மாயம் 32
வாயடைத்து நின்ற நியதியைப் பார்த்து, "என்ன பொண்ணுபாக்க வந்த அப்பவே நான் லவ் பண்ற விஷயத்த அவர்கிட்ட சொல்லீட்டேன். ஒரு நிமிஷம் எதுவும் பேசாம இருந்த அவரு, நான் வருண கல்யாணம் செய்ய ஹெல்ப் பண்றதா சொன்னாரு. ‘நீங்க எனக்கு எதுக்கு ஹெல்ப் பண்ணணும்னு?’ கேட்டேன், சொல்ல மறுத்துட்டாரு. நானும் அதுக்கப்பறம் கேக்கல”
“அன்னைக்கு கல்யாண மண்டபத்துல இருந்து தப்பிச்சி போறதுக்கு அவர்தான் உதவி செஞ்சாரு. அதோட நாங்க ரெண்டுபேரும் யார் கண்ணுலையும் படாதமாதிரி பெங்களூர்ல உள்ள அவரோட ஒரு கம்பெனி பொறுப்ப வருண்கிட்ட ஒப்படச்சி, தங்குறதுக்கு இடமும் கொடுத்து எங்கள நல்லா பாத்துக்கிட்டாரு. எனக்கு பிடிச்சவரோட எந்த குறையும் இல்லாம சந்தோஷமா இருக்கேன்" என்று நடந்த அனைத்தையும் விளக்கினாள். உடனே நியதி, "உனக்கு ஏன் அவர் உதவிசெய்யணும்? அதனால அவருக்கு என்ன லாபம்? அவரோட நேம் ஸ்பாயில் ஆயிறும்னு தெரிஞ்சும் ஏன் இந்த ரிஸ்கான காரியத்த பண்ணாரு?" என்று தன் மனதில் நினைத்ததைக் கேட்டாள்.
அதற்கு, "எனக்கும் முதல்ல புரியல. ஆனா அதுக்கான அர்த்தம் இப்பதான் புரியுது..." என்று ரியா கூற நியதியோ ஒன்றும் அறியாதவள்போல், "என்ன?" என்று வினவினாள். ஒரு குரும்புச் சிரிப்புடன், "அத நீயே அவர்கிட்ட கேளு" என்ற ரியா செல்லமாக நியதியின் கணத்தில் தட்டினாள். நியதிக்கு அதுவே சரியாகத் தோன்ற அவள் ஆரியனைத் தேடி வர்தன்ஸ் மேன்ஷனுக்குச் சென்றாள்.
நியதியை சரஸ் அங்கு கண்டதும், "ஹே நியதி நீ எங்க போன? உனக்கு ஒரு..." என்று அவள் கூறுவதற்குமுன்பே, "சரஸ் ஆரியன் எங்க?" என்று வினவினாள். அவன் 'வர்தன்ஸ் மினி ஃஆரஸ்டில்' இருப்பதாக சரஸ் சொன்னதும் அங்கு விரைந்தாள். நேராக ஆரியனுக்கு பிடித்த இடத்திற்குச் சென்றாள்.
அது குடில் போல் மேற்கூரை அமைக்கப்பட்டு அமர்வதற்காக குஷன் இருக்கைகள் போடப்பட்டிருக்கும் இடம். சுற்றிலும் அழகான பூச்செடிகள் வளர்க்கப்பட்டிருந்தன. அவள் வருகைக்காகவே காத்துக்கொண்டிருந்த ஆரியன் அவளைக் கண்டதும் ஒரு புன்முறுவல் செய்தான். "நீங்க ஏன் அப்படி செஞ்சீங்க?" என்று மூச்சுவாங்க வேகமாக வந்தவள் கேட்க கூஜாவிலிருந்த நீரை கண்ணாடி டம்பிளரில் ஊற்றி அவளிடம் நீட்டி குடிக்குமாறு சைகை செய்தான். ஆனால் அவளோ, "நான் என்ன கேட்டா, நீங்க என்ன செய்றீங்க?" என்று பொறுமையிழந்தவளாய் கேட்க அவனோ, "உனக்கு தெரிஞ்சிக்கணுமா வேண்டாமா?" என்று விளையாட்டாக கேட்க அவளோ வேறுவழியில்லாமல் அவன் கூறியது போலவே செய்தாள்.

