கெட் ரேட் அந்த வீட்டுக்கு அதிகமா போகுதுன்னா, வித்துட்டு மிச்சம் தேருற அமௌன்ட்ட வாங்கிட்டு கிளம்புங்க. ஆனா மார்கெட் ரேட்டுக்கு கம்மியா இருந்துச்சுனா, மிச்ச கடன நீங்க கட்டுங்கன்னு உங்கள அவங்க புடிச்சு வச்சுக்கிட்டாங்கனா என்ன கேட்க கூடாது சொல்லிட்டேன்" என்றவன் ஜவகரிடம், "கூட்டிட்டு போய் அந்த ஃபினான்ஸ் ஆபிஸ்ல விடுடா" என எழுந்து கொள்ள,

"ப்ளீஸ் நீங்களே அத எனக்கு விசாரிச்சு சொல்லிடுங்களேன்? எனக்கு யாரையும் நம்ப முடியல" என்றார் அவர். லலிதா, காசு பணம் என்று தான் நிற்கிறாரே அன்றி பேச்சிலும் செயலிலும் எந்த தெளிவும் இல்லை. அதற்கு இவன் இவ்வளவு விவரம் சொல்வதே பரவாயில்லை என்றே அவனிடம் இறங்கி வந்துவிட்டார்.

"உங்களுக்கு அப்படி நாங்க சொன்னாலும் நம்பிக்கை வராதே சார்?" என்றான் ஆயாசமாக.

"அஞ்சு லட்சத்த மட்டும் கிடைக்க வழி பண்ணிட்டீங்கனா நம்பிடுவேன். அதுக்கு மேல வந்தாலும் நீங்களே எடுத்துக்கோங்க எனக்கு வேணாம்"

"ஜவகர், விமல வச்சு இந்த மேட்டர முடிச்சு விடுடா" என்றுவிட்டான். உண்மையிலேயே அவர் அவரின் ஐந்து லட்சங்களுக்காகத்தான் வந்தாரா என தெரியாது வேந்தனுக்கு. நடந்த கொலைகளும் எப்படி நடந்தது என தெரிந்துவிட்டதால், இவரால் எந்த மூலைக்கு சென்றாலும் பவளமல்லிக்கோ, செல்லம்மாளுக்கோ பிரச்சினை கொடுக்க முடியாது. அலைகழிப்பதை தவிர வேறொன்றும் அவருக்கும் கிடைக்காது. அதனாலேயே அனாமத்தாக ஏதோ ஃபினான்ஸ் கம்பெனிக்காரன் எடுத்துக் கொள்ள போவதை இவருக்கு கிடைக்கட்டுமே, நமக்கு அந்த அலைகழிப்பாவது மிச்சம் என்றே இந்த உதவியை செய்கிறான். விமல் அந்த கம்பெனியில் வேலையில் இருப்பவன் தான். அவனே பார்த்து பிரச்சினையை முடித்து விடுவான். இத்தோடு அவர் தொல்லை விட்டால் சரி என கிளப்பி விட்டுவிட்டான்.

மதியம் மூன்று மணியளவில் தான் மீண்டும் வீட்டிற்கு வந்தான். சாமி தாத்தா உறக்கத்தில் இருக்க, உத்தமி மகனை அழைக்க பள்ளிக்கு சென்றிருந்தார். பவளமல்லி அவள் அம்மா வீட்டிலிருந்து வரவில்லை போலும் என நினைத்து கொண்டு அவனறை நுழைய, கட்டிலில் சாய்ந்து அமர்ந்து தூங்கி கொண்டிருந்தாள் அவள். இரவெல்லாம் தூங்காதது அப்படி அமர்ந்தவாக்கில் கண்ணயர்ந்திருக்கிறாள் என புரிய, மெல்ல அவளை தலையணையில் படுக்க வைத்தவன், சென்று மதிய உணவை உண்டு கொண்டிருந்தான்.

பரபரப்பாக வந்த உத்தமி, வெளியே பேசிக் கொள்வதையெல்லாம் பதட்டத்தோடு ஒப்பித்து, "அடுத்து நம்மட்டதேன் வருவாக போல தம்பி. என்னன்னு சமாளிக்க" என கேட்க,

"பாத்துக்கலாம் அத்த. எனக்கு நேத்தே தெரியும். காலைலயே வந்துருக்கணும். பேய் பயம் இருக்கும்ல அதான் சாயங்காலம் வரை யோசிச்சுட்டு முன்னேற்பாட்டோட வருவாங்களா‌ இருக்கும்" என சாதாரணமாகவே கூறினான்.

அடுத்த ஒரு மணி நேரத்தில் கூட்டமாக வந்தவர்கள், படிகாசீயைத் தான் தேடினர். உத்தமியும், பவளமல்லியும் பின் நின்று வேடிக்கை பார்க்க, சாமி தாத்தா தான் வேந்தன் நிற்க படியில் அமர்ந்து கொண்டார். வீட்டின் உள்ளே கூட வர பயந்து வெளியவே நின்று கொண்டனர்.

 
அத்தியாயம் 31

"அப்பாக்கு உடம்பு முடியல ஹாஸ்பிடல்ல சேர்த்திருக்கோம். அம்மா அங்க தான் இருக்காங்க"

"நைட்டு ஆம்புலன்ஸ் வந்தது தெரியும்பா. இந்நேரம் வந்துருப்பாகன்னு நினைச்சோம்"

"இல்ல இன்னும் வரல. ட்ரீட்மெண்ட் போயிட்ருக்கு, எப்ப வருவாங்கன்னும் தெரியாது" என்றான்.

"எங்க பயம் உங்களுக்கும் தெரியும். பேயி இத்தன நாள் ஊருக்கு வெளிலன்னு இருந்த வரை கூட தெரியல. அந்த பேயோட தங்கச்சிய கட்டிகிட்டீக அத்தோட அது கிளம்பிரும்னு பார்த்தா, ஊருக்குள்ள வந்துட்டு, இப்ப பேயோட வாழ முடியுமாங்க? உங்களுக்கு பயமில்லாம கூட இருக்கலாம். எங்களுக்கு பயமா இருக்கு"

"என்ன செய்யலாம்னு நீங்களே சொல்லுங்க" என்றான் அவர்களிடமே.

"நீங்க தான் தம்பி சொல்லணும். என்ன செய்ய போறீங்க? எங்கள விட உங்க வீட்டுக்குள்ள குடியிருக்கு அப்ப பயம் உங்களுக்கு தானே அதிகம் இருக்கணும்" என ஒருவர் சொல்ல, ஆளாளுக்கு தொடர்ந்தனர்.

"இதோ சாமி ஐயா இருக்க போய் தான அது ஊருக்குள்ள வந்து உங்க வீட்டுக்குள்ள இருக்குறதே தெரிஞ்சுருக்கு. அதுமட்டுமில்ல உங்கப்பாக்கு நடக்க வேண்டியது தான் அந்த வாணியக்கா பையன அடிச்சுட்டு போயிட்டுன்னு கூட எங்களுக்கு தோணுது. அது வாக்கப்பட்டு போன வீட்டாளுங்கள தான் விட்டு வைக்கலனா இப்ப அது தங்கச்சி வாழ வந்த உங்க வீட்டாளுங்களையும் என்ன பண்ணுமோ? உங்களுக்காகவும் தான் பேசுறோம் தம்பி"

"இப்படி உங்கள இவரு காப்பாத்திட்டா அந்த பேயி அதோட வெறிய வேறபக்கம் காட்டிட்டு போவும். நாங்க தான அவதி படணும்?"

"நீங்களே ஏதாவது செய்ங்க சாமி ஐயா. நாங்க முதல்லயே உங்கள தேடி வந்தோம். நீங்க கண்டுக்கல. இப்ப உங்க மருமக வீட்டுக்கு பிரச்சினைன்ன உடனே வந்துருக்கீங்க. இப்பவும் அவங்கள மட்டும் காப்பாத்தினா எப்படி?"

"நா பேய் ஓட்றவன் இல்ல. சோவி உருட்ரவன். என்னால எதுவுமே செய்ய முடியாதுன்னு சொன்னா நீங்க நம்பித்தான் ஆகணும். நா உடம்புக்கு முடியலயேன்னு தான் இங்கன இருக்கேன் இல்லனா நானும் கிளம்பி போயிருப்பேன். இப்ப நேத்து கேட்ட சத்தத்துல எனக்குமே பயமா தான் இருக்கு. எதாவது செய்ய முடியுமான்னு நீங்க எல்லாரும் தான் பேசி ஒரு முடிவெடுக்கணும்" என்றார் சாமி தாத்தா. தேன்பாவனி அடித்ததில் இருந்து அவருக்கும் காய்ச்சல் ஒருபக்கம் என்றால் தொடர்ந்து சாப்பிடுவது எல்லாம் கழிவாக வெளியேறி கொண்டே இருந்தது. அதிலேயே அவர் வெகுவாக துவண்டு தான் இருந்தார். மறுபடியும் வாங்க முடியாது என்பதால் யோசித்தே பேசினார்.

"ஆமா நீங்களே என்ன செய்ய முடியும்னு பாருங்க. நானும் விசாரிக்கிறேன்" என்றான் வேந்தன்.

"ஹா ஹா ஹா!" என சிரிப்பு சத்தத்தில் அனைவரும் மிரண்டு ஒருவரை ஒருவர் ஒட்டி நின்று கொண்டு அண்ணாந்து பார்த்தனர். மேலிருந்து தான் சிரிப்பு சத்தம் காதை கிழித்தது. மீண்டும் மீண்டும் சிரிப்பு சத்தம் அதிர மிரண்டனர்.

"பொம்பளைங்கள எச்சையா பயன்படுத்துற ஒவ்வொருத்தரையும் கொல்லுவேன். வீட்டுக்கு வாழவந்த பொண்ணுங்கள வாழவிடாம கொடுமை பண்ணுற ஒவ்வொருத்தரையும் நா வாழவிடாம அழிப்பேன். என்னங்கடா பண்ணுவீங்க?" என எச்சரித்து பின் மீண்டும் மீண்டுமாக சிரித்தாள். அதில் பயந்து நான்கு திசைக்கும் தெறித்து ஓடினர். திரும்பி கூட பார்க்காமல் அவரவர் வீடு நோக்கி ஓடினர்.

அடுத்து என்ன செய்ய என்றே தெரியாமல் ஊரே அமைதியாக இருந்தது. வெளியே வரவும் பயந்து வீட்டினுள் முடங்கினர். நாலைந்து நாட்கள் பொறுத்தனர், அதற்கு மேல் வேலைக்கு சென்றாக வேண்டுமே என்ற நிலை. இந்த முறை செல்லம்மாளை தேடிச்சென்று நின்றனர்.

"நானுந்தான் என்ன பண்ணுவேன்? என் பொண்ணு என் கண்ணுல கூட படலையே" என செய்வதறியாமல் கையை தான் விரித்தார் அவர். உண்மையிலேயே அவருக்கும் தேன்பாவனியை எப்படி சமாளிப்பது என தெரியவில்லை. இவ்வளவு நடந்ததற்கும் அவர் வேந்தன் வீடு செல்ல வேண்டும் என்று மட்டும் நினைக்கவில்லை.

ஊர்மக்கள், அமைதியாக கூட்டமாக வேலைக்கு செல்வதும், இருட்டும் முன் வீட்டில் அடைந்து கொள்வதையும் வழக்கமாக்கினர். கோயில்களில் பூஜைகளை அதிகப் படுத்தினர். முழு நேரமும் கோயில் நடை திறந்து வைக்கப்பட்டது.

வேந்தன், பவளமல்லி இருவரும் தேன்பாவனியிடம் சென்று நின்றும் அவள் கண்டுகொள்ளவே இல்லை. தனது ரூபத்தை கூட அவர்களுக்கு காட்டாது மறைந்தாள். அவளுக்கு காரணத்தை சொல்லவும் மனமில்லை, உலகநாயகனை கொல்லாமல் விடவும் மனமில்லை. அதனாலேயே இவர்கள் முன் வரமறுத்து விட்டாள்.

