எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

உன் நினைவிலே கரைகிறேன்! - கதை திரி

Status
Not open for further replies.

Shalini shalu

Moderator
உடல்நிலைக் குறைவால் நரம்பு ஊசிப் போட்டு இருக்கேன் ஃப்ரண்ட்ஸ். அதான் யூடி லேட் ஆகிடுச்சு. சாரி 🙏

🌸🌸🌸🌸

உன் நினைவிலே கரைகிறேன் - 31

தன்னுடைய நேர்காணலை முடித்து விட்டு வீட்டிற்கு வந்தவள், ஹாலில் தனக்காக காத்திருந்த குடும்பத்தைப் பார்த்தவளோ, அவர்களைப் பளிச்சிடும் புன்னகையுடன் ஏறிட்டாள் ஹாரண்யா.

ஆனால், அந்த மூவரின் முகங்களிலும் மருந்துக்கும் புன்னகையோ, மலர்வோ இல்லை என்பதைக் கவனித்து துணுக்குற்று,

“ஏன் எல்லாரும் முகத்தை இப்படி சீரியஸாக வச்சு இருக்கீங்க?” என்று வினவினாள்.

உடனே தங்களைச் சமாளித்துக் கொண்டனர் அவளது மாமனார், மாமியார்.

“அப்படியெல்லாம் இல்லையே? நீ சாப்பிட்டியா ம்மா?” என்றார் மனோரமா.

“ம்ம். சாப்பிட்டேன் அத்தை” என்றவளோ, பார்வையைக் கணவனின் புறம் திருப்ப, அவனோ உணர்ச்சியற்ற முகத்துடன் காட்சி அளித்தான்.

“அப்போ சரி ம்மா. நீ சோர்வாக இருப்ப. ரூமுக்குப் போய் ஃப்ரெஷ் ஆகிட்டு ரெஸ்ட் எடு” என்றவரிடம்,

“சரிங்க அத்தை” எனப் பதிலளித்து விட்டுப் பகீரதனைப் பார்க்க,

அவனோ,”நானும் உன் கூட வர்றேன் ரணு” என்று கூறி அவளுடன் தங்கள் அறைக்குச் சென்றான்.

“என்ன மனோ, இவன் மூஞ்சியே சரியில்லை, மருமகளை எதையாவது சொல்லிடுவானோ!” என்று தன் மனைவியிடம் கவலையுடன் கேட்டார் பாலேந்திரன்.

“எனக்கும் அந்த பயம் தான் ங்க. அவ வந்ததில் இருந்து இவன் ஒரு வார்த்தைக் கூடப் பேசலை. அதையும் ஹாரா கவனிச்சிட்டுத் தான் இருந்தாள்” என்றார் மனோரமா.

“அந்த மோஹித் கூட நின்னு மருமக ஃபோட்டோ எடுத்துக்கிட்டதைப் பார்த்து அவனுக்குக் கோபம் வந்துருச்சோ?”

“அப்படித் தான் நினைக்கிறேன் ங்க. அதைப் பார்த்த உடனே நமக்கே ஒரு மாதிரி தானே இருந்துச்சு?”

பாலேந்திரன்,“முதல்ல அப்படித் தான் இருந்தது மனோ. ஆனால் நம்மப் பையனே ஒரு நடிகனாக இருக்கும் போது அவன் செய்யாத விஷயத்தையா மருமக பண்ணிட்டான்னு நினைக்கும் போது எனக்கு ஹாரா மேலே இருந்த வருத்தம் எல்லாம் போயிடுச்சு. ஆனால், அந்தப் பொண்ணு உள்ளே வர்றப்போ நம்ம முக மாற்றத்தைப் பார்த்து குழப்பம் ஆகிடுச்சு. அதுவும் அந்த ராஸ்கல் இறுகிப் போய் எதுவுமே பேசாமல் நிற்கவும் அவளோட உற்சாகம் எல்லாம் வடிஞ்சா மாதிரி ஆகிட்டா. ரூமில் என்னென்ன சொல்லி அவளைக் காயப்படுத்தப் போறான் - னு நினைக்கிறேன்!” என்று உரைத்தவரிடம்,

“அப்படி ஏதாவது நடந்தால் மருமகளே பார்த்துப்பாள். அப்படியும் அவன் ஓவராகப் பண்ணா நாம எடுத்துச் சொல்லலாம்” என்று உறுதியாக கூறினார் மனோரமா.

இதே சமயம், தங்கள் அறையில், கணவனும், மனைவியும் ஒருவர் மற்றொருவரை கவனித்துக் கொண்டு தான் தத்தமது வேலைகளைச் செய்து கொண்டு இருந்தார்கள்.

கணவனின் அமைதியைக் கண்டு கோபம் வந்து விட,”பகீ! நானும் ரொம்ப நேரமாக உங்களைக் கவனிச்சிட்டுத் தான் இருக்கேன். இப்போ வரைக்கும் நீங்க என்கிட்ட எதுவுமே பேசலை. எப்பவுமே நான் என்னோட இண்டர்வியூ முடிச்சிட்டு வந்தால் நீங்க மூனு பேரும் என்னை அவ்வளவு சந்தோஷமா வரவேற்பீங்க! ஆனால், இன்னைக்கு எல்லாம் தலைகீழாக நடக்குது! நான் உற்சாகமாக வந்தா நீங்க எல்லாம் முகத்தைத் தூக்கி வச்சிட்டு இருக்கீங்க! என்ன தான் ஆச்சு உங்களுக்கு?” என்று அவனிடம் பொரிந்து தள்ளிய போதும் கூட,

மௌனத்தைக் கடைபிடித்தவனைக் கண்டு வெறியாகி, அவனது முகத்தைத் தன் அருகில் இழுத்து,”உங்க கிட்ட தான் கேட்டுட்டு இருக்கேன்! நீங்க இதுக்குப் பதில் சொல்லித் தான் ஆகனும்!” என்று கத்தினாள் ஹாரண்யா.

தங்களது உரையாடல்கள் கீழே கேட்காது என்ற தைரியத்தில் சற்று அதிகமாகவே சத்தமிட்டு விட்டாள்.

அவளிடம்,”நீ மோஹித்தோட பட ஃபங்கஷனுக்கு ஆங்கரிங் பண்ணப் போறேன்னு ஏன் என் கிட்ட முன்னாடியே சொல்லலை?” என்று கேட்டவனைப் புரியாமல் பார்த்தவள்,

“அதனால் என்ன ஆச்சு இப்போ?” என்றாள் அவனது மனைவி.

பகீரதன்,“முதல்ல நான் கேட்டதுக்குப் பதில் சொல்லு!” என்றதும்,

“என்னோட வேலையில் தினசரி நடக்குறதை எல்லாம் உங்ககிட்ட சொல்லனும்னு அவசியம் இல்லையே? நீங்க அப்படியா நடந்துக்கிறீங்க? ஷூட்டிங் இருக்குன்னு மட்டும் தான் சொல்வீங்க. அது மாதிரி தான் நானும் நடந்துக்கிட்டேன். அதே மாதிரி, நம்மக் கல்யாணத்துக்கு முன்னோடியும் கூட நான் மோஹித்தை இண்டர்வியூ செய்திருக்கேனே? இப்போ மட்டும் உங்களுக்கு என்னப் பிரச்சினை?” என்றவளை அழுத்தமாகப் பார்த்தவனோ,

“நீ அவனை இண்டர்வியூ செய்ததில் எனக்குப் பிரச்சினை தான். ஆனால், அதை விட பெரிய பிரச்சினையாக இருந்தது நீ அவன் பக்கத்தில் நின்னு ஃபோட்டோ எடுத்தது தான்! அதை எதுக்கு செஞ்ச?” என்றவனது கேள்விக்கு,

“அவர் தான் என் கூட ஃபோட்டோ எடுக்க ஆசைப்பட்டார். நீங்களே அந்த லைவில் பார்த்து இருப்பீங்களே?” என்ற பதிலைச் சொன்னாள் ஹாரண்யா.

“ஆமாம். ஆனால் நீ அதை மறுத்து இருக்கலாமே! ஏன் மறுக்கலை?” என்றவனை ஆயாசமாகப் பார்த்தவள்,

“அது ஏன்னு உங்களுக்குப் புரியும்ன்னு நினைச்சேன்! ஆனால் நீங்களே இப்படி கேட்கிறீங்களே? நீங்க எவ்வளவு வருஷமாக சினி ஃபீல்டில் இருக்கீங்க? இதையெல்லாம் மறுக்க முடியாதுன்னு உங்களுக்குத் தெரியாதா பகீ?” என்றதும்,

“நான் கண்டிப்பாக மறுத்து இருக்கேன். நீ நினைச்சாலும் அதைச் செஞ்சி இருக்கலாம்” என்று மொழிந்தான் பகீரதன்.

“என்னால் முடிஞ்சா மறுத்து இருப்பேன் பகீ. அங்கே அவரோட ஃபேன்ஸ் அவ்வளவு பேர் இருந்தாங்க. அவங்களும் அவரோட கோரிக்கையை ஏத்துக்க சொல்லிக் கேட்டுக்கிட்டாங்க. அதான் ஃபோட்டோ எடுத்துக்கிட்டேன். அதோட என்னோட வேலையில் இதெல்லாம் சகஜம். ஏன் நீங்க கூடத் தான் உங்களைப் பேட்டி எடுக்கிற ஆங்கர்ஸ் கூட ஃபோட்டோ எடுத்துக்கிட்டீங்க. அதுக்கு நானும் சண்டை போடவா?” என்று அவனிடம் சண்டைக்கோழியாகத் துள்ளினாள் ஹாரண்யா.

“ம்ம். போடு. யாரு வேண்டாம்னு சொன்னா” என்று அலட்சியமாகப் பதிலளிக்க,

“ஓஹ் அப்படியா? அப்போ அதுக்கும், இதுக்கும் சரியாகப் போச்சுப் போங்க!” என்று அவனுக்குக் குறையாத அலட்சிய பாவனையுடன் கூறினாள்.

“ஆஹான்! நான் கேட்டதுக்கு இந்தப் பதிலைச் சொல்லிட்ட. என்னோட அப்பா, அம்மா கேட்டால் இதையே தான் சொல்லுவியா?” என்று கிண்டலாக வினவினான் பகீரதன்.

அதைக் கேட்டதும், தான் வீட்டிற்குள் நுழைந்ததுமே தன்னுடைய மாமனார், மாமியாரின் முகங்களைப் பார்த்த போதே அவர்கள் தன்னைப் பார்த்தப் பார்வையில் சங்கடம் தான் இருந்தது என்பது அவளுக்கு இப்போது ஞாபகம் வந்தது.

மனைவியின் முகம் சுருங்கி விட்டதைக் கண்டு, அவளுக்குத் தன்னுடைய கேள்வியின் அர்த்தம் புரிந்து விட்டது என்று திருப்தி அடைந்தவன்,”என்ன ரணு? அவங்க கிட்ட சொல்ல உங்ககிட்ட வேற பதில் இருக்கா என்ன?” என்றவனிடம்,

“இருக்கு பகீ! அதை அவங்க என்கிட்ட கேட்கும் போது சொல்லிக்கிறேன்! நீங்க கவலையை விடுங்க” என்று தெனாவெட்டாகப் பதில் கூறினாள் ஹாரண்யா.

அதில் அவளை முறைத்தவனோ,”நீ அவங்க கிட்ட என்ன வேணும்னாலும் சொல்லிக்கோ. ஆனால் இனிமேல் அந்த மோஹித் சம்பந்தப்பட்ட எந்த ஃபங்கஷனுக்கும் ஆங்கரிங் செய்யக் கூடாது! புரிஞ்சிதா?” என்று அவளுக்குக் கட்டளை இட்டான் பகீரதன்.

“திஸ் இஸ் டூ மச் பகீ! அது எப்படி முடியும்?” என்று வாக்குவாதம் செய்ய,

“அதெல்லாம் எனக்குத் தெரியாது ரணு! நீ இதுக்கு ஒத்துக்கிட்டு தான் ஆகனும்!” என்ற கணவனிடம்,

“நான் ஏன் இனிமேல் மோஹித்தைப் பேட்டி எடுக்கக் கூடாது? என்னக் காரணம்னு சொல்லுங்க?” எனக் கேட்டாள் ஹாரண்யா.

“அவன் எனக்கு சமமான ஆள் கிடையாது! என்னை விடப் பிரபலமானவனும் இல்லை. அப்படியிருக்கும் போது, சினிமாவில் முதல் இடத்தில் இருக்கிற என்னோட மனைவி இரண்டாவது இடத்தில் இருக்கிற ஒருத்தனைப் பேட்டி எடுக்கிறதும், அவன் கூட நின்னு ஃபோட்டோ எடுத்துக்கிறதும் எனக்குப் பிடிக்கலை ரணு! அதான்!” என்று அவளுக்கு விளக்கினான் பகீரதன்.

“நீங்க ரொம்ப சின்னப்பிள்ளைத் தனமாக யோசிக்கிறீங்க பகீ! அது உங்களுக்கே தெரியலை. ஆங்கரிங் என்னோட வேலை. நான் அதுக்கு விசுவாசமாக இருக்கனும்ன்னு விரும்புறேன். அதனால், என்னை யாரைப் பேட்டி எடுக்கச் சொன்னாலும் எடுப்பேன்! அது எனக்குத் தனிப்பட்ட முறையில் பிடிக்கலைன்னா மட்டும் தான் அதைச் செய்ய மாட்டேன்!” என்று தீவிரமாக உரைத்தாள் ஹாரண்யா.

“அப்படியா விஷயம்? அப்போ உனக்கு நான் முக்கியமா, உன் ஆங்கரிங் வேலை முக்கியமான்னு கேட்டால் என்ன சொல்லுவ?” என்று கேட்டு வைக்க,

அவளோ,“நானும் அதையே உங்ககிட்ட திருப்பிக் கேட்பேன்! அதுக்கு நீங்க என்னப் பதில் சொல்றீங்களோ, அதே தான் என்னோட பதிலாகவும் இருக்கும்” என நிதானமாக உரைத்தாள் அவனது மனைவி.

அவளைத் தன் புருவத்தை உயர்த்தி மெச்சியவனோ,”நான் சொல்ற அப்பவே சம்மதிச்சிடு ரணு. இல்லைன்னா நீ எதிர்காலத்தில் ரொம்ப வருத்தப்படுவ!” என அவளை எச்சரித்தான் பகீரதன்.

அதற்கு,”அதை அப்போ பார்த்துக்கிறேன். இப்போ எனக்குத் தலைவலி வந்துருச்சு. அதனால் டீ குடிக்கப் போறேன். உங்களுக்கும் கண்டிப்பாகத் தலை வலிக்கும்னு எனக்குத் தெரியும். அதனால் நீங்களும் வந்து காபி குடிங்க” என்றவளிடம்,

“ஷூயர்” என்ற கணவனை அழைத்துக் கொண்டு கீழே போனாள் ஹாரண்யா.


- தொடரும்
 
Last edited:

Shalini shalu

Moderator
உன் நினைவிலே கரைகிறேன் - 32

அவர்கள் இருவரும் ஒன்றாக வருவதைப் பார்த்த பாலேந்திரனும், மனோரமாவும் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.

தங்கள் மகனும், மருமகளும் ஒற்றுமையாக வருகிறார்கள் என்பதே அவர்களுக்குப் போதுமானதாக இருந்தது.

ஆனால், தங்களைக் கண்களில் வேதனை பொங்க பார்த்துக் கொண்டே வந்த ஹாரண்யாவின் முகத்தை அவர்கள் கவனிக்கவே இல்லை.

அவர்களுக்கான காபி, டீ யை எடுத்து வரச் சொல்லி விட்டு,”உன்னோட நேர்காணலை நாங்க ரெண்டு பேரும் லைவில் பார்த்தோம் மா. ரொம்ப நல்லா இருந்துச்சு. உனக்கு எங்களோட வாழ்த்துகள்!”என்று தன்னிடம் கூறிப் குறுநகை புரிந்த மனோரமாவிடம்,

“அப்படியா? தாங்க்ஸ் அத்தை” என்று விழிகளில் எட்டாத புன்னகையுடன் நன்றி தெரிவித்தாள் ஹாரண்யா.

அதையும் அவரோ, பாலேந்திரனோ கண்டு கொள்ளவில்லை. ஆனால், அது பகீரதனுக்குப் புரிந்து விட்டிருக்க,”அவங்க தான் உன்னைச் சங்கடப்படுத்துறா மாதிரி எதுவும் கேட்கலையே ரணு. அப்பறம் ஏன் இப்படி ஒட்டாமல் பதில் சொல்லிட்டு இருக்கிற?” என்று மனைவியின் காதுகளில் முணுமுணுத்தான்.

“இதுக்குப் பதில் என்னன்னு உங்களுக்கே தெரியும். அதனால் என்னை நோண்டாமல் சும்மா இருங்க” என்று அவனுக்கு மட்டும் கேட்கும் குரலில் எச்சரிக்கை விடுத்தாள்.

“ஓஹோ ஓகே!” என்று அதற்கு ஒப்புக் கொண்டவனை, அவனது பெற்றோரோ, குறுகுறுவென்று பார்க்கவும்,

“க்கும், நானும் இதையே தான் எங்க ரூமில் வச்சு இவகிட்ட சொன்னேன்னு இப்போ ஞாபகப்படுத்திட்டு இருந்தேன்” என அவர்களுக்குச் சமாதானமாக கூறினான் பகீரதன்.

மனோரமா,“சரிடா. காபியைக் குடி” என்றவர்,

“அதான், பெரிய இண்டர்வியூ ஒன்னை முடிச்சுக் கொடுத்துட்டியே! நாளைக்கும் அப்படி ஏதாவது இருக்கா ஹாரா? இல்லைன்னா, லீவ் போட்டு ரெஸ்ட் எடுக்கலாம்ல?” எனத் தன் மருமகளிடம் கரிசனத்துடன் கேட்க,

“நாளைக்கு இன்டர்வியூ எடுக்கத் தேவை இல்லை அத்தை. ஆனால் அங்கே புதுசாக வேலைக்குச் சேர்ந்தவங்களுக்குத் தினமும் பயிற்சி தரனும். அதுக்கு நான் கண்டிப்பாக போய்த் தான் ஆகனும். லீவ் போட முடியாது அத்தை” என்றுரைத்தாள் ஹாரண்யா.

“இன்னும் உங்க கல்யாண சடங்கில் உனக்குத் தாலி பிரிச்சுக் கோர்க்கிறது மட்டும் தான் இருக்கு. அதையும் நல்லபடியாக செஞ்சி முடிச்சிட்டா அதுக்கப்புறம் நாங்க உங்களை எந்த தொந்தரவும் செய்ய மாட்டோம்” என்று அவளிடம் கூறினார் மனோரமா.

“அப்போ அதை உடனே செய்ய வேண்டியது தானே ம்மா?” என்று கேட்டான் மகன்.

“அதை எந்த மாசத்துல செய்யனுமோ, அப்போ தான் செய்யனும். உன் அவசரத்துக்கு எல்லாம் உடனே பண்ண முடியாது!” என்று கூறி அவனை அதட்டினார்.

“ஊஃப்! சரி. உங்களுக்கு எப்போ விருப்பமோ அப்போவே அந்தச் சடங்கைச் செய்யுங்க” என்று அவரிடம் சமாதானக் கொடியைப் பறக்க விட்டான் பகீரதன்.

“அவங்க ரெண்டு பேரும் மட்டும் தான் பேசிட்டு இருக்காங்க. நீ ஏன் எதுவுமே பேசாமல் அமைதியாக இருக்கிற ம்மா?” என்று மருமகளிடம் கேட்டார் பாலேந்திரன்.

“ஆங்! அத்தையோட கேள்விக்கு நான் சொல்ல வேண்டிய பதிலை உங்கப் பையனே சொல்லிட்டாரே! அதான், நான் அமைதியாக இருக்கேன் மாமா” என்றாள் ஹாரண்யா.

“ஓஹோ, சரி ம்மா” என்றவுடன், அதற்கு மேல் அங்கே இருக்க மனமில்லாமல்,

“அந்த ஃபங்க்ஷன் முடிஞ்ச அப்போவே என் அம்மா கால் பண்ணி இருந்தாங்க. அப்போ பேச முடியலை. இப்போ போய்ப் பேசிட்டு வர்றேன்” எனப் பொதுவாகச் சொன்னவள், தங்கள் அறைக்குச் செல்லவும்,

“அவ கூட சண்டை எதுவும் போட்டியா பகீ?” எனத் தனது மகனிடம் வினவினார் மனோரமா.

“இல்லையே ம்மா. ஏன்?”

“நீங்க கீழே வந்ததில் இருந்து அவளோட முகம் சரியில்லாமல் இருந்துச்சு. அதான் கேட்டேன்”

“அங்கே ஃபங்க்ஷனில் நின்னுட்டே ஆங்கரிங் பண்ணியதால் அவளுக்கு உடம்பு வலிக்குது போல ம்மா. அதனால் தான் அப்படி இருக்காள் - ன்னு நினைக்கிறேன்” என்று அவருக்கு விளக்கம் அளித்தான் பகீரதன்.

“அட ஆமாம்! நான் அதை யோசிக்கலை பாரு! அவ ஃபோன் பேசி முடிச்சிட்டு வரட்டும். நல்லா சுடு தண்ணீரில் குளிச்சிட்டுச் சாப்பிட்டுத் தூங்கட்டும்”என்று மருமகளுக்குப் பரிந்து பேசினார் அவனது அம்மா.

இதே வேளையில், தன் செல்பேசியில் இருந்து தாய்க்கு அழைத்து,

“ம்மா, எப்படி இருக்கீங்க? அப்பா நல்லா இருக்காரா?”என்று வினவினாள் ஹாரண்யா.

மதுராஹினி,“நாங்க ரெண்டு பேரும் நல்லா இருக்கோம் டி. நீங்க எல்லாரும் எப்படி இருக்கீங்க?” என்று அவளிடம் கேட்டார்.

“நல்லா இருக்கோம் மா”

“நீ வேலைக்குப் போக ஆரம்பிச்சதுல இருந்து நாம பேசிக்கவே இல்லை. நீ வேற பிஸியாக இருப்பியோன்னு நானும், உன் அப்பாவும் உன்னைத் தொல்லைப் பண்ண வேண்டாம்னு ஃபோன் பண்ணாமல் விட்டுட்டோம். நீயாவது உன் ஃப்ரீ டைமில் கால் செஞ்சுப் பேசலாம்ல?” என்று அவளிடம் குறைபட்டுக் கொண்டார்.

“அதனால் தான் இப்போ கால் செஞ்சேன் ம்மா” என்றவளிடம்,

“ஓஹோ! சரி தான்” என்று கூறிப் புன்னகை செய்தார் அவளது அன்னை.

“ம்ஹ்ம். அதை முழுசாகப் பார்த்தீங்களா ம்மா?”என்று அவரிடம் வினவினாள் ஹாரண்யா.

“ஏன்டி நீ ஆங்கரிங் பண்ணிட்டு இருக்கும் போது நாங்க அதை முழுசாகப் பார்க்காமல் இருப்போமா? கடைசி வரைக்கும் பார்த்தோம்”

“அதில் உங்களுக்கு எதுவுமே வித்தியாசமாகத் தோனலையா?”

“அப்படி எதுவும் தோனலையே! நீ இப்படி கேட்கிறது தான் எனக்கு வித்தியாசமாக இருக்கு. என்னாச்சுடா?” எனக் கனிவுடன் கேட்டார் மதுராஹினி.

“ஒன்னும் இல்லை ம்மா. அதைப் பார்த்துட்டு அப்பாவும் எதுவும் சொல்லலையா?”என்று வினவிய மகளிடம்,

“அவர் ‘நல்லா இருக்கு, நம்மப் பொண்ணை ரொம்ப நாள் கழிச்சு இப்படி மேடையில் நின்னுப் பேசுறதைப் பார்க்கிறப்போ சந்தோஷமாக இருக்குன்னு தான் சொன்னார். வேற என்ன சொல்லனும்னு நினைக்கிற?” என்று கேட்கவும்,

அவர் கூறிய வார்த்தைகள் யாவும் அவளலு மனதைக் குளிர வைத்து விட,”வேற எதுவும் சொல்ல வேண்டாம் மா. இதுவே போதும்! தாங்க்யூ சோ மச்” என்று நெகிழ்ந்து போய்க் கூறியவளிடம்,

“அடியேய்! உனக்கு என்ன தான் ஆச்சு? ஏன் இப்படி எல்லாம் பேசிட்டு இருக்கிற?” எனச் சத்தம் போட்டார் மதுராஹினி.

“ரொம்ப நாள் கழிச்சு அவ்வளவு பெரிய நிகழ்ச்சியை ஆங்கரிங் பண்ணி இருக்கேன்ல ம்மா? அதான் எப்படி பண்ணேன்னு உங்ககிட்ட அபிப்பிராயத்தைக் கேட்டேன். அவ்வளவு தான்” என்று கூறிச் சமாளித்தாள் ஹாரண்யா.

“ம்ம். சரிடா. இது நீ டீ குடிக்கிற டைமாச்சே! இன்னும் குடிக்கலையா?”

“டீ குடிச்சிட்டு வந்து தான் பேசிட்டு இருக்கேன் ம்மா” என்று தாயிடம் தெரிவித்தாள்.

“ஓகேடா. தாலி பிரிச்சிக் கோர்க்கிற சடங்கை எப்போ வைக்கலாம்னு உங்க மாமியார் எதுவும் சொன்னாங்களா?”என்றார் மதுராஹினி.

ஹாரண்யா,“ஆமாம் மா. இப்போ கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் அதைப் பத்திப் பேசினாங்க.அநேகமாக அடுத்த மாசம் வைக்க வாய்ப்பு இருக்கு”

“ஓஹ், சரி ம்மா” என்றவரிடம்,

ஓரிரு வார்த்தைகள் பேசி விட்டு அழைப்பை வைத்தவள், என்னதான், தனக்குத் திருமணம் ஆனவுடன், சற்று தாமதித்து வேலைக்குச் செல்லுமாறு தன் தாயும், தந்தையும் அறிவுரை வழங்கி இருந்தாலும் கூடத் தற்போது அவர்கள் இருவரும் தனது நேர்காணலைப் பற்றி இவ்வளவு பாராட்டிப் பேசுகிறார்கள் என்பதையும், தன்னைப் பற்றி அவர்கள் இருவரும் எதுவும் தவறாக எண்ணவில்லை என்பதையும் நினைத்துப் பார்க்கையில் கண்களில் இருந்து ஆனந்தக் கண்ணீர் வருவதை ஹாரண்யாவால் தடுக்க இயலவில்லை.

அதே மனநிலையுடன் ஹாலுக்கு வர,

“என்னம்மா உங்க அம்மா கிட்டே பேசியாச்சா?” என்றார் மனோரமா.

“பேசிட்டேன் அத்தை” என்றதும்,

“நீ பார்க்க ரொம்பவே டயர்ட் ஆகத் தெரியுற. முதல்ல போய் ஹீட்டர் போட்டுக் குளிச்சிட்டு வா. நைட் சாப்பிட்டுச் சீக்கிரம் தூங்கிரு” என்று அவளுக்கு அறிவுறுத்த,

“சரிங்க அத்தை” என்றவள், தன் கணவரிடம்,

“நான் போய்க் குளிச்சிட்டு வர்றேன் பகீ” எனக் கூறி விட்டுச் சென்றாள் ஹாரண்யா.

“உனக்கு மறுபடியும் எப்போ ஷூட்டிங் ஸ்டார்ட் ஆகுது?” என மகனிடம் கேட்டார் பாலேந்திரன்.

“படத்தில் என் சீன்ஸ்ஸை எல்லாம் எடுத்து முடிச்சாச்சு ம்மா. அதனால் நான் அங்கே எப்போ வேணும்னாலும் போய்க்கலாம்” எனப் பதிலளித்தான் பகீரதன்.

“அப்படின்னா சரி” என்றவரோ, வெகு நேரம் அமர்ந்திருந்ததால் முதுகு வலிக்கவும், எழுந்து அறைக்குள் சென்று படுத்துக் கொண்டார் அவனது தந்தை.

அதன் பின்னர், மாடிக்குச் சென்றவனோ, தன் மனைவி குளித்து விட்டு வந்ததைக் கண்டு,”இன்னைக்குச் சீக்கிரம் டின்னர் சாப்பிட்டுட்டு ரெஸ்ட் எடு ரணு. நாளைக்கு எழுந்து கிளம்ப முடிஞ்சா வேலைக்குப் போ. இல்லைன்னா அம்மா சொன்னா மாதிரி லீவ் போட்ரு” என்று அவளிடம் பரிவாகச் சொன்னான் பகீரதன்.

“இல்லைங்க. நான் இனிமேல் எதுக்காகவும் என் வேலைக்கு லீவ் போடப் போறது இல்லைன்னு முடிவு செஞ்சிருக்கேன். அதனால் கண்டிப்பாக ஸ்டுடியோவுக்குப் போவேன்” என்று அவனிடம் உறுதியாக கூறினாள் ஹாரண்யா.

“ஏன் இப்படிச் சொல்ற? நானும், அம்மாவும் உன் நல்லதுக்குத் தானே சொல்றோம்” என்றவனிடம்,

“அதெல்லாம் ஒன்னும் சொல்ல வேண்டாம். நான் பார்த்துக்கிறேன்” எனக் கூறவும்,

“அப்பறம் உன் இஷ்டம்” என்று அலட்சியத்துடன் தன் தோள்களைக் குலுக்கி விட்டுக் கொண்டான் பகீரதன்.

அதற்குப் பிறகு, இரவு உணவை உண்ணும் சமயத்திலும் கூடத், தன் மாமனார், மாமியாரிடம் அதிகமாக முகம் கொடுத்துப் பேசவில்லை ஹாரண்யா.

அதைக் கவனித்தாலும் கூட அது ஏன் என்று அவளிடம் கேட்கவில்லை பகீரதன்.

ஆனால், நாட்கள் செல்லச் செல்ல அவளது அந்தச் சுபாவத்தைக் கண்டு கொண்டு அதைப் பற்றிப் பேசுவதற்கான சந்தர்ப்பத்திற்காக காத்திருந்தார் மனோரமா.

- தொடரும்
 

Shalini shalu

Moderator
உன் நினைவிலே கரைகிறேன் - 33

தங்கள் மூவரும் உரையாடிக் கொண்டு இருக்கும் சமயங்களில் எல்லாம் தள்ளி இருக்காமல் தயங்காமல் தானும் உள்ளே நுழைந்து அதில் கலந்து கொள்ளும் தன் மருமகள் இப்போதெல்லாம் அதில் ஒட்டாத் தன்மையுடன் இருப்பதைப் பல சமயங்களில் கண் கூடாகப் பார்த்தும், கவனித்து விட்டு,

அவளது உத்தியோகம் தரும் அழுத்தத்தினால் கூட இவ்வாறு நடந்து கொள்கிறாள் என்று தான் முதலில் எண்ணி இருந்த மனோரமாவிற்கு, நாட்கள் செல்லச் செல்ல, நடந்து முடிந்த நிறைய நிகழ்வுகளை வைத்துப் பார்க்கும் போது அவருக்கு அவளது நடவடிக்கையின் மீதான குழப்பம் வலுத்தது.

அதைப் பற்றி மகனிடம் கேட்டாலும் அதையே தான் கூறினான். அதனால், தானே நேரடியாகத் தன் மருமகளிடம் கேட்டு விட முடிவெடுத்துப் பகீரதன் வெளியே சென்றிருந்த நேரம், அன்று ஹாரண்யாவிற்கு விடுமுறை நாள் என்பதால் அப்போதே அவளிடம் பேசச் சென்றார் மனோரமா.

தனது அறையின் வெளியே நின்று காத்திருந்தவரிடம்,”ஏன் அங்கேயே நிற்கிறீங்க அத்தை? உள்ளே வாங்க” என அவருக்கு அனுமதி அளிக்கவும்,

உடனே அறைக்குள் நுழைந்தவரோ, அவளுக்குச் சற்று இடைவெளி விட்டு அமர்ந்து கொண்டு மருமகளின் முகத்தை ஆராய்ந்தார்.

அதைக் கவனித்தவளோ,”என்னாச்சு அத்தை? ஏன் என் முகத்தை இப்படிக் குறுகுறுன்னுப் பார்த்துட்டு இருக்கீங்க?” என்று தன் மாமியாரிடம் வினவினாள் ஹாரண்யா.

“நீ உன் மனசில் எதையாவது போட்டுக் குழப்பிக்கிட்டு இருக்கிறா மாதிரி தோனுச்சு. அது என்னன்னு உன் முகத்தைப் பார்த்துத் தெரிஞ்சிக்கலாம்னு தான்” என்றவரைக் குழப்பத்துடன் பார்த்தவளோ,

“நீங்க என்ன சொல்ல வர்றீங்கன்னு எனக்குப் புரியலை அத்தை. நான் எதை நினைச்சுக் குழம்பிட்டு இருக்கப் போறேன்?” என்று அவரிடம் வினவினாள்.

“அது தெரியாமல் தான் நானும் முழிச்சிட்டு இருந்தேன். அதான், அதைப் பத்தி உங்கிட்டயே வெளிப்படையாக கேட்கலாம்னு வந்திருக்கேன்” என்றார் மனோரமா.