பின் அவனிடம், "இப்ப சொல்லுங்க" என்று கேட்கவும் அவன் அனைத்தையும் கூறத் துவங்கினான். "உன்னோட காலேஜுக்கு ஒன் வீக் வொர்க்ஷாப்கு நான் வந்தது உனக்கு ஞாபகம் இருக்கா?" என்று அவன் கேட்க அதற்கு நியதி 'ஆம்' என்று மட்டும் தலையசைத்தாள். "அன்னைக்கு நான் டிபார்ட்மெண்ட்ல இருந்தப்ப ஸ்டாஃஸ் எல்லாம் உன்னப்பத்தி பேசிகிட்டு இருந்தாங்க. நான் சொல்ற மோட்டிவேஷனல் கோட்ஸ் எல்லாத்தையும் நீ எப்பவுமே சொல்லி என்ன உன்னோட ரோல்-மாடலா வச்சிருக்கண்ணு சொன்னாங்க”
“நம்மள ரசிக்கிற அந்த ரசிகை யாருன்னு பாக்க ரொம்ப ஆவலா இருந்தது. அப்போதான் நீ நேவி ப்ளூ டாப், வைட் பலாஸோ போட்டு ஷால அழகா பின் பண்ணி, காதுல பெரிய ஜிமிக்கி போட்டு அந்த டிபார்ட்மெண்ட்க்குள்ள நுழைஞ்ச. அங்கமட்டும் இல்ல என் மனசுலயும் தான். எனக்கு அப்போ அது என்னன்னு தெரியல. ஆனா அன்னைக்கு உன்ன பார்த்ததும் எனக்குள்ள ஒரு ஸ்பார்க்....ஒரு அழகான உணர்வு எனக்கு வந்தது. அத இப்ப நினைச்சா கூட மனசுக்கு ரொம்ப இதமா இருக்கு....அப்பாவுக்கு வேலை இருந்ததால நான் முதல் நாள் மட்டும் தான் அங்க லெக்சர்கு வர்றதா பிளான்”
“ஆனா உன்ன தினமும் பாக்கணுங்கிறதுக்காக நானே ஒரு வாரமும் லெக்சருக்கு போறதா அப்பாகிட்ட சொன்னேன். நான் ஆர்வமா இருக்கறதா நினைச்சி என் அப்பாவும் சரின்னு சொல்லீட்டாரு. பாவம் அவருக்கு உண்மை என்னனு தெரியல...அந்த ஒரு வாரமும் உன்ன பாக்க, பேச எல்லா வாய்ப்பும் கிடைச்சது. ஆனா அது சீக்கிரமாவே முடிஞ்சிருச்சி. நான் உன்ன காண்டாக்ட் பண்ண நிறைய முயற்சி செஞ்சேன், என்னால முடியல. அதுக்கப்பறம் என்னோட வாழ்க்கைல என்னலாமோ நடக்க ஆரம்பிச்சது”
“என் அப்பாவோட மரணம், என் தங்கச்சி இறந்துட்டாங்குற செய்தி இதெல்லாம் என்னோட வாழ்க்கைய இருட்டா ஆக்கிருச்சி. என் மனச மாத்த என்ன கல்யாணம் பண்ணிக்கச்சொல்லி பாட்டி ரொம்ப கெஞ்சுனாங்க. உன்ன தவிர வேறயாரையும் அந்த இடத்துல வச்சிப் பாக்க எனக்கு மனசே இல்ல. பாட்டியோட சந்தோஷத்துக்காக சம்மதிச்சேன். அப்பதான் ரியாவ பாக்குறதுக்கு மிஸ்டர் வரதராஜன் வீட்டுக்கு வந்தோம். நான் அவள பிடிக்கலன்னு சொல்ல தான் அங்க வந்தேன் ஆனா அதுக்கு முன்னால ரியாவே ஒருத்தன காதலிக்குறதா சொன்னா”
“'நல்லவேள அவளே கல்யாணம் வேண்டாம்'ணு சொன்னதுனால நிம்மதியா இருந்துச்சி. அப்ப நீ அந்த அவுட்ஹவுஸ்ல இருந்து வெளியவந்தத பார்த்தேன். அந்த ஒரு நிமிஷம் என் வாழ்க்கைல இருள் மறஞ்சி வெளிச்சம் வந்துச்சி. நான் யாருக்காக இவ்வளவு நாள் ஏங்கிக்கிட்டு இருந்தேனோ அந்த முகத்த அன்னைக்கு தான் ரொம்பநாளுக்கு அப்பறம் பாத்தேன். உன்ன என் மனைவியாக்க ஒரு வழிய யோசிச்சேன். கல்யாணத்தனைக்கு ரியா போய்ட்டா அந்த இடத்துல அடுத்து யாரு வருவா?...மிஸ்டர் வரதராஜன் தன்னோட பொண்ணா நினைக்கிற நீ தான் வருவன்னு எனக்கு நல்லாவே தெரியும். அதான் அப்படி செஞ்சேன். நான் நினைச்சதுபோலவே நடந்தது. நீ என்னவளான" என்று ஆரியன் அனைத்தையும் விளக்க நியதி திகைத்து அவனை நோக்கினாள்.