பதினைந்து நாட்கள் கழித்து மறுபடியும் உலகநாயகன் வீடு வந்தார். ஆனால் பக்கவாதம் முழுமையாக குணமாக ஆறு மாதங்கள் ஆகும் என கூறியே அனுப்பி வைத்தனர். சக்கர நாற்காலியில் வைத்து தான் தள்ளிக்கொண்டு வந்தனர். வீட்டிற்குள் வரவே மாட்டேன் என வாசலில் நின்று கண்ணீர் வடித்தவரை, "பேசாம வாய்யா. இங்க இல்லாம வேற எங்க போக முடியும்?" என படிகாசீ அதட்டியே உள்ளே தள்ளிக்கொண்டு வந்தார்.

தேன்பாவனி என்ன செய்வாளோ என்று எல்லோருக்குமே பயம் தான், வீட்டிலிருந்த தகடுகளைக் கூட சாமி தாத்தா எங்கோ எடுத்துச் சென்று எரித்து சாம்பலாக்கிவிட்டார். உடன் செல்லாத தேன்பாவனி அங்கேயே தங்கி தான் விட்டாள்.

ஆனால் அவர்கள் பயந்தது போல் எதுவுமில்லாமல் வேந்தன் வீடும், ஊரும் அமைதியாக தான் இருந்தது. எதற்காக திடீரென அவ்வாறு நடந்து கொண்டாள், ஏன் இப்போது அமைதியாக இருக்கிறாள் என தெரியாமல் வேந்தனும் பவளமல்லியும் தான் தேன்பாவனியை தொடர்ந்து கொண்டே இருந்தனர். படிகாசீ, செல்லம்மாள் இருவரும் கூட வாயை திறந்து காரணத்தை சொல்ல மறுத்தனர்.

"அப்படி என்ன சொல்ல முடியாத ரகசியமா இருக்கும். எப்படினாலும் இனி தெரியத்தானே போவுது. அப்றமு ஏன் இப்படி மறைச்சு வச்சு மண்ட காய விடுறாங்க" என்றார் அனிருத். அனிருத், உத்தமி, பவளமல்லி, வேந்தன், இவர்கள் நால்வரும் தான் இதில் பெரிய தலை வேதனையை கொண்டு சுற்றியது.

தேன்பாவனியின் அமைதியில் வேந்தனும் பவளமல்லியும் கூட நாட்கள் செல்ல செல்ல இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி இருந்தனர். அதற்கு வேந்தனின் வேலையும் ஒரு காரணம். மற்றைவைகள் எல்லாம் என்ன என்று மண்டைக்குள் ஓடிக்கொண்டே இருந்தாலும், பவளமல்லிக்கு அனைத்திலும் ஆறுதலாக இருந்தவன் வேந்தன் ஒருவனே. அவர்கள் வாழ்க்கையை அனுசரணையுடன் வாழ்ந்து கொண்டிருந்தனர். படிகாசீ யாரிடமும் பேசுவதில்லை. உலகநாயகனையும் ஒதுக்கி தான் வைத்திருந்தார். அவருக்கு ஒரு ஆண் செவிலியர் உதவிக்கு வந்து போக, மற்ற நேரங்களில் அனிருத், வேந்தன் இருவரும் தான் உதவி செய்தனர்.

ஜகதாம்பாளுக்கும் அவள் குடும்பத்திற்கும் கூட விஷயம் எட்டியது. மனோவை முகத்திற்கு நேராகவே திட்டிவிட்டனர். அதனால் அவனும் கிளம்பி வந்திருக்க, ஜகதாம்பாளையும் இந்த முறை கடுமையாக பேசித்தான் அனுப்பி வைத்திருந்தனர். உலகநாயகனை அவர்களும் வந்து பார்த்து விட்டு தான் சென்றனர்.

"பேய் இருக்கோ இல்லையோ பிள்ளையா பக்கத்துல இருக்க வேண்டிய நேரத்துல நிக்கணும். நாளைக்கு உங்களுக்கு பிள்ளை பிறந்து அதுக்கு எதும்னாலும் இப்படிதான் ஓடிருவீங்களா? அதான் நீ பிள்ளையே பெத்துக்க வேணாம்னு இருக்கியா?" என இருவரையும் அவர்கள் பேசியிருக்க, அமைதியாக கிளம்பி வந்துவிட்டனர். ஜகதாம்பாளுக்கு பேய் என்றெல்லாம் நம்பிக்கையே இல்லை. அவள் எப்போதும் போல் சாதாரணமாக இருந்து கொண்டாள்.

ஆனால் அவளின் பெற்றோர் மகள் வாழ சென்ற வீடு என்பதற்காகவே, தேன்பாவனியை விரட்ட பல வழிகளிலும் முயல ஆரம்பித்தனர். ஊர்க்காரர்கள் ஒருபக்கம் என்ன செய்ய முடியும் என தான் திண்டாடி கொண்டு வந்தனர். சாமி தாத்தாவும் அவரால் ஆன முயற்சியை செய்தார்.

அடுத்த அமாவாசை, அடுத்த அமாவாசை என இரண்டு அமாவாசைகள் கழிந்தது. மூன்றாவது அமாவாசையில் மறுபடியும் தனது பேயாட்டத்தை ஆடினாள் தேன்பாவனி.

அவள் ஆங்காரத்தில் இந்த முறை வீட்டினுள் ஒளியாமல் ஊரே கூடியிருந்தது. ஆளாளுக்கு மந்திரித்து வாங்கி வந்திருந்த கயிறுகளும், தாயத்துகளும், கோவில் நடைகள் திறந்திருக்கும் தைரியத்தில் வந்திருந்தனர்.

"மருவத்தூர் ஓம் சக்தி, மகமாயி கருமாரி, உறையூரு வெக்காளி, உஜ்ஜயினி மாகாளி, கொல்லூரு மூகாம்பா, கேதாரம் ஸ்ரீ கௌரி
மாயவரம் அபயாம்பிகா" அந்த நடுசாமத்தில் கோவிலில் கடவுள் துணை வேண்டி பாட்டையும் அலற விட்டனர்.

ஆனால் யாராலும் அவளை கட்டுபடுத்த தான் முடியவில்லை. அந்த பாட்டில் இன்னும் ஆவேசம் கொண்டு தான் சுழற்றி அடித்தாள்.

உலகநாயகனை அவர் வண்டியோடு தூக்கி வீதியில் வீசினாள். அந்தரத்தில் தொங்க விட்டாள். தேனாற்றின் கரைக்கு அவரை பந்தாடி தான் கொண்டுச் சென்றாள்.

வாய் கூட பேச முடியாமல், கத்தி கதறி அழ கூட முடியாது ரத்தம் வடித்தார் உலகநாயகன். ஊரே அவரை காப்பாற்ற முயன்றாலும் காற்றையும் புழுதியையும் கிளப்பி விட்டு விரட்டி அடித்தாள்.

"அக்கா நில்லு. நில்லுக்கா. வயித்து புள்ளகாரியா கேட்குறேன். காரணத்த சொல்லு. எதுக்குன்னு எனக்கு இப்ப தெரியணும். தெரிஞ்சே ஆகணும்" என அந்த காற்றையும் மீறி சென்று தேன்பாவனியை மறித்து நின்றாள்.

வேந்தன், சாமி தாத்தா கூறிய ஒருவரை அழைத்து வர நீலகிரி வர சென்றிருந்தவன் அப்போது தான் ஊருக்குள் வர, அதற்குள் மொத்த ஊரும் தேனாற்றங்கரையில் கூடியிருந்தது.

"காரணம் கண்டிப்பா தெரியணுமா உனக்கு? சொல்லவா? சொன்னாலும் இந்த ஆள காப்பாத்துவியா? சொன்னா என்ன செய்வ மல்லி? உன்னால என்ன செய்ய முடியும்? உயிரோட இருக்க பொண்ணுங்களால ஒன்னுமே செய்ய முடியாதுடி. ஒன்னுமே செய்ய முடியாது. உன்னால மட்டும் முடியுமா?" என வெடித்தாள் தேன்பாவனி.

"அக்கா அக்கா என்னக்கா செய்யணும்? நா என்ன செய்யணும் சொல்லு. நானே செய்றேன். காரணம் தெரியாம நானே கிறுக்காகிடுவேன் போல இருக்குக்கா" என அழுதாள் மல்லி.

அந்நேரம் தான் வேந்தனும் வந்தவன், வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு, "உண்மைய சொன்னப்றம் நீங்க உங்க வேலைய ஆரம்பிங்க" என அழைத்து வந்திருந்த நம்பூதிரிகளிடம் சொல்லிவிட்டு இறங்கி இவளிடம் வந்தான். அவர்களும் வண்டிக்குள் இருந்தே வேடிக்கை பார்க்க துவங்கினர்.

மண்டியிட்டு பவளமல்லி அமர்ந்திருக்க, அவள் முன் கருப்பு வேதாளமாக காற்றில் ஆடும் தேன்பாவனி, அவளுக்கு பின் மொத்த ஊரும் கூடி நின்றது. உலகநாயகன் ஒரு மரத்தடியில் எழமாட்டாமல் கிடந்தார்.

இவனை காணவும், "என்ன வக்கீல் சார் காரணத்த சொல்லிட்டுத்தான் உங்கப்பாவ கொல்லனுன்றா? அவ்வளவு பாசம் போல உங்கமேல?" என நக்கலாக சிரித்தாள்.

"எல்லா கொலைக்கும் காரணம் கேட்டேனே நான். இதுக்கும் சொல்லுங்க தேன்பாவனி. ஒருவேளை நீங்க தப்பா கூட நினைச்சுட்ருக்கலாம். என் அப்பா ஒரு நிரபராதியா கூட இருக்கலாமே?" என்றான் வேண்டுமென்றே.

"என்ன சொன்ன? இந்தாளு செஞ்சது என் கண்ணால பாத்தேன் நான். நா தப்பா நினைச்சு கொல்லுறேனா?" என கோபமாக அவனை நெருங்கி வர,

"அதான் என்ன பாத்தீங்க?"

"அக்கா சொல்லுக்கா" என பவளமல்லி மறுபடியும் அவள் முன் வந்து நின்றாள்.

தேன்பாவனி திரும்பி கூட்டத்தில் அவள் அம்மாவை தேடினாள், அவள் திரும்பவும் மொத்த கூட்டமும் இரண்டடி பின் சென்றது. ஒருவரை ஒருவர் தள்ளிவிட்டு கீழே விழுந்தெழுந்தனர்.

செல்லம்மாள், ஒரு ஓரமாக உத்தமி பிடியில் நிற்க முடியாமல் நின்று அழுது கொண்டிருந்தார்.

தேன்பாவனி, "மன்னிச்சுரும்மா" என அவரிடம் யாசித்தாள்,

திரும்பி உலகநாயகனை முறைத்து, மரத்தோடு ஒட்டி மேலே தூக்கி கிளையில் தொங்கவிட்டவள், "நம்ம அம்மாவ படுக்க கூப்பிட்டான்டி இவன். ஆம்பள இல்லாம தனியா தானே இருக்க. எனக்கும் என் பொண்டாட்டிட்ட ஒன்னும் கிடைக்கல நீ வரியான்னு கேட்டான். இவன என்ன செய்யலாம் சொல்லு. என்ன செய்யனும்னு சொல்லு பாப்பா? அம்மா கைய புடிச்சு இழுத்து, சேலைய உருவி, ச்சி, அத என் கண்ணால பாத்தேனே நான் அப்ப என்னால ஒன்னும் செய்ய முடியலேயே!" என ஆங்காரத்தில் கத்த, மொத்த கூட்டமும் திக்கென நின்றது. செல்லம்மாள் கீழே மடங்கி விழுந்தேவிட்டார். மற்றவர்களுக்கு இதற்காகவா என தோன்றினாலும் அவளுக்கு அவர் அம்மாவாகிற்றே, கொலைவெறி வரத்தானே செய்யும்.

வேந்தன் இறுக கண்ணை மூடி கொள்ள, பவளமல்லி, கை கொண்டு வாயை மூடி அதிர்ந்து நின்று விட்டாள்.