அதைக் கேட்டதும் அமைதியடைந்து விட்ட மருமகளிடம்,

“அந்த மோஹித்தோட ஃபங்க்ஷனை ஆங்கரிங் பண்ணிட்டு வந்ததுக்கு அடுத்த நாளில் இருந்து நீ எங்க யார்கிட்டேயும் சரியாகப் பேசுறதே இல்லை. அதைப் பத்திக் கேட்கத் தான் வந்தேன். அன்னைக்கு நீ கஷ்டப்பட்றா மாதிரி வேறெதாவது நடந்துச்சா? ஏன் இப்படி எங்க கிட்ட ஒட்டாமல் நடந்துக்கிற? எங்க மேல் உனக்கு எதுவும் மனக்கசப்பா?” என்று கனிவாக கேட்கவும்,

அதற்கு அவளோ,”அதுக்கு முன்னாடி நானும் உங்ககிட்ட வெளிப்படையாக ஒன்னைக் கேட்டுத் தெரிஞ்சிக்கனும்னு நினைக்கிறேன். அதுக்குப் பர்மிஷன் தருவீங்களா அத்தை?” என்று அவரிடம் தீர்க்கமான குரலில் கேட்டாள் ஹாரண்யா.

“ம்ம். கேளு ம்மா” என்று அவளுக்கு அனுமதி அளித்தார் மனோரமா.

“நான் அன்னைக்கு அந்தப் புரோகிராமை முடிச்சிட்டு வந்தப்போ உங்களையும், மாமாவையும் பார்த்தப்போ உங்க பார்வையில் ஒரு வித்தியாசத்தை உணர்ந்தேன். தெளிவாகச் சொல்லனும்னா நீங்க ரெண்டு பேரும் என்னைச் சங்கடமாகப் பார்த்தீங்க. நான் என்னன்னு விசாரிச்சதுக்கு அப்பறமாகத் தான் நீங்க அதை நார்மல் ஆக மாத்திக்கிக்கிட்டீங்க. அது எதனால் ன்னு நான் தெரிஞ்சிக்கலாமா அத்தை?” என்றதைக் கேட்டதும் அவருக்குத் தூக்கி வாரிப் போட்டது.

ஏனெனில், அன்றைய தினம், அவள் தங்கள் முக மாற்றத்தைக் கண்டுபிடித்து, அதன் காரணத்தை அறிந்து வருத்தப்பட்டு விடக் கூடாது என்பதற்காகத் தான் தங்களுடைய முக பாவனைகளைச் சட்டென்று மாற்றிக் கொண்டதை தங்கள் மருமகளுடைய கண்களுக்குத் தப்பாமல் தெரிந்து விட்டதே! எனத் தர்ம சங்கடத்துடன் அவளை ஏறிட,

இவளோ மேலும் தொடர்ந்து,”நீங்க ரெண்டு பேரும் அன்னைக்கு என்ன மாதிரியான எண்ணத்தோட அப்படியொரு ரியாக்ஷன் கொடுத்தீங்கன்னு சொல்றீங்களா அத்தை? ப்ளீஸ்!” என்று வினவியவளைக் குற்ற உணர்வுடன் ஏறிட்டார் அவளது மாமியார்.

அவரது மௌனத்தைக் கண்டு”நீங்க சொல்லலைன்னா என்ன? அது எதுக்குன்னு நான் சொல்லவா அத்தை?” என அவரிடம் வேதனையுடன் கேட்டாள் ஹாரண்யா.

அதற்கும் அவர் பேசாமல் இருக்க,”அந்த ஃபங்க்ஷனில் மோஹித் கூட நின்னு நான் ஃபோட்டோ எடுத்ததைப் பார்த்து உங்களுக்கும், மாமாவுக்கும் சங்கடமாக இருந்துச்சுல்ல அத்தை? அதனால் தானே என்னை அப்படி பார்த்தீங்க?” என்று தொண்டை கமறலுடன் வினவ,

அவர் தலையைக் குனிந்து கொண்டு இருப்பதைக் கண்டுத் தன்னுடைய அனுமானம் உண்மை தான் என்பதை உணர்ந்தவள் அந்த நிமிடம் முதல் அவளுக்கு அந்த வீட்டில் இருக்கும் அனைவரையும் அந்நியமாகி விட்டதை உணர்ந்தாள் ஹாரண்யா.

“ஏன் அத்தை நானாவது பரவாயில்லை ஆங்கரிங் வேலை தான் பார்க்கிறேன். ஆனால், உங்கப் பையன் எல்லா ஹீரோயின்ஸ் கூடயும் ஒரு படம் முழுக்க நடிக்கிறார். அப்படியிருக்கும் போது, அதைப் பத்தி நீங்களும், மாமாவும் அவர்கிட்ட பேசி அவரை இனிமேல் படத்தில் எந்த ஹீரோயின்ஸ் கூடவும் நடிக்கக் கூடாதுன்னு சொல்லலையே? ஆனால் நான் எடுத்த ஃபோட்டைவைப் பார்த்து மட்டும் ஏன் அப்படியொரு ரியாக்ஷன் கொடுத்தீங்க? அது உங்களுக்கே நியாயமாக இருந்துச்சா அத்தை? நான் உங்க மகளாக இல்லாமல் மருமகனாக இருக்கப் போய்த் தானே அப்படி ரியாக்ட் செய்தீங்க?” எனத் தன் மனதிலிருந்த வினாவை அவர் முன் வைத்ததும்,

உடனே அவளது கரங்களைப் பற்றிக் கொண்டு,”அச்சோ ஹாரா ம்மா! அந்த விஷயத்தைப் பார்த்ததும் நாங்க முதல்ல அப்படி சங்கடப்பட்டது உண்மை தான் ம்மா. ஆனால், அதுக்கு அடுத்த நிமிஷமே நீ இப்போ சொன்னதை யோசிச்சு, நம்ம மருமகளை நாமளே அப்படி நினைக்கிறது தப்புன்னு நியாயத்தைப் புரிஞ்சிக்கிட்டு நானும், உன் மாமாவும் ரொம்பவே வருத்தப்பட்டோம்! அதை நினைச்சுத் தான் நீ ஃபீல் பண்ணி எங்களை விட்டு ஒதுங்கி இருந்தால் அதுக்கு நாங்க மன்னிப்புக் கேட்டுக்கிறோம்மா!” என்று அவளிடம் உணர்வுப் பூர்வமாக கூறினார் அவளது மாமியார்.

அதில் திடுக்கிட்டவளோ,“அத்தை! பெரியவங்க நீங்க எங்கிட்ட போய் இப்படி பேசுறதும், சாரி கேட்கிறதும் எனக்குக் கஷ்டமாக இருக்கு! ப்ளீஸ்! இப்படி பண்ணாதீங்க!” எனக் கூறி அவரை அமைதிப்படுத்த முயன்றாள்.

“நாங்க அப்படி நினைச்சு, உன்னைப் பார்த்து முகத்தைச் சுழிச்சதும் தப்பு தானே ம்மா. அதனால் நீ இதை நினைச்சு எதுவும் சங்கடப்படத் தேவையில்லை ம்மா. நீயும் எங்களுக்கு மக மாதிரி தான் டா!” என்று அவளுக்குப் புரிய வைக்கும் முயற்சியில் இறங்கி விட்டார் மனோரமா.

அவருடைய சமாதான வார்த்தைகளைக் கேட்ட போதும் கூட அவளது மனக்காயம் ஆறாமல் இருந்தது.

ஆனால் தன் மாமியார் அதை நினைத்து மிகவும் வருந்துவதைக் கண்டு,”சரி விடுங்க அத்தை. இதையே பேச வேண்டாம்!”என்றவளிடம்,

“பகீயைக் கல்யாணம் செய்துக்கிட்டு வந்திருந்தாலும் கூட நீ எங்களையும் நம்பித் தானே இந்த வீட்டுக்குள்ளே மருமகளாக அடியெடுத்து வச்சிருப்ப? அதை நாங்க கொஞ்ச நாளிலேயே உடைச்சிட்டோமே! அதுக்குக் கண்டிப்பாக நாங்க உங்கிட்ட சாரி கேட்டுத் தான் ஆகனும்!” என்று உண்மையான வருத்தத்துடன் மொழிந்தார் மனோரமா.

“நீங்க ஒரு தடவை சாரி கேட்டதே எனக்குக் கஷ்டமாக இருக்கு. இதில் வார்த்தைக்கு வார்த்தை மன்னிப்புக் கேட்டுட்டு இருக்கீங்க! போதும் அத்தை” என்றவுடன்,

“இனிமேல் அப்படி எதுவும் நடக்காதுடா! நீ பழையபடி எங்க கூட எல்லாம் மனசு விட்டுப் பேசனும், சாதாரணமாக நடந்துக்கனும்! அது வரைக்கும் நான் இப்படித்தான் பேசுவேன். இன்னும் வேணும்னா உன் மாமாவையும் உங்கிட்ட வந்து மன்னிப்புக் கேட்கச் சொல்லவா?” என்று கூறியவரைப் பொய்யாக முறைத்து,

“ஐயோ அத்தை! அப்பறம், நான் அழுதுடுவேன்! மாமாவையும் ஏன் கஷ்டப்படுத்துறீங்க? அதெல்லாம் வேண்டாம்” என்றுரைத்தாள் ஹாரண்யா.

“சரி. அப்போ நீ இனிமேல் எங்க கிட்ட எப்பவும் போல நார்மலாகப் பேசுவ தானே?” என்றவரிடம்,

“கண்டிப்பாகப் பேசுவேன் அத்தை. இதைக்கப்புறம் பாருங்க, உங்க கூடவே தான் சுத்திட்டு இருக்கப் போறேன்!” என்று அவருக்கு உறுதி அளித்தாள் மருமகள்.

“அச்சோ! அப்பறம் அதைப் பார்த்துட்டு என் மகன் என்கிட்ட சண்டைக்கு வந்துடப் போறான்” என்று கூறிச் சிரித்தார் மனோரமா.

“சண்டைக்கு வந்தால் வந்துட்டுப் போறார் அத்தை” என்று சொல்லி அவள் புன்னகை புரியவும் தான் அவருக்கும் மனம் இலகுவானது.

அதன் பின்னர், அந்த விஷயத்தைத் தன் கணவரிடம் மறைக்காமல் கூறி விட்டார் மனோரமா.

அதைக் கேட்ட பாலேந்திரனும் கூட ஹாரண்யாவிடம் மனதார மன்னிப்புக் கோரினார்.

அதையும் பெருந்தன்மையுடன் ஏற்றுக் கொண்டாள் ஹாரண்யா.

இதையறிந்த பகீரதனோ, தன் மனைவியின் சாமர்த்தியத்தைக் கண்டு மெச்சிக் கொண்டான்.

ஆனால், அந்தப் பிரச்சினையின் முடிவில் ஹாரண்யாவிற்கும், அவளது மாமனார் மற்றும் மாமியாருக்கும் இடையே பரஸ்பர புரிதல் அதிகமாகியது என்றாலும் கூட,

அவளது கணவனிடம் மட்டும் அது சாத்தியப்படாமல், மேலும் பல பிரச்சினைகளுக்கு வழி வகை செய்யப் போவதை அறியவில்லை ஹாரண்யா.

- தொடரும்

நாளைக்கு யூடி போட முடியாத சூழ்நிலை ஃப்ரண்ட்ஸ். சாரி 🙏 வெள்ளியன்று சந்திப்போம்.
 

Shalini shalu

Moderator
நேற்றுப் போட வேண்டிய பதிவை இன்று பதிவிட்டுள்ளேன் நண்பர்களே!

🌸🌸🌸🌸

உன் நினைவிலே கரைகிறேன் - 34

இதே சமயத்தில், என்ன தான், தனது புதிய படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக இருந்தாலும் கூடப் பகீரதனை வெறுப்பேற்றுவதற்காக வேண்டியே தனக்கு வாய்ப்புகள் கிடைக்கும் போதெல்லாம் தான் தற்போது நடித்துக் கொண்டிருக்கும் படம் சம்பந்தமான அனைத்து விழாக்களையும் ஹாரண்யா தான் தொகுத்து வழங்க வேண்டும் என்று அவள் வேலை பார்க்கும் தொலைக்காட்சி நிறுவனத்திடம் கோரிக்கை விடுத்து விட்டதால் தங்களது நிறுவனத்தின் நலன் கருதி அதற்கு ஒப்புக் கொண்டார் அதன் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் சுதன்.

இவையெல்லாம் மற்றவர்களுக்கு யதேச்சையாக நடப்பது போலத் தான் தோன்றியது. ஒரு கணக்குப் போட்டுத் தான் செய்து கொண்டிருந்தான் மோஹித்.

அவனுக்குப் பகீரதனின் மேலிருந்த கோபம் அடங்காமல் உயிர்ப் பெற்றுக் கொண்டே இருந்தது.

ஏனெனில், அவனது பெற்றோரான தேவநாகரி மற்றும் சாரங்கனுக்குப் பல தொழில்கள் கைவசம் இருந்தாலும், அதில் அவர்களுக்குத் தேவைக்கு அதிகமாகப் பணம் வந்து கொண்டிருந்தாலும் கூடத் தங்களது மகனுக்குப் பிடித்த வேலையில் அவன் சிறந்து விளங்கவில்லையே! என்ற வருத்தம் அவர்களுக்கும் இருக்கும் தானே?

அதுவும் இல்லாமல், பகீரதனின் திருமணத்திற்குப் பிறகு, அவனுக்கு இன்னும் அதிகமாகப் பட வாய்ப்புகள் வரத் தொடங்கி விட்டது.

அதை அவ்வப்போது ஆற்றாமையாகவும், ஆதங்கமாகவும் வெளிப்படுத்திக் கொண்டே இருப்பார்கள்.

அப்போதெல்லாம்,”நான் என்னப் பண்றது? எல்லா படத்திலும் அவனையே ஹீரோவாகப் போட்றாங்க! எனக்குக் கிடைக்கிற படத்தில் நான் முழு உழைப்பைப் போட்டு நடிச்சாலும் கூட அதைப் பாராட்ட ஆளில்லை! நானும் என்னால் முடிஞ்ச அளவுக்கு முயற்சிப் பண்ணிட்டுத் தான் இருக்கேன்! அதை உங்க கிட்டயும் சொல்லி இருக்கேன் தானே? அப்படியிருந்தும் கூட, நீங்களே என்னை இப்படி பேசலாமா?” எனக் கூறி அவர்களிடம் தன் ஆதங்கத்தை வார்த்தைகளாக கொட்டினான் மோஹித்.

“அவன் எப்படி இவ்வளவு வருஷமாக அந்த முதல் இடத்திலேயே இருக்கிறான்னு யோசி. இல்லைன்னா, அவனை ஃபாலோ பண்ணு. அவனோட படங்களை நீ கைப்பற்ற டிரை பண்ணப் பாரு! இதையெல்லாம் உனக்கு நாங்க சொல்லித் தரனும்னு இருக்குப் பாரு!” என்று அவனிடம் குறைபட்டுக் கொண்டனர் இருவரும்.

அதைக் கேட்டு மிகவும் மனம் நொந்து போனவனை, மேலும் காயப்படுத்தும் விதமாக,”அவனுக்குக் கல்யாணம் ஆனதுக்கு அப்பறம் தான் இன்னும் நல்ல நல்ல படமெல்லாம் கிடைச்சிருக்கு. அதனால், உனக்கும் நாங்க ஒரு பொண்ணைப் பார்த்துக் கல்யாணம் செய்து வைக்கவா?” என்று கூறியவுடன்,

“ஐயோ! அதெல்லாம் வேண்டாம் ம்மா! ப்ளீஸ்!” எனத் தன் தாயிடம் கத்தினான் மோஹித்.

“அப்படின்னா உனக்கு ஒரு வருஷம் டைம் தர்றோம். அந்தப் பகீரதனைக் கீழே இறக்கி அந்த இடத்தை நீ கைப்பத்தனும்! சரியா?” என்று தன் மகனுக்குக் கட்டளையிட்டார் அவனது தந்தை.

“சரிங்க ப்பா” என அவருக்கு வாக்களித்து விட்டு, அதற்கான வேலையில் இறங்கி விட்டான்.

தன்னுடைய திருமணத்திற்காகச் சிறிது நாட்களுக்குப் படப்பிடிப்புத் தளத்திற்குச் செல்லாமல் பகீரதன் வீட்டில் இருக்கிறான் என்பதை அறிந்து கொண்ட சமயத்தில் இருந்தே,

அவனது அந்தப் படம் மற்றும் அவனது கைவசம் இருந்த மற்ற புதிய படங்களின் இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்களிடமும் பகீரதனுக்குத் திருமணம் ஆகி விட்டதால் இனிமேல் படத்தில் நடித்தால் பெண் விசிறிகள் யாவரும் அவனை ரசிக்க மாட்டார்கள் என்ற புரளியைத் தீவிரமாகப் பரப்பி விட்டுக் கொண்டிருந்தான் மோஹித்.

அதற்கு அவர்களோ,”நாங்க இதைப் பகீரதன் சார் கிட்டே பேசிப் பார்க்கிறோம்” என்று ஒரு சிலர் சொல்லி விட, மற்றவர்களோ அவனது பேச்சைக் காதிலேயே போட்டுக் கொள்ளவில்லை.

பகீரதனின் தற்போதைய படத்தை இயக்கும், இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரும் கூட அவனிடம் இதைப் பற்றிப் பேசுவதற்காக சந்தர்ப்பத்தைத் தேடிக் கொண்டு இருக்கும் போதே அந்த விஷயம் வேறொருவர் மூலமாக அவனது செவிகளை எட்டியது.

அதற்குப் பிறகுத் தாமதிக்காமல் அவன் தனது படத் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனருக்கு அழைத்து அவர்களிடம் பேசி விஷயத்தைச் சுமூகமாக முடித்துக் கொண்டவன்,

அதே நேரத்தில், அந்தப் படப்பிடிப்புத் தளத்திற்கு மோஹித்தை வரவழைத்து அங்கேயே அனைவரின் முன்னிலையிலும் அவனை அவமானப்படுத்தி திருப்திப்பட்டுக் கொண்டான் பகீரதன்.

அந்த சம்பவத்திற்குப் பின்னர், தனது பெற்றோரின் முகத்தைக் கூட அவனால் நிமிர்ந்து பார்க்க முடியவில்லை.

அதனால் அவனுக்குள் எரிமலைக் குழம்பு போல வெடித்து எழுந்த சினத்தை அடக்க வழியின்றி தவிக்க, பகீரதனின் மனைவியான ஹாரண்யா மீண்டும் தன் வேலையில் சேர்ந்து விட்டாள் என்ற தகவல் மோஹித்திற்கு வந்து சேர்ந்தது.

அதைக் கேட்டவுடன், தன்னுடைய மனதில் ஒரு திட்டத்தை உருவாக்கி விட்டு, அதற்குத் தகுந்தாற்போல் யாருக்கும் எந்த சந்தேகமும் வர விடாமல் கவனமாக காய் நகர்த்தத் தொடங்கினான்.

அதன் முதல் படியாக, ஹாரண்யாவைத் தன் படத்தின் அறிவிப்பு நிகழ்ச்சியை அவளைத் தொகுத்து வழங்க அழைத்தவனோ, அவளை நேரம் கிடைக்கும் போதெல்லாம் தன் சக நடிகர், நடிகைகளின் முன்னால் வைத்து ஏளனமாகப் பேசி அவமானப்படுத்திக் குரூர திருப்தி அடைந்தது மட்டுமின்றி,

ஹாரண்யாவிற்குப் பக்கத்தில் நின்று புகைப்படம் ஒன்றையும் எடுத்துக் கொள்ள, அது பகீரதனுக்குக் கடுங்கோபத்தை ஏற்படுத்தும் என்பதையும் சரியாக கணித்து வைத்திருந்தான் மோஹித்.

அதே போலவே, அவன் பற்ற வைத்த சிறு பொறி, பகீரதன் மற்றும் ஹாரண்யாவின் தினசரி நடவடிக்கைகளில் எதிர்மறையான மாற்றத்தை நிகழ்த்தி சண்டை மூட்டி விட்டிருந்தது.

தன்னுடைய இந்தத் திட்டம் கூடிய சீக்கிரத்தில் வெற்றி பெற்று விடும் என்ற நம்பிக்கையுடன் தனது படத்தில் நடிக்க ஆரம்பித்தான் மோஹித்.

ஆனாலும், நேரம் கிடைக்கும் போதெல்லாம் ஹாரண்யாவைத் தனது பகடைக் காயாக உபயோகித்துக் கொண்டிருக்க, இதை அறியாமல், அவள் தனக்கு உடைமைப்பட்டவள் என்பதை அழுத்தமாக நம்பியவன்,

மோஹித்தின் பட சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கும் வேலையைத் தவிர வேறு சிலதை மாற்றித் தருமாறு அந்த நிறுவனத்தின் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் சுதனுக்கும் கூட அழைத்துப் பேசி இருந்தான் பகீரதன்.

அதை அவர் மூலமாகத் தெரிந்து கொண்டவளோ,”நீங்க ஏன் இப்படியெல்லாம் பண்றீங்க பகீ? இது மூலமாக என் மேல் உங்களுக்கு நம்பிக்கை இல்லைன்றதை எனக்குப் புரிய வச்சிட்டு இருக்கீங்க! அப்படித் தான் எனக்குத் தோனுது! நமக்குக் கல்யாணம் ஆகி இன்னும் மூனு மாசம் கூட ஆகலை! அதுக்குள்ளேயே நமக்கு இடையில் இவ்வளவு பிரச்சினை, சண்டை வருது! இதையெல்லாம் பார்த்தால் எனக்கு ரொம்ப பயமாக இருக்கு பகீ! என்னை என் வேலையை நிம்மதியாகப் பார்க்க விடுங்க ப்ளீஸ்!” என்று அவனிடம் ஆற்றாமையுடன் கேட்டுக் கொண்டாள் ஹாரண்யா.

“எனக்கு உன் மேல் மலையளவு நம்பிக்கை இருக்கு ரணு. அதில் உனக்கு எந்தச் சந்தேகமும் வேண்டாம்.
நீ பார்க்கிற வேலையில் எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை! ஆனால், அந்த மோஹித் தான் என்னோட பிரச்சினை. அப்படியிருக்கும் போது நீ அவன் சம்பந்தமான நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்குறது எனக்குப் பிடிக்கலை! அதைத் தான் நான் உனக்குப் புரிய வைக்க டிரை பண்ணிட்டு இருக்கேன்!” என்று அவளிடம் கர்ஜிக்க,

“ஓஹ்! அவனை நினைச்சு இவ்வளவு கோபப்பட்டு என்கிட்ட சண்டை போட்டுட்டு இருக்கீங்களே, அப்படின்னா, அவன் இப்போ உங்களுக்குச் சமமான எதிரி ஆகிட்டானா?” எனக் கிண்டலாக வினவினாள்.

“போதும் ரணு! இப்படியே எனக்கு இணையாக சண்டை போட்றதை நிறுத்திட்டு நான் சொன்னதை ஃபாலோவ் பண்ணு!” என்றவனை எரித்து விடும் பார்வை பார்த்தவள்,

“அதைச் செய்ய முடியாதுன்னு சொன்னால் என்னப் பண்ணுவீங்க! நான் இந்த விஷயமாக நீ வேலை செய்ற டிவி ஸ்டேஷனோட ஹெட் கிட்டே கூட நான் பேசத் தயாராக இருக்கேன்!” என்று தீர்க்கமாக உரைத்தான் பகீரதன்.

“நீங்க அப்படி மட்டும் ஏதாவது செஞ்சு பாருங்க! அதுக்கப்புறம் நானும் என்னால் முடிஞ்சதை செய்வேன்!” என்று அவனுக்குச் சவால் விட்டாள் ஹாரண்யா.

அதற்குப் பிறகு, தங்களுக்கு இடையில் சத்தமில்லாமல் நிகழ்ந்து கொண்டிருக்கும் இந்தப் பனிப்போரைத் தங்கள் வீட்டாரின் முன் காட்டிக் கொள்ளாமல் இருந்தனர் இருவரும்.

அப்போது, பகீரதன் மற்றும் ஹாரண்யாவிற்குத் திருமணம் ஆகி மூன்று மாதங்கள் கடந்து விட்ட நிலையில் தாலிப் பிரித்துக் கோர்க்கும் சடங்கைச் செய்ய வேண்டிய சமயமும் வந்து விட்டிருந்தது.

அதனால், அதைப் பற்றித் தங்கள் சம்பந்தியிடம் கலந்துரையாடினர் ஹாரண்யாவின் பெற்றோர் இயமானன் மற்றும் மதுராஹினி.

“நம்ம ரெண்டு வீட்டோட சொந்தக்காரங்களையும் வரவழைச்சுத் தாலி பிரிச்சுக் கோர்க்கிற சடங்கை இங்கேயே நடத்திடலாம் சம்பந்தி” என்றார் மனோரமா.

“சரிங்க சம்பந்தி. அவங்க ரெண்டு பேருக்கும் புதுத்துணி எடுக்கனும்ல? அதனால் மாப்பிள்ளை எப்பவும் துணி தைக்கிற இடம் என்னன்னுச் சொல்றீங்களா? அங்கேயே துணியைத் தைச்சு வாங்கிடலாம்”எனக் கேட்டார் ஹாரண்யாவின் தாய்.

“அதெல்லாம் ஒன்னும் வேண்டாம் சம்பந்தி. நீங்க உங்களுக்கு ஏதுவான கடையிலேயே துணியைத் தைச்சு வாங்கிக் கொடுங்க. அவன் அதைப் போட்டுக்கட்டும்” என்று அவருக்கு அறிவுறுத்த,

“அப்போ ஓகே சம்பந்தி. நல்ல நாள், நேரம் குறிச்சு வாங்கிட்டுச் சொல்றேன். அன்னைக்கு நாங்க ரெண்டு பேரும் அங்கே வந்துட்றோம். நாம எல்லாரும் சேர்ந்து அந்தச் சடங்கை நல்லபடியாகச் செஞ்சி முடிச்சிடலாம்” என்று அவரிடம் கூறி விட்டு வைத்தார் மதுராஹினி.

இந்தச் செய்தியைப் பகீரதன் மற்றும் ஹாரண்யாவிடம் தெரிவித்து அந்த நிகழ்வு நடக்கும் நாளில் அவர்கள் தங்களது வேலைக்கு விடுப்பு எடுத்துக் கொள்ளுமாறு அவ்விருவருடைய பெற்றோர்களும் அவர்களுக்குக் கட்டளை விடுத்து விட்டு, அந்தச் சடங்கிற்காகத் தங்கச் சங்கிலியை வாங்கி வைத்து விட்டனர் ஹாரண்யாவின் பெற்றோர்.

- தொடரும்

இனித் திங்களன்று சந்திப்போம் ஃப்ரண்ட்ஸ்!
 

Shalini shalu

Moderator
உன் நினைவிலே கரைகிறேன் - 35

தாலி பிரித்துக் கோர்க்கும் சடங்கு மணமகனின் வீட்டில் தான் நடத்தப்பட வேண்டும் என்பதால், தங்கள் மகன் மற்றும் மருமகனுக்குப் புது உடைகள் எடுத்துத் தைத்து வாங்கிக் கொண்டவர்கள், ஹாரண்யாவிற்குப் பொன்னாலான சங்கிலியையும் வாங்கி விட்டனர் இயமானன் மற்றும் மதுராஹினி.

அந்தச் சடங்கு நடைபெறுவதற்கு மூன்று நாட்கள் இருக்கும் தருவாயில், அதை மனோரமாவிடம் தெரிவிக்கவும்,”எங்களோட நெருங்கிய சொந்தக்காரங்க கிட்டே சொல்லியாச்சு சம்பந்தி. நீங்களும் உங்களோட லிஸ்ட்டைக் கொடுத்துட்டா அவங்களுக்கும் சேர்த்து சாப்பாட்டுக்குச் சொல்லி வச்சிடலாம்” என்று வலியுறுத்தினார்.

“அட ஆமா சம்பந்தி. நீங்க அன்னைக்கே கேட்டீங்கள்ல? நாளைக்கு மறக்காமல் வாட்ஸப்பில் அனுப்பி விட்றேன்” என்று அவருக்கு உறுதி அளித்தார் மதுராஹினி.

“சரிங்க சம்பந்தி. சாப்பாட்டுக் கணக்குக்காகத் தான் கேட்டேன். பகீயும், ஹாராவும் ஃபங்க்ஷனை சிம்பிளாக நடத்தினா போதும்ன்னு சொல்லிட்டாங்க. அதில் உங்களுக்கு ஏதாவது மாற்றுக் கருத்து இருக்கா?”

“இல்லை சம்பந்தி. அவங்க சொல்ற மாதிரியே நடத்தலாம்” என்று ஒப்புக் கொள்ள,

“ஓகே சம்பந்தி. அப்படியே ஃபங்க்ஷனுக்கு வர்ற சுமங்கலிப் பொண்ணுங்களுக்குத் தட்டில் என்னென்ன வச்சுக் கொடுக்கனும்னும் பார்த்துச் சொல்லிடுங்க. அதைய எல்லாத்தையும் கூட முதல்லயே வாங்கி வைக்கனும்ல?” என்று அவரிடம் வினவினார் மனோரமா.

“சரிங்க சம்பந்தி” என்றவரோ மற்ற விவரங்களைப் பற்றியும் கலந்துரையாடி விட்டு அழைப்பைத் துண்டித்தார்கள் இருவரும்.

தங்களுக்காகத் தான் தங்களது பெற்றோர்கள் இவ்வளவு ஏற்பாடுகளைச் செய்கிறார்கள் என்பதைப் புரிந்து கொண்டவளோ, தன் கணவனுடன் ஏற்பட்ட பிணக்கை அவர்களிடம் காட்டிக் கொள்ளாமல் மிகவும் கவனமாக நடந்து கொள்ள முடிவெடுத்தாள் ஹாரண்யா.

அதே எண்ணம் தான் அவளது கணவனுக்கும் இருந்தது போலும்.

தன்னுடைய பெற்றோரின் முன்னால் மனைவியிடம் சிரித்த முகமாகவே பேசி, நடந்து கொண்டான் பகீரதன்.

தாலி பிரித்துக் கோர்க்கும் சடங்கிற்கு முந்தைய நாள் தனது அலுவலகத்தில் இருந்த ஹாரண்யாவோ,”நாளைக்கு எனக்குத் தாலி பிரிச்சுக் கோர்க்கிற ஃபங்க்ஷன் இருக்கு மினி. அதுக்கு சார் கிட்டே லீவ் கேட்கனும்” என்க,

“அப்படியா? இதை முன்னாடியே சொல்லாமல் இப்போ சொல்ற? ஆனால் பரவாயில்லை. கங்கிராட்ஸ்”என்று அவளுக்கு வாழ்த்து தெரிவித்தாள் தோழி.

“தாங்க்ஸ் மினி. நான் போய்ச் சுதன் சாரைப் போய்ப் பார்த்து லீவ் கேட்டுட்டு வர்றேன்” என்றதற்கு,

“ஹேய் ஹாரா! நீ நாளைக்கு ஒரு முக்கியமான ஃபங்க்ஷனை ஆங்கரிங் செய்ய வேண்டி இருக்கே? அதைத் தள்ளி வைக்க முடியாதே! என்னப் பண்ணப் போற?” என்று அவளிடம் வினவினாள் தாமினி.

“ம்ஹ்ம். ஏற்கனவே மறு வீட்டுச் சம்பிரதாயத்தை எங்களுக்காக மாத்தி வச்சாங்க! இப்போ இதையும் மாத்தி வைங்கன்னு நாங்க எங்க ரெண்டு பேரோட அப்பா, அம்மா கிட்டேயும் எப்படி கேட்கிறது? அதான், சார் கிட்டே பேசிப் பார்க்கலாம்னு டிஸைட் பண்ணி இருக்கேன். அந்த நிகழ்ச்சியை எனக்குப் பதிலாக நீ ஆங்கரிங் பண்ண மாட்டியா?” என்றாள் சோகத்துடன்.

“நான் உனக்காக அதை நிச்சயமாகப் பண்ணுவேன் ஹாரா. நீ முதல்ல சுதன் சாரைப் பார்த்துப் பேசு” என்று அவளுக்குத் தைரியம் கொடுத்து அனுப்பி வைத்தாள் அவளது தோழி.

தாமினியிடம் விடைபெற்றுக் கொண்டு நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரின் அறைக்குச் சென்று அனுமதி வாங்கி உள்ளே நுழைந்தாள் ஹாரண்யா.

“என்ன விஷயமாக என்னைப் பார்க்க வந்து இருக்கீங்க மிஸஸ். ஹாரண்யா?” எனக் கேட்டார் சுதன்.

“சார்… எனக்கு நாளைக்கு ஒரு நாள் மட்டும் லீவ் வேணும்” என்று தயக்கத்துடன் வினவவும்,

“அச்சோ! நாளைக்கு லீவ் வேணும்னு இப்போ வந்து கேட்கிறீங்களே! இரண்டு நாள் முன்னாடியாவது வந்து இன்ஃபார்ம் பண்ணி இருக்கலாம்ல?” என்றவரது குரலில் மிகுந்த ஏமாற்றம் வெளிப்பட்டதை உணர முடிந்தது.

