எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

உன் நினைவிலே கரைகிறேன்! - கதை திரி

Status
Not open for further replies.

Shalini shalu

Moderator
உடல்நிலைக் குறைவால் நரம்பு ஊசிப் போட்டு இருக்கேன் ஃப்ரண்ட்ஸ். அதான் யூடி லேட் ஆகிடுச்சு. சாரி 🙏

🌸🌸🌸🌸

உன் நினைவிலே கரைகிறேன் - 31

தன்னுடைய நேர்காணலை முடித்து விட்டு வீட்டிற்கு வந்தவள், ஹாலில் தனக்காக காத்திருந்த குடும்பத்தைப் பார்த்தவளோ, அவர்களைப் பளிச்சிடும் புன்னகையுடன் ஏறிட்டாள் ஹாரண்யா.

ஆனால், அந்த மூவரின் முகங்களிலும் மருந்துக்கும் புன்னகையோ, மலர்வோ இல்லை என்பதைக் கவனித்து துணுக்குற்று,

“ஏன் எல்லாரும் முகத்தை இப்படி சீரியஸாக வச்சு இருக்கீங்க?” என்று வினவினாள்.

உடனே தங்களைச் சமாளித்துக் கொண்டனர் அவளது மாமனார், மாமியார்.

“அப்படியெல்லாம் இல்லையே? நீ சாப்பிட்டியா ம்மா?” என்றார் மனோரமா.

“ம்ம். சாப்பிட்டேன் அத்தை” என்றவளோ, பார்வையைக் கணவனின் புறம் திருப்ப, அவனோ உணர்ச்சியற்ற முகத்துடன் காட்சி அளித்தான்.

“அப்போ சரி ம்மா. நீ சோர்வாக இருப்ப. ரூமுக்குப் போய் ஃப்ரெஷ் ஆகிட்டு ரெஸ்ட் எடு” என்றவரிடம்,

“சரிங்க அத்தை” எனப் பதிலளித்து விட்டுப் பகீரதனைப் பார்க்க,

அவனோ,”நானும் உன் கூட வர்றேன் ரணு” என்று கூறி அவளுடன் தங்கள் அறைக்குச் சென்றான்.

“என்ன மனோ, இவன் மூஞ்சியே சரியில்லை, மருமகளை எதையாவது சொல்லிடுவானோ!” என்று தன் மனைவியிடம் கவலையுடன் கேட்டார் பாலேந்திரன்.

“எனக்கும் அந்த பயம் தான் ங்க. அவ வந்ததில் இருந்து இவன் ஒரு வார்த்தைக் கூடப் பேசலை. அதையும் ஹாரா கவனிச்சிட்டுத் தான் இருந்தாள்” என்றார் மனோரமா.

“அந்த மோஹித் கூட நின்னு மருமக ஃபோட்டோ எடுத்துக்கிட்டதைப் பார்த்து அவனுக்குக் கோபம் வந்துருச்சோ?”

“அப்படித் தான் நினைக்கிறேன் ங்க. அதைப் பார்த்த உடனே நமக்கே ஒரு மாதிரி தானே இருந்துச்சு?”

பாலேந்திரன்,“முதல்ல அப்படித் தான் இருந்தது மனோ. ஆனால் நம்மப் பையனே ஒரு நடிகனாக இருக்கும் போது அவன் செய்யாத விஷயத்தையா மருமக பண்ணிட்டான்னு நினைக்கும் போது எனக்கு ஹாரா மேலே இருந்த வருத்தம் எல்லாம் போயிடுச்சு. ஆனால், அந்தப் பொண்ணு உள்ளே வர்றப்போ நம்ம முக மாற்றத்தைப் பார்த்து குழப்பம் ஆகிடுச்சு. அதுவும் அந்த ராஸ்கல் இறுகிப் போய் எதுவுமே பேசாமல் நிற்கவும் அவளோட உற்சாகம் எல்லாம் வடிஞ்சா மாதிரி ஆகிட்டா. ரூமில் என்னென்ன சொல்லி அவளைக் காயப்படுத்தப் போறான் - னு நினைக்கிறேன்!” என்று உரைத்தவரிடம்,

“அப்படி ஏதாவது நடந்தால் மருமகளே பார்த்துப்பாள். அப்படியும் அவன் ஓவராகப் பண்ணா நாம எடுத்துச் சொல்லலாம்” என்று உறுதியாக கூறினார் மனோரமா.

இதே சமயம், தங்கள் அறையில், கணவனும், மனைவியும் ஒருவர் மற்றொருவரை கவனித்துக் கொண்டு தான் தத்தமது வேலைகளைச் செய்து கொண்டு இருந்தார்கள்.

கணவனின் அமைதியைக் கண்டு கோபம் வந்து விட,”பகீ! நானும் ரொம்ப நேரமாக உங்களைக் கவனிச்சிட்டுத் தான் இருக்கேன். இப்போ வரைக்கும் நீங்க என்கிட்ட எதுவுமே பேசலை. எப்பவுமே நான் என்னோட இண்டர்வியூ முடிச்சிட்டு வந்தால் நீங்க மூனு பேரும் என்னை அவ்வளவு சந்தோஷமா வரவேற்பீங்க! ஆனால், இன்னைக்கு எல்லாம் தலைகீழாக நடக்குது! நான் உற்சாகமாக வந்தா நீங்க எல்லாம் முகத்தைத் தூக்கி வச்சிட்டு இருக்கீங்க! என்ன தான் ஆச்சு உங்களுக்கு?” என்று அவனிடம் பொரிந்து தள்ளிய போதும் கூட,

மௌனத்தைக் கடைபிடித்தவனைக் கண்டு வெறியாகி, அவனது முகத்தைத் தன் அருகில் இழுத்து,”உங்க கிட்ட தான் கேட்டுட்டு இருக்கேன்! நீங்க இதுக்குப் பதில் சொல்லித் தான் ஆகனும்!” என்று கத்தினாள் ஹாரண்யா.

தங்களது உரையாடல்கள் கீழே கேட்காது என்ற தைரியத்தில் சற்று அதிகமாகவே சத்தமிட்டு விட்டாள்.

அவளிடம்,”நீ மோஹித்தோட பட ஃபங்கஷனுக்கு ஆங்கரிங் பண்ணப் போறேன்னு ஏன் என் கிட்ட முன்னாடியே சொல்லலை?” என்று கேட்டவனைப் புரியாமல் பார்த்தவள்,

“அதனால் என்ன ஆச்சு இப்போ?” என்றாள் அவனது மனைவி.

பகீரதன்,“முதல்ல நான் கேட்டதுக்குப் பதில் சொல்லு!” என்றதும்,

“என்னோட வேலையில் தினசரி நடக்குறதை எல்லாம் உங்ககிட்ட சொல்லனும்னு அவசியம் இல்லையே? நீங்க அப்படியா நடந்துக்கிறீங்க? ஷூட்டிங் இருக்குன்னு மட்டும் தான் சொல்வீங்க. அது மாதிரி தான் நானும் நடந்துக்கிட்டேன். அதே மாதிரி, நம்மக் கல்யாணத்துக்கு முன்னோடியும் கூட நான் மோஹித்தை இண்டர்வியூ செய்திருக்கேனே? இப்போ மட்டும் உங்களுக்கு என்னப் பிரச்சினை?” என்றவளை அழுத்தமாகப் பார்த்தவனோ,

“நீ அவனை இண்டர்வியூ செய்ததில் எனக்குப் பிரச்சினை தான். ஆனால், அதை விட பெரிய பிரச்சினையாக இருந்தது நீ அவன் பக்கத்தில் நின்னு ஃபோட்டோ எடுத்தது தான்! அதை எதுக்கு செஞ்ச?” என்றவனது கேள்விக்கு,

“அவர் தான் என் கூட ஃபோட்டோ எடுக்க ஆசைப்பட்டார். நீங்களே அந்த லைவில் பார்த்து இருப்பீங்களே?” என்ற பதிலைச் சொன்னாள் ஹாரண்யா.

“ஆமாம். ஆனால் நீ அதை மறுத்து இருக்கலாமே! ஏன் மறுக்கலை?” என்றவனை ஆயாசமாகப் பார்த்தவள்,

“அது ஏன்னு உங்களுக்குப் புரியும்ன்னு நினைச்சேன்! ஆனால் நீங்களே இப்படி கேட்கிறீங்களே? நீங்க எவ்வளவு வருஷமாக சினி ஃபீல்டில் இருக்கீங்க? இதையெல்லாம் மறுக்க முடியாதுன்னு உங்களுக்குத் தெரியாதா பகீ?” என்றதும்,

“நான் கண்டிப்பாக மறுத்து இருக்கேன். நீ நினைச்சாலும் அதைச் செஞ்சி இருக்கலாம்” என்று மொழிந்தான் பகீரதன்.

“என்னால் முடிஞ்சா மறுத்து இருப்பேன் பகீ. அங்கே அவரோட ஃபேன்ஸ் அவ்வளவு பேர் இருந்தாங்க. அவங்களும் அவரோட கோரிக்கையை ஏத்துக்க சொல்லிக் கேட்டுக்கிட்டாங்க. அதான் ஃபோட்டோ எடுத்துக்கிட்டேன். அதோட என்னோட வேலையில் இதெல்லாம் சகஜம். ஏன் நீங்க கூடத் தான் உங்களைப் பேட்டி எடுக்கிற ஆங்கர்ஸ் கூட ஃபோட்டோ எடுத்துக்கிட்டீங்க. அதுக்கு நானும் சண்டை போடவா?” என்று அவனிடம் சண்டைக்கோழியாகத் துள்ளினாள் ஹாரண்யா.