 
அத்தியாயம் 32

அனிருத், உத்தமி, மனோன்மணி, ஜகதாம்பாள் மற்றும் சாமி தாத்தாவும் உட்பட அனைவரும் அதிர்ந்து தான் நின்றனர். உலகநாயகனுக்கு இப்படியும் ஒரு முகமா என நம்ப இயலாமல் நின்றனர். பல வருடங்களாக கூடவே இருக்கும் அவர்களிடம் காட்டிய முகத்திற்கு பின் இப்படியொரு கொடூர காமுக முகமா? என நம்ப முடியாமல் நின்றனர். அவ்வாறெனில் கண்ணெதிரே இருக்கும் பொருளை எடுக்க தெரியாமல் தடுமாறியது போல் இதுவரை இருந்ததெல்லாம் நடிப்பில் சேருமா? எதுவுமே தெரியாதது போல் அப்பாவி முகத்தை வைத்து சொந்த வீட்டினரைக் கூட ஒருவரால் வருட கணக்கில் ஏமாற்ற முடியுமா? நினைக்க நினைக்க ஏமாறிய நெஞ்சங்கள் அதிர்ந்து நிமிர்ந்தது.

"ச்சை இந்த மனுஷனையும் இத்தன நாளா நம்பிட்ருந்துருக்கேனே. என்னைய சொல்லணும். உழைக்கத்தான் தெரியல மனுஷனா இருப்பாரு அக்காவுக்கு உண்மையா இருப்பாருன்னு நினைச்சேனே ச்சை" என தனக்குத் தானே தலையில் அடித்துக் கொண்டார் அனிருத்.

"அக்கா? என்னக்கா இவரு அப்டியா? உனக்குத் தெரியுமா தெரியாதா?" என எரிச்சலாக படிகாசீயையும் உலுக்கியதில் சட்டென்று அவரிடம் திரும்பினாள் தேன்பாவனி.

"யார்ட்ட கேக்குறீங்க நீங்க? உங்க அக்காவையா? உங்க அக்காவும் அதுல கூட்டுன்னு தெரியாதா உங்களுக்கு? புருஷனுக்கு பொம்பள புடிச்சுக் குடுக்குற மானங்கெட்ட வேலை பாத்த ப்ரோக்கரே உங்க அக்காதான்னு தெரியாம அந்தம்மா கிட்டயே கேட்டு நிக்றீங்க?" என எகத்தாளமாக சிரிக்க,

"இல்ல இல்ல அப்படி சொல்லாத. நா அப்படிபட்ட பொம்பள இல்ல, அசிங்கமா அப்படி என்னைய சொல்லாத" என படிகாசீ பொங்கிக் கொண்டு வர,

"நா சொல்றது அசிங்கம்னா நீ செஞ்சது?" என்றாள் தேன்பாவனி உறுமலாக.

"தப்பு தான். நா என்ன மட்டும் யோசிச்சுட்டேன் தப்புதான் அது. மன்னிச்சுரு தாயி. அதுக்காக அந்த ஆளு செஞ்சதுக்கும் எனக்கும் சம்பந்தம் இருக்குன்னு மட்டும் சொல்லாத" என அழுத படிகாசீ, "நீங்க சொல்லுங்க செல்லம்மா, நா அப்படி நினைச்சு செய்யலன்னு உங்க பொண்ணுகிட்ட சொல்லுங்க" என கெஞ்சவே செய்தார்.

"நீதான் காரணமே. நீ ஒழுங்கா இருந்துருந்தா இது இவ்வளவு தூரம் வந்துருக்காதுல்ல? அழுது நடிக்கிறியா?" என மிரட்டினாள் தேன்பாவனி.

"அம்மாடி ஒரு பொம்பளையா நா என்ன நினைச்சேன்னு அன்னைக்கே உன்ட்ட சொன்னேனுல்ல? என்னால வேற எதுவும் செய்ய முடியலம்மா. நம்புமா வேறெந்த காரணமும் கிடையாது, சாக்கடைன்னு ஒதுங்கிகலாம்னு தான சொன்னேன்? வேறெதுவும் செய்ய முடியலையே என்னால?"

"உன்னால முடிஞ்சுருக்கும். ஆனா நீ செய்யல. சாணிய கரைச்சு ஊத்தாம உக்கார வச்சு இன்னைக்கு வர சோறு போட்டுட்டிருக்கியே அந்த தெனவுல அடுத்து அவன் இன்னும் எத்தனபேரு முந்தானைய பிடிச்சு இழுத்தானோ யாருக்கு தெரியும்? அதுக்கு நீ உடந்தைனா அப்ப உன் புருஷனுக்கு ப்ரோக்கரா தான இருந்துருக்க நீ?"

"யாத்தே முருகா! ஐயோ இல்லையே இல்லவே இல்லையே. நா அப்படி இல்லையே‌. எனக்காக என் பிள்ளைகளுக்காகன்னு பார்த்தேனே, அத தவிர அதுக்கு வேற காரணம் இல்லைமா. தயவுசெஞ்சு திரும்பத் திரும்ப அப்படி சொல்லாத. செத்துரலாம் போல இருக்கு. நெஞ்சே வலிக்குது" என தலையிலும் நெஞ்சிலும் அடித்துக் கொண்டு அழுதார் படிகாசீ.

"எங்கம்மாக்கும் அன்னைக்கு இப்படி தான இருந்துருக்கும்? கண்ணால பாத்துட்டு கதறுன என் மனசு என்ன பாடு பட்ருக்கும்? அதே இடத்துல நீயோ இல்ல உனக்கு ஒரு பொண்ணோ இருந்திருந்தா, வாயிலையும் வயித்துலையும் அடிச்சுகிட்டு வந்துனாலும் உன் பசங்கட்ட சொல்லாம இருந்துருப்பியா? இல்ல ஆம்பள பிள்ளைகள பெத்து வச்சுருக்க தைரியத்துல தான் நீயும் உன் புருஷனும் இதெல்லாம் செஞ்சீங்களா?" என கேட்ட கேள்வியில், வேந்தன் இறுகக் கண்ணை மூடித் திறந்தான்.

"நா என்ன சொல்லுவேன்? அந்நேரம் எனக்கு அது தான செய்ய தோணுச்சு. மன்னிச்சுரும்மா. தப்புதான் தப்பு பண்ணிட்டேன் தப்பு பண்ணிட்டேன்" என கன்னத்தில் அடித்துக் கொண்டார்.

"திரும்பி இப்படி பேயா வந்து கேட்கவா போறான்னு நினப்புல இருந்துட்ட இப்ப வேற வழி இல்லாம மன்னிப்புக் கேட்குற. யாருக்கு வேணும் உன் மன்னிப்பு போமா" என்றுவிட்டாள் அலட்சியமாக.

ஊரும் வேடிக்கைப் பார்த்து நிற்க, அனிருத்தும் அக்காமீது இரக்கம் கொள்ள மறுத்து தான் நின்றார். அழும் மனைவியின் தோளைத் தட்டி கொடுத்து தானும் நிதானம் கொண்ட வேந்தன்,

"இதெல்லாம் எப்ப எப்படி நடந்தது தேனு?" என்றான்.

"மன்னிப்பு கேட்குற உங்க அம்மாவையே கேளுங்களேன் வக்கீல் சார்"

"உண்மையா என்ன நடந்ததுன்னு எனக்கு தெரியணும், அதனால நீங்களே சொல்லுங்க" என்றவன் கைக்குள் பம்மிக் கொண்டு நின்றாள் பவளமல்லி, பார்வை மொத்தமும் சுருண்டு நடுரோட்டில் அமர்ந்திருந்த செல்லம்மாள் மேல் தான்.

"எல்லார் முன்னையும் சொன்னா அம்மாவுக்கு கஷ்டமா இருக்கும்லக்கா?" என தேம்பியவாறு கேட்கவும் செய்ய,

"அசிங்கம் பண்ணவங்க தான் அசிங்கபடணும் மல்லி. அத்த தப்பே பண்ணாம ஏன் அசிங்க படணும்? அந்த இடத்துல நின்னது மனுஷன்னு நினைச்சது எப்படி தப்பாகும்? ஒரு வெறி நாய் அவங்க கண்ணுக்கு மனுஷனா தெரிஞ்சதுல அவங்க தப்பு எதுவும் இல்லையே? அப்ப அவங்க அசிங்கபடவே கூடாது. மனுஷ வேஷத்துல வெளில ஒரு முகம் உள்ள ஒரு முகம்னு இருக்குற அந்த வெறிநாயிங்க தான் அசிங்கப்படணும்" என்றான் அருவருப்பான பார்வையை உலகநாயகன் மீது செலுத்தியவாறு.

உலகநாயகன், அங்கு நடக்கும் எதையும் உணரும் நிலையில் இல்லை. அதுவரை வாங்கிய அடியால் வலி தாங்க முடியாமல், தலைகீழாக தொங்கிக் கொண்டிருந்த நிலையில், சீக்கிரம் தன் உயிர் பிரிந்து விட்டால் போதும் என இறைவனிடம் மன்றாடிக் கொண்டிருந்தார்.

"நீ சொல்லு புள்ள. இதெல்லாம் வேந்தனுக்கு முதல் தடவ மல்லிய கல்யாணம் பேசுறதுக்கு முன்னவே நடந்ததா?" என்றார் அனிருத் எரிச்சலுடன்.

"இருக்காது மாமா! முதல்ல நடந்த பேச்சுவார்த்தை நின்னதுக்கு அப்றம் தேன்பாவனி சாகுறதுக்கு முன்ன நடந்து முடிஞ்சுருக்கு" என்றான் வேந்தன் அழுத்தமாக.

தேன்பாவனியின் மாமனாரும், உலகநாயகனும் செல்லம்மாளை போன்று தனித்திருக்கும் பெண்களிடமும், விவரம் அறியாத சிறு குழந்தைகளிடமும் தங்களது இச்சையை பேச்சாகவோ, தொட்டு தடவியோ தீர்த்துக் கொண்டிருந்தனர். தனித்திருக்கும் பெண்கள் வெளியே சொல்லப்பயப்படுவர், சிறுபிள்ளைகளுக்கோ நடப்பதே என்ன என்று தெரியாது, இதை வைத்து தான் அந்த கிழட்டு உருவங்கள் தங்களது அசிங்கமான ரூபத்தை மறைத்துக் கொண்டிருந்தனர்.

செல்லம்மாள், தேன்பாவனி மாமனாரின் தப்பானப் பார்வையை முதலிலேயே அறிந்திருக்க, தேன்பாவனியின் வீடிருக்கும் திசைக்கே செல்லமாட்டார். ஒன்றிரண்டு சமயங்கள் விஷேசம் என செல்ல வேண்டியது வந்தபோது கூட, ஐந்து பத்து நிமிடங்கள் நின்றுவிட்டு வேலையையும், மல்லியையும் காரணம் காட்டி உடனே கிளம்பிவிடுவார். கிட்டத்தட்ட யாரும் அறியாமல் உள்ளுக்குள் ஒரு பயத்தோடு ஓடி ஒழிந்தார் என்று தான் சொல்லவேண்டும். இதுபோல் அவர் பல ஆட்களின் பார்வையை ஒதுக்கிக் கடந்து தான் வாழ்ந்து வந்திருக்கின்றார். மகளின் வாழ்க்கையை அடமானம் வைத்தாகிற்று இனி அதில் பின்வாங்கவும் முடியாது என்பதால் அது அவரின் மனப்போராட்டமாகவே உள் தங்கிவிட்டிருந்தது. தேன்பாவனி மாமனார் பார்வையிலிருந்து ஒதுங்கி இருக்க முயன்ற முயற்சியில், அருகில் வக்கிர பார்வையுடன் இருந்த உலகநாயகனை கவனிக்கத் தவறித்தான் போனார் செல்லம்மாள்.

அதனாலேயே, தேன்பாவனி முதன் முதலில் பவளமல்லிக்கு உலகநாயகனின் மகனைக் கொண்டு நிறுத்தியபோது அவருக்கு ஏற்க முடிந்தது.