ஆனாலும்,”நாளைக்குத் தாலி பிரிச்சுக் கோர்க்கிற ஃபங்க்ஷன் வச்சிருக்காங்க சார். அதனால் தான் லீவ் கேட்கிறேன்” என்றவளிடம்,

“உங்களை நம்பித் தானே நாளைக்கு ஈவ்னிங் ஒரு பெரிய விழாவைத் தொகுத்து வழங்குற பொறுப்பைக் கமிட் பண்ணி இருக்கோம்! நீங்க என்னடான்னா கடைசி நேரத்தில் வந்து இப்படி சொல்றீங்களே!” என்றவரோ, அந்த சில நிமிடங்களில் அவளது கணவன் யார் என்பதை மறந்து போய் விட்டார் சுதன்.

ஏனென்றால், ஹாரண்யா மற்றும் தாமினியைத் தவிர அந்த தொலைக்காட்சி நிறுவனத்தில் வேலை செய்து கொண்டு இருக்கும் மற்றவர்களுக்கு அவ்வளவு திறமை கிடையாது என்பதால் தான், பெரிய அளவில் வரும் நேர்காணல்கள் மற்றும் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கும் பொறுப்பை அவர்களிடம் கண்ணை மூடி ஒப்படைத்துக் கொண்டு இருந்தார்.

அப்படியிருக்க, மறுநாளும் அதே போன்றதொரு விழாவைத் தான், ஹாரண்யா தொகுத்து வழங்குவதாக இருந்தது.

ஆனால் அந்த வேலையை அவளால் செய்து முடிக்க முடியாது என்பதை தெரிந்து கொண்ட பிறகு அவருக்கு ஏற்பட்ட ஏமாற்றம் ஆதங்கமாக வெளிப்படத் தொடங்கி விட்டது.

அதில் வெகுவாக மனம் ஒடிந்து போனது ஹாரண்யாவிற்கு.

ஏனெனில், அவள் தன்னுடைய தாலி கோர்க்கும் சடங்கு எப்போது வேண்டுமானாலும் நடைபெறலாம், அந்த சமயத்தில் தனக்கு விடுப்பு அளிக்குமாறு அவரிடம் முன்னரே கூறி அனுமதி பெற்றிருந்தாள்.

ஆனால், அந்த நிகழ்ச்சி துரதிர்ஷ்டவசமாக அவளுக்கு முக்கியமான வேலை இருக்கும் நாளிலேயே நடைபெற உள்ளதால் அவளுக்கும் கூடச் சங்கடமாகி விட்டது.

ஆனாலும், அவளுக்கு வேறு வழியே கிடைக்கவில்லை என்பதால் சுதனிடமே சரணடைந்து விட்டாள் ஹாரண்யா.

அவரோ, அவள் எவ்வளவு தீவிரமாக எடுத்துரைத்த போதிலும் கூட அவளது நிலையைப் புரிந்து கொள்ளாமல் அவளால் தனக்கு ஏற்படப் போகும் பிரச்சினைக்கு மட்டுமே முக்கியத்துவம் அளித்துக் கொண்டு இருப்பதைக் கண்டு வேதனையுடன்,

“ப்ளீஸ் சார்! எனக்கு இந்த ஒரு தடவை மட்டும் லீவ் கொடுங்க! நான் இதுக்கப்புறம் இப்படி வந்து உங்ககிட்ட கேட்டு நிற்க மாட்டேன்!” என்று அவருக்கு உறுதி அளித்தாள் ஹாரண்யா.

“அப்படியா? இதை நான் எப்படி நம்புறது மிஸஸ். ஹாரண்யா? நீங்க உங்க கல்யாணத்துக்காக எடுத்துக்கிட்ட லீவ் முடிஞ்சு மறுபடியும் இப்போ தான் வேலைக்கு வந்தீங்க! அதுக்குள்ள உடனே வந்து லீவ் கேட்கிறீங்க! உங்களை நம்பி எப்படி லீவ் தர்றது? நீங்க சொல்றா மாதிரி இது கடைசி தடவையாக இல்லாமல் இருந்தால் நாங்க என்னப் பண்றது?” என்று கிடுக்கிப்பிடி கேள்வி கேட்டார் சுதன்.

அது அவளது மனதைச் சுருக்கென்று தைத்து விட எதுவும் பேசத் திராணியில்லாமற் அப்படியே நின்று விட,

அவரோ மேலும் தொடர்ந்து,”நீங்க தான் நம்ம டிவி ஸ்டேஷனோட பெஸ்ட் ஆங்க்கர்ன்னு சொல்லி நான் உங்களைப் பாராட்டினது எல்லாம் இப்போ வேஸ்ட்ன்னு என்னை நினைக்க வச்சிட்டீங்களே!” என்று கூறி அவளைக் காயப்படுத்தினார்.

உடனே,”போதும் சார்! நான் நாளைக்கு வேலைக்கு வர்றதுக்கு முயற்சி செய்றேன்!” என்றவளிடம்,

“அப்போ கூட உங்களால் வேலைக்கு வர்றேன்னு உறுதியாகச் சொல்ல முடியலையே? உங்களை நம்பி நாங்க அவ்வளவு பெரிய ரிஸ்க் எடுக்க முடியுமா சொல்லுங்க?” என்று அவளிடம் வினவினார் சுதன்.

அதைக் கேட்டு முகம் செத்துப் போனவளோ,”இந்த ஒரு தடவை என்னை நம்புங்க சார்” என்று அவள் கேட்கவும்,

அதற்கு அரை மனதாகச் சம்மதம் தெரிவித்தார்.

உடனே தாமினியிடம் கூடச் சொல்லிக் கொள்ளாமல் தன்னுடைய வீட்டிற்குச் சென்றவள், தன் கணவனுக்கு அழைத்து உடனே வீட்டிற்கு வருமாறு அறிவுறுத்தி விட்டுத் தன் மாமனார், மாமியாரையும் முன்னறைக்கு வரச் சொல்லிக் கேட்டுக் கொண்டாள் ஹாரண்யா.

அவர்களை மட்டுமில்லாமல் தன்னுடைய பெற்றோரையும் தன் புகுந்த வீட்டிற்கு வரும்படி இறைஞ்சவும், அவர்களும் அடித்துப் பிடித்து அங்கே வந்து சேர்ந்தனர்.

இறுதியாக தன்னுடைய படப்பிடிப்புத் தளத்தில் இருந்து கிளம்பி இல்லத்திற்கு வந்தவன், தன் மனைவியைக் கூர்மையான பார்வையால் அளவெடுத்துக் கொண்டே நீள் சாய்வு இருக்கையில் அமர்ந்து அவள் சொல்லப் போவதைக் கேட்பதற்காக காத்திருக்கலானான் பகீரதன்.

- தொடரும்
 

Shalini shalu

Moderator

இனிமேல் இந்தக் கதையின் பதிவுகள் தொடர்ந்து வரும் நண்பர்களே!

உன் நினைவிலே கரைகிறேன்- 36


“என்னாச்சு ம்மா? ஏன் எங்க எல்லாரையும் இப்படி ஒன்னு கூடி உட்கார வச்சிருக்கிற? நீ ஏன் பதட்டமாக இருக்கிற?” என்று மகளிடம் பதைபதைப்புடன் வினவினார் மதுராஹினி.

ஏனெனில் அவளது முகம் மிகவும் வெளுத்துப் போய் இருந்தது. அதனால் தான் அவளிடம் இவ்வாறு கேட்டிருந்தார்.

உடனே,”நீங்க பயப்பட்றா மாதிரி எதுவும் இல்லை ம்மா. நான் உங்க எல்லார் கிட்டேயும் ஒரு முக்கியமான விஷயத்தைச் சொல்லி அதுக்கான அனுமதியும் வாங்கத் தான் கூப்பிட்டு இருக்கேன்” என்று மற்றவர்களுக்கும் சேர்த்தே அந்தப் பதிலைக் கூறினார் ஹாரண்யா.

அவளது பெற்றோரோ, அவள் பேசுவதை அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்த தங்களது மருமகன் மற்றும் அவள் என்ன சொல்லப் போகிறாள்? என்பதை எதிர்பார்த்துக் கொண்டிருந்த சம்பந்திகளையும் கண்டு அவர்களுக்கும் இன்னமும் எந்த விஷயமும் தெரிவிக்கப்படவில்லை என்பதைப் புரிந்து கொண்டு,”என்ன விஷயம் ஹாரா?” என்றார் இயமானன்.

“சொல்றேன் ப்பா” என்றவள், மறுநாள் தனக்கு ஒரு பெரிய நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் வேலை இருப்பதாகவும், அதனால் விடுப்பு எடுக்க முடியாது என்று தனது மேலதிகாரி திட்டவட்டமாக உரைத்து விட்டார் என்பதையும் அவர்கள் அனைவரிடமும் எடுத்துரைத்தாள் ஹாரண்யா.

அதைக் கேட்டதும் இப்போது அவளது வீட்டாரின் முகங்கள் வெளுத்துப் போயிற்று.

“என்ன ஹாரா இப்படி சொல்ற! உன்னை நம்பித் தானே நாங்க அந்தத் தேதியில் ஃபங்க்ஷனை நடத்த முடிவு பண்ணோம்! இப்போ வந்துட்டு இப்படி சொல்றியே!” என அவளிடம் பொரிந்து தள்ளினார் மதுராஹினி.

ஆனால் அவருக்கு நேர்மாறாக,”இதைக் கேட்டதும் எங்களுக்கும் சங்கடமாகத் தான் இருக்கு சம்பந்தி. ஆனால் என்னப் பண்றது? அவளோட வேலையும் முக்கியம் தானே? விடுங்க பாத்துக்கலாம்” என அவரைச் சமாதானம் செய்தார் மனோரமா.

“ஆமாம் சம்பந்தி. என் பொண்டாட்டி சொல்றது தான் சரி. நாம வேற தேதியில் ஃபங்க்ஷனை மாத்தி வச்சுக்கலாம். இது பெரிய விஷயமா என்ன?” என்றார் பாலேந்திரன்.

ஹாரண்யாவின் தந்தையோ,”அவளோட வேலை சம்பந்தப்பட்ட விஷயம்மா மது. அதனால் இவங்க ரெண்டு பேரும் சொல்றா மாதிரியே செஞ்சிடலாம்” என்று கூறினார்.

இதையெல்லாம் பார்த்துக் கொண்டு இருந்த கணவனிடம் இருந்து எந்த எதிர்வினையும் வரவில்லை என்பதை உணர்ந்து கொண்ட ஹாரண்யாவோ, அவனை வெற்றுப் பார்வை பார்த்தாள்.

ஆனால் அவனும் அதைச் சளைக்காமல் எதிர் கொண்டான்.

அவனிடமிருந்து எந்த உதவியும் தனக்குக் கிடைக்கப் போவதில்லை என்பது அவளுக்கு நன்றாகவே தெரியும்.

ஆனாலும், இப்போதாவது ஏதாவது கூறுவான் என்று எதிர்பார்த்து இருந்தவளுக்கு ஏமாற்றமே கிடைத்தது.

அதனால், கணவனிடம் இருந்து பார்வையைத் திருப்பிக் கொண்டாள் ஹாரண்யா.

அதற்கும் அவனது உடல்மொழியில் எந்த மாற்றமும் இல்லை.

“என்னோட நிலைமையை நீங்களாவது புரிஞ்சிக்கிட்டீங்களே” என்று கவலை தோய்ந்த குரலில் தனது மாமனார் மற்றும் மாமியாரிடம் உரைத்தாள் ஹாரண்யா.

“எங்களுக்கு இவனோட வேலை எப்படி முக்கியமோ, அதே மாதிரி உன்னோடதும் முக்கியம்ன்னு உங்கிட்ட முன்னாடியே சொல்லி இருக்கோம் தானே? அப்பறம் எப்படி உனக்குச் சப்போர்ட் பண்ணாமல் இருப்போம்மா” என்று அவளிடம் தெரிவித்தார் பாலேந்திரன்.

அதன் பின்னர் தான், அவளது பெற்றோரும் சற்று நிதானம் அடைந்தனர்.

“நீங்க ஏன் எதுவுமே பேச மாட்டேங்குறீங்க மாப்பிள்ளை?” என்று பகீரதனிடம் வினவினார் இயமானன்.

வீட்டிற்குள் வந்த போது தங்களை வரவேற்று அமர வைத்தப் பிறகு இப்போது வரை ஒரு வார்த்தைக் கூட உதிர்க்காமல் அமைதியாக இருப்பவனைக் கண்டுப் புருவம் சுருக்கி யோசித்து விட்டுக் கேள்வி எழுப்பி உள்ளார் அவனது மாமனார்.

அவன் அவருக்குப் பதிலளிக்கும் முன்னரே,”ஆமாம். நாங்களும் உன்னைக் கவனிக்காமல் விட்டுட்டோம்! ஏன்டா இப்படி இருக்கிற? உன் பொண்டாட்டிக்கு நீ தானே முதல்ல ஆதரவாக இருக்கனும். அதை விட்டுட்டு ‘யாருக்கு வந்த விருந்தோ?’ - ன்னு அக்காடான்னு உட்கார்ந்து இருக்கியே? இதெல்லாம் நல்லாவா இருக்கு?” என்று அவனிடம் கோபமாக கேட்டார் மனோரமா.

அவருக்கு மகனின் இந்த அலட்சியத்தால் அடக்க முடியாத ஆத்திரம் துளிர்த்தது.

“நான் இதில் என்னம்மா பண்ண முடியும்? அவளோட வேலையைப் பத்தி எனக்கு ஒன்னுமே தெரியாது. அவ அங்கே வேலை பார்க்கிறா, அப்போ அவ கேட்கிற இடத்தில் இருக்கிறா! அதனால் அவங்க என்ன சொல்றாங்களோ அதைக் கேட்டுத் தானே ஆகனும்? ஒருவேளை, நான் என்னோட செல்வாக்கைப் பயன்படுத்தி இவளுக்குப் பர்மிஷன் வாங்கிக் கொடுக்கனும்னு நினைக்கிறீங்களா? அப்படியொரு எண்ணம் இருந்தாலும் சொல்லுங்க. நான் கண்டிப்பாக செய்றேன்” என்று கூறி விட்டுத் தன் மனைவியை அழுத்தமாகப் பார்த்தான் பகீரதன்.

அதில் தன்மானம் தலைத் தூக்கப் பட,”அதெல்லாம் ஒன்னும் வேண்டாம். எனக்கு யாரோட செல்வாக்கை வச்சும் கிடைக்கிறது எதுவும் தேவையில்லை” என்று அவனிடம் நேருக்கு நேராக உறுதியாக கூறி விட்டாள் ஹாரண்யா.

அதைக் கேட்டதும் கருத்துப் போன முகத்தை யாரும் பார்த்திராத வண்ணம் துரிதமாக மாற்றிக் கொண்டான் அவளது கணவன்.

இவர்களது இந்தச் சம்பாஷணைகளைப் பார்வையிட்ட இருவருடைய பெற்றோர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.

“என்ன நீங்க இப்படி பேசிட்டு இருக்கீங்க? உங்களுக்குள்ளே எல்லாம் நல்லா தானே போயிட்டு இருந்துச்சு? ஆனால், இப்போ என்னடான்னா உங்க ரெண்டு பேருக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லாத மாதிரியே பேசுறீங்க!” என்று இருவருடைய பெற்றோரும் அவர்களிடம் வினவினார்கள்.

அது மட்டுமின்றி,”பகீரதா! உனக்கு என்னடா ஆச்சு? உன் பொண்டாட்டிக்குச் சப்போர்ட் பண்ணாமல் ஏதோ படம் பார்க்கிறா மாதிரி உட்கார்ந்து இருக்கிற? அப்பறம், நீ வேற, நா வேறன்ற மாதிரி பிரிச்சுப் பேசிட்டு இருக்கீங்க? ரெண்டு பேரும் காதலிச்சுத் தான கல்யாணம் பண்ணி இருக்கீங்க? இந்தச் சின்னப் புரிதல் கூட இல்லாமல் எப்படி இவ்வளவு நாள் உங்களோட கல்யாண வாழ்க்கையை வாழ்ந்தீங்க? இன்னும் தாலி கூடப் பிரிச்சுக் கோர்க்கலை! அப்படியிருக்கும் போது உங்களோட இந்த நடவடிக்கையைப் பார்க்கும் போது எங்களுக்கு ரொம்ப அதிர்ச்சியாக இருக்கு” என்று வேதனையுடன் உரைத்தார் பாலேந்திரன்.

அதைக் கேட்டதும் இப்போது அதிர்வது பகீரதன் மற்றும் ஹாரண்யாவின் முறையானது.

ஏனெனில், தங்களுக்குள் வரும் சின்னச் சின்ன சண்டைகளைத் தங்கள் பெற்றோர் வரை எடுத்துச் செல்லாமல் கவனமாகப் பார்த்துக் கொண்டு இருந்தவர்கள் தற்போது குட்டு வெளிப்பட்டு விட்டதை எண்ணி திடுக்கிட்டுப் போயினர்.

“அது வந்து…” என்று ஏதோ சொல்லத் தொடங்கிய ஹாரண்யாவிடம்,

“போதும் மா! விடு. நீ இப்போ அந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கனும்ன்ற நிர்ப்பந்தத்தில் இருக்கிற, அந்தத் தேதியில் நீ தாலி பிரிச்சுக் கோர்க்கிற சடங்கில் கலந்துக்க முடியாது அவ்வளவு தான? சரி. அன்னைக்கு அந்த ஃபங்க்ஷனை நடத்த வேண்டாம். உங்க ரெண்டு பேருக்கு எப்போ தோனுதோ அப்போ சொல்லுங்க. அப்பவும் இதே மாதிரி கடைசி நேரத்தில் வந்து நாளை மாத்துங்கன்னு சொல்லிடாதீங்க! அது போதும்!” என்று கூறிய மனோரமாவை அவரது மகனும், மருமகளும் சங்கடத்துடன் ஏறிட்டனர்.

“சம்பந்தி சொல்றது தான் சரி. என்னம்மா இப்படி நடந்துக்கிறீங்களே? ஒரு, ஒரு தடவையும் நீங்க எங்களை ரொம்ப சங்கடப்படுத்துறீங்க! நாங்களும் உங்களோட சூழ்நிலையை நினைச்சுத் தணிஞ்சுப் போறோம்ன்னு ரொம்ப அட்வான்டேஜ் எடுத்துக்கிறீங்க! உங்களோட வேலை முக்கியம் தான்! அதே மாதிரி, குடும்பமும் ரொம்பவே முக்கியம்! அதோட சம்பிரதாயங்களும் முக்கியம்ன்னுப் புரிஞ்சுக்கோங்க!” என்ற மதுராஹினிக்கும், இயமானனுக்கும் தங்கள் மகளின் மேலிருந்த அதிருப்திக் குறைந்தபாடில்லை.

எத்தனை தடவைகள் இதையெல்லாம் இவர்களுக்கு எடுத்துரைத்தாலும் தங்களது நிலைப்பாட்டிலேயே இருந்தால் தங்களாலும் என்ன தான் செய்ய முடியும்? என்ற எண்ணத்திற்கு வந்து விட்டனர் பகீரதன் மற்றும் ஹாரண்யாவின் பெற்றோர்கள்.

“அப்படியெல்லாம் இல்லை!” என மொழிந்தனர் இருவரும்.

இயமானன்,“உங்க வாய் தான் அப்படி சொல்லுது. ஆனால் நீங்க நடந்துக்கிறதைப் பார்த்தால் உங்க எதிர்கால வாழ்க்கையை நினைச்சு எங்களுக்கு ரொம்பவே பயமாக இருக்கு!”

அதைக் கேட்டதும் மனம் நொந்து போன ஹாரண்யாவோ,”எங்களை மன்னிச்சிருங்க. தாலி பிரிச்சுக் கோர்க்கிற தேதியை மாத்த வேண்டாம்! நான் அதில் கலந்துப்பேன்!” என்று தன் முடிவைக் கூறுகையிலேயே அவளது குரல் கம்மிப் போய் விட்டது.

அதை அனுமானித்த அவளது கணவனோ,”அப்போ அன்னைக்கு உனக்கு இண்டர்வியூ இருக்கே? அதை என்னப் பண்ணப் போற?” என்று வினவ,

“நான் அதை அட்டெண்ட் செய்யப் போறது இல்ல” என்றாள் மனைவி.

“அப்படின்னா வேலையை ரிசைன் பண்ணப் போறியா?” எனக் கேட்ட பகீரதனிடம்,

“ஆமாம் ங்க” என்றவளுக்குத் துக்கம் தொண்டையை அடைத்தது.

“உனக்கு என்னப் பைத்தியம் பிடிச்சிருக்கா? ஏன் இப்படியெல்லாம் யோசிக்கிற?” என்று அவளைக் கடிந்து கொண்டான் பகீரதன்.

“என்னை வேற என்ன செய்யச் சொல்றீங்க? என்னோட நிலைமையை நீங்களே நேரடியாகப் பார்க்கிறீங்க தானே? அப்பறம் என்ன இப்படி கேட்கிறீங்க? என்னால் என்ன முடியுமோ அதைத் தானே பண்ண முடியும்?” என்று அடிபட்ட குரலில் கூறினாள் ஹாரண்யா.

அதைக் கேட்டவனோ மிகுந்த குற்ற உணர்விற்கு ஆட்கொள்ளப்பட்டான்.

“நான் வேலையை விட்டுட்றேன்! எங்களோட கல்யாணத்தில் இன்னும் என்னென்ன சடங்குகள், சம்பிரதாயங்கள் இருக்கோ, அதையெல்லாம் தவறாமல் செய்றேன்! இப்போ உங்க எல்லாருக்கும் சந்தோஷமா?” எனக் கேட்டு விட்டுத் தொப்பென்று சோபாவில் அமர்ந்து விட்டாள்.

அதைக் கண்ட மற்றவர்கள் பதறவும், அவளது அருகில் சென்று உட்கார்ந்த பகீரதனோ,”நீ முதல்ல ரிலாக்ஸ் ஆகு” என்றவன், மேஜையிலிருந்த தண்ணீர் குவளையை எடுத்து அவளுக்குக் குடிக்கக் கொடுத்தான்.

அதை வாங்கிப் பருகியவளின் முகச் சுருங்கலைக் கண்டுப் பதறிய மதுராஹினியோ, அவளுக்கு மறுபுறம் சென்று அமர்ந்து,”ஒன்னும் இல்லடா. நீ கொஞ்சம் அமைதியாக இரு. எல்லாம் சரியாக நடக்கும்” என்று அவளுக்கு ஆறுதல் அளித்தார்.

அதைப் போலவே, மற்றவர்களும் கூட அவளுக்கு உறுதுணையான வார்த்தைகளைக் கூறி ஹாரண்யாவை அமைதிப்படுத்த தொடங்கி விட்டனர்.

“இந்தச் சின்ன விஷயத்துக்கே இப்படி இடிஞ்சுப் போய் உட்கார்ந்தா எப்படிடா? அதான், தேதியை மாத்தி வைக்கலாம்ன்னு நாங்க சொல்லிட்டோமே? அப்பறம் ஏன் கலங்குற?” என்று தன் மருமகளிடம் ஆறுதலாக உரைத்தார் மனோரமா.

“இல்லத்தை. இருக்கட்டும். நீங்க தேதியை மாத்தி எல்லாம் வைக்க வேண்டாம். நான் பார்த்துக்கிறேன்” என்று இதையே ஒப்புவித்தாள் ஹாரண்யா.

பகீரதன்,“என்னப் பார்த்துக்குவ? இதை எங்கிட்ட விடு. நான் பார்த்துக்கிறேன்” என்று கூறித் தன் செல்பேசியை எடுக்கவும்,

“வேண்டாம் ங்க. இதில் நீங்க எனக்கு உதவி பண்ண வேண்டாம்!” என்று தன்னிடம் உறுதியாக மறுத்தவளைக் கடுமையாக முறைத்தான் அவளது கணவன்.

- தொடரும்
 

Shalini shalu

Moderator
உன் நினைவிலே கரைகிறேன்- 37

“நீ சும்மா இரு ஹாராம்மா. அவன் இதைப் பார்த்துப்பான்” என்று தன் மருமகளை அடக்கி வைக்க முனைந்தார் மனோரமா.

ஆனால் அவளோ,”அவர் எதுவும் செய்ய வேண்டாம் அத்தை” என்று திட்டவட்டமாக கூறியவளின் அருகில் சென்றவனோ,

“நீ இப்போ என்னை எதுவும் செய்ய விடாமல் தடுத்தால் நீ வேலைக்குப் போகாமல் இருக்கிறதுக்கு நாங்க தான் காரணம்ன்னு வெளியே பரவும். உனக்கு என்னை நினைச்சுக் கவலை இல்லைன்னாலும் பரவாயில்லை. என் அப்பா, அம்மா மேல் மரியாதையும், பாசமும் இருக்கும்ன்னு நம்புறேன். அதுக்காகவாவது என்னைத் தடுக்காமல் இரு!” என்று அழுத்தமாக வலியுறுத்தினான் பகீரதன்.

அதற்குப் பின்னரும் கூட அவள் அவனைத் தடுக்க நினைப்பாளா என்ன? அமைதியாகத் தன் அன்னையின் தோளில் சாய்ந்து கொண்டாள் ஹாரண்யா.

உடனே சற்றும் தாமதிக்காமல் தன் செல்பேசியில் அவள் வேலை செய்யும் தொலைக்காட்சி நிறுவனத்தின் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரான சுதனுக்கு அழைத்தான் அவளது கணவன்.

மறுமுனையில் உடனேயே அழைப்பு எடுக்கப்பட்டு,”ஹலோ பகீரதன் சார்!” என்ற வார்த்தைகள் பவ்யமாக வந்து விழுந்தது.

“நாளைக்கு எனக்கும், என் மனைவிக்கும் தாலி பிரிச்சுக் கோர்க்கிற சடங்கு நடக்க இருக்கு. ஈவ்னிங் அவளுக்கு ஒரு இண்டர்வியூவை ஆங்கரிங் பண்ற வேலையும் இருக்கு தானே சார்?” என்று வினவ,

“ஆமாம் சார்” என்றார் சுதன்.

“அந்த இண்டர்வியூவை அவளால் ஆங்கரிங் செய்ய முடியாது சார். வேற யாரையாவது வச்சு அந்த வேலையைச் செய்ய வைக்க முடியுமா?”என்றவுடன் அதைக் கேட்டு அதிர்ந்து போன சுதனுக்கு, அவனிடம் என்ன சொல்லி மறுப்பது என்று தெரியவில்லை.

“சார்! அது ரொம்ப முக்கியமான இண்டர்வியூ. அதை மிஸஸ். ஹாரண்யா மேடம் ஆங்கரிங் பண்ணா தான் கரெக்டா இருக்கும். அவங்க அளவுக்கு மத்த ஆங்கர்ஸ்க்கு அனுபவம் இல்லை” என்று தட்டுத் தடுமாறிக் கூறியதும்,

“அப்படியா? அந்தளவுக்கு அனுபவம் இல்லாத ஆட்களையா உங்க ஆஃபீஸில் வேலைக்கு வச்சிருக்கீங்க? இப்படி இருந்தால் ரொம்பக் கஷ்டம் தான்! ஆனால் பாருங்க சார்! நாளைக்கு ஃபுல்லா என்னோட வொய்ஃப் ஃப்ரீயாக இருக்க மாட்டாங்க.அதனால், நீங்க அந்த இண்டர்வியூவை வேற யாரையாவது வச்சுத் தான் எடுக்க முடியும்!” என்று அழுத்திக் கூறியவனை ஆயாசத்துடன் பார்த்தாள் ஹாரண்யா.

இவன் இப்படி பேசினால் அடுத்து அந்த நிறுவனத்திற்குச் செல்லும் போது தனக்கு எந்த மாதிரியான மதிப்பு கிடைக்கும் என்பது அவளுக்குப் புரிந்து போனது.

தன்னுடைய முக பாவனைகள் மற்றும் சைகைகளை உபயோகித்து அவனுக்கு எச்சரிக்கை விடுக்க முனைந்தவளுக்கு ஏமாற்றமே கிடைத்தது. ஏனெனில், அவன் மருந்துக்கும் அவளது முகத்தை ஏறிடவே இல்லை.

அவளைப் போலவே, மறுமுனையில் இருந்த சுதனுக்கும் இரத்தக் கொதிப்பு அதிகரித்தது விட்டது போலும்,

எனவே,”என்ன சார் இப்படி சொல்றீங்க? இது எவ்வளவு முக்கியம்ன்னு நான் ஹாரண்யா மேடத்துக்கிட்டேயே தெளிவாக, விவரமாகச் சொல்லிட்டேன். நீங்க வேணும்னா அவங்க கிட்ட கேட்டுப் பாருங்க!” என்று பதட்டத்துடன் மன்றாடினார்.

“அவங்க எங்க கிட்ட விஷயத்தைச் சொன்னதுக்கு அப்பறம் தான் நான் இப்போ உங்ககிட்ட பேசிட்டு இருக்கேன் சார். அவங்க நாளைக்கு அவைலபிஸ் இல்லை! அவ்வளவு தான். இதனால் எவ்வளவு லாஸ் ஆகும்ன்னு சொல்லுங்க. நான் அந்தப் பணத்தைக் கொடுத்துட்றேன்” என்றவனைக் கடுங்கோபத்துடன் முறைத்த ஹாரண்யாவோ,

அவனைத் திட்ட வாயைத் திறந்த போது, அவளைக் கடுமையாக முறைத்து அமைதியாக இருக்கச் செய்து விட்டான் பகீரதன்.

“ஹாரண்யா மேடமை நம்பித் தான் அவங்களோட விருப்பத்தைக் கேட்டதுக்கு அப்பறம் தான் இந்த இண்டர்வியூவை ஓகே பண்ணோம். இப்போ வந்து இப்படி சொல்றது எந்த விதத்தில் நியாயம் சார்?” என்று அவனிடம் நியாயத்தைக் கேட்டார் சுதன்.

“அது தான் அந்த இண்டர்வியூ நல்லா நடக்காமல் போனால் அதுக்கான பணத்தை நான் தர்றேன்னு சொல்லிட்டேனே? அப்பறம் என்ன? உங்க ஆஃபீஸில் திறமையான லேடி ஆங்கர்க்கு இவ்ளோ பஞ்சமா?” என்று அலட்சியமாக வினவினான்.

அதைக் கேட்டு முகத்தில் அறை வாங்கியதைப் போல உணர்ந்தவரோ,”எங்களோட ஆஃபீஸில் நிறைய திறமையான லேடி ஆங்கர்ஸ் இருக்காங்க சார். அவங்களை வச்சு நாங்க அந்த இண்டர்வியூவை நடத்திக்கிறோம். இனிமேல் உங்க மனைவியைத் தொந்தரவு செய்ய மாட்டோம்! தாங்க்யூ சார்!” என்று கூறி விட்டு அழைப்பைத் துண்டித்து விட,

“நாளைக்கு உன்னைத் தொந்தரவு செய்ய மாட்டோம்ன்னு அவரே சொல்லிட்டார்! போதுமா?” எனத் தன் மனைவியிடம் அகஸ்மாத்தாக கூறினான் பகீரதன்.

அதைக் கேட்ட மற்றவர்களோ,”ஹப்பாடா! இந்தப் பிரச்சினையை ஒரு வழியாக சரி பண்ணியாச்சு” என்று தங்களுக்குள் பேசிக் கொண்டனர்.

ஆனால் ஹாரண்யாவோ,”நீங்க என்னப் பண்ணி வச்சிருக்கீங்க பகீ? சுதன் சார் கிட்ட இப்படி பேசி வச்சிட்டீங்களே! நான் மறுபடியும் அங்கே போனால் அவர் என்னை எப்படி நடத்துவார்ன்னு கற்பனைப் பண்ணிப் பார்க்கவே எனக்குப் பயமாக இருக்கு!” என அவனிடம் சண்டை போடத் தொடங்கி விட்டாள்.

“அவரும் ரொம்ப ஓவராகத் தான் பேசினார் ரணு! அதான் என் பாணியில் பேச வேண்டியதாகப் போச்சு. இப்போ என்ன, உன்னோட பிராப்ளம் தான் சால்வ் ஆயிடுச்சே! அதை நினைச்சு நிம்மதியாக நாளைக்கு ஃபங்க்ஷனை செலிபிரேட் பண்ணு!” என்று சொல்லி அவளது கோபத்தை மேலும் தூண்டி விட்டான் பகீரதன்.

“ப்ச்!” என ஏதோ சொல்ல வந்தவளிடம்,

மதுராஹினி,“ஹாராம்மா! முடிஞ்சதைப் பேச வேண்டாம். உன்னோட மேலதிகாரி கண்டிப்பாக உன்னைத் தப்பாக நினைக்க மாட்டார்! அதைப் பத்தி யோசிக்காமல் நாளைக்கு நடக்கப் போற நல்ல காரியத்தைப் பத்திக் கலந்து பேசலாம்” என்று அவளைச் சமாதானம் செய்து அடுத்த நாளுக்கான ஏற்பாடுகளைப் பற்றிய கலந்துரையாடினர் அனைவரும்.