“ம்ம். போடு. யாரு வேண்டாம்னு சொன்னா” என்று அலட்சியமாகப் பதிலளிக்க,

“ஓஹ் அப்படியா? அப்போ அதுக்கும், இதுக்கும் சரியாகப் போச்சுப் போங்க!” என்று அவனுக்குக் குறையாத அலட்சிய பாவனையுடன் கூறினாள்.

“ஆஹான்! நான் கேட்டதுக்கு இந்தப் பதிலைச் சொல்லிட்ட. என்னோட அப்பா, அம்மா கேட்டால் இதையே தான் சொல்லுவியா?” என்று கிண்டலாக வினவினான் பகீரதன்.

அதைக் கேட்டதும், தான் வீட்டிற்குள் நுழைந்ததுமே தன்னுடைய மாமனார், மாமியாரின் முகங்களைப் பார்த்த போதே அவர்கள் தன்னைப் பார்த்தப் பார்வையில் சங்கடம் தான் இருந்தது என்பது அவளுக்கு இப்போது ஞாபகம் வந்தது.

மனைவியின் முகம் சுருங்கி விட்டதைக் கண்டு, அவளுக்குத் தன்னுடைய கேள்வியின் அர்த்தம் புரிந்து விட்டது என்று திருப்தி அடைந்தவன்,”என்ன ரணு? அவங்க கிட்ட சொல்ல உங்ககிட்ட வேற பதில் இருக்கா என்ன?” என்றவனிடம்,

“இருக்கு பகீ! அதை அவங்க என்கிட்ட கேட்கும் போது சொல்லிக்கிறேன்! நீங்க கவலையை விடுங்க” என்று தெனாவெட்டாகப் பதில் கூறினாள் ஹாரண்யா.

அதில் அவளை முறைத்தவனோ,”நீ அவங்க கிட்ட என்ன வேணும்னாலும் சொல்லிக்கோ. ஆனால் இனிமேல் அந்த மோஹித் சம்பந்தப்பட்ட எந்த ஃபங்கஷனுக்கும் ஆங்கரிங் செய்யக் கூடாது! புரிஞ்சிதா?” என்று அவளுக்குக் கட்டளை இட்டான் பகீரதன்.

“திஸ் இஸ் டூ மச் பகீ! அது எப்படி முடியும்?” என்று வாக்குவாதம் செய்ய,

“அதெல்லாம் எனக்குத் தெரியாது ரணு! நீ இதுக்கு ஒத்துக்கிட்டு தான் ஆகனும்!” என்ற கணவனிடம்,

“நான் ஏன் இனிமேல் மோஹித்தைப் பேட்டி எடுக்கக் கூடாது? என்னக் காரணம்னு சொல்லுங்க?” எனக் கேட்டாள் ஹாரண்யா.

“அவன் எனக்கு சமமான ஆள் கிடையாது! என்னை விடப் பிரபலமானவனும் இல்லை. அப்படியிருக்கும் போது, சினிமாவில் முதல் இடத்தில் இருக்கிற என்னோட மனைவி இரண்டாவது இடத்தில் இருக்கிற ஒருத்தனைப் பேட்டி எடுக்கிறதும், அவன் கூட நின்னு ஃபோட்டோ எடுத்துக்கிறதும் எனக்குப் பிடிக்கலை ரணு! அதான்!” என்று அவளுக்கு விளக்கினான் பகீரதன்.

“நீங்க ரொம்ப சின்னப்பிள்ளைத் தனமாக யோசிக்கிறீங்க பகீ! அது உங்களுக்கே தெரியலை. ஆங்கரிங் என்னோட வேலை. நான் அதுக்கு விசுவாசமாக இருக்கனும்ன்னு விரும்புறேன். அதனால், என்னை யாரைப் பேட்டி எடுக்கச் சொன்னாலும் எடுப்பேன்! அது எனக்குத் தனிப்பட்ட முறையில் பிடிக்கலைன்னா மட்டும் தான் அதைச் செய்ய மாட்டேன்!” என்று தீவிரமாக உரைத்தாள் ஹாரண்யா.

“அப்படியா விஷயம்? அப்போ உனக்கு நான் முக்கியமா, உன் ஆங்கரிங் வேலை முக்கியமான்னு கேட்டால் என்ன சொல்லுவ?” என்று கேட்டு வைக்க,

அவளோ,“நானும் அதையே உங்ககிட்ட திருப்பிக் கேட்பேன்! அதுக்கு நீங்க என்னப் பதில் சொல்றீங்களோ, அதே தான் என்னோட பதிலாகவும் இருக்கும்” என நிதானமாக உரைத்தாள் அவனது மனைவி.

அவளைத் தன் புருவத்தை உயர்த்தி மெச்சியவனோ,”நான் சொல்ற அப்பவே சம்மதிச்சிடு ரணு. இல்லைன்னா நீ எதிர்காலத்தில் ரொம்ப வருத்தப்படுவ!” என அவளை எச்சரித்தான் பகீரதன்.

அதற்கு,”அதை அப்போ பார்த்துக்கிறேன். இப்போ எனக்குத் தலைவலி வந்துருச்சு. அதனால் டீ குடிக்கப் போறேன். உங்களுக்கும் கண்டிப்பாகத் தலை வலிக்கும்னு எனக்குத் தெரியும். அதனால் நீங்களும் வந்து காபி குடிங்க” என்றவளிடம்,

“ஷூயர்” என்ற கணவனை அழைத்துக் கொண்டு கீழே போனாள் ஹாரண்யா.


- தொடரும்
 
Last edited:

Shalini shalu

Moderator
உன் நினைவிலே கரைகிறேன் - 32

அவர்கள் இருவரும் ஒன்றாக வருவதைப் பார்த்த பாலேந்திரனும், மனோரமாவும் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.

தங்கள் மகனும், மருமகளும் ஒற்றுமையாக வருகிறார்கள் என்பதே அவர்களுக்குப் போதுமானதாக இருந்தது.

ஆனால், தங்களைக் கண்களில் வேதனை பொங்க பார்த்துக் கொண்டே வந்த ஹாரண்யாவின் முகத்தை அவர்கள் கவனிக்கவே இல்லை.

அவர்களுக்கான காபி, டீ யை எடுத்து வரச் சொல்லி விட்டு,”உன்னோட நேர்காணலை நாங்க ரெண்டு பேரும் லைவில் பார்த்தோம் மா. ரொம்ப நல்லா இருந்துச்சு. உனக்கு எங்களோட வாழ்த்துகள்!”என்று தன்னிடம் கூறிப் குறுநகை புரிந்த மனோரமாவிடம்,

“அப்படியா? தாங்க்ஸ் அத்தை” என்று விழிகளில் எட்டாத புன்னகையுடன் நன்றி தெரிவித்தாள் ஹாரண்யா.

அதையும் அவரோ, பாலேந்திரனோ கண்டு கொள்ளவில்லை. ஆனால், அது பகீரதனுக்குப் புரிந்து விட்டிருக்க,”அவங்க தான் உன்னைச் சங்கடப்படுத்துறா மாதிரி எதுவும் கேட்கலையே ரணு. அப்பறம் ஏன் இப்படி ஒட்டாமல் பதில் சொல்லிட்டு இருக்கிற?” என்று மனைவியின் காதுகளில் முணுமுணுத்தான்.

“இதுக்குப் பதில் என்னன்னு உங்களுக்கே தெரியும். அதனால் என்னை நோண்டாமல் சும்மா இருங்க” என்று அவனுக்கு மட்டும் கேட்கும் குரலில் எச்சரிக்கை விடுத்தாள்.

“ஓஹோ ஓகே!” என்று அதற்கு ஒப்புக் கொண்டவனை, அவனது பெற்றோரோ, குறுகுறுவென்று பார்க்கவும்,

“க்கும், நானும் இதையே தான் எங்க ரூமில் வச்சு இவகிட்ட சொன்னேன்னு இப்போ ஞாபகப்படுத்திட்டு இருந்தேன்” என அவர்களுக்குச் சமாதானமாக கூறினான் பகீரதன்.

மனோரமா,“சரிடா. காபியைக் குடி” என்றவர்,

“அதான், பெரிய இண்டர்வியூ ஒன்னை முடிச்சுக் கொடுத்துட்டியே! நாளைக்கும் அப்படி ஏதாவது இருக்கா ஹாரா? இல்லைன்னா, லீவ் போட்டு ரெஸ்ட் எடுக்கலாம்ல?” எனத் தன் மருமகளிடம் கரிசனத்துடன் கேட்க,

“நாளைக்கு இன்டர்வியூ எடுக்கத் தேவை இல்லை அத்தை. ஆனால் அங்கே புதுசாக வேலைக்குச் சேர்ந்தவங்களுக்குத் தினமும் பயிற்சி தரனும். அதுக்கு நான் கண்டிப்பாக போய்த் தான் ஆகனும். லீவ் போட முடியாது அத்தை” என்றுரைத்தாள் ஹாரண்யா.