அன்று நடந்தது,

தேன்பாவனிக்கும், அவள் மாமனார் குணம் தெரியாது. அவளிடம், அவ்வளவு நல்லபடியாக தான் அவரின் பேச்சிருக்கும். அவளது பிரச்சினை எல்லாம் அவளின் மாமியாரோடும், அவளை கட்டிக்கொண்டவனோடும் தான்.

தங்கைக்கு நல்வாழ்வை அமைத்து தரும் எண்ணத்தில் தான் அவளுக்கு வேந்தனை மணமகனாக கொண்டு நிறுத்தினாள். வேந்தன் வக்கீல் என்பதால், அவன்மீதும் அவன் குடும்பத்தின் மீதும் தனி மரியாதையும் பயமும் மொத்த ஊருக்கும் இருந்தது தெரிந்ததாலேயே, அவன்தான் இனி தன் வீட்டைக் காக்கும் பிள்ளை என நம்பி அந்த சம்பந்தத்தில் முடிவாக இருந்தாள்.

ஆனால் அதை கலைக்க, அவள் வாக்கப்பட்டுச் சென்ற குடும்பமே சதி செய்தது, அத்தனை பேரையும் தாண்டிக் கொண்டு அதை நடத்திக்கொள்ளும் திறமை, செல்லம்மாள், பவளமல்லி, தேன்பாவனி மூவருக்கும் இல்லை என்பது பாவத்தின் உச்சம் தான்.

பவளமல்லியை, வேந்தன் குடும்பத்தினர் பெண்பார்க்க வந்த நேரத்தில், மரியாதை தரவில்லை என பிரச்சினை செய்து அதை பெரிதாக்கி, மீண்டும் அந்த சம்பந்தத்தை வளரவிடாமல் செய்திருந்த ஒரு வாரம் கழித்து, தேன்பாவனி வீட்டில் யாரும் இல்லாத நேரம், உலகநாயகனும், தேன்பாவனியின் மாமனாரும் மட்டும் அமர்ந்து பேசியபடி இருந்த நேரத்தில், செல்லம்மாள் அங்கு சென்றார்.

தேன்பாவனி தான், "ம்மா நீ கிளம்பி வா, நா தெரு முக்குல தான் நிக்கேன், அந்த படிகாசீ அத்தைய கோவிலுக்கு கூட்டிட்டு வரச் சொல்லி வேம்பு அத்தைட்ட சொல்லிருக்கேன். அவுக கூட்டிட்டு வந்துருவாக. நாம தனியா ஒருக்கா பேசி சமாதானம் பேசிட்டு வருவோம். என் வீட்டாளுங்கட்ட கோவில் போறதா தான் சொல்லிட்டு வந்துருக்கேன். நீ வா" என சொல்லியதால் தான் கிளம்பிச் சென்றார். தெரு‌முனையில் மகளை காணவில்லை என்றதும், வீட்டிலிருந்து கிளம்பவில்லை போல என்றெண்ணி தான் தேன்பாவனியின் வீட்டிற்கே நேராக அவர் சென்றதும், ஆனால் தேன்பாவனி சற்று தள்ளியிருந்த வேம்பு அத்தை வீட்டில் தான் தகவலை சொல்லிவிட்டு வரச் சென்றிருந்தாள். அங்கு அவள் பேசி நின்றதில் சற்று தாமதமாகியிருக்க, செல்லம்மாள் அவள் வீட்டினுள் நுழைந்திருந்தார்.

அவள் மாமனாரைக் கண்டதும், "மகள தேடித்தான் வந்தேன். கோவில்ல பாத்துக்குறேன். அவள கோவிலுக்கு வரச்‌சொல்லிடுங்க" என உடனே கிளம்பத்தான் பார்த்தார். அந்த பேச்சுவார்த்தை கூட அங்கு உலகநாயகனும் இருப்பதால் மட்டுமே, துணைக்கு ஒருவர் இருக்கும் தைரியத்தில் தான் மரியாதையும் குடுத்து அந்த ரெண்டு வரிகளைக் கூறினார்.

"என்ன வந்ததும் கால்ல வெண்ணிய ஊத்தனாதாட்டம் நிக்கீக. கொஞ்சம் நேரம் பேசிட்ருந்துட்டு போலாம்ல?" என பேச்சை வளர்த்தார் உலகநாயகன்.

செல்லம்மாளுக்கு உண்மையில் பதில் சொல்ல வரவில்லை, "அன்னைக்கு என்னென்னவோ நடந்துருச்சு எதுவும் தப்பா நினைக்காதீங்க" என சமாளிக்கக் கூற,

"என் பையனும் பொண்டாட்டியுந்தேன் எல்லாத்துக்கும் காரணம் நீ எதுக்கு மன்னிப்பு கேட்குற செல்லம்மா?" என்றார் தேன்பாவனியின் மாமனார்.

"அப்படியா சொல்றீங்க?" என்ற உலகநாயகன் பேச்சை வளர்த்து எழுந்து செல்லம்மாள் அருகில் வரவும் தான் செல்லம்மாள் சுதாரித்தார்.

"என் வீட்ல யாரும் இல்ல உலகு. இதவிட்டா வாய்ப்பு மறுபடியும் அமையுமோ அமையாதோ?" என அவர் சொல்லவும்,

"வீட்ல தனியாவே வருச கணக்கா தூங்குதீகளே தூக்கம் எப்டி வருது உங்களுக்கு? எனக்குலாம் வரவே மாட்டேங்குது. உங்களுக்கு புருஷன் இல்ல எனக்கு பொண்டாட்டின்னு இருந்தும் பிரயோசனம் இல்ல. நானே உங்கட்ட எப்படா நம்ம காரியமா பேசலாம்ன்னு இருந்தேன். பார்த்தா என் மகனுக்கு உன் பொண்ணக் குடுக்க ரெடியாவுறா உன் மூத்த பொண்ணு. நம்ம முறை கெட்டு போயிடாது? இனினாலும் பிள்ளைகள விவரம் சொல்லி வளர்க்கபாரு செல்லம்" என்ற உலகநாயகன் செல்லம்மாள் கையைப் பிடித்த நேரம், அவர் பிய்த்துக் கொண்டு ஓட முயல, சேலையில் கை வைத்துவிட்டார்.

அந்நேரத்தில் தான் தேன்பாவனி, பையை எடுத்து செல்ல மீண்டும் வந்ததும் அந்த அக்கிரமத்தை பார்த்ததும்.

"விடுங்க என் அம்மாவ" என ஓடிவந்த வேகத்தில் அன்னையை அணைத்திருந்த உலகநாயகனை பிடித்து தள்ளியும் விட்டாள். இரண்டு காமுகர்களும் தேன்பாவனியைக் கண்டதும் நடுங்கித்தான் விட்டனர். எதிர்க்க ஆளில்லாத இடத்தில் தானே வீரத்தை காட்டி பழக்கம், இது முதல் முறை என்பதால் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து திருதிருவென விழித்திருந்த நேரத்தில், "போயிடலாம் தேனு. பயமா இருக்கு. போயிடலாமா?" என செல்லம்மாள் நடுங்கிக் கொண்டு கெஞ்ச, அவரை அணைத்து பிடித்து வெளியே நடந்துவிட்டாள் தேன்பாவனி. அவளுக்கும் உள்ளுக்குள் அவ்வளவு நடுக்கம், பயம். அவர்களை திட்ட வேண்டும், அடிக்க வேண்டும் என்ற எதுவும் தோன்றாமல் அம்மாவை இறுக்கிப் பிடித்துக் கொண்டு வாசலை நோக்கி நடக்க,

"இதை வெளில சொன்னா என்ன நடக்கும்னு தெரியும்ல? குடும்பத்தோட உருத்தெரியாம அழிச்சுருவோம். நீதான் எங்கள தேடி வந்தன்னு சொல்லுவோம். ஏன்னா நீயா தான் இப்ப வந்து நின்ன? அப்றம் நீயுந்தான் மருமகளே, உன் புருஷனும், என் பொண்டாட்டியும் யார் பேச்ச நம்புவாங்கன்னு உனக்கே தெரியும் புத்தியோட பொழைச்சுக்கோ" என உள்ளுக்குள் பயமிருந்தாலும், பெண்கள் தானே என தைரியமாக மிரட்டித்தான் அனுப்பினார் தேன்பாவனி மாமனார்.

"வெளில சொன்னா என்ன செய்ய?" என்ற உலகநாயகனின் கேள்விக்கு, தேன்பாவனி மாமனார், "சொல்ல மாட்டாளுங்க" என தான் கூறியிருந்தார்.

வெளியே வந்து இருவரும் வீடு வந்து சேரும் வரை அவ்வளவு அமைதி, பவளமல்லியும் வேலைக்கு சென்றிருந்ததால், வீட்டிற்குள் நுழைந்ததும் ஒருவரை ஒருவர் கட்டிக் கொண்டு அப்படி ஒரு அழுகை அழுது தீர்த்தனர்.

 
அத்தியாயம் 33

"நான்லாம் வாழவே கூடாதுடி தேனு. எனக்கு கொஞ்சமா பூச்சி மருந்து வாங்கி தர்றியா குடிச்சுட்டு செத்து போயிடுறேன். பாப்பாவ மட்டும் எதாவது நல்ல பையனா பாத்து கட்டி குடுத்துடுடி. அந்த வீடு வேணாம். வேணவே வேணாம். சூதுவாது தெரியாது அவளுக்கும். கண்ணுக்கு எதுக்க இருந்து அவேன் எங்க பாக்காம்னு தெரியாம ஏமாந்து நிப்பா. நல்ல பையனா எங்க போயி எப்படிடி தேடி கண்டுபிடிக்க? எல்லாரும் நடிக்குறாங்களேடி தேனு" என புலம்பி, தேம்பி அழுதவர், இன்றும் தேன்பாவனி அன்று நடந்ததை கூறக் கூறக் கூனிக்குறுகி சத்தம்போட்டு அழ, வேந்தன் கைக்குள் நின்ற பவளமல்லியும், அழுகையோடு ஓடிச்சென்று அம்மாவைக் கட்டிக்கொண்டு அழுதாள். தேன்பாவனியும் இன்று முயன்று அவர்கள் இருவரையும் அணைத்துக் கொண்டு அழுதாள்.

அங்கிருந்த அநேகம் பேர் அந்த பெண்களின் அழுகையைக் கண்டு தங்களின் கலங்கும் கண்களையும் ஒத்தி எடுத்துக் கொண்டனர். உத்தமியும் ஆறுதலாக அவர்களை அணைத்து அழுது தான் நின்றார். ஜகதாம்பாள், மனோன்மணி, அனிருத், மூவரும் கூட துக்கத்தை அடக்கிக் கொண்டு நின்றனர்.

"என்ன ஜென்மம் நீயெல்லாம். ச்சி. பிள்ளைக்கு பால் குடுக்கும் போதுலாம். ரூமுக்குள்ள வந்துட்டு வந்துட்டு மாத்தி வந்துட்டேனோன்னு ஒன்னுமே தெரியாத மாதிரி தாங்கி நடந்து போவியே உன்னலாம் நம்பி சோறு வச்சேனே. இப்ப நினைச்சா நீ வேணும்னு வந்து வந்து போயிருக்கன்னு நினைக்க நினைக்க அருவருப்பா இருக்கே. உசுரோட கொளுத்தி விடணும் இந்த மாதிரி ஆளுங்களை எல்லாம்" என உத்தமி கொலைவெறியோடு எழுந்து வந்து மண்ணை வாரித் தூத்தினார்.

"பொம்பளைங்கனா அவ்வளவு இளக்காரமா உங்களுக்கு? என்கிட்டலாம் வாலாட்டிருக்கணும் நீ. அப்றம் தெரிஞ்சுக்கும் பொம்பளனா யாருன்னு" என ஜகதாம்பாள் வெறுப்புடன் கூற,

"இது தெரிஞ்சுமாக்கா நீ வேடிக்கைப் பார்த்துட்ருந்த?" என்றார் அனிருத். அவருக்கு பேச்செல்லாம் அக்காவிடம் மட்டுமே, அக்கா கணவர் முகத்தைப் பார்ப்பதையும் வெறுத்தார் அவர்.