அதன்பிறகு, அவர்களிடம் விடைபெற்று விட்டு ஹாரண்யாவின் பெற்றோர் தங்களது இல்லத்திற்குச் சென்று விட்டனர்.

தங்கள் அறைக்குள் வந்ததும், கணவனைப் பிடித்து,“உங்க கிட்ட நான் ஹெல்ப் கேட்டேனா? ஏன் இப்படி பண்ணீங்க?” என்று ஆதங்கத்துடன் வினவினாள் ஹாரண்யா.

“நீ கேட்கலை. ஆனால் நம்ம ரெண்டு பேரோட அப்பாவும், அம்மாவும் நாம குடும்பம் நடத்துற லட்சணத்தைப் பத்திக் நேரடியாகவே பார்த்து தெரிஞ்சிக்கிட்டு எப்படி கேள்வி கேட்டாங்க பாரு? அதுக்காகவாவது நான் உனக்கு உதவி செஞ்சி தானே ஆகனும்? அதான் பண்ணேன்” என ஒரு தோள் குலுக்கலுடன் கூறினான் பகீரதன்.

“ஓஹ்! அதனால் தான் எனக்கு உதவி பண்ணீங்களா?” என்று கம்மிய குரலில் கேட்டாள் அவனது மனைவி.

“ஆமாம்” என்று அழுத்தமாக உரைக்கவும்,

“சரிங்க. உங்க உதவிக்கு ரொம்ப நன்றி” என்றவளோ, கட்டிலின் மறுபுறத்தில் அவனுக்கு முதுகு காட்டிப் படுத்துக் கொள்ள,

அதைப் பார்த்துக் குறும்பு புன்னகையுடன் தானும் உறங்கலானான் பகீரதன்.

மறுநாள் காலையில் அவனுக்குத் தனது கோப முகத்தைக் காட்டும் கடமையில் இருந்து தவறாமல் வளைய வந்தாள் ஹாரண்யா.

ஆனால் அதில் வருத்தம் எழுவதற்குப் பதிலாகப் புன்னகையே உதித்தது அவளது கணவனின் இதழ்களில்!

இருவரும் தயாராகி கீழே சென்ற நேரம், பாலேந்திரன் மற்றும் மனோரமாவும் கிளம்பி இருந்தனர்.

அவர்கள் நால்வரும் வண்டியில் ஏறி ஹாரண்யாவின் வீட்டிற்குச் சென்றனர்.

அங்கே அவர்களை வரவேற்று உபசரித்த இயமானன் மற்றும் மதுராஹினியோ தங்களது மகள் மற்றும் மருமகனை நெருங்கிய உறவினர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார்கள்.

அதில் ஒரு சிலர் ஏற்கனவே அவர்களது திருமணத்தின் போதே அவர்கள் இருவரையும் பார்த்துப் போதுமான அளவிற்குப் பிரம்மித்துப் போயிருந்தனர்.

பகீரதனைப் பற்றி அறியாதவர் எவரும் இருக்க முடியாது என்பதாலும், ஹாரண்யாவின் திறமையையும் அவர்கள் அறிந்து கொண்டு இருந்ததாலும், அவர்களை இப்போதும் அதே பிரம்மிப்புப் பாவனையுடன் தான் தொடர்ந்தனர்.

அதையெல்லாம் ஒரு புன்னகையுடன் கடந்து விட்ட பகீரதனும், ஹாரண்யாவும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட அறையில் புது உடைகளை மாற்றிக் கொண்டு வந்தனர்.

”நீங்க இப்படி வந்து உட்காருங்க” என்று தன் மகள் மற்றும் மருமகனை உரிய இடத்தில் அமர வைத்து விட்டு, அனைவருடனும் சேர்ந்து சடங்கிற்கான ஏற்பாடுகளைச் செய்து முடித்து விட்டுப், பூஜையறையில் இருந்த தங்கத் தாலியையும், அதற்கேற்ற பொருட்களையும் தன்னுடைய உறவினப் பெண்மணிகளிடம் கொடுக்க, அவர்கள் அவற்றைச் சங்கிலியில் கோர்த்து முடித்தனர்.

இதையெல்லாம் சுவாரசியமாக வேடிக்கைப் பார்த்துக் கொண்டு இருந்தார்கள் பகீரதன் மற்றும் ஹாரண்யா.

அதன் பின்னர், ஹாரண்யாவின் தாலியைக் கழற்றி விட்டு மஞ்சள் கயிற்றைக் கட்டி விட்டனர்.

பிறகு,தங்களுக்குச் சந்தனம், குங்குமம் வைத்த சுமங்கலிப் பெண்களின் ஆசீர்வாதத்தைப் பெற்றுக் கொண்டனர் இருவரும்.

அதேபோல், ஹாரண்யா அணியப் போகும் தாலிச் சங்கிலிக்கும் சந்தனம், குங்குமத்தை வைத்து விட்டு மணமக்களுக்கு ஆரத்தி எடுத்தவர்கள், தாலிக்கும் அவ்வாறே செய்து முடித்து விட்டு,

“இந்தத் தாலியை உன் பொண்டாட்டி கழுத்தில் போட்டு விடுப்பா” என்ற தன் அன்னையின் ஆணைக்கு இணங்கி, அந்த தங்கத் தாலியைத் தன் மனையாளின் வெண்சங்கு கழுத்தில் போட்டு விட்டான் அவளது கணவன்.

அதில் அவர்கள் இருவருடைய விழிகளிலும் ஒரு மின்னல் தோன்றி மறைந்தது.

ஹாரண்யாவின் மார்பின் மத்தியில் நெளிந்து கொண்டிருக்கும் அந்தத் தாலியிலேயே தனது கண்களையும், மனதையும் பறி கொடுத்து விட்டான் பகீரதன்.

- தொடரும்
 

Shalini shalu

Moderator
வணக்கம் நண்பர்களே! இந்தக் கதையோட யூடீஸை தினமும் போஸ்ட் பண்றேன்னு சொல்லி இருந்தேன். ஆனால் என்னால் இப்போதைக்கு அப்படி அப்டேட் பண்ண முடியாத சூழ்நிலை. ஒன்னு மாத்தி ஒன்னு ஏதாவது தவிர்க்க முடியாத வேலை வந்துட்டே இருக்கு. அதனால் அப்டேட்டும் லேட்டாக போட்ற மாதிரி ஆகிடுது. இனிமேலும் கதையை அடிக்கடி பாதியில் நிறுத்தி வைக்க எனக்கு விருப்பமில்லை. சோ, கொஞ்ச நாளைக்குச் செவ்வாய், வெள்ளிக்கிழமையில் மட்டும் யூடி வரும்ன்னு சொல்லி அதுக்கு உங்களோட ஆதரவை வேண்டிக் கேட்டுக்கிறேன்! நன்றி🙏💕

🌸🌸🌸🌸🌸

உன் நினைவிலே கரைகிறேன்- 38

தாலி பிரித்துக் கோர்க்கும் சடங்கிற்கு உதவிய தங்களது உறவினர்கள் மற்றும் சுமங்கலிப் பெண்களுக்கு உரிய மரியாதை அளித்து விட்டு, அனைவருக்கும் சைவ விருந்து அளித்து அந்த நிகழ்ச்சியைத் தடபுடலாக இனிதே நடத்தி முடித்தனர் பகீரதன் மற்றும் ஹாரண்யாவின் வீட்டினர்.

காலையில் தனது மேலதிகாரியை நினைத்துப் பயந்து கொண்டிருந்தவளோ, சடங்கு நடக்க, நடக்க அதை அனுபவிக்கத் தொடங்கி இயல்பு நிலைக்கு வந்து விட்டாள் ஹாரண்யா.

அதைக் கண்ணுற்ற அவளது வீட்டாருக்கு அப்போது தான் போன நிம்மதி திரும்பி வந்தது.

அவர்களும் கூட எந்தவித மனக்கிலேசமும் இன்றி நிகழ்ச்சியில் ஒன்றி விட்டனர்.

அதன் பின்னர், புதுத் துணி மற்றும் இன்னபிற பொருட்களைத் தட்டுகளில் வைத்து அவற்றைச் சுமங்கலிப் பெண்களுக்குக் கொடுத்து வழியனுப்பி வைத்தார்கள் பெரியவர்கள்.

“அவ்வளவு தான் ஹாராம்மா, ஃபங்க்ஷன் நல்லபடியாக முடிஞ்சது. இதுக்குப் போய் எவ்வளவு போராட்டம் பாரு! இனிமேல் நிம்மதியாக இரு. எதுக்கும் டென்ஷன் ஆகாத” என்று அவளுக்கு அறிவுறுத்தி விட்டுத் தங்களது அவளிடமும், அவளது கணவன் மற்றும் புகுந்த வீட்டினரிடமும் விடைபெற்றுக் கிளம்பினர் இயமானன் மற்றும் மதுராஹினி.

அதேபோல், அன்றைய விழா ஒரு குறையில்லாமல் சிறப்பாக நடைபெற்றதால் அந்த மகிழ்ச்சியிலும், அசதியிலும் பாலேந்திரனும், மனோரமாவும் விரைவாகவே உறங்கச் சென்று விட்டார்கள்.

அதற்குப் பிறகு தான், நிதர்சனம் உறைத்தது ஹாரண்யாவிற்கு.

அடுத்த நாள், தான் வேலை பார்க்கும் நிறுவனத்திற்குச் சென்று தன் மேலதிகாரிக்கு என்னப் பதில் உரைக்கப் போகிறோமோ? என்ற பதட்டத்தில் உடையைக் கூட மாற்றத் தோன்றாமல் அப்படியே அமர்ந்து விட்டிருந்தாள்.

அறையில் நுழைந்த பகீரதனோ, அவளது கோலத்தைக் கண்டுப் புருவத்தை உயர்த்தி விட்டு,”என்னாச்சு ரணு? ஏன் இன்னும் டிரெஸ் மாத்தாம இருக்கிற?” என்று அவளிடம் இயல்பாக வினவினான் பகீரதன்.

அதில் எரிச்சல் மேலிட,”பேசாமல் போயிருங்க. நான் ஏற்கனவே கடுப்புல இருக்கேன்!” என்று அவனிடம் எரிந்து விழுந்தாள் ஹாரண்யா.

“ஹேய் ரணு! இவ்வளவு நேரம் நல்லா தானே இருந்த? இப்போ என்ன ஆச்சு?”

“இவ்வளவு நேரமாக என் கோபம், ஆத்திரம் எல்லாத்தையும் மறைச்சு வச்சிட்டு இருந்தேன்ங்க. ஆனால் இப்பவும் அப்படி இருக்க முடியலை”

“ஊஃப்! உனக்கு ஹெல்ப் பண்ணதுக்கு நீ இன்னும் ஒரு தாங்க்ஸ் கூட சொல்லலை. அது தெரியுமா உனக்கு?” என்றதும்,

“நான் உங்ககிட்ட உதவி கேட்டேனாங்க? நீங்க செஞ்சு வச்ச வேலையால் என் ஆஃபீஸில் என்னை என்னவெல்லாம் சொல்லி அசிங்கப்படுத்தப் போறாங்கன்னு நானே பதறிட்டு இருக்கேன். ஆனால் உங்களுக்கு சாரி சொல்லலைன்றது தான் குறைச்சலா இருக்கு இப்போ!” என்று கோபாவேசமாக மொழிந்தாள் ஹாரண்யா.

“இப்போ என்ன? நான் அந்த சுதன்கிட்டே நேரடியாகப் பேசிப் புரிய வைக்கவா? அப்படின்னா உனக்கு எந்தப் பிரச்சனையும் வராதுல்ல?” என்றான் பகீரதன்.

“ஐயையோ! அதெல்லாம் ஒன்னும் வேண்டாம் ங்க! இது வரைக்கும் நீங்கப் பண்ணதே போதும்! இனிமேலும் எதையாவது செஞ்சி என்னை அந்த ஆஃபீஸ் வாசலைக் கூட மிதிக்க விடாமல் பண்ணிடாதீங்க! ப்ளீஸ்!” என்று அவனிடம் மன்றாடிக் கேட்டுக் கொண்டாள் அவனது மனைவி.

“ஏன் உலகத்தில் நீ வேலை பார்க்க அந்த ஒரு டிவி ஸ்டேஷன் தான் இருக்கா? அது இல்லைன்னா இன்னொன்னைத் தேடிப் போகலாமே?” என்று கூலாக வினவிய கணவனிடம்,

“இந்த உலகத்தில் அது மாதிரி நிறைய டிவி ஸ்டேஷன்ஸ் இருக்கு தான் ங்க! ஆனால், அந்த ஸ்டேஷனில் தான், என்னோட முதல் பயணம் தொடங்குச்சு. என்னோட திறமையைப் பார்த்து அங்கீகாரம் கொடுத்தாங்க! நான் அங்கே தான் ஒரு திறமையான ஆங்க்கரா செதுக்கிக்கிட்டேன்! அப்படியிருக்கும் போது நான் அதை எப்படி அவ்வளவு சுலபமாக அங்கேயிருந்து ரிலீவ் ஆகி வர முடியும்? நீங்க அதைக் கொஞ்சமாவது யோசிச்சுப் பார்க்க மாட்டீங்களா?” என்று அவனிடம் உணர்ச்சி வசத்துடன் உரையாற்றி முடித்தாள் ஹாரண்யா.

“எனக்கு இதெல்லாம் புரியுது! நான் ஏன் உனக்கு உதவி பண்ணேன்ற காரணத்தை நேத்தே சொல்லிட்டேன்! சோ, இதுக்கப்புறமும் உனக்கு ஏதாவது பிரச்சினை வந்தால் தயங்காமல் சொல்லு. அதைச் சரி பண்ண நான் தயார்!” என அவளுக்கு உறுதி அளிக்கவும்,

அதற்கு அவள் பதிலளிக்காமல் இருந்ததால் அடுத்த நாளைய திட்டங்களின் விவரங்களைப் பற்றித் தனது காரியதரிசியிடம் கேட்டுக் கொண்டு உடையை மாற்றி விட்டுப் படுத்து விட்டான் பகீரதன்.

ஆனால் இங்கோ ஹாரண்யாவிற்கு உறக்கம் வர மறுத்தது. ஏனெனில், நேற்றைய தினம் சுதனிடம் பேசி விட்டு உடனே அலுவலகத்தில் இருந்து கிளம்பி வந்து விட்டதால் தாமினிக்கு எந்த தகவலும் தெரிவித்து இருக்கவில்லை அவள்.

அதனால், தற்போது தனது செல்பேசியுடன் பால்கனிக்குச் சென்று, தோழிக்கு அழைப்பு விடுத்தாள்.

“ஹலோ ஹாரா”

“மினி! ஹாய் டி! நீ ஃப்ரீயா இருக்க தானே? நாம பேசலாமா?” என்று அவளிடம் தயக்கத்துடன் வினவினாள் ஹாரண்யா.

“ம்ம். பேசலாம் டி. ஆமா நானே உனக்குக் கால் பண்ணனும்னு நினைச்சேன். நேத்து ஆஃபீஸில் இருந்து யார்கிட்டேயும் சொல்லாமல், கொள்ளாமல் கிளம்பிட்டியாமே! அதுவும் சுதன் சார்கிட்டே பேசினதுக்கு அப்பறம் தான், நீ அவசரமாகக் கிளம்பி போயிட்டதாக சொன்னாங்க! என்னப் பிரச்சினை?” என்று அவளிடம் பரிவாக கேட்டாள் தாமினி.

“அது ஒரு பெரிய கதை டி. எனக்கு இன்னைக்குக் காலையில் தான் தாலி பிரிச்சுக் கோர்க்கிற சடங்கு நடந்துச்சு” என்றவளிடம்,

“என்னது! உனக்குத் தாலி பிரிச்சுக் கோர்த்து முடிச்சாச்சா? என்னை இன்வைட் கூடப் பண்ணலைல நீ?” என அவளிடம் குறைபட்டுக் கொண்டாள் தாமினி.

“ஹேய் நீ வேற ஏன் டி? முழுக்கதையையும் கேளு முதல்ல” என்றவளோ, தோழியிடம் தன்னுடைய நிலையை எடுத்துக் கூறவும்,

“இவ்வளவு நடந்துருச்சா? உனக்கு ஒரு இக்கட்டான நிலைமைன்னுத் தெரிஞ்சும் சுதன் சார் கொஞ்சமும் இறங்கி வராமல் இருந்துட்டாரே! உன் வீட்டிலும் உன்னோட சுவிட்சுவேஷனைப் புரிஞ்சிக்கலையே! இதைக் கேட்கவே ரொம்ப சங்கடமாக இருக்கு!” என்று தானும் வருந்தினாள்.

“ம்ஹ்ம். நான் அங்கேயிருந்து வந்ததுக்கு அப்பறம் அங்கே ஏதாவது நடந்ததா? குறிப்பாக என்னைப் பத்தி யாராவது, ஏதாவது பேசினாங்களா?” எனக் கேட்டாள் ஹாரண்யா.

“ஆமாம். நீ சுதன் சார் கிட்டே பேசிட்டுப் வெளியே வந்ததை ஒரு சிலர் பார்த்து இருக்காங்க. அவங்க உன் முகமே சரியில்லைன்னு ஆஃபீஸ் முழுக்கச் சொல்லிட்டாங்க! அதே மாதிரி சுதன் சாரும் ரொம்ப டென்ஷன் ஆகத் தான் இருந்தார்! எனக்கும் எந்த விஷயமும் தெளிவாகத் தெரியாததால் உனக்குக் கூப்பிட்டுப் பேசலாம்னு நினைச்சேன். ஆனால் நீ ஆங்கரிங் பண்ண வேண்டிய இண்டர்வியூவை எனக்குக் கொடுத்துட்டாங்க. அந்த வேலையை முடிச்சு வர லேட் ஆயிடுச்சு. நாளைக்கு எப்படியும் நீ ஆஃபீஸூக்கு வருவ, உங்கிட்ட நேரில் விசாரிச்சுக்கலாம்னு இருந்துட்டேன்” என்று விளக்கம் அளித்தாள் தாமினி.

“என்னோட ஹஸ்பண்ட் சுதன் சார்கிட்டே பேசினதையும் உங்கிட்ட சொன்னேன் தானே? அவர் பண்ண அவசரக் குடுக்கைத் தனத்தால் எனக்குத் தான் மண்டை இடியாக இருக்கு! நான் எப்படி ஆஃபீஸில் எல்லாரையும் ஃபேஸ் பண்ணப் போறேன்னு தெரியலை!” என்று அபரிமிதமான சோகத்துடன் கூறியவளிடம்,

“நீ அந்த இண்டர்வியூவை நல்லபடியாக நடத்திக் கொடுத்தாச்சு. அதனால், அவரும் நல்ல மனநிலையில் தான் இருப்பார். நீ நாளைக்கு நேரடியாக வந்து சார்கிட்டே பொறுமையாகப் பேசிப் பாரு ஹாரா. அவர் உன்னை மறுபடியும் அங்கே வேலை பார்க்க அனுமதி கொடுத்துடுவார்” எனத் தோழிக்குத் தைரியம் சொல்லவும்,

“சரிடி. நீ சொல்ற மாதிரியே செய்றேன். ஃபங்க்ஷன் எப்பவோ முடிஞ்சிருச்சு. நான் இன்னும் டிரெஸ் மாத்தாம இருக்கேன். உங்கிட்ட பேசுனதுக்கு அப்பறம் தான் எனக்கு இதெல்லாம் ஞாபகத்துக்கே வருது. தாங்க்ஸ் மினி” என்று அவளுக்கு நன்றி தெரிவித்தாள் ஹாரண்யா.

“இட்ஸ் ஓகே டி. நீ போய் ரெஸ்ட் எடு. நாளைக்கு ஆஃபீஸில் பார்ப்போம்” என்று கூறி விட்டு அழைப்பைத் துண்டித்ததும்,

தானும் இரவு உடையை அணிந்து கொண்டு படுக்கையில் விழுந்தாள் ஹாரண்யா.

அதிகாலையில், தன்னுடைய படப்பிடிப்புத் தளத்திற்கு விரைவாகவே தயாராகி கிளம்பிச் சென்று விட்டிருந்தான் பகீரதன்.

அதைத் தன் மாமியாரின் வாயிலாக அறிந்து கொண்டதும், தானும் துரிதமாகத் தயாராகி, காலை உணவை உண்டு முடித்து விட்டுத் தன் அலுவலகத்திற்குச் சென்று சேர்ந்தவளுக்கு அங்கே பயங்கர அதிர்ச்சி ஒன்று காத்திருப்பதை அறியாமல் தன்னுடைய தோழி தாமினியை நாடிச் சென்றாள் ஹாரண்யா.

- தொடரும்
 

Shalini shalu

Moderator
உன் நினைவிலே கரைகிறேன் - 39

“மினி!” என்றவளிடம்,

“ஹாரா! என்ன நீ இப்போ வர்ற? உன் ஹஸ்பண்ட் கூடவே வந்திருக்க வேண்டியது தானே?” என்றவளைக் குழப்பத்துடன் ஏறிட்ட ஹாரண்யாவோ,

“என்னடி சொல்ற? எனக்கு ஒன்னுமே புரியலை!” என்றாள்.

“ஹேய்! பகீரதன் சார் உன் கிட்ட எதுவுமே சொல்லலையா?” என்று அவளிடம் வினவினாள் தாமினி.

“இல்லையே! அவர் எதை என்கிட்ட சொல்லனும்?”

“உனக்கு முன்னாடியே உன் ஹஸ்பண்ட் இங்கே வந்தாச்சு. உன் கிட்ட சொல்லிட்டுத் தான் இங்கே வந்து இருக்காருன்னு நினைச்சு நானும் அதைப் பத்தி உனக்கு இன்ஃபார்ம் பண்ணலை. அவர் இங்கே எதுக்கு வந்து இருக்காருன்னும் உனக்குத் தெரியாதா?” என்று ஆச்சரியத்துடன் கேட்கவும்,

“ம்ஹூம்! எனக்கு எதுவுமே தெரியாது! அவர் எப்போ இங்கே வந்தார்? இப்போ எங்கே இருக்கார்?” எனக் கேட்டவளுக்குப் பதற்றத்தில் உடல் முழுவதும் வியர்க்கத் தொடங்கி விட்டது.

“நீ வர்றதுக்குக் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் சார் வந்தார். நாங்க அவர்கிட்ட விசாரிக்கிறதுக்குள்ளேயே சுதன் சாரோட ரூமுக்குப் போயிட்டார். இன்னும் வெளியே வரலை” என்று விளக்கி விட்டுத் தோழியின் முகத்தைப் பார்த்து திடுக்கிட்டுப் போனவளோ,

“ஏன் டி அழுகுற?” என அவளிடம் ஆதூரமாக வினவியவள், அவளை அழைத்து வந்து அமரச் செய்தாள் தாமினி.

“ஏற்கனவே அவர் பண்ணி வச்ச வேலையால் சுதன் சாரை எப்படி ஃபேஸ் பண்ணப் போறோம்ன்னு எனக்குப் பதட்டமாக இருந்துச்சு டி. இப்போ அவர் இங்கேயே வந்து சார்கிட்டே என்னவெல்லாம் சொல்லி வைக்கப் போறாரோ! அதுக்கும் சேர்த்து நான் தான் பலி ஆகப் போறேன்!” என்று கூறியவளோ அடுத்துப் பேச முடியாமல் தழுதழுத்தாள்.

“ஹேய்! இங்கே பாரு! நான் சொல்றதைக் கேளு. நீயும், பகீரதன் சாரும் லவ் பண்ணி தானே கல்யாணம் செய்து இருக்கீங்க? அவர் தானே உனக்குப் புரபோஸ் செஞ்சார்? அப்படியிருக்கும் போது அவர் எப்படிப்பட்டவர்ன்னு உனக்குத் தெரியாமல் இருக்குமா என்ன? அதே மாதிரி, அவர் தன்னோட பொண்டாட்டிக்குக் கெடுதல் செய்ய நினைப்பாரா? அவர் உனக்கு நல்லது செய்யக் கூட இவ்வளவு தூரம் வந்திருக்கலாம்ல? இதையெல்லாம் நான் சொல்லித் தான் உனக்குப் புரியனும்னு இல்லை! நீயே யோசிச்சுப் பாரு ஹாரா!”

அதைக் கேட்டவளுக்குத் தான் ஏன் அந்தக் கோணத்தில் இதுவரையிலும் யோசித்துப் பார்க்கவே இல்லை என்று மண்டையில் உறைத்தது.

அதனால் அமைதியாக உட்கார்ந்து தங்களது கல்யாணத்திற்குப் பிறகுத் தன் கணவனின் நடவடிக்கைகள் ஒவ்வொன்றையும் நினைவு கூர்ந்து பார்க்கத் தொடங்கி விட்டாள் ஹாரண்யா.

அவளைத் தொல்லை செய்யாமல் அவளுக்கு ஆதரவாக அருகிலேயே அமர்ந்து கொண்டாள் தாமினி.

இதே சமயம், சுதனின் அறையிலிருந்த பகீரதனோ,”உங்ககிட்ட நான் அப்படியெல்லாம் பேசியிருக்கக் கூடாது சார். என்னோட வொய்ஃப் ஹாரண்யாவுக்கு அவளோட ஆங்கரிங் வேலை எவ்வளவு முக்கியம்ன்னு நான் நேத்து தான் தெரிஞ்சுக்கிட்டேன். அப்படி அந்த வேலை இல்லைன்னா அவ எந்த அளவு மனசு அளவிலும், உடல் அளவிலும் பாதிக்கப்பட்றான்னும் புரிஞ்சிக்கிட்டேன். அவ எப்படி என் நடிப்புத் தொழிலை மதிக்கிறாளோ, அதே மாதிரி நானும் அவளோட ஆங்கரிங் வேலையை மதிக்கனும்னு நினைக்கிறேன். அவளுக்கு உங்க ஆஃபீஸில் வேலை செய்றது தான் பிடிச்சிருக்கு! அதனால், என் வொய்ஃப் - க்காவும், நான் உங்களைப் பேசின வார்த்தைகளுக்காகவும் உங்ககிட்ட மன்னிப்புக் கேட்டுக்கிறேன். நீங்க மறுபடியும் அவளை வேலையில் சேர்த்துக்குவீங்களா?” என்று கூறி விட்டு அவரைப் பார்க்க,

அவரோ உடனே,”என்ன சார் நீங்க போய் எங்கிட்ட சாரி எல்லாம் கேட்கிறீங்க?” எனப் பதறிப் போய்த் தன்னுடைய இருக்கையில் இருந்து எழுந்து விட்டார்.

“உட்காருங்க சார்” என்றவன், அவர் அமர்ந்ததும்,

“நான் நேத்து உங்க கிட்ட ரொம்பவே மரியாதைக் குறைவாகப் பேசிட்டேன். அதுக்கும் நான் ரொம்ப வருத்தப்பட்றேன்!” என்று கூறி நிறுத்தியவனைக் கண்டு மிரண்டு தான் போனார் சுதன்.

“சார் நீங்க என்ன இப்படியெல்லாம் பேசிட்டு இருக்கீங்க? இதையெல்லாம் கேட்டு எனக்குக் கை, காலெல்லாம் உதறுது! நீங்க சினிமாத் துறையில் இருக்கிற உயரத்துக்கு என்கிட்ட போய் இதெல்லாம் சொல்லிப் புரிய வைக்கனுமா?” என்றவரிடம்,

“நான் என்ன தான் அவ்வளவு உயரத்தில் இருந்தாலும் என்னோட மனைவிக்கு ஒரு கலக்கம்ன்னா அதில் நானும் பங்கெடுத்து, அதைச் சரி செய்யனும் தானே? அது தானே ஒரு புருஷனோட கடமை. இப்போ அதைத் தான் செய்றேன்” என்று கூறிப் புன்னகைத்தான் பகீரதன்.

“படத்தில் மட்டும் இல்லாமல் நேரிலேயும் உங்க மனைவிக்கு ஒரு நல்ல கணவனாக நடந்துக்கிறீங்க! உங்களை நினைச்சா பெருமையாக இருக்கு சார். ஹாரண்யா மேடமை ஆஃபீஸூக்கு வந்து எப்பவும் போல அவங்களோட வேலையைப் பார்க்கச் சொல்லுங்க. நான் இதைப் பத்தி அவங்க கிட்ட எதுவுமே பேச மாட்டேன்” என்று அவனுக்கு வாக்குறுதி கொடுத்தார் சுதன்.

“தாங்க்ஸ் சார்” என்றவனைப் பிரம்மிப்புடன் பார்த்தவரோ, அவன் எழுந்ததும், தானும் தன் இருக்கையிலிருந்து எழுந்து கொண்டு,”டீ, காபி எதுவுமே குடிக்காமல் போறீங்களே சார்” என்று அவனிடம் குறைபட்டுக் கொள்ள,

“இருக்கட்டும் சார். எனக்கு ஷூட்டிங் - க்கு டைம் ஆச்சு. நான் வரேன்” என்று அவ்வறையில் இருந்து வெளியேறியவனை வழியனுப்பி வைக்கும் நோக்கத்துடன் தானும் அவனுடன் நடந்தார் சுதன்.

அப்போது, அவரது அறையில் இருந்து யாரோ வெளியேறுவதைக் கண்ட தாமினியோ, அது யாரென்று அடையாளம் கண்ட பின்னர்,”ஹாரா, உன் ஹஸ்பண்ட்டும், சாரும் வர்றாங்க பாரு” எனத் தோழியின் தோளைத் தட்டி அழைத்தாள்.

உடனே சுய உணர்வு வந்ததைப் போல நிமிர்ந்து பார்த்த ஹாரண்யாவோ தான் காணும் காட்சியை நம்ப முடியாமல் வியப்பில் ஆழ்ந்தாள்.

ஏனெனில், தன் கணவனும், சுதனும் இதழ்களில் உறைந்தப் புன்னகையுடன் அவளை நோக்கி வந்தனர்.

அது மட்டுமின்றி, அவளிடம்,”சாரி மிஸஸ்.ஹாரண்யா. நான் உங்களை அப்படி கடுமையாகப் பேசி இருக்கக் கூடாது! என்னை மன்னிச்சிருங்க. நீங்க இனிமேல் இங்கே தொடர்ந்து வேலை பார்க்கலாம். இது எல்லாத்துக்கும் காரணம் உங்களோட ஹஸ்பண்ட் தான்!” எனத் தன் அருகிலிருந்த பகீரதனைக் கைக் காட்டினார் சுதன்.

அதில் அதிர்ச்சியில் உறைந்து போய்த், தன்னுடைய கண்ணாளனை ஏறிட்டாள் ஹாரண்யா.

அவளைப் பார்த்து மென்மையான முகிழ்நகையை முகிழ்த்தான் பகீரதன்.

“நீங்க இன்னைக்குப் போயிட்டு நாளைக்கு வந்து கூட வேலையைப் பாருங்க மிஸஸ். ஹாரண்யா” என அவளிடம் கூறிய சுதனிடம்,

“தாங்க்யூ சார்” என்றவளோ, அவரிடமும், தாமினியிடமும் விடைபெற்றுக் கொண்டுத் தன் கணவனை அழைத்துக் கொண்டு வெளியே சென்றாள்.

இருவரும் காரில் அமர்ந்திருக்க, தனது கணவனையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டு இருந்தாள் ஹாரண்யா.

அதில் வெட்கத்தில் நாசி சிவந்து போனவனோ,”என்ன ரணு?” என்று கேட்க,

“இல்லை, இப்போ கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி நீங்க என்னப் பண்ணிட்டு வந்தீங்கன்னு உங்களுக்குத் தெரியுமா?” என்றாள் அவனிடம்.

“ம்ம். தெரியுமே” எனப் பதிலளிக்க,

“அது உங்களுக்குச் சாதாரணமான விஷயமாக இருக்கலாம். அதான் இவ்வளவு ஈஸியா சொல்றீங்க. எனக்கு அப்படியில்லை! ரொம்பவே ஷாக் ஆக இருந்துச்சு” என்று கணவனிடம் கூற,

அவனோ அவளை ஆழ்ந்து பார்த்துக் கொண்டே,”நான் என்னைச் சேர்ந்த ஒருத்தருக்காக இன்னொருத்தர் கிட்டே இப்படி பேசுறது எனக்கும் முதல் தடவை தான்!” என்று கூறினான்.

அதைக் கேட்டவளது முகம் ஆச்சரியப் பாவனையை வெளிப்படுத்தியது.

“உண்மையாகவா சொல்றீங்க?” என்றவளிடம்,

“ஆமாம் ரணு. நான் உனக்காக மட்டும் தான் இப்படி வந்து பேசி இருக்கேன்” என்று அவளிடம் உறுதியாகச் சொன்னான் பகீரதன்.

“ஏன் அப்படி பண்ணீங்க? நான் என்ன உங்களுக்கு அவ்வளவு ஸ்பெஷலா?” என்று கேட்டவளை அழுத்தமாகப் பார்த்தவன்,

“அப்படி இல்லைன்னு நினைக்கிறியா?” என்று வினவ,

“இவ்வளவு நாளாக அப்படித் தான்னு நினைச்சிட்டு இருந்தேன். ஆனால் இந்த நிமிஷத்தில் இருந்து அந்த எண்ணத்தை மாத்திக்கனும் போலவே!” என்றவளோ, அவனது விழிகளுடன் தன் விழிகளைக் கலக்க விட்டாள் ஹாரண்யா.