“இன்னும் உங்க கல்யாண சடங்கில் உனக்குத் தாலி பிரிச்சுக் கோர்க்கிறது மட்டும் தான் இருக்கு. அதையும் நல்லபடியாக செஞ்சி முடிச்சிட்டா அதுக்கப்புறம் நாங்க உங்களை எந்த தொந்தரவும் செய்ய மாட்டோம்” என்று அவளிடம் கூறினார் மனோரமா.

“அப்போ அதை உடனே செய்ய வேண்டியது தானே ம்மா?” என்று கேட்டான் மகன்.

“அதை எந்த மாசத்துல செய்யனுமோ, அப்போ தான் செய்யனும். உன் அவசரத்துக்கு எல்லாம் உடனே பண்ண முடியாது!” என்று கூறி அவனை அதட்டினார்.

“ஊஃப்! சரி. உங்களுக்கு எப்போ விருப்பமோ அப்போவே அந்தச் சடங்கைச் செய்யுங்க” என்று அவரிடம் சமாதானக் கொடியைப் பறக்க விட்டான் பகீரதன்.

“அவங்க ரெண்டு பேரும் மட்டும் தான் பேசிட்டு இருக்காங்க. நீ ஏன் எதுவுமே பேசாமல் அமைதியாக இருக்கிற ம்மா?” என்று மருமகளிடம் கேட்டார் பாலேந்திரன்.

“ஆங்! அத்தையோட கேள்விக்கு நான் சொல்ல வேண்டிய பதிலை உங்கப் பையனே சொல்லிட்டாரே! அதான், நான் அமைதியாக இருக்கேன் மாமா” என்றாள் ஹாரண்யா.

“ஓஹோ, சரி ம்மா” என்றவுடன், அதற்கு மேல் அங்கே இருக்க மனமில்லாமல்,

“அந்த ஃபங்க்ஷன் முடிஞ்ச அப்போவே என் அம்மா கால் பண்ணி இருந்தாங்க. அப்போ பேச முடியலை. இப்போ போய்ப் பேசிட்டு வர்றேன்” எனப் பொதுவாகச் சொன்னவள், தங்கள் அறைக்குச் செல்லவும்,

“அவ கூட சண்டை எதுவும் போட்டியா பகீ?” எனத் தனது மகனிடம் வினவினார் மனோரமா.

“இல்லையே ம்மா. ஏன்?”

“நீங்க கீழே வந்ததில் இருந்து அவளோட முகம் சரியில்லாமல் இருந்துச்சு. அதான் கேட்டேன்”

“அங்கே ஃபங்க்ஷனில் நின்னுட்டே ஆங்கரிங் பண்ணியதால் அவளுக்கு உடம்பு வலிக்குது போல ம்மா. அதனால் தான் அப்படி இருக்காள் - ன்னு நினைக்கிறேன்” என்று அவருக்கு விளக்கம் அளித்தான் பகீரதன்.

“அட ஆமாம்! நான் அதை யோசிக்கலை பாரு! அவ ஃபோன் பேசி முடிச்சிட்டு வரட்டும். நல்லா சுடு தண்ணீரில் குளிச்சிட்டுச் சாப்பிட்டுத் தூங்கட்டும்”என்று மருமகளுக்குப் பரிந்து பேசினார் அவனது அம்மா.

இதே வேளையில், தன் செல்பேசியில் இருந்து தாய்க்கு அழைத்து,

“ம்மா, எப்படி இருக்கீங்க? அப்பா நல்லா இருக்காரா?”என்று வினவினாள் ஹாரண்யா.

மதுராஹினி,“நாங்க ரெண்டு பேரும் நல்லா இருக்கோம் டி. நீங்க எல்லாரும் எப்படி இருக்கீங்க?” என்று அவளிடம் கேட்டார்.

“நல்லா இருக்கோம் மா”

“நீ வேலைக்குப் போக ஆரம்பிச்சதுல இருந்து நாம பேசிக்கவே இல்லை. நீ வேற பிஸியாக இருப்பியோன்னு நானும், உன் அப்பாவும் உன்னைத் தொல்லைப் பண்ண வேண்டாம்னு ஃபோன் பண்ணாமல் விட்டுட்டோம். நீயாவது உன் ஃப்ரீ டைமில் கால் செஞ்சுப் பேசலாம்ல?” என்று அவளிடம் குறைபட்டுக் கொண்டார்.

“அதனால் தான் இப்போ கால் செஞ்சேன் ம்மா” என்றவளிடம்,

“ஓஹோ! சரி தான்” என்று கூறிப் புன்னகை செய்தார் அவளது அன்னை.

“ம்ஹ்ம். அதை முழுசாகப் பார்த்தீங்களா ம்மா?”என்று அவரிடம் வினவினாள் ஹாரண்யா.

“ஏன்டி நீ ஆங்கரிங் பண்ணிட்டு இருக்கும் போது நாங்க அதை முழுசாகப் பார்க்காமல் இருப்போமா? கடைசி வரைக்கும் பார்த்தோம்”

“அதில் உங்களுக்கு எதுவுமே வித்தியாசமாகத் தோனலையா?”

“அப்படி எதுவும் தோனலையே! நீ இப்படி கேட்கிறது தான் எனக்கு வித்தியாசமாக இருக்கு. என்னாச்சுடா?” எனக் கனிவுடன் கேட்டார் மதுராஹினி.

“ஒன்னும் இல்லை ம்மா. அதைப் பார்த்துட்டு அப்பாவும் எதுவும் சொல்லலையா?”என்று வினவிய மகளிடம்,

“அவர் ‘நல்லா இருக்கு, நம்மப் பொண்ணை ரொம்ப நாள் கழிச்சு இப்படி மேடையில் நின்னுப் பேசுறதைப் பார்க்கிறப்போ சந்தோஷமாக இருக்குன்னு தான் சொன்னார். வேற என்ன சொல்லனும்னு நினைக்கிற?” என்று கேட்கவும்,

அவர் கூறிய வார்த்தைகள் யாவும் அவளலு மனதைக் குளிர வைத்து விட,”வேற எதுவும் சொல்ல வேண்டாம் மா. இதுவே போதும்! தாங்க்யூ சோ மச்” என்று நெகிழ்ந்து போய்க் கூறியவளிடம்,

“அடியேய்! உனக்கு என்ன தான் ஆச்சு? ஏன் இப்படி எல்லாம் பேசிட்டு இருக்கிற?” எனச் சத்தம் போட்டார் மதுராஹினி.

“ரொம்ப நாள் கழிச்சு அவ்வளவு பெரிய நிகழ்ச்சியை ஆங்கரிங் பண்ணி இருக்கேன்ல ம்மா? அதான் எப்படி பண்ணேன்னு உங்ககிட்ட அபிப்பிராயத்தைக் கேட்டேன். அவ்வளவு தான்” என்று கூறிச் சமாளித்தாள் ஹாரண்யா.

“ம்ம். சரிடா. இது நீ டீ குடிக்கிற டைமாச்சே! இன்னும் குடிக்கலையா?”

“டீ குடிச்சிட்டு வந்து தான் பேசிட்டு இருக்கேன் ம்மா” என்று தாயிடம் தெரிவித்தாள்.

“ஓகேடா. தாலி பிரிச்சிக் கோர்க்கிற சடங்கை எப்போ வைக்கலாம்னு உங்க மாமியார் எதுவும் சொன்னாங்களா?”என்றார் மதுராஹினி.

ஹாரண்யா,“ஆமாம் மா. இப்போ கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் அதைப் பத்திப் பேசினாங்க.அநேகமாக அடுத்த மாசம் வைக்க வாய்ப்பு இருக்கு”

“ஓஹ், சரி ம்மா” என்றவரிடம்,

ஓரிரு வார்த்தைகள் பேசி விட்டு அழைப்பை வைத்தவள், என்னதான், தனக்குத் திருமணம் ஆனவுடன், சற்று தாமதித்து வேலைக்குச் செல்லுமாறு தன் தாயும், தந்தையும் அறிவுரை வழங்கி இருந்தாலும் கூடத் தற்போது அவர்கள் இருவரும் தனது நேர்காணலைப் பற்றி இவ்வளவு பாராட்டிப் பேசுகிறார்கள் என்பதையும், தன்னைப் பற்றி அவர்கள் இருவரும் எதுவும் தவறாக எண்ணவில்லை என்பதையும் நினைத்துப் பார்க்கையில் கண்களில் இருந்து ஆனந்தக் கண்ணீர் வருவதை ஹாரண்யாவால் தடுக்க இயலவில்லை.

அதே மனநிலையுடன் ஹாலுக்கு வர,

“என்னம்மா உங்க அம்மா கிட்டே பேசியாச்சா?” என்றார் மனோரமா.

“பேசிட்டேன் அத்தை” என்றதும்,

“நீ பார்க்க ரொம்பவே டயர்ட் ஆகத் தெரியுற. முதல்ல போய் ஹீட்டர் போட்டுக் குளிச்சிட்டு வா. நைட் சாப்பிட்டுச் சீக்கிரம் தூங்கிரு” என்று அவளுக்கு அறிவுறுத்த,

“சரிங்க அத்தை” என்றவள், தன் கணவரிடம்,

“நான் போய்க் குளிச்சிட்டு வர்றேன் பகீ” எனக் கூறி விட்டுச் சென்றாள் ஹாரண்யா.