"வேடிக்கைப் பார்த்தாங்களா? அடுத்து வாய்ப்பு கிடைச்சுட கூடாதுன்னு எனக்கு மல்லிய பேசவே மாட்டேன்னு நின்னு அவங்க வாழ்க்கைய காப்பாத்திக்க பாத்துருக்காங்களே மாமா. அது சாதனை இல்லையா?" என்றான் வேந்தன் கோவத்தின் கடுமையில்.

"தேனு வந்து உன்ட்ட முழுசா சொல்லலயாக்கா?" என்றார் அப்போதும் அனிருத்.

"சொல்லலையா?" என மீண்டும் கொதித்து எழுந்தாள் தேன்பாவனி.

"அன்னைக்கு என் அம்மா அழுத அழுகைக்கு அங்கேயே இருந்து, பவளமல்லிய காரணம் காட்டி தேத்திட்டு, நேரா இந்தம்மாட்ட தான வந்து நின்னேன்? இல்லம்பியாம்மா நீ?" என படிகாசீயை நெருங்கி அதட்டவும், பயத்தில் தலையை, 'மாட்டேன்' என வேகமாக அசைத்தார்.

"என் மாமியார் ஒரு கொடுமைகாரின்னு தான உன்ட்ட வந்து நின்னேன். உன் புருஷன் இப்படிலாம் பண்ணிட்டான்னு சொன்னதுக்கு. என்னால நம்பவே முடியலேயேன்னு கைய விரிக்கல நீ? அப்படியும் அவர என் அம்மாட்ட மன்னிப்பு கேட்க சொல்லுங்க, இல்லனா போலீஸ்ட்ட போவேன்னு சொன்னதுக்கு, 'என்னால எதுவுமே செய்ய முடியாது நானே தெண்டமா ஒரு ஓரமா இருந்துட்டு போட்டும்னு தான் வச்சு பாத்துட்ருக்கேன். இத வெளில சொன்னா பொம்பளைங்கள நமக்கு தான் அசிங்கம். நானும் உன் அம்மாவும் தான் அசிங்கம் தாங்காம சாகணும் அந்த ஆளு அவன் பாட்டுக்கு தான் இருப்பான். என்னால முடிஞ்ச ஒன்னு இனி அவரு உன் அம்மா பக்கமே வராம பாத்துக்குறேன். உண்மையா சொல்றேன், இது வெளில தெரிஞ்சா நாந்தான் தூக்க மாத்திரைய தின்னுட்டு சாகணும்'னு என்னைய மறைமுகமா மிரட்டி அனுப்பல நீ?" என ஆவேசமாக கேட்க,

"சத்தியமா நா மிரட்ட அப்படி சொல்லல தேனு. இதுல அவமானம்னு ஒன்னு வந்தா எனக்கு தான். என்னைய தான் எல்லாம் கேள்வி கேப்பாங்க நாந்தான் அசிங்கப் படணும். அவன் எதுக்கும் அசைஞ்சு குடுக்க மாட்டான்மா நாசமத்து போனவன்" என நெஞ்சில் அடித்துக் கொண்டு அழுதார்.

இதில் தேன்பாவனியே அறியாத ஒன்று, படிகாசீயிடம் விஷயத்தை கூறிவிட்டதால், கையில் கிடைத்த பொருட்களை எல்லாம் எடுத்து விசிறி அடித்து உலகநாயகனை திட்டி தன் ஆதங்கத்தை தீர்த்துக் கொண்டார், அதன் பிறகு தான் உலகநாயகன் எதை கேட்டாலும் செய்யமாட்டார், சாப்பாடு, தண்ணீர் கூட உத்தமி எடுத்து தரவேண்டும் இல்லையேல் அவராக வைத்து உண்டு கொள்ள வேண்டும். ஆனால் அதற்கும் கூட கவலைபடாமல் அவராக எடுத்துப் போட்டு உண்பதும் உறங்குவதும் என தான் இருந்தார். தேன்பாவனி மாமனாரிடம், "விஷயம் என் பொண்டாட்டி காதுக்கு வந்துருச்சு, எப்ப வேணா எனக்கு சோத்துல விஷம் வச்சுருவா. ஆனா அதுக்கு முன்ன உன் மருமவள எதாவது செய்யணும்" என பேசியிருக்க, அது பல்வேறு திட்டமாகி தான் கொலையில் முடிந்திருந்தது. அதில் இன்னும் தெனாவெட்டாக திரிந்த உலகநாயகன், தேன்பாவனி மீண்டு வந்துவிட்டாள் அவள் குடும்பத்தினரை மொத்தமாக கருவறுத்துவிட்டாள் என தெரிந்தபின்னர் தான் வீட்டினுள் மொத்தமாக முடங்கி இருந்து கொண்டதும். இது யாரும் அறியாமல் தொங்கிக் கொண்டிருக்கும் உலகநாயகனோடு அடங்கி போன விஷயமாகி போனது.

"எங்கிட்ட சொல்லிருக்கலாம்லக்கா? ஏன்க்கா இப்படி பண்ணிட்ட?" என அனிருத் ஆயாசமாக கேட்க,

"உங்கள்ட்டயா? நீங்க அந்த வீட்ல ஒரு செல்லா காசு தெரியுமா? பாச பயிற வளர்த்துட்ருக்கீங்களே, உங்க மூத்த மருமகன் அப்பன் சரியில்லாதப்பவும் தன்ன இன்னொரு அப்பனா இருந்து தாங்கின தாய்மாமனுக்கு துரோகம் பண்றோம்னு தெரிஞ்சே தப்பு செய்ற அந்த உலகநாயகனோட ரத்தம் இதோ அடுத்து ரெடியா நிக்குது" என மனோன்மணியைக் காட்டினாள், "அதுவும் உங்க அக்காவுக்கு தெரியும், ஆனா உங்கட்ட சொல்லல ஏன் தெரியுமா, உங்க பிள்ளைக்கு நீங்க அடுத்து பிச்சை எடுக்கலாம் தப்பில்ல. அவங்க ஏன் சேர்க்கணும்? அவங்க பிள்ளை எப்படியோ நீங்க வளர்த்துவிட்ட உடம்ப இன்னும் உங்கள சுரண்டியே பேணிக்கட்டும்ன்ற நல்ல எண்ணம் தான். அப்படிப்பட்ட உங்க அக்காவ இன்னும் எத்தனை நாளைக்கு நம்ப போறீங்க?" என கேட்டதில், மனோன்மணியை ஜகதாம்பாள் முறைத்த முறைப்பில், அவன் குனிந்து கொண்டான். படிகாசீயும் மடிந்து அமர்ந்துவிட்டார்.

ஜகதாம்பாளையும் விடவில்லை அவள், "நீ ஏன்மா அவன முறைக்குற. நா நல்ல வாழ்க்கைய வாழ ஆசைப்பட்டேன் ஆனா என்னால வாழ முடியல. உனக்கு அமைஞ்சுருக்கு ஆனா உனக்கு வாழ தெரியல. புரிஞ்சா பொழைச்சுக்கோ!" என்றுவிட்டு மீண்டும் வந்து வேந்தன் முன் நின்றாள்.

"இப்ப சொல்லுங்க வக்கீல் சார் உங்கப்பாவ என்ன செய்யட்டும்? கேஸ் போடுவீங்கன்னு பயந்து இத கேக்கல" என நக்கலாக சிரித்தவள், "உங்க நேர்மைய தெரிஞ்சுக்க கேட்கிறேன். என் தங்கச்சி உண்மையாவே நல்லவன் கைல தான் இருக்கான்ற திருப்தி கிடைக்கும்ல எனக்கு‌‌. சொல்லுங்க நா என்ன செய்யட்டும்?" என அவனை காற்றாக சுற்றிச் சுழன்று வந்தாள். ஆங்காரம் எடுத்து சிரித்தாள். அனைத்தையும் அனைவரின் முன் கொட்டிவிட்ட பாரம் இறங்கி ஆர்ப்பரித்து சிரித்தாள்.

"சொல்லுங்க வக்கீல் சார்!" என அவள் உறுமலில் ஊரே திடுக்கிட்டு அடங்கியது.

"உங்க நியாயம் என்னவோ நீங்க அதையே செய்யலாம் தேனு" என்றான் பொறுமையாக.

"அப்ப அங்க அழைச்சுட்டு வந்து உக்கார வச்சுருக்கியே அவங்களுக்கு வேலை தரலையா?" என அவன் ஜிப்ஸியைக் கை காட்டி கேட்டு சிரித்தாள்.

"அது உங்க ஆத்மா சாந்தி அடைய வேண்டி தான். உங்க கோவம் தீர்ந்தப்றம் தான் அவங்க இறங்கி வருவாங்க" என்றான் திடமாக.

"என்ன தம்பி இப்படி சொல்லுறீங்க. தப்புதான் பண்ணிட்டாரு. அதுக்காக கண்ணு முன்ன ஒரு மனுஷன் பேயவிட்டு கொல்லுங்கன்னு பார்த்துட்டு நிக்க முடியுமா?" என அன்று சாமி தாத்தா கேட்டதை இன்று அவரே அமைதியாக நிற்க ஊராரில் ஒருவர் கேட்டார்.

"எவேன் அவன்?" என படீரென்று திரும்பினாள், "ஏன் தப்பு பண்ணா மன்னிப்பு கேட்டா மன்னிச்சு விட்றணுமா? ஏன் அவனுக்கு மட்டுந்தான் வலியா எங்களுக்கு வலிச்சது வலி இல்லையா? அந்த வலிய நீ எடுத்துக்கப் போறியா?" என தேன்பாவனி அவரிடம் எகிறிக் கொண்டு சென்றதில் திரண்டிருந்த மொத்த ஊரும் பயந்து பின் சென்றது.

கண்ணீரைத் துடைத்துக் கொண்டு, கூட்டத்தை விலக்கி முன் வந்து, "அந்த ஆளு தப்பு செஞ்சான் கொல்ல போற, உன் வீட்டாளுங்க தப்பு செஞ்சாங்க கொன்னு குவிச்சுட்ட. என் புள்ள என்ன செஞ்சான்? குடிப்பான். அவன எப்படியும் நா திருத்திருப்பேன் ஏன் கொன்னு எனக்கு பிள்ளை இல்லாம ஆக்கின?" என கோவமாக நின்றார் அந்த நான்காம் வீட்டு வாணியக்கா.

"ஹா ஹா ஹா! திருத்துவியா? நீயா?கிழிச்ச! உன் அருமந்தபுத்தரன் என்ன செஞ்சான் தெரியுமா? அப்பன பெத்த ஆத்தான்னு நினைக்காம உன் மாமியார் குளிக்குறத ஒளிஞ்சு நின்னு பாக்கான். இவன திருத்த முடியுமா உன்னால? இன்னைக்கு பார்த்தான். பாக்க மட்டும் செஞ்சான். நாளைக்கு?" என உறுமியவள், "நீ என்ன செய்வன்னு நா சொல்லவா?அவனத் திருத்த என்னைய மாதிரி எதுத்து கேட்க ஆளில்லாத வீட்ல இருந்து பொண்ணெடுத்துட்டு வந்து அவனோட மல்லுக்கட்ட விட்டு வேடிக்கை வேணா பாத்துட்டு நிப்ப. ஆனா ஆசையா வாழ வந்த பொண்ணு வாழ்க்கைய தொலைச்சுட்டு அனாதையா நிக்கும். நீயும் உன் தேவைக்கு மாமியார் கொடுமை பண்ணி உன் கோவத்த அந்த பொண்ணு மேல தீர்த்துப்ப அப்படிதான? இனி கொன்னு குவிச்சுருவேன் ஒவ்வொருதரையும்" என மீண்டும் மூர்க்கமாக ஆவேசமானாள்.