அவளது காதல் பார்வையை உணர்ந்தவனோ,”இதனால் உனக்கு எதுவும் பிரச்சினை இல்லையே? அப்பறம் வீட்டுக்குப் போனதும் ஏன் இப்படி பண்ணீங்கன்னு எங்கிட்ட சண்டை போடக் கூடாது!” என்று அவளிடம் வலியுறுத்தினான் பகீரதன்.

“இந்த விஷயத்தை வச்சு உங்க கூட சத்தியமாக சண்டை போட மாட்டேன் ங்க! நீங்க என்னைத் தாராளமாக நம்பலாம்” என்று அவனுக்கு உறுதி அளித்தாள் அவனது மனைவி.

“ம்ஹ்ம். குட்” என்றவனிடம்,

“இப்போ சொல்லுங்க. உங்களுக்கு எப்போ, ஏன் இந்த ஐடியா தோனுச்சு?” என்று கணவனிடம் ஆர்வமாக வினவினாள் ஹாரண்யா.

உடனே அவளுக்குப் பதிலளிக்கத் தயாரானான் பகீரதன்.

- தொடரும்

அடுத்த பதிவு செவ்வாய் அன்று வரும் நண்பர்களே!
 

Shalini shalu

Moderator
உன் நினைவிலே கரைகிறேன் - 40

“நான் ஃபர்ஸ்ட் உன்னோட வேலையை அவ்வளவாக சீரியஸாக எடுத்துக்கலை ரணு. அதை விட, நம்மளோட கணவன், மனைவி உறவையே முதல்ல மதிக்காமல் நம்ம ரெண்டு பேரோட சுக, துக்கத்தில் இரண்டு பேருமே பங்கெடுத்து அதை ஒன்னா ஃபேஸ் பண்ணனும்ன்றதை நான் புரிஞ்சுக்கவே இல்லை! அதே மனநிலையில் தான் நான் இதுநாள் வரைக்கும் நடமாடிட்டு இருந்தேன். ஆனால், நம்ம ரெண்டு பேரோட பேரன்ட்ஸ் பேசினது, அப்பறம், உன்னோட கண்ணீர், உன் வேலை மேல் நீ வச்சிருக்கிற பக்தி எல்லாம் சேர்த்து என்னோட மைண்ட்செட்டை மாத்திருச்சு! அதனால், காலையில் எழுந்து கிளம்பி, முதல் வேளையாக உன் ஆஃபீஸூக்குத் தான் வந்தேன்! சுதன் சாரைப் பார்த்து எல்லாத்தையும் புரிய வச்சு, என் பக்கமிருந்த தப்புக்காக அவர் கிட்ட மன்னிப்பும் கேட்டேன்!” என்றவனது ஒவ்வொரு வார்த்தையும் ஹாரண்யாவின் இதயத்தைப் பூஞ்சாரலாய்க் குளிர்வித்தது.

தன்னவனையே இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தவளோ, சொல்லவொண்ணா உணர்வுகளில் ஆழ்ந்து விட்டாள் எனலாம்.

“பகீ!” என்றவளோ, அவனது தோளில் தனது சிரத்தைச் சாய்த்துக் கொண்டு அதில் முத்தம் ஒன்றையும் பதிந்தாள் ஹாரண்யா.

“ரணு!” என்று ஆனந்தமாக அதிர்ந்த பகீரதனோ, அவளது நெற்றியில் தன்னுடைய இதழ்களை ஒற்றி எடுத்தான்.

அதில் விலகத் தோன்றாமல் அவனது கரத்தை இன்னும் இறுக்கிக் கொண்ட அவனது மனைவியோ,

“தாங்க்யூ” என்று முணுமுணுத்தவளின் முகத்தை நிமிர்த்தி,

“இது என்னோட கடமை ரணு” என்று அவளது இதழ்களை நெருங்கினான் பகீரதன்.

அவனது வாயைத் தன் கரங்கொண்டு மூடியவளோ,”காரில் இருந்துட்டுக் கிஸ் பண்ணிக்க வேண்டாம் ங்க” என்று பலவீனமான குரலில் அவனிடம் கூறினாள் ஹாரண்யா.

அவளது கரத்தை விலக்கியவன்,”ஏன்?” என்று கேள்வி எழுப்ப,

“எனக்கு ஒரு மாதிரி இருக்குப் பகீ. வீட்டுக்குப் போகலாம்” என்று உறுதியாகச் சொன்னாள் அவனது இல்லாள்.

“எனக்கு இப்போ சுத்தமாக டைம் இல்லை ரணு. நான் உடனே ஷூட்டிங் ஸ்பாட்டுக்குப் போகனும். உன்னோட விஷயம்ன்றதால் தான், கிளம்பிய உடனே நேராக இங்கே வந்தேன். இப்போ நான் போயாகனும்” என்று மனைவியிடம் கொஞ்சலுடன் உரைத்தான் பகீரதன்.

“சரி போயிட்டு வாங்க” என்றவுடன், தனது பார்வையாலேயே அவளிடம் கெஞ்சத் தொடங்கி விட, வேறு வழியின்றி இருவரது இதழ்களும் ஸ்பரிசித்துக் கொள்வதற்குச் சம்மதித்தாள் ஹாரண்யா.

உடனே தங்களது அதரங்களை ஒன்றுடன் ஒன்று உறவாட விட்டான் பகீரதன்.

தங்களுடைய திருமணத்தின் போது கணவன் கொடுத்த முத்தத்தை விட, இப்போது இருவரும் ஒருமித்த சம்மதத்துடன் கொடுத்துக் கொண்டிருக்கும் இதழ் முத்தத்தை மனதார ஏற்றுக் கொண்டு, இசைந்து கொடுத்தாள் பெண்ணவள்.

சில நாழிகைகளுக்குப் பிறகுப் பிரிய மனமின்றி பிரித்தெடுத்தனர் தங்களது இதழ்களை.

வெட்கத்தில் பூத்துப் போயிருந்த தன் மனைவியை ரசனை மிகுந்த பார்வையுடன் ஏறிட்டான் பகீரதன்.

அதில் மேலும் தனது உடலெங்கும் நாணம் சூழ்ந்து கொண்டதால்,”பகீ” எனச் சினுங்கினாள் மனைவி அவள்.

அதைக் கண்டு கொண்டவனோ,”இதுக்கு மேலே நாம இப்போ ஒன்னாக இருக்க வேண்டாம். நீ வீட்டுக்குப் போகிறதாக இருந்தால் சொல்லு. நான் உன்னை டிராப் பண்ணிட்டு ஷூட்டிங் - க்குப் போறேன்” என்றவனிடம்,

“இல்லை ங்க. நான் என்னோட ஆஃபீஸூக்கே திரும்பப் போய் வேலையைப் பார்க்கிறேன்” என்று ஒரு முடிவுடன் கூறியவளை அவளது விருப்பத்தின் படியே அங்கே விட்டு விட்டுத் தனது படப்பிடிப்புத் தளத்திற்குச் சென்றான் பகீரதன்.

இங்கே தன் அலுவலகத்தினுள் மீண்டும் நுழைந்த ஹாரண்யாவோ, இப்போது நிமிர்ந்த நன்னடையுடன் அங்கேயிருந்த அனைவரையும் ஏறிட்டுப் பார்த்து விட்டுத் தன்னுடைய இடத்திற்குப் போனாள் ஹாரண்யா.

அவள் மறுபடியும் வந்த விஷயம் தெரிந்தவுடன் தோழியைப் பார்க்க ஓடோடி வந்து சேர்ந்த தாமினியோ,

“ஹாரா! என்னடி திரும்ப வந்துட்ட?” என்று அவளிடம் வினவினாள்.

“அவர் ஷூட்டிங் - க்குக் கிளம்பிட்டாரு. அதான் பிரச்சினை சரி ஆயிடுச்சே? அப்பறம் என்ன? வேலையைப் பார்ப்போம்ன்னு வந்துட்டேன்” என்றுரைத்தாள்.

“ஓஹோ சரி. சுதன் சாரைப் பார்த்தியா?” என்றதும்,

“இல்லைடி. அது தான் அப்போவே பார்த்தாச்சே? எப்போ பார்த்தாலும் போய்ப் பார்த்துட்டே இருந்தால் ஏதாவது சொல்லிருவாருன்னு தோனுச்சு. அதான் போகலை” என்று விளக்கம் அளித்தாள் ஹாரண்யா.

“எதுக்கும் போய்ப் பார்த்துட்டு வந்துரு. அப்பறம் அதுவே ஒரு பேச்சாகிடப் போகுது” என்று தோழிக்கு வலியுறுத்தினாள் தாமினி.

“சரி. நான் போய் சாரைப் பார்த்துட்டு வந்துட்றேன்”என்று அறையிலிருந்து வெளியேற எத்தனிக்கையில், அவளைத் தேடி வந்து விட்டிருந்தார் சுதன்.

“சார். உங்களைத் தான் பார்க்க வந்துட்டு இருந்தேன்”என்று அவரிடம் பவ்யமாக கூறினாள் ஹாரண்யா.

“அப்படியா? அதுக்கு முன்னாடி நானே வந்துட்டேனா?” என்றவருக்குப் புன்னகையைப் பதிலாக கொடுக்கவும்,

அவரோ மேலும் தொடர்ந்து,”புதுசா வேலைக்குச் சேர்ந்தவங்களுக்கு நீங்க தானே டிரெயினிங் கொடுத்துட்டு இருந்தீங்க?” எனக் கேட்டார்.

“ஆமாம் சார்”

“அந்த டிரெயினிங்கை மறுபடியும் ஸ்டார்ட் பண்ண முடியுமா மிஸஸ். ஹாரண்யா?” என்றார் சுதன்.

“ஷூயர் சார். நான் அவங்களுக்குத் தவறாமல், தொடர்ந்து டிரெயினிங் தந்துட்டுத் தான் இருக்கேன். அதை எப்பவும் மறக்கலை. ஒரு நாள் மட்டும் தான் டிலே ஆயிடுச்சு. இனிமேல் அப்படி நடக்காது சார்” என்று அவருக்கு வாக்குக் கொடுத்தாள் ஹாரண்யா.

“ஓகே. இதைச் சொல்லத் தான் வந்தேன்” என்று கூறி அவளிடமிருந்து விடைபெற்றுக் கிளம்பினார்.

“என்ன ஹாரா, சுதன் சாரே வந்து உங்கிட்டே பேசிட்டுப் போறார்” எனக் கேட்ட தாமினிக்கு விவரத்தைச் சொல்லவும்,

“சரி. அப்போ அவங்களைப் போய்ப் பார்ப்போமா?” என்றவளிடம்,

“ம்ம் ஓகே மினி” என அவளுடன் இணைந்து தனக்கு இடப்பட்ட பணியைச் செய்யப் போய் விட்டாள் ஹாரண்யா.

இங்கோ தன்னுடைய படப்பிடிப்புத் தளத்தில் இருந்த பகீரதனோ, சிறிது நேரத்திற்கு முன்னர் தான் செய்த செயலைத் தன்னாலேயே நம்ப இயலாமல் அதைப் பற்றிய யோசனையில் ஆழ்ந்திருந்தான் பகீரதன்.


தன் மனைவியின் மேல் தனக்கு இவ்வளவு காதலா? என்று அவனுக்கே வியப்பாக இருந்தது.

அதனால், அந்தச் செயலின் சாராம்சத்தை மனதினுள் ஓட்டிப் பார்க்கத் தொடங்கினான்.

முதலில் ஹாரண்யாவின் கண்ணீரை அசட்டையாக எண்ணி இருந்த பகீரதனோ, அதன் பிறகு மெல்ல மெல்ல அவனை அறியாமலேயே அவளது உணர்வுகளைப் புரிந்து கொள்ள ஆரம்பித்தான் பகீரதன்.

நேற்று முன்தினம் இருந்து நடந்தவற்றை எல்லாம் இரவு ஹாரண்யா தன் தொலைபேசி உரையாடலில் பிஸியாக இருக்கும் போது தன்னுடைய படுக்கையில் படுத்துக் கொண்டு அசை போட்டான்.

தனது மனைவியின் மனக் கிலேசத்தைத் தீர்க்கும் பொறுப்பில் தனக்கும் பங்குண்டு என்பதை தீர்க்கமாக உணர்ந்தவன்,

அப்போதே, அவளுக்குத் தன்னாலான உதவியைக் கண்டிப்பாகச் செய்ய வேண்டும் என்றும் சபதம் எடுத்தவன், அடுத்த நாள் வெகு சீக்கிரமாய் எழுந்து சுதனைப் பார்க்கப் போனவனோ, தன்னுடைய அகங்காரத்தை எல்லாம் உடைத்து எறிந்து விட்டு அவரிடம் தன் மனைவிக்காகப் பேசினான் பகீரதன்.

அதன் பிறகு, நடந்தவை அனைத்தும் அவனுக்கும், ஹாரண்யாவிற்கும் சாதகமானதாகத் தான் இருந்தது.

அதையெல்லாம் முடித்து விட்டுத் தன் அலுவலைப் பார்க்க வந்து விட்டான்.

இப்போது தான் அவனுக்கு ஒரு விஷயம் புரிந்தது. தன்னுடைய இந்த ஒரு செயலால் தான், ஹாரண்யாவின் மீதான தன் காதலை உளமார உணர்ந்து இனம் கண்டு கொண்டு,

அதை எண்ணிக் குறுநகை புரிந்தவனோ, தன் பெற்றோருக்கும், ஹாரண்யாவின் பெற்றோருக்கும் செல்பேசியில் தொடர்பு கொண்டு விஷயத்தை உரைத்து இனிமேல் ஹாரண்யாவை நினைத்துக் கலக்கம் அடையத் தேவையில்லை என்பதையும் அறிவுறுத்தி விட்டு வைத்தான் பகீரதன்.

இப்படி ஒரு வழியாகத் தன் மனைவிக்கு அவளது வேலையைக் காப்பாற்றிக் கொடுத்து அவளிடமும், தங்கள் இருவரின் குடும்பத்தாரிடமும் நற்பெயரைச் சம்பாதித்து விட்டிருந்தான்.

ஆனால், இதையறிந்த மோஹித்திற்குத் தான் மனம் அமைதி அடையாமல் அலைக்கழிந்து கொண்டிருந்தது.

இவர்கள் இருவரையும் எப்படியாவது பிரித்து விட வேண்டும் என்ற தன்னுடைய முயற்சி தொடர்ந்து முறியடிக்கப்படுவதைக் கண்டு அளவில்லாத ஆத்திரம் அடைந்தான்.

ஆம்! இதுவும் மோஹித்தின் திட்டமே தான்!

ஏனெனில், தான் சம்பந்தப்பட்ட எந்த ஒரு விழா, நேரலையிலும் ஹாரண்யாவை அவளது நிறுவனம் அனுப்பாததைக் கவனித்து விட்டவன், வேறொரு நடிகனின் நேரலையை ஹாரண்யாவை வைத்து இண்டர்வியூ செய்ய வைக்கத் திட்டம் போட்டு அதில் பாதி வெற்றியும் கண்டிருந்தான் மோஹித்.

ஆனால், கடைசி நேரத்தில் ஹாரண்யா அந்த நேரலையைத் தொகுத்து வழங்கவில்லை.

அதன் காரணத்தை அறிந்து கொண்டவனால் அமைதியாக இருக்க முடியவில்லை.

அதனால் பகீரதன் மற்றும் ஹாரண்யாவைப் பிரிக்க வேண்டும் என்ற வெறியில் இன்னும் வலுவான திட்டத்தைத் தீட்டத் தொடங்கினான் மோஹித்.


- தொடரும்

அடுத்தப் பதிவு வெள்ளிக்கிழமை அன்று வரும் நண்பர்களே!
 

Shalini shalu

Moderator
உன் நினைவிலே கரைகிறேன் - 41

தன்னுடைய மனைவிக்காகப் பகீரதன் செய்த செயலை எண்ணி அவனது பெற்றோரும், ஹாரண்யாவின் பெற்றோரும் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர்.

இந்த விஷயத்தால் அவர்கள் இருவருக்கும் கருத்து வேறுபாடு நிகழ்ந்து விடுமோ என்ற பயத்தில் இருந்தவர்கள் இப்போது தான் நிம்மதியாக மூச்சு விட்டனர்.

அதற்குப் பிறகு, கணவனும், மனைவியும் ஒற்றுமையாகவே வாழ்ந்து வந்தார்கள்.

தத்தமது வேலைகளில் கவனத்தைச் செலுத்தத் தொடங்கி விட்டதால், அனைத்தும் கை மீறிப் போகாமல் கட்டுக்குள் இருந்தது எனலாம்.

அன்றொரு நாள் தாங்கள் கொடுத்துக் கொண்ட இதழ் முத்தத்திற்குப் பின்னர், வேறெந்த சமயத்திலும், தங்களது காதல் உணர்வுகளைப் பகிர்ந்து கொண்டது இல்லை.

இப்போது தான், மனதளவில் நெருக்கம் வந்திருக்கிறது. இனி உடலளவிலும் நெருங்கித் தங்களது தாம்பத்திய வாழ்க்கையை நன்முறையில் வாழலாம் என்பதில் பகீரதனும், ஹாரண்யாவும் உறுதியாக இருந்தனர்.

அதே சமயம், அவர்களது அன்னியோன்னியத்தைப் பிரிக்க வேண்டுமென்று கங்கணம் கட்டிக் கொண்டு அலைந்த மோஹித்தோ, அதற்கான வாய்ப்பிற்காக காத்திருந்தான்.

இப்பொழுதெல்லாம் அனைத்து நிகழ்ச்சிகளையும் ஹாரண்யாவே தொகுத்து வழங்க வேண்டும் என்று அவளைக் கட்டாயம் செய்யவில்லை அந்த நிறுவனத்தின் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் சுதன்.

அலுவலகத்தில் புதிதாகப் பணியில் சேர்ந்து இருந்தவர்களுக்குப் பயிற்சி அளிக்கும் வேலையைத் தான் முழு நேரமாகச் செய்து கொண்டிருந்தாள் ஹாரண்யா.

அதைச் செய்யச் சொல்லியது சுதன் தான். ஏனெனில், பகீரதன் வந்து தன்னிடம் மன்னிப்புக் கேட்டு விட்டுச் சென்ற பிறகு, ஹாரண்யாவை எதுவும் சொல்லத் தோன்றவில்லை.

அதனாலேயே, அவளை வெளியே எந்த நிகழ்ச்சிகளையும் அவ்வளவாகத் தொகுத்து வழங்க அனுப்பி வைக்கவில்லை அவர்.

அவரது எண்ணத்தைப் புரிந்து கொண்டாலும் கூடத் தனது வேலையையும், திருமணத்தையும் ஒன்றாகப் போட்டுக் குழப்பிக் கொள்ள வேண்டாம் என்று அவருக்கு அறிவுறுத்தி விட்டு இனிமேல் தன்னுடைய கணவர் இதில் தலையிட மாட்டார் என்று உறுதியும் அளித்தாள் ஹாரண்யா.

அதைக் கேட்ட பின்னர் தான், அவளுக்கு மற்ற நடிகர், நடிகைகளை நேர்காணல் செய்யும் பணியைக் கொடுத்தார் சுதன்.

இதையறிந்து கொண்ட மோஹித்தோ தன்னுடைய புதிய படத்தின் இசை வெளியீட்டு விழாவை ஹாரண்யா தான் தொகுத்து வழங்க வேண்டும் என்ற விண்ணப்பத்துடன் அவரைச் சந்திக்க வந்திருந்தான் மோஹித்.

ஆனால், இந்த தடவை அவனது விண்ணப்பத்தை உடனே பரிசீலிக்காமல்,

“அவங்களைத் தவிர இங்கே வேலை பார்க்கிற இன்னும் சிலர் நல்லா ஆங்கரிங் பண்ணுவாங்க சார். அதனால் நாங்களே அவங்கள்ல யார் பெஸ்ட்ன்னு செலக்ட் செஞ்சி உங்க படத்தோட ஆடியோ லான்ச்சை ஹோஸ்ட் பண்ண வைக்கிறோம்!” என்ற விவரத்தை அவனிடம் முன் வைத்தார் சுதன்.

“ஏன்? என்னோட ஆடியோ லான்ச்சை ரொம்ப பிரம்மாண்டமாக, நிறைய பொருட்செலவில் பண்ணலாம்னு இருக்கோம்! அப்படி இருக்கிறப்போ, அதை ஹோஸ்ட் பண்றதுக்கு பெஸ்ட் ஆன ஆங்கரைத் தானே செலக்ட் செய்யனும். அப்படின்னுப் பார்த்தால், மிஸஸ். ஹாரண்யா தானே உங்க ஆஃபீஸில் ரொம்பவே பெஸ்ட் ஆன ஆங்கர். அப்போ அவங்களைத் தானே நாங்க டிமாண்ட் பண்ணுவேன்?” என்று அவருக்கு விளக்கிக் கூறினான் மோஹித்.

அதைக் கேட்டவருக்குக் கோபத்தில் முகம் சுருங்கிற்று.

அவர்களது அலுவலகத்தில் ஹாரண்யாவைத் தவிர்த்து மற்றவர்கள் யாரும் அவள் அளவிற்குத் திறமையானவர்கள் இல்லை. தாமினி மட்டும் தான் ஹாரண்யாவிற்கு அடுத்த இடத்தில் இருக்கிறாள் என்பது அவருக்கும் தெரிந்த விடயம் தான்!

ஆனால், அதை இவனுக்கும் தெரிந்து இருக்கிறது அது மட்டுமின்றி அதை தன்னிடமே கூறிக் கிண்டல் செய்கிறானே என்ற ஆதங்கம் உருவானது சுதனுக்கு.

“ஆர் யூ ஆல்ரைட் மிஸ்டர். சுதன்?” என்று அவரிடம் வினவியவனிடம்,

“யெஸ் சார். ஐ யம் ஆல்ரைட். நான் இதை மிஸஸ். ஹாரண்யா கிட்டே பேசிட்டுத் தான் உங்களுக்குப் பதில் சொல்ல முடியும்” என்று தெரிவித்தார்.

“அப்படியா? அவங்க உங்க கிட்ட வேலை பார்க்கிறவங்க தானே? அப்படியிருக்கும் போது, நீங்க சொல்ற வேலையை அவங்க செஞ்சி தானே ஆகனும்? அது தானே நியாயம்? அதை விட்டுட்டு நீங்க அவங்க கிட்ட பர்மிஷன் கேட்டுட்டு சொல்றேன்னு சொல்லிட்டு இருக்கீங்க? உங்க நிலைமையைப் பார்த்தால் எனக்குப் பாவமாக இருக்கு” என்றவனின் கடைசி வரியில் கடுப்பாகி,

“சார்? மைண்ட் யுவர் வேர்ட்ஸ்!” எனச் சற்று கோபத்துடன் மொழிந்தார் சுதன்.

“இதைச் சொன்னால் உங்களுக்குக் கோபம் வரும்ன்னு எனக்குத் தெரியும்! ஆனால் இது தான் உங்களோட உண்மையான நிலைமை சார். அதை முதல்ல புரிஞ்சிக்கோங்க. நம்ம கம்பெனியில் வேலை பார்க்கிறவங்க அந்த வேலை விஷயமாக நாம சொல்றதைக் கேட்டுத் தான் ஆகனும்! அது தான் தர்மமும் கூட! ஆனால் இங்கே அப்படியே தலைகீழாக நடக்குது!” என்று கூறியவனின் வார்த்தைகளில் இருந்த உண்மை அவரைச் சுட்டது.

அவரது அமைதியை ஒரு வித குரூர திருப்தியுடன் பார்த்து விட்டு,

“ஓகே சார். நீங்க மிஸஸ். ஹாரண்யா கிட்டே பேசியதுக்கு அப்பறமே எனக்கு இன்ஃபார்ம் பண்ணுங்க. அப்படி அவங்களுக்கு இதில் விருப்பம் இல்லைன்னா நான் வேற டிவி ஸ்டேஷனைக் கூடக் கான்டாக்ட் செஞ்சிக்கிறேன்” என்று அவரிடம் உரைத்து விட்டு அவரிடமிருந்து விடைபெற்றுக் கிளம்பி விட்டான் மோஹித்.

அவன் சென்ற பிறகும் கூட அவன் சொன்ன விஷயம் அவருக்குள் எரிமலையாக வெடிக்கத் தொடங்கி விட்டது.

அவனது கேலிப் பேச்சை ஏற்றுக் கொள்ள முடியாமல் பொருமினார் சுதன்.

இங்கோ அவரது அறையை விட்டு வெளியே வந்த மோஹித், தன் சக ஊழியரிடம் பேசிக் கொண்டிருந்த ஹாரண்யாவைப் பார்க்க நேரிட்டது.

அவளுமே யதேச்சையாகத் திரும்பி பார்க்கவும், அதை அவதானித்தவனோ, கோணல் சிரிப்பொன்றை உதிர்த்து விட்டு அலுவலகத்தின் வெளிக் கதவை நோக்கிச் சென்று விட்டான் மோஹித்.

அதைக் கண்ணுற்றவளுக்கு, என்னவோ சரியில்லை என்றும், அதுவும் அவன் சுதனின் அறையில் இருந்து தான் வருகிறான் என்பதையும் அறிந்து கொண்டாள்.

அதனால் அவனுக்குப் பின்னாலேயே சுதனும் வருவதற்கு வாய்ப்பு உள்ளது என்று அவரது அறையையே ஓரக்கண்ணால் நோட்டம் விட்டுக் கொண்டிருந்தாள் ஹாரண்யா.

அதேபோல், அந்த அறையின் கதவு திறக்கப்பட்டு, அதிலிருந்து வெளியே வந்த சுதனின் முகம் கருத்துச், சிறுத்துப் போயிருந்தது.

அதைக் கண்டவளோ,’ஆஹ்ஹா! என்ன வேலை பண்ணிட்டுப் போனான் - னுத் தெரியலையே! இவர் முகம் ஏன் இவ்வளவு இருளடைஞ்சு இருக்குன்னுப் புரியலையே! ஆனால், ஒன்னு இப்பவும் நம்மத் தலை தான் உருளப் போகுதுன்னு கன்ஃபார்ம் ஆயிடுச்சு’ எனத் தாக்குதலை எதிர் கொள்ளத் தயாரானாள் ஹாரண்யா.

அதேபோல், அவளது அருகில் வந்த சுதனோ,”நான் உங்ககிட்ட கொஞ்சம் பேசனும். கம் டூ மை கேபின்” என்றதும்,

“ஓகே சார்” என்றவள், அவரை முன்னே நடக்க விட்டுப் பின்னால் தொடர்ந்து சென்று அவரது அறைக்குள் நுழைந்தவுடன்,

“உட்காருங்க” என்றவருக்கு நன்றி தெரிவித்து விட்டு அமர்ந்தாள்.

“மிஸஸ். ஹாரண்யா. நான் இப்போ உங்ககிட்ட ஒரு விஷயத்தைச் சொல்லுவேன். அதுக்கு நீங்க நல்லா யோசிச்சு உங்களோட சம்மதத்தைச் சொல்லுங்க” என்று கூறியவரைக் குழப்பத்துடன் பார்த்தவளிடம்,

“யெஸ். இது ரொம்ப முக்கியமான விஷயம்” என்று அவளிடம் தீவிரமாக கூறினார் சுதன்.

“ஓகே சார்” என்று அவளும் உறுதியாக கூறவும்,

சற்று முன்னர் மோஹித் தன்னைப் பார்க்க வந்ததைப் பற்றியும், அவனது விண்ணப்பத்தைப் பற்றியும் அவளிடம் எடுத்துரைத்தார்.

அதைக் கேட்கக் கேட்க ஹாரண்யாவின் வதனத்தில் ஒரு ஒவ்வாத பாவனைத் தோன்றியதைக் கூர்மையாக ஆராய்ந்துப் பார்த்து விட்டு,”என்னாச்சு மேடம்?” என்றவரிடம்,

“சார்! எனக்கு அவரோட ஃபங்கஷன்களில் ஆங்கரிங் பண்ண விருப்பம் இல்லைன்னு உங்களுக்கும் தெரியும் தானே? அதை என்னோட ஹஸ்பண்ட்டும் உங்ககிட்ட தெளிவாகச் சொல்லி இருந்தாரே? அது இப்போ மறந்து போச்சா?” என்று சிறு எரிச்சலுடன் அவரிடம் வினவினாள் ஹாரண்யா.

“தெரியும் மேடம். ஆனால் உங்களோட சௌகரியத்துக்காக மட்டுமே இந்த ஆஃபீஸ் நடக்கனும்ன்னு எந்தச் சட்டமும் இல்லையே? எங்களுக்குன்னு ரூல்ஸ் அண்ட் ரெகுலேஷன்ஸ் இருக்கும் தானே? அதே மாதிரி, நீங்களும், உங்க கணவரும் இதைத் தனிப்பட்ட பகையாக எடுத்துக்க வேண்டிய அவசியமில்லை தானே? இதில் உங்களுக்கு விருப்பம் இல்லைன்னா நீங்க தாராளமாக உங்க வேலையை ராஜினாமா செய்துக்கலாம். நாங்க அதுக்கு எந்த வித தடையும் சொல்ல மாட்டோம்!” என்றவரின் குரலில் தெரிந்த பேதத்தை அறிந்து கொண்டவள், தனக்கு மனதளவில் ஏற்பட்ட அதிர்வை மறைத்துக் கொண்டு,

“நான் என் வேலையை ராஜினாமா செய்யப் போவது இல்லை சார். மோஹித் சாரோட ஃபங்கஷனை நானே ஹோஸ்ட் பண்றேன்!” என்று அவருக்குச் சம்மதம் அளித்தாள்.

அப்போதும் கூட,”இப்போ இப்படிச் சொல்லிட்டு அப்பறம் வீட்டுக்குப் போனதும் உங்க கணவரை இங்கே அனுப்பி எக்ஸ்கியூஸ் கேட்க கூடாது! சரியா மேடம்?”என்று அவளிடம் கறாராக கேட்டார் சுதன்.

“அப்படியெல்லாம் கண்டிப்பாக நடக்காது சார்!” என்று அவருக்கு வாக்குறுதி கொடுத்து விட்டு வெளி வந்தவளோ, இந்த முறை தான் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும் மனநிலையில் இருந்தவளுக்கு அதற்குத் தன் கணவனும் நிச்சயமாகத் துணையாக இருப்பான் என்ற நம்பிக்கையில் அன்றைய இரவிலேயே பகீரதனிடம் அந்த விடயத்தைப் பகிர்ந்து கொண்டாள் ஹாரண்யா.

ஆனால், மனைவியின் கூற்றைக் கேட்டு அதீத கோபம் அடைந்தான் அவளது கணவன் பகீரதன்.

- தொடரும்

அடுத்த பதிவு செவ்வாய்க்கிழமை அன்று வரும் நண்பர்களே!
 

Shalini shalu

Moderator
உன் நினைவிலே கரைகிறேன்- 42

ஆம்! மோஹித்தின் எந்தப் படம் சம்பந்தப்பட்ட விழாக்களையும், நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கக் கூடாது என்ற நிபந்தனையை அவளிடம் முன்னரே கூறியிருந்தோமே?

அப்படியிருந்தும் கூட, இப்போது அவனது நிகழச்சியைத் தொகுத்து வழங்கப் போவதாக தன்னிடமே வந்து தைரியமாக கூறும் மனைவியை ஆத்திரத்துடன் உறுத்து விழித்தான் பகீரதன்.

அவனது பார்வையில் தெரிந்த வேறுபாட்டைக் கண்டுப் பேச்சை நிறுத்தியவள்,”என்னாச்சு பகீ?” என்றாள் ஹாரண்யா.

“நாம இதைப் பத்தி முன்னாடியே பேசி இருக்கோம் ரணு. மறந்துட்டியா?” என்று அவளிடம் வினவினான் கணவன்.

“ஆமாம். ஆனால்…” என்றவளிடம்,

“என்ன ஆனா? அவன் சம்பந்தப்பட்ட எந்த இண்டர்வியூவையும் நீ ஆங்கரிங் பண்ணக் கூடாதுன்னு நான் சொல்லி இருக்கேன் தானே?”என்றான் கோபத்துடன்.

“ஆமா ங்க. ஆனால் என்னோட மேலதிகாரி சொல்றதை நான் கேட்டுத் தானே ஆகனும்?” என அவனுக்குப் புரிய வைக்க முயன்றாள் ஹாரண்யா.

பகீரதன்,“ஏன் கேட்கனும்? அதைக் கேட்கனும்னு உனக்கு என்னத் தலையெழுத்தா?” என்றதும்,

அதைக் கேட்டவளோ வேதாளம் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறியதை அறிந்து நொந்து கொண்டு,”ஹைய்யோ! என்னால் முடியலை!”என்று புலம்பினாள் மனைவி.

“என்ன முடியலை? நான் எத்தனை தடவை சொல்றேன்? அதைப் பத்தி நீ என்னைக்காவது யோசிச்சுப் பார்த்து இருக்கியா?” என அவளைக் கடிந்து கொள்ளவும்,

“ப்ச்! இதுக்கு நான் எப்பவோ பதில் சொல்லியாச்சு பகீ. சும்மா, சும்மா இதையே பேசி டென்ஷன் பண்ணாதீங்க!” என்று எரிச்சலாக மொழிந்தாள் ஹாரண்யா.