“உனக்கு மறுபடியும் எப்போ ஷூட்டிங் ஸ்டார்ட் ஆகுது?” என மகனிடம் கேட்டார் பாலேந்திரன்.

“படத்தில் என் சீன்ஸ்ஸை எல்லாம் எடுத்து முடிச்சாச்சு ம்மா. அதனால் நான் அங்கே எப்போ வேணும்னாலும் போய்க்கலாம்” எனப் பதிலளித்தான் பகீரதன்.

“அப்படின்னா சரி” என்றவரோ, வெகு நேரம் அமர்ந்திருந்ததால் முதுகு வலிக்கவும், எழுந்து அறைக்குள் சென்று படுத்துக் கொண்டார் அவனது தந்தை.

அதன் பின்னர், மாடிக்குச் சென்றவனோ, தன் மனைவி குளித்து விட்டு வந்ததைக் கண்டு,”இன்னைக்குச் சீக்கிரம் டின்னர் சாப்பிட்டுட்டு ரெஸ்ட் எடு ரணு. நாளைக்கு எழுந்து கிளம்ப முடிஞ்சா வேலைக்குப் போ. இல்லைன்னா அம்மா சொன்னா மாதிரி லீவ் போட்ரு” என்று அவளிடம் பரிவாகச் சொன்னான் பகீரதன்.

“இல்லைங்க. நான் இனிமேல் எதுக்காகவும் என் வேலைக்கு லீவ் போடப் போறது இல்லைன்னு முடிவு செஞ்சிருக்கேன். அதனால் கண்டிப்பாக ஸ்டுடியோவுக்குப் போவேன்” என்று அவனிடம் உறுதியாக கூறினாள் ஹாரண்யா.

“ஏன் இப்படிச் சொல்ற? நானும், அம்மாவும் உன் நல்லதுக்குத் தானே சொல்றோம்” என்றவனிடம்,

“அதெல்லாம் ஒன்னும் சொல்ல வேண்டாம். நான் பார்த்துக்கிறேன்” எனக் கூறவும்,

“அப்பறம் உன் இஷ்டம்” என்று அலட்சியத்துடன் தன் தோள்களைக் குலுக்கி விட்டுக் கொண்டான் பகீரதன்.

அதற்குப் பிறகு, இரவு உணவை உண்ணும் சமயத்திலும் கூடத், தன் மாமனார், மாமியாரிடம் அதிகமாக முகம் கொடுத்துப் பேசவில்லை ஹாரண்யா.

அதைக் கவனித்தாலும் கூட அது ஏன் என்று அவளிடம் கேட்கவில்லை பகீரதன்.

ஆனால், நாட்கள் செல்லச் செல்ல அவளது அந்தச் சுபாவத்தைக் கண்டு கொண்டு அதைப் பற்றிப் பேசுவதற்கான சந்தர்ப்பத்திற்காக காத்திருந்தார் மனோரமா.

- தொடரும்
 

Shalini shalu

Moderator
உன் நினைவிலே கரைகிறேன் - 33

தங்கள் மூவரும் உரையாடிக் கொண்டு இருக்கும் சமயங்களில் எல்லாம் தள்ளி இருக்காமல் தயங்காமல் தானும் உள்ளே நுழைந்து அதில் கலந்து கொள்ளும் தன் மருமகள் இப்போதெல்லாம் அதில் ஒட்டாத் தன்மையுடன் இருப்பதைப் பல சமயங்களில் கண் கூடாகப் பார்த்தும், கவனித்து விட்டு,

அவளது உத்தியோகம் தரும் அழுத்தத்தினால் கூட இவ்வாறு நடந்து கொள்கிறாள் என்று தான் முதலில் எண்ணி இருந்த மனோரமாவிற்கு, நாட்கள் செல்லச் செல்ல, நடந்து முடிந்த நிறைய நிகழ்வுகளை வைத்துப் பார்க்கும் போது அவருக்கு அவளது நடவடிக்கையின் மீதான குழப்பம் வலுத்தது.

அதைப் பற்றி மகனிடம் கேட்டாலும் அதையே தான் கூறினான். அதனால், தானே நேரடியாகத் தன் மருமகளிடம் கேட்டு விட முடிவெடுத்துப் பகீரதன் வெளியே சென்றிருந்த நேரம், அன்று ஹாரண்யாவிற்கு விடுமுறை நாள் என்பதால் அப்போதே அவளிடம் பேசச் சென்றார் மனோரமா.

தனது அறையின் வெளியே நின்று காத்திருந்தவரிடம்,”ஏன் அங்கேயே நிற்கிறீங்க அத்தை? உள்ளே வாங்க” என அவருக்கு அனுமதி அளிக்கவும்,

உடனே அறைக்குள் நுழைந்தவரோ, அவளுக்குச் சற்று இடைவெளி விட்டு அமர்ந்து கொண்டு மருமகளின் முகத்தை ஆராய்ந்தார்.

அதைக் கவனித்தவளோ,”என்னாச்சு அத்தை? ஏன் என் முகத்தை இப்படிக் குறுகுறுன்னுப் பார்த்துட்டு இருக்கீங்க?” என்று தன் மாமியாரிடம் வினவினாள் ஹாரண்யா.

“நீ உன் மனசில் எதையாவது போட்டுக் குழப்பிக்கிட்டு இருக்கிறா மாதிரி தோனுச்சு. அது என்னன்னு உன் முகத்தைப் பார்த்துத் தெரிஞ்சிக்கலாம்னு தான்” என்றவரைக் குழப்பத்துடன் பார்த்தவளோ,

“நீங்க என்ன சொல்ல வர்றீங்கன்னு எனக்குப் புரியலை அத்தை. நான் எதை நினைச்சுக் குழம்பிட்டு இருக்கப் போறேன்?” என்று அவரிடம் வினவினாள்.

“அது தெரியாமல் தான் நானும் முழிச்சிட்டு இருந்தேன். அதான், அதைப் பத்தி உங்கிட்டயே வெளிப்படையாக கேட்கலாம்னு வந்திருக்கேன்” என்றார் மனோரமா.

அதைக் கேட்டதும் அமைதியடைந்து விட்ட மருமகளிடம்,

“அந்த மோஹித்தோட ஃபங்க்ஷனை ஆங்கரிங் பண்ணிட்டு வந்ததுக்கு அடுத்த நாளில் இருந்து நீ எங்க யார்கிட்டேயும் சரியாகப் பேசுறதே இல்லை. அதைப் பத்திக் கேட்கத் தான் வந்தேன். அன்னைக்கு நீ கஷ்டப்பட்றா மாதிரி வேறெதாவது நடந்துச்சா? ஏன் இப்படி எங்க கிட்ட ஒட்டாமல் நடந்துக்கிற? எங்க மேல் உனக்கு எதுவும் மனக்கசப்பா?” என்று கனிவாக கேட்கவும்,

அதற்கு அவளோ,”அதுக்கு முன்னாடி நானும் உங்ககிட்ட வெளிப்படையாக ஒன்னைக் கேட்டுத் தெரிஞ்சிக்கனும்னு நினைக்கிறேன். அதுக்குப் பர்மிஷன் தருவீங்களா அத்தை?” என்று அவரிடம் தீர்க்கமான குரலில் கேட்டாள் ஹாரண்யா.

“ம்ம். கேளு ம்மா” என்று அவளுக்கு அனுமதி அளித்தார் மனோரமா.

“நான் அன்னைக்கு அந்தப் புரோகிராமை முடிச்சிட்டு வந்தப்போ உங்களையும், மாமாவையும் பார்த்தப்போ உங்க பார்வையில் ஒரு வித்தியாசத்தை உணர்ந்தேன். தெளிவாகச் சொல்லனும்னா நீங்க ரெண்டு பேரும் என்னைச் சங்கடமாகப் பார்த்தீங்க. நான் என்னன்னு விசாரிச்சதுக்கு அப்பறமாகத் தான் நீங்க அதை நார்மல் ஆக மாத்திக்கிக்கிட்டீங்க. அது எதனால் ன்னு நான் தெரிஞ்சிக்கலாமா அத்தை?” என்றதைக் கேட்டதும் அவருக்குத் தூக்கி வாரிப் போட்டது.

ஏனெனில், அன்றைய தினம், அவள் தங்கள் முக மாற்றத்தைக் கண்டுபிடித்து, அதன் காரணத்தை அறிந்து வருத்தப்பட்டு விடக் கூடாது என்பதற்காகத் தான் தங்களுடைய முக பாவனைகளைச் சட்டென்று மாற்றிக் கொண்டதை தங்கள் மருமகளுடைய கண்களுக்குத் தப்பாமல் தெரிந்து விட்டதே! எனத் தர்ம சங்கடத்துடன் அவளை ஏறிட,

இவளோ மேலும் தொடர்ந்து,”நீங்க ரெண்டு பேரும் அன்னைக்கு என்ன மாதிரியான எண்ணத்தோட அப்படியொரு ரியாக்ஷன் கொடுத்தீங்கன்னு சொல்றீங்களா அத்தை? ப்ளீஸ்!” என்று வினவியவளைக் குற்ற உணர்வுடன் ஏறிட்டார் அவளது மாமியார்.

அவரது மௌனத்தைக் கண்டு”நீங்க சொல்லலைன்னா என்ன? அது எதுக்குன்னு நான் சொல்லவா அத்தை?” என அவரிடம் வேதனையுடன் கேட்டாள் ஹாரண்யா.