காற்றாக வானத்தில் சுழன்றடிக்கத் துவங்கினாள், "நா வாழப்போன வீட்டாளுங்கள இத்தினி சத்தம் இல்லாம முடிச்சுவிட்ட நானு, இந்த கிழவன எதுக்கு இப்படி ஊர்மத்தியில தூக்கிப் போட்டு மிதிக்கிறேன்? யாருக்கும் தெரியலையா? இனி இந்த ஊர்ல இருக்க ஒருத்தனுக்கும் அடுத்த வீட்டுப் பொண்ணத் தொட ஆசை வரக்கூடாது. மீறி வந்தா இப்படி தொங்கவிட்டுக் கொல்லுவேன் புரியுதா? புரியலனா இனி புரிய வைப்பேன். இவதான் இவன கொன்னுட்டா போயிருவாளேன்னு நினைப்போ? ஹா‌ஹாஹா! போமாட்டேன். நிரந்தரமா தங்க தான் வந்துருக்கேன்!" என்றதும் மொத்த ஊரும் அதிர்ந்து நெஞ்சில் கைவைத்து விட்டது.

"மூணு அமாவாசை விரதம் இருந்து வாங்கின வரம் என்ன தெரியுமா? இனி இந்த தேனாறின் காவல் தெய்வம் நான். இந்த தேனாற்றங்கரை தான் என் இருப்பிடம். என்ன தாண்டி கெட்ட எண்ணத்தோட எவனும் என் ஊருக்குள்ள வரவும் முடியாது, ஊருக்குள்ள உசுரோட நடமாடவும் முடியாது. நா விடமாட்டேன். என் அம்மா ஒருநாளும் நிம்மதியா தூங்கினதில்ல தூங்கவிடல சில வக்கிரங்கள். அப்பனா ஒரு ஆண் துணை தேவைப்படுது, அடுத்து அண்ணனா, தம்பியா ஒரு ஆண் துணை தேவைப்படுது, அதில்லனா புருஷனா ஒரு ஆண் துணை தேவைப்படுது, அதுவும் போச்சுன்னா பிள்ளையா ஒரு ஆண் துணை தேவைப்படுதே! இப்படியே இன்னும் எத்தனை காலம் இருக்க? இந்த சமூகத்தில் ஒரு பொண்ணு, வயசு பாரபட்சம் இல்லாம, நிம்மதியா வாழவும் நீங்க தான் தேவையா இருக்கீங்க, நிம்மதி இல்லாம வாழவும் நீங்க தான் காரணமா இருக்கீங்க. ஆனா இனி என் அம்மா நிம்மதியா தூங்க நா பொண்ணா இங்கன காவல் நிப்பேன். இங்க அப்படி பயந்து பயந்து வாழுற ஒவ்வொரு பெண்ணுக்கும் இங்கேயே எப்ப வந்தாலும் அரவணைச்சுக்க நா நிப்பேன்" என்றவள் அத்தனை பேரும் பார்க்கவே உலகநாயகனை இழுத்து காலடியில் நசுக்கி, தன் காலடியில் மண்ணில் புதைத்து, கருப்பு புகையிலிருந்து உருவமாகி, செல்லம்மாளையும், பவளமல்லியையும் பார்த்தவாறே கருப்பு சிலையாக உருவெடுத்து நின்றாள்.

மின்னல் வெட்டியது, மரங்கள் பேயாட்டம் ஆடி அவளை அரவணைத்து நின்று பூக்களையும் இலைகளையும் தூவி ஆதரிக்க, மழை சாரலாக உருவெடுத்து அவளை குளிர்வித்தது. பெரும் சூறாவளிகாற்றடித்து ஓய்ந்தது போலிருந்தது. பயமோ, சந்தோஷமோ, பக்தியோ, ஆளுக்கு ஏதோவொரு காரணத்தினால் தன்னைப் போல் அனைவரின் கையும் அவளை வணங்க எழுந்து நின்றது.

வேந்தன், ஒரு பெருமூச்சுடன் சென்று, காரிலிருந்த அந்த நம்பூதிரிகளை அழைத்துப் பேசினான், "தெய்வமாகிவிட்ட பொண்ணுக்கு இனி பூஜை தான் செய்ய முடியும். காரியம் செய்ய முடியாது" என சிரிப்புடன் இறங்கி வந்து, அவளுக்கு என்று கொண்டு வந்த அனைத்து வினைப் பொருட்களையும் அவள் முன் பரப்பி வைத்து, சிலையாக நின்றவளின் பாதத்தில் கொண்டு வந்திருந்த மாலையை வைத்து வணங்கி கிளம்பிச் சென்றனர்.

தேன்பாவனி இறப்பிற்கு பின் பல காரணங்கள், அவள் மாமியாரின் சந்தேக குணம், அவள் கணவனின் அகந்தை குணம், அவனை மட்டம் தட்டவே பவளமல்லிக்கு வேந்தனை மணமகனாக்க முயல்கிறாள் என்ற எண்ணம், மாமனாருக்கு அவரின் காம கொடுர முகம் அவளுக்கு தெரிந்து விட்ட காரணம், இவ்வாறு எல்லாம் ஒன்றாக சேர அன்று அவள் மற்ற நாட்களை விட கொடுரமாக தாக்கப்பட்டாள். அவர்களின் மூர்க்கம் அவள் உயிரையே பறித்துவிட்டிருந்தது. அதற்கே பலிவாங்கினாள். இதோ இன்று தன்னை போன்ற தன் அம்மாவை போன்ற பெண்களுக்காக காவல் நிற்க ஆயத்தமாகிவிட்டாள்.

தேனாற்றங்கரையில் அவள்! காவல் தெய்வமாக நின்று ஆசிர்வதிக்க துவங்கினாள்.

 
அத்தியாயம் 34

தகப்பனாக இல்லாவிட்டாலும் தகப்பன் என இருந்த ஒருவரின் துர்மரணம் அது என்பதால், நம்பூதிரிகளிடம் அதற்கு எதுவும் செய்ய வேண்டுமா எனக் கேட்டான் வேந்தன்.

"தயவுசெஞ்சு எதுவுமே செஞ்சிடாதீங்க. இது துர்மரணம் கிடையாது, வதம். ஒரு அரக்கனை வதம் செஞ்சு அந்த ஆத்மாவ தெய்வமா போன அந்தப் பொண்ணு கொண்டுப் போயிருச்சு. இனி அத தோண்டி எடுக்க நீங்க முயற்சிக்காதீங்க. உங்களுக்கு உங்க அப்பா மேல பாசத்துல எதாவது செய்யணும்னு தோணினா கோவில்ல அந்தப் பொண்ணு பேருக்கு மட்டும் அர்ச்சனைக்கு குடுங்க, என்னைக்கு அந்தப் பொண்ணு ஆத்திரம் தீருதோ அன்னைக்கு தான் உங்கப்பவோட ஆத்மாக்கு விமோச்சனம்" என்றுவிட,

"அப்பா மேல பாசமா!" என விரக்தியாக சிரித்தான் வேந்தன், அப்பா பாசத்தையே காட்டாதவராகிற்றே அவர். மனோன்மணி எப்போதும் அவரிடம் எதையும் வைத்துக் கொள்ள மாட்டான். அவரிடம் எதையாவது எதிர்பார்த்துக் கொண்டு செல்வது வேந்தன் மட்டுமே. எதிர்பார்த்தது கிடைக்காத நேரத்தில் அவர் முகத்திற்கு நேரே அதை கேட்கவும் செய்பவன். அதனால் அவன் படிப்பையே கெடுக்க நினைத்தவர் அவர். பள்ளிப்பையில் சிகரெட்டை வைத்துவிட்டு, அதை அவரே கண்டுபிடித்து எடுத்ததுபோல் வாத்தியார்களின் முன் அவனை தரம் தாழ்த்தியவர். அவன் படிப்பு மட்டுமே அன்று அவனைக் காப்பாற்றியது.

இதுபோல் அவர் சிறுபிள்ளையில் தான் அவனை நோகடித்தார் என்றால். கல்லூரிக்கென்று கட்ட வைத்திருந்த பெரிய கட்டணத் தொகையை யாரும் அறியாமல் தூக்கிச் சென்று தொழில் செய்கிறேன் என எவனிடமோ கொடுத்து ஏமாந்து வந்து, அந்த வட்டியுடன் சேர்ந்த கடனை இவனும், அனிருத்துமாக தான் அடைத்து முடித்தனர்.

அனிருத் என்ற ஒருவரை அவன் அடிக்கடி நினைவுப்படுத்த அந்த பேருக்கு தகப்பனாக இருந்தவரே அதிக காரணம். இதுபோல் பல காரணங்கள் பல சமய சந்தர்ப்பங்கள் என அவரிடமிருந்து கொஞ்சம் கொஞ்சமாக ஒதுங்கத் துவங்கி மொத்தமாக ஒதுங்கி நின்றவன் அவன். அதெல்லாம் கூட கடந்து வரக்கூடியவை என்பதுபோல் இன்று அவன் அறிந்து கொண்ட அவரின் இன்னொரு முகம் மொத்தமாக உடைத்துவிட்டது. இனி அவன் பிள்ளைக்குக் கூட அவரை தன் தகப்பன் என்றோ உன் தாத்தன் என்றோ அடையாளம் காட்டக்கூடாது என்ற முடிவிற்கு இந்நொடி வந்திருந்தான்.

முகத்தை அழுந்த துடைத்துக் கொண்டு நடப்பிற்கு திரும்ப முயன்றான்.

பவளமல்லி, அதுவரை நடந்த அனைத்தையும் கண்டு ரத்த அழுத்தம் ஏறிவிட மயங்கியிருந்தாள்.


செல்லம்மாளுக்கு அது உறைக்கவே இல்லை, தேன்பாவனி, 'என் அம்மாவின் நிம்மதியான உறக்கத்திற்கு இனி நான் பொறுப்பு' என சொல்லி சிலையாகியதில் திகைத்து, அழுகையும் அப்படியே நின்றிருக்கப் பார்த்தது பார்த்தபடி அதிர்ச்சியில் இருந்தார் அவர்.

படிகாசீ மெல்ல நடந்து சென்று சிலையாகிவிட்டவள் முன் மண்டியிட்டு, "என் சுயநலம் தான். இந்த ஆளே இப்படி அப்ப அந்த ஆளு பிள்ளைங்கன்னு பேச்சு வருமேன்னு தான் நா இத மறைச்சேன். ஆனா ஒரு பொம்பளையா நா சரியா நடக்கலன்னு எனக்கு புரிஞ்சுடுச்சு தாயி. மன்னிச்சுரு" என கைக்கூப்பி எழுந்து விறுவிறுவென வீடு நோக்கி நடந்துவிட்டார்.

மழை அடித்து ஊற்றத் துவங்க, ஊர்மக்களும் அவர்களுக்குள் முணுமுணுத்தவாறு கலைந்துச் சென்றனர். வேந்தன், நம்பூதிரிகளை அனுப்ப கிளம்பியவன், பவளமல்லி மயங்கி இருப்பதைக் கண்டுவிட்டு, "மாமா நா மல்லிய பாக்றேன். நீ அவங்கள வேற வண்டில கூட்டிட்டு போய் விட்டுட்டு வா" என மனைவியிடம் ஓடினான். அனிருத் அவர்களை வேறொரு வண்டியில் கிளப்பிக் கொண்டுச் சென்றுவிட, "இப்படியே நிக்காம அங்க வேகமா போறவங்கள போய் என்னன்னு பாரு" என வேந்தன் மனோன்மணியிடம், படிகாசீ நடந்து செல்வதைக் காட்டிச் சொல்லிவிட்டு, பவளமல்லியைத் தூக்கிக் கொண்டான்.

ஜகதாம்பாளும் அப்போது தான் நடப்பிலிருந்து வெளி வந்தாள். அவ்வளவு நேரமும் பேயாக இருந்த ஒரு பெண் இப்போது தெய்வமாகிவிட்டாள் என கண்ணெதிரே கண்டதைக் கிரகித்துக் கொள்ள முயன்று கொண்டிருந்தாள். வேந்தனின் வார்த்தையில், திரும்பி படிகாசீயைப் பார்த்து விட்டு அவரிடம் வேகமாக நடக்க, மனோன்மணியும் விரைந்துச் சென்றான்.