“ஓஹ் ரியலி! நானா உன்னை டென்ஷன் பண்றேன்? நீ தான் என்னை இந்த விஷயத்தில் ரொம்ப டென்ஷன், கோபம், எரிச்சல்படுத்திட்டு இருக்கிற! அந்த மோஹித் சம்பந்தப்பட்ட விஷயத்தில் இருந்து தள்ளியே இரு! அது தான் உனக்கு நல்லது!” என அவளிடம் அழுத்தமான குரலில் வலியுறுத்தினான் பகீரதன்.

“ஆமா! எனக்கு அவன் கூட ஃப்ரண்ட்ஷிப் வச்சுக்க ஆசைப் பாருங்க! அதனால் தான், அவன் சம்பந்தப்பட்ட விஷயங்களில் நானே தேடிப் போய் விழுறேன்! நீங்க வேற ஏன் என்னை இப்படிக் கடுப்பு ஆக்கிட்டு இருக்கீங்கன்னுத் தெரியலை!” என்று அவனுக்கு மேலாக காதில் புகை விடாத குறையாகப் பல்லைக் கடித்துக் கொண்டுக் கூறவும்,

“ஹேய்! நீ என்ன என்னைக் கிண்டல் பண்றியா?” என அவளிடம் எகிற,

“நான் உங்களைக் கிண்டல் பண்ற மனநிலையில் சத்தியமாக இல்லை ங்க. ஆனால், நான் ஒரு விஷயத்தை மட்டும் அழுத்திச் சொல்றேன். நல்லா கேட்டுக்கோங்க. இந்த விழாவை நான் தான் தொகுத்து வழங்குவேன்! அப்படி இல்லைன்னா, ஒன்னு என்னை வேலையில் இருந்து தூக்கிடுவாங்க, இல்லை, நானாகவே ரிசைன் பண்ணிட்டுப் போகனும்னுக் கண்டிஷன் போட்டு இருக்காங்க! அதனால், இதைத் தவிர எனக்கு எந்த வழியும் இல்லை!” என்றவளிடம்,

“அப்போ உன் வேலையை நீயே ரிசைன் பண்ணிடு ஹாரண்யா!” என்றவுடன், தனது முழுப் பெயரை உச்சரித்தவனை ஆழ்ந்து பார்த்தவளோ,

“என்ன சொன்னீங்க? திரும்பச் சொல்லுங்க!”என்று அவனிடம் நிதானமாக வினவினாள்.

“அந்த மோஹித்தோட ஃபங்கஷனை நீ ஆங்கரிங் பண்ணக் கூடாதுன்னா, நீ உன்னோட வேலையை ரிசைன் பண்ணிட்டா பிரச்சினை முடிஞ்சது” என்று சாதாரணமாக உரைத்தான் பகீரதன்.

“ஷட் அப் பகீ! நீங்க எப்பவுமே என்னோட விருப்பத்தை மதிக்கவே மாட்டேங்குறீங்க! அது ஏன்? என் சம்பந்தப்பட்ட எதையுமே பெருசாக எடுத்துக்க மாட்டேங்குறீங்க! அது ஏன்? அப்பறம் எதுக்காக என்னைக் கல்யாணம் செஞ்சிக்கிட்டீங்க? நீங்க என்னை உண்மையிலேயே லவ் பண்ணீங்களா? அதனால் தான், நம்மக் கல்யாணம் நடந்துச்சா?” என்று அவனைப் பிடித்து உலுக்கினாள் ஹாரண்யா.

“ஏய்! என் மேலே இருந்து முதல்ல கையை எடு!” என அவளின் கரங்களைத் தன்ன இலிருந்து வலுக்கட்டாயமாகப் பிரித்து எடுத்து விட்டு,

“நீ ரொம்ப ஓவராகப் பேசுற! நான் அப்படி என்னச் சொல்லிட்டேன்? அந்த மோஹித் எவ்வளவு விஷமானவன்னு உனக்குத் தெரியும் தானே? அப்படியிருந்தும், நீ ஏன் அவங்க கிட்டயே போய் மாட்டிக்கிறன்னுச் சுத்தமாகப் புரியல?”என்று அவளிடம் கேட்கவும்,

“உங்களுக்கு எதுவுமே புரியாது ங்க! ஏன்னா நீங்க நினைச்சதை மட்டும் தான், உங்களைச் சுத்தி இருக்கிற எல்லாரும் பண்ணனும்ன்ற ஒரு பிடிவாதத்தில் இருக்கீங்க! அதை இப்போதாவது மாத்திக்கோங்க ப்ளீஸ்! மத்தவங்களும் அவங்க விருப்பப்படி எல்லாத்தையும் செய்ய விடுங்களேன்!” என அவனிடம் இறைஞ்சினாள் ஹாரண்யா.

இவர்களது அறை அந்த வீட்டின் மேல் தள மாடியில் அமைந்திருப்பதால் இங்கே நடப்பது எதுவும் கீழே இருக்கும் பகீரதனின் பெற்றோருக்கு நிச்சயமாக கேட்காது! ஏனென்றால், தன்னுடைய அறையில் மாத்திரையைப் போட்டு ஆழ்ந்து உறங்கிக் கொண்டு இருந்தார் பாலேந்திரன்.

அதேபோல், அவரது மனைவி மனோரமாவும் கூட ஓய்வு எடுத்துக் கொண்டு இருந்தார்.

எனவே, அவர்களுக்குச் சிறியவர்களின் ஆர்ப்பாட்டம் எதுவும் கேட்க வாய்ப்பில்லை.

அதனால் பகீரதனும், ஹாரண்யாவும் இன்னும் தீவிரமாகச் சண்டையிடத் துவங்கி விட்டனர்.

“சொல்லுங்க பகீ! நான் கேட்டக் கேள்விகளுக்கு எல்லாம் எனக்கு இப்போவே உங்ககிட்ட இருந்து பதில் வேணும்!” என்றவளைக் கடுமையாகப் பார்த்தவனோ,

“உன் மேலே எனக்கு லவ் இல்லாமலா அந்தச் சுதன் கிட்டே வந்து உனக்காகப் பேசி, மன்னிப்பும் கேட்டேன்! அதில் கூட உனக்கு என் காதல் புரியலைல ரணு?” என்று வினவினான் பகீரதன்.

“அதை நினைச்சு உங்க மேலே மலையளவு நம்பிக்கை வச்சுத் தான், இந்த இண்டர்வியூவைப் பண்ண நான் ஓகே சொன்னேன் ங்க! ஆனால், நீங்க இப்படிப் பேசி என்னோட மனசை உடைச்சுட்டீங்க! அப்பறம் எப்படி உங்களை நம்பச் சொல்றீங்க? அதனால் தான் கேட்கிறேன்! நீங்க என்னை லவ் பண்ணியதால் தான் கல்யாணம் செய்துக்கிட்டீங்களா?” என்று தன்னிடம் மீண்டும் மீண்டும் ஒரே பல்லவியைப் பாடியவளை அதீத எரிச்சலுடன் ஏறிட்டு,

“இல்லை! நான் உன்னை லவ் பண்ணவே இல்லை! போதுமா?” என்று கத்தவும்,

அதைக் கேட்டு ஒரு கணம் அவளது இதயத்துடிப்பே நின்று விட்டதைப் போல் உணர்ந்தாள் அவனது மனைவி.

ஆனாலும்,”பகீ ப்ளீஸ்! நான் இப்படி ரெண்டு தடவை கேட்டதுக்காகவோ, என்னை வெறுப்பேத்துறதுக்காகவோ இந்த மாதிரி சொல்லி என்னைக் கஷ்டப்படுத்தாதீங்க! நீங்க என்னை லவ் பண்ணித் தான் கல்யாணம் செஞ்சி இருக்கீங்கன்னு எனக்கு நல்லா தெரியும்!” என்றவளிடம்,

பகீரதன்,“நான் உன்னைக் காதலிச்சுக் கல்யாணம் செய்துக்கலை! அது தான் உண்மை! அதை நீ நம்பித் தான் ஆகனும்!” என்று கூறியதும்,

அவளது உடலில் இருந்த அனைத்து செல்களும் ஓய்ந்து போய் விட அப்படியே தரையில் அமர்ந்து விட்டாள் ஹாரண்யா.

அவளிடம் சென்று,”ஆனால் நான் இப்போ உன்னை ரொம்ப லவ் பண்றேன் ம்மா” என்று மிருதுவான குரலில் கூறினான் அவளது மணாளன்.

அதைக் கேட்டவளோ, துக்கம் தொண்டையை அடைக்க,”இப்போ லவ் பண்றீங்க சரி! ஆனால் அப்போ ஏன் லவ் பண்ணாமல் என்னைக் கல்யாணம் பண்ணீங்க? அதுக்கு மட்டுமாவது பதில் சொல்லுங்க?” என்று பலவீனமான குரலில் அவனிடம் கேட்க,

“ஏன்னா நீ என்னைப் பத்தி ஒன்னு சொன்னியே? அதான் காரணம்!” என்றவனைக் குழப்பமாகப் பார்த்தாள் ஹாரண்யா.

“ஆமாம். என் விருப்பப்படி மட்டும் தான் என்னைச் சுத்தி இருக்கிறவங்க நடந்துக்கனும்னு நான் எப்பவும் நினைப்பேன்! என்னைப் பார்க்கிற ஒவ்வொருத்தரோட கண்ணிலும் ஒரு பிரம்மிப்பும், ஏக்கமும் நிரம்பி வழியனும்னு எதிர்பார்ப்பேன்! ஆனால் நீ என்னைப் பார்க்கிறப்போ எல்லாம் உன் பார்வையில் கடமையும், மரியாதையும் மட்டும் தான் இருக்கும்! அது எனக்குச் சுத்தமாகப் பிடிக்காமல் இருந்தது!” என்றதுமே,

“அது நியாயம் தானே? நான் உங்களை இன்சல்ட் எதுவும் பண்ணிடலையே? அப்பறம் என்ன?” எனக் கேட்டாள்.

“அதுவே எனக்குப் பெரிய இன்சல்ட் மாதிரி தான் தெரிஞ்சது!” என்று உரத்துக் கூறினான் பகீரதன்.

“இது என்னக் கொடுமையாக இருக்கு! ஏதோ நான் உங்களை அவமதிப்பு செய்துட்ட மாதிரியும், அதுக்குப் பழி வாங்குறதுக்காக நீங்க என்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்ட மாதிரியும் தோனுது! ஆனால், நான் அப்படி எதுவும் பண்ணலை - ன்னும் போது ஏன் என்னைத் தேவையில்லாமல் மேரேஜ் செஞ்சி உங்க வாழ்க்கையில் நுழைச்சுக்கிட்டீங்க?” என்ற கேள்வியைத் தொடுத்தாள் ஹாரண்யா.

“ஏன்னா, நீ என்னைப் பார்க்கும் போதெல்லாம் உன் கண்ணில் காதலும், வெட்கமும், ஒரு விதப் பிரம்மிப்பும் மட்டும் தான் தெரியனும்னு நான் ஆசைப்பட்டேன்! அதை என்னச் செய்தாவது நிறைவேத்திக்கனும்னு நினைச்சேன்! அதனால் தான், உன்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்!” என்றவனிடம்,

“ஆஹ் அப்பறம்?” எனத் தெனாவெட்டாக கேட்டவளை முறைத்துப் பார்த்தான் கணவன்.

“என்ன முறைப்பு? நான் கேட்டதுக்கு நீங்க இன்னும் வெளிப்படையானப் பதிலைச் சொல்லவே இல்லை. அதை முதல்ல சொல்லுங்க” என்றவளோ, தன்னுடைய கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள்.

பகீரதன்,“என்ன உடனே அழுகையை நிறுத்திட்டு இப்படிப் பேசுற? என்னை விட நல்லாவே நடிக்கிற?” என்று அவளைக் கேலி செய்தான்.

“ஆமாம். நான் உங்களுக்கு ஏதோ ஒரு பெரிய விஷயத்தைப் பண்ணி, அதனால் நீங்க ரொம்ப கஷ்டப்பட்டுட்டீங்க போல, அதான், நீங்க என்னைப் பழி வாங்குறதுக்காகத் தான் கல்யாணம் பண்ணி இருக்கீங்கன்னு ஒரு நிமிஷத்தில் என்ன என்னவோ யோசிச்சுக் குற்ற உணர்ச்சியில் அழுதேன்! ஆனால், நான் அப்படியெல்லாம் எதுவும் பண்ணலைன்னு நீங்களே சொல்லிட்டீங்க. அப்பறம் எதுக்கு நான் அழுது கரையனும்? உங்களோட உப்புச் சப்பு இல்லாத காரணத்தை முதல்ல சொல்லுங்க. அதைக் கேட்டதுக்கு அப்புறமாவது எனக்கு அழுகை வருதான்னுப் பார்ப்போம்!” என்று தன் நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு அவனிடம் சரிக்குச் சமமாக நின்று வினவினாள் ஹாரண்யா.

“ஆஹான்! நாட் பேட்! ஆனால், நான் உனக்கு எந்தப் பதிலையும் சொல்லத் தயாராக இல்லைன்னு சொன்னா என்னப் பண்ணுவ?” என்று அவளைப் போலவே கூறினான் அவளது கணவன்.

அதில் திமிர் மட்டும் தான் நிறைந்திருந்தது.

ஆகவே,”சொல்லலைன்னா போங்க! இப்படி திமிர் பிடிச்ச உங்களுக்காக எல்லாம் நான் என்னோட வேலையை ராஜினாமா பண்ண முடியாது!” என்று உறுதியாக உரைத்தாள் அவனது சகதர்மினி.

“அப்படியா? ஆனால் நீ அதைச் செய்யலைன்னா நான் உன்னை வேலையில் இருந்து தூக்க வைப்பேன். அது எப்படின்னுப் பார்க்கிறியா?” என்று அவளிடம் சவால் விட்டவனைத் துச்சமாகப் பார்த்தவளோ,

“உங்களால் முடிஞ்சதை செய்யுங்கப் பார்க்கலாம்!” என்று துணிந்து சொல்லவும்,

“ம்ஹ்ம்! நீ என் முன்னாடி நின்னு, எங்கிட்ட இப்படி தைரியமாகப் பேசுறது எனக்கு ரொம்ப பிடிச்சு இருக்கு. அதனால், நான் இப்போ உன்னோட கேள்விக்கு வெளிப்படையான பதிலைச் சொல்லப் போறேன்” என்றான் பகீரதன்.

- தொடரும்

அடுத்த பதிவு வெள்ளியன்று பதிவிடப்படும் நண்பர்களே!
 

Shalini shalu

Moderator
உன் நினைவிலே கரைகிறேன்- 43

தன்னை நேர்காணல் செய்யும் போதெல்லாம் ஹாரண்யாவின் முகத்தை ஆராய்ச்சி செய்வதையும், அதில் அவனைக் கவரும் வகையில் எந்தவொரு பாவனையும், உடல்மொழியில் கூட எந்த விதமான அவன் மீதான ஆர்வத்தை வெளிப்படுத்தவில்லை அவள்.

அதேபோல், அவள் தன்னை ஒவ்வொரு முறையும் மையலாகப் பார்ப்பாள் என்றும், அவளது பார்வை தன் மீது ஆர்வமாகத் தொட்டு மீள்கிறதா? என்றும் கூர்மையாக கவனிப்பான் பகீரதன்.

ஆனால் அவனுக்கு ஒவ்வொரு முறையும் ஏமாற்றமே கிடைத்தது. அதை மட்டும் அவனால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.

எப்படி இந்தப் பெண்ணிற்கு மட்டும் தன் மீது எந்தவித ஆர்வமும் எழவில்லை? பார் போற்றும் மிகப் பிரபலமான மற்றும் சினிமாத்துறையில் முதலிடத்தில் இருக்கும் தன்னைப் போன்றதொரு நடிகனைப் பார்க்கையில் அவளது தேகமெங்கும் புல்லரிக்க வேண்டாமா? அவள் ஒவ்வொரு முறையும் தன்னைப் பார்க்கும் போது எல்லாம் அவளது விழிகளில் ஆயிரம் நட்சத்திரங்களைப் போல் மின்னல் போன்றதொரு ஒளி வெளிப்பட வேண்டாமா? என்று பொருமத் தொடங்கி இருந்தது பகீரதனின் உள்ளம்.

அதனாலேயே, தன்னை ஹாரண்யா நேர்காணல் எடுக்கும் நேரங்களில் எல்லாம் அவளைக் குறுகுறுவெனப் பார்க்க ஆரம்பித்தான்.

ஆனால், அதில் விஷமத்தனம் இல்லை. ஒருவித ரசனை தான் இருந்தது. அதை அவனது ஆழ்மனம் அறிந்திருக்கவில்லை. அப்படி அறிந்து கொள்ள அவனும் அனுமதிக்கவில்லை என்பது தான் உண்மை.

அவள் மோஹித்தை நேர்காணல் செய்யும் நேரங்களில் எல்லாம் பகீரதனுக்குக் கோபம் உச்சத்தைத் தொடும். ஆனால், பல்லைக் கடித்துக் கொண்டு அமைதியாகி விடுவான்.

அவனை நேர்காணல் செய்யக் கூடாது என்று அவளுக்குக் கட்டளையிடும் அளவிற்குத் தனக்கு அவள் மீது அப்போது உரிமையில்லை என்று தள்ளி நின்று இருந்தவனுக்கு, அதற்கு மேல் பொறுக்க முடியாமல் உடனே அவளைத் திருமணம் செய்து கொள்ள விருப்பம் கொண்டு அதை முதலில் தன்னுடைய பெற்றோரிடம் வெளிப்படுத்தினான் பகீரதன்.

அதன்பிறகு, ஹாரண்யாவிடம் சென்று மனதிலிருப்பதைப் பகிர்ந்து கொள்ளவும், அவள் முதலில் தயங்கிப் பின், பெற்றோரிடம் கலந்துரையாடி விட்டுச் சுய அலசலில் இறங்கினாள்.

ஆனால் அவளது மனதில் கொஞ்சம், கொஞ்சமாகப் பகீரதனின் மீது அவளுக்கும் நேசம் துளிர்விக்கத் தொடங்கி விட்டது.

அப்படியிருக்க, தன்னைச் சுற்றி இருக்கும் அனைவரும் அவனைப் பற்றிய அருமை, பெருமைகளை எல்லாம் அளந்து விட்டுக் கொண்டே இருந்ததாலும், அவனுடைய உயரத்தைக் கண்டுத் தானும் பிரம்மிக்கத் துவங்கியதில் இருந்து அவளது மனமும் கூட அவன் பக்கம் சாய ஆரம்பித்தது.

அதேபோல், அவனை நேர்காணல் செய்த அந்தச் சமயத்திலேயே அனைவரின் முன்னிலையிலும் தன்னிடம் காதலைச் சொல்லி யாசித்து நின்றிருந்த பகீரதனைக் கண்டதும் ஹாரண்யாவிற்கு முதலில் ஆச்சரியத்தில் தலை சுற்றியது.

ஆனால், உடனே சமாளித்துக் கொண்டுப் பெருமிதம் அடைந்தவள், அப்போதே அந்த நிமிடத்திலேயே அந்த ஷோவை நேரலையில் பார்த்துக் கொண்டிருந்த லட்சம் பேர்களின் முன்னிலையிலும் அவனது காதலை ஏற்றுக் கொண்டாள் ஹாரண்யா.

அதன் பின்னர், அவர்களது திருமணப் பேச்சு மற்றும் அதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் கண் இமைக்கும் நேரத்தில் நடந்து முடிந்து விட்டிருந்தது.

அந்தச் சமயத்தில், மோஹித் தனக்குக் கால் செய்து இது உண்மைத் திருமணமா? அல்லது கண் துடைப்பா? என்று கேட்டதையும் கூடத் தன் மனைவியிடம் மறைக்காமல் சொல்லி விட்டான் பகீரதன்.

இதையெல்லாம் கேட்டு முடித்த ஹாரண்யாவோ, அவனிடம் ஒரு வார்த்தைக் கூட உதிர்க்கவில்லை.

கணவனின் சொற்கள் தந்த வலியை விடத் தனது மடத்தனத்தை நினைத்து தான் வெட்கி அமைதி அடைந்து விட்டிருந்தாள்.

ஏனென்றால், அவன் இப்படித் தன்னை ஏமாற்றிக் காதலைச் சொல்லிக் கல்யாணம் வரைக் கொண்டு வந்தாலும் கூடத் தன்னைத் திருமணம் செய்து கொள்வதற்கு இவனுக்கு ஏன் இவ்வளவு அவசரம்? அதுவும் இத்துணை வேகமாக கல்யாண வேலைகளைச் செய்கிறானே? என்றெல்லாம் யோசித்துப் பார்க்காமல் அவன் தன்னை மூளைச்சலவை செய்யும் போது எல்லாம் கண்களையும், புத்தியையும் மூடிக் கொண்டு அவன் சொன்னதற்கு எல்லாம் தலையாட்டிய தான் மற்றும் தன்னுடைய பெற்றோரை எண்ணி அவளது விழிகளில் நீர்க் கசிந்தது.

அதைப் பார்த்தவுடன்,”ஆனால் இப்போ நான் உன்னை ரொம்ப லவ் பண்றேன்” என்றவனைக் கண்ணீருடன் நோக்கினாள் ஹாரண்யா.

“இப்போதாவது என்னைப் புரிஞ்சிக்கிட்டியா ரணு?” என்றதும், அவனை ஏறிட்டவளது விழிகளில் கோபக்கனல்.

“என்னம்மா?”

“நான் இதுக்கப்புறமும் முட்டாளாகவே இருப்பேன்னு நினைச்சிட்டீங்களா?” என்று கணீர்க் குரலில் வினவினாள் ஹாரண்யா.

“என்னம்மா சொல்ற?” என்றவனோ, இவள் மேல் தனக்குக் காதல் வந்த இந்த நேரத்தில் மனைவி தன்னை விட்டுப் போய் விட்டால் என்ன செய்வது? என்று அவளது கரங்களைப் பற்றிக் கொண்டு,

“ரணும்மா! நான் சொல்றதைக் கொஞ்சம் கேளு” என்று அவளிடம் நிதானமாகப் பேசவும்,

“என்னக் கேட்கனும் பகீரதன் சார்? இனிமேலும் நீங்க சொல்றதை எல்லாம் நான் கண்ணை மூடிக்கிட்டுக் கேட்டுட்டு இருந்தால் என்னை விட வடிகட்டிய முட்டாள் யாருமே இருக்க மாட்டாங்க! உங்க மனசில் என்ன நினைச்சிட்டு இருக்கீங்க?” என்று அவனுடைய சட்டையைப் பற்றிக் குலுக்கினாள் ஹாரண்யா.

இந்த முறை அவளது கையைத் தட்டி விடாமல் அவளிடம்,”ரிலாக்ஸ் ரணு. எதுவாக இருந்தாலும் பேசித் தீர்த்துக்கலாம்” என்று கூறி அவளைச் சமாதானம் செய்யத் தொடங்கி விட,

“ஷட் அப் பகீரதன்!” என்றவளைத் திடுக்கிட்டுப் பார்த்தான் அவளது கணவன்.

“எதைப் பேசித் தீர்த்துக்கனும்? என்னப் பேசனும்? உங்களுக்குக் கொஞ்சமாவது அறிவு இருக்கா? இல்லை, எல்லாமே இருந்தும், நான் உங்களோட விருப்பத்துக்கு ஆடனும்னு நினைக்கிறீங்களா?” எனப் பொரிந்து தள்ளினாள் ஹாரண்யா.

பகீரதன்,“அப்படியெல்லாம் இல்லை ரணு” என்றவனிடம்,

“அப்பறம் வேற எப்படி?” எனக் கேட்டாள்.

“நீ இப்போ எதுக்கு இப்படிக் கத்திட்டு இருக்கிற? அமைதியாக இரு” என்றதும்,

“நான் ஏன் அமைதியாக இருக்கனும்? நீங்க இவ்வளவு நாளாக என்னை ஏமாத்தி இருக்கீங்க! அது தெரியுமா?” என அவனிடம் ஆத்திரத்துடன் வினவினாள் ஹாரண்யா.

பகீரதன்,“என்னது ஏமாத்துனேனா? என்ன சொல்ற? நான் உன்னை எதுக்கு ஏமாத்தனும்? நீயும் சம்மதம் சொல்லித் தானே நம்மக் கல்யாணமே நடந்துச்சு?” என்று கேட்டு விடவும்,

அவள் எதை நினைத்துக் கலங்கினாளோ, அந்தக் கேள்வியைக் கேட்டவனை இயலாத பார்வை பார்த்தாள் அவனது மனைவி.

ஏனெனில், அவன் சொல்வதும் சரி தானே? அவன் என்ன தன்னைக் கட்டாயக் கல்யாணமா செய்தான்? அவனது பசப்பு வார்த்தைகளை நம்பி ஏமாந்து போய்த் தானே அவனைத் திருமணம் செய்து கொண்டாள்.

அதை அவன் சொல்லிக் காட்டியதும் வேதனையில் துடித்து அழத் தொடங்கி விட்டாள் ஹாரண்யா.

“அழறதை நிறுத்து ரணு!” என அவளை அதட்டினான் பகீரதன்.

“ஏன் நிறுத்தனும்? நீங்க சொல்வதைத் தான் கேட்கனுமா? அப்படித் தான் அழுவேன்!” என்று அடமாகச் சொல்லவும்,

“எதுக்கு அழுகுறன்றக் காரணத்தைச் சொல்லிட்டாவது அழு” என்றவுடன்,

“ஓஹ்! நான் எதுக்கு இப்படி அழுகுறேன்னுக் கூட உங்களுக்குப் புரியலைல?” என்று அடிபட்டப் பார்வையுடன் கேட்டாள் ஹாரண்யா.

“புரியலை. நீயே சொல்லு”

“இந்தத் திமிர் ஒரு நாளைக்கு இருக்கிற இடம் தெரியாமல் காணாமல் போகப் போகுது!” என்க,

“அது போகும் போதுப் பார்த்துக்கலாம். நீ மேலே சொல்லு” என்று அலட்சியமாக கூறினான் பகீரதன்.

“உங்களோட நம்பிக்கையான வார்த்தைகளை நம்பி ஏமாந்து இந்தக் கல்யாணத்துக்குச் சம்மதம் சொல்லி இப்போ உங்களோட மனைவியாக இருக்கேன்றதை நினைச்சு ஃபீல் பண்ணி அழுறேன். போதுமா?” எனப் பதிலளித்தாள் ஹாரண்யா.

“ஓஹ் ரியலி? நான் உன்னை ஏமாத்திக் கல்யாணம் பண்ணிட்டு இப்போ நீ எனக்கு வேண்டாம்னு சொல்லிக் கழட்டி விடப் பார்த்தேனா? ஹாங்?” என்று கேட்கவும்,

“ஓஹோ! இல்லை தான்! ஆனால், நம்மக் கல்யாணத்துக்கு முன்னாடி நீங்க பண்ணது எல்லாம் தப்புன்னு யோசிக்கவே மாட்டீங்களா? அந்த மோஹித் கிட்டே விட்ட சவாலில் ஜெயிக்கிறதுக்காக என்னை மேரேஜ் பண்ணி இருக்கீங்க! இதெல்லாம் உங்களுக்குத் தப்பாகவே தெரியலையா?” என்று தன் ஆதங்கத்தை வெளிப்படுத்த,

“அதுக்கு என்னை என்னப் பண்ணச் சொல்ற? உன் கிட்ட சாரி கேட்கனுமா? சரி. நான் உனக்கு இதுவரைக்கும் பண்ணதுக்கு எல்லாம் என்னை மன்னிச்சிரு. போதுமா?” என்று அந்தக் கணமே அவளிடம் மன்னிப்புக் கோரி விட்டான் பகீரதன்.

உடனே,”உங்களுக்கு எஸ்கேப் ஆகுறதுக்கு இது ஒரு வழியாகப் போச்சுல்ல?” என்று கோபமாக வினவினாள் ஹாரண்யா.

“ஹேய்! நீ ரொம்ப ஓவராகப் போற! நான் உங்கிட்ட உண்மையாகத் தான் சாரி கேட்டேன்! ஆனால் நீ தான் நான் எல்லாத்தையும் என்னோட தலைக்கனத்தில் செய்றேன்னுத் தப்பாக நினைச்சிட்டுக் கண்டபடி பேசுற!”

“ஆமாம்! அது தான் உண்மை. உங்களுக்கு நீங்க ஒரு பெரிய நடிகன்னுத் திமிர், தலைக்கனம் பிடிச்சு ஆட்டுது! அதை வச்சு உங்க தாளத்துக்கு எல்லாரையும் ஆட வச்சிடலாம்னு ஒரு அசைக்க முடியாத எண்ணம் இருக்கு! அதனால் தான், நீங்க பண்ண தப்பை எல்லாம் சொல்லியும் கூட இப்படித் திமிராகப் பேசுறீங்க!” என்றவளைக் கடுமையாக முறைத்தவனோ,

“போதும் ரணு! நம்ம ரெண்டு பேரோட பேரன்ட்ஸ்ஸை வரவழைச்சு அவங்க முன்னாடி நான் உண்மையை ஒத்துக்கிட்டா உனக்கு ஓகே தானே?” என்று கேட்டான் அவளது கணவன்.

“ஓகே தான்! ஆனால் இவ்வளவு நடந்ததுக்கு அப்பறமும் எனக்கு உங்க கூட வாழ விருப்பம் இல்லை. அதனால் விவாகரத்துப் பண்ணிக்கலாம்” என்று ஒரே போடாகப் போட்டாள் ஹாரண்யா.

அதைக் கேட்டுச், சில நொடிகள் அமைதியாகித், தன்னை நிலைப்படுத்திக் கொண்டு,”ஓகே” எனச் சம்மதித்து விட்டான் பகீரதன்.

“தாங்க்ஸ்” என்றவளிடம்,

“ஆனால், நமக்குக் கல்யாணம் ஆகிக் கொஞ்ச மாசம் தான் ஆகுது. அதுக்குள்ளே நமக்கு எப்படி விவாகரத்துக் கிடைக்கும் மேடம்?”என்று நக்கலாக கேட்டான்.

“வெயிட் பண்ணலாம். அதுவரைக்கும் என்னால் உங்க கூட இருக்க முடியாது! அதனால் நான் என்னோட பேரன்ட்ஸ் கூடத் தங்குவேன்” என்றவளைப் பார்த்து ஒரு பெருமூச்சுடன்,

“சரி. இதையாவது உன் இஷ்டப்படி செய்” எனக் கூறி விட்டான் பகீரதன்.

“அதே மாதிரி, நான் இனிமேல் வேலைக்குப் போகனுமா, போகக் கூடாதா? யாரை இண்டர்வியூ செய்யனும், செய்யக் கூடாதுன்னு நீங்க முடிவு பண்ணத் தேவையில்லை!” என்று தீர்க்கமாக உரைத்தாள் ஹாரண்யா.

“நாம ரெண்டு பேரும் டிவோர்ஸ் பண்ணிக்கவே போறோம்! இதுக்கு அப்பறம் நீ என்ன செஞ்சா எனக்கு என்ன? அது உன் விருப்பம். இப்போ சொல்லு. எப்போ நம்ம பேரன்ட்ஸ் கிட்டே இதைப் பத்திப் பேசனும்?” எனக் கேட்க,

“நாளைக்கே பேசிடலாம். அதுக்கு அப்பறம் நான் ரொம்ப பிஸி ஆகிடுவேன்” என்றாள்.

“ஓகே. அவ்வளவு தானே?” என்றவனுக்கு,

“ம்ஹ்ம். அவ்வளவு தான்!” என்று கூறி மீண்டுமொரு முறை உறுதிப்படுத்தினாள் ஹாரண்யா.

அதன் பின்னர், அவளிடம் எதுவும் பேசும் நிலையில் இல்லாததால் அவளைப் பார்க்காமல் அப்படியே அறையிலிருந்து வெளியேறி விட்டான் பகீரதன்.

- தொடரும்
 

Shalini shalu

Moderator
உன் நினைவிலே கரைகிறேன் - 44

என்ன தான், மனைவியிடம் ஒரு வேகத்தில் சொல்லி விட்டாலும் அவளை விவாகரத்துச் செய்யத் தயாராக இல்லை பகீரதன்.

ஆனால், ஹாரண்யாவோ அந்த முடிவில் விடாப்பிடியாக இருந்ததால், அவளது விருப்பப்படியே பிரிந்து செல்வதற்கும், விவாகரத்திற்கும் சம்மதம் சொல்லி விட்டான்.

இப்போது இன்னும் சில நிமிடங்களில் தங்கள் இருவருடைய பெற்றோர்களிடமும் விஷயத்தைக் கூறத் தயாராக இருந்த வேளையிலும் கூட,”ஒரு தடவை நல்லா யோசிச்சுப் பாரு ரணு” என அவளிடம் இறைஞ்சினான் பகீரதன்.