அதற்கும் அவர் பேசாமல் இருக்க,”அந்த ஃபங்க்ஷனில் மோஹித் கூட நின்னு நான் ஃபோட்டோ எடுத்ததைப் பார்த்து உங்களுக்கும், மாமாவுக்கும் சங்கடமாக இருந்துச்சுல்ல அத்தை? அதனால் தானே என்னை அப்படி பார்த்தீங்க?” என்று தொண்டை கமறலுடன் வினவ,

அவர் தலையைக் குனிந்து கொண்டு இருப்பதைக் கண்டுத் தன்னுடைய அனுமானம் உண்மை தான் என்பதை உணர்ந்தவள் அந்த நிமிடம் முதல் அவளுக்கு அந்த வீட்டில் இருக்கும் அனைவரையும் அந்நியமாகி விட்டதை உணர்ந்தாள் ஹாரண்யா.

“ஏன் அத்தை நானாவது பரவாயில்லை ஆங்கரிங் வேலை தான் பார்க்கிறேன். ஆனால், உங்கப் பையன் எல்லா ஹீரோயின்ஸ் கூடயும் ஒரு படம் முழுக்க நடிக்கிறார். அப்படியிருக்கும் போது, அதைப் பத்தி நீங்களும், மாமாவும் அவர்கிட்ட பேசி அவரை இனிமேல் படத்தில் எந்த ஹீரோயின்ஸ் கூடவும் நடிக்கக் கூடாதுன்னு சொல்லலையே? ஆனால் நான் எடுத்த ஃபோட்டைவைப் பார்த்து மட்டும் ஏன் அப்படியொரு ரியாக்ஷன் கொடுத்தீங்க? அது உங்களுக்கே நியாயமாக இருந்துச்சா அத்தை? நான் உங்க மகளாக இல்லாமல் மருமகனாக இருக்கப் போய்த் தானே அப்படி ரியாக்ட் செய்தீங்க?” எனத் தன் மனதிலிருந்த வினாவை அவர் முன் வைத்ததும்,

உடனே அவளது கரங்களைப் பற்றிக் கொண்டு,”அச்சோ ஹாரா ம்மா! அந்த விஷயத்தைப் பார்த்ததும் நாங்க முதல்ல அப்படி சங்கடப்பட்டது உண்மை தான் ம்மா. ஆனால், அதுக்கு அடுத்த நிமிஷமே நீ இப்போ சொன்னதை யோசிச்சு, நம்ம மருமகளை நாமளே அப்படி நினைக்கிறது தப்புன்னு நியாயத்தைப் புரிஞ்சிக்கிட்டு நானும், உன் மாமாவும் ரொம்பவே வருத்தப்பட்டோம்! அதை நினைச்சுத் தான் நீ ஃபீல் பண்ணி எங்களை விட்டு ஒதுங்கி இருந்தால் அதுக்கு நாங்க மன்னிப்புக் கேட்டுக்கிறோம்மா!” என்று அவளிடம் உணர்வுப் பூர்வமாக கூறினார் அவளது மாமியார்.

அதில் திடுக்கிட்டவளோ,“அத்தை! பெரியவங்க நீங்க எங்கிட்ட போய் இப்படி பேசுறதும், சாரி கேட்கிறதும் எனக்குக் கஷ்டமாக இருக்கு! ப்ளீஸ்! இப்படி பண்ணாதீங்க!” எனக் கூறி அவரை அமைதிப்படுத்த முயன்றாள்.

“நாங்க அப்படி நினைச்சு, உன்னைப் பார்த்து முகத்தைச் சுழிச்சதும் தப்பு தானே ம்மா. அதனால் நீ இதை நினைச்சு எதுவும் சங்கடப்படத் தேவையில்லை ம்மா. நீயும் எங்களுக்கு மக மாதிரி தான் டா!” என்று அவளுக்குப் புரிய வைக்கும் முயற்சியில் இறங்கி விட்டார் மனோரமா.

அவருடைய சமாதான வார்த்தைகளைக் கேட்ட போதும் கூட அவளது மனக்காயம் ஆறாமல் இருந்தது.

ஆனால் தன் மாமியார் அதை நினைத்து மிகவும் வருந்துவதைக் கண்டு,”சரி விடுங்க அத்தை. இதையே பேச வேண்டாம்!”என்றவளிடம்,

“பகீயைக் கல்யாணம் செய்துக்கிட்டு வந்திருந்தாலும் கூட நீ எங்களையும் நம்பித் தானே இந்த வீட்டுக்குள்ளே மருமகளாக அடியெடுத்து வச்சிருப்ப? அதை நாங்க கொஞ்ச நாளிலேயே உடைச்சிட்டோமே! அதுக்குக் கண்டிப்பாக நாங்க உங்கிட்ட சாரி கேட்டுத் தான் ஆகனும்!” என்று உண்மையான வருத்தத்துடன் மொழிந்தார் மனோரமா.

“நீங்க ஒரு தடவை சாரி கேட்டதே எனக்குக் கஷ்டமாக இருக்கு. இதில் வார்த்தைக்கு வார்த்தை மன்னிப்புக் கேட்டுட்டு இருக்கீங்க! போதும் அத்தை” என்றவுடன்,

“இனிமேல் அப்படி எதுவும் நடக்காதுடா! நீ பழையபடி எங்க கூட எல்லாம் மனசு விட்டுப் பேசனும், சாதாரணமாக நடந்துக்கனும்! அது வரைக்கும் நான் இப்படித்தான் பேசுவேன். இன்னும் வேணும்னா உன் மாமாவையும் உங்கிட்ட வந்து மன்னிப்புக் கேட்கச் சொல்லவா?” என்று கூறியவரைப் பொய்யாக முறைத்து,

“ஐயோ அத்தை! அப்பறம், நான் அழுதுடுவேன்! மாமாவையும் ஏன் கஷ்டப்படுத்துறீங்க? அதெல்லாம் வேண்டாம்” என்றுரைத்தாள் ஹாரண்யா.

“சரி. அப்போ நீ இனிமேல் எங்க கிட்ட எப்பவும் போல நார்மலாகப் பேசுவ தானே?” என்றவரிடம்,

“கண்டிப்பாகப் பேசுவேன் அத்தை. இதைக்கப்புறம் பாருங்க, உங்க கூடவே தான் சுத்திட்டு இருக்கப் போறேன்!” என்று அவருக்கு உறுதி அளித்தாள் மருமகள்.

“அச்சோ! அப்பறம் அதைப் பார்த்துட்டு என் மகன் என்கிட்ட சண்டைக்கு வந்துடப் போறான்” என்று கூறிச் சிரித்தார் மனோரமா.

“சண்டைக்கு வந்தால் வந்துட்டுப் போறார் அத்தை” என்று சொல்லி அவள் புன்னகை புரியவும் தான் அவருக்கும் மனம் இலகுவானது.

அதன் பின்னர், அந்த விஷயத்தைத் தன் கணவரிடம் மறைக்காமல் கூறி விட்டார் மனோரமா.

அதைக் கேட்ட பாலேந்திரனும் கூட ஹாரண்யாவிடம் மனதார மன்னிப்புக் கோரினார்.

அதையும் பெருந்தன்மையுடன் ஏற்றுக் கொண்டாள் ஹாரண்யா.

இதையறிந்த பகீரதனோ, தன் மனைவியின் சாமர்த்தியத்தைக் கண்டு மெச்சிக் கொண்டான்.

ஆனால், அந்தப் பிரச்சினையின் முடிவில் ஹாரண்யாவிற்கும், அவளது மாமனார் மற்றும் மாமியாருக்கும் இடையே பரஸ்பர புரிதல் அதிகமாகியது என்றாலும் கூட,

அவளது கணவனிடம் மட்டும் அது சாத்தியப்படாமல், மேலும் பல பிரச்சினைகளுக்கு வழி வகை செய்யப் போவதை அறியவில்லை ஹாரண்யா.

- தொடரும்

நாளைக்கு யூடி போட முடியாத சூழ்நிலை ஃப்ரண்ட்ஸ். சாரி 🙏 வெள்ளியன்று சந்திப்போம்.
 

Shalini shalu

Moderator
நேற்றுப் போட வேண்டிய பதிவை இன்று பதிவிட்டுள்ளேன் நண்பர்களே!

🌸🌸🌸🌸

உன் நினைவிலே கரைகிறேன் - 34

இதே சமயத்தில், என்ன தான், தனது புதிய படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக இருந்தாலும் கூடப் பகீரதனை வெறுப்பேற்றுவதற்காக வேண்டியே தனக்கு வாய்ப்புகள் கிடைக்கும் போதெல்லாம் தான் தற்போது நடித்துக் கொண்டிருக்கும் படம் சம்பந்தமான அனைத்து விழாக்களையும் ஹாரண்யா தான் தொகுத்து வழங்க வேண்டும் என்று அவள் வேலை பார்க்கும் தொலைக்காட்சி நிறுவனத்திடம் கோரிக்கை விடுத்து விட்டதால் தங்களது நிறுவனத்தின் நலன் கருதி அதற்கு ஒப்புக் கொண்டார் அதன் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் சுதன்.

இவையெல்லாம் மற்றவர்களுக்கு யதேச்சையாக நடப்பது போலத் தான் தோன்றியது. ஒரு கணக்குப் போட்டுத் தான் செய்து கொண்டிருந்தான் மோஹித்.