உடனே அவள், "அன்னைக்கு நான் இல்லாம அப்பா வேறயாரையாவது தேர்ந்தெடுத்திருந்தா என்ன செஞ்சிருப்பீங்க?" என்று நக்கலாக கேட்டவளிடம், "அதெப்படி செய்வாரு? இந்த ஆரியனுக்கு நிகர் நியதி மட்டும்தான். அதனால அவர் அப்படி செய்யமாட்டாரு" என்று சர்வநிச்சயமாக கூறினான். அதற்கு, "அப்படி இருந்தா என்ன செஞ்சிருப்பீங்க?" என்று அவள் மீண்டும் கேட்க அவன், "எனக்கு நீதான் வேணும், உன்னைத்தான் லவ் பண்றேன்னு அவரோட சண்ட போட்ருப்பேன்" என்று சிறு குழந்தையைப் போல் கூறவும் நியதிக்கு சிரிப்பு வந்தது. உடனே, "பக்கா கில்லாடிதான் நீங்க" என்று அவள் கூற அவனோ தன் ஷர்ட் காலரை தூக்கிவிட்டு பெருமைகொண்டான்.
பின், "நியதி உன்கிட்ட ஒண்ணு காட்டணும்" என்று கூறி அங்குள்ள கிளாஸ் ஹவுஸுக்கு அவளை அழைத்துச் சென்றான். அங்கு சென்றதும் அவன் தன்னுடைய கைக்கடிகாரத்தையே பார்க்க அவளோ புரியாமல் விழித்தாள். அது மாலை நேரம் என்பதால் சூரியன் மேற்கு திசையில் மறைவதற்காக சென்றுகொண்டிருந்தது. அப்போது சூரிய ஒளி அந்த கிளாஸ் ஹவுஸை சுற்றியுள்ள மரங்களின் இலைகள் வழியாக ஊடுருவி அங்குள்ள சுவற்றில் பட்டது. அதை ஆரியன் நியதிக்கு காட்டவும் அவளுடைய கண்களிலிருந்து ஆனந்தக் கண்ணீர் பெருகின.
ஏனென்றால் அந்த சூரிய வெளிச்சம், 'ஐ லவ் யூ நியதி' என்ற வடிவத்துடன் அந்த சுவற்றில் விழுந்தது.

அங்குள்ள மரத்தின் இலைகளை அதற்கேற்றாற்போல் வெட்டிவைத்திருந்ததால் சூரியவெளிச்சம் அவ்வாறு விழுந்தது. பின் அவள் ஆரியனை கனிவுடன் பார்க்க அவன், "இந்த விஷயத்த நம்மளோட ஃஸ்ட் அனிவர்சரிக்கே சொல்லணும்னு இருந்தேன். ஆனா என்னலாமோ நடந்திருச்சி. அதான் இப்ப சொல்றேன், 'ஐ லவ் யூ நியதி'" என்று தன் மனதில் தேக்கிவைத்திருந்த நீண்டநாள் காதலை வெளிப்படுத்த அவள் மனம் மகிழ்ச்சிக் கடலில் மிதந்தது. தன்னுடைய வாழ்வில் சந்தோஷம் மீண்டும் கிடைத்ததாக அவள் உணர்ந்தாள். "ஐ டூ லவ் யூ ஆரியன்" என்று கூறி அவனை அணைத்துக் கொண்டாள்.

அவனும் அவளை இறுக அணைத்து, "நாம மறுபடியும் கல்யாணம் பண்ணி ஒரு புது வாழ்க்கைய ஆரம்பிப்போம். இனி என்ன கஷ்டம் வந்தாலும் நான் உன்ன பிரியவே மாட்டேன்" என்று அவளுக்கு வாக்குறுதி அளித்தான். "நானும் உங்கள எப்பவும் பிரியவே மாட்டேன் ஆரியன்" என்று சத்தியம் செய்தாள். ஒருவருக்கொருவர் பிரிய மனமில்லாத காரணத்தினால் இருவரும் வெகுநேரம் அப்படியே அணைத்தவாறு நின்றனர். இருவரின் மனத்திலும் தூய்மையான பிரேமை மட்டுமே நிலவியது.