"எக்கா எந்திரிங்க. மல்லி மயங்கிட்டா, தம்பி தூக்கிட்டு ஆஸ்பத்திரி போவுது. மழைல எம்புட்டு நேரம் உக்காந்துருப்பீக வாங்க அவள என்னன்னு பாப்போம்" என செல்லம்மாளை உலுக்கி எழுப்ப,

"தேனு தேனு!" என கைக் காட்டினார் அவர், "அவ தெய்வமாகிட்டா. நம்மளயே இனி அவதான் பாத்துக்க போறா, அவள் பாத்துக்க மாட்டாளா? வாங்க போவோம்" என அவரையும் பேசி பேசியே எழுப்பிக் கூட்டிவந்தார்.

மருத்துவமனையில், பவளமல்லிக்கு ரத்த அழுத்தத்தை சமன் செய்ய முயன்றும் இருநாட்கள் அது ஏற இறங்க என்றே இருந்து தான் நிதானத்திற்கு வந்தது. அந்த இருநாட்களும் கணவனைப் பாவமாக பார்ப்பதும் அம்மா கையை விடாமல் பிடித்து வைத்துக் கொள்வதுமாக தான் இருந்தாள்.

அவள் முழியை வேந்தனும் பார்த்தான் தான் ஆனால் பார்த்தும் கவனிக்காதவனாக கடந்து கொண்டிருந்தான்.

"எதுக்கும் அதிக டென்ஷன் ஆக கூடாது. உள்ள இருக்க பேபியவும் சேர்த்து டென்ஷன் பண்றீங்க நீங்க. நல்ல கன்டீஷன்ல இருக்க பேபிய நீங்களே ஸ்பாயில் பண்ணக் கூடாது" என மருத்துவர் அதட்டி சொல்லி தான் அவளை வீட்டிற்குச் செல்ல அனுமதித்தார்.

அனிருத்தும், செல்லம்மாளும் பொருட்களை எடுத்துக் கொண்டு ஜிப்ஸிக்கு சென்றுவிட, வேந்தன் கைப்பிடித்து மெல்ல எழுந்து நின்றவள், "அம்மா கூட போய் ரெண்டு நாள் இருந்துட்டு வரவாங்க?" என்றாள் மெல்ல, பார்வை அவன் நாடியில் தான் இருந்தது.

"ரெண்டு நாள்ல வந்துருவியா நீ?" என்றான் அவன் நக்கலாக.

அப்போது மட்டும் நிமிர்ந்து அவன் கண்ணைப் பார்த்து விட்டு குனிந்து கொண்டாள். தனித்து நடக்கக் கூட விடாமல் தோளோடு அணைத்துப் பிடித்தவாறு அழைத்துக் கொண்டு வெளியே வந்து காரில் அமர உதவினான்.

அவன் வண்டி நேராக செல்லம்மாள் வீடு தான் சென்றது, அங்கு இறக்கிவிட்டவன், "பத்து நாள் கூட இருந்துட்டு வா. ஆனா என்ட்ட திரும்ப வரணும் நீ" என செல்லம்மாளும் பார்க்கவே சொல்லி விட்டுவிட்டு வந்தான்.

"நீதான் கேட்டியா? மனசுல நீயும் எதையும் வச்சுட்ருக்கியா? இதுக்கு தான் உங்கிட்ட இந்த விஷயம் சொல்லவே கூடாதுன்னு இருந்தேன். அவரோட வாழணும்னு ஆசைபட்டு தான கட்டிக்கிட்ட அது எந்த காரணத்துக்காகவும் மாற கூடாது" என பிடிபிடி என பிடித்தார்.

"ம்மா ம்மா! நா அவரோட வாழவே மாட்டேன்னு சொன்ன மாதிரி உடனே ஏன் இவ்வளவு பேசுற? உன்ன தனியா விட கஷ்டமா இருந்தது, அங்கேயும் போய் அவங்க அம்மா முகத்துல முழிக்க எப்படியோ இருக்கு. அதான் ரெண்டு நாள் இங்க இருந்து போலாமேன்னு கேட்டேன். யார் யாரோ தப்பு செஞ்சதுக்கு நா ஏன் என் புருஷன விட்டுட்டு இருக்கணும். அப்படி இருக்கேன்னு சொன்னாலும் விடுற ஆளில்ல உன் மருமகன்"

"என் பாடு இதுதான். எப்பவும் நா தனியாத்தான் என் காலத்த ஓட்டியாகணும். அதே மாதிரி அந்தம்மா தான் கடைசிவரைக்கும் உன் மாமியார், அதையும் மாத்தவே முடியாது. ரெண்டு நாள் கழிச்சு போனாலும் அந்தம்மா அதே அம்மா தான். அவங்கள சகிச்சுகிட்டு தான் நீ வாழ்ந்தாகணும். நா என் பொண்ணுங்க வாழ்க்கைன்னு யோசிச்ச மாதிரி அந்தம்மா பசங்களோட மரியாதையான வாழ்க்கை முக்கியம்னு நினைச்சுருக்கு அத அம்புட்டுதாம்னு ஏத்துகிட்டு உன் வாழ்க்கைய வாழப் பாரு. கிளம்பு உன் வீட்டுக்கு"

"எம்மா இப்ப திரும்ப கூப்பிட்டேம்னா விட்டுட்டுப் போன கோபத்துக்கு வந்து கடிச்சு வச்சுருவாரு. ரெண்டு நாள் இருந்துட்டே போறேன்மா ப்ளீஸ்" என கெஞ்ச, பிள்ளை உண்டாகி இருப்பவளை அதற்கு மேல் கடிய மனமின்றி விட்டுவிட்டார்.

அன்றிலிருந்து அவரின் தினப்படி வழக்கமானது ஒரு விஷயம், அது காலையில் எழுந்து சென்று மூத்த மகளை தரிசித்து வருவது தான். கண்ணெதிரே, 'இனி கடவுளாக நிற்பேன்!' என சொல்லி நின்றவளை சிலரால் அவ்வளவு எளிதில் கடந்து செல்ல முடியவில்லை. தெய்வமாக ஏற்று வணங்கத் தொடங்கியிருந்தனர், 'அப்படி என்ன நடந்துவிடும்?' என அலட்சியம்‌ செய்ய முயன்றவர்களையும் அவள் சும்மா விடவில்லை. அவ்வாறு தப்பு என தெரிந்து செய்த இருவரை அவள் தெய்வமாக நின்ற இடத்தின் அருகில் நின்ற மரத்திலேயே சொன்னதுபோல் தலைகீழ் தொங்கவிட்டு உயிர் பறித்தாள். அதன்பின் பக்தியை மீறிய பயமே அங்கிருந்தவர்களைத் தப்பு செய்ய அனுமதிக்கவில்லை.

இரண்டு நாட்கள் கழித்து பவளமல்லி வேந்தன் வீடு வருகையில், படிகாசீ அங்கில்லை, "அன்னைக்கு வீட்டுக்கு வந்தவுக தூக்குல தொங்க பாத்துட்டாக போலத்தா. நம்ம ஜகா தான் பிடிச்சு நிறுத்தி திட்டிவிட்ருக்கா. அப்றம் யார்டையும் பேசாம அமைதியாவே இருந்தாக. வேந்தன் தம்பியும் என் வீட்டுகாரவுகளும் சுத்தமா அவுகட்ட முகமே காட்டல, அதுவே மதினிக்கு ரொம்ப நோவு. அதான் சாமி தாத்தா அவுக கூட கொஞ்ச நாள் இருந்துட்டு வரட்டும்னு கூட்டிட்டுப் போயிட்டாக" என உத்தமி சொன்னதும், உண்மையில் அவளுக்கு எதிலிருந்தோ விடுபட்ட உணர்வு தான் எழுந்தது. அவரை நேருக்கு நேர் காணவே உள்ளுக்குள் பயமோ அதிருப்தியோ எதுவோ ஒன்று அழுத்திக் கொண்டு இருந்தது. அதிலிருந்து தற்போதைக்கு என்றாலும் விடுபட்ட உணர்வில் மூச்சை இழுத்து விட்டுக்கொண்டாள்.

 
அத்தியாயம் 35

வேந்தனை எதிர்பார்த்து அவள் காத்திருக்க, அவள் தூங்கி ஒரு சாமம் கழிந்த நடு இரவில் தான் வந்து நின்றான் அவன். உள்ளே நுழைந்தவனுக்கு வரவேற்பறை நீள்விருக்கையில் சரிந்து தூங்கிக் கொண்டிருந்தவளைக் கண்டதும் அவ்வளவு நிறைவு.

மஞ்சள் வர்ண சுடிதாரில் அவனுக்கு பிடித்த நீளமுடி பின்னலிட்டு முன் விழுந்து கிடக்க காலை சுருக்கி மடிந்தமர்ந்து ஒருபக்கமாக கைப்பிடியில் தலையை சாய்த்து உறக்கத்தில் இருந்தாள். மெல்ல நெருங்கி அவள் உச்சியில் முத்தமிட்டு நிமிர, "ஏன்டா இம்புட்டு நேரம்?" என கண்ணைக் கசக்கி கொண்டு வந்தார் அனிருத்.

"நீ தூங்காம இன்னும் என்ன பண்ணுற?" என்றவன் அறைக்குச் செல்ல,

"என் மவேன் என்னைய தூங்க விட்டுட்டாலும். ஒரே மிதி மிதின்னு மிதிக்காம்டா. அந்தப்பக்கம் படுத்திருக்க அவ அம்மாவ மிதிப்பானா இல்லையான்னே தெரியல அவபாட்டுக்கு தூங்குதா. என்னைய பாரு இப்பயும் உருட்டி விட்டுட்டியான். பதறி முழிச்சு நேரத்த பாத்துட்டுதேன் நீ வந்துட்டியான்னு பாக்க வெளில வாரேன். ஆமா நீ பாட்டுக்கு மல்லிய எழுப்பாம வந்துட்ட? உள்ள வந்து படுக்க சொல்லுடா. நாங்க அம்புட்டு சொன்னோம், இருக்கேன் இருக்கேம்னே சொல்லிருச்சு அந்த புள்ள. உன் அத்தையும் உக்காந்து பாத்துட்டு நா பெத்தது அழுகைல நிக்கவுந்தேன் எந்திச்சு வந்தா. நா துணைக்கு இருக்கவான்னு கேட்டேன் வேணாம்னுருச்சுடா" என பேசிக்கொண்டே அவன் பின் அவனறையில் சென்று நிற்க, அவர் பேச்சைக் கேட்டுக் கொண்டே முகம் கை கால் அலம்பி உடை மாற்றி வந்துவிட்டான் வேந்தன்.

"நா சாப்பிட்டுக்குறேன் நீ போய் அவன்ட்ட மிதி வாங்காம கீழ விரிச்சு படு, போ" என சொல்ல,

"அந்த புள்ளைய எழுப்பலையா நீ?" என நின்றார் அவர்.

"தூங்கிட்டால்ல? பாதில முழிச்சா தலை வலிக்கும், பசிக்கும், வாந்தி வரும். அவ பாட்டுக்கு தூங்கட்டும். நா இங்க ஹால்ல அவகிட்டயே படுத்துக்குறேன்" என்றவன் உணவை எடுத்துக் கொண்டு அமர,

"அப்ப சாப்பிட்டு முடி அப்றம் நா போறேன். மணிய பாரு ரெண்டாவ போவுது. இந்நேரம் சாப்பிட்டா செமிக்குமா? கொஞ்சம் சீக்கிரம் வந்தா தான் என்ன?" என்றவரும் அவன் எதிரில் அமர்ந்து கொள்ள, பேச்சை வளர்த்தனர்.

அவன் சாப்பிட்டு முடித்ததும் அனிருத் படுக்கச் சென்றுவிட, வேந்தன் படுக்கையும் தலையணையும் எடுத்து வந்து, அவளுக்கு ஒன்றை போர்த்திவிட்டு, அவள் படுத்திருந்த நீள்விருக்கையின் கீழேயே தானும் விரித்து போட்டு படுத்துக் கொண்டான். சற்று நேரம் தூக்கம் வராமல் அவள் முகத்தையே தான் பார்த்திருந்தான். திருமணம் முடிந்ததிலிருந்து அன்யோன்யமாக வாழ்ந்தாலும் ஏதோ ஒரு இடைஞ்சல் மனதில் இருந்து கொண்டே இருந்தது. இன்று அது இல்லை இனியும் இல்லை, அவளுக்குள் இன்னும் எதையும் போட்டு உலட்டிக் கொண்டு தன்னிடம் வர தாமதமாக்குவாளோ என எண்ணியிருக்க இரண்டே நாட்களில் வந்துவிட்டதில் மனதின் பாரமே இறங்கி விட்ட திருப்தி, அதைக் கொண்டாட அவள் வேண்டும். கொஞ்ச வேண்டும் போல கைகள் பரபரத்தது. லேசாக கன்னம் கிள்ளி முத்தம் கொஞ்சி வயிற்றில் மட்டும் உள்ளங்கையைப் பதித்து தானும் தூங்க முயன்றான்.