அவனுக்குப் பகீரதனின் மேலிருந்த கோபம் அடங்காமல் உயிர்ப் பெற்றுக் கொண்டே இருந்தது.

ஏனெனில், அவனது பெற்றோரான தேவநாகரி மற்றும் சாரங்கனுக்குப் பல தொழில்கள் கைவசம் இருந்தாலும், அதில் அவர்களுக்குத் தேவைக்கு அதிகமாகப் பணம் வந்து கொண்டிருந்தாலும் கூடத் தங்களது மகனுக்குப் பிடித்த வேலையில் அவன் சிறந்து விளங்கவில்லையே! என்ற வருத்தம் அவர்களுக்கும் இருக்கும் தானே?

அதுவும் இல்லாமல், பகீரதனின் திருமணத்திற்குப் பிறகு, அவனுக்கு இன்னும் அதிகமாகப் பட வாய்ப்புகள் வரத் தொடங்கி விட்டது.

அதை அவ்வப்போது ஆற்றாமையாகவும், ஆதங்கமாகவும் வெளிப்படுத்திக் கொண்டே இருப்பார்கள்.

அப்போதெல்லாம்,”நான் என்னப் பண்றது? எல்லா படத்திலும் அவனையே ஹீரோவாகப் போட்றாங்க! எனக்குக் கிடைக்கிற படத்தில் நான் முழு உழைப்பைப் போட்டு நடிச்சாலும் கூட அதைப் பாராட்ட ஆளில்லை! நானும் என்னால் முடிஞ்ச அளவுக்கு முயற்சிப் பண்ணிட்டுத் தான் இருக்கேன்! அதை உங்க கிட்டயும் சொல்லி இருக்கேன் தானே? அப்படியிருந்தும் கூட, நீங்களே என்னை இப்படி பேசலாமா?” எனக் கூறி அவர்களிடம் தன் ஆதங்கத்தை வார்த்தைகளாக கொட்டினான் மோஹித்.

“அவன் எப்படி இவ்வளவு வருஷமாக அந்த முதல் இடத்திலேயே இருக்கிறான்னு யோசி. இல்லைன்னா, அவனை ஃபாலோ பண்ணு. அவனோட படங்களை நீ கைப்பற்ற டிரை பண்ணப் பாரு! இதையெல்லாம் உனக்கு நாங்க சொல்லித் தரனும்னு இருக்குப் பாரு!” என்று அவனிடம் குறைபட்டுக் கொண்டனர் இருவரும்.

அதைக் கேட்டு மிகவும் மனம் நொந்து போனவனை, மேலும் காயப்படுத்தும் விதமாக,”அவனுக்குக் கல்யாணம் ஆனதுக்கு அப்பறம் தான் இன்னும் நல்ல நல்ல படமெல்லாம் கிடைச்சிருக்கு. அதனால், உனக்கும் நாங்க ஒரு பொண்ணைப் பார்த்துக் கல்யாணம் செய்து வைக்கவா?” என்று கூறியவுடன்,

“ஐயோ! அதெல்லாம் வேண்டாம் ம்மா! ப்ளீஸ்!” எனத் தன் தாயிடம் கத்தினான் மோஹித்.

“அப்படின்னா உனக்கு ஒரு வருஷம் டைம் தர்றோம். அந்தப் பகீரதனைக் கீழே இறக்கி அந்த இடத்தை நீ கைப்பத்தனும்! சரியா?” என்று தன் மகனுக்குக் கட்டளையிட்டார் அவனது தந்தை.

“சரிங்க ப்பா” என அவருக்கு வாக்களித்து விட்டு, அதற்கான வேலையில் இறங்கி விட்டான்.

தன்னுடைய திருமணத்திற்காகச் சிறிது நாட்களுக்குப் படப்பிடிப்புத் தளத்திற்குச் செல்லாமல் பகீரதன் வீட்டில் இருக்கிறான் என்பதை அறிந்து கொண்ட சமயத்தில் இருந்தே,

அவனது அந்தப் படம் மற்றும் அவனது கைவசம் இருந்த மற்ற புதிய படங்களின் இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்களிடமும் பகீரதனுக்குத் திருமணம் ஆகி விட்டதால் இனிமேல் படத்தில் நடித்தால் பெண் விசிறிகள் யாவரும் அவனை ரசிக்க மாட்டார்கள் என்ற புரளியைத் தீவிரமாகப் பரப்பி விட்டுக் கொண்டிருந்தான் மோஹித்.

அதற்கு அவர்களோ,”நாங்க இதைப் பகீரதன் சார் கிட்டே பேசிப் பார்க்கிறோம்” என்று ஒரு சிலர் சொல்லி விட, மற்றவர்களோ அவனது பேச்சைக் காதிலேயே போட்டுக் கொள்ளவில்லை.

பகீரதனின் தற்போதைய படத்தை இயக்கும், இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரும் கூட அவனிடம் இதைப் பற்றிப் பேசுவதற்காக சந்தர்ப்பத்தைத் தேடிக் கொண்டு இருக்கும் போதே அந்த விஷயம் வேறொருவர் மூலமாக அவனது செவிகளை எட்டியது.

அதற்குப் பிறகுத் தாமதிக்காமல் அவன் தனது படத் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனருக்கு அழைத்து அவர்களிடம் பேசி விஷயத்தைச் சுமூகமாக முடித்துக் கொண்டவன்,

அதே நேரத்தில், அந்தப் படப்பிடிப்புத் தளத்திற்கு மோஹித்தை வரவழைத்து அங்கேயே அனைவரின் முன்னிலையிலும் அவனை அவமானப்படுத்தி திருப்திப்பட்டுக் கொண்டான் பகீரதன்.

அந்த சம்பவத்திற்குப் பின்னர், தனது பெற்றோரின் முகத்தைக் கூட அவனால் நிமிர்ந்து பார்க்க முடியவில்லை.

அதனால் அவனுக்குள் எரிமலைக் குழம்பு போல வெடித்து எழுந்த சினத்தை அடக்க வழியின்றி தவிக்க, பகீரதனின் மனைவியான ஹாரண்யா மீண்டும் தன் வேலையில் சேர்ந்து விட்டாள் என்ற தகவல் மோஹித்திற்கு வந்து சேர்ந்தது.

அதைக் கேட்டவுடன், தன்னுடைய மனதில் ஒரு திட்டத்தை உருவாக்கி விட்டு, அதற்குத் தகுந்தாற்போல் யாருக்கும் எந்த சந்தேகமும் வர விடாமல் கவனமாக காய் நகர்த்தத் தொடங்கினான்.

அதன் முதல் படியாக, ஹாரண்யாவைத் தன் படத்தின் அறிவிப்பு நிகழ்ச்சியை அவளைத் தொகுத்து வழங்க அழைத்தவனோ, அவளை நேரம் கிடைக்கும் போதெல்லாம் தன் சக நடிகர், நடிகைகளின் முன்னால் வைத்து ஏளனமாகப் பேசி அவமானப்படுத்திக் குரூர திருப்தி அடைந்தது மட்டுமின்றி,

ஹாரண்யாவிற்குப் பக்கத்தில் நின்று புகைப்படம் ஒன்றையும் எடுத்துக் கொள்ள, அது பகீரதனுக்குக் கடுங்கோபத்தை ஏற்படுத்தும் என்பதையும் சரியாக கணித்து வைத்திருந்தான் மோஹித்.

அதே போலவே, அவன் பற்ற வைத்த சிறு பொறி, பகீரதன் மற்றும் ஹாரண்யாவின் தினசரி நடவடிக்கைகளில் எதிர்மறையான மாற்றத்தை நிகழ்த்தி சண்டை மூட்டி விட்டிருந்தது.

தன்னுடைய இந்தத் திட்டம் கூடிய சீக்கிரத்தில் வெற்றி பெற்று விடும் என்ற நம்பிக்கையுடன் தனது படத்தில் நடிக்க ஆரம்பித்தான் மோஹித்.

ஆனாலும், நேரம் கிடைக்கும் போதெல்லாம் ஹாரண்யாவைத் தனது பகடைக் காயாக உபயோகித்துக் கொண்டிருக்க, இதை அறியாமல், அவள் தனக்கு உடைமைப்பட்டவள் என்பதை அழுத்தமாக நம்பியவன்,

மோஹித்தின் பட சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கும் வேலையைத் தவிர வேறு சிலதை மாற்றித் தருமாறு அந்த நிறுவனத்தின் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் சுதனுக்கும் கூட அழைத்துப் பேசி இருந்தான் பகீரதன்.

அதை அவர் மூலமாகத் தெரிந்து கொண்டவளோ,”நீங்க ஏன் இப்படியெல்லாம் பண்றீங்க பகீ? இது மூலமாக என் மேல் உங்களுக்கு நம்பிக்கை இல்லைன்றதை எனக்குப் புரிய வச்சிட்டு இருக்கீங்க! அப்படித் தான் எனக்குத் தோனுது! நமக்குக் கல்யாணம் ஆகி இன்னும் மூனு மாசம் கூட ஆகலை! அதுக்குள்ளேயே நமக்கு இடையில் இவ்வளவு பிரச்சினை, சண்டை வருது! இதையெல்லாம் பார்த்தால் எனக்கு ரொம்ப பயமாக இருக்கு பகீ! என்னை என் வேலையை நிம்மதியாகப் பார்க்க விடுங்க ப்ளீஸ்!” என்று அவனிடம் ஆற்றாமையுடன் கேட்டுக் கொண்டாள் ஹாரண்யா.