“இதில் யோசிக்க என்ன இருக்குங்க? எனக்கு உங்க கூட வாழ விருப்பம் இல்லை. இவ்வளவு தூரம் வந்ததுக்கு அப்பறம் நீங்க எதுவும் மூளைச்சலவை பண்ணாமல் இருந்தால் நல்லா இருக்கும்!” எனக் கறாராக உரைத்து விட்டாள் ஹாரண்யா.

அதன் பிறகு அவளிடம் இறைஞ்சுவதை நிறுத்திய பகீரதன்,”ஓகே ஃபைன்” எனக் கூறி விட்டுத் தன்னுடைய பெற்றோரிடம் சென்று,”உங்க கிட்டேயும், அத்தை, மாமா கிட்டேயும் நானும், உங்க மருமகளும் ஒரு விஷயத்தைப் பத்திப் பேசனும். ஹாலுக்கு வாங்க” என்றழைத்தான்.

“ஏன்டா? இப்போ என்ன ஆச்சு? உங்களுக்குள்ளே மறுபடியும் ஏதாவது பிரச்சினையா?” என ஆயாசமாக வினவினார் மனோரமா.

அதைத் தான் தன்னுடைய பார்வையில் வெளிப்படுத்தினார் பாலேந்திரன்.

“அவங்களும் வரட்டும் மா. அப்போ சொல்றேன்” என்கவும்,

“சரி. ஹாராவை வரச் சொல்லு” என்றார் அவனது அன்னை.

“அவ அவங்க அப்பா, அம்மா கிட்டே ஃபோன் பேசிட்டு இருக்கிறா” எனக் கூறினான் பகீரதன்.

மனோரமா,“இன்னைக்கு ரெண்டு பேரும் ஒரு முடிவோட தான் இருக்கீங்க போலவே?” என்றவருக்கு,'என்னக் கலவரம் வெடிக்கப் போகிறதோ?’ என்ற பதைபதைப்பு உருவானது.

அதைத் தன் கணவனிடமும் பகிர்ந்து கொள்ள, அவரோ,”எதுவாக இருந்தாலும் பார்த்துக்கலாம் மா” என்று மனைவிக்கு ஆறுதல் கூறினார்.

ஆனால், அதற்கெல்லாம் காலம் கடந்து விட்டது என்பதை உணர்த்தும் நோக்கத்துடன் தன்னுடைய பெற்றோரிடம் செல்பேசியில் பேசிக் கொண்டு இருந்தாள் ஹாரண்யா.

“ம்மா! நீங்களும் அப்பாவும் உடனே கிளம்பி இங்கே வாங்க” என்றதும்,

“ஹேய் ஏன் டி திடீர்னு அங்கே வரச் சொல்ற? என்னாச்சு? உன் மாமனாருக்கு உடம்புக்கு எதுவும் ரொம்ப முடியலையா?” எனப் பதட்டம் அடைந்தார் மதுராஹினி.

ஹாரண்யா,“அதெல்லாம் இல்ல ம்மா. அவர் நல்லா இருக்கார்” எனப் பதிலளிக்க,

“அப்பறம் வேறென்ன? உனக்கு எதுவும் உடம்பு சரியில்லையா?”என்று விசாரித்தவரிடம்,

“ஐயோ இல்லை ம்மா. எல்லாத்தையும் நேரில் வந்து பேசிக்கலாம். அப்பாவைக் கூட்டிட்டு உடனே இங்கே வந்து சேருங்க ப்ளீஸ்!” என்று கெஞ்சவும்,

“சரி டி. நாங்க வர்றோம்” என்று அவளிடம் கூறி வைத்து விட்டுத் கணவரிடம் போய்,

“ஏங்க இந்த ஹாராவுக்கு என்னாச்சுன்னுத் தெரியலை. நம்மளை உடனே அங்கே வரச் சொல்றா” என்றார் மதுராஹினி.

“ஏன் ம்மா? நம்மப் பொண்ணு நல்லா தானே இருக்கிறா?” எனக் கேட்டார் இயமானன்.

“அவ நல்லா தான் இருக்கா. ஆனால் நம்மளை வரச் சொல்லி தொனத்துறா! என்னன்னுப் போய்ப் பார்த்துட்டு வந்துடலாம். வாங்க” என்று இருவரும் சேர்ந்து தங்களது மகளின் புகுந்த வீட்டிற்குச் செல்லத் தயாராகினர்.

அப்போது, இங்கே வரவேற்பறைக்கு வந்த மருமகளிடம்,”உங்க ரெண்டு பேருக்கும் மறுபடியும் ஏதாவது பிராப்ளமா ம்மா? எதுவாக இருந்தாலும் சொல்லு. நாங்க தீர்த்து வைக்கிறோம். இவன் உங்கிட்ட ஏதாவது பிரச்சினை பண்ணானா?” என்று மகனைக் காட்டிக் கேட்டார் பாலேந்திரன்.

அதைக் கேட்டுக் கோபத்தில் நரம்புகள் புடைக்க மனைவியைப் பார்த்தான் பகீரதன்.

அவளோ,”என்னோட அப்பாவும், அம்மாவும் கிளம்பி வந்துட்டு இருக்காங்க. அவங்க வந்ததும் பேசிக்கலாம்” என்று கூறி அமைதியாகி விட்டாள் ஹாரண்யா.

சிறிது நேரத்திற்கு முன்பு, தங்களது மகனைப் போலவே, இவளும் அதே பதிலைக் கூறவும்,’ஏதோ தவறு நடக்கப் போகிறது!’ என்ற உள்ளுணர்வில் இருவரும் மகனையும், மருமகளையும் கூர்மையாகப் பார்த்தனர்.

இருவருமே இறுக்கத்தைத் தத்தெடுத்துக் கொண்டு நின்றிருக்க, அதே நேரம், அவர்கள் வீட்டை அடைந்திருந்த இயமானனும், மதுராஹினியும்,”வணக்கம் சம்பந்தி. வணக்கம் மாப்பிள்ளை“ என்றவர்கள்,

தங்கள் மகளிடம் போய்,”என்னம்மா! எதுக்கு எங்களை வரச் சொன்ன?” எனக் கேட்கவும்,

அவள் பேசுவதற்குள்,”அதைத் தான் நாங்களும் கேட்டுட்டு இருக்கோம் சம்பந்தி. இவங்க எதுவுமே சொல்லலை. கல்யாணம் பண்ணி நல்லா வாழுவாங்கன்னுப் பார்த்தால் இப்படித் திடீர், திடீர்னு நம்மளைக் கூட்டி ஏதாவது குண்டைத் தூக்கிப் போட்றாங்க!” என்று புலம்பினார் மனோரமா.

மதுராஹினி,“ஆமாம் சம்பந்தி” என்றவர்,

“இப்போ என்னக் குண்டு வச்சு இருக்கீங்க?” என மௌனமாக நின்றிருந்த இருவரிடமும் வினவினார்.

“அதை நான் சொல்றேன் ம்மா” என்றவ ஹாரண்யாவோ, தன் கணவனைத் திரும்பி ஒரு பார்வை பார்த்தாள்.

அவனோ,”ம்ம். சொல்லு” என அனுமதி அளித்து விட்டுத் தன்னிரு கைகளையும் மார்புக்குக் குறுக்காகக் கட்டிக் கொண்டு அமைதியாகி விட,

அதைக் கண்டுக் குழப்பத்துடன் ஏறிட்ட இரு வீட்டாரிடமும், தங்கள் இருவரது திருமணத்தைப் பகீரதன் எப்படி நடத்திக் கொண்டான் என்பதை ஆதி முதல் அந்தம் வரையிலாக நிகழ்ந்த அனைத்தையும் ஒன்று விடாமல் கொட்டித் தீர்த்தாள் ஹாரண்யா.

அதையெல்லாம் கேட்டவுடன் பகீரதனை அதிர்ந்து போய்ப் பார்த்தனர் பாலேந்திரன், மனோரமா மற்றும் இயமானன், மதுராஹினி.

ஆனால், அப்போதும் கூட அவன் வாயைத் திறக்காமல் திண்ணக்கமாக இருந்தான்.

“டேய்! ஏன்டா இப்படி பண்ணுன?” என அவனைப் போட்டு உலுக்கி எடுத்தார் மனோரமா.

அவருக்கு அவ்வளவு கோபம் வந்தது மகன் மீது!

ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற வெறியில் இப்படிச் செய்து இருக்கிறானே! என்ற ஆத்திரம் எழுந்தது.

அதேபோல்,”நீ இவ்வளவு வருஷமாக சினிமாவில் இருந்தாலும் கூட எந்தக் கெட்டப் பழக்கமும் இல்லாமல் இருக்கியேன்னு இப்போ வரைக்கும் பெருமைப்பட்டுட்டு இருந்தேன். ஆனால் ஒரு பொண்ணுக்கு இப்படி அநியாயம் செய்து இருக்க - ன்னு நினைக்கும் போது உன் மேல் வெறுப்பு தான் வருது பகீரதா!” எனக் கத்தினார் பாலேந்திரன்.

தங்கள் மகளை ஏமாற்றித் திருமணம் செய்து உள்ளானே! என்று ஹாரண்யாவிற்காக நியாயம் கேட்கக் கூடத் திராணி இல்லாமல் அதிர்ச்சியில் இருந்தனர் இயமானன் மற்றும் மதுராஹினி.

அனைத்தையும் கொட்டித் தீர்த்ததும், அடக்க முடியாத அழுகையையும் கொட்டித் தீர்க்க முடிவெடுத்து விட்டாள் போலும்! உடனே கீழே மடிந்து அழத் தொடங்கினாள் ஹாரண்யா.

அவளிடம் பதைபதைப்புடன் போன மதுராஹினியோ,”ஹாரா ம்மா! ஒன்னும் இல்லைடா. அம்மாவைப் பாரு” என்று கூறி அவளை ஆறுதல்படுத்தும் வேலையில் இறங்கினார்.

இயமானனுக்குத் தங்களது மருமகனின் மீது வந்த ஆத்திரத்திற்கு அளவே இல்லை. ஆனால், அவனைத் திருமணம் செய்து கொள்ளுமாறு தாங்களும் கூட மகளை உந்தினோம் என்பது நினைவிற்கு வந்ததால் தனது சினத்தை அடக்கிக் கொண்டார்.

“டேய்! ஏதாவது பேசுடா! அப்படி பிடிச்சு வச்ச மாதிரி நிற்கிறியே?” என மகனை அதட்டினார் மனோரமா.

“அவ சொன்னது எல்லாமே உண்மை தான் ம்மா. அப்பே வேணும்னா நான் அவளை லவ் பண்ணாமல் இருந்து இருக்கலாம். ஆனால் இப்போ ரொம்ப லவ் பண்றேன்!” என்றவனை அங்கேயிருந்த மற்றவர்கள் விசித்திரமாகப் பார்த்தனர்.

“வாயை மூடு பகீரதா!” என்றார் பாலேந்திரன்.

“இப்போ என்ன நடந்துருச்சு ப்பா? அதான் நான் அவளை லவ் பண்றேன்னு சொல்றேன்ல? அவ தான் டிவோர்ஸ் வேணும்னு நிற்கிறா!”என்கவும், இருவரது பெற்றோர்களும் திடுக்கிட்டுப் போய் ஹாரண்யாவைப் பார்த்தார்கள்.

இப்போது மடிந்த கால்களைச் சரி செய்து கொண்டு எழுந்து நின்றவள்,”ஆமாம். இவ்வளவு நடந்ததுக்கு அப்பறமும் நான் ஏன் இவர் கூட வாழனும்? அதான் டிவோர்ஸ் கேட்டேன்” என்று உறுதியாக உரைத்தாள்.

“கொஞ்சம் பொறுமையாக இரும்மா” என்ற மாமியாரை வலியுடன் பார்த்தாள் ஹாரண்யா.

அதைப் புரிந்து கொண்டவரோ,”உன் வலி எங்களுக்குப் புரியுது ம்மா. ஆனாலும்…” என்றவரைத் தடுத்து,

“வேண்டாம் அத்தை. நீங்க இதுக்கு மேலே பேசினால் நான் இங்கே இருந்து போக முடியாது. ஏன்னா, நீங்க என்னை உங்க சொந்த மகளாக நடத்துனீங்க! என்னோட ஒவ்வொரு விருப்பத்திலும் என் கூட, எனக்காக நின்னீங்க! அதை எப்பவும் மறக்க மாட்டேன்! அதே மாதிரி, இதிலேயும் எனக்கு எதிராக நிக்காதீங்க ப்ளீஸ்!” என்று தன் மாமனார், மாமியாரிடம் கைகளைக் குவித்துக் கேட்டுக் கொண்டாள் மருமகள்.

அதைக் கண்டு நெஞ்சில் இரத்தம் வடிந்தது பாலேந்திரன் மற்றும் மனோரமாவிற்கு.

ஹாரண்யாவின் பெற்றோரைப் பற்றிக் கேட்கவே வேண்டாம்.

அவர்கள் எப்போதோ மகளின் நிலையைக் கண்கூடாக கண்டு மனதளவில் உடைந்து விட்டனர்.

அதைப் பார்த்தவுடன் தான் தன்னுடைய செயலின் வீரியம் புரிந்தது போலும் பகீரதனுக்கு.

அப்போதும் கூட அவனது விழிகளில் நீர் நிறையவே இல்லை.

இரும்பை விழுங்கியவனைப் போன்று இறுக்கமாக இருந்தான்.

“நீ செஞ்ச காரியத்தால் ஒரு பெண்ணோட வாழ்க்கையும், அவளோட அம்மா, அப்பாவும் எப்படி ஒரு நிலைக்கு ஆளாகி இருக்காங்கன்னுப் பாரு!” என மகனிடம் கூறிக் கதறினார் மனோரமா.

“ஏன்டா உனக்கு அறிவே இல்லையா? நீயெல்லாம் சினிமாவில் மட்டும் தான் ஹீரோவா? நிஜ வாழ்க்கையில் வில்லனை விடக் கேவலமான வேலை செஞ்சு வச்சு இருக்கியே!” எனத் தன் பங்கிற்கு அவனைக் கடிந்து கொண்டார் பாலேந்திரன்.

தனது மகளைப் பார்த்து விட்டு,”போதும் சம்பந்தி. எங்க மக கொஞ்ச நாளைக்கு எங்க கூட வந்து இருக்கட்டும். அதுக்கப்புறமும் டிவோர்ஸ் வேணும்னு அவளுக்குத் தோனுச்சுன்னா அதுக்கான வேலையைப் பார்ப்போம்” என்ற இயமானனோ,

“உன் பொருளை எல்லாம் எடுத்துட்டு வா ம்மா. நம்ம வீட்டுக்குப் போகலாம்” என மகளுக்கு அறிவுறுத்தி அனுப்பி வைத்தார்.

இதைக் கூட பகீரதனின் பெற்றோருக்காகத் தான் சொன்னார் ஹாரண்யாவின் தந்தை. ஏனெனில் அவர்கள் மீது மகளுக்கும், தங்களுக்கும் எந்தவித சங்கடமும் இல்லை என்பதால் அவர்களது மனதை நோகடிக்கத் தோன்றவில்லை அவருக்கு.

அதே சமயத்தில் மகள் இருக்கும் நிலையில் அவளை இங்கேயே விட்டு விட்டுச் செல்ல விருப்பம் இல்லாததால் ஹாரண்யாவை அழைத்துப் போக முடிவெடுத்து விட்டார்கள் அவளது பெற்றோர்.

தங்களது மகனின் மீது அத்தனை தவறையும் வைத்துக் கொண்டு மருமகளை இங்கேயே இருக்குமாறு கூறும் அளவிற்கு நியாயம் அற்றவர்களாக இருக்கவில்லை பாலேந்திரன் மற்றும் மனோரமா.

எனவே, ஹாரண்யா மற்றும் அவளது பெற்றோருக்கு எதிராக எதுவும் பேசாமல் இருந்து விட்டனர்.

அதேபோல், தன்னை ஒரு நிமிடம் கூட நின்று பார்க்காமல் தந்தை சொல்லைக் கேட்டதும் அறைக்குப் போய் தனது உடமைகளை எடுத்து வந்த மனைவியைக் கண்டு வாயடைத்துப் போய்,

இந்தளவிற்கு அவள் தன்னை வெறுக்கிறாள் என்பதை அறிந்து கொண்டவன், அவளை வலுக்கட்டாயமாக இங்கே தங்க வைக்கத் தனக்கு உரிமையில்லை என்பதை உணர்ந்து அவள் செல்வதற்கு வழி விட்டு நின்றான் பகீரதன்.

தன்னுடைய மாமனார், மாமியாரிடம் ஒரு சின்னத் தலை அசைப்புடன் விடைபெற்றுக் கொண்டுப் பெற்றோருடன் தன் பிறந்தகத்திற்குச் சென்று விட்டாள் ஹாரண்யா.

அதைக் கண்டு விழிகளில் நீர் நிறைந்து மனம் உடைந்து போய்க் கையாலாகாத தனத்துடன் நின்றிருந்தனர் பாலேந்திரன் மற்றும் மனோரமா.

- தொடரும்
 

Shalini shalu

Moderator
உன் நினைவிலே கரைகிறேன் - 45

பகீரதனின் வீட்டிலோ, அவனது அடாத செயலால் நடந்த அனர்த்தங்களை எதிர்கொண்ட அவனது தாயும், தந்தையும் தங்களது ஆற்றாமையை வெளிப்படுத்தத் தொடங்கி விட்டனர்.

”நம்ம வீட்டுக்கு விளக்கேத்த வந்தப் பொண்ணு இப்போ இந்த வீடே வேண்டாம்னு சொல்லிட்டு இங்கேயிருந்து ஒரேயடியாகப் போயிட்டா! இப்போ உனக்குச் சந்தோஷமாடா?” என மகனிடம் கத்தினார் மனோரமா.

“எனக்கு எப்படி சந்தோஷமா இருக்கும்மா? என்னோட ரணு என்னை விட்டுப் போனதுக்கு அப்பறம் என் சந்தோஷமும் அவ கூடவே போயிடுச்சு” என்றவனை,

“சினிமா டயலாக் பேசத் தான் நீ எல்லாம் லாயக்குடா!” என்று ஆத்திரத்தில் பல்லைக் கடித்தார் பாலேந்திரன்.

பகீரதன்,“ப்பா! நான் உண்மையைத் தான் சொல்றேன். அவ மேல் எனக்குக் காதல் இருக்கு. ஆனால் அதை வெளிப்படுத்துறதுக்கு முன்னாடியே வீட்டை விட்டுப் போயிட்டா”என்றான் கவலையாக.

“வாயை மூடுடா! உனக்கு எல்லாம் எவ்வளவு புத்தி சொன்னாலும் நீ அடங்க மாட்ட! நீ இனிமேல் எப்படிப் போனால் எங்களுக்கு என்ன! எங்க மருமக உன்னை மன்னிச்சாலும் நாங்க ரெண்டு பேரும் உன்னை மன்னிக்கிறதாக இல்லை!” என்று அவனிடம் உறுதியாக உரைத்து விட்டு,

“எனக்கு உடம்புக்கு ஒரு மாதிரி இருக்கு ம்மா. நான் போய் ரெஸ்ட் எடுக்கிறேன்” என்ற பாலேந்திரனிடம்,

“என்னாச்சு ப்பா? ஹாஸ்பிடலுக்குப் போகலாம் வாங்க” எனத் துடித்தான் அவரது மகன்.

மனோரமா,“ஆமாம் ங்க. இப்படி அலட்சியமாக இருக்காதீங்க!” என்று கணவனுக்காகப் பதறவும்,

“எனக்கு அவ்வளவு சீரியஸாக எதுவும் ஆகலை ம்மா. மனசு விட்டுப் போச்சு. இனிமேல் நிம்மதியாக இருக்க முடியாது. அது உடம்பைப் பாதிக்குது போல. இப்போ கண்ணை மூடித் தூங்கினால் சரி ஆகிடும்” என்றவரைக் கைத்தாங்கலாக அழைத்துச் சென்று அறையில் படுக்க வைத்து விட்டு வந்தார்.

“இனிமேலும் எங்களோட மனசைக் காயப்படுத்தாமல் உன் வேலையில் மட்டும் கவனம் வை பகீரதா!” என்று தனக்கு அறிவுறுத்திய தாயிடம்,

“ஏன் ம்மா இப்படியெல்லாம் பேசுறீங்க? கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி நடந்தது எனக்கும் கஷ்டத்தைத் தான் கொடுத்து இருக்கு! அதை ஏன் நீங்களும், அப்பாவும் புரிஞ்சிக்க மாட்டேங்குறீங்க?” என்று ஆதங்கத்துடன் வினவினான் பகீரதன்.

“உன் ரூமுக்கு ஒழுங்காகப் போயிருடா! இவ்வளவு வயசுக்கு அப்பறம் என்கிட்ட அடி வாங்காதே!” என அவனை எச்சரித்து அனுப்பி வைத்தார் மனோரமா.

தனது அன்னையின் கட்டளைக்கு இணங்கி அறைக்கு வந்து, இதற்கெல்லாம் முழுக்க, முழுக்கக் காரணம் ஹாரண்யா தான் ஏனெனில், தன்னுடைய அருமை மற்றும் காதலைப் புரிந்து கொள்ளாமல் அவள் வீட்டை விட்டுப் போனதால் தான், தன் தந்தையின் உடல் மேலும் நலிவடைந்து போயிற்று.

தானும் தாயின் கோபத்திற்கும் ஆளாகி விட்டோம் என்று நம்பிக் கொண்டு அவள் மீது கோபத்தை வளர்த்துக் கொண்டான் பகீரதன்.

இங்கே தங்களது வீட்டிற்கு வந்த பின்பும் கூட, ஹாரண்யாவிற்குக் கண்ணீர் நிற்கவில்லை. அந்தளவிற்குப் பகீரதன் கொடுத்த ஏமாற்றத்தை அவளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. தன்னுடைய தாயின் மடியிலேயே தஞ்சம் அடைந்து விட்டாள்.

அவளது இந்த நிலையைக் கண்டுத் துடித்துப் போயினர் அவளது பெற்றோர். திருமணம் ஆகிச் சில மாதங்களிலேயே கணவனைப் பிரிந்து இங்கே வந்து விட்டாளே என்ற துயரம் அளவுக்கு அதிகமாக இருந்தது இயமானன் மற்றும் மதுராஹினி தம்பதிக்கு.

மகள் அடுத்து என்ன செய்யப் போவதாக இருக்கிறாள் என்ற கேள்வி எழுந்தாலும் அதை அவளிடம் கேட்கும் தருணம் இதுவல்ல என்பதைப் புரிந்து கொண்டு தற்போது ஹாரண்யாவை இந்தக் கஷ்டத்தில் இருந்து மீட்டெடுக்கும் வேலையில் இறங்கினார்கள்.

ஆனால், தனக்கு நேர்ந்த அவலங்களைத் துடைத்துப் போட்டு விட்டு அடுத்த நாள் காலையில் தன்னுடைய வேலைக்குச் செல்வதற்காகத் தயாராகி இருந்த மகளைக் கண்டு அயர்ந்து போயினர் அவளது பெற்றோர்.

மதுராஹினி,“என்னம்மா இப்படிப் பண்ற? நீ உடனே வேலைக்குப் போகனும்னு அவசியமா என்ன? கொஞ்ச நாளைக்கு வீட்டில் இருந்து ரெஸ்ட் எடுக்கலாம்ல?”

“இல்ல ம்மா. இங்கேயிருந்தால் எதையாவது யோசிச்சிட்டு இருக்கத் தோனும். அங்கே நாலு பேரைப் பார்த்தால் மனசுல கொஞ்சம் மாற்றம் வரும்” என்று சோர்வாக கூறினாள் ஹாரண்யா.

“அவ தான் தெளிவாகச் சொல்றாளே ம்மா? ஆஃபீஸூக்குப் போகட்டும் விடு. நீ போயிட்டு வா ம்மா” என மகளுக்காகப் பரிந்து பேசினார் இயமானன்.

அதற்குப் பிறகு, மகளுடன் வாக்குவாதம் செய்யாமல்,“சாப்பிட்டுப் போ” என்று அவளை டைனிங் டேபிளிற்கு அழைத்தார் மதுராஹினி.

“வேண்டாம் மா. எனக்குப் பசிக்கலை” என்று உணவுண்ண மறுத்தவளை,

“நீ இப்படிச் சாப்பிடாமல் இருந்தால் ஆஃபீஸூக்குப் போகவே வேண்டாம்!” எனக் கறாராக உரைத்து விட,

“என்னம்மா?” என்க,

“நான் சொன்னது தான் நடக்கும். இதுக்கும் உங்க அப்பா உனக்காக காவடி தூக்கிட்டு என்கிட்ட பேச வருவாருன்னு எதிர்பார்க்காதே!” என்று அவளை மிரட்டினார் மதுராஹினி.

“கண்டிப்பாக வர மாட்டேன். இந்த தடவை உனக்குத் தான் சப்போர்ட் பண்ணுவேன்” என்று அவருக்கு உறுதி அளித்தார் இயமானன்.

தந்தையும் தனக்கு எதிராகவே நின்றதால்,”சரி ம்மா சாப்பிட்றேன்” என்றவளுக்கு உணவைப் பரிமாறியவரோ,

அதை முழுமையாக உண்டு முடித்தப் பின்னர் தான், அவளை எழுந்து கொள்ள அனுமதித்தார் மதுராஹினி.

தனக்கும், பகீரதனுக்கும் இடையேயான உறவு நேற்றோடு முடிந்து போய் விட்டது என்ற தகவல் இன்னும் யாருக்கும் தெரியாது. அந்தச் செய்தியை ஒரு பக்கத்திற்கு எழுதி அதைச் சமூக வலைதளங்களில் வெளியிடும் நோக்கமும் ஹாரண்யாவிற்குக் கிடையாது.

அதேபோல், பகீரதனும் அவ்வாறு செய்ய வாய்ப்பில்லை. ஆகவே, இந்த விஷயம் சில நாட்களுக்கு யாருடைய கவனத்தையும் ஈர்க்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற உறுதியுடன் அலுவலகத்தை அடைந்தாள்.

ஆனால் அவளது முகத்தில் தெரிந்த களைப்பும், அயர்ச்சியும் தாமினியின் விழிகளில் இருந்து தவறவில்லை.

முந்தைய நாளில் கூடத் தன்னிடம் சொல்லிக் கொள்ளாமல் அலுவலகத்தில் இருந்து கிளம்பிச் சென்று இருக்கிறாள் என்பதை அறிந்து கொண்டவளோ, அதைத் தோழியிடமே கேட்டுத் தெரிந்து கொள்ள நினைத்து,”நீ ஏன் நேத்து என்கிட்ட சொல்லிக்காம கிளம்பிட்ட ஹாரா?” என்று அவளிடம் வினவினாள் தாமினி.

“அது மினி…” என்றவளுக்குத் தன் உயிர்த் தோழியிடம் உண்மையை மறைக்கச் சற்று சங்கடமாக இருந்தது.

“என்னன்னு சொல்லு! உன் முகமும் ரொம்ப சோர்ந்து போய் இருக்கு. விஷயம் ரொம்ப சீரியஸ் போலவே” என்ற தோழியிடம்,

“ஆமாம்! ரொம்பவே சீரியஸான விஷயம் தான்” என்றவளது விழிகள் உயிர்ப்பே இல்லை.

எனவே,”நீ ஃபர்ஸ்ட் உள்ளே வா” என அவளைத் தங்களது ஆஸ்தான அறைக்குள் கூட்டி வந்து,”இப்போ சொல்லு. என்னாச்சு?” என்றாள் தாமினி.

அவள் அப்படிக் கேட்டதும், நடந்த அனைத்தையும் தோழியிடம் மறைக்காமல் ஒப்புவித்து விட்டாள் ஹாரண்யா.

அதைக் கேட்டு வாயடைத்துப் போய்த் தன்னுடைய அதிர்ச்சியை வெளிப்படுத்தியவளோ,”என்ன சொல்ற? இதெல்லாம் உண்மையா? பகீரதன் சாரா இப்படி எல்லாம் பண்ணினார்?” என்கவும்,

“நான் சொன்னது எல்லாம் உண்மை தான் மினி. அந்தப் பகீரதன் சாரே தான் இதெல்லாம் பண்ணியது! அவர் பேசப் பேச எனக்குமே கொஞ்ச நேரத்தில் பூமியோட சுழற்சியே நின்ன மாதிரி தோணுச்சு. அந்தளவுக்கு அதிர்ச்சி ஆகிட்டேன்” என்று கூறினாள்.

“நான் கூட அவரைப் பத்தி நல்ல விதமாக நினைச்சு வச்சு இருந்தேன். அவர் என்னோட ஃபேவரைட் ஹீரோ வேற!” என்றவளை ஆன மட்டும் முறைத்துப் பார்த்தாள் ஹாரண்யா.

“சாரி டி” எனத் தோழியிடம் மன்னிப்புக் கோரினாள் தாமினி.

“ப்ச். அதை விடு. என்னை நினைச்சு எங்க அப்பாவும், அம்மாவும் ரொம்ப கவலைப்பட்றாங்க. அதே மாதிரி நான் அவங்க வீட்டை விட்டு வந்ததுக்கு அப்பறம் அந்த பகீரதன் எதுவும் பண்ணாமல் இருக்கிறதே எனக்குச் சந்தேகமாக இருக்கு. ஏதாவது பைத்தியக்காரத்தனமாகப் பண்ணி வச்சிடுவானோன்னு கலவரமாக இருக்கு!” என்று புலம்பியவளை ஆசுவாசப்படுத்தும் வகையில்,

“அப்படி அவர் எதையாவது ஏடாகூடமாகச் செய்தா அது அவரோட புகழையும் பாதிக்கும்னு அவருக்கு நல்லாவே தெரியும். அதனால், நீ அதை நினைச்சு ஃபீல் பண்ணாதே” எனக் கூறியவளோ,

“ஆனால் நீ அந்தப் பகீரதன் சாரைக் கல்யாணம் பண்ணதுக்கு நாங்களும் காரணம் தானே? நாங்க அவரைப் புகழ்ந்துப் பேசியே உன் புத்தியை மழுங்கடிச்சிட்டோம். இல்லைன்னா நீ நல்லா யோசிச்சு முடிவு எடுத்து இருப்ப. அதுக்கு ரொம்ப சாரி ஹாரா” என்று அவளிடம் மனதார மன்னிப்பு வேண்டினாள் தாமினி.

“பரவாயில்லை விடு. இது எல்லாம் நடக்கனும்னு இருந்து இருக்கு. அதான் நடந்திருச்சு” என்று அவளுக்குச் சமாதானம் சொல்லிக் கொண்டு இருக்கும் போது, அவர்களது அறைக்கதவு தட்டப்படும் ஓசை கேட்கவே,”யாரு?” எனக் குரல் கொடுத்தாள் ஹாரண்யா.

“நான் சுதன் ம்மா” என்ற குரலைக் கேட்டதும், தனது கண்களைத் துடைத்துக் கொண்டு,”நாம பேசியது எதுவும் அவருக்குத் தெரிய வேண்டாம்” என்று கூறி விட்டு,

“உள்ளே வாங்க சார்” என அனுமதி அளித்தாள் ஹாரண்யா.

உடனே அறைக் கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்தவரோ,”ஓஹ், நீங்களும் இங்கே தான் இருக்கீங்களா?” என்று தாமினியைப் பார்த்துக் கேட்டார்.

அவளோ, “ஆமாம் சார்” என்றாள்.

“சரி. உட்கார்ந்து பேசலாம்” என்றவர், அவர்கள் இருவரும் அமர்ந்ததும், தானும் ஒரு நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு,

“மிஸஸ். ஹாரண்யா! நீங்க அந்த மோஹித்தோட பட ஆடியோ லான்ச்சுக்கு ஆங்கரிங் பண்ண ரெடியாக இருக்கீங்களா?” என்று ஹாரண்யாவிடம் வினவினார் சுதன்.

- தொடரும்
 

Shalini shalu

Moderator
உன் நினைவிலே கரைகிறேன் - 46

அதைக் கேட்டவுடன், தனது முகம் சுருங்கத் தோழியை ஏறிட்டாள் ஹாரண்யா.

அவளது அவஸ்தை மற்றும் வேதனையைப் புரிந்து கொண்டு,”அந்த ஆடியோ லான்ச் ஃபங்க்ஷன் எந்தத் தேதியில் நடக்கப் போகுது சார்?” எனக் கேட்டாள் தாமினி.

“இன்னும் இரண்டு நாளில் அதோட ஏற்பாட்டை எல்லாம் நடத்தப் போகிறதாக இப்போ கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் மோஹித் சார் கால் செஞ்சு சொன்னார்” என்று அவளுக்குப் பதில் அளித்து விட்டு, ஹாரண்யாவின் மறுமொழியை எதிர்பார்த்துக் காத்திருந்தார் சுதன்.

அந்த நிகழ்ச்சியால் தானே, இத்தனைப் பெரிய பிரச்சினை ஏற்பட்டுள்ளது என்பதை எண்ணும் பொழுதே ஹாரண்யாவிற்கு மனச்சோர்வு ஏற்பட்டது.

ஆனாலும், தன்னுடைய மேலதிகாரியிடம்,”எஸ் சார். நான் ரெடியாக இருக்கேன். அந்த ஃபங்கஷனோட நிகழ்ச்சி நிரலை எனக்கு அனுப்பி வைங்க. நான் அதன்படி என்னைத் தயார்படுத்திக்கிறேன்” என்று உறுதி அளித்தாள்.