பவளமல்லி, பாதி விடியலில் விழிப்பு தட்டிவிட விழித்துப் பார்த்தவள், முதலில் படுத்திருக்கும் இடத்தைக் கண்டு விழித்து, பின் கணவன் கை வைத்திருப்பதை உணர்ந்து கீழே பார்த்தாள்.

அவள் புறமாக திரும்பி படுத்து மேலே அவள் மீது கைபோட்டவாறு நல்ல தூக்கத்தில் இருந்தான் வேந்தன்.

"எப்ப வந்தாங்க? ஏன் இங்கேயே படுத்துட்டாங்க?" என எழுந்து, "என்னங்க?" என தட்டி எழுப்ப, அசந்துத் தூங்கியிருந்தவன் அசைந்தும் கொடுக்காததால், சிரிப்புடன் மெல்ல இறங்கி அவனை கட்டிக்கொண்டு படுத்துக்கொள்ள, அதில் லேசாக விழித்தவன், இன்னும் வாகாக அவளைக் கட்டிக்கொண்டு தூங்க முயல, "விடிய போகுதே, யாராவது எந்துச்சு வந்து நம்மள பாக்க மாட்டாங்களா கரிகாலவேந்தன் அவர்களே!" என அவன் மீசையைப் பிடித்திழுக்க,

"ஷ்! மல்லி என்னடி?" என கண்ணை மூடி திறந்து விழிக்க முயன்றான்,

"ஹால்ல இப்படியா கட்டிட்டுப் படுப்பாங்க? ச்ச ச்ச என்னங்க இப்பிடி பண்றீங்க?" என அவள் மேலும் பேச, எழுந்தமர்ந்தவனுக்கு இரவு வந்ததும் அவளுக்காக அங்கேயே படுத்ததும் என அனைத்தும் ஞாபகம் வர, "கொழுப்புடி உனக்கு? இப்படி தான பண்ணக் கூடாது வா எப்புடி பண்றதுன்னு நா காட்றேன், அது சரியான்னு நீ சொல்லு" என தூக்கிக் கொண்டு அறைக்குள் சென்றுவிட்டான்.

நாட்கள் செல்ல, வரவேற்பறையில் அனைவரும் அமர்ந்திருந்த ஒரு காலை வேலையில் ஜகதாம்பாள் மனோன்மணியுடன் அனிருத் முன் வந்து நின்றாள்.

"இவர் உதவி உங்களுக்கு கண்டிப்பா வேணுமா சித்தப்பா?" எனக் கேட்டு நிற்க, வேந்தனும் அங்கு தான் கைப்பேசியில் யாரிடமோ பேசிக் கொண்டு நின்றான். ஜகதாம்பாள் வந்து கேட்டதும் அனிருத் திருதிருவென விழிப்பதையும் திரும்பிப் பார்த்தவன் மீண்டும் அவன் பேச்சில் கவனத்தைத் தொடர்ந்து விட, அங்கு தான் சற்று தள்ளி உத்தமி கீரையை ஆய்ந்து கொண்டிருக்க, பவளமல்லி அதற்கு தேவையான வெங்காயத்தை உரித்துக் கொண்டிருந்தாள், இருவரும் கூட திரும்பி என்னவென்று பார்த்தனர்.

"என்னம்மா திடீர்னு?" என்ற அனிருத் திரும்பித் திரும்பி வேந்தனை தான் பார்த்தார்.

"நீங்க சொல்லுங்க. உங்க கம்பெனிக்கு இவரு உதவி உங்களுக்கு வேணுமா வேணாமா?"

"இப்ப அவந்தானம்மா எல்லாம் பாக்றான்"

"அவர் ஏன் எல்லாம் பாக்கணும்? அது உங்க தைல கம்பெனி தானே?"

"இப்ப என்ன அவன் பார்த்தா என்ன பார்க்கட்டும்"

"அதெப்படி அவரோடதாகும்? எங்கப்பாட்ட இருந்து நா எனக்குன்னு பிரிச்சுகிட்ட துணி கடைய தான் நா ரன் பண்றேன். அது என்னோடது அதுல எங்கப்பாக்கும் பங்கு கிடையாது இதோ இவருக்கும் பங்கு கிடையாது. அதே மாதிரி தான் தைல கம்பெனி ஒன்னு உங்களோடதா இருக்கணும் இல்ல இவரோடதா இருக்கணும். இவரோடதா இருக்க அது அவரு பரம்பரை சொத்தும் இல்ல. சோ உங்களுக்கு கண்டிப்பா இவர் சப்போர்ட் வேணும்னா அதுல இவரு ஒரு வேலைகாரனா இருக்கணும். சம்பளம் மட்டும் குடுங்க. அதுல உங்க ரெண்டு பேருக்கும் இஷ்யூனா அவரு வேற
வேலை தேடிகட்டும். என்னன்னு நீங்க ரெண்டு பேருமே பேசி முடிவெடுங்க" என சொல்லி இருவர் முகத்தையும் பார்த்து நிற்க,

அனிருத், "அவன் இஷ்டம் தான்மா. இப்ப நிறைய ஆளுங்கள உள்ள இழுத்து விட்ருக்கான் அவனுங்களலாம் எனக்கு யாருன்னே தெரியாது. ஏதோ ஃபாரீனுக்கு ஏற்றுமதி பண்ணப் போறதா சொல்லிட்ருந்தான்" என சொல்ல,

"என்ன செய்யப் போறீங்க நீங்க?" என்றாள் ஜகதாம்பாள் மனோன்மணியிடம்.

"நா வேற வேலை தேடிக்கிறேன். வேலை கிடைக்கிறதுக்குள்ள அந்த க்ளைன்ட்ஸ் எல்லாத்தையும் உனக்கு இன்ட்ரோ பண்ணிடுறேன். எக்ஸ்போர்ட் கத்துக்கோ நீயும். ஈசி தான்" என்றான் நேராகவே அனிருத்திடம்.

அப்போதும் அவர் வேந்தனை திரும்பிப் பார்க்க, "என்னையே எதுக்கு திரும்பித் திரும்பி பாக்ற நீ? உன்னால முடியும்னா முடியும்னு சொல்லு இல்லனா இல்லன்னு சொல்லு. ஏதோ நா சொல்லி குடுத்தேம்னு அவன் என்ட்ட மூஞ்ச திருப்புறதுக்கா?" என்றான் வேந்தன்.

"இல்லடா கோச்சுகிட்டு வந்து பேசுறானோன்னு தோணுச்சு அதான் நீனா பாத்து கண்டுபிடிச்சு சரிகட்டிருவன்னு பாத்தேன்" என்றார் இவர் பாவமாக.

"கோவம்லா இல்ல மாமா. ஏதோ நம்ம கம்பெனி தான நல்லது தான பண்றோம் உனக்கு எதுவும் தெரியாதுன்னு எண்ணம் எனக்கு. இப்பவும் நா எங்க போனாலும் பொழச்சுக்குவேன் ஆனா உனக்கு அது மட்டுந்தான வருமானம். அதான் நா வெளிய வந்துடுறேன்னு சொன்னேன்" என மனோன்மணி பேச, அனிருத் புருவம் உயர்த்தி விழிக்க, வேந்தன் உதட்டைப் பிதுக்கி நக்கலாக சிரித்துக் கொண்டான்.

"போதுமா போ போய் பொழப்ப பாரு" என்ற வேந்தன், "மல்லிமா சாயந்தரம் தான் அப்பாயின்மெண்ட். நாலு மணிக்கு கிளம்பி இரு வந்துடுறேன்" என்றவன், "பாத்துக்கோங்கத்த" என்றுவிட்டு அவன் வேலையைப் பார்க்கக் கிளம்பிவிட்டான்.

ஜகதாம்பாள் இப்போதெல்லாம் வேலையோடு வீட்டினரோடும் ஒத்துப்போக கத்துக்கொண்டிருந்தாள். அவளோடு இருக்கவே அவள் என்ன சொன்னாலும் கேட்கும் நிலையில் இருந்தான் மனோன்மணி.

வேந்தன் இப்போதும் நேர்மையாக தான் அவன் வேலையில் இருக்கிறான். அதனால் அதற்கென தனி வம்பு வழக்குகள் வருவதும் அதிகமே, ஆனால் பெரிய பெரிய ஆட்களை அதற்கென்றே பழகியும் வைத்திருந்தான், தேவைக்கு அவர்களையும் அந்த வம்பு வழக்குகளில் உபயோகித்துக் கொள்ளத் துவங்கியிருந்தான்.

மாதங்கள் செல்ல, ஒரு நல்ல நாளில் ஆண்குழந்தையைப் பெற்றெடுத்தாள் பவளமல்லி. எல்லாரும் பெண் குழந்தை தான் பிறக்கும், தேன்பாவனி வந்து பிறப்பாள் என எதிர்பார்த்திருக்க, 'நான் இங்கு இருக்கும் போது எவ்வாறு மறுபிறவி!' என சொல்லாமல் சொல்லியது போல் ஆண் குழந்தை தான் பிறந்தது.

அதுவரை அவ்வீட்டிற்கு வரமாட்டேன் என இருந்த செல்லம்மாளையும் பேரனைக் காரணம் காட்டி வரவழைத்திருக்க, ஒதுங்கியிருந்த படிகாசீயும் பேரனைப் பார்க்கவென தயங்கி தயங்கினாலும் வந்துவிட்டார். மெல்ல மெல்ல வீடு இயல்புக்கு திரும்பத் துவங்கியது.

பிறந்ததிலிருந்து அப்பா இல்லாமல் பட்ட கஷ்டத்திற்கெல்லாம் வேந்தனின் அரவணைப்பிலும் பெற்ற மகனின் அன்பிலும் மிதந்தாள் பவளமல்லி. காத்திருந்து அவள் தான் வேண்டும் என கட்டிக்கொண்டவன் எதற்காகவும் அவளை ஏங்கவிடல்லை, தன்னைவிட்டு தள்ளி நிற்கவும் விடவில்லை.

காலையில் எழுந்ததிலிருந்து இரவு தூங்கும் வரை, "மல்லி, மல்லிமா, அடியே மல்லி!" என விதவிதமாக அவன் வீட்டிலிருக்கிறான் என அனைவருக்கும் தெரியப்படுத்திக் கொண்டே இருப்பான்.

"இவேன் எமத்து தாங்க முடியலடி. கோர்ட்டுல இவேன் உண்மையா வக்கீலா இருக்கானா இல்ல டவாலியா இருக்கானான்னு ஒருநா போய் பாத்துட்டு வரணும்டி. ஏலம் விட்டவண்ணமா இருக்கிறான் பாரு" என அனிருத் தான் உத்தமியிடம் புலம்பிக் கொண்டிருப்பார்.

அதையெல்லாம் அவனோ மல்லியோ கண்டுகொள்வதில்லை. மல்லியும் சலிக்காமல் அவன் அழைத்த அழைப்பிற்குச் சென்று நிற்பாள். யார் என்ன சொன்னாலும் அவர்கள் வாழ்க்கை அவர்களுக்கு முக்கியம். அது சந்தோஷமும் நிறைவும் இருக்க வேண்டும் என நினைத்தனர். அதன்படி வாழ்ந்தனர்.

தேனாற்றங்கரையில் வீற்றிருக்கும் தேன்பாவனி நல்லாசியில் அவர்கள் என்றும் நன்றாகவே வாழ்வர் என வாழ்த்தி நாமும் விடைபெறுவோம்.

நன்றி!

 
Top