அதே சமயம் காவல்துறையினர் தப்பியோடிய ரஞ்சித்தை அவன் வீட்டில் சென்று தேடினர். அங்கிருந்து அவனுக்கு எதிராக பல ஆதாரங்களையும், டிரக் தொழிலில் அவனுக்கு உதவி செய்பவர்களையும் காவலர்கள் கைதுசெய்தனர். இறுதியில் விராஜும் இந்த பிசினஸில் இருப்பது தெரியவந்தது. அவர்கள் உடனே அவனையும் கைது செய்வதற்காக வீட்டிற்குச் சென்றபோது அங்கு விராஜ் டிரக்கின் வீரியத்தால் பக்கவாதம் வந்து வலதுகையும் காலும் செயலிழந்து படுத்த படுக்கையாகக் கிடந்தான். அவனுடைய அனைத்து சொத்துகளும் பறிமுதல் செய்யப்பட்டன. விராஜ் தான் செய்த தவறுக்கான தண்டனையை அனுபவித்தான்.
சில நாட்கள் கடந்தன. இங்கு ஒரே நாளில் நியதி-ஆரியன், சரஸ்-சரண் மற்றும் அதிதி-பார்கவ் ஜோடிகளுக்கும் திருமணம் முன்பைப் போலவே ஸீ-ஷோர் ரிசார்ட்டில் நடத்த திட்டமிட்டிருந்தனர். திருமணத்தன்று மூன்று மாப்பிள்ளைகளும் அந்த பெரிய மணமகன் அறையில் தயாராகிக் கொண்டிருந்தனர். அழகான வெண்ணிற பட்டு வேட்டி, சட்டை அணிந்திருந்தனர். வேட்டியில் தங்க ஜரிகையாலான பார்டர் அழகாக நெய்யப்பட்டிருந்தது. மூவரும் மூவேந்தர் போல் கம்பீர தோற்றத்துடன் காணப்பட்டனர்.

ஒவ்வொருவரின் உதவிக்காக ஐந்து வேலையாட்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். மூவரும் தயாராகி முடித்த பின் ஆரியன் பார்கவிடம் வந்து, "அன்னைக்கு என் ரூம்க்கு வெளிய நிண்ணு ஒட்டுக்கேட்டது நீ தான? அதிதிய பத்தி தெரிஞ்சிக்கத்தான அப்படி செஞ்ச?" என்று கேட்க பார்கவ் அசடுவழிய, சரணோ உரக்க சிரித்தான்.
அங்கு மணமகளின் அறையில் மணப்பெண் மூவரும் தயாராகிக்கொண்டிருந்தனர். ஒவ்வொருவரின் உதவிக்காக பத்து பெண்கள் வைக்கப்பட்டிருந்தார்கள்.

மேக் அப் ஆர்ட்டிஸ்ட், ஹேர் ஸ்டைலிஸ்ட் என பலர் அங்கு இருந்தனர். ஒவ்வொரு மணமகளும் அழகாக தங்கஜரிகையால் நெய்யப்பட்ட காஞ்சிபுரப் பட்டுப்புடவையை அழகாக கட்டி தேவலோக கன்னியர் போல் மிகவும் அழகாக காட்சியளித்தனர். மணமேடை கடற்கரையில் அமைக்கப்பட்டிருந்தது.

முதலில் மூன்று மணமகன்களும் அங்கு கம்பீரமான சிங்கநடை போட்டு அங்கு நுழைந்தார்கள். மாப்பிள்ளைகள் அங்கு நுழைவதை மணப்பெண்கள் அவர்களது அறையிலிருந்து பார்த்து ரசித்துக்கொண்டிருந்தனர். எப்போதும் ஆரியவர்தனை வீல் சேரிலேயே பார்த்த நியதி இப்போது அவன் கம்பீர நடை போட்டு நடந்து செல்வதைக் கண்டு அப்படியே ஸ்தம்பித்துப்போனாள். பின் மணப்பெண்கள் அந்த சிவப்பு கம்பளத்தில் மணமேடையை நோக்கி நடந்தனர். மணமகன்கள் அவரவர் அன்பிற்குரியவளை கண்ணிமைக்காமல் பார்த்துக்கொண்டே இருந்தனர். ஆரியன் நியதியை மீண்டும் மணமகள் கோலத்தில் கண்டபோது பழைய நினைவுகள் அவன் மனதில் ஒடத்துவங்கியது. அதை நினைத்து அவன் அகம் மகிழ்ந்தான்.
பின் மந்திரம் ஓத, மங்கல வாத்தியங்கள் ஒலிக்க, தங்க திருமாங்கல்யத்தை ஆடவர்கள் பெண்களின் கழுத்தில் அணிவிக்க காதல் மனங்கள் திருமணபந்தத்தில் நுழைந்தன. திருமணம் முடிந்ததும் பெரியவர்களிடம் மூன்று தம்பதியினரும் வாழ்த்துக்களையும் ஆசீர்வாதங்களையும் பெற்றனர். அப்போது ஆரியன் அதிதியை அழைத்து ரஞ்சித்தின் தாயான கிரிஜாவின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்க வைத்தான்.