“எனக்கு உன் மேல் மலையளவு நம்பிக்கை இருக்கு ரணு. அதில் உனக்கு எந்தச் சந்தேகமும் வேண்டாம்.
நீ பார்க்கிற வேலையில் எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை! ஆனால், அந்த மோஹித் தான் என்னோட பிரச்சினை. அப்படியிருக்கும் போது நீ அவன் சம்பந்தமான நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்குறது எனக்குப் பிடிக்கலை! அதைத் தான் நான் உனக்குப் புரிய வைக்க டிரை பண்ணிட்டு இருக்கேன்!” என்று அவளிடம் கர்ஜிக்க,

“ஓஹ்! அவனை நினைச்சு இவ்வளவு கோபப்பட்டு என்கிட்ட சண்டை போட்டுட்டு இருக்கீங்களே, அப்படின்னா, அவன் இப்போ உங்களுக்குச் சமமான எதிரி ஆகிட்டானா?” எனக் கிண்டலாக வினவினாள்.

“போதும் ரணு! இப்படியே எனக்கு இணையாக சண்டை போட்றதை நிறுத்திட்டு நான் சொன்னதை ஃபாலோவ் பண்ணு!” என்றவனை எரித்து விடும் பார்வை பார்த்தவள்,

“அதைச் செய்ய முடியாதுன்னு சொன்னால் என்னப் பண்ணுவீங்க! நான் இந்த விஷயமாக நீ வேலை செய்ற டிவி ஸ்டேஷனோட ஹெட் கிட்டே கூட நான் பேசத் தயாராக இருக்கேன்!” என்று தீர்க்கமாக உரைத்தான் பகீரதன்.

“நீங்க அப்படி மட்டும் ஏதாவது செஞ்சு பாருங்க! அதுக்கப்புறம் நானும் என்னால் முடிஞ்சதை செய்வேன்!” என்று அவனுக்குச் சவால் விட்டாள் ஹாரண்யா.

அதற்குப் பிறகு, தங்களுக்கு இடையில் சத்தமில்லாமல் நிகழ்ந்து கொண்டிருக்கும் இந்தப் பனிப்போரைத் தங்கள் வீட்டாரின் முன் காட்டிக் கொள்ளாமல் இருந்தனர் இருவரும்.

அப்போது, பகீரதன் மற்றும் ஹாரண்யாவிற்குத் திருமணம் ஆகி மூன்று மாதங்கள் கடந்து விட்ட நிலையில் தாலிப் பிரித்துக் கோர்க்கும் சடங்கைச் செய்ய வேண்டிய சமயமும் வந்து விட்டிருந்தது.

அதனால், அதைப் பற்றித் தங்கள் சம்பந்தியிடம் கலந்துரையாடினர் ஹாரண்யாவின் பெற்றோர் இயமானன் மற்றும் மதுராஹினி.

“நம்ம ரெண்டு வீட்டோட சொந்தக்காரங்களையும் வரவழைச்சுத் தாலி பிரிச்சுக் கோர்க்கிற சடங்கை இங்கேயே நடத்திடலாம் சம்பந்தி” என்றார் மனோரமா.

“சரிங்க சம்பந்தி. அவங்க ரெண்டு பேருக்கும் புதுத்துணி எடுக்கனும்ல? அதனால் மாப்பிள்ளை எப்பவும் துணி தைக்கிற இடம் என்னன்னுச் சொல்றீங்களா? அங்கேயே துணியைத் தைச்சு வாங்கிடலாம்”எனக் கேட்டார் ஹாரண்யாவின் தாய்.

“அதெல்லாம் ஒன்னும் வேண்டாம் சம்பந்தி. நீங்க உங்களுக்கு ஏதுவான கடையிலேயே துணியைத் தைச்சு வாங்கிக் கொடுங்க. அவன் அதைப் போட்டுக்கட்டும்” என்று அவருக்கு அறிவுறுத்த,

“அப்போ ஓகே சம்பந்தி. நல்ல நாள், நேரம் குறிச்சு வாங்கிட்டுச் சொல்றேன். அன்னைக்கு நாங்க ரெண்டு பேரும் அங்கே வந்துட்றோம். நாம எல்லாரும் சேர்ந்து அந்தச் சடங்கை நல்லபடியாகச் செஞ்சி முடிச்சிடலாம்” என்று அவரிடம் கூறி விட்டு வைத்தார் மதுராஹினி.

இந்தச் செய்தியைப் பகீரதன் மற்றும் ஹாரண்யாவிடம் தெரிவித்து அந்த நிகழ்வு நடக்கும் நாளில் அவர்கள் தங்களது வேலைக்கு விடுப்பு எடுத்துக் கொள்ளுமாறு அவ்விருவருடைய பெற்றோர்களும் அவர்களுக்குக் கட்டளை விடுத்து விட்டு, அந்தச் சடங்கிற்காகத் தங்கச் சங்கிலியை வாங்கி வைத்து விட்டனர் ஹாரண்யாவின் பெற்றோர்.

- தொடரும்

இனித் திங்களன்று சந்திப்போம் ஃப்ரண்ட்ஸ்!
 

Shalini shalu

Moderator
உன் நினைவிலே கரைகிறேன் - 35

தாலி பிரித்துக் கோர்க்கும் சடங்கு மணமகனின் வீட்டில் தான் நடத்தப்பட வேண்டும் என்பதால், தங்கள் மகன் மற்றும் மருமகனுக்குப் புது உடைகள் எடுத்துத் தைத்து வாங்கிக் கொண்டவர்கள், ஹாரண்யாவிற்குப் பொன்னாலான சங்கிலியையும் வாங்கி விட்டனர் இயமானன் மற்றும் மதுராஹினி.

அந்தச் சடங்கு நடைபெறுவதற்கு மூன்று நாட்கள் இருக்கும் தருவாயில், அதை மனோரமாவிடம் தெரிவிக்கவும்,”எங்களோட நெருங்கிய சொந்தக்காரங்க கிட்டே சொல்லியாச்சு சம்பந்தி. நீங்களும் உங்களோட லிஸ்ட்டைக் கொடுத்துட்டா அவங்களுக்கும் சேர்த்து சாப்பாட்டுக்குச் சொல்லி வச்சிடலாம்” என்று வலியுறுத்தினார்.

“அட ஆமா சம்பந்தி. நீங்க அன்னைக்கே கேட்டீங்கள்ல? நாளைக்கு மறக்காமல் வாட்ஸப்பில் அனுப்பி விட்றேன்” என்று அவருக்கு உறுதி அளித்தார் மதுராஹினி.

“சரிங்க சம்பந்தி. சாப்பாட்டுக் கணக்குக்காகத் தான் கேட்டேன். பகீயும், ஹாராவும் ஃபங்க்ஷனை சிம்பிளாக நடத்தினா போதும்ன்னு சொல்லிட்டாங்க. அதில் உங்களுக்கு ஏதாவது மாற்றுக் கருத்து இருக்கா?”

“இல்லை சம்பந்தி. அவங்க சொல்ற மாதிரியே நடத்தலாம்” என்று ஒப்புக் கொள்ள,

“ஓகே சம்பந்தி. அப்படியே ஃபங்க்ஷனுக்கு வர்ற சுமங்கலிப் பொண்ணுங்களுக்குத் தட்டில் என்னென்ன வச்சுக் கொடுக்கனும்னும் பார்த்துச் சொல்லிடுங்க. அதைய எல்லாத்தையும் கூட முதல்லயே வாங்கி வைக்கனும்ல?” என்று அவரிடம் வினவினார் மனோரமா.

“சரிங்க சம்பந்தி” என்றவரோ மற்ற விவரங்களைப் பற்றியும் கலந்துரையாடி விட்டு அழைப்பைத் துண்டித்தார்கள் இருவரும்.

தங்களுக்காகத் தான் தங்களது பெற்றோர்கள் இவ்வளவு ஏற்பாடுகளைச் செய்கிறார்கள் என்பதைப் புரிந்து கொண்டவளோ, தன் கணவனுடன் ஏற்பட்ட பிணக்கை அவர்களிடம் காட்டிக் கொள்ளாமல் மிகவும் கவனமாக நடந்து கொள்ள முடிவெடுத்தாள் ஹாரண்யா.

அதே எண்ணம் தான் அவளது கணவனுக்கும் இருந்தது போலும்.

தன்னுடைய பெற்றோரின் முன்னால் மனைவியிடம் சிரித்த முகமாகவே பேசி, நடந்து கொண்டான் பகீரதன்.

தாலி பிரித்துக் கோர்க்கும் சடங்கிற்கு முந்தைய நாள் தனது அலுவலகத்தில் இருந்த ஹாரண்யாவோ,”நாளைக்கு எனக்குத் தாலி பிரிச்சுக் கோர்க்கிற ஃபங்க்ஷன் இருக்கு மினி. அதுக்கு சார் கிட்டே லீவ் கேட்கனும்” என்க,

“அப்படியா? இதை முன்னாடியே சொல்லாமல் இப்போ சொல்ற? ஆனால் பரவாயில்லை. கங்கிராட்ஸ்”என்று அவளுக்கு வாழ்த்து தெரிவித்தாள் தோழி.