“ஓகே. இதைச் செய்வதில் உங்களுக்கு விருப்பம் தான? உங்களோட ஹஸ்பண்ட் கிட்டே இதைச் சொல்லிட்டீங்களா?” என்றதும்,

“இதில் எனக்கு முழு விருப்பம் தான் சார். ஆனால், நான் என் பர்சனல் விஷயத்தை இனிமேல் ஆஃபீஸில் யார் கூடவும் ஷேர் செய்ய வேண்டாம்ன்னு முடிவு செய்திருக்கேன். சோ… ப்ளீஸ்!” என்று அவரிடம் இறுக்கத்துடன் கூறினாள் ஹாரண்யா.

அதில் முகம் சிறுத்துப் போய்,”ஓகே மிஸஸ். ஹாரண்யா. நீங்க இந்த ஃபங்க்ஷனை ஆங்கரிங் செய்வதில் ஏதாவது குழப்பம் நந்துடக் கூடாது! அதுக்காகத் தான் அப்படிக் கேட்டேன். மத்தபடி எனக்கும் உங்க பர்சனல் விஷயத்தில் தலையிட விரும்பலை” என்று பட்டென்று கூறி விட்டார் சுதன்.

“அதைத் தான் நானும் எதிர்பார்க்கிறேன் சார்” என்றவளையும், அவளது எதிரில் சிறு கோபத்துடன் நின்றிருந்த தங்களது மேலதிகாரியையும் விழிகளை விரித்து அச்சத்துடன் பார்த்தாள் தாமினி.

இவர்கள் இருவருக்கும் இடையே, ஏதேனும் சண்டையோ, வாக்குவாதமோ ஏற்பட்டு விடுமோ! என்று மிகுந்த கவலையும் அவளைத் தொற்றிக் கொண்டது.

ஆனால்,”சரி. நாளைக்குக் காலையில் சீக்கிரம் வந்துடுங்க. அப்போ உங்களுக்கு அந்த நிகழ்ச்சி நிரலைக் கொடுக்கச் சொல்றேன். தயாராக இருங்க மிஸஸ். ஹாரண்யா” என்று அவளுக்கு வலியுறுத்தி விட்டு அங்கேயிருந்து வேகமாக வெளியேறி விட்டார் சுதன்.

“யாரோ அவரோட ஈகோவை ரொம்ப தூண்டி விட்டு இருக்காங்க போலவே” என்ற தோழியிடம்,

“எல்லாம் அந்த மோஹித்தோட வேலையாகத் தான் இருக்கும் மினி” என்று அவன் மேலுள்ள எரிச்சலுடன் உரைத்தாள் ஹாரண்யா.

“அப்படியாகத் தான் இருக்கும். ஆனால் அவரோட புத்தியைப் பத்தி தான் உனக்கு நல்லாவே தெரியுதுல்ல? அப்பறமும் ஏன் அவரோட ஷோவில் எல்லாம் நீ ஆங்கரிங் பண்றதுக்கு ஓகே சொல்லிட்டு இருக்கிற?” எனக் கேட்டாள் தாமினி.

“நீயும் எல்லாரை மாதிரியே கேட்காத டி! நாம ஒரு இடத்துக்கு வேலை பார்க்கனும்னு வந்துட்டா அங்கே என்ன சொல்றாங்களோ, அதைச் செய்து தானே ஆகனும்? நானும் அதைத் தான் பண்றேன். அதுக்காக இந்த வேலையை விட்டுட்டுப் போக சொல்றியா?” என்றவளிடம்,

“ஆனாலும் இந்த வேலையால் உன்னோட பர்சனல் வாழ்க்கையே பாதிக்கப்பட்ருச்சே! அதை என்ன சொல்லி நியாயப்படுத்துவ?” என்றாள் அவளது தோழி.

“என் வேலையால், என்னோட தனிப்பட்ட வாழ்க்கைப் பாதிக்கலை மினி! சரியான புரிதல் இல்லாமல் தான் அப்படி ஆயிடுச்சு! நீயும் இப்படி பேசி என்னைக் கஷ்டப்படுத்தாதே!” என அவளிடம் வேண்டிக் கேட்டுக் கொண்டாள் ஹாரண்யா.

“சரி. நான் இனிமேல் இதைப் பத்தி எதுவும் பேசலை” என்று அவளிடம் சரணடைந்து விட்டாள் தாமினி.

அதற்குப் பிறகு, மோஹித்தின் படத்தின் இசை வெளியீட்டு விழாவின் நிகழ்ச்சி நிரல் கைக்குக் கிடைப்பதற்கு முன்னர், அதில் தன்னை எப்படி பொருத்திக் கொண்டு அந்த நிகழ்ச்சியை எவ்வளவு அருமையாக நடத்த வேண்டும் என்பதையும் பொறுமையாக அமர்ந்து தயார் செய்யத் தொடங்கினாள் ஹாரண்யா.

பகீரதனின் இல்லத்தில் அவனது தாய் மனோரமாவின் அர்ச்சனைகளுடன் தான் அவனுக்கு அன்றைய நாள் ஆரம்பமானது எனலாம்.

அதுவும் அவருடைய ஆதங்கம் மற்றும் ஆற்றாமையைக் கணவரிடம் சொல்லிப் புலம்பினாரே தவிர்த்து மகனை ஏறெடுத்தும் பார்க்கவில்லை அவர்.

அதேபோல் தான், அவனிடம் பேச்சு வார்த்தை வைத்துக் கொள்ள விரும்பாமல் தனது எதிர்ப்பைக் காட்டினார் பாலேந்திரன்.

அதையெல்லாம் கண்டு கொள்ள வேண்டியவனோ, ஜம்மென்று தாயாராகித் தனது படப்பிடிப்புத் தளத்திற்குச் சென்று விட்டான் பகீரதன்.

“இவன் என்னங்க இப்படி இருக்கான்? நாம சொல்ற எதையும் கேட்கக் கூடாதுன்னுக் கங்கணம் கட்டிட்டு இருக்கான் போலயே” எனத் தன்னுடைய கணவனிடம் புலம்பலை ஆரம்பித்து விட்டார் மனோரமா.

“ஆமாம் மா. என்னோட உடம்பும், மனசும் ரொம்பவே தளர்ந்து போயிடுச்சு. இந்த நேரத்தில் இவன் பண்றதை எல்லாம் பார்க்கும் போது பயமாக இருக்கு. இவன் அந்தப் பொண்ணுக்குப் பண்ணியது ரொம்ப அநியாயமான விஷயம்! அதையும் புரிஞ்சிக்காம விட்டேத்தியாக இருக்கானே! நாம இதை எப்படிச் சரி செய்யப் போறோமோ தெரியல” என்று தன் பங்கிற்குச் சிலதைப் பேசினார் பாலேந்திரன்.

“மருமக இங்கேயிருந்து போனதுக்கு அப்புறம் தான் அவளோட அருமை அவனுக்குப் புரியும் ங்க. நாமளும் அப்பப்போ ஹாரண்யாவைப் பத்திப் பேசி அவளைப் பகீ மனசில் இருந்து மறையாமல் பார்த்துக்கனும்” என்றார் உறுதியுடன்.

“ஆமாம் ங்க” எனக் கூறித் தானும் உறுதி எடுத்துக் கொண்டார் அவரது மனைவி.

இங்குப் படப்பிடிப்புத் தளத்தில், தன்னுடைய கையில் இருந்த டயலாக் பேப்பரை வெறித்த வண்ணம் அமர்ந்திருந்தான் பகீரதன்.

தான் அவ்வளவு எடுத்துச் சொல்லியும், தன்னுடைய சண்டையிட்டுச் சென்று விட்ட ஹாரண்யாவோ, இப்போது நிச்சயமாக அந்த மோஹித்தின் படத்தின் இசை வெளியீட்டு விழாவைத் தொகுத்து வழங்கப் போகிறாள் என்பதில் சிறு ஐயமும் இல்லை அவனுக்கு.

அப்படியென்ன அவளுக்கு இவ்வளவு திண்ணக்கம்? என்று எண்ணியவனுக்குத் தன்னுடைய திமிர் மற்றும் திண்ணக்கத்தால் தான் இவ்வளவும் நிகழ்ந்துள்ளது என்பதை உணர மறந்து, மறுத்து விட்டிருந்தான் பகீரதன்.

“சார்! ஷாட் ரெடி” என்ற உதவி இயக்குனரிடம்,

“வர்றேன்” என்று கூறி அனுப்பி விட்டுத் தன்னை ஒருமுறை சரிபார்த்துக் கொண்டு நடிக்கச் சென்றவனோ,

அதன் பிறகு, கொஞ்சம், கொஞ்சமாக அதிலேயே மூழ்கி விட்டவனோ, சற்று நேரத்திற்கு ஹாரண்யாவின் நினைவுகளைக் கிடப்பில் போட்டு விட்டான் பகீரதன்.

இதே சமயம்,”ஹலோ சார்” என்ற சுதனிற்கு,

“ஹலோ சார். எப்படி இருக்கீங்க?” என்று அவரிடம் இயல்பாகக் கேட்கவும்,

“நான் நல்லா இருக்கேன். நீங்க எப்படி இருக்கீங்க?” என்றார் சுதன்.

“நானும் சௌக்கியமாக இருக்கேன்” எனப் பதிலளித்தான் மோஹித்.

“உங்க படத்தோட ஆடியோ லான்ச்சை ஹோஸ்ட் பண்றதுக்கு மிஸஸ். ஹாரண்யா ஓகே சொல்லிட்டாங்க” என்றவரின் குரலில் இருந்த உற்சாகத்தை அவதானித்தவனோ,

ஆச்சரியத்தில் புருவத்தை உயர்த்தி,”அப்படியா? அவங்க எப்படி ஓகே சொன்னாங்க? நீங்க எதுவும் கட்டாயப்படுத்தலையே?” என்றவனிடம், எதையும் உளறி வைக்கக் கூடாது என்ற முடிவில் ஸ்திரமாக இருந்த சுதனோ,”நாங்க அவங்களைக் கட்டாயப்படுத்தலை சார். அவங்க விருப்பத்தோட தான் ஒத்துக்கிட்டாங்க”என்று தீர்க்கமாக கூறினார்.

மோஹித்,“இஸிட்! ரொம்ப நல்ல விஷயத்தைத் தான் சொல்லி இருக்கீங்க” என்றவனோ,

“அவங்களோட இந்த முடிவுக்கு அவங்க ஹஸ்பண்ட் எந்த எதிர்ப்பும் காட்டலையா?” என்றான்.

உடனே,”இல்லை சார். அப்படியிருந்தால் கண்டிப்பாக அதை எங்கிட்ட அவங்க சொல்லி இருப்பாங்க” எனக் கூறினார் சுதன்.

“ஓஹ்!” என்றவன்,”ஓகே சார். அந்த ஃபங்க்ஷனோட நிகழ்ச்சி நிரலை என்னோட பி. ஏ உங்களுக்கு அனுப்பி வைப்பார்” என்று கூறி விட்டு அழைப்பைத் துண்டித்தான் மோஹித்.

இந்த விஷயத்திற்குப் பகீரதன் எப்படி சம்மதம் அளித்தான்? என்பது புரியாத புதிராகவே இருக்க, அதை அவனிடமே கேட்டு விடலாம் என எண்ணியவனோ,

பின்னர் ஏதோ யோசனை வந்தவனாக, ‘வேண்டாம்!’ என்று முடிவெடுத்து விட்டான்.

அவனது கோபத்தை வேறொரு வழியில் தூண்டி விடத் திட்டம் வகுத்து விட்டான் மோஹித்.

சுதனிடம் இருந்து பெற்ற நிகழ்ச்சி நிரலைக் கையில் வைத்துப் பார்த்துக் கொண்டு இருந்தவளிடம்,”இந்தா இதைக் குடிச்சிட்டு வேலையைப் பாரு”என்று காபிக் கோப்பையை நீட்டினாள் தாமினி.

“தாங்க்ஸ் டி” எனக் கூறிப் புன்னகையுடன் அதைப் பெற்றுக் கொண்டாள் ஹாரண்யா.

“எனக்கும் ஏதோ ஒரு இண்டர்வியூவை ஆங்கரிங் செய்யக் கூப்பிட்டு இருக்காங்க” என்றவளோ,

தன்னுடைய கையிலிருந்த குறிப்புத் தாளை அவளிடம் காண்பித்தாள் தாமினி.

“வாவ்! சூப்பர் டி. நீயும் என் கூட உட்கார்ந்து பிரிப்பேர் பண்ணு. நாம ரெண்டு பேரும் ஒருத்தருக்கு ஒருத்தர் உதவியாக இருப்போம்” என அவளைத் தன்னுடன் இருத்திக் கொண்டாள் ஹாரண்யா.

அதற்குப் பிறகு, இரண்டு நாட்கள் கடந்த நிலையில், தன்னைக் கச்சிதமாக அலங்கரித்துக் கொண்டு,”ம்மா! சாப்பாடு பரிமாறுங்க” என்று உணவு மேஜைக்கு வந்து அமர்ந்தாள் ஹாரண்யா.

அவளைப் பார்த்துப் புன்னகைத்த மதுராஹினியோ,”இதோ வந்துட்டேன். உனக்காகப் பாயாசமும் ரெடி ஆகுது. அதனால் அதையும் டேஸ்ட் பண்ணிட்டுப் போ” என்றவர், அவளுக்கு உணவைப் பரிமாற,

“ஹேய் வாவ்! தாங்க்ஸ் ம்மா” என்று அவரிடம் உற்சாகத்துடன் கூறவும்,

“முதல்ல சாப்பிடு” என அவளுக்குக் கட்டளையிட்ட அன்னையிடம்,

“ஓகே ம்மா” என்று கூறி விட்டு உணவை உண்ணத் தொடங்கி விட்டாள் ஹாரண்யா.

அதைக் கண்டுப் புன்னகைத்துக் கொண்டார் இயமானன்.

தங்கள் மகள் அந்தப் பகீரதனை விட்டுப் பிரிந்து வந்த பிறகு இப்போது தான் கொஞ்சம் இயல்பாக நடந்து கொள்கிறாள் என்பதைக் கண்கூடாகப் பார்க்கையில் அவருக்கு மனதிற்கு நிம்மதி கிடைத்தது.

அதனால்,”இன்னைக்குத் தானே அந்த ஃபங்க்ஷன்? நீ காலையில் சீக்கிரமாகவே கிளம்பிப் போவன்னு நினைச்சா, இப்போ தான் சாப்பிடவே உட்கார்ற?” என்று மகளிடம் வினவினார் இயமானன்.

“ஃபங்க்ஷன் இன்னைக்குத் தான் ப்பா. ஆனால், மதியம் ஒரு மணிக்குத் தான் ஸ்டார்ட் செய்வாங்க. அதனால், மார்னிங் சாப்பாடு மட்டும் வீட்டில் சாப்பிட வரச் சொல்லிட்டாங்க. மதியம் அங்கே லன்ச் கொடுத்துடுவாங்க” என்றவளோ,

தன்னுடைய தாயின் கை வண்ணத்தில் தயாராகி இருந்த உணவை நன்றாகச் சுவைத்து முடித்து விட்டு,”இப்போ பாயாசத்தைக் கொண்டு வாங்க ம்மா. சூடு ஆறாமல் இருக்கும் தானே?” எனவும் கேட்டாள் ஹாரண்யா.

“ஓஹோ சரி ம்மா. ஃபங்க்ஷன் முடியிறதுக்கு லேட் ஆயிடுச்சுன்னா எனக்குக் கால் பண்ணு. நான் வந்து உன்னைக் கூட்டிட்டு வர்றேன்” என்று அவளிடம் கனிவுடன் உரைத்தார் அவளது தந்தை.

“சரிங்க அப்பா” என்றவள் தன் கையிலிருந்த காலிக் கிண்ணத்தைத் தாயிடம் கொடுத்து விட்டு,”நான் என்னோட ரூமுக்குப் போய் அத்தை, மாமாகிட்டே பேசிட்டு வர்றேன்” எனத் தன்னுடைய பெற்றோரிடம் பொதுவாக அறிவித்தவளை விழி விரியப் பார்த்தனர் இருவரும்.

- தொடரும்
 

Shalini shalu

Moderator
உன் நினைவிலே கரைகிறேன் 47

அதைக் கண்டு,”என்னாச்சு?” என்று இருவரிடமும் வினவினாள் ஹாரண்யா.

“அது தான் அங்கேயிருந்து வந்தாச்சு ல்ல? அப்பறம் ஏன் அவங்களுக்குக் கால் செஞ்சி இதையெல்லாம் சொல்லனும்னு அவசியம் என்ன இருக்கு?” என்று அவளிடம் கேட்டார் மதுராஹினி.

“ஆமாம் ஹாரா. உங்க அம்மா கேட்கிறது வாஸ்தவமாகத் தான் இருக்கு” எனத் தன் மனைவிக்கு ஆதரவு அளித்தார் இயமானன்.

“எனக்குப் பகீரதன் மேல் தான் கோபம், வெறுப்பு எல்லாம் இருக்கு ப்பா. ஆனால் அவரோட அப்பா, அம்மா மேல் எனக்கு எந்த அதிருப்தியும் இல்லை. ஏன்னா நான் அங்கே இருந்த வரைக்கும் அவங்க எனக்குத் தான் சப்போர்ட் பண்ணி என் கூட நின்னாங்க! அதனால் நான் அவங்களோட இருக்கிற உறவை எப்பவும் முறிச்சிக்க மாட்டேன். அதான்” என்றவளை வியப்புடன் பார்த்தார்கள் இருவரும்.

“நான் போய்ப் பேசிட்டு வந்துட்றேன்” என்று தன்னுடைய அறைக்குப் போய் விட்டாள் ஹாரண்யா.

“இவளோட நடவடிக்கையே வித்தியாசமாக இருக்கு ங்க” எனக் கூறிய மதுராஹினியிடம்,

“அவளோட பதிலும் சரியாகத் தான் இருக்கு”என்று மகளுக்கு ஏற்றுப் பேசினார் அவரது கணவர்.

“ம்ம். அவளோட கோபம் குறைஞ்சு மாப்பிள்ளை கூட சேரனும்னு விரும்பினா நாம என்னங்க பண்றது?” என்று அவரிடம் வினவவும்,

“அப்பவும் அவளோட விருப்பத்தைத் தான் நாம கன்சிடர் செய்யனும்” என்று மனைவியிடம் தீர்க்கமாக அறிவுறுத்தி விட்டார் இயமானன்.

அதே சமயம் தனது அறையில் இருந்து மனோரமாவிற்கு அழைத்தாள் ஹாரண்யா.

அவரோ தன் மருமகளின் செல்பேசி அழைப்பைக் கண்டதும் உடனே அட்டெண்ட் செய்து பேசினார்.

“ஹாரா ம்மா” என்றவரது அழைப்பில் இன்னும் அதே பாசமும், அக்கறையும் அப்படியே பிரதிபலிப்பதை உணர்ந்து கண்களில் நீர் கசிந்தது ஹாரண்யாவிற்கு.

“அத்தை” என்றதும்,

“ஹாங் சொல்லுடா. எப்படி இருக்க?” என் அவளிடம் கேட்டார் மனோரமா.

“நான் நல்லா இருக்கேன் அத்தை. நீங்களும், மாமாவும் எப்படி இருக்கீங்க? மாமாவுக்கு ஹெல்த் எப்படி இருக்கு?” என்று விசாரித்தாள் ஹாரண்யா.

“நானும், அவரும் நல்லா இருக்கோம் மா” என்றவரின் குரலிலேயே அவர்கள் இருவரும் நன்றாக இல்லை என்று தெரிந்தது.

ஆனால் அவர்களைத் தன்னால் எவ்வாறு சமாதானம் செய்ய முடியும்? அவர்களுக்கு வலியைக் கொடுத்ததே தான் தானே? எனக் குற்ற உணர்வில் இருந்தவளிடம்,

“என்ன ஹாரா, எதுவும் பேசாமல் இருக்கிற?” என்றார் மனோரமா.

“ஒன்னுமில்லை அத்தை. அந்த மோஹித்தோட பட ஆடியோ லான்ச்சை நான் தான் ஹோஸ்ட் பண்ணப் போறேன்னு உங்க கிட்ட சொல்லி இருந்தேனே?” என்றதும்,

அதில் முகம் சுனங்கிப் போயிற்று அவளது மாஜி மாமியாருக்கு. ஏனெனில் அதை மறக்க முடியுமா?
அதனால் தானே வீட்டிற்குள் ஒரு பிரளயமே ஏற்றபட்டது.

ஆனாலும்,”ஞாபகம் இருக்கு ம்மா” என்று சாதாரணமாகவே கூறினார் மனோரமா.

“இன்னைக்கு மதியம் தான் அந்த ஃபங்க்ஷன் நடக்கப் போகுது அத்தை. அதுக்குக் கிளம்பிட்டு இருந்தேன். இந்த மாதிரி நான் ஷோ - ஸ் ஹோஸ்ட் செய்யப் போகிறதுக்கு முன்னாடி உங்ககிட்ட எப்பவும் அதைச் சொல்லிட்டுத் தானே போவேன். அதான் இப்போ கால் செஞ்சேன்” என்றாள் தயக்கத்துடன்.

அதைக் கேட்டு மனம் நெகிழ்ந்து போன மனோரமாவோ,”ஆமாம் ஹாரா. அதையெல்லாம் மறக்க முடியுமா?” எனக் கூறியவர்,

அந்த நிகழ்ச்சி நடக்கப் போகும் நேரத்தையும் அவளிடம் கேட்டுத் தெரிந்து கொண்டார்.

“லைவ் - வில் வரும் அத்தை. நீங்களும், மாமாவும் அதைக் கண்டிப்பாக பார்க்கனும்” என்று அவருக்கு வலியுறுத்தினாள் ஹாரண்யா.

“அதை எப்படி நாங்க மிஸ் பண்ணுவோம். ஆனால் ஒரு கண்டிஷன்” என்றவரிடம்,

“சொல்லுங்க அத்தை” என்றாள்.

“நீ இப்படி அடிக்கடி எனக்கும், உன் மாமாவுக்கும் கால் செஞ்சா தான் நாங்க உன்னோட எல்லா புரோகிராமையும் பார்ப்போம்” என்று அவளிடம் கேட்டவரின் நிலை அவளுக்கு நன்றாகவே புரிந்தது.

எனவே சிறிதும் யோசிக்காமல்,”சரிங்க அத்தை” என்று அவருக்கு வாக்களித்து விட்டாள் ஹாரண்யா.

“தேங்க்ஸ் ம்மா” என்றவருக்குச் சந்தோஷம் தாளவில்லை.

“ஓகே அத்தை. இந்த விஷயத்தை மாமாவுக்கும் சொல்லிடுங்க. நான் போயிட்டு வர்றேன்” என்றவளிடம்,

“சரி ம்மா. நீ அங்கே போய் ஒரு குறையும் இல்லாமல் அந்த வேலையை முடிச்சிட்டு நல்லபடியாக வீடு திரும்ப என்னோட வாழ்த்துகள்” என்று வாழ்த்து தெரிவித்து அழைப்பை வைத்தார் மனோரமா.

இங்கோ, ஹாரண்யாவிடம் இருந்து நீண்டதொரு பெருமூச்சு எழுந்தது. தான் அவருக்கு அழைத்துப் பேசியவுடனேயே,'எப்போது இங்கே திரும்ப வருவாய்?’ என்றெல்லாம் கேட்டுத் தன்னைச் சங்கடப்படுத்தாமல், தன் மனம் கோணாமல் பேசியவரை எண்ணி நிம்மதி அடைந்தாள்.

தன்னுடைய மாமனாரிடமும் ஓரிரு வார்த்தைகள் பேசலாம் என்று தான் நினைத்தாள். ஆனால் நேரமின்மை காரணமாக மாமியாரிடம் மட்டும் பேசி விட்டு அறையிலிருந்து வெளியே வந்தவளோ,

அங்கே குழப்பம் நிறைந்த முகங்களுடன் காணப்பட்ட தன் பெற்றோரிடம் தன்னுடைய மாஜி மாமியாருடனான உரையாடலைக் கூறினாள் ஹாரண்யா.

இயமானன்,“ஓஹ்! சரி ம்மா. போய்க் கிளம்பு. மத்ததை வீட்டுக்கு வந்து சொல்லு”

“ஓகே ப்பா” என்றவள் அவர்களிடம் ஆசீர்வாதம் வாங்கிக் கொண்டுத் தனக்கு அனுப்பி வைக்கப்பட்ட காரில் ஏறி இசை வெளியீட்டு விழா நடைபெறப் போகும் இடத்திற்குச் சென்று இறங்கினாள் ஹாரண்யா.

அவளை வரவேற்ற அந்த நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர்,”உங்களுக்கான ரூமில் எல்லாம் தயாராக இருக்கு மேடம். ஃபங்க்ஷன் ஆரம்பிக்க லேட் ஆகும். சோ, அதுக்குள்ளே உங்க ரூமுக்கு லன்ச் வந்துடும். அதைச் சாப்பிட்டுட்டு ரெடி ஆக இருங்க. கெஸ்ட்ஸ் வந்ததுமே உங்களுக்கு டைமிங்கை இன்ஃபார்ம் பண்றேன். அப்போ வந்துடுங்க” என அவளிடம் மேலும் சில குறிப்புகளைக் கூறி விட்டுச் செல்லவும்,

அந்த அறையில் போடப்பட்டு இருந்த நாற்காலியில் சாவகாசமாக அமர்ந்து கொண்டவளோ,

தான் நிகழ்ச்சி நடைபெறப் போகும் இடத்திற்கு வந்து விட்டதாகத் தன் தந்தைக்குக் குறுஞ்செய்தி அனுப்பி வைத்தாள் ஹாரண்யா.

இந்த நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பு வேலையைத் தன்னுடைய அலுவலகத்திற்கு ஒப்படைக்காமல் வேறொருவரை நாடி விட்டு இதைத் தொகுத்து வழங்கும் வேலையை மட்டும் தான் செய்ய வேண்டும் என்று பிடிவாதம் பிடிக்கும் மோஹித்தை எண்ணி இப்போதும் குழப்பம் அடைந்தாள்.

சில மணித்துளிகள் கடந்த பின்னர், தன்னுடைய தோழி தாமினிக்குக் கால் செய்து அவளிடம் பேசத் தொடங்கி விட்டாள் ஹாரண்யா.

தனது படப்பிடிப்புத் தளம் முழுவதும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்க அதில் இணைந்து கொள்ளாமல் தன்னுடைய கேரவனில் அமர்ந்து எதையோ பலமாகச் சிந்தித்துக் கொண்டிருந்தான் பகீரதன்.

காலையிலிருந்து ஏதோ வித்தியாசமான உணர்வு தனக்குள் எழுவதை உணர்ந்தவன், தனக்கு விருப்பம் இல்லாத ஏதோ ஒன்று நடக்கப் போவதை அவனது உள்ளுணர்வு உரக்கச் சொன்னது போன்றதொரு பிரம்மைத் தோன்றியது அவனுக்குள்.

தன்னுடைய வீட்டை விட்டுத் தன் மனைவி சென்றதில் இருந்து தான் இப்படியான உள்ளுணர்வுகள் தனக்குள் எழுவதை அவ்வப்போது உணர்ந்து கொண்டிருந்தான் பகீரதன்.

அந்த மோஹித்தின் பட இசை வெளியீட்டு விழா எப்போது நிகழப் போகிறது என்பதை முன்னரே அறிந்து வைத்துக் கொண்டவன், அது இன்று மதியம் தான் நேரலையில் ஒளிபரப்பாகும் என்பதையும் தனது நினைவிற்குக் கொண்டு வந்தான்.

அப்படியென்றால் தன்னுடைய உள்ளுணர்வு கூறும் செய்தி,’தான் செய்ய வேண்டாம் என்று தடுத்த வேலையைத் தன்னுடைய மனைவி இன்று செய்யப் போகிறாள்!’ என்பதைப் புரிந்து கொண்டவனுக்கு ஆத்திரத்தில் என்ன செய்வது என்றே தெரியவில்லை.

“ரணு! நீ அதை மட்டும் பண்ணிடக் கூடாது!” என்று கோபத்தில் வார்த்தையைத் துப்பியவனோ, இந்த விஷயம் உண்மை தானா? எனபதை தன்னுடைய காரியதரிசியின் மூலமாக கேட்டுத் தெரிந்து கொண்டவனோ, அந்த நிகழ்ச்சியை நடத்த விடாமல் ரத்து செய்ய முடியுமா? என்றெல்லாம் கூட அவனது மூளை யோசனை கூறியது.

இது முன்னரே சரியான நேரத்தில் தன்னுடைய நினைவடுக்கில் இருந்து வெளிப்பட்டு இருந்தால் தன்னால் நிச்சயமாக ஏதாவது ஒரு வழியைக் கண்டுபிடித்து இருக்க முடியும்!

ஆனால் சிறு கவனக்குறைவால் அதைப் பற்றிய ஞாபகமே இல்லாமல் இருந்து விட்டான் பகீரதன்.

ஆனால் என்ன தான் இவன் அவ்வளவு பெரிய நடிகனாக இருந்தாலும் தன் விருப்பு, வெறுப்புகளுக்காக இப்படி எந்த நிகழ்ச்சியையும் நினைத்த நேரத்தில் ரத்து செய்வது குற்றம் என்பது நடிகர் சங்கத்தின் மிக முக்கிய கோட்பாடுகளில் ஒன்றாகும்.

அதேபோல், இப்போது இருக்கும் குறுகிய சமயத்தில் தன்னாலும் அந்த நிகழ்ச்சியின் முக்கிய விருந்தினராகச் செல்ல முடியாது என்பதையும் அறிந்தவனது அனைத்து கோபமும் ஹாரண்யாவின் மேல் தான் திரும்பியது.

அப்போது,”ஹாய் மிஸ்டர் பகீரதன்! என்னை ஞாபகம் இருக்கா? நீ தான் உன்னோட மேரேஜ் லைஃப்ல ரொம்பவே பிஸியாக இருக்கியே! அப்பறம் எப்படி என்னை ஞாபகம் வச்சிருக்கப் போற? ஆனால் நான் அப்படியில்லை. உன்னை நினைவு வச்சு கால் செய்து இருக்கேன் பாரு!” என்ற மோஹித்தை வெட்டிப் போடும் சினம் துளிர்த்தது பகீரதனுக்கு.

“டேய்!” என்றவனைக் கையமர்த்தி,

“உஸ்! இது என் டைம். நான் தான் பேசுவேன்! ஆமாம். உன் வொய்ஃப் ஹாரண்யா இப்போ எங்கே இருக்காங்க? உன் வீட்டிலேயா?” என நக்கல் செய்யவும்,

“மோஹித்! நான் ஏற்கனவே உன் மேல் கொலைவெறியில் இருக்கேன்! நீ மட்டும் இப்போ என் கண்ணு முன்னாடி இருந்த உன்னைக் கண்டந்துண்டமாக வெட்டிப் போட்ருப்பேன்! நீ எங்கிட்ட இருந்து மிஸ் ஆகுறது உன்னோட அதிர்ஷ்டம். ஆனால் அது ரொம்ப நாளைக்கு நிலைக்காது!” என்று அவனை எச்சரித்தான் பகீரதன்.

“ஆஹான்! காமெடி பண்ணாத! இங்கே ஃபங்க்ஷன் ஆரம்பிச்சதும் அதோட லைவ் லிங்க் - கை உனக்கு வாட்சப் பண்றேன். நீ தான் முதல் ஆளாக அதைப் பார்க்கனும்!” என்று அவனை வம்பிழுத்து விட்டு நிகழ்ச்சிக்காகத் தன்னைத் தயார்படுத்தக் கொள்ளத் தொடங்கினான் மோஹித்.

எப்போதும் அவன் பேசும் போதெல்லாம் அவனது மூக்கு அறுப்பதைப் போன்றதொரு பதிலைத் தான் தான் கொடுத்து விட்டுப் பதவிசாக அழைப்பைத் துண்டித்துக் கொண்டு இருந்தோம். ஆனால் இப்போது பிள்ளைப் பூச்சிக்குக் கொடுக்கு முளைத்திருப்பதைப் போன்று தன்னிடமே சவடால் பேசுகிறான்! என்பதை ஏற்றுக் கொள்ள முடியாமல் தன்னை இந்த நிலைக்கு ஆளாக்கிய பெண்ணின் மீது தன் ஒட்டுமொத்த வெறுப்பையும் காட்டும் விதமாக,

“ரணு!!!” என்று தன்னை மறந்து பைத்தியம் போல் உரக்கக் கத்தினான் பகீரதன்.

ஆனால் தன்னுடைய கணவனின் கோபத்திற்குக் காரணகர்த்தாவாக இருந்தவளோ, மோஹித் மற்றும் அவனது படக்குழுவினர் நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு வந்த செய்தியைக் கேள்விப்பட்டதும் தன்னைச் சீர்படுத்திக் கொண்டு அவர்களுக்காக காத்திருக்கலானாள் ஹாரண்யா.

- தொடரும்
 
Status
Not open for further replies.
Top