கிரிஜா ஆசீர்வாதம் செய்துவிட்டு, "அதிதி இனி உன்னோட வாழ்க்கைல சந்தோஷம் மட்டும் தான் இருக்கும். நீ நல்லா இருப்பமா" என்று கண்களில் கண்ணீர்வழிய அவளை அணைத்துக்கொள்ள மற்றவளும் அவ்வாறே செய்தாள். ஆரியன் கிரிஜாவை ஒரு நன்றிப் பார்வை பார்க்க அவளோ புன்னகை புரிந்தாள். அப்போது அவளுடைய மனம் அவளுக்கும் ஆரியனுக்கும் இடையே நடந்த உரையாடலுக்குச் சென்றது.
ரஞ்சித்தை காவலர்களிடம் ஒப்படைத்துவிட்டு வீடுதிரும்பிய ஆரியன் அனைவரிடமும் பேசிவிட்டு பின் கிரிஜாவைத் தேடிச் சென்றான்.

அவள் இருக்கும் அறைக்கு வந்தவன், "கிரிஜாமா" என்று அழைக்கவும் ஜன்னல் வழியாக வெளியே பார்த்தவாறு நின்றவள் தன் கண்ணை துடைத்துவிட்டு அவன்புரம் திரும்பினார். அவன் அவளருகே வந்து, "அது வந்து..." என்று எப்படி கூறுவது என்று தெரியாமல் ஆரியன் திணற அவளே, "எனக்கு தெரியும் ஆரி....ரஞ்சித் இப்படி பண்ணுவான்னு நான் நினைச்சிக்கூட பாக்கல. நீ அவன போலீஸ் கிட்ட ஒப்படைச்சி நல்லகாரியம் பண்ணீருக்க”
“தனக்கு உதவிசெஞ்சவங்களுக்கே துரோகம் பண்ணீருக்கான். இவன் என்னோட பிள்ளைன்னு சொல்லிக்க எனக்கு அவமானமா இருக்கு...ஆனாலும் நான் அவனோட அம்மா இல்லையா! அதனால என்னால அவன முழுசா வெறுக்க முடியல. அவன் சார்பா நான் உன்கிட்ட மன்னிப்பு கேக்குறேன்..." என்று கூறியவரின் கண்களில் கண்ணீர்வழிய கையைக் கூப்பினார். உடனே ஆரியன் கிரிஜாவின் கையைப் பற்றி, "நீங்க என் அம்மாமாதிரி. என்கிட்ட மன்னிப்பு கேட்கக்கூடாது. அப்படிக் கேட்டு என்ன அந்நியனா ஆக்கீராதீங்க" என்று கூறினான். பின், "கிரிஜாமா உங்ககிட்ட இன்னொரு விஷயம் சொல்லணும் அது..." என்று அவன் கூறவரும்போதே, "அதிதி பார்கவ் கல்யாணம் பத்திதான ஆரி. எனக்கு தெரியும்" என்று கூற அவன் திகைத்து நின்றான்.
மீண்டும் அவளே பேசத் துவங்கினாள், "அதிதி என்கிட்ட ஏற்கனவே சொல்லீட்டா. என் மகன் மாதிரி ஒரு அரக்கனோட வாழ்ந்தவளுக்கு இப்ப ஒரு நல்ல வாழ்க்கை அமைஞ்சிருக்கு. எனக்கு மனப்பூர்வமான சம்மதம்" என்று கூறவும் ஆரியனின் கண்களில் கண்ணீர் பெருகியது. அவன் அவளுடைய கையைப் பற்றி, "ரொம்ப தேங்க்ஸ் கிரிஜாமா" என்று கூற அவளும் புன்னகைத்தாள்.
பின் மனதில் ஏதோ தோன்ற அவள், "அதிதியோட வாழ்க்கைல இனி ரஞ்சித்தால ஏதாவது பிரச்சன வருமா ஆரி?" என்று அக்கறையுடன் வினவ அவனோ, "இல்லமா அவன் அதிதிய உறவு ரீதியாவும், சட்ட ரீதியாவும் எதுவும் செய்யமுடியாது" என்று உறுதியான குரலில் கூற கிரிஜா நிம்மதியடைந்தாள். ஒரு தாயாக இருந்தாலும் அவளும் ஒரு பெண் தான். அதிதிக்கு ரஞ்சித் இழைத்த அநீதியை ஒரு பெண்ணாக அவளும் எதிர்த்ததால் இந்த முடிவை எடுத்தார்.