“தாங்க்ஸ் மினி. நான் போய்ச் சுதன் சாரைப் போய்ப் பார்த்து லீவ் கேட்டுட்டு வர்றேன்” என்றதற்கு,

“ஹேய் ஹாரா! நீ நாளைக்கு ஒரு முக்கியமான ஃபங்க்ஷனை ஆங்கரிங் செய்ய வேண்டி இருக்கே? அதைத் தள்ளி வைக்க முடியாதே! என்னப் பண்ணப் போற?” என்று அவளிடம் வினவினாள் தாமினி.

“ம்ஹ்ம். ஏற்கனவே மறு வீட்டுச் சம்பிரதாயத்தை எங்களுக்காக மாத்தி வச்சாங்க! இப்போ இதையும் மாத்தி வைங்கன்னு நாங்க எங்க ரெண்டு பேரோட அப்பா, அம்மா கிட்டேயும் எப்படி கேட்கிறது? அதான், சார் கிட்டே பேசிப் பார்க்கலாம்னு டிஸைட் பண்ணி இருக்கேன். அந்த நிகழ்ச்சியை எனக்குப் பதிலாக நீ ஆங்கரிங் பண்ண மாட்டியா?” என்றாள் சோகத்துடன்.

“நான் உனக்காக அதை நிச்சயமாகப் பண்ணுவேன் ஹாரா. நீ முதல்ல சுதன் சாரைப் பார்த்துப் பேசு” என்று அவளுக்குத் தைரியம் கொடுத்து அனுப்பி வைத்தாள் அவளது தோழி.

தாமினியிடம் விடைபெற்றுக் கொண்டு நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரின் அறைக்குச் சென்று அனுமதி வாங்கி உள்ளே நுழைந்தாள் ஹாரண்யா.

“என்ன விஷயமாக என்னைப் பார்க்க வந்து இருக்கீங்க மிஸஸ். ஹாரண்யா?” எனக் கேட்டார் சுதன்.

“சார்… எனக்கு நாளைக்கு ஒரு நாள் மட்டும் லீவ் வேணும்” என்று தயக்கத்துடன் வினவவும்,

“அச்சோ! நாளைக்கு லீவ் வேணும்னு இப்போ வந்து கேட்கிறீங்களே! இரண்டு நாள் முன்னாடியாவது வந்து இன்ஃபார்ம் பண்ணி இருக்கலாம்ல?” என்றவரது குரலில் மிகுந்த ஏமாற்றம் வெளிப்பட்டதை உணர முடிந்தது.

ஆனாலும்,”நாளைக்குத் தாலி பிரிச்சுக் கோர்க்கிற ஃபங்க்ஷன் வச்சிருக்காங்க சார். அதனால் தான் லீவ் கேட்கிறேன்” என்றவளிடம்,

“உங்களை நம்பித் தானே நாளைக்கு ஈவ்னிங் ஒரு பெரிய விழாவைத் தொகுத்து வழங்குற பொறுப்பைக் கமிட் பண்ணி இருக்கோம்! நீங்க என்னடான்னா கடைசி நேரத்தில் வந்து இப்படி சொல்றீங்களே!” என்றவரோ, அந்த சில நிமிடங்களில் அவளது கணவன் யார் என்பதை மறந்து போய் விட்டார் சுதன்.

ஏனென்றால், ஹாரண்யா மற்றும் தாமினியைத் தவிர அந்த தொலைக்காட்சி நிறுவனத்தில் வேலை செய்து கொண்டு இருக்கும் மற்றவர்களுக்கு அவ்வளவு திறமை கிடையாது என்பதால் தான், பெரிய அளவில் வரும் நேர்காணல்கள் மற்றும் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கும் பொறுப்பை அவர்களிடம் கண்ணை மூடி ஒப்படைத்துக் கொண்டு இருந்தார்.

அப்படியிருக்க, மறுநாளும் அதே போன்றதொரு விழாவைத் தான், ஹாரண்யா தொகுத்து வழங்குவதாக இருந்தது.

ஆனால் அந்த வேலையை அவளால் செய்து முடிக்க முடியாது என்பதை தெரிந்து கொண்ட பிறகு அவருக்கு ஏற்பட்ட ஏமாற்றம் ஆதங்கமாக வெளிப்படத் தொடங்கி விட்டது.

அதில் வெகுவாக மனம் ஒடிந்து போனது ஹாரண்யாவிற்கு.

ஏனெனில், அவள் தன்னுடைய தாலி கோர்க்கும் சடங்கு எப்போது வேண்டுமானாலும் நடைபெறலாம், அந்த சமயத்தில் தனக்கு விடுப்பு அளிக்குமாறு அவரிடம் முன்னரே கூறி அனுமதி பெற்றிருந்தாள்.

ஆனால், அந்த நிகழ்ச்சி துரதிர்ஷ்டவசமாக அவளுக்கு முக்கியமான வேலை இருக்கும் நாளிலேயே நடைபெற உள்ளதால் அவளுக்கும் கூடச் சங்கடமாகி விட்டது.

ஆனாலும், அவளுக்கு வேறு வழியே கிடைக்கவில்லை என்பதால் சுதனிடமே சரணடைந்து விட்டாள் ஹாரண்யா.

அவரோ, அவள் எவ்வளவு தீவிரமாக எடுத்துரைத்த போதிலும் கூட அவளது நிலையைப் புரிந்து கொள்ளாமல் அவளால் தனக்கு ஏற்படப் போகும் பிரச்சினைக்கு மட்டுமே முக்கியத்துவம் அளித்துக் கொண்டு இருப்பதைக் கண்டு வேதனையுடன்,

“ப்ளீஸ் சார்! எனக்கு இந்த ஒரு தடவை மட்டும் லீவ் கொடுங்க! நான் இதுக்கப்புறம் இப்படி வந்து உங்ககிட்ட கேட்டு நிற்க மாட்டேன்!” என்று அவருக்கு உறுதி அளித்தாள் ஹாரண்யா.

“அப்படியா? இதை நான் எப்படி நம்புறது மிஸஸ். ஹாரண்யா? நீங்க உங்க கல்யாணத்துக்காக எடுத்துக்கிட்ட லீவ் முடிஞ்சு மறுபடியும் இப்போ தான் வேலைக்கு வந்தீங்க! அதுக்குள்ள உடனே வந்து லீவ் கேட்கிறீங்க! உங்களை நம்பி எப்படி லீவ் தர்றது? நீங்க சொல்றா மாதிரி இது கடைசி தடவையாக இல்லாமல் இருந்தால் நாங்க என்னப் பண்றது?” என்று கிடுக்கிப்பிடி கேள்வி கேட்டார் சுதன்.

அது அவளது மனதைச் சுருக்கென்று தைத்து விட எதுவும் பேசத் திராணியில்லாமற் அப்படியே நின்று விட,

அவரோ மேலும் தொடர்ந்து,”நீங்க தான் நம்ம டிவி ஸ்டேஷனோட பெஸ்ட் ஆங்க்கர்ன்னு சொல்லி நான் உங்களைப் பாராட்டினது எல்லாம் இப்போ வேஸ்ட்ன்னு என்னை நினைக்க வச்சிட்டீங்களே!” என்று கூறி அவளைக் காயப்படுத்தினார்.

உடனே,”போதும் சார்! நான் நாளைக்கு வேலைக்கு வர்றதுக்கு முயற்சி செய்றேன்!” என்றவளிடம்,

“அப்போ கூட உங்களால் வேலைக்கு வர்றேன்னு உறுதியாகச் சொல்ல முடியலையே? உங்களை நம்பி நாங்க அவ்வளவு பெரிய ரிஸ்க் எடுக்க முடியுமா சொல்லுங்க?” என்று அவளிடம் வினவினார் சுதன்.

அதைக் கேட்டு முகம் செத்துப் போனவளோ,”இந்த ஒரு தடவை என்னை நம்புங்க சார்” என்று அவள் கேட்கவும்,

அதற்கு அரை மனதாகச் சம்மதம் தெரிவித்தார்.

உடனே தாமினியிடம் கூடச் சொல்லிக் கொள்ளாமல் தன்னுடைய வீட்டிற்குச் சென்றவள், தன் கணவனுக்கு அழைத்து உடனே வீட்டிற்கு வருமாறு அறிவுறுத்தி விட்டுத் தன் மாமனார், மாமியாரையும் முன்னறைக்கு வரச் சொல்லிக் கேட்டுக் கொண்டாள் ஹாரண்யா.

அவர்களை மட்டுமில்லாமல் தன்னுடைய பெற்றோரையும் தன் புகுந்த வீட்டிற்கு வரும்படி இறைஞ்சவும், அவர்களும் அடித்துப் பிடித்து அங்கே வந்து சேர்ந்தனர்.

இறுதியாக தன்னுடைய படப்பிடிப்புத் தளத்தில் இருந்து கிளம்பி இல்லத்திற்கு வந்தவன், தன் மனைவியைக் கூர்மையான பார்வையால் அளவெடுத்துக் கொண்டே நீள் சாய்வு இருக்கையில் அமர்ந்து அவள் சொல்லப் போவதைக் கேட்பதற்காக காத்திருக்கலானான் பகீரதன்.

- தொடரும்
 
Status
Not open for further replies.
Top