திருமணம் முடிந்ததும் அனைத்து ஜோடிகளும் வர்தன்ஸ் மேன்ஷனுக்கு அழைத்துவரப்பட்டனர். புதுமணத் தம்பதியினரை ஆரத்தி எடுத்து சந்திரமதி வீட்டினுள்ளே வரவேற்றார். பின் அனைவரையும் பூஜை அறைக்கு அழைத்தபோது ஆரியன் மட்டும் அங்கு இல்லை. உடனே, "ஆரி எங்க இருக்க? இப்பயாவது வா..." என்று கூறியவர் பூஜை அறையினுள் ஏற்கனவே அவனைக் கண்டதும் அவர் ஆச்சரியமடைந்தார்.
அவர் திகைத்து நோக்கவும், "என்ன? எனக்கு கண்ணன் எப்பவுமே நல்லது தான் பண்ணுவாரு. ஆனா அது எனக்குதான் தெரியல. ஆசீர்வாதம் வாங்க எல்லாரும் வாங்க" என்று கூற அனைவரும் சிரித்தனர். அவர்கள் ஹாலுக்கு வந்தபோது வரதராஜன் ஆரியனிடம், "நான் உங்கள தப்பா நினைச்சிட்டேன். என்ன மன்னிச்சிருங்க மாப்பிள்ளை" என்று கூறவும் ஆரியன் அவரை திகைத்துப் பார்த்தான். அவர், "நியதியும் என்னோட பொண்ணு. அப்போ நீங்க எனக்கு மாப்பிள்ளை தானே" என்று கூற ஆரியன் புன்னகைத்தான். அனைத்து ஜோடிகளும் களைப்பால் அங்குள்ள சோஃவில் அமர்ந்தனர். அவர்களுடன் ரியாவும் அமர்ந்திருந்தாள்.

அப்போது சரண், "இப்பலாம் அவங்களுக்குன்னு ஆள் வந்துட்டா நண்பர்களையே மறந்துடறாங்க. ரிங் டோன்லாம் மாதீர்ராங்க" என்று கூறவும் அருகிலிருந்த சரஸ் அவனைப் பார்த்து, "இப்ப எதுக்கு சம்மந்தம் இல்லாம பேசுற?" என்று கேட்டாள். அதற்கு அவன், "இது புரியிறவங்களுக்கு புரிஞ்சிருக்கும்" என்று கூறி நியதியைப் பார்க்க அவளோ திகைப்புடன் அவனை நோக்கினாள். அவன் தன் கைபேசியில் நியதியை அழைக்க அது, 'அரியனே பல மாயங்கள் புரிந்தாய்...' என்று ஒலிக்கத் துவங்கியது.
அப்போதுதான் அங்கிருந்தவர்களுக்கு விஷயம் புரிந்தது. உடனே அனைவரும் நகைக்க ஆரம்பித்தனர். ஆரியனும் வெட்கத்தால் தன் தலையை குனிந்துகொண்டான். உடனே நியதி விரைந்து தன்னுடைய கைபேசியை எடுத்து அதை நிறுத்தினாள். அவனை முறைத்துப் பார்த்தவளுக்கு ஒரு யோசனை தோன்ற அவள் சரஸைப் பார்த்து, "சரஸ் உனக்கு சரண் வச்சிருக்குற செல்லப்பேர சொன்னானா?" என்று கேட்க அவளோ, "செல்ல பேரா? அப்படி எதுவும் சொல்லலையே. அது என்ன நியதி?" என்று ஆவலுடன் கேட்டாள். அவள் தன்னுடைய ரிங்டோனை குறிப்பிடுகிறாள் என்று அறிந்த சரண் கைபேசியிலுள்ள வால்யூமைக் குறைக்கச் சென்றான்.
ஆனால் அதற்குள் நியதி சைகை செய்ய சரஸ் அவனிடமிருந்து கைபேசியை பிடுங்கினாள். நியதி ஆதற்கு அழைத்தபோது, 'அழகான ராட்சசியே, அடிநெஞ்சில் குதிக்கிறியே' என்று பாட ஆரம்பித்தது. அதைக் கேட்டு சரஸ் கோபமாக அவனைப் பார்த்து, "ராட்சசி என்ன பண்ணுவான்னு நான் காட்றேன்" என்று கூற நியதி வாய்விட்டு சிரித்தாள். அவள் சரணைப் பார்த்து, 'மாட்னியா?' என்று புருவத்தை ஏற்றி இறக்க அவனோ அவளை செல்லமாக முறைதான்.
பின் சரஸ் அனைவரையும் அமைதியாக இருக்குமாறு சொல்லிவிட்டு அதிதி மற்றும் பார்கவ் இருக்கும் இடத்தை பார்க்கச் சொன்னாள். அவர்கள் ஒருவருக்கொருவர் மெல்ல பேசிக்கொண்டிருந்தனர். சிரித்துப் பேசும் சப்தம் நின்றதும் அவர்கள் திரும்பிப் பார்த்தபோதுதான் அங்கிருந்த அனைவரும் அவர்களை கவனிப்பது தெரிந்தது. உடனே இருவரும் வெட்கத்தில் தலைகுனிந்தனர்.
பின் ஆரியன், "இங்க இருக்குற ஒவ்வொருவருக்கும் நான் ஒண்ணு சொல்லணும்" என்று அவன் பேச அனைவரும் அமைதியாக அவனை உற்று நோக்கினர். அவன் சரணிடம் திரும்பி, "ஐ அம் சாரி சரண். நீ நியதி மேல வச்சிருந்த தூய்மையான பாசத்த நான் தப்பா நினைச்சிட்டேன். என்ன மன்னிச்சிரு" என்று கூற அவனோ, "நீங்களும் என்ன மன்னிச்சிருங்க. நீங்க நியதியோட நல்லதுக்குதான் செஞ்சிருக்கீங்கன்னு தெரியாம நான் என்னலாமோ பேசிட்டேன்" என்றவுடன் ஆரியன் புன்னகைத்தான். சரஸிடம் திரும்பி, "சரஸ் உன்னமாதிரி ஒரு ஃரெண்ட் கிடைக்க நான் கொடுத்துவச்சிருக்கணும். நீ இல்லாட்டி நான் வீல் சேர்ல தான் இன்னமும் இருந்திருப்பேன். தேங்க் யூ" என்று கூற அவளோ, "டேய் ஃரென்ஸ்கு இடைல நோ சாரி, நோ தேங்க்ஸ்" என்று கண்சிமிட்டினாள்.
பின் ரியாவிடம் திரும்பி, "தேங்க் யூ ரியா. என்னோட நியதி கிடைக்க நீதான் காரணம்" என்று கூற அவளோ, "அப்படி இல்ல ஆரியன், உங்களோட உண்மையான காதல்தான் நியதிய உங்களோட சேர்த்துவச்சிருக்கு" என்று கூற நியதியும், ஆரியனும் ஒருவரையொருவர் பார்த்து புன்னகைத்தனர். பார்கவிடம் திரும்பி, "நீ எனக்கு எல்லா விஷயத்துலயும் நம்பிக்கையானவனா இருந்ததுக்கு ரொம்ப நன்றி பார்கவ்" என்றுதும், "சார் நீங்க எனக்கு போய் தேங்க்ஸ்லாம் சொல்லாதீங்க. அது என்னோட கடமை" என்றான். உடனே ஆரியன், "நீ இந்த வீட்டு மாப்பிள்ள. இனி சார்னு கூப்பிடாத" என்று சிரித்தவாறே சொல்லவும் மற்றவனோ புன்னகைத்தான்.
அதிதியிடம், "நீ என்னோட ஸ்பெஷல் கிஃட் அதிதி. உனக்கு இனி எந்த கஷ்டமும் வரவிடமாட்டேன்" என்று கூறும்போதே அவனுடைய கண்களில் கண்ணீர் வழிந்தது. அதிதி விரைந்து சென்று தன்னுடைய தமையனை இருக அணைத்துக்கொண்டாள். அங்கு சிறிது நேரம் அண்ணனுக்கும் தங்கைக்குமான பாசமழை பொழிந்தது. இறுதியாக அவன் நியதியிடம் திரும்பி, "நியதி நீ என்னோட வாழ்க்கைக்கு கிடைச்ச பெரிய வரம். நீ வந்த பிறகு என் வாழ்க்கை ரொம்ப அழகா மாறீடுச்சி. தேங்க யூ ஃர் மேக்கிங் மை லைஃ கலர்ஃல்" என்று அவளுடைய கையைப் பற்றி மென்மையாக அழுத்தினான். சிறிது நேரம் அவர்கள் இருவரும் அப்படியே பார்த்துக்கொண்டிருந்தபோது சரஸ் 'அஹம்' என்று இரும இருவரும் நிதர்சனத்திற்கு வந்தனர்.
ஆரியன் அனைவர்க்கும் அவன் சார்பாக பரிசு கொடுப்பதாகக் கூறினான். சரஸுக்கும் சரணுக்கும் தன்னுடைய வில்லா ஒன்றையும், பீச் ஹவுஸ் ஒன்றையும் திருமண பரிசாக அளித்தான். பின் பார்கவுக்கு தன்னுடைய ஒரு ஆட்டோமொபைல் கம்பெனிக்கு சி.இ.ஓவாக அவனை நியமித்து அந்த பத்திரத்தை அவனுக்கு பரிசாகக் கொடுத்தான். ஆனால் பார்கவோ அதை மறுத்துவிட்டான். பலமுறை கூறியும் அவன் அதை ஏற்கவில்லை. "எனக்கு உங்களோட செக்ரட்டரியா இருக்குறதே பெரிய சந்தோஷம். வேற எதுவும் வேண்டாம் ஆரியன்" என்று கூற ஆரியன் புன்னகைத்தான். பின் நியதியிடம் திரும்பி ஒரு கோப்பை கொடுத்தான்.
அதை திறந்து பார்த்தபோது அவள் ஆச்சரியமடைந்தாள். ஏனென்றால் அவளை தன்னுடைய கம்பெனியின் முக்கியமான பொறுப்பில் நியமித்திருந்தான். அவளோ, "என்கிட்ட இவ்வளவு பெரிய நிர்வாகத்த குடுத்திருக்கீங்க. என்னால எப்படி முடியும் ஆரியன்?" என்றவளிடம், "உன்னால முடியும். உன்ன என்னோட பி.ஏ.வா வச்சதுக்கு காரணமே நீ அடிமட்டத்துல இருந்து எல்லா வேலையும் தெரிஞ்சிக்கணும்னு தான். நீ ரொம்பவே திறமசாலி. எப்பவுமே உன்கூடதான் இருப்பேன். நீ கண்டிப்பா இத ஏத்துக்கிட்டே ஆகனும்" என்றவுடன் அவள் ஒப்புக்கொண்டாள்.
அவன் மீண்டும் ஒரு கோப்பை அவளிடம் நீட்ட அவள் புரியாமல் விழித்தாள். அவன், 'பார்' என்று செய்கை செய்ய அதை வாங்கி பார்த்தவளின் கண்களில் கண்ணீர் நிரம்பியது. ஏனென்றால் அது அவளுடைய வீட்டு பத்திரம். அதாவது அவளுடைய தந்தையின் வீடு. அதை அவளுடைய உறவினர்கள் நயவஞ்சகத்தால் அவளிடமிருந்து பறித்தனர். ஆனால் அதே வீடு இன்று அவளுடையதாக இருக்கிறது. ஏனென்றால் அது நியதிக்கு ‘விலைமதிக்கமுடியாத பொக்கீஷம்’ என்று ஆரியன் அதை ஏற்கனவே வாங்கி வைத்திருந்தான். அதைக் கண்டதும் நியதிக்கு மகிழ்ச்சி பொங்கியது. கண்களில் ஆனந்தக் கண்ணீர் நிரம்பிநிற்க தன் கணவனை இருக அணைத்துக் கொண்டாள். பின் அங்கிருக்கும் அனைவரையும் உணர்ந்து இருவரும் விலகினர். அதன் பின் அங்கு கலகலப்பு சத்தம் மட்டுமே நிரம்பி இருந்தது.
அப்போது ஆரியனின் கைபேசிக்கு ஒரு அழைப்பு வந்தது. அவன் தனியே வந்து அழைப்பை எடுத்தபோது, "வாழ்த்துக்கள் நண்பா" என்று குரூரமான குரல் கேட்டது. குரலுக்கு சொந்தக்காரன் யார் என்று தெரிந்ததும் ஆரியனின் முகம் சட்டென மாறியது. ஏனென்றால் பேசியது வேறுயாருமல்ல ரஞ்சித். அவன் அந்த தாக்குதலிலிருந்து எப்படியோ தப்பியிருந்தான். "என்னடா ஜெயில்ல இருந்து தப்பிச்சவன் இப்ப எப்படி பேசுறான்னு தான நினைக்குற....ஜெயில்ல மட்டும் இல்லடா மரணத்தோட விழிம்புல இருந்து தப்பிச்சிருக்கேன்" என்று அழுத்தமான குரலில் கூறி வில்லத்தனமாகச் சிரித்தான்.
ஆரியன் எதுவும் பேசாமல் எந்தஒரு பதற்றமும், சலனமும் இல்லாமல் அமைதியாக ஒரு புன்முறுவலுடன் கேட்டான். அவனுக்கு ரஞ்சிதைப் பார்த்து எந்தஒரு பயமும் இல்லை. "என்ன இந்த நிலைமைக்கு ஆளாக்கீட்டு நீ மட்டும் சந்தோஷமா இருந்திருவியா?....விடமாட்டேன்...உன்ன கண்டிப்பா விடவேமாட்டேன். நான் உனக்காக திரும்ப வருவேன்டா" என்று ஆக்ரூஷமாகக் கத்தினான். அதைக் கேட்ட ஆரியன், "ஐ அம் வெய்டிங்" என்று மட்டும் கூறி கைபேசியை சட்டென வைத்தவன் மாயப் புன்னகை புரிந்தான்...
*********************************************************************************
வாசகர்கள் தங்களுடைய கருத்துக்களை இந்த கருத்துத் திரியில் பகிருமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்...
Link
https://www.narumugainovels.com/threads/